சோமிதரன், சயந்தன் கட்டுரை, காணொலியின் மீது நாம் முன்வைக்கும் கேள்விகள் மிக எளிமையானவை. அவற்றின் நோக்கம், அவசரத் தொனி மற்றும் விடுபடல்கள் குறித்தவை. 17 வருடங்களின் முன்னரான நிகழ்வு ஒன்றினை மறுத்து உரையாட விழையும் போது அதற்கேற்ற முதிர்ச்சியும், பிரச்சனை குறித்த பரந்த பார்வையும் வேண்டியிருக்கிறது. தலித் பிரச்சனை போன்ற சமூகப் பிரச்சனைகளை கையாளும் போது மிகுந்த கவனமும், பொறுப்புணர்வும் வேண்டியிருக்கிறது. இத்தகைய தன்மைகளை எவற்றையும் அந்தக் காணொலியோ,கட்டுரையோ கொண்டிருக்கவில்லை என்பதே அவற்றின் முதலாவது பலவீனம்.
இந்தக் காணொலியும் கட்டுரையும் தலித் அரசியலையும், புலி எதிர்ப்பையும் “பாவிப்பவர்களை” நோக்கிப் பேசுகிறது. அப்படிப் பாவிப்பவர்களை அம்பலப்படுத்துவதாகப் பாவனை கொள்கிறது. தலித் அரசியலையும், புலி எதிர்ப்பையும் தமிழ்த்தேசியத் திண்ணையில் ஏறி நின்று பாவிப்பதாகச் சொல்வது எவ்வளவு பெரிய பாவனை? அப்படிப் பாவனை கொள்வதாலேயே அதற்குச் சமூக நோக்கோ, தலித் பிரச்சனை குறித்த புரிதலோ இல்லாமல் புலிகள் மீதான வரலாற்றுப் பழிகளையும் நோக்கில் பரிதாபமாக இருக்கிறது. செல்லன் கந்தையா தனி நபர் அல்ல தலித் சமூகத்தின் குரலாகவே நூலகப் பிரச்சினையின் பின்னர் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை இப்படியான சில்லறைத்தனமான கேள்விகளுடன் அணுகுவதே முதலில் முதிர்ச்சி இல்லாதது.
நூலகத் திறப்புக்கான தடை விவகாரத்தை யாரும் திரித்தோ, புனைந்தோ எழுதி இருக்கவில்லை.செல்லன் கந்தையாவே அப்போது பிரச்சனை சாதிரீதியாக எதிர் கொள்ளப்படதாகவே தன் இடத்தில் இருந்து உணர்ந்திருந்தார். பத்திரிகை, பொதுவெளியில் அதனைத் தைரியமாக வெளிப்படுத்தியும் இருக்கிறார். அதற்கான பத்திரிகைப் பதிவுகளும் இருக்கின்றன. தினமுரசு, டெய்லி மிரர் நேர்காணல் மற்றும் இந்தியத் தூதரக உரை மூன்றிலும் அவர் மிகத் தெளிவாகவே பிரச்சினையின் மையத்தை, சாதிரீதியாக தான் எதிர்கொள்ளப்பட்ட அநீதியை முன்வைத்துப் பேசி இருக்கிறார், வருத்தப்பட்டும் இருக்கிறார். அவர் அப்படிப் பேசிய போது அதனைப் புலிகளோ, அல்லது தமிழ் அரசியல் தரப்போ மறுத்ததற்கான பதிவுகள் எங்கும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் அப்படிச் சாதி ரீதியாக இப்பிரச்சினையில் விடயங்களை எதிர்கொள்வதற்கான அத்தனை சாத்தியங்களும், வரலாறும் யாழ்ப்பாண மண்ணில் இருக்கின்றன. அது அப்படிப்பட்ட பாழ் நிலமே தான். அந்த வரலாற்றுப் புரிதலில் இருந்தே நூலக எரிப்பின் இன வெறியும், செல்லன் கந்தையா தலைமையில் யாழ் நூலக மீள் திறப்பிற்கான தடையில் இருந்த சாதிவெறியும் வரலாற்றுக் குற்றமாக முன்வைக்கப்பட்டு இருந்தது.
