The historian will tell you what happened. The novelist will tell you what it felt like
– E.L. Doctorow
குணாகவியழகனின் கர்ப்பநிலம் நாவலை வாசித்து முடித்த போது அவரை நினைத்து பரிதாபங்கொள்ள மட்டுமே முடிந்தது. இவரா நஞ்சுண்டகாடு நாவலை எழுதியவர் என்ற சந்தேகமும் வந்தது. இவரின் புனைவுவெழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்ததில் அவற்றிலுள்ள அறியாமையின் மேல் ஒவ்வாமை தான் வருகின்றது. குணா கவியழகனிடமுள்ள சிக்கலென்னவென்றால், அவரால் இன்னும் தமிழின் நவீனத்துவத்தையே கடந்துவர முடியவில்லை. தமிழில் நிகழ்ந்த பின்-நவீனத்துவ, தலித்திய உரையாடல்களினைப் பற்றிய அறிதல் அவரது எழுத்துகளில் இருப்பதில்லை. அப்படி அறிதல் இல்லாத நல்ல புனைகதையாளர்கள் நம்மிடமிருக்கின்றார்கள் தான் ஆனால், குணா கவியழகன் அவற்றைத் தன் புனைவுகளில் ‘போலி’ முற்போக்குக் கவசங்களாகப் பயன்படுத்தும்போது, அவை குறித்த அடிப்படை அறிதலேனும் அவருக்கு இருக்கவேண்டியிருக்கிறது. புனைவின் சொல் முறையிலும் புனைவுக் கட்டுமானத்திலும் சரி பயன்படுத்தும் உவமைகளிலும் தேய்வழக்குகளையே திரும்பத்திரும்பப எழுதுகிறார். தமிழ்ச் சினிமாவே கைவிட்ட இரட்டை அர்த்த வசனங்களைக் கூடக் ‘கர்ப்பநிலம்’ நாவலில் பயன்படுத்திக் கொள்கிறார். உவமைகளை, சொல்முறையை, மொழியைத் தமிழ்ப்புனைவிலக்கியம் கடந்து இரண்டு தசாப்தங்களாகிவிட்டன. ‘மூன்று தசாப்த காலப் போரினால், தமிழ்நாட்டு இலக்கியங்களிலும் பார்க்க இலங்கைத் தமிழ் இலக்கியங்கள் இருபதுவருடங்கள் பின்தங்கியிருக்கின்றன’ என்ற கூற்று அவரளவில் மிகவும் பொருத்தமானதுதான்.
இந்நாவலை வாசிப்பதற்கான முதல்தடை குணா கவியழகனே தன்னுடைய நாவலைக் குறித்து, பின் அட்டையிலும் ‘என்சொல்’ என்ற தலைப்பில் நாவல் ஆரம்பிக்க முன்னும் எழுதிவைத்திருக்கும் அறிமுகக் குறிப்புகள்தான். அவற்றைப் பொறுத்துக் கொண்டு நாவலினுள் நுழைந்தாலும் பெருத்த ஏமாற்றமே கிடைக்கின்றது. அவரால் நாவலில் புனையப்பட்ட நாகமணி, கதிர், டொக்டர் மதி, கனிமொழி போன்றவர்கள் நாவலை எப்படி நகர்த்திச் செல்கிறார்கள் என்பதே நாவலில் தெளிவில்லாமல் இருக்கின்றது. யாழ்ப்பாண இடப்பெயர்வைக் குறித்துக் கதைத்துக் கொள்ளத் திண்ணையில் கூடுகிறார்கள். அந்தக் கூடுகையில், இடம்பெயர்ந்து ஒரே காணியில் வாழும் தன்மையிலெல்லாம் சாதியப் பாகுபாடுகளற்ற – சமத்துவமான போலி முற்போக்குத் தன்மையே புனையப்படுகின்றது. அவர்களுடைய அரசியல் அரட்டைகளில் புலிகள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஒரு சொல்லில் கடந்துசெல்லும் முனைப்பே இருக்கின்றன. புலிகள் சகோதர இயக்கங்களின் மீது மேற்கொண்ட அழித்தொழிப்பைக் கூட நியாயப்படுத்தும் அளவில் தான் இருக்கிறது அவரின் இன்றைய அரசியல் புரிதல். அதை நியாயப்படுத்த ஆரம்பகால ரெலோவிலிருந்தவரின் மகளைப் புலியாக்கி அவருடைய மகளிற்கு, அவரின் தந்தையின் நண்பர்களை அறத்தின் பக்கமிருந்து புலிகள் அழித்தொழித்தாகக் கதை சொல்வதெல்லாம் எந்தக்கலத்துப் புரிதல்? /சரி பிழை இல்லை இங்க பிரச்சனை. தர்மம்தான் முக்கியம் அந்த நேரத்தில் அது தர்மம்தான் /
