‘பிரபஞ்ச நூல்’ ஷோபாசக்தியின் மிக நல்ல சிறுகதைகளுள் ஒன்று. இவை (மாதா, காயா, பிரபஞ்ச நூல்) இவரின் அடுத்த பட்டாம்பூச்சிக் காலத்தின் கதைகள். ஆரம்பத்தில் எழுதிய வட்டார வழக்கு கதைகளில் இருந்து நகர்ந்த நுட்பமும் பகடியும் கூடிய – அவரே சொல்லிக் கொள்வதுபோல் சற்றே நீளமாக்கப்பட்ட அரசியல் துண்டுப்பிரசுர – காலத்திலும் விபச்சாரியைப்* பற்றித் ‘தமிழ்’ என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். அது அரசியல் அழுத்தப் பின்னணியுடைய கதை. அக்கதை சொல்லிக்கு ஊரில் ஒரு மழை நாளில் விபச்சாரிக்கு வழங்கிய மரண தண்டனை நினைவில் இருக்கிறது. தாய்லாந்தில் கதை சொல்லி கூடும் விபச்சாரியின் போர்ப் பின் புலத்துடன் முடிகிறது. அது போர்க்கால நெருக்கடியும் வன்முறையின் குரூரமும் நிறைந்த கதை. இவர் பிரபஞ்ச நூலில் அதன் இன்னொரு பக்கத்தை உரையாட விழைகிறார். கதை இறுக்கிச் சுற்றப்பட்ட சுருள் வில் போன்றிருக்கிறது. இடைவெட்டும் தகவல்களின் செறிவு, கதையை அடுத்தடுத்த தளம் நகர்த்துகிறது.
ப.தெய்வீகன் வழமை போலவே கதையின் முதல் தளத்துடன் நின்றுவிட்டார். அவர் அதன் மேல் நுரையை மட்டும் அள்ளிப் பருகிவிட்டு அது மட்டும்தான் கதை என நம்புகிறார். ஆனால் இளங்கோ டிசே கதையில் கொடுக்கப்படிருக்கும் தகவல்களை வெறும் நம்பகத்தன்மைக்கான ஏற்பாடாக மட்டும்(!) வாசிப்பதிலும் உடன்பாடில்லை. அவை மிக முக்கியமான குறிப்புகள். கதை சொல்லி தன்னை நாஞ்சில் நாடனின் ‘எட்டுத்திக்கும் மதயானை’ நாவலின் பூலிங்கத்துடன் அடையாம் கண்டு அங்கலாய்க்கிறான். பூலிங்கமும் காமமும், மூர்க்கமும் ததும்பியோடும் பாத்திரம். பூலிங்கத்துடன் தன்னை அடையாளப்படுத்தினாலும் தன் பாலியல் விழைவை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. தமிழில் இந்த வகைக் கதைகளில் அழுத்தம் கொடுக்கப்படும் குற்றவுணர்வோ, கழிவிரக்கம் கோரும் தன்மையோ இல்லாமல் இருப்பது பிரபஞ்ச நூலின் இன்னொரு சிறப்பு. வாசிப்புப் பழக்கம் உள்ள கதை சொல்லிக்குப் பெரும் பாரமாக இருப்பது மஞ்சள் அழகியிடம் பறித்தெடுத்த பிரபஞ்சனின் சிறுகதைத் தொகுப்பு. தன் பிறந்தநாள் இரவில் சுமந்த பாரத்தை ஏசு பாலன் பிறந்த இரவில் மஞ்சள் அழகியிடம் கைமாற்றிவிடுகிறான்.
விமானத் தாக்குதலில் 57 பேர் இறந்தது ஒரு துயர் நிகழ்வு, ஆனால் அதை எப்படிக் கதை சொல்லிக்கு மீட்பின் பெரும் பாரம் அகலும் நிகழ்வாக அந்தத் துன்பியலை மாற்ற முடிகிறது என்பதில் தான் ஷோபாசக்தியின் நுட்பமான கதை சொல்லும் திறன் இருக்கிறது. தமிழீழத்தை – சோடாமூடியுடன் கவிழ்த்துக் கொள்வதாகட்டும், அய்ந்துபேரும் மஞ்சள் அழகியுடன் தனித்திருக்கும் இரவில், ஏன் மகாபாரதம் குறித்த உரையாடல் வர வேண்டும்? அவர்கள் பண்டவர்களும், திரெளபதியும் இல்லையா? மற்றும் விபச்சாரி குறித்து வரும் நுட்பமான விவரணைகள். கதை சொல்லியால் அதன் அழுக்கை, கீழ்மைகளை மட்டுமே பார்க்க முடிகிறது. காதில் செருகப்பட்டிருக்கும் சீழ் வடியும் கறுத்தப் பஞ்சு, வற்றி உலர்ந்த புட்டம், சிவந்த உதடுகள், கைப்பையில் இருக்கும் மஞ்சள் வேர்த்துண்டு, தூமைத் துணி கூடவே பிரபஞ்சனின் ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ சிறுகதைத் தொகுப்பு.
