திலீபனின் நினைவு நாட்களில் காந்தியின் ‘ஒறிஜினல்’ அகிம்சை சந்தேகிக்கப்படும் சடங்கு நடக்கும். அதொரு வருட வழமை என்பதால் அதில் விசனப்பட ஏதும் இருப்பதில்லை. அப்படி ஏதும் நிகழாவிட்டால் மனம் பதட்டமடைமகிறது.சமூகம் முதிர்ந்துவிட்டதா? இல்லை கனிந்து விட்டதா? என்ற சாத்தியமற்ற சந்தேகங்கள் வலுக்கின்றன. அந்த உரையாடல்களின் ‘வெளியே’ இருந்தாலும் அவற்றைத் தொகுத்துக் கொள்ள முடியும். அவற்றின் உள்ளடக்கம் அவை செல்லும் திசைக்குமான அச்சுகள் புலி விசுவாசிகளாலும், புலி எதிர்ப்பாளர்களாலும் பல நூற்றாண்டுகளின் முன்னரே வார்த்தெடுக்கப்பட்ட மாறாத திண்ணமுடையவை. வார்ப்புகளைச் சுத்தம் செய்து தூபம் காட்டி பூசை செய்வது மட்டும் வருட நடைமுறை.
திலீபனின் மரணம் ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகத்தின் துன்பியல் நிகழ்வு என்பது மிகை. ஆனால் அந்த மரணம் கணிசமான மக்களின் அரசியல் விருப்புகள், வாழ்க்கையைப் பாதித்தது, பாதிக்கிறது என்பதில் அதையொரு முக்கிய நிகழ்வாக வரையறை செய்யலாம். அதாவது தமிழ்ச் சமூகம் கடக்க வேண்டியதும் கடக்க முடியாததுமான துன்பியல் நிகழ்வு.அந்த நிகழ்வால் தமிழ்ச் சமூகத்துக்குள் சில விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் அந்த விளைவுகள் புலிகளே எதிர்பார்க்காதவை. ஈழப்போராட்டத்தை திலீபனுக்கு முன் – பின் என்று வரையறை செய்து கொள்ளும் அளவிற்கு அவ்விளைவு இருக்கிறது. குறிப்பாகப் போராட்டத்தில் மக்கள் பங்கு, கேள்விகளற்ற வன்முறையேற்பு, படுகொலைகளை நியாயப்படுத்தும் தொனி, புலிகளின் தனிப்பெரும் ஆதிக்கம் என அந்தத் துன்பியல் மரணம் கலவையான பண்பு மாற்றத்தை சமூகக் கூட்டு மனநிலையில் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அந்த மரணத்தால் பல அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், சிந்தனையாளர்களை ஒருவகை மென்விமர்சன ஆதரவாளர்களாகப் புலிகளால் தம் பக்கம் திரட்ட முடிந்திருந்தது. பின் – போர்ச் சூழலில் அது நினைவுகூறலுக்கான உரிமையாகவும், விடுதலைப் போராட்டத்தினுள் இருந்த அகிம்சையின் சத்தான பகுதியாகவும் முன்வைக்கப்படுகிறது. இதிலுள்ள முரண், ஓர் அகிம்சை பின் வந்த வன்முறைகளுக்கான நிபந்தனையற்ற ஏற்பைக் கோரும் நிகழ்வாகவே புலி வழித்தேசியர்களால் கையாளப்படுகிறது என்பதுதான்.
பின்-போர்ச் சூழலில் போராட்ட வரலாறுகள் உணர்ச்சிப் பொதிகளாக மட்டும் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை உதறிச் சென்று மாற்றை அறியும் விருப்போ தேடலோ பலருக்கும் இருப்பதில்லை. தம் பொதுச் சூழலிலிருந்து பெற்றுக் கொண்ட சாதிய, தேசிய வரையறைகளின் மிகைப்படுத்தல்களையே யதார்த்தம் அல்லது உண்மை வரலாறு என ஆதுரமாக நம்புகிறார்கள். தம் நம்பிக்கைகளைக் குலைக்கக்கூடிய வரலாற்றை அறிய விரும்பாத நிலை. அதை மூர்க்கமாக மறுக்கக்கூடிய ஊகங்களையும், விருப்பங்களையும் உண்மை போலத் தர்க்கமே இல்லாது முன்வைக்கும் கயமை. இனப்போராட்டத்தின் தோல்வியையும், மிகைப்படுத்தப்பட்ட போராட்ட வரலாறையும் ஊதிப் பெருப்பித்து அதனுள்ளே புரள்கிறார்கள். அதில் ஒரு சுகம். தோண்டிய குழிக்குள் வாலைச் சுருட்டிப் படுத்திருக்கும் நாய்க்கான கதகதப்பு.