தமிழ்நாட்டு வாசகர்களுக்காகக் குணா கவியழகன் திரும்பத் திரும்ப உற்பத்தி செய்யும் குப்பைகளில் நாம் படைப்பூக்கமான களத்தையோ, நல்ல புனைவிற்கான சாத்தியத்தையோ கண்டடைய முடியாது. நல்ல வாசகர்களும் இப்போலிப் புனைவுகளின் மேற்பூச்சு மொழியினுள் தம் வாசிப்பின் நுண்ணுணர்வுகளை இழந்தவர்களாகிவிடுகின்றனர். இவர் புனைவினுள் நிகழ்த்தும் உணர்ச்சிச் சுரண்டலை போலி மனிதாபிமான உணர்வுக்குவியல்களின் மூச்சு முட்டல்களினுள் தொலைத்துவிடுகிறார்கள். அனோஜனின் ‘பச்சைநரம்பு’ கதைத்தொகுப்புக் குறித்து நுட்பமான பார்வைகளை முன்வைத்த நரோபா கட்டுரையில் ஓர் இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் //குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ நாவலின் இறுதி பகுதியில் தன் காதலிக்கு இருளின் சிறிய விளக்கு வெளிச்சத்தில் கடிதம் எழுதும் சிங்கள ராணுவ வீரன் மீது குண்டு வீசாமல் செல்வான். பரிசாக மரணத்தைப் பெறுவான். அது ஓர் உன்னத தருணம்.//1 புலிகளின் தமிழ்தேசியம் என்பதே தமக்கு எதிரான எல்லாவற்றையும் மூலை, முடுக்கு எல்லாம் தேடிச் சென்று அழித்தல் வலிமையான கருத்துருவாக்கத்தின்மீது காட்டப்பட்டது. காதலிக்கு கடிதமெழுதும் இராணுவவீரனைக் கொல்லாமல் சென்றதாகப் குணா கவியழகன் புனைந்து செல்லும் அதே புலிவீரனின் வலிமையான துப்பாக்கிகள் தான் கைகள் கட்டப்பட்ட செல்வியின் முன்னும், சைக்கிளில் சென்ற ராஜினி திரணகம போன்ற இன்னும் பலரின் முன்னும் வெடித்துச் சிதறித் தம்முடைய அதிகாரங்களைத் துப்பாக்கி முனையில் நிறுவிக் கொண்டன என்பதைக் குணா கவியழகன் ஒருபோதும் கண்டு கொள்ளவோ உங்களுக்குச் சொல்லவோ மாட்டார் நரோபா. அவர் இன்னும் அதே புலி மனநிலையிலும் அதன் பிரச்சாரகராகவும் மட்டுமே இருக்கிறார் என்பதற்கு இன்னொரு சான்று ‘கர்ப்பநிலம்’. குணா கவியழகன் அதிகாரத்தில் அடிமட்டத்திலிருந்த புலிகளின் தியாக உடல்களை வைத்து மனிதாபிமான மனநிலைகளைப் புனைந்து ஒட்டுமொத்த வன்முறையமைப்பையும் நியாயப்படுத்துகிறார் அல்லது சிங்கள உதிரிமக்களின் உதிரித் தன்னிலைகளின் மனநிலையைத் தங்களுடைய வன்முறையமைப்பை / படுகொலைகளை நியாயப்படுத்தும் கருவி / அளவுகோல்களாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அதே தர்க்கத்தை சிங்களப்பேரினவாத அரசும் தமிழர்களுக்கு எதிரான அரச வன்முறைகளை நியாயப்படுத்தும் கருவிகளாகப் பயன்படுத்திச் சிங்கள மக்களை உருவேற்றிக்கொள்கிறது என்பதைக் கூட குணா கவியழகனுக்கு இந்த முப்பது வருட யுத்தம் கற்றுக் கொடுக்கவில்லை.
