ஆனைக்கோடாலி (சிறுகதைகள்) : உட்சுருங்கும் புவியியல்

தர்மு பிரசாத்தினுடைய சிறுகதைகள் நிலம் பற்றிய அனுபவத்தினுடைய, அறிவினுடைய அளவு எல்லைகள் குறுக்கப்பட்ட காலத்திலிருந்து வருபவை. மேற்கண்டோருடைய எழுத்தின் நிகழ்காலத்துக்கு அண்மித்த எழுத்தே ஆயினும், ஒரு தலைமுறை கழிந்திருப்பதில் வேறு சில விவரணைகள் சாத்தியமாயிருக்கின்றன. இதுவரையான எழுத்துகளில் கிடைக்ககூடிய பெயரிடப்பட்ட இடங்கள் சார்ந்த இனவரைவியல் (Ethnographic), நிலவரைவியல் (Geographic)  சார்ந்த கரிசனைகளைத் தன்னுடைய எழுத்துக்கானதாகப் தர்மு பிரசாத் வரித்துக்கொள்ளவில்லை என்பது மிக முக்கியமான புள்ளியாய்ப் படுகிறது. அதே சமயம், எதார்த்தவாத பணிப்பிலிருந்து விடுபடவேண்டி சுயம் அல்லது அகம் சார்ந்த உட்திரும்பிய தேடலாகவோ, அல்லது ஒரு மந்திர யதார்த்தவாதமாகவோ தர்மு பிரசாத்தின் எழுத்து மடைமாற்றமடைவதில்லை என்பதும் முக்கியமாகப்படுகிறது. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் உள்ள எழுத்து, ‘நிலத்தில் காலூன்றவோ’ அல்லது விடுபடவோ முயல்வதில்லை. ஒரே சமயம் நிலத்தில் ஆழமாகப் புதையுண்டபடி, அதே நேரம் பேய்மை நிலையில் அந்தரத்தில் பறந்தபடி இருதலைக் கொள்ளியெறும்பாகப் புனைவு நகர்வதாக நான் கருதுகிறேன். ஏதோ ஒரு உண்மையை, யதார்த்தத்தைச் சொல்லிவிடவேண்டும், விபரிப்புக்குள் அதை அகப்படுத்திவிடவேண்டும் என்கிற எத்தனம் இருந்தபோதும், அது நிகழ்ந்த நிலம் அதற்குரியது அல்ல என்று ஆகிவிட்ட நிலையில் யதார்த்தவியலும் இல்லாமல், மீ-புனைவும் வசப்படாமல் இடைப்பட்டஓர் எடுத்துச்சொல்லலை இச்சிக்கல் தோற்றுவித்திருக்கிறது. 