ராஜினி திராணகம மற்றும் திலீபனின் மரணங்களின் ஒப்பீடுகள் நமக்குச் சில புரிதல்களைத் தரக்கூடும்.திலீபனின் மரணம் ஏன் இவ்வளவு உணர்வுப்பூர்மாக பொதுச்சமூகத்தின் ஆன்மாவைப் பாதிக்கிறது? அந்த மரணத்திற்குக் கிடைக்கும் மைய நீரோட்டத்தின் ஏற்பும், நினைவுகூறலும் போன்றதொரு உணர்ச்சி நிலை ஏன் ராஜினி திராணகம மரணத்திற்குக் கிடைப்பதில்லை. திலீபன் மட்டுமா தன் மரணத்தை எதிர்பார்த்து நல்லூரில் சாவிற்காகக் காத்திருந்தார். ராஜினி திராணகமவும் தன் மரணத்தை எழுதி வைத்து அதற்காகக் காத்திருக்கவில்லையா? தேசியத்தின் பொருட்டு இழக்கப்பட்டால் மட்டுமா அது மகத்துவமும், நினைவுகூறலுக்குமுரிய மரணம்? இது தியாகி-துரோகி குறித்த சிக்கலா? தமிழ்ச்சமூகத்தின் உணர்ச்சி மிக்க தேசியப் பெருமிதம் சார்ந்த சிக்கலா?
புலிகளின் கரும்புலிகளுக்கும் திலீபனுக்குமான வேறுபாடு என்ன? கரும்புலிகள் தம் எதிரிகளின் இடத்துக்குள் பெளதிகமாக வெடித்துச் சிதறினார்கள். திலீபன் தன் மக்களின் உணர்ச்சி மையங்களில் அரூபமாக வெடித்துச் சிதறினார். இந்த வேறுபாடு முக்கியமானது.புலிகளின் இராணுவக் கட்டமைப்பின், அதன் ராணுவக் கருத்துருவாக்கத் தளத்தில் நின்று வரையறை செய்தால் திலீபனின் மரணத்தை ஒரு கரும்புலித் தாக்குதல் எனலாம். ஒரு சிறிய வேறுபாடு மட்டும் உண்டு. அவர் தன்னுயிரை ஈய்ந்தது அல்லது வெடித்துச் சிதறியது எதிர்த்தரப்பின் இடத்துள் அல்ல. தன் தமிழ்த் தரப்பினுள்ளே வெடித்துச் சிதறினார். அவர்களின் அறிவுக்கட்டமைப்பை, சிந்தனையைத் தகர்த்தார் – தொடர்ந்தும் தன்னைக் கடந்து தமிழ்ச் சமூகம் சிந்திக்க முடியாத உணர்ச்சிகர மையமாக மாறினார். இந்த வித்தியாசம் ஒன்றைத் தவிர அவருக்கும் ஏனைய கரும்புலிகளுக்கும் ஏன் பிரபாகரனின் மரணத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஒரே கருத்தியலின் இரு வேறு வழிமுறைகளின் பிரதிநிதிகள் இவர்கள். இலக்கும் செயலும் ஒன்று. ஆனால் வழிமுறை எப்படி வேறுபட்டதோ, அப்படியே அவற்றின் விளைவுகளும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஒப்பீட்டளவில் மிகுதிக் கரும்புலிகள் உருவாக்கி பௌதீக சேதத்திலும் அதிக சேதத்தைத் தன் இனத்தினுள்ளேயே நிகழ்த்தியவர் என்பதால், தமிழ்த்தேசிய அளவுகோல்களின்படி திலீபனை வினைத்திறனான கரும்புலி எனலாம். அந்த வழியில் சென்ற முதலும் கடைசியுமான நபரும் அவரே.