குணா கவியழகனுக்கு இலங்கையில் இடதுசாரி இயக்கங்களின் செயற்பாடு, சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் சாதியத்துக்கு எதிரான போராட்டம் குறித்த புரிதல் ஏதும் நாவலிலும், நாவலிற்கு வெளியிலும் இருப்பதில்லை. இன ஒடுக்குமுறை தவிர்ந்த (சாதிய ஒடுக்குமுறைக்காளானவர்கள், பெண்கள் போன்ற விளிம்புநிலை உதிரிகள் மீதான) எந்த ஒடுக்கு முறையும் கவனத்திற்கோ, கண்டனத்திற்குரியவையோ அல்ல என்பது அவரின் படைப்பூக்க மனநிலை. அதனால் எல்லா நுண் ஒடுக்குமுறைகளையும் இனவாதச் சாயம் பூசி மெழுகிவிடுகிறார். அவர், சாதியப் போராட்டங்களையும் இடதுசாரிச் செயற்பாடுகளையும் மேலோட்டமான புரிதலுடனே போலியாகத் தன்னுடைய நாவல்களிலும் பயன்படுத்திக் கொள்கின்றார். அவற்றிற்கு நாவலில் உள்ளார்ந்த அர்த்தம் ஏதும் இருப்பதில்லை அவை நாவலில் போலி முற்போக்குக் கவசங்களாகப் பயன்படுத்தும் முனைப்பாகவே எஞ்சுகின்றன. அப்படியானதொரு போலி முற்போக்குக் கனவுடனே ‘விடமேறிய கனவு’ நாவலையும் முடித்திருப்பார். அது அவரின் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் குறித்த அறியாமையுடனே முடிந்துவிடுகிறது. கர்ப்பநிலமும் சிங்கள அரசியல்வாதியிடம் பாரங்கொடுக்கப்படும் புலிச் ‘சிறுவனுடன்’ முடிந்து போகிறது.
நாவலில் வெளிப்படும் சிங்கள ‘மக்களின்’ மனநிலை தொடர்ந்து தமிழ்த்தேசிய / புலிகளின் ஊடகங்களால் முன்வைக்கபட்டு வந்த / வரும் இனவாதப் பார்வை அன்றி அதில் வேறெந்த நுட்பமான பார்வைகளையும், கண்டடைதல்களையும் நாம் உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அவருடைய நாவலின் அடியாளத்தில் ஓடிக் கொண்டிருப்பது புலிகளின் அதிகாரத்தை நோக்கிய மிருகத்தனமான செயற்பாடுகளுக்கு வீரம் – தியாகம் போன்ற குருதியின் சிவந்த வர்ணமடிக்கும் முனைப்பு அல்லது இன்று அபரிதமான அதிகாரத்தை இழந்து விட்டதன் பின்னாலிருக்கும் ஏக்க நிலையை ‘நிலம் இழந்து விட்டதாக’ பாவனை செய்து அதை நிலம் மீதான மரண ஓலமாக உருவகித்துக் கொள்ளல் மட்டுமே. அவற்றில் மக்களின் நிலைகளோ, மக்கள் மனங்களில் பதிந்துபோன போரின் பிம்பங்களோ கவனத்தில் வருவதில்லை.