13 Rue Albert Camus

01.

பெண் கரும்புலியின் கை மிகவும் குளிர்ந்திருந்தது. ’எப்படிக் கண்டுபிடித்தாய் இந்த பங்கறை?’ என்றபடி எதிரிலிருந்த ஊதா நிறச் சோபாவைக் காட்டினாள்.  மெல்லிய சாம்பல்நிற மேற்சட்டையில் அவளது முலைகள் மிகச்சிறியதாக மேடிட்டிருந்தன. குட்டையான உருண்ட தேகம். சுருள்முடி கட்டையாக் கத்தரிக்கப்பட்டிருந்தது.  மிக சுத்தமாக துடைத்து பளபளப்பாகப் படிந்திருந்த மாபிள் தரையில் அவளின் பாதங்கள் வாத்துப்போல் வழுக்கிச் சென்றன. எதிரிலிருந்த சோபாவின் குஷனில் முழுவதுமாகப் புதைந்தது அமர்ந்தாள்.

‘உனது வீடு புதிர்ப்பாதையின் சுழல்வட்டம் போலிருந்தது. நான் அதைக் கவனமாகத் தேடித்தேடிச் சலித்துப்போயிருந்தேன்.  பதினோராம் இலக்கக் கட்டிடத்தைத் தொடர்ந்து எப்போதும் பதினைந்தே வந்தது. உன்னுடைய பதின்மூன்றாமிலக்கம் ஒருபோதும் வரவில்லை. நான் வழி தெரியாது நடுவீதியில் திக்கற்று நின்றிருந்தேன். அப்போதுதான் என் எதிரில் அவர் நிலத்தில் எதையோ தேடியபடி வந்தார். அவரிடம் கசங்கிய காகிதத்தில் எழுதபட்ட உன் முகவரியைக் காட்டினேன். அது நனைந்து ஈரலிப்பாக இருந்தது. அவர் மெல்லிதாகப் புன்னகைத்தபடி ‘உன் எதிரில்தானே  இருக்கிறது நீ எங்கே தேடிக் கொண்டிருந்தாய்’ என்றார். நான் என் எதிரில் சுற்று முற்றும் பார்த்தேன். அடியில் புகைபடிந்த இரண்டு  வெளிர் நீலக் கட்டிடங்கள் மாத்திரமே தெரிந்தன. ’அதோ அங்கே’ என்றபடி அவர் தனது இடதுகையைத் தூக்கி அந்த இரு வெளிர்நீலக் கட்டிடங்களின் இடைவெளியில் தனது சுட்டுவிரலினால் சுட்டினார்.  கட்டிங்கள் நீரைப்போல் இரண்டாகக் கிழிந்து வழிவிட்டன போலிருந்தது. உனது வீட்டின் பதின்மூன்றாமிலக்கம் மரப்பலகையில் புடைப்பாகச் செதுக்கப்பட்டிருப்பது பனிப்புகாரினூடு  மங்கலாகத் தெரிந்தது. அதன் கீழே கலங்கியிருந்த உனது பெயரை என்னால் ஒருபோதும் வாசிக்க முடியவில்லை.  அவரும் என் கூடவே உன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அனுமதிக்காக வீட்டின் வெளியே குளிரில் காத்திருக்கிறார்’.

