ஆதிக்க சாதிக் கதையாடல்களும், தலித் எதிர் வரலாறுகளும்.

யாழ் சாதிவெறியும், ஆதிக்கசாதி மனநிலையும், புலிகளின் ஆதிக்க சாதிச் சாய்வும் வலிந்து நிறுவ வேண்டிய அபூர்வ நிகழ்வுகள் அல்ல. அவையே யாழ் வாழ்வின் அன்றாடத்துடன் இயல்பாக்கமும், அமைப்பாக்கமும் பெற்றுள்ள மிகப்பெரிய அதிகாரத் தரப்புக்கள். அந்த ஆதிக்கசாதி அதிகாரத் தரப்பு தன்னுடைய வளங்கள், ஊடகங்கள், கலாச்சார மேலாதிக்கம், பொருளாதார மேலாதிக்கங்களைக் கொண்டு உருவாக்கி நம்மிடம் கையளிக்கும் கதையாடல்கள் ஆதிக்க சாதியின் மேலாதிக்க வரலாறுகள் அன்றி வேறு அல்ல. ஆதிக்க சாதித்தரப்பு உருவாக்கி நம்மிடம் கையளித்திருக்கும் வரலாற்றுக்கு, எதிரான வரலாறுகளை தலித் மக்கள் பக்கம் இருந்து தொகுக்க வேண்டி இருக்கிறது.

2003ல் நூலக மீள் திறப்புத் தடையில் துல்லியமாக வெளிப்பட்ட சாதிமனநிலையை மறைக்கும்படி ஆதிக்க சாதித்தரப்பு புலிகளின் பெயராலும், தமிழ் தேசியத்தின் பெயராலும் உருவாகித் தர நினைக்கும் ஊகங்களையும், எதிர்பார்ப்புக்களையும், விருப்பங்களையும், இட்டுக்கட்டல்களையும் மறுத்து அவற்றின் விடுபடல்களையும், போதாமைகளையும், அபத்தங்களையும், வரலாற்றுக் கயமையையும், பொறுப்பற்ற தன்மையையும் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

அவர்கள் உருவாக்கி நிறுவமுயலும் ஆதிக்க சாதி வரலாற்றுக்கு அருகில் வரையப்படிருக்கும் இன்னொரு எதிர் வரலாற்றுக் கோடுதான் சுதர்சன் செல்லத்துரை வெளிக் கொண்டு வந்திருக்கும் செல்லன் கந்தையாவின் செவ்வி.

இந்தச் செவ்வி யாழ் வெள்ளாள சாதி மனநிலையின் மனச்சாட்சியின் முன்னால் வைக்கப்படிருக்கும் ஓர் தலித் கண்ணாடி. அதில் ஒவ்வொருவரும் தங்கள் சாதிமனநிலையின் கோரமுகத்தைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

 

Scroll to Top