தனது விடுதலை இயக்கமடைந்த மதிப்பீடுகளின் வீழ்ச்சி குறித்தோ, அல்லது மக்களின் விடுதலைக்காகத் தம் உயிரை இழக்க முன்வந்தவர்களின் ‘பிறர்’ மீதான கட்டற்ற வன்முறையின் ஊற்றுக் குறித்த கேள்விகளோ இருப்பதில்லை. அதிலும் சிங்கள இராணுவத்தில் இணைந்து கொண்ட சுனில் புலிகளைக் குறித்துப் பெருமிதமாக இப்படி நினைத்துக் கொள்வதாகக் குணாகவியழகன் புனைந்து கொள்கிறார். //என்னைப்போல இதே நேரம் அங்கும் ஒருவன் தன் வீட்டைவிட்டுப் பிரிந்து பயிற்சிமுகாம் ஒன்றில் பயிற்சிபெற்றுக் கொண்டிருப்பான், அவர்கள் எப்படி இருப்பார்கள்? தங்கள் மக்களையும்மண்ணையும் காக்கும் பெருமைமிக்க படையாக இருப்பார்கள்.அவர்கள் அனைவரும் நண்பர்களாக இருப்பார்கள் ஒருவருக்கு ஒருவர் உயிரை விடும் தோழர்களாக இருப்பார்கள் //. ஆரம்பப்பயிற்சிகளின் போது மேலதிகாரிகளால் மதிப்பில்லாது நடத்தப்படும் இழி நிலைபொறுக்கமால் சுனில் இப்படி நினைப்பதாகக் குணா கவியழகனால் சொல்ல முடிகின்றது. சிங்கள மக்கள் பக்கத்திலும் அவர்கள் இழந்த தங்கள் மண்ணை அல்லது ‘தீவிரவாதிகளால்’ ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீட்கும் உன்னதமான விடுதலைப் போராட்டத்தில் பங்குகொள்ள வைப்பதாகவே நம்ப வைக்கப்பட்டு அதை உண்மை எனவும் நம்புகிறார்கள் என்ற உளவியல் சிக்கலைக் கூட குணா கவியழகனால் புரிந்து கொள்ளமுடிவதில்லை. மாறாக, எதிரிகளாலே புகழப்படுமொரு விடுதலைப் போராட்டம் என்ற சினிமாத்தனமான புனிதப்படுத்தல் அபத்தத்தைத்தான் அவரால் அங்கு நிகழ்த்திக் காட்டமுடிகிறது.
இன்று வரை புலி மனநிலையில் இருப்பவரால் எப்படி யாழ்ப்பாண மக்களின் 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வை மாற்றுக்கோணத்தில் அணுகிக் கதை சொல்ல முடியும்? அவரால் செய்ய முடிவது அதற்கு ஒரு முற்போக்கு / வீர வர்ணம் கொடுத்து இடப்பெயர்வைப் புனிதப்படுத்தி – கர்ப்பநிலமாக அவர் உருவகிக்கும் வன்னிநிலம் நோக்கி வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்துவதைத்தான். குணா கவியழகன் யாழ் இடப்பெயர்வை இருபது வருடங்களின் பின்னர் கர்ப்ப நிலத்தில் மீள நாவலாக எழுதுகிறார். கடந்த இருபதாண்டுகளில் போர்ச்சூழல், போராட்ட மனநிலை, கட்டமைக்கப்படிருந்த புலிகளின் அதீத பிம்பங்களில் மாறுதல்களும், புலிகள் நிகழ்த்திய போராட்டத்தில் மக்கள் இடமும், பங்கும் ஈடுபாடும் குறித்த மாற்றுப்பார்வைகளும் விமர்சனபூர்வமாக முன் வைக்கப்பட்டுவிட்டது. அவை இலக்கியச்சூழலில் சலிப்புற உரையாடப்பட்டுமிருக்கிறது. புலிகளின் அமைப்பிலிருந்து வந்த இருவரைத் தவிர (ஷோபாசக்தி, யோ.கர்ணன்) பிறிதொருவரும் அவ்வமைப்புக் குறித்த காத்திரமான விமர்சனங்களையோ, மீள்பார்வையையோ படைப்புகளில் முன்வைத்ததில்லை.