வெடித்துச் சிதறிய அவருடைய கருத்தியல் துண்டுகள் கணிசமான தமிழ் மக்களின் ஆன்மாவில் கலந்திருக்கின்றன.அந்த வகையில் அவர் ஒவ்வொருவரையும் பாதிக்கிறார்.அந்தக் கருத்தியலின் கரிய பக்கத்தைச் சுவீகரித்தவர்கள் மூர்க்கமாக எதிர்க்கிறார். அதன் உணர்ச்சி நிலையின் இனிய துண்டைச் சுவைத்தவர்கள் மூர்க்கமாக ஆதரிக்கிறார்கள்.
எதிர்ப்பவர்கள் திலீபனின் மரணம் ஒரு நாடகம். அது வலிந்து திணிக்கப்பட்ட நிகழ்வு என்கிறார்கள் அல்லது அவரது அகிம்சைக்கான அவரது தகுதியை அவருடைய கடந்த காலப் போராட்ட வன்முறைக் காலப்பகுதியில் இருந்து எடுத்து விமர்சிக்கிறார்கள். அவருடைய கடந்த கால விருப்புறுதிமிக்க வன்முறைச் செயல்களினால் – உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தும்- அகிம்சைக்கான திருவுருவாக அவரை முன்வைப்பதை மறுக்கிறார்கள்.
அவர் பிற போராளிக் குழு உறுப்பினர்களைக் கொலை செய்ததையும், சுந்தரம் கொலையில் அல்லது மிரட்டலில் அவரது பங்கையும், மனநிலை சரிந்த ஒருவரை மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்துச் சுட்டதையும் அல்லது தண்டனை வழங்கியதையும், ஏன் அவருடைய பள்ளி ஆசிரியர் சுட்டும்… சில சம்பவங்களையும் இதற்கான ஆதாரங்களாக(?) முன்வைக்கிறார்கள். இவற்றில் பலதும் அபிப்பிராயங்கள் என்ற அளவிலான குறைபாடுடைய ஆதாரங்களாகவே இருக்கின்றன. அதாவது அவரது கடந்த கால வன்முறை மீதான நாட்ட நிலையானது அவர் திடீரெனத் தடம்புரண்டு வந்தமர்ந்த அகிம்சையின் இருக்கை மீதான திலீபனின் தகுதியை உண்மையிலேயே இல்லாமலாக்குகிறதா என்றால் இல்லை என்பதே என் பதில். அவரது அகிம்சைக்கான திருவுருவை இரத்துச் செய்வது மேற்சொன்ன குறைபாடுடைய ‘ஆதாரங்கள்’ அல்ல. உண்மையில் அவை எல்லாம் அகிம்சை குறித்த சரியான புரிதலின்மையின் விளைவு அல்லது அகிம்சையை உண்ணாவிரதம் என்பதாக மட்டும் சுருக்கிவிடுவதால் விளைந்த ஒன்று.
அகிம்சைப் போராட்டத்திற்கான அழுத்தம் என்பது பெருந்திரளான மக்கள் ஏற்பினால் அல்லது பங்களிப்பினால் திரண்டுவர வேண்டியது. விடுதலைக்கான நீண்ட நெடும் பயணத்தின் இடைத்தங்கல் போன்றது உண்ணாவிரதம். அதன் இறுதியிலக்கு மரணம் அல்ல. முடிந்தளவான அழுத்தம் என்பதையே காந்தி தெளிவாக வலியுறுத்துகிறார். அது வன்முறை நோக்கிச் சரிந்தால் ‘குண்டி’ மண்ணைத் தட்டிவிட்டு உண்ணாவிரதத்திலிருந்து எழுந்துவிட வேண்டியதும், போராட்டத்தைச் சீரமைக்க வேண்டியதும் அதன் முக்கிய பணிகள். முக்கியமாக அகிம்சை முன் தீர்மானிக்கப்பட்ட தற்கொலையாக ( Predesigned suicide ) ஒருபோதும் இருக்கலாகாது என்கிறார் காந்தி. ஆனால் ஆயுதப்போராட்டம் மிகை உணர்ச்சி சார்ந்தும், தேசியப்பெருமிதம் சார்ந்தும் கட்டமைக்கப்படுவது. அதில் பின்வாங்குதல் என்பது இன இழுக்கு அல்லது பெரும் கறை. அதன் உணர்ச்சிகரமான ஆதரவாளர்களை வெளியேற்றியும்விடும். அதன் ஒட்டுமொத்தமான எதிர்ப்பு மனநிலையுமே எதிரி என்ற நிலையில் செயற்படுவது. அதனால் அகிம்சைக்கான