நிலத்துடன் மானுட உடலுக்கு இருக்கிற Scale சார்ந்த பிரச்சினை ஒவ்வொரு கதையிலும் திரும்பத்திரும்ப வெவ்வேறு விதங்களில் வந்துபோவதைக் காண்கிறோம். ஊரை ஊராக, ஒரு சீரிய நிலப்பரப்பாக அறிந்துகொள்ளமுடிகிற திறன் கதாபாத்திரங்களிடம் வெகுவாகக் குன்றிப்போய்விட்டிருப்பதைக் காண்கிறோம். இடத்தைப் பற்றிய விவரணங்கள் புலன்களாக மட்டுமே (ஒளி, மணம், சத்தம்) என்பதாகக் குறுகிப்போய்விடுகின்றன. ‘இண்டும் இடுக்கும் கண்கள் உள்ள’ ஒரு கண்காணிப்பு நெருக்கீட்டின் கீழ் சில குறுக்கமான எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டி, அதை வேலியிட்டு, கூரையிட்டு, கிடுகு மறைப்பிட்டுச் சமாளிக்க வேண்டிய நிலையில் கதைமாந்தர்கள் வந்துபோகிறார்கள். ஊரின் பொறுப்பாளர்களாக வருவோர் கூட அதை முழுதாக அறிந்துகொள்ளவோ, நிர்வகிக்கவோ, பொறுப்பேற்கவோ முடிவதில்லை. நிலம் பல இடங்களில் உடலை ஒழுங்குறுத்தவல்ல ஒன்றாகவே இருப்பதைக் காண்கிறோம். ஊர் பதுங்குழியாகிவிடுகிறது. ‘ஒரு பங்கருக்குச் சாத்தியமான அத்தனை வழிகளிலும் வளை தோண்டியபடியிருப்போம், அதுதான் எங்கள் தனித்துவம்’ என்கிறது ஒரு கதாபாத்திரம் (13, Rue Albert Camus). பதுங்குவதற்கான, தப்பிப்பதற்கான ஏதனமாக இருக்கும் அதே பங்கர் அழுகும் சடலங்களை (‘வித்துடல்கள்’) புதைக்கும் திறந்த புதைகுழியாகவும், மாரிகாலத்தில் தவளைகளும் வாற்பேத்தைகளும் வளர்ந்து பெருகி உடல்கள் அழுகி மிதக்கும் பதுங்குழியாகவும் மாறுகிறது. கோரத்துடைய இகழ்ச்சிக்கு எல்லையில்லை. மேன்மை நோக்கிய நகர்வு (எ.கா. சயந்தனுடைய ‘ஆதிரை’) இங்கு சாத்தியமில்லை. ஷோபாசக்தியின் ‘பொக்ஸ்’ நாவலில் வருகிற இதே வகை சக்திகொண்ட  சதுரங்கள் வெளியிலிருந்து வரையப்படுகின்றன.  ஆனால் தர்மு பிரசாத்திடமோ – நிலம் இப்படியான தன்மையைத் தன்வசம் கொண்டிருக்கும் ஒன்றாக வருகின்றது. ஓவியர் சனாதனனுடைய ஆரம்பகால ஓவியங்களில் உடல் உருக்கள் தமது உடல்சார் எல்லை-சீரழிந்த ஒரு தன்மையில் நிலவரைபடங்களுடன் ஒன்றாகிக் கிடப்பதைப் போல ஒரு நிலவரம். 

இந்த நிலவரத்தின் கீழ் ஓர் உடலுடைய நிலை என்ன என்பது சுவாரசியமான கேள்வி. உடல் எப்போதும் பருண்மையான நிலப்பகுதியின் விதிகளுக்கும் நிலவரத்துக்கும் ஆட்பட்ட ஒன்றுதான். ஆனால், போர் இந்த ஊடாட்டங்களைத் துரித கதியில் வக்கரித்துப் போகச் செய்துவிடுகிறது. ‘துண்டு நிலம்’ கதையில் போருக்கு முன்னான காலமொன்றில் இரு சகோதரர்களுக்கு இடையே நிகழ்ந்த எல்லைத்தகராறு நிலத்தில் ‘கோடு கிழிப்பதில்’ தொடங்கி தம்பியாரின் முகத்தில் மடக்குக் கத்தியால் எல்லைக் கோட்டைக் ‘கிழிப்பதாக’ ஒரு விவரணை வருகிறது. பின்வரும் போர்க்காலத்தில் இந்த நிலம் எப்படியெல்லாம் உருமாறுகிறது என்பதையும், அம்மாற்றங்கள் எங்ஙனம் உடல்களை மாற்றி மாற்றி நிலப்படுத்துகின்றன என்பதையும் காண்கிறோம். குறித்த கதாபாத்திரத்துக்கு நிலம் மீது இருக்கிற உரிமையுணர்வு, அது சார்ந்த ஓர்மை, இறுமாப்பு போன்றவை மிகவும் குரூரமாகச் சிதைவுற்றுப் போய்விடுகின்றன.  ‘சிறுதுளை’ சிறுகதையில் இறுதிப்பாகத்தில் காயம்பட்ட ஓர் உடல் ஓர்மை தவறிய நிலையில் இருந்து நினைவுக்குத் திரும்புவதை அணுஅணுவாக விவரிக்கிறார் ஆசிரியர். நினைவு தப்புகிறது. கிரகிப்பு சாத்தியமில்லை. உடல் முழுதும் வலி. மூச்சை இழுத்தால் இன்னும் ஆழமாக வலிக்கிறது. இயலுமையுள்ள, ஓர்மையுள்ள உடலாக மாறுவதற்கான சகல பிரயத்தனங்களையும் அவ்வுடல் மேற்கொள்கிறது. எறிந்து கிடக்கிற ஆடைகளைத் தேடி அணிந்து தன் நிர்வாணத்தை மறைக்க முயல்கிறது. தான் காயமுற்றிருப்பதை அறிந்துகொள்வதற்கு எடுத்துக்கொள்கிற அவ்வளவு நேரமும் அந்த உடலுடன் கூடவே இருக்கிற வர்ணனையில் Phenomenology of wounded-ness (காயமுற்றிருக்கும் நிலைபற்றிய நனவு-அனுபவவியல்) சாத்தியமாயிருக்கிறது. 