ஈழப்போர் முள்ளிவாய்க்காலுக்கு வந்தடைந்ததன் பின்னாலிருந்த புலிகளின் இருண்ட பக்கங்களைத் தனது படைப்புக்களில் குறிப்பாகக் கொலம்பஸின் வரைபடங்கள் நாவலில், யோ.கர்ணன் புனைவாக்கியிருந்தார். புலிகளின் ஆயுத மிருகபலத்திற்கு எதிராக மக்களால் நிகழ்தப்பட்ட முதல் கலவரமான ‘கப்பலடிக்கலவரம்’ அந்த நாவலில் குறியீட்டு ரீதியான அர்த்தத்தில் பதிவாகியிருந்தது. அந்தக் கப்பலடிக்கலவரத்தைப் போலவொரு எதிர்ப்பை 1995 ல் மக்களால் நாவற்குழிப்பாலத்தடியில் நிகழ்த்த முடிந்திருந்தால் புலிகள் தங்களுடைய ‘தற்கொலை’ அரசியற் பாதையை மாற்றியிருக்கக்கூடும். மக்களை மனிதக்கேடயங்களாக முள்ளிவாய்க்கால் வரை அழைத்துச் செல்லாமலிருந்திருக்கக் கூடும். முள்ளிவாய்க்கால் வரை மக்களைத் தம்மோடு மனிதக் கேடயங்களாக அழைத்துச் சென்றதன் பின்னாலிருந்த புலிகளின் நோக்கமும், அதனால் நிகழ்ந்த அழிவின் ஆழத்தையும் நாம் அனுபவித்ததன் பின்னால் யாழ் இடப்பெயர்வில் மக்களைத் தம்மோடு வலுக்கட்டயமாகப் புலிகள் அழைத்துச் சென்றதன் பின்னாலிருந்த நோக்கமும், விளைவுகளையும் உணர்ந்து கொள்ளமுடியும். அதை அப்படியே இன்று 1995ஆம் ஆண்டின் மனநிலையிலிருந்து நோக்குவதும், நியாயப்படுத்திப் பேசும் ‘குயுக்தி’ அரசியல் புரிதல்தான் கர்ப்பநிலத்தில் உருவாகி வருகிறது. புலிகள் தங்கள் பின்னால் மந்தைகளாக மக்களை அழைத்துச் சென்றதை குணா கவியழகன் நாவலில் இப்படிச் சொல்கிறார்.
//வேர்விட்ட மண்ணை விட்டு பிரிந்துபோகும் மக்கள்! புலிகளின் ஒரு சொல் கேட்டு, ஒரே ஒரு சொல்கேட்டு தலையாட்டி ஆமோதித்துத் தம் மண்ணைவிட்டுப் போகும் மக்கள். படித்த யாழ்ப்பாணத்தின் ஆச்சரியம் ; முதல் அதிசயம் அது. // (பக்கம் 178).
நாவலில் வரும் பாத்திரம் இதைச் சொல்லியிருந்தாற் கூட பொருட்படுத்தாமல் கடந்துசெல்லலாம். ஆனால் கதைசொல்லியே தன்னைப் புலி உறுப்பினனாக முன் வைத்தபடி சொல்லிச் செல்கிறார். இப்படியான புரிதல்; மக்களின் உளவியல் பற்றிய அறியாமையும், புலிகளால் மக்களை நெருங்கிச் சென்று அறிய முடியாமலிருந்த மடத்தனத்தையும் சுட்டுகின்றன. அதை மக்கள் போராட்டமாக்க முடியாமையையும் பின் ஆறு மாதங்களில் இராணுவக்கட்டுப்பாட்டினுள் அவர்கள் திரும்பிச் சென்ற போது அறிய முடியும். மக்கள் யார் சொல் கேட்டுச் சென்றார்கள்? அவர்களை இராணுவக்கட்டுப்பாட்டினுள் உந்தித்தள்ளிய மனநிலை என்ன? யாழிலிருந்து மக்களை வெளியேற்றிய நிகழ்வு சில நாட்கள் வரை நீண்டிருந்ததையும் கடைசி வரை வெளியேறாமல் வீடுகளில் முடங்கியிருந்த முதியவர்களை -நோயாளிகளைத் தேடித்தேடி வாகனங்களில் சென்று புலிகள் மிரட்டி ஏற்றி வந்து கொடிகாமத்தில் இறக்கிவிட்டதையும் அறியாதவர் அநேகமாக குணா கவியழகன் ஒருவராகத்தான் இருக்கமுடியும். நிற்க!