இன்று அவர் அதனை மறுத்துச் சொல்கின்றார் என்றால், அவர் தன்னையே மறுக்கிறார் என்று அர்த்தம். அப்படி மறுப்பதற்கான அத்தனை உரிமையும் அவருக்கு இருக்கிறது. ஆனால், அவருடைய மறுப்போடு மட்டும் நாம் திருப்திப்பட்டு விட முடியாது. 2003ல் அவர் ‘சிறுபாமைன்யினருள் தான் சிறுபான்மையினனாக’ உணர்ந்து கொண்டதற்கும்,வெளிப் படுத்தியதற்குமான காரணங்களையும்,அதற்கு அவருக்குப் பின்னால் இருந்த அழுத்தங்களைக் குறித்தும் அவருடன் உரையாடப்பட்டிருக்க வேண்டும். தினக்குரலில் வெளியாகிய கேலிச்சித்திரம் குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் பேசப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் பிரச்சினையின் பல்பரிமாண- அறிந்து கொள்வதற்கான வெளிப்பாடாக- இந்தக் காணொலி இருந்திருக்கும்.
மற்றது, சோமிதன் தான் களத்தில் இருந்ததாகவும் அதனால் அதன் உண்மைத் தன்மை குறித்துப் பேசத் தனக்கு அத்தனை உரிமையும் இருக்கிறது என்பதும் மாதிரிக் கருத்துரைக்கிறார். தான் சொல்வதை நாம் நம்ப வேண்டும் எனவும் அடமும் பிடிக்கிறார். அவர், அன்று அக்களத்தில் ஊடகவியலாளராக நின்றிருந்தாலும் தொடர்ந்து அவரின் குரல் செல்லன் கந்தையாவை நூலகத்தைத் திறக்கவிடாது தடுத்த அதிகாரத் தரப்பின் குரலாகவே இருக்கிறது. அதாவது சிறுபான்மையினரிலும் தான் சிறுபான்மையனாக உணர்ந்து கொள்வதாகச் செல்லன் கந்தையா சொன்ன பெரும்பான்மையான சாதித்தமிழரின் குரல் சோமிதரனுடையது. அந்த இடத்தில் சோமிதரனின் குரலை விடச் செல்லன் கந்தையாவின் குரலும், ஆதங்கமுமே நமக்கு முக்கியமானதும், கவனம் கொண்டு உரையாடப்பட வேண்டியதுமாகும். அவருக்கு நிகழ்ந்த அநீதியின் பின்னாலும், கையறு நிலையின் பின்னாலும் மட்டுமே நாம் அணிதிரள முடியும். அதுவே அறமுமாகும். அந்தத் திரட்சியை பாவனையாகக் கற்பனை செய்து கொண்டு, தலித் அரசியலைப் பாவிப்பதாகச் சொல்வதும், புலி விரோத அரசியல் கீழ்மை என்று சொல்வதும் கூட யாழ் வெள்ளாளீயச் சாதி வெறியின் முகமூடித் தந்திரம் மட்டுமேயாகும்.
###
நூலக மீள் திறப்புத் தொடர்பான குணா கவியழகன், அகரமுதல்வன் மற்றும் தங்கேஸ் பரஞ்சோதி கருத்துக்களை முன்வைத்து.
குணா கவியழகன் புலிகளின் வீழ்ச்சியின் காரணங்களில் ஒன்றாக உலக நாடுகளின் சதியையும், புலிகளின் மேன்மையான போர்த் தந்திரங்களையும், விடுதலை வேட்கையையும் உலகம் ஏற்றுக் கொள்ளாமல் விமர்சிப்பதன் பின்னால் உலகின் திட்டமிட்ட செயற்பாடுகளும் இருப்பதாக இப்போதும் தீவிரமாக நம்புவதைப் பார்த்தால் அவர் மீது அனுதாபமே எழுகிறது. புலிகளின் அழிவுக்கான காரணங்களை நாம் வெளியில் தேட வேண்டியதில்லை. அவர்களது அழிவும், வீழ்ச்சியும் உள்ளார்ந்ததும், எதிர்வு கூறப்பட்டதும் ஆகும். அவர்களது அழிவு வெளிச் சக்தியால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது அல்ல. புலிகள் தம் அழிவுக்கான அத்தனை நியாயங்களையும், வழி முறைகளையும், தவறுகளையும் தாமே தேடிக் கொண்டார்கள்.
அதுவுமில்லாமல் புலிகளின் அழிவு தற்போதைய உலக நிலமைகளையோ, அறிதல் முறைகளையோ பயன்படுத்தி விளக்கப்படுவதில்லை. புலிகளின் எழுச்சிக் காலங்களில் இருந்தே அவர்களது அழிவும் கருத்தியல்ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அது இன்னும் விரைவாக நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று. ஆனால், புலிகளின் கேள்விகளற்ற மூர்க்கமான அர்ப்பணிப்பும், எதிர்காலச் சந்ததியினர் குறித்த குற்றவுணர்வின்மையும், யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அச்சமில்லாத மனநிலையும் அவர்களது அழிவை இவ்வளவு தூரத்திற்கு இழுத்து வந்திருக்கிறது மட்டுமல்லாது பேரழிவிற்கும், அரசியலற்ற சூனியத்தினுள் சிறுபான்மையை நிறுத்தியும் விட்டிருக்கிறது.