முகத்தில் ஆச்சரியம் படர  சோபாவிலிருந்து எழுந்து எட்டி வெளி வாசலைப் பார்த்தாள். கைகளை உரசியபடி காம்யூ உள்ளே வந்தார். குளிரில் அவருடைய காதுகள் சிவந்திருந்தன. கால்வரை நீண்டிருந்த சாம்பல் நிறக் குளிரங்கியில் மிடுக்கன் போலிருந்தார். ஏறு நெற்றியில் தலைமுடிகள் கலைந்திருந்தன. தனது வசீகரமான புன்னகையில் வணக்கம் சொல்லியபடி அவளுக்குக் கைகளைக்  கொடுத்தார்.‘நாம் யாராலும் நேசிக்கப்படாத துரதிர்ஷ்டமான காலத்திலிருக்கிறோம்’ என்றபடி அவருடைய கைகளை அழுந்தக் குலுக்கினாள்.அவர் ’இது பயங்கரங்களின் காலம் நாம் துரதிர்ஷ்டசாலிகளும் கூடவே’ என்றபடி அவளின் முதுகில் மெதுவாக வருடினார். ’அவர்கள் வந்ததும் நான் கிளம்பிவிடுவேன் தொந்தரவிற்கு மன்னிக்கவும்’ என்றார்.  அவர் மிகவும் பதட்டத்துடன் இருப்பது போலிருந்தது. தன்னுடைய கைகளை அடிக்கடி அழுந்தத் தேய்த்துக் கொண்டார். குளிரிலும் நெற்றியில் சில வியர்வைத்துளிகள் அரும்பி மினுங்கின. இருக்கையின் நுனியில் அமர்ந்தவர் உடனே எழுந்து சன்னலருகே சென்றார். வெளியே கண்ணாடிச் சன்னலூடு விரியும்  பூங்காவைப் பார்த்தார். அதன் நடுவில் இரண்டு இரும்பு ஊஞ்சல்கள் அசைவற்றுக் கிடந்தன. தூரத்தில் ஒரு நாய் முட்புதரை மோப்பம் பிடித்தபடி மூக்கினால் ஈரலிப்பான இலைகளைப் புரட்டிப் போட்டபடியிருந்தது. உடைந்த  சைக்கிளின் பாகங்கள் மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. சில எரிந்த கரியமரங்களின் அடிப்பாகங்கள் வாய் பிளந்து நிலத்தில் கிடந்தன. குழந்தையின் மென்நீல உள்ளாடை ஒன்று காற்றில் அலைந்தபடியிருந்தது.  ‘நேரங்கடந்து கொண்டிருக்கிறது அவரை இன்னும் காணவில்லை. ஒருவேளை உயிரோடு இல்லாமலும் இருக்கலாம்’ என்றார். பூங்காவின் வடகிழக்கிலிருந்த சிறிய மரப்புதர்களை விலக்கி ஒற்றையடிப்பாதையின் விளிம்பில் உரக்கப்பேசிச் சிரித்தபடி சிலர் வருவது தெரிந்தது. உடல் மெலிந்து குளிரில் ஒடுங்கிய அவர்களின் உதடுகள் வெடித்திருந்தன. அவர்களின் தடித்த ஆடைகள் வர்ணம் உதிர்ந்து வெளிறிக்கிடந்தன. அதில் மிக வயதான மூதாட்டி அழகான கம்பளியாடை அணிந்திருந்தார். காம்யூவின் முகத்தில் மெல்லிய ஒளிபடர்ந்தது.  ஒடுங்கிய கன்னத்தின் தோல்கள் சுருங்கச் சிரித்தார். ’அதோ அவர் வந்துவிட்டார் குளிரில் மிகவும் ஓடுங்கிப்போய் விட்டார். குளிரும் ஒரு சிறிய யுத்தம் போலத்தான் நம்மை சூழ்ந்துவிடுகிறது’

‘குளிர் தடித்த பெண்ணின் தசைகளாகி எம்மை  இறுகக் கட்டிக் கொள்கிறது’

’இல்லவே இல்லை அது கந்தகவாசனை நிரம்பிய வெடிமருந்தைப்பபோல எல்லோரையும் அமானுஷ்யமாகச் சூழ்ந்திருக்கிறது’

காம்யூ அவசரமாகத் தனது சாம்பல்நிறக் குளிரங்கியைச் சரி செய்து கொண்டார். ’நான் போயாக வேண்டும், எனக்கு பாலும் வாட்டிய பாணும் கொஞ்சம் பழங்களும் வேண்டும்?’ மேசையில் கண்ணாடிக் கிளாஸில் இருந்த செம்மஞ்சள் பழச்சாறை எடுத்து ஒரே மடக்கில் குடித்தார். அவள் எழுந்து சமையலறைக்குச் சென்றாள். அவளின் கால்கள் மாபிளில் வழுக்கிச் சென்றன. காம்யூ பூங்கா மூலையில் வர்ணம் உதிர்ந்தவர்கள் வரும் திசை நோக்கிக் கையசைத்தார். அவர்கள் இவருடைய இருப்பை உணர்ந்து கொள்ள முடியாதபடி தடித்த கண்ணாடிக்கு அப்பாலிருந்தனர். அவருக்கு நேர்பின்னால் சுவரில் பெரிய நீர் வர்ண ஓவியத்தின் அச்சுப்பிரதி மாட்டப்பட்டிருந்தது. ஒற்றைக் கண்ணை மூடியபடி எதிரிலிருப்பவரைத் துப்பாக்கியால் குறிபார்க்கும் ஓவியத்தின் மட்டமான பிரதி. அதன் ஓரங்களில் மரச்சட்டமிடப்பட்டிருந்தது. அதன் இருப்பு மரச்சட்டத்தையும் மீறி வழியும் எண்ணெய்யின் சாயலிலிருந்தது. துப்பாக்கியின் குண்டு வெளியேறும் குழல் வட்டமாக உள் சிறுத்துச் சென்று இருளினுள் மறைந்திருந்தது. துப்பாக்கியின் விசை அழுத்தும் நொடியில் ஓவியம் பதிவாகியிருந்தது. ஓவியத்தின் நேரெதிரில் நின்றால் அந்தத் துப்பாக்கி துல்லியமாக நெற்றிப்பொட்டில் குறிபார்க்கும் கச்சிதத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. பூங்காவை வேடிக்கை பார்த்தபடியிருந்தால் அது சரியாகப் பிடரியைக் குறிபார்க்கும். காம்யூவைத் துப்பாக்கி பிடரியில் குறி பார்த்தபடியிருந்தது.