நாம் ஒருமுறை யாழ் இடப்பெயர்வு நிகழ்ந்த 1995லிருந்து சரியாக அய்ந்து வருடங்கள் பின்னால் 1990 ஒக்டோபர் 30ற்கு யாழ் நகரினுள் சென்றுவரலாம். யாழின் குண்டும் குழியுமான கரிய தார் வீதியில் ஒரு தொகுதி மக்கள் கூட்டம் கையில் ஒரே ஒரு கைப்பையும், மடித்து வைத்த ஒரேயொரு அய்நூறு ரூபாய்த்தாளுடனும் கூட்டம் கூட்டமாக வீடு விட்டு நகர் நீங்கி எங்கு செல்வது எனத்தெரியாமல் வந்தபடியிருக்கிறார்கள். வேடிக்கை பார்த்திருக்கும் எங்களிடம் போகும் இடம் குறித்து அவர்கள் கேட்கக்கூடும்… ஆகவே, நாங்கள் காதுகளைப் பொத்திக் கொள்வோம். அவர்களைச் சுற்றிவர விடுதலையின் வீரர்கள் கனர ஆயுதங்களுடன் வீதியின் இருபக்கமும் நிற்கின்றார்கள். தங்கள் பூர்வ நிலத்தை நீங்கிச் செல்லும் மக்கள் கூட்டத்தை நகர எல்லையில் வரிசையில் காத்திருக்க வைத்து விடுதலையின் வீரர்கள் சோதனையிடுகின்றார்கள். அவர்களிடம் மேலதிகமாக இருக்கும் கைப்பைகளைப் பறித்து வீதியோரமாகச் சிறு மலையாகக் குவித்து வைக்கின்றார்கள். தங்களுடைய அதிகாரம் மிக்க தடித்த தோல்மூடிய ஆண்குறி போன்ற துவக்கின் முனையால் மக்கள் கூட்டத்திலிருந்த வயசாளியின் மடித்துக்கட்டிய சாரத்தைத் தூக்கிப் பார்க்கின்றனர். கிழவரின் தளர்ந்த ஆண்குறியின் முன் தோல் நீக்கப்பட்டிருக்கிறது. ஆம்… ஆண்குறியின் முன் தோல் நீக்கப்பட்டிருந்ததால் அன்று – குணா கவியழகன் கர்ப்பநிலத்தில் சொல்லும் அந்த மக்கள் பாதுகாவலர்களினால் – தங்கள் பூர்வீக நிலம் நீங்கி ஆயுதமுனையில் அவர்களின் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டுத் திக்குத் தெரியாமல் துரத்திவிடப்படுகிறார்கள். மிஸ்டர் குணா,அந்தத் துரத்தப்பட்ட மக்களிலும் ஒரு நாகமணி இருந்து தன் பேரனிற்குத் தங்கள் பூர்வ நிலமிழந்த கதையைச் சொல்லக் கூடும் அல்லவா நாமாவது பரவாயில்லை…இயலுமான பொருட்களை-வாகனங்களை- கால்நடைகளை-காசு-நகைகளைக் கொண்டு சென்றோம். பலர் ஆறு மாதத்துள் ஊர் திரும்பிவிட்டோம் அவர்கள் வீடு திரும்பல் இன்று வரை சாத்தியமாகவில்லையே. அவர்களது நிலம் இழந்த ஏக்கம் குறித்தெழுதும் புனைவுகளில் உங்கள் விடுதலை இயக்கத்தின் பாத்திரம் என்ன மாதிரியாகப் படைக்கப்படும் என்று புரிந்து கொள்ளமுடியாதா தடித்ததோலா மூடியிருக்கிறது உங்களுக்கு? இது எதனையும் உங்களால் ஒருபோது உணர்ந்து கொள்ளவோ கண்கொண்டு பார்க்கவோ முடியதல்லவா?
‘கர்ப்பநிலம்’ முன்வைக்கும் களமும் பேசுபொருளும் அரசியல்ரீதியிலும், மொழியிலும் பின் தங்கியவை. அவையும் நாவலில் புலிகளை, அவர்களின் தற்கொலை அரசியலை ‘புனிதப்படுத்துவதையே’ செய்கின்றன. அதிலும் குக்குறுப்பான் குருவிகள் புலிகளின் கட்டளைகளை மக்கள் எதிர்த்துக் பேசும் போதெல்லம் ‘குக்குறு.. குக்குறு…’ எனக் கத்தி மக்களை ‘மக்குகள் மக்குகள் என்றும் மொக்குகள் மொக்குகள் என்றும் மாறிமாறிக் கத்தியதாகப் புனைவதெல்லாம் வடிகட்டிய புலிமனநிலையின் பிரச்சார நொடியின் முடநாற்றம் அல்லாமல் நல்ல கலைஞனின் குரலே அல்ல. குணா கவிழகன் தன்னுடைய அதிகாரமிக்க தோல் வெட்டப்படாத ஆண்குறியில் உச்சம் வரும் போதெல்லம் பிரச்சார நெடியை வீரியமிக்க விந்துகளாக நம் முகத்தில் விசிறியடிக்கின்றார். ஆண்குறியைச் சுவைப்பதும், அதன் வீரியமிக்க விந்துகளை முகத்தில் ஏந்திக் கொள்வதும் இயல்பான பாலியல் வேட்கையின் வெளிப்பாடுகள்தான். ஆனால், அதைக் குணா கவியழகன் தன்னுடைய அதிகாரம் மிக்க ஆண்குறியினால் ஏதிலிகள் மீது நிகழ்த்திக் காட்டும் போதெல்லாம் நமக்கு அசூசையும் சினமுமே ஏற்படுகின்றன.