வேட்கை ஆயுதங்களின் நிழலில் படுத்துறங்க முடியாது. அகிம்சை தன் வெளிப்படைத் தன்மையாலும், நீண்ட மனோபலத்தாலும் நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டியது முக்கியம். இறுக்கமும், இரகசியமும் நிறைந்த ஓர் ஆயுத அமைப்பு திடீரென அகிம்சையின் பக்கம் தடம் புரள்வதே பரிதாபத்திற்குரியது. அது அகிம்சை எனும் பாவனையில் முன்வைக்கப்பட்டிருந்த வன்முறைப் போராட்ட வடிவமாகும். போர்வை மட்டும் அகிம்சை. அதன் இரத்தமும் சதையுமான உடலும், கருத்துகளும் ஆயுதப்போராட்டத்தின் வேட்கையிலிருந்து கடைந்தெடுக்கப்பட்டவை. இந்த இரட்டை நிலையில் இருக்கும் அபத்தமே திலீபனின் உண்ணாவிரதத்தை அகிம்சையிலிருந்து இரத்துச் செய்து ஆயுதப்போராட்டத்தின் உணர்ச்சிகர உச்சமான கரும்புலி என்ற வடிவத்துள் நகர்த்துகிறது.
திலீபனது தந்தை திலீபனைக் காப்பாற்ற விரும்பி உண்ணாவிரத மேடைக்குச் செல்ல முயன்றதாகவும் அது தடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. திலீபனின் குடும்பம் குறிப்பாக, அவரது அண்ணன் திலீபனது வலிந்த மரணம் ஏற்படுத்திய தாக்கத்தால் இன்றுவரை புலியெதிர்ப்பு மனநிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தந்தையின் அந்தக் ‘கையறு’ நிலை புரிந்துகொள்ளத்தக்கது. ஒரு பேராற்றல் முன் தன் மகனின் உயிருக்காக இறைஞ்சும் கையறுநிலை. ஆனால் இந்தச் சம்பவங்கள் திலீபனது மரணத்தைச் சந்தேகத்துக்குரியதாக ஆக்குவதில்லை. அவர் ஒரு விடுதலை அமைப்பின் பிரதிநிதி அதன் முன்களப் போராளி. அந்த அமைப்புக் கோரிய உச்ச தியாகமாக உண்ணாமல் விரதமிருந்து தன்னுயிரை ஈய்ந்தார். அந்தளவில் அவர் தியாகம் உரையாடவும் மதிக்கவும் வேண்டியதே. அவர் மீது வலிந்து திணிக்கப்படும் அகிம்சை அடையாளமே கேள்விக்குரியது.
இந்தியாவிற்கு எதிரான தமிழ்ப் பொதுமனநிலையை உருமாற்றியதில் திலீபனுடைய மரணம் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. ஆனால் இந்தியா அன்று முன்வைத்த தீர்வை, இன்றைய யுத்த தோல்வி மனநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்ப்பது குறைபாடுடையது. இப்போது கிடைத்திருக்கும் எதுவுமற்ற நிலையிலிருந்து நோக்கும் போது அது அதிக அதிகாரமுடைய தீர்வாகத் தோன்றலாம். அப்போதைய கள யதார்த்தம் வேறு. தமிழீழம் விரல் தொட்டுவிடும் தூரம் தான் என்று நம்பினார்கள். அந்த ஒப்பீட்டளவில் அதிகாரமிருக்கதான தமிழ் மனநிலையில் 13வது சட்ட சீர் திருத்த ஏற்பாட்டினால் கிடைக்க இருந்த சொற்பமே. தனி நாட்டைக் கனவுகண்ட பொது மனநிலையும் அப்படியாகவே இருந்திருக்கும். கூடவே அந்த ஏற்பாடுகளை நடை முறைப்படுத்துவதில் இருந்திருக்கக் கூடிய ஆயுத அமைப்புகளின் பரஸ்பர சந்தேகங்களும் சிக்கலான சூழலைக் கொண்டு வந்தன. அந்தக் கொந்தளிப்பான சூழமைவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர திலீபனின் மரணத்தை அகிம்சையாக முன்வைத்தார்கள். அது புலிகளுக்கு நல்ல பலனையும் கொடுத்தது.