முதலில் அவர்கள் தூய இயக்கக்காரர்களாக ஒரு விபச்சாரியை எதிர்கொள்கிறார்கள். அது வெற்றுப் பாவனை மட்டும்தான். அவர்கள் அணிந்திருக்கும் முகமூடிகள் தான். விசாரணையும் செய்கிறார்கள், தண்டனையும் கொடுக்கிறார்கள். பின் இரவில் அவர்களின் நாடக ஒத்திகை தொடங்குகிறது. அந்த நாடக ஒத்திகைக்கான முன் ஏற்பாடுதான் விசாரணையும் தண்டனையும் என்னும் போது கதை அடுத்த தளம் நோக்கி நகர்கிறது. காயா கதையிலிருந்த கதை சொல்லும் தடுமாற்றம் இதில் இல்லை. கதை சொல்லி மூன்றாம் நபர் என்பதால் அவர் எந்தத் தயக்கங்களும் இல்லாமல் கதையில் தன்னை முன்வைக்க முடிகிறது. துருத்தல்கள் இல்லாமல் கதை ஒரு வித அமைதியில் இருப்பதாகப்படுகிறது. பிரபஞ்சனின் தொகுப்பும், அலெக்ஸ் பாரதி (இது புனைவா தெரியவில்லை) கதையும் வாசிக்க கிடைக்கவில்லை அவற்றையும் வாசித்தால் கதையின் அடுத்த பரிமாணங்கள் நோக்கி நகரமுடியும்.
ஷோபாசக்தியிடம் ஒரு பாணி இருக்கிறது அதனுள் அவர் எவ்வளவு நுட்பமாக கதை சொல்கிறார். உணர்ச்சியும், கொந்தளிப்புமான போர் நிகழ்வுகள் நாடக அரங்கின் திரைச்சீலை ஓவியங்களாகக் கதைப் பின்னணியில் தொங்கவிடப்படுகின்றன. அவற்றின் அர்த்தம் கலைத்து அடுக்கப்படுகின்றன. பகடியாக அணுகப்படுகின்றன.அவற்றின் கொந்தளிப்பும், உணர்வுமான தருணங்கள் வரலாற்றின் மடிப்புகளினுள் வெற்றுத் தூசுகளாக அடுக்கடுக்காகப் படிவதாக மறு அர்த்தம்பெறுகின்றன. இவரால் விபச்சாரியைக் கையும் களவுமாகப் பிடிக்கும் நிகழ்வைக் கூட ஒரு முகாம் தாக்குதலுக்கான போர் ஒத்திகை போல உரு மாற்றிவிட முடிகிறது.
கதை பிரபஞ்சனின் புத்தகத்தில் தொடங்கியிருந்தாலும் அதைப் பிரபஞ்சத்துக்கான நூலாக நம்மிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார். இது வழமையான ஷோபாசக்தி கதைகளில் இருந்து வேறுபட்டு பூடகமும், குறிப்புணர்தலுமாக இருக்கிறது. இன்னும் நுட்பமும் எளிமையுமாக மாறியிருக்கிறது மொழி.
(பி.கு : கதைசொல்லி (ஷோபாசக்தி அல்ல) கதையில் விபச்சாரி என்று பயன்படுத்தி இருப்பதால் அதன் நெருக்கம் கருதி, கதைக் குறிப்பிலும் விபச்சாரி என்று அப்படியே பயன்படுத்துகிறேன். அதைப் பாலியல்தொழிலாளி எனப் பயன்படுத்தும் போது சமூகத்தின் குரூர எதார்த்தம் வற்றிவிடுகிறது. மற்றும்படி அந்தச் சொல்குறித்த ஓர்மை என்னிடமிருக்கிறது )