இன்றும் இலங்கையில் சிறுபான்மையினரின் ஆயுதப்போராட்டத்திற்கு நியாயமும், வலுவான காரணங்களும் இருக்கின்றன என்று சொல்பவர்கள் கூட ,புலிகளின் வழிமுறையைப் பரிந்துரைப்பதில்லை. ஏன், ஓர் அறிவுஜீவியோ, கல்வியாளரோ, சிந்தனையாளரோ, அரசியல்வாதியோ யாரும் புலிகளின் வழிமுறைதான் சரியானது என்றோ, அதுதான் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறை என்றோ கூறுவதில்லை. சிந்தனைத்தளத்தில் புலிகளின் இடம் மிச்ச சொச்சம் இல்லாமல் பெரும்பாலும் காலிசெய்யப்பட்டு விட்டது. அரசியல் தளத்தில் கூட புலிகளின் கடந்தகாலப் பிம்பம் பெரிதாகப் பாதிப்பைச் செலுத்துவதில்லை என்பது அண்மைய நிலமை. புலிகள் ஒரு கொடுங்கனவாக மட்டும் தமிழர் நினைவுகளில் எஞ்சியிருக்கப் போகிறார்கள். ஆனால் மறுதலையாகப் புலிகள் தொடர்ந்து எதிர்க்கவும், விமர்சனம் செய்யப்படுவதன் பின்னால் எதிர்காலச் சந்ததியினருக்கும் வழிகாட்டும் அவாவும், புலிகள் தவறான முன்-உதாரணமாகக் கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கையுமே உள்ளது. கூடவே ஒரு விடுதலைப் போராட்டத்தை நாம் உணர்ச்சியின் தளத்தில் மட்டுமோ, இன மேன்மைக்காக மட்டுமோ முன் எடுக்கக் கூடாது என்ற வழிகாட்டலின்பாற்பட்டதும் ஆகும்.
குணா கவியழகன் ஒருவகையில் பாதிக்கப்பட்டவர், இன்னொரு வகையில் குற்றவாளி. தன் இனத்திற்கான விடுதலைக்காகப் போராடி இழப்புகளைச் சந்தித்தவர் என்ற வகையில் பாதிக்கப்பட்டவர். தங்களது தவறுகளை, அழிவுகளை ஏற்றுக் கொள்வதற்கோ அதனை விமர்சனபூர்வமாக அணுகவோ முடியாமல் அதன் அத்தனை அநியாயங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்ற வகையில் குற்றவாளி. புலிகளது முதிர்ச்சியற்ற அணுகுமுறைகளின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற வகையில் இந்தத் தலைமுறையினருக்குப் பதில் கூறவும், கடந்த காலத் தவறுகளைப் பொதுவில் உரையாடவும் வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அவர் பாதிக்கப்பட்டவர் அடையாளத்துள் தன் குற்றவாளி அடையாளத்தை எப்போதும் மறைத்துக் கொள்ளவே செய்கிறார்.
உலகிற்கு விடுதலையின் முன் உதாரணமாக இருக்க வேண்டுமென்றோ, தமிழரின் வீரத்தை உலகறியச் செய்ய வேண்டுமென்றோ புலிகள் போராடவில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டியதில்லை என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள். அதன் இலக்கை அடைந்தார்களா, அந்த இலக்கில் அவர்களது செயற்பாடுகள் எவ்வளவு முதிர்ச்சியுடனும், தொலைநோக்குடனும் இருந்தன, புலிகளது போராட்டத்தின் தற்போதைய விளைவுகள் என்ன? போராட்ட காலத்தில் தலித் மக்கள், பெண்களுக்கான இடங்கள் புலிகளுள் எப்படி இருந்தன என்பதனைக் கொண்டே புலிகளை இன்று மதிப்பிடவும், உரையாடவும் வேண்டி இருக்கின்றது. புலிகளின் போராட்ட விளைவுகள் தமிழ்ச் சமூகத்தை கொஞ்சமேனும் அடுத்த தளம் நோக்கிக் கொண்டு சென்றிருக்கிறதா என்பதை அவர் பரிசீலிக்க வேண்டும். ஆனால் அவரிடம் அதற்கான மன விரிவோ, புரிதலோ இருப்பதில்லை, போரின் குருதிச் சேற்றை அள்ளி வீரத்தின் அடையாளமாக நெஞ்சில் பூசிக் கொள்கிறார்.