இலங்கைக்கு வெளியேயும் இதே Scale சார்ந்த பிரச்சினை இன்னும் உக்கிரமாகத் தொடர்கிறது. கூனிக்குறுகிய உடல் அதனினும் குறுகிய குடியிருப்புகளிலும், மாநகரின் பெரிய கட்டட வெளிகளுக்குள்ளும் ஏதோ மாதிரியாகத் தன்னுடைய அவலத்தை அறிந்து கொள்கிறது. வழிகள் தெரியாமல் நடு வீதியில் திக்கற்று நிற்க வேண்டியிருக்கிறது. முன்னொரு சமயம் காந்திக்குத் தோன்றியதைப் போலவே ஈஃபிள் டவர் இரும்புக் குப்பையாகக் காட்சி தருகிறது. சோதனைக்கெடுபிடிகள் அற்ற ஐரோப்பிய எல்லைகளைக் கடப்பதற்கு மறுத்து ‘இஞ்சும் நகராமல்’ ஒரு கதாபாத்திரம் தங்கிவிடுகிறது (நிலாவரை).

 இந்த நிலையிலிருந்து விடுதலையை, கதாபாத்திரங்கள் வெகு அரிதான சில சமயங்களில் அவாவுகின்றன. சிறு சிறு அசைவுகள் மூலம் தம்முடைய சிறு சுயாதீனங்களை அவர்கள் பேரம்பேசி நிலைநாட்டவும் செய்கிறார்கள் (துண்டுநிலம்). ஆனால் அந்த நிலப்பகுதியின் வரையறைகளை அவற்றுக்கே இருக்கக்கூடிய தர்க்கங்களின் ஊடாக இவர்களால் மீறமுடிவதில்லை. பலர் கொல்லப்படுகிறார்கள், சிலர் தாமாகவே சிதைந்து போய் விடுகிறார்கள். 