திலீபனின் அய்ந்து அம்சக் கோரிக்கை அப்பழுக்கற்றது. அது நியாயமான தமிழர்களின் அபிலாசைகளினை வெளிப்படுத்தியது. ஆனால் அதில் புலிகளுக்கு உறுதியோ, வெளிப்படைத் தன்மையோ ஒருபோதும் இருக்கவில்லை. அதைத் தற்காலிக ஏற்பாடாகத்தான் கையாண்டார்கள் அல்லது புலிகள் அந்தக் கோரிக்கையைக் கவசமாகப் பயன்படுத்தினார்கள் என்பதை அடுத்த ஓரிரு மாதங்களுள் கைச்சாத்தான ஒப்பந்தத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும். ஒரு அகிம்சைப் போரைத் தொடங்கி, உயிரைப் பலிகொடுத்து முன்வைக்கப்பட்ட உணர்வு மிக்க கோரிக்கையின் ஓர் அம்சம் கூட இரண்டாவது ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கவில்லை என்பதிலிருந்து அதனைத் தெரிந்து கொள்ளலாம்.
திலீபன் பலிக்கடாவா? புலிகள் அமைப்பின் போராளி ஆகவே பலிக்கடா அல்ல அவர் சாவை எதிர்பார்த்து உண்ணாவிரதம் இருந்தவர்தான் அந்தத் தியாகம் நகைப்புக்குரியதல்ல. அந்தத் தியாகத்தில் படிந்திருக்கும் அகிம்சையின் மிகையை அகற்றி அதனால் தமிழ்ச் சமூகம் இன்றுவரை எதிர் கொண்டிருக்கும் உணர்ச்சி நெருக்கடியை / வீழ்ச்சியைப் பேசுவதே முக்கியமானது. குறிப்பாக இலங்கை அரசு நினைவுகூறல்களை மூர்க்கமாகத் தடைசெய்கிறது. புலிவழித்தேசியர்கள் திலீபனை அகிம்சையின் அடையாளமாக மேற்பூச்சுகளுடன் முன்வைக்கிறார்கள். ஆக, அதுவொரு தமிழ் மக்களின் இரட்டைச் சிக்கல். ஆனால் இலகுவாக முன் நகரக்கூடிய சிக்கல்.
திலீபன் முன்வைப்பது புலிவழித் தேசியர்களுக்கு சில வழிகளில் அனுகூலமானது. ஈழப்போராட்டக் களத்தில் புலிகள் பெற்றிருந்த மிகை ஏற்பும், அவர்களது உண்மையான பங்களிப்பும் விமர்சன பூர்வமாகக் கூறாய்வு செய்யப்படும் காலம். மிகத் தீவிர புலிவழித்தேசியர்களே கடந்த காலத் தவறுகளை ஏற்றுக் கொண்டு பேசுவதாகத் தம்மை முன்வைக்க வேண்டிய இக்கட்டான சூழல். வேறு வழிகளற்ற நிலை. ஆயுதப் போராட்டத்தின் முடிவின் பின்னர் அவர்கள் அகிம்சைக் கவசமாகத் திலீபனை முன்வைக்கிறார்கள்.
