பகுதி 1
(இந்த தொகுதியின் அனைத்து கதைகள் தொடர்பிலும் எழுத இருப்பதால் பகுதி பகுதிகளாக வெளிவரும் )
பொதுவாக தொகுதி என்ற சொல்லாடல் கவிதை அல்லது சிறுகதைகளையே குறிக்கும். இது குறித்த ஒரு எழுத்தாளரின் படைப்புக்களாயோ, அல்லது பல எழுத்தாளர்களின் புனைவுகள் சார்ந்ததாயோ இருக்கும். ஐம்பத்தோராவது இலக்கிய சந்திப்பின் நினைவாக வெளியிடப்படும் இந்த தொகுதி இலங்கை மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்களின் இருபத்தியேழு சிறுகதைகளின் தொகுப்பாக இருக்கிறது.
சிறுகதை இலக்கியத்தினை பொறுத்து,காலத்துக்கு காலம் ஈழ இலக்கியத்தில் இவ்வாறான கூட்டு தொகுப்புக்கள் அவ்வப்போது வெளிவந்திருந்தாலும், ‘மரணத்துள் வாழ்வோம்’ ‘சொல்லாத சேதிகள்’ போன்ற கவிதை தொகுப்புகள் மாதிரி அவை இன்றுவரைக்கும் பேசுபொருளாக இல்லை என்பது வெளிப்படையானதே.
ஈழ இலக்கியம் போர் தவிர்த்து வேறு எதையுமே பேசவில்லை என்ற பொதுவான குற்றச்சாசட்டுக்கு பதிலிறுக்கும் முகமாக, ஒரு பன்மை பண்பாட்டு உரையாடலாக இந்த தொகுதி வெளியாவதாக அதன் முன்னுரையில் குறிப்பிடப்படுகிறது. இந்த தொகுதி வெளியானது முதல் பல்வேறு கருத்துக்கள் ஆதரவாகவும் எதிராகவும் வெளியிடப்பட்டன. எவ்வாறாயினும் ஒரு வாசகனை பொறுத்து இது தலை வாழை விருந்துதான். ஏனெனில் ஒரே இலையில் நிறைய வகைகள். சாப்பிட்ட பின்னர் உப்பு, புளி, சுவை தொடர்பில் விமர்சிப்பது அவரவர் பார்வை. ஆனால் சிலர் கூறுவது போல் இது உணவே இல்லை என்பது கொஞ்சம் ஓவர்.
1.சைபர் தாக்குதல் – அ. முத்துலிங்கம்
ஈழ எழுத்தாளர்களிலேயே தனது படைப்புக்களினூடே உலகம் சுற்றும் வாலிபன் என கூறலாம் இவரை. ஏனெனில் இவரின் கதைகளில் புழங்கும் நிலம் என்பது நிலமல்ல ;பல்வேறு நிலங்கள். இவரின் பணியும் அதனூடே பெற்ற அனுபவங்களும் தமிழ் வாசகர்களுக்கு உலகின் வெவ்வேறு பிரதேசங்கள் தொடர்பில் மொழிபெயர்ப்பு நூல்கள் தாண்டி நேரடி தரிசனங்களாக விரிகின்றன. இதுவே இவரின் சிறப்பாகிறது.
சகா என்னும் சகாதேவன் புரியும் பணியும் அவரின் கனடா வாழ்வுமாக நகர்கிறது கதை.கனடாவில் பிரபலமான சைபர் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் சகாதேவனின் ஒரு நாள் சம்பவமே இந்த புனைவு. குறித்த நாளிலே அவருக்கு இரண்டு முக்கிய இழப்புகள் ஒன்று அவரின் மகள் கள்ள காதலனுடன் ஓடி போவதாக அறிவது ;மற்றையது அவரின் சைபர் பாதுகாப்பு அரணை ஒரு குழு உடைப்பது. எப்போதும் தனது பணிக்கும் பணத்திற்கும் முன்னுரிமை தரும் அவர், இவ்வளவு இழப்பின் பின்பும் அந்த நாளை தனது மனைவியுடன் அனுமதி பெறுவதற்கே காத்து இருக்க வேண்டிய ஒரு உயர் உணவகத்தில் கொண்டாடுகிறார்.