தர்மு பிரசாத்தின் சமகாலத்தவரான யதார்த்தனுடைய கதாபாத்திரங்களைப்போல மண்ணோடு இயைந்த பிரக்ஞையும், வாழ்வியலும் கதைமாந்தர்களுக்கு வாய்க்கமுடியாதபடி நனவியல், நிலவியல், ஒப்பளவியல் சிக்கல்கள் மேலிட்டுவிடுகின்றன. தர்மு பிரசாத்துடைய  சமகாலத்தவரான அனோஜனுடைய கதைகளில் வருவதுபோன்ற ஆழ்ந்த சமரசத்தையும் இவர்களால் செய்துகொள்ள முடிவதில்லை. புனைவால் மீட்டெடுக்கமுடியாத நிலம், மீட்டலுக்கு வசப்படாத உளவியல் சிதைவு – இந்த இரண்டு அசாத்தியங்களையும் தனது எழுத்தின் களமாகக் கொள்வது மிகவும் கடினமான விடயம். இது தோல்வியுடன் சமரசம் செய்துகொள்ள நேர்கிற விடயப்பரப்பு. அதனால் பல இடங்களில் சறுக்கல் நேரவே செய்கிறது. சிறுகதைக்குரிய வடிவநேர்த்தி, சிக்கனத்தன்மை போன்றவற்றுக்கு இந்த விடயப்பரப்பின் அவலம் இலகுவாக வளைந்து கொடுக்கப்போவதில்லை என்பது இன்னுமொரு சிக்கல். படைப்பாற்றலுக்கு ஏற்படும் நெருக்கடி சில குறுக்குவழிகளை நோக்கி அவரை நகர்த்துகிறதோ என்றும் யோசிக்கிறேன். பூடகப்படுத்துதல், குறிப்புணர்த்துதல், உருவகப்படுத்துதல் எனப் பல உத்திகளை அவர் முயற்சிக்கிறார். சில உண்மைகளை எப்படி முன்வைக்கமுடியும் என்கிற ஆழ்ந்த விசாரம் அவரை ஆட்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.  பேசாப்பொருட்களைப் பேசத்துணிந்தோம் என்கிற அசட்டுத் தைரியத்தில் இவற்றை முன்வைத்துவிடமுடியாது என்ற புரிதல் மேற்சொன்ன உத்திகளை நோக்கி அவரை நகர்த்தியிருப்பதாக நான் கருதுகிறேன். 

சயந்தனிடமும், ஷோபா சக்தியிடமும் வருவதைப் போலவே புனைவு அல்லது எழுத்து மீட்பராக, மீட்பின் சாத்தியமாகச் சில இடங்களில் வந்துபோகின்றது – ஆனால் இதை ஒரு பழக்கதோஷமாகவே கருதுகிறேன். ஷோபாசக்திக்கும் சரி, சயந்தனுக்கும் சரி ஒருவித விடுதலை இறையியலைத் தக்கவைப்பதைப் புனைவு சாத்தியமாக்குகிறது. ஆனால், இந்தச் சிறுகதைகளைப் பொறுத்தவரை தப்பித்தல் மட்டுமே சாத்தியம், விடுதலை சாத்தியமில்லை. விடுதலை பற்றிய கரிசனை பின்னொட்டாக ஆங்காங்கே வந்துபோனாலும், அது ஆங்காங்கே இறையியலாகத் தோற்றம் தந்தாலும் (‘மிக இரகசிய இயக்கம்) – அதனுடைய எல்லைகளால் நிர்ணயிக்கப்பட்ட பரிதாபகரமான எதிர்ப்பாகவே அது எஞ்சிவிடுகிறது. இந்தத் தோல்வியை, அதன் பரிதாபத்தை எப்படி எழுதுவது – அல்லது அதையே மட்டும் எழுதவேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்தில் இருந்து எப்படி மீள்வது என்பது போரின் சமகாலத் தலைமுறைகளுக்கு முன்னிருக்கும் ஆகப்பெரிய கேள்வி.

இலட்சியங்களுடைய மகோன்னதம் அவற்றினுடைய எல்லைகளைத் தீண்டிக் ‘கவர்ச்சிகரமான தோல்விகளாக’, ஒன்றுமில்லாமல் ஆன பிறகு உடலுடைய நிலை என்ன, ஆன்மாவினுடைய நிலை என்ன என்பது போன்ற கேள்விகளை தர்மு பிரசாத்தினுடை சிறுகதை உலகு எழுப்புகிறது. தன்னுடைய நனவியலே (Phenomenology) இருப்புக்குச் சாத்தியமில்லாமல் இருக்கும் போது, நிலத்தின் மீது, புவியியலின் மீது எப்படி அது விசாரணைகளைச் செய்யமுடியும்? மீந்திருத்தலின் நேர்மையான அகவிசாரணை இப்படியான ஒரு இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க முடியும். 

ஹரி இராசலட்சுமி

ஆனைக்கோடாலி (சிறுகதைகள்)

தர்மு பிரசாத் 

கருப்புப் பிரதிகள் வெளியீடு (2021) 

 

Scroll to Top