கர்ப்பநிலத்தில் வெளிப்படும் சாதிய மனநிலையும் பூசி மெழுகல்களும்.
நாவலில் இடதுசாரித் தலித் பாத்திரத்தின் பெயர் ‘சுவாமிப்பிள்ளை’. ‘பிள்ளை’ என்ற பின்னொட்டை நன்கு கவனித்தால் ஒடுக்கப்படும் தலித் தன்னிலைக்கு இந்தப் பெயரை வைத்ததிலிருக்கும் அரசியலையும், குணாவின் சாதியத்தைப் புலிகளின் தமிழ்த்தேசியத்தினுள் பூசிமெழுகும் கதை சொல்லலையும் நாம் புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் பெயர்களினுள் படிந்துபோயிருக்கும் நுண் சாதியப்பாஸிசத்தைப் புரிந்து கொள்ள நாம் கே.டானியலின் ‘பஞ்சமர்’, என்.கே.ரகுநாதனின் ‘ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி’ போன்ற பிரதிகளை வாசிக்கவேண்டும். தலித்துகள் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யும் போதிருந்த எதிர்ப்பையும், வெள்ளாளச் சாதி உளவியல் அவற்றை வேறு பெயர்களாக உருமாற்றும் வெறியையும் புரிந்து கொள்ளலாம். இடதுசாரியச் சாதியப்போராட்டங்களில் பங்குபற்றி தலித் பெண்ணைத் திருமணம் செய்த அருளம்பலத்திற்கு மக்களின் வழி குணா கவியழகன் கொடுத்திருக்கும் பெயர் ‘அலுக்கோசு’. இப்படித்தான் நுட்பமாகத் தொழிற்படுகிறது தமிழ்த்தேசிய சாதியச் சதி மனம். இன்னொரு இடத்தில் அருளம்பலத்தின் (குணா சொல்லும் அலுக்கோசு) தலித் மனைவியை மைத்துனி வெறுப்பதற்கும் ஒதுக்குவதற்கும் அவருடைய தலித் சாதியப் பின்புலத்தை விட பெண்ணின் அழகுதான் சாதியப் பெண்ணை தொந்தரவு செய்வதாகச் சொல்லிச் யாழ் சாதியமன நிலையையும் பூசி மெழுகிவிடுகிறார்.
//இந்தப்போராட்டகாலத்தில்தான் மந்துவில் சீவல் தொழிலாளர்களோடு உறவு வந்தது அலுக்கோசுவுக்கு. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு சண்டையில் வாள்வெட்டி செத்துப்போனவருடைய மகளைத்தான் அலுக்கோசு கலியாணம் கட்டினார். தியாகி, மெய்யான முற்போக்கன் என்ற பெயரும் அந்தப் பேரழகியும் கிடைத்தாள். அவளோட உடல் கட்டில் எந்தக் குமரியும் அந்தக்காலத்தில இருந்ததில்லை என்ற நம்பிக்கை அருளம்பலத்துக்கு இருந்தது. // பக்கம் 247. தலித் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் வெள்ளாளர்கள் ‘தியாகிகள்’, ‘முற்போக்கர்’ களாம். இதனுள் இழையோடியிருக்கும் சாதிய மனநிலையை குணா கவியழகனால் புரிந்துகொள்ள முடியவில்லையா ?