இந்த கதையில் சகாவின் ஆளுமையில் பாதிப்பினை கொண்டு வரும் சம்பவங்கள் இவை
1.அவரின் மகன் “அவசியம், தேர்வு” போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்ட அறத்திற்கு மதிப்பு தருவது. இதுவே குறித்த நாளில் மகளின் விருப்புக்கு அங்கீகாரம் தருவதும் மற்றும் சூதாட்ட நிறுவனத்தின் பாதுகாப்பு குறையை நிவர்த்தி செய்ய மறுப்பது மாக, சகாவின் ஆளுமையை மாற்றுகிறது.
2.சகாவின் சிறந்த செயல்கள் இங்கே பேசப்பட்டாலும் அவருள்ளும் ஒரு திருடன் உள்ளான். அந்த திருடனே குறித்த உணவகத்தின் அனுமதியை சைபர் கிரைம் மூலம் பெற்று தருகிறான்.
ஒரே கணத்தின், ஒரே மனிதனுள்,இரு வேறு மனிதர்களே இந்த கதையின் பொருண்மை.
இதற்குமப்பால், காதலர்களை தெரிவு செய்யும் மகளின் முறை, அதாவது காதலின் (கலவியின் ) உச்சத்தில் இருக்கையில் முன்னாள் காதலர்களின் பெயர்களை உச்சரித்தல் என்பதாகவும், அதை பெற்றோரிடம் கூறுவதாகவும் உள்ள இடம் இரசிக்கதக்கது.
இராஜேஸ்குமாரின் கிரைம் கதை ஒன்றை வாசித்த அனுபவம் கதை முடிவில்.
2.தாய் – அகரன்
அகழ் மின்னிதழில் எழுதிய மலரவனின் “போருலா” குறித்த பார்வையே இவர் குறித் தான அறிமுகத்தினை எனக்கு தந்தது. நான் படிக்கும் இவரின் முதலாவது சிறுகதை இது.
சமூகத்தில் அம்மா குறித்து நம் மத்தியில் எழுப்பப்படுள்ள புனிதங்களின் மீதான மறுவாசிப்பை கோரும் கதை இது. கதைக்கான நிலமாக வவுனியாவை தேர்வு செய்தது சிறப்பு. ஏனெனில் போர் காலத்தில் வவுனியாவின் குறுக்கு வெட்டு முகத்தினை வாசகனுக்கு தந்தபடி, அதன் பின்னணியில் நகர்கிறது கதை.ஆயுத மற்றும் அடிதடி குழுக்கள், குண்டுவெடிப்பு, வன்முறையென நிலமும் காலமும் பொருத்தமான களத்தை வாசகன் மனதில் கட்டியெழுப்புகின்றன.
அப்பா வெளிநாட்டில் இருக்கையில் அம்மா, பருவம் அடைந்த பெண் மற்றும் சிறு பையன் என்ற வட்டத்துள் சுழலும் கதை இது. பையனின் பார்வையில் நகரும் கதை. கதையின் பிரகாரம் பையன் அம்மா குறித்து சொல்லாத செய்திகள் இரண்டு.
1.அம்மாவின் அறைக்குள் அந்நிய ஆண் ஒருவனை கண்டதும், பையனின் மரபான மனம் விழித்து விடுகிறது. பாடசாலை முடிந்த பிறகு அம்மா கூறுவதாக கூறிய விடயத்தை கேட்காமல் விடுவது.
2.குறித்த ஒரு தாக்குதலின் பிறகு இறந்த ஒருவனின் முகம் இவர்கள் சந்தேகம் கொள்ளும், வசந்தனின் முகம் போன்று இருப்பதாக நண்பன் கூறும் செய்தியை மறைப்பது.
இந்த இரு விடயங்களுமே கதையின் மைய சரடாக அமைகின்றன. அம்மா என்ற கட்டமைக்கப்பட்ட விம்பத்தை தாண்டி, அவளும் ஒரு பெண் என்பதாக நவீன பார்வை அமைந்தாலும்,வெறுமனே ஒரு ஆண் பெண்ணின் அறைக்குள் இருப்பதனாலேயே அது சந்தேகத்துக்குரியதாகி விடாது என்ற நுண்ணிய நோக்கினையும் கதை வேண்டி நிற்கிறது. கதையின் இறுதியில் “என்னவாக இருந்தாள் அம்மா” என்ற கேள்வியை எழுப்பி நிறைவுறுகிறது கதை. அம்மா, பெண் போன்ற பாத்திரங்களையும் தாண்டி அவளுக்கு வேறு பாத்திரங்களும் இருந்திருக்கலாம். ஏனெனில் கதை நிகழும் காலம் அப்படியானது.