புலிகள் கழுத்தில் சுமந்த நஞ்சு அவர்களின் அழிவுக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சிறுபான்மை இனத்தினருக்குமானது என்ற குரூர உண்மையை குணா கவியழகன் புரிந்து கொள்ள கொஞ்சமேனும் முயல வேண்டும். அதன் பின்னரே அவரின் குரலில் நியாயம் ஏதும் இருக்கிறதா என நாம் பரிசீலிக்க முடியும்.
**
அகரமுதல்வன் நமது மலையகம் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரைக்கு தொகுப்பைத் தாண்டி பெரிய மதிப்பு இல்லை. அவரால் முடியக்கூடியது அவ்வளவுதான். அவருக்குப் பிரச்சினையின் மையமோ, அது குறித்த வரலாற்றுப் புரிதலோ ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இது தனி நபர் சார்ந்த பிரச்சனை அல்ல என்பதும் அதற்கு வரலாற்று ரீதியான நியாயங்களும் இருப்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதற்கான சிறு தடயமும் அவரது கட்டுரையில் காணக்கிடைக்கவில்லை.
NON வெளியிட்டிருந்த வரலாற்றுக் குற்றம் பிரசுரத்தை வாசிப்பவர்களுக்குப் புரியும் பிரசுரத்தின் நோக்கம் புலிகளைச் சாதிய அமைப்பாக வலிந்து நிறுவுவது அல்ல என்பது.
புலிகள் மூர்க்கமான ஒழுங்கும், கண்டிப்புடனும் இருந்த இராணுவ அமைப்பு. இராணுவத்தினுள் ஒழுங்கும், படிநிலையும், அதன் விழுமியங்களும் சாதிய அடிப்படையானவையாகச் செயற்பட முடியாது. அது வீரம், ஆண்மை, தியாகம், வித்துடல், போன்ற கதையாடல்கள் வழி படிநிலையாக்கம் செய்யப்பட்டே இயங்க முடியும். பிறப்பின் அடிப்படையான சாதியம் இராணுவ ஒழுங்கினுள் அமைப்புரீதியாகச் செல்வாக்குச் செலுத்த முடியாது. இதனைக் கொண்டு புலிகள் முற்போக்கான புரிதலுடன் சாதிய மனநிலை இல்லாது செயற்பட்டவர்கள் என்று நிறுவிவிட முடியாது. அவர்களது சாதிய நீக்கம் இராணுவ ஒழுங்கின் அடிப்படையில் விழைந்த ஒன்றே அல்லாமல் புலிகளின் சாதியப் புரிதலின் முற்போக்கான பார்வையின் விளைச்சலால் உருவாகிய ஒன்றாகக் கருத முடியாது. அது அவர்களின் முற்போக்கான பார்வையின் பாற்பட்டதாக இருந்திருந்தால், சாதியப் பிரச்சினைகளின் போது சமூகத்தளத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்திருக்கும். ஆனால் அது அப்படி நிகழ்ந்திருக்கவில்லை.
புலிகள் சாதியப்பிரச்சினையில் சமூகத்தளம் என வரும் போது ஆதிக்க சாதியின் பக்கமாகச் சாய்ந்திருந்தார்கள், ஆதிக்க சாதியினரின் விருப்பங்கள், அபிலாசைகளை, நிறைவேற்றினார்கள் என்பதே அவர்கள் மீதான முக்கியமான குற்றச்சாட்டு. அதற்கான நிறையச் சம்பவங்களும் இருக்கின்றன என்பது உண்மை. அதில் ஒரு சம்பவம் தான் நூலக மீள் திறப்புத் தடை என்பது உண்மை. புலிகள் சாதிக் கொடுமைகளை தனிநபர் குற்றங்களாக அணுகினார்கள், தண்டனைகள் கொடுத்தார்கள் என்பதும் சாதியம் குறித்த உரையாடல்களை ஆயுத முனையில் மெளனித்தார்கள் என்பதுமே அவர்கள் மீதான அடுத்த பிரதான குற்றச்சாட்டு.
சமூகப் பிரச்சினையில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டிய விடுதலை இயக்கம் தன்னுடைய வளங்கள், ஆதரவு, ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு எதிராக நின்றும் இருக்கிறார்கள் என்பதே அவர்கள் மீதான விமர்சனமுமாகும். அதை இந்த ஒற்றைச் சம்பவத்தை மட்டும் வைத்து யாரும் புனைந்தோ, திரித்தோ எழுதுவதில்லை.