ஓவியத்தின் கீழ்விளிம்பில்  பத்திரிகையிலிருந்து கத்தரிக்கப்பட்ட உள்ளங்கையளவு புகைப்படம் செருகப்பட்டிருந்தது. அதில் உருக்குலைந்த காரின் அருகில் இரண்டு உயிரற்ற உடல்கள் கிடந்தன. காரின் முன் கண்ணாடி முழுவதுமாகச் நொருங்கிச் சிதறிக்கிடந்தது. அதன் கரிய இரும்புடலில் சல்லடைபோல துளைத்த காயங்களிருந்தன.  அருகே  முகம் சிதைந்த உடலின் ஆடைகள் மடிப்புக்கலையாமல் அழகாக இருந்தன. கைகள் மடித்துவிட்டிருந்த சேட்டில் திட்டுத் திட்டாகக் கரும்புள்ளிகள் சிதறியிருந்தன. அதன் ஒற்றைக்கால் செருப்பில்லாமல் மடங்கிக்கிடந்தது. சிதைந்த முகத்திலிருந்து விரிந்த அம்புக்குறியின் ஆரம்பத்தில் சிறிய சதுரத்தில் வசீகரமாகப் புன்னகைக்கும் ஆணின் படமிருந்தது. நேரான பற்களும், தடித்த உதடுகளும் சிரிக்கும்போது எடுப்பாக இருந்தன. முகத்தில் மெல்லிதாகத் தாடி அரும்பியிருந்தது.  அருகே மற்ற உடல் முற்றாகச் சிதைந்து கிடந்தது. அதன் ஆடை கிழிந்து திறந்திருந்த மார்பில் சிவந்த இரு குழிகளிருந்தன. முகம் முற்றாகச் சிதைந்திருந்தது.  அந்த மெல்லிய வாடலான உடல் காற்றில் அசைவது போலிருந்தது.

காம்யூ பழங்களையும் பாலையும் வாட்டிய பாணையும்  பிளாஸ்ரிக் பையில் இட்டபடி பூங்காவின் ஒற்றையடிப்பாதையில் விரைந்து செல்வதைக் கண்ணாடிச் சன்னலூடு பார்த்தபடியிருந்தாள்.  அழகான கம்பளி ஆடையணிந்திருந்த முதியவள் காம்யூவை நோக்கிக் கையசைப்பது போலிருந்தது. அவர்களின் இருப்பை உணர்ந்து கொள்ள முடியாதவராய் அவர்களைக் கடந்து சென்றார் காம்யு. ‘எதற்காக இவ்வளவுதூரம் வந்திருக்கிறாய்’ என்றாள். பூங்காவை வேடிக்கை பார்த்திருந்த அவளின் கண்கள் காம்யுவைத் தொடர்ந்தபடிருந்தன. இப்போது துப்பாக்கி அவளின் பிடரியைக் குறி பார்த்திருந்தது.

2.