இந்த கதையினை வாசிக்கையில் கதையில் வரும் கதைச்சொல்லி அம்மா குறித்த மரபு பார்வை கொண்டவனாக வடிவமைக்கப்படுக்கையில், கதாசிரியர் வசந்தனுடனான நெருக்கத்தை கொண்டு வந்து அவளை சாதாரண உணர்வு கொண்ட ஒருத்தியாக முற்படுகிறார். ஆனால் இறுதியில் அம்மா பாத்திரம் மரபு ரீதியான ஒன்றாகவே எஞ்சி நிற்கிறது. ஏனெனில்,
1.அம்மா எங்கோ இருந்து பையனை கவனித்து கொண்டிருப்பது. 18 வருடங்களுக்கு பிறகு இதனாலேயே தொடர்பு கொள்கிறாள்.
2.அம்மா பெண்ணுடன் கோபித்தாலும், பையனுடன் அன்பாக இருப்பது. இது இயற்கையின் ஈர்ப்பு.
3.பிள்ளைகளின் வாழ்வில் குறுக்கிடாது ஒதுங்கி இருப்பது.
கதையில் குற்றவுணர்வு மிகுந்த ஒருவனாக மகனை முடித்திருப்பதனூடே இங்கு எவ்வித கட்டவிழ்ப்பும் நிகழவில்லை எனலாம். இறுதியில் கார்கியின் நாவல் தலைப்பான “தாய்” நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
3.அந்நிய மரம் : உமா வராதராஜன்
ஈழப்போர் முப்பது வருடங்கள் நடைபெற்றாலும் அந்த மொத்த காலமும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. விடுதலை இயக்கங்கள், படையினர், இன முரண்கள் போன்ற விடயங்கள் காலத்திற்கு காலம் மாறியபடியேதான் இருந்தன. உதாரணமாக எண்பது களில் இருந்த போராளிகளுக்கும் இரண்டாயிரங்களில் இருந்த போராளிகளுக்கும் வித்தியாசங்கள் வேறு வேறு.
இந்த கதை உமா அவர்களின் சொந்த பிரதேசத்தில் நிகழ்கிறது. இது புனைவு என்பதை விடவும் அல் புனைவாக இருக்க கூடிய சாத்தியங்களே அதிகம். ஒரு சிங்களவரை மணந்திருந்த வங்காள மொழி பேசும் பெண் வைத்தியருக்கும் கதை சொல்லிக்கும் இடையிலான ஊடாட்டமே கதையாகிறது.உமா அவர்களின் எள்ளல் நடை இந்த கதையிலும் தொனிக்கிறது.
தனிப்பட்ட வாழ்வில் பெரிதாக நாடடமில்லாத ஒருவராக வரும் டாக்டர், சேவையே பெரிதாக கொண்டு பிரதேச மக்களுடன் வாழ்கிறார். ஆனால் கணவர் போல காந்திய வாதியல்ல. அவர் ஒரு எதார்த்தவாதி.அந்த காலங்களில் பகுத்தறிவு என்ற ஒன்றில்லாது ஆயுதங்களின் பகுத்தறிவில் இயங்கிய மனிதர்களினால் வைத்தியர் கொல்லப்படுகிறார். அவர் சிஙகளவரை மணம் செய்திருப்பது, அரச உயரதிகாரிகளுடானான தொடர்பு, இந்தியா விடுதலை இயக்கங்களுக்கு உதவி செய்தது (அவர் ஒரு இந்தியராக இருந்தது) மேலும் புதிதாக உருவாக்கபட்ட தமிழ் – முஸ்லிம் முரண் கள் போன்ற விடயங்களில் ஏதோவொன்று அவரின் கொலைக்கான காரணமாக இருக்கலாம்.
அவர் மரமாக இருந்து நிழல் தந்தாலும் அந்நிய மரமாக இருந்தமையால் வெட்டப்பட்டார்.இந்த ஒற்றை முடிவுடன் கதை முடிகிறது. ஈழபோரில் இவ்வாறான கொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன என்ற புதிய திசை ஒன்றை திறப்பதனூடே இந்த கதை முக்கிய இடம் பிடிக்கிறது.