இன்னொரு சம்பவம் நாவலில் வருகிறது நாகமணி வீட்டுத் திண்ணையிலிருந்து அரசியல் பேசுபவர்கள் பேச்சுமுடித்து, தோசை சாப்பிட ஆயத்தமாகும் போது இடதுசாரியத் தலித்தாகிய ‘சுவாமிப்பிள்ளை’ சங்கடத்துடன் எழுந்து செல்ல முயல்வார். அவர் ஏன் ‘சங்கடத்துடன்’ எழுந்து செல்ல முயலவேண்டும் வேண்டும்? அதற்கு நாவலில் குணா கவியழகன் சொல்லும் காரணத்தைப் பாருங்கள் வெள்ளாளர்களுக்கு தலித்தாகிய தன்னை அவர்களுடன் சேர்ந்திருந்து சாப்பிடக் கேட்கும் மனச்சங்கடத்தைக் கூட கொடுக்கக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் அவர் எழுந்து செல்கிறாராம். இப்படியாகத்தானிருக்கிறது குணா கவியழகன் உருவாக்கும் தலித் தன்னிலையும், அவருடைய சாதிய மனநிலை குறித்த புரிதலும். தலித் என்றால் வெள்ளாளர்களுக்குச் சங்கடம் கொடுக்காமல் ஒதுங்கிச் சென்றுவிடவேண்டுமல்லவா? இல்லையென்றால், வெள்ளாளர்கள் பெருந்தன்மையாகத் தலித்தை இருத்திச் சாப்பாடு கொடுத்துத் தங்களின் சாதியற்ற பெருந்தன்மை மனநிலையைக் காட்ட முடியாதல்லவா? இடதுசாரித் தலித்தாக இருந்தாலும் அவர் தான் தலித் என்றும், வெள்ளாளருக்குச் சமனில்லாத ‘இழி’ பிறவி என்றும் எப்போதும் உணர்ந்து கொண்டிருக்க வேண்டுமல்லவா? இல்லையென்றால் எப்படிக் குணா கவியழகன் உருவாக்கும் வெள்ள இலட்சியவாதக் கதாபாத்திரங்களின் சாதியைக் கடந்த பெருந்தன்மை மனநிலையை முதல் தோசைத்தட்டை சுவாமிப்பிள்ளைக்குக் கொடுத்துத் தம் முற்போக்கு தமிழ்த்தேசிய மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும்?
கர்ப்பநிலத்தைக் குணா கவியழகன் ‘நாவல்’ என்று குறிப்பிட்டிருந்தாலும் அதன் எந்த இடத்திலும் நாவலிற்கான தன்மையைப் படிக்க முடியவில்லை. சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. அவையும் மிகவும் மேலேட்டமான அரசியலை இருபதுவருடங்களின் பின்னர் நியாயப்படுத்தும் சம்பவங்களின் தொகுப்பாக்கமே. வரலாற்றின் நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட நாவலின் தேவை அதுமட்டும்தானா?
நாவலிலிருந்த சில தகவல் / பிழைகள் :
நாவலில் இருக்கும் தகவல் பிழைகள் நம்பகமான வாசிப்பனுபவத்தைக் கெடுப்பதுடன் குணா கவியழகனின் பொறுப்பற்ற தனத்தையுமே காட்டுகின்றன.
02.மொட்டை மோகன் முதலில் ‘ரெலோ’ என்றும் பின்னால் ‘ஈழமக்கள் புரட்சிகர அமைப்பு’ என்றும் வருகிறது.
03.நாவலில் 1995 யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதன் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நொக்கியா 3310 பரிசளிப்பதாக நுணுக்கமாக எழுதிச் செல்கிறார். நொக்கியா 1999களின் பின்னர்தான் வெளியாகியிருக்கிறது. இதை மிக இலகுவாக ஒரு சொடுக்கில் விக்கிபீடியாவில் சரி பார்த்துக் கொள்ளலாம் அதற்குப் கொஞ்சம் பொறுப்பும், எழுத்துக் குறித்த ஓர்மையும் வேண்டும். பண்டிகைக்கு நாவலை வெளியிடும் அவசரத்தில் இதற்கெல்லம் எங்கு நேரமிருக்கிறது?
04.இலங்கையில் முதலாவது குடியேற்றத்திட்டம் வெலிஓயா அல்ல கல்லோயாக் குடியேற்றத்திட்டம்.
கர்ப்பநிலம்
குணா கவியழகன்
வெளியீடு : அகல்
2018
பக்கம் : 336
இவற்றையும் பார்க்க :
01.பச்சை நரம்பு கதைத் தொகுதி குறித்த நரோபாவின் கட்டுரை
02.தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் – வெகுஜனன், ராவணா
03.ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி – என். கே ரகுநாதன்
04.பஞ்சமர் – கே.டானியல்
05.கொலம்பஸின் வரைபடங்கள் – யோ.கர்ணன்