புறநகரின் ஒதுக்குபுறமான அந்த லொட்ஜைக் கேட்டபோது ‘அது கிழட்டு வேசையின் யோனியை ஒத்திருந்தது’ என்றாள். லொட்ஜின் இரும்புக்கதவை ஒட்டிக் கிடந்த சன்னலற்ற அறையில் தனது பெயரைப் பதிவுசெய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வெறும்மேலுடன் சிறிய பனையோலை விசிறியால் விசுறியபடியிருந்த வயதான விடுதியாளன் அதிகம் பேசாதவனாயிருந்தான். அவனின் கண்களின் கீழ்த் தோல்தடித்திருந்தது. அறையினுள் பிசுபிசுக்கும் வியர்வை நொடி இறுகிக்கிடந்தது. அவனின் நீலநிறச் சட்டை சுவரிலிருந்த ஆணியில் தொங்கியது. அதன் உள்ளே கசங்கிய ஆணின் உள்ளாடையொன்று  சுருண்டு கிடந்தது.  இவளது கண்களைத் தவிர்த்து விட்டு  அவளது சிறிய முலைகளை நீண்ட  நேரம் உற்றுப்பார்த்தபடியிருந்தான். வலது கண்ணின் கீழான தசை மெதுவாகத் துடித்தபடியிருந்தது.  இவளின் அடையாள அட்டையின் பிரதியையும் ஊரின் முகவரியையும் ஒன்றுக்கு இரண்டுமுறை கேட்டுச் சரிபார்த்தான். இவள் இங்குவந்த வந்திருப்பதன் காரணம் குறித்துத் துருவித் துருவிக் கேள்விகளைக் கேட்டான்.’பிரான்சுக்குப் போகப்போறன் அங்கைதான் எண்ட மனுசனிருக்கிறார் கொஞ்ச நாள்ளை விசா வந்துவிடும்’ அடையாள அட்டையின் விபரங்களை தனது சிறிய கொப்பியின் வலது மூலையில் எழுதியிருந்த பதின்மூன்றாம் இலக்கத்தின் கீழ் சிவப்பு மசியால் பிரதியெடுத்தான். பொலிஸ் பாஸின் பிரதியை அய்ந்து நாட்களுள் தரும்படி சொல்லிவிட்டு தனது கைகளை மெல்லிய வெள்ளைத் துணியில் துடைத்தான்.  மரமேசையின் இழுப்பறையைத் திறந்து பதின்மூன்றாமிலக்க அறையின் சாவியை எடுத்து அவளிடம் கொடுத்தான். அது கோயிற்சாவி போல  கனமாகவும் நீண்டதாகவுமிருந்தது. சாவித்துவாரம் துருவேறிக்கிடந்தது. கதவைத்தள்ளி அறையைத் திறந்த போது  நெடுநாட்கள் திறக்கப்படாமல் இருந்தது போன்ற  உளுத்த வாசனை உள்ளிருந்து வந்தது.

மூன்று மாதங்களின் பின்னரான ஓரிரவில் இவள் நேரங்கடந்து ஓட்டோவிலிருந்து இறங்கிவருவதை முதிய விடுதியாளன் இரும்புக்கதவின் பின்னாலிருந்து பார்த்தபடியிருந்தான். அவனின் மேற்சட்டையில்லாத வெற்றுடம்பு இருளில் நிழலுருவமாகத் தெரிந்தது. ஏதும் பேசாமல் இரும்பு நிலத்தில்  உராயும் சத்தத்துடன் இரும்புக்கதவைத் திறந்துவிட்டவன் இவள் அறையினுள் சென்று கதவைச் சாத்தும் வரை வாசலிலேயே நின்றிருந்தான்.’அன்றுதான் அவனை நேரில் பார்த்தேன் மூன்றுமாதத் தேடுதல் முடிவிற்கு வந்தது தன்னுடையை முடிவைத் தானே தேடி வந்தான்’ என்றாள். இவள்  தேநீர் விடுதியின் உள் ஓரமாக இருந்த பிளாஸ்டிக் இருக்கையிலிருந்து அகன்ற வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். முன்னால் வைக்கப்படிருந்த  பழச்சாறு குளிர்ந்திருந்தது. அருகிலிருந்தவன் அடிக்கடி வீதியோரமாகக் காறி உமிழ்ந்தபடியிருந்தான்.   அவனுடைய மேசையிலிருந்த பால் தேநீர் ஆறிக் கடும் நிறத்தில் தடித்த ஆடை படர்ந்திருந்தது. உமிழ்ந்த இடைவெளியில் பத்திரிகையை வாசித்தான். வீதியில் ஓரமாக நிறுத்தப்படிருந்த லொறியை இராணுவத்தினர் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். லொறியில் வந்த மூவரும் வீதியை ஒட்டிக்கிடந்த சிறிய புற்தரையில் குந்தியிருந்தியிருக்க வைக்கப்பட்டிருந்தனர் அவர்கள் பீடி புகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பின்னால் சில இராணுவத்தினர் துப்பாக்கிகளோடு நின்றிருந்தானர்.  வீதியால் செல்லும் வாகனங்கள்  லொறியினருகில் மெதுவாகி விரைந்து கொண்டிருந்தன. வீதியோரமாக நின்றிருந்த இராணுவத்திலொருவன் வாக்கி-டோக்கியின் சிறு முனையைத் திருப்பியபடி தன் முகத்தின் முன்னால் பிடித்தபடியிருந்தான். வாக்கி-டோக்கியிலிருந்து கரகரத்த குரல்களின் இரைச்சல் கேட்டது. அப்போது பின்னாலிருந்து அந்தக்குரல் கேட்டது. ‘நாம் இரவுணவை ஒன்றாக அருந்தலாமா விரும்பினால் இங்கேயே’ நிமிர்ந்து குரல் வந்த திசையில்ப் பார்த்தாள். நேரான பற்களில் சிரித்த முகம் நேர்த்தியான ஆடை அணிந்திருந்தது.