4.மஹர் : ஓட்டமாவாடி அறபாத்
ஓட்டமாவாடி அறபாத் தனது நிலத்தின் கதைகளை செழுமையுடன் சொல்லும் கதைசொல்லி. இந்த கதையின் பெயர் மஹர் என்றபோதிலும், கதையின் பாதியையும் பிடித்திருப்பது யானை – மனித மோதலாகும். இலங்கையில், குறிப்பாக கிழக்கு மாகா ணத்தில் தினமும் ஒருவர் அல்லது இருவரென யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய வண்ணமே இருக்கின்றனர். காயங்களும் உயிர்ப் பலியுமாய் இந்த பட்டியல் நீள்கிறது.
காதர் யானையின் தாக்குதலால் கொல்லப்படுதலின் பின்னணியில் கதை நகர்கிறது. இஸ்லாமிய திருமணம் என்பது பெண்ணின் சம்மதமின்றி முற்று முழுதாக ஆண்களினாலேயே சம்பிராதாய பூர்வமாக முடிவு செய்யப்படுகிறது. அத்துடன் மஹர் என்பதும் கூட, பெண்ணை ஒரு பெறுமதிக்கு வாங்கும் ஒரு முறையே. ஆக இங்கு பெண் ஒரு பொருளாகவே கணிக்கப்படுகிறாள். இந்த கதையில் இவ்வாறான விடயங்கள் பேசப்படினும் அவை, விமர்சனமாக முன்வைக்கப்படாது இயல்பான நிகழ்வுகளாக காடடப்படுகின்றமை சிறப்பு.
கதையின் இறுதி பகுதியே கவனிப்புக்குரியதாகிறது. இஸ்லாமிய வழக்காறுகளின் பிரகாரம், கணவன் தந்த மஹரை காலாவதி /ஹலால் செய்ய வேண்டும். அப்போதுதான் அவனின் ஈமான் இறைவனால் ஏற்கப்படும். இந்த இறுதி கடமையினை செய்ய வரும் மனைவியாகிய ராவியாவின் நெஞ்சிலே அவர்கள் தாம்பத்திய வாழ்விலே நிகழ்ந்த சில கசப்பான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. அந்த நினைவுகளுடனேயே அவள் கணவனின் மையத்திற்கு பிரியாவிடை தருகிறாள். இங்கே சொல்லப்படாத செய்தியாக அவர்களின் தாம்பத்தியம் சந்தோசமாக இல்லை என்பது உள்ளது.
கதையின் முடிவு பெண்களின் வாழ்விலே தீர்மானிப்பவர்கள் ஆண்களாயும், அனுபவிப்பவர்கள் பெண்களாயும் உள்ள நிலையினை கூறுகிறது.
சம்பவங்களினூடு சமூகத்தை விமர்சிக்கும் ஒரு இலயம் இந்த கதையின் உள்ளீடாக இருக்கிறது.இந்த விமரிசனத்தை வாசகர்களிடமிருந்தே எழுப்பி விடுகிறார் ஆசிரியர்.
5.வெண்சுடர் : கருணாகரன்
ஈழத்தில் போர் நிறைவுற்று பதினைந்து ஆண்டுகள் நிறைவுற்ற போதிலும் யூத்தத்தின் வடுக்கள் இன்னும் பச்சை காயம் போன்றே பலருள் இருக்கின்றன. போரில் ஈடுபட்ட போராளிகள் அதிலும் பெண் போராளிகள், இன்னமும் உடல் மற்றும் உள ரீதியான காயங்களில் இருந்து மீளவில்லை. அவ்வாறான ஒரு பெண் போராளி குறித்த கதையே இது.
கதையினை உளவியல் சிகிச்சை அளிக்கும் பணியாளர் ஒருத்தர் கூறும் விதமாக எழுதியிருப்பதானது ஒரு கள ஆய்வு அறிக்கையின் வடிவத்தினை சிறுகதைக்கு அளிக்கிறது. மருத்துவ உலகின் பிரகாரம், உள நோயாளர்கள் இருவிதமான நிலைகளிலேயே காணப்படுவதுண்டு. ஒன்று அவர்கள் அதீத களிப்பு நிலையில் இருப்பர்;இதனை mania என்பர். மற்றது தீவிர அமிழ்வு நிலையாகும்;இதனை depression என கூறுவர். அவர்களுக்கு நோய் நிர்ணயம்(diagnosis) செய்கையில் இதில் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதற்கேற்ப சிகிச்சை வழங்கப்படும். ஆனால் அரிதாக சில நோயாளிகள் இந்த இரண்டு நிலைகளுக்கும் மாறி மாறி பயணித்தபடி இருப்பர