கடந்த காலத் தவறுகளை ஏற்பதாகச் சொல்பவர்கள் அவற்றிற்கான மாற்றுகளையோ, பரிகாரங்களையோ யோசிப்பதில்லை. அந்த ஏற்பும் கூட கையறு நிலையின் பாற்பட்டதே அல்லாமல் அவர்களது உண்மையான போராட்ட வழிமுறை மீதிருந்த விமர்சன பூர்வமான அணுகுமுறையால் உருவாகி வந்த ஒன்றல்ல. அப்படியானவர்களும் முன்னிறுத்தக் கூடிய பிம்பமாகவே திலீபன் இருக்கிறார். அதாவது அதன் தீவிர ஆதரவாளர்கள் பற்றிக் கொள்ளக்கூடிய இறுதித் துரும்பும் திலீபனே. திலீபனை புலிகளுக்கு அகிம்சை மேலிருந்த பற்றின் ஆதாரமாகவும், அந்த வழி பயனற்றதால் தாங்கள் வழிதவறிச் சென்றதாகவும் காட்டவேண்டிய நிலை. புலிகளின் பெரும் ஆதரவாளார் படை அதன் இலட்சியவாத உள்ளடக்கத்திலிருந்து நீங்கி அரசியல் அதிகாரமும், உலகியல் இலாபங்களையும் நோக்கிய கட்சி ஆதரவாளர்களாகத் தம்மைச் சுருக்கிக் கொண்டுவிட்டிருக்கிறார்கள். அவர்களும் முன்னிறுத்தக் கூடிய மென்மையான முகமாகவே திலீபனின் அகிம்சை முகம் இருக்கிறது. ஆனால் அவர் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்குமான அகிம்சையின் முகம் அல்ல.
இவர்கள் இப்படி வலிந்து மேற்பூச்சுகளுடன் திலீபனை அகிம்சையின் முகமாக முன் நிறுத்துவதிலும் பார்க்க ராஜினி திராணகமவைத் தமிழ் மக்களின் அகிம்சையின் முகமாக முன்வைக்கலாம். அது பயனுள்ளதும் ஆரோக்கியமானதுமான முன்கை எடுப்பாக இருக்கும். அவரும் போராட்டத்தின் தேவையையும் நியாயாத்தையும் அங்கீகரித்து தீவிரமாக இயங்கியவர். பின் அதன் போதாமைகளை விமர்சன பூர்வமாக எதிர்கொண்டவர். பெரும் அதிகாரத்தின் முன் தன் குரலைப் பதிவு செய்தவர். தன் மரணத்தை ஒரு அகிம்சைவாதியின் எளிமையுடன் நிராயுதபாணியாக எதிர்கொண்டவர். ஆக அவரே அகிம்சையின் இருக்கையில் அமர்ந்து – வெளிச்சப்புள்ளிகளே இல்லாத நம் எதிர்காலம் நோக்கிய சில அடிகளையாவது எடுத்துவைக்கக் கூடிய சாத்தியங்களை நம் இனத்திற்கு நல்கக்கூடியவர்.
**
இம்முறை ’கிளப்-ஹவுஸ்’ ஊடாக திலீபன் நினைவுகூரல் சடங்கில் பங்குகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படியான சில அறைகளில் கருத்துக்கு (அது கருத்தா என்பதைப் பிறகு பேசிக்கொள்ளலாம்) கேட்கக் கிடைத்தது நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். ஒன்று ராஜினி திராணகம குறித்த அறை மற்றது திலீபன் குறித்த அறை. அப்படியான அறைகள் பல இருந்தாலும், தெரிந்த நண்பர்கள் களமாடிக் கொண்டிருந்த களங்களின் உரையாடல்களை மட்டும் கவனித்தேன். அதனால் இரண்டு நல்விளைவுகள் ஏற்பட்டன. ஒன்று `கிளப்கவுஸ்’ விவாதம் செய்வதற்கோ, அறிவுச் செயற்பாட்டிற்கோ உரிய களமல்ல எனப் புரிந்தது. தேத்தண்ணிக்கடை அரட்டை தாண்டி அதைப் பயனுள்ளதாகப் பயன்படுத்த பெரும் உழைப்பு வேண்டும். ஆரோக்கியமாக இருக்கும் என நினைத்த அறைகளிலேயே இந்த நிலைமை. மிகுதிகளில் வெட்டி வம்பு. ஆனால் தாங்கள் ஏதோ அறிவுச் செயற்பாட்டின் உச்சத்தில் இருப்பதாகவும், அவை பெரிய அரசியல் செயற்பாடு என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமான கருத்துகளைக் கிடத்தி உடற்கூறாய்வு செய்கிறார்கள். அதில் முக்கியமாகக் கருத்துச் சுதந்திரம், குரலை மௌனித்தல் எல்லாம் நல்ல மலிவு விலையில் கிடைத்தன. இது ஏதும் கழிவுவிலைக் காலமோ தெரியவில்லை.