பதின்மூன்றாம் இலக்க அறைக்கு அவன் அடிக்கடி வந்து செல்லத் தொடங்கிய பின் மாலைகளில் முதிய விடுதியாளன் சன்னலற்ற அறையைவிட்டு வெளியில் வருவதில்லை. அறையின் இருள்  மூலைக்குள் முடங்கிக்கிடந்தான். இவள் ஒருமுறை வாடகை கொடுக்கச் சென்றிருந்த போது அவனது உடல்மொழியில் குழைவு தெரிந்தது. இருக்கையிலிருந்து எழுந்து காசை வாங்கி இழுப்பறையில் பத்திரமாக வைத்தான். அவனின் உடலிலிருந்து சதைகள் அழுகியவாசனை வந்தது. ’தயவு செய்து ஆணுறைகளை மலக்குழியில் எறியவேண்டாம், நீ பிரான்ஸ் செல்வதற்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கும் அதுவரை மலக்குழி அடைக்காதிருக்கட்டும்’ என்றான். வெள்ளைத் துணியில் கையைத் துடைக்கவும், அவளது சிறிய முலைகளை உற்றுப்பார்க்கவும் மறக்கவில்லை. துளைகளை அடைத்துச் செல்லும் ஆணுறைகளைக் குறித்த அறிவுரையை அவனிடம் சொல்லியபோது ‘சீழ்பிடித்த கிழட்டு மூடன் கற்பனையிலேயே வாழ்ந்துவிடுகிறான்.  நாம் இன்னும் முத்தமிடவே தொடங்கவில்லை அன்பே’ என்றான். ‘அன்று நாம் நெடுநேரம் முத்தமிட்டுக் கொண்டோம்’. ஊதா மேற்சட்டையின் தெறிகளைக் கழட்டிய போது அவளது மிகச்சிறிய முலைகள் மேசைவிளக்கின்  இருளில்   அசைவற்றுத் தெரிந்தன. நிமிர்ந்து இவள் முகம்பார்த்தவன் கண்களை இறுக மூடினான். அவனது முகத்தில் கடுமை கூடியது. மேசைவிளக்கின் மென்னொளி முலைகளில் பிரதிபலித்தது. சுவர் பக்கமாகத் தலையை வெட்டித் திருப்பினான்.  ‘தயவு செய்து அவைகளை மூடு அவை அம்மாவின் முலைகளை நினைவுபடுத்துகின்றன’ என்றான். குரல் கட்டளையிடும் தொனியிலிருந்தது. இவள் சடுதியில் முலைகளை மறைத்துக் கொண்டாள். பின்னொருபோதும் அவிழ்க்கப்படாத முலைகளின் வியர்வையை உணர்ந்தபடியே அவள் அவனுடன் முயங்கிக்கிடந்தாள்.

மிகச் சிறிய வெடிமருந்துப்பட்டியை முலைக் கச்சைக்குள்  பொருத்தியபோது முலைகள் குளிர்ந்தன. இயக்குவதற்கன சிறிய விசையை மோதிரவிரலின் இடுக்கில் மறைத்துக் கொண்டாள். உடலோடு உருகிப் பிணைந்த தசைத்துண்டு போல முலைகளின் மேல் கிடந்தது சிறிய சாம்பல்நிறப்பட்டி.  ’எனக்கான கட்டளை இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும்,  நான் எப்போதும் வெடிக்கும் நிலையிருக்க வேண்டும். அதுதான் நமக்கான முதற்பாடம்’ அன்று அவன் நேரம் மிகவும் பிந்தியே வந்திருந்தான். ஆடைகள் கலைந்து வியர்வையில் நனைந்திருந்தன. கண்கள் சிவந்திருந்தன சாராயத்தின் நெடி வீசியது.  பெருவிடாய் கொண்டவனாய் மேசையிலிருந்த போத்தல் தண்ணீரைக் குடித்தான். அவனுடைய தொண்டையினுள் நீரூற்று விழும் ஓசைகேட்டது.  அவிழ்க்கப்படாத அவளுடைய முலைகள் ரகசியங்கள் நிரம்பிய கிடங்கு போல இறுகிக்கிடந்தன. தகிக்கும் நெருப்பின் குழம்பாகவும், குளிர்மையாகவும் முலைகளை உணர்ந்த பொழுதில் ஒருநாளும் தட்டப்படாத பதின்மூன்றாம் இலக்க அறையின் கறள் பிடித்த கதவுகள் தட்டப்பட்டன. அவள் எழுந்து சென்று கதவைத் திறந்தாள். வெற்றுடம்பில் விடுதியாளன் இருளில் நின்றிருந்தான் ‘மன்னிக்கவும் இன்று நான் வெளியில் செல்லவேண்டும் இரும்புக் கதவைப் பூட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது’.   அவன் எழுந்து ஏதும் பேசமால் கதவை அறைந்து சாத்திவிட்டுச் சென்றான். அறையின் இருளில் சாராயத்தின் நெடி அவளின் நாசிகளில் நெடுநேரம் கரித்தபடியிருந்தது.

