யாழ் மாகாணத்தின் வலிகாமத்தில் உள்ள சிற்றூர்களில் ஒன்றான ஆவரங்காலில் பிறந்தேன். தற்போது இருப்பது பிரான்ஸில். இருபதுகளில் புலம்பெயர்ந்த போதிலிருந்த ஊர் மீதாக நினைவேக்கம், சவர் தண்ணிக் கரிப்புப்போல அடிமனதில் இன்னும் இருக்கிறது. மாசிப் பனியால் திரையிட்டிருந்த ஊரைவிட்டு என்றைக்குமாகப் புறப்பட்டவிருந்த காலையில் அய்யா ‘ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு போ’ என்றார். ஆழமேயில்லாத கிணற்றுள் இரும்பு வாளியை நுணிக்கயிற்றை இறுக்கமாகப் பிடித்தபடி இட்டபோது அது குளிரையும், நீரையும் கிழித்துச் சென்று எங்கோ ஆழத்தில் விழுந்தது. உப்புக் கரிக்கும் சவர் நீரிலில் ஒரு சிறங்கையை கையிலேந்தி வாயிலிட்டேன். கரிப்பின் சுவையை நா என்றைக்குமாக நினைவில் இருத்திக் கொண்டது.
அய்யா, தோல் துண்டும், ஒற்றைத் திருக்கை வண்டிலும், தோட்ட மண்வெட்டியுமாக இந்த ஊருக்கு வந்தவர். சின்ன வெங்காயமும், மாரிகால வயல் விதைப்பும், அவர் எப்போதும் ஆதுரமாக அணைத்துக் கொள்ளும் சுனைக்கும் குரக்கனும் கூடவே அவரது கடுமையான உழைப்பும் அவருக்கு இரண்டு கல்வீடுகளைக் கட்டிக் கொள்ள ஏதுவாயிருந்திருக்கிறது. பின் நாம் ஒரு நிச்சயமற்ற பயங்கரத்தினுள் நுழைந்தோம். கொத்தி சீர்படுத்திப் பயிரிட்டால் நல்ல விளைச்சல் கொடுக்கும் தோட்டங்களும், கிணறுகளும் கைவிடப்பட்டு பயங்கரங்கரக் கதைகளின் ஊற்றுக்களாக மாறின. அவற்றின் மேல் காட்டுக் கொடிகள் போல் போர் படர்ந்தது. குண்டுகள் விழுந்து மணல் சிறு குன்றுகள் போலக் குவிந்தன. ஆன்மாக்களை போர் உறிஞ்ச சக்கைகளான மக்கள் ஊர் நீங்கினர்.
வீர தீர கதைகளூடகவும், தமிழரின் பெருமித அடையாளமுமாக நம்மீது கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் போர் அதன் அத்தனை கீழ்மைகளுடனும் அதிகார வேட்கையுடனும் நிகழ்ந்து முடிந்தது. போரின் குழந்தைகளான நாம் அதன் அத்தனை அழிவுகளினதும் பங்காளரும் கூடவே பாதிக்கப்பட்டவராகவும் இருக்கிறோம். என் படைப்புக்களிலும் இந்த ‘பாதிக்கப்பட்ட – பங்காள’ இரட்டைநிலையே ஓர் அடிச்சரடாகத் திரண்டிருக்கிறது. பல வீடுகளிலும் நல்ல தண்ணீராக ஊறிய நிலத்தடி ஊற்று கெடுவாய்ப்பாக எங்கள் வீட்டுக் கிணற்றில் சவர் தண்ணியாக ஊறியது. நிகழ்ந்த போர் போலவே. போர் எப்போதும் நினைவில் கரித்துக் கொண்டிருக்கும் சவர் தண்ணீரின் கரிப்பு உரிசை தான்.
விமர்சனக் கட்டுரைகள் தமிழினி, ஆக்காட்டி, புதியசொல் இதழ்களில் வெளியாகியிருக்கிறது. சிறுகதைகள் வல்லினம், ஆக்காட்டி, தமிழினி, புதியசொல், மணல்வீடு இதழ்களிலும் வெளியாகியிருக்கிறது.
பிரான்ஸிலிருந்து – தமிழின் பழைய சிற்றிதழ்களுக்கே உரித்தான ‘தனித்துவமான’ ஒழுங்கீனங்களுடனும் நம்பிக்கைகளுடனும் – வெளிவரும் ஆக்காட்டி இதழின் தொகுப்பாசிரியர். ஆக்காட்டி திறனாய்வுக் கட்டுரைகளூடாக இலக்கிய உரையாடல் செய்வதும், இலக்கியம் கோரும் மீறிச் செல்லலையும், நுட்பத்தையும், உள்விரிவையுமுடைய படைப்புகளில் கவனப்படுத்துவதும் இதழின் நோக்கம். உங்கள் கருத்துகளை dhpirasath@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.
****
ஆனைக் கோடரி (சிறுகதைகள்)
வெளியீடு : கருப்பு பிரதிகள்
வெ.2020
இமிழ் (ஈழ – புலம்பெயர் சிறுகதைகள்)
வெளியீடு : கருப்பு பிரதிகள். 2024
தொகுப்பாசிரியர் : தர்மு பிரசாத்
பதிப்பாசிரியர் : ஷோபாசக்தி
ஆக்காட்டி வெளியீடுகள்
மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்
சிறுகதைகள்
யதார்தன்
வெ.2017
நூலை இணையத்தில் வாசிக்க :
நோவிலும் வாழ்வு
கவிதைகள்
வசிகரன்
வெ.2024
***
ஆக்காட்டி இதழ்கள்.
1
இதழ் 9
இதழ் 19
தர்மு பிரசாத் / @ dhpirasath@gmail.com