புலிகளைச் சாதி வெறியர்களாக நிறுவுவதாக இருந்தால் ‘வரலாற்றுக் குற்றம்’ பிரசுரத்தின் முன்பக்கத்தில் ‘சாதி வெறியர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட’ என்று வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. துண்டுப் பிரசுரத்தில் பதிவாகி இருப்பது இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. அதில் யாழ் சாதியப் போராட்டங்களின் கடந்த கால வரலாறும், இடதுசாரிகளின் ஆற்றல் மிகு போராட்டங்களும், தமிழரசுக் கட்சியினரின் சாதிய மேலாதிக்க அணுகுமுறை என்பனவும் முன்வைக்கப்பட்டு இருந்தன. அதன் நீட்சியில், அதன் அன்றைய பிரச்சனையின் மையமாக இருந்த நூலக மீள் திறப்புத் தடையும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அடிப்படையிலேயே அது வரலாற்றுக் குற்றமும் ஆகிறது.
முன்னாள் யாழ்ப்பாண நகரபிதா செல்லன் கந்தையாவின் நேர்காணலை புலிகளை நியாயப்படுத்தவும், புலிகளின் வரலாற்றுக் கறையைக் கழுவும் முனைப்போடு அறம் பாட முயலும் போதே, அகரமுதல்வன் முதலியவர்களின் பார்வையும், நோக்கமும் சிதறி விடுகின்றது. இதே செல்லன் கந்தையா தான் அப்போதைய சூழ்நிலையில் சாதிய ஒடுக்குமுறையை வெளிப்படுத்தி இருந்தார் என்பதனையும், அதனை அதன் எதிர் தரப்பில் யாரும் மறுத்திருக்கவில்லை என்ற உண்மையை அவர்கள் கவனத்தில் கொள்ளவதில்லை.
அகரமுதல்வன் அறியாமையுடன் புலிகளின் அறம்பாடுவது நமக்குப் பிரச்சனையல்ல, அவருடைய அறியாமை அறிவுஜீவித்தனமாக முன்வைக்கப்படும் நிலையே ஆபத்தானது.
**
யாழில் சாதியம் குறித்த உரையாடல், வெள்ளாளிய மனநிலையின் கோரம் என்பவை சொற்ப நபர்களினாலே பொது வெளியில் உரையாடப்பட்டு வருகிறது. ஆய்வாளர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள், இடதுசாரிகள் கூட இன்னும் தலித் என்ற சொல்லை ஒவ்வாமையுடனே அணுகுகிறார்கள். அதில் இருக்கும் வரலாற்று நியாயத்தையும், உலகளாவிய தன்மைகளையும் கூட கொஞ்சமேனும் அவர்கள் புரிந்து கொள்ள முயல்கிறார்கள் இல்லை என்பதை விட விரும்புகிறார்கள் இல்லை என்பதே பொருந்தும். பஞ்சமர் என்றும் (பஞ்சமர் என்று குறிப்பிட்டால் நான்கு வர்ணங்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதாகும்), தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ஆய்வுகள் செய்கிறார்கள். தலித் என்ற ஒரு சொல்லையே பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரவே தொடர்ந்தும் போராட வேண்டியிருக்கிறது.
கல்விப்புல ஆய்வுகள் மீதிருக்கும் அவநம்பிக்கையை மேலும் வலியுறுத்துவது போன்றே பரஞ்சோதி தங்கேஸின் கருத்துகள் இருக்கின்றன. இந்தப் பொதுப்படையான, மேலோட்டமான சாதியம் குறித்த பார்வையைக் கண்டடைய ஏன் ஆய்வு செய்திருக்க வேண்டும் எனத் தெரியவில்லை.சாதி ஒடுக்குமுறையைத் தனி மனிதக் குற்றமாக வரையறை செய்வதை ஆரோக்கியமானதாகவும், அதற்குத் தனி மனிதருக்கு வழங்கப்பட்ட தண்டனைகளைச் சிலாக்கியமானதாகவும் உரையாடுபவர்களுடன், உரையாட என்ன இருக்கிறது. கல்விப் புல ஆய்வுகளின் இயந்திரத்தனமான அணுகுமுறையும், அக்கறையின்மையுமே இவற்றில் தெரிகின்றன. சாதியம் போன்ற நுட்பமான, உள் ஒடுக்கு முறைகளை இவர்களின் ஆய்வுகளை வைத்து விளக்கிவிட முடியாது. இப்படியான ஒரு பெரும்பான்மை மனநிலையை மறுத்தே சாதியம் குறித்த உரையாடல்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு இடையறாது இவர்களின் போதாமைகளைச் சுட்டிக் காட்டவும் வேண்டியிருக்கிறது.