விடுதியாளனின் சன்னலற்ற அறையில் தூதரகத்திலிருந்து இவளுக்கான விசா வந்திருந்தது. அந்தப் பழுப்பு நிற உறையை இவளின்முன்னால் வீசிவிட்டுக் குனிந்து தனது சிறிய தாளில் குறித்தபடியிருந்தான். முகத்தில் கடுமை கூடியிருந்தது.  பழுப்பு உறையுள் சிவப்பு மையால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அன்றிரவும் அவன் நேரம் பிந்தியே வந்திருந்தான். கந்தகவாசனை நிரம்பிய சாம்பல் நிறப்பட்டியின் குளிர்மையை முலைகளில் உணர்ந்த ஒரு நொடியில் மோதிரவிரலிலிருந்த விசையை அழுத்தினாள். விசை மிக மிருதுவாகத் தன்னுள் அழுந்திக்கொண்டது. அறை பெருவெடிப்பின் முன்னரான நிசப்தத்தில் மூழ்கிக்கிடந்தது. அவன் தன் அம்மாவின் முலைகளை நினைவுறுத்தும் அவளின் முலைகளை விலத்தி விலத்தி முயங்கினான். ‘அவன் போன பிறகும் துரதிர்ஷ்டம் பிடித்த அந்த விசையைப் பல தடவைகள் அழுத்திப் பார்த்தேன். பலமுறை சரிபார்க்கப்பட்ட விசையது அன்று பிசகிவிட்டது,  எங்கோ அதன் இணைப்புப் பிரிந்திருக்க வேண்டும்’. நான் ஓவியத்தின் மூலையில் செருகப்பட்டிருந்த உள்ளங்கையளவு புகைப்படத்தைப் பார்த்தேன்.  ’நாங்கள் ஒரு பங்கரிற்குச் சாத்தியமான அத்தனை வழிகளிலும் வளை தோண்டியபடியிருப்போம் அதுதான் எங்கள் தனித்துவம்’ என்றாள்.

03.
சைக்கிளில் வந்த இளந்தாரியை மறித்து அந்த முகவரியைக் காட்டினார்கள். ‘எது அந்தப் பள்ப் பள்ளிக்கூடமா?’ என்றான். அவன் கைநீட்டிய திசையில் பள்ளிக்கூடத்தின் பெயர் தாங்கிய இரும்பு வளைவு பூவரசங்கதியால்களிடையே தெரிந்தது. பள்ளிக்கூடம் பிரதான வீதியையொட்டிய சரிவிலிருந்தது. அதன் வடக்கு வேலியோடிக்கிடந்த  வெள்ளவாய்க்கால் இலந்தைப் புதர்மூடித் தூர்ந்துகிடந்தது. பள்ளிகூடத்தின் முன்னால் மினித்தியேட்டரும் பளபளப்பான சாராயபாரும் இருந்தன. மினித்தியேட்டாின் முன்னால் கிடந்த தட்டியில் மேற்சட்டையில்லாத ஆணின் ‘போஸ்டர்’ ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. எண்ணெய் வடியும் பளிங்கு உடலில் நரம்புகள் அதீதமாகப் புடைத்திருந்தன. சாராய பாரின் ஓரமாகச் சில சைக்கிள்கள் சரித்து விடப்பட்டிருந்தன. பாடசாலையின் வாசல் இரும்புக்கதவு திறந்துகிடந்தது. வாசலுக்கு வந்து உப-அதிபர் அவர்களை வரவேற்றார். பிள்ளைகளின் இரைச்சல் வாசலில் நுழையும்போதே தூரத்தில் கேட்டது. வகுப்பறைக் கட்டிடங்கள் அடியில் தூர்ந்துகிடந்தன. சதுரச்சதுர வகுப்பறைக் கட்டிடங்களின் நடுவில் புழுதி பறக்கும் சிறிய வெட்டைகிடந்தது. நிலத்தைக் கிழித்த வழுவழுப்பான கற்கள் வெட்டை முழுவதும் வெண்திட்டுக்களாகக் கிடந்தன. மூலை நீர்க் குழாயிலிருந்து தண்ணீர் சிறு சிறு கோளக் குண்டுகளாக விழுந்த படியிருந்தது. அந்தக் குழாயைச் சுற்றி நிலத்தில் ஈரலிப்பும்,  வெளிர்பச்சை இலைச் செடிகளும் வளர்ந்திருந்தன. சிறிய மண்டபத்தில் பிள்ளைகள் நெருக்கிச் சீமெந்து நிலத்தில் அமர்ந்திருந்தனர். ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் ஓரடி அகலமான இடைவெளி மிக நேராகவும் துல்லியமாகவும் பின் இருக்கைகள் வரை நீண்டிருந்தது. பின்னால் இருந்த கதிரைகளில் ஆசிரியர்கள் அமர்ந்திருந்து வெளியில் பார்த்தபடியிருந்தனர். அதிபர் கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி மண்டபத்தின்  குறுக்கும், நெடுக்குமாக நடந்தபடியிருந்தார். அவரது கையிலிருந்த சிறிய பூவரசம் பிரம்பின் நுனி சிதம்பிக்கிடந்தது.

’பிள்ளைகளே இதுதான் தொடக்கமும் முடிவும், கூடவே கடைசிச்சண்டையும்’ மாணவர்களின் இரைச்சல் படாரென அறுந்து பேரமைதி மண்டபத்தைச் சூழ்ந்தது. அருகில் தெரியும் தோட்டங்களில் சோளப்பொத்தி அறுக்கப்பட்ட சோளக்கட்டைகள் காய்ந்து காற்றோடு அரையும் சத்தம் மட்டுமே சன்னமாகக் கேட்டது. நெடுநேரமாகச் சோளக்கதிர்கள் அரையும் சத்தத்தினூடே பேசியபடியிருந்தாள். வரலாற்றின் இடுக்குகளிலிருந்து கசப்பேறிய வன்மம் மிக்க சொற்களைத் தேடித் தேடி எடுத்தாள். சொற்கள் குருதியின் பிசுபிசுப்பில் வாளின் பளபளப்பில் வந்தன. இருளிலிருந்து மிகச்சனமான ஒளியைக் கையிலேந்திவரும் இலாவகம் சொற்களிலிருந்தது. கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன செய்திகளை புதிய வார்த்தைகளில் பிரசவித்தாள். மெல்லிய உப்புத்தூவிய தேசிக்காய்த் தண்ணிரை ஒரே மடக்கில் குடித்த போது உடல்முழுவதும் குளிர்மையை உணரக்கூடியதாக இருந்தது. நான்காவது வரிசையின் முடிவில் அமர்ந்திருந்த பூனை மீசை அரும்பும் சிவந்த உடல் பெடியன் கூச்சத்தினூடே அந்தக் கேள்வியக் கேட்டான். ‘நீங்கள் இதுவரை எத்தனை ஆமியைச் சுட்டிருக்கிறீங்கள்?’. இவள்  கதிர் அறுக்கப்பட்டிருந்த சோளக்கட்டைகளைப் பார்த்தாள் காற்றோடு அவை துல்லியமாக அரைந்தபடியிருந்தன. சிரிப்பும், இரைச்சலுமாக மண்டபம் கலைந்து கொண்டிருந்தது.

சந்தியில் பஸ்சிற்காகக் காத்திருந்தபோது தொண்டையில் மெல்லிய வலியை உணர்ந்தாள். பிள்ளைகள் தோட்ட வரம்புகளில் வரிசையாகச் செல்வது தூரத்தே தெரிந்தது. பஸ்ராண்டை ஒட்டி நின்றிருந்த நிழல்மரவள்ளி மரத்தின் நிழலில் ஓர் ஆணும் பெண்ணும்  நின்றிருந்தனர். ஆணின் தலை முழுவதும் நரைத்து வெண்கம்பிகள் போலிருந்தன முடிகள். நரைத்த முடியை எண்ணைவைத்துத் தலையோடு  படிய வாரியிருந்தார். தூய வெள்ளை ஆடைகள் அணிந்திருந்தார். வாடிக் கருத்த முகத்தில் பற்கள் மிதப்பாக மஞ்சள்படிந்திருந்தன. சி்றிய பழுப்பு நிற உறைபோட்ட புத்தகம் ஒன்றை மார்போடு அணைத்து வைத்திருந்தார். பெண்ணின் கரிய முடியும் தலையோடு படிய வாரிப் பின்னி பின்னலின் முடிவில் சிறிய முடிச்சிடப்படிருந்தது. கையில் சில காகிதங்களைப் பிளாஸ்டிக் பையில் வைத்திருந்தார். பிளாஸ்டிக் பையில் அழகான வர்ணங்களில் ஓவியங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இவர்களைப் பார்த்து மிதப்புப் பல்லில் புன்னகைத்தவர் அருகில் வந்து ‘தேவன் வருகிறார் என்றார்’. இறைச்சிச் சாப்பாட்டு வாசத்துடன் ஒரு இராணுவ ரக்டர் அவர்களைக் கடந்து சென்றது. அதன், பின்பெட்டியில் ஓர் ஆமி துப்பாக்கியைச் சரித்து வைத்தபடி அமர்ந்திருந்தான்.  ’ஸ்தோத்திரம் சகோதரம் இது துரதிர்ஷ்டங்களின் காலம்’ என்றவர் ஓடிச் சென்று நிழல்மரவள்ளி மரத்தின் பெரியவேரில் ஏறி நின்று பழுப்புநிறப் புத்தகத்தைப் பிரித்து, மடித்து வைத்திருந்த பக்கத்தை வாசிக்கத் தொடங்கினார்.

“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,  தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”

’அவருடைய சொற்கள் வரலாற்றின் இடுக்குகளிலிருந்து அன்பும் பரிவோடும் வந்தன. சொற்கள் குழைவும் மென்மையுமாக இருந்தன. நான் அவரை நினைத்து வெகுநேரம் சிரித்தேன். அவருடைய தூய வெண்ணிற ஆடைகள் அழகாக இருந்தன. ஒரு நொடி நானே நிழல்மரவள்ளியின் வேரில் நிற்பது போலிருந்தது’  என்றாள். பஸ்  வந்த போது அருகில் நின்றிருந்த தோழியிடம் குனிந்து காதுகளில் கிசுகிசுத்தாள். ‘நான் கரும்புலியாகப்போகிறேன்’.

04.
வெளியே வந்ததும் பதின்மூன்றாம் இலக்கக் கட்டிடம் பனிப்புகாரினுள்ளே மறைந்து கொண்டது. வீதியில் காம்யு காத்திருந்தார். அவரது கையிலிருந்த பிளாஸ்ரிக்பை பனித்துாவல்களால் நிரம்பியிருந்தது. காம்யு அதனுள் பனித்தூவல்களைச் சேகரித்தபடியிருந்தார். மெலிதாகப் புன்னகைத்தபடி ‘அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்’ என்றார். ’ம் அவளும்தான்’ என்றேன்.  றுய் அல்பெர் காம்யுவின் வளைவில் திரும்பும் போது  காம்யுவைத் திரும்பிப் பார்த்தேன். அவர் எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்தார். பனிப்புகாரினூள் அவரின் நெடிய உருவம் கலங்கி மறைந்தது.

இரு வாரங்களின் பின்னரான காலையில் ஒரு புத்தகம் பதிவுத் தபாலில் வந்திருந்தது. “meursalut contre-enquête” என்ற பிரஞ்சு  நாவலை கமல் தாஉத் என்ற அல்ஜீரிய எழுத்தாளர் எழுதியிருந்தார். ’விசாரணைக்கு-எதிராக’ எழுதப்படிருக்கும் அந்த நாவல் காம்யுவின் அந்நியன் வெளிவந்து அறுபது ஆண்டுகளின் பின்னர் வெளியாகியிருக்கிறது. அது காம்யுவின் அந்நியன் நாவலை மறுத்து இப்படித் தொடங்கியது ‘இன்று, அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார். அவள் அதிகம் பேசுவதில்லை. ஆனால் அவளால் நன்றாக உரையாடமுடியும். என்னைப் போலில்லாமல் அவள் அந்த வரலாறைத்  திரும்பத் திரும்ப நினைவுபடுத்துகிறாள். அவள் அளவிற்கு என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. நான் அரை நூற்றாண்டின் வரலாறை உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது’

புதியசொல்

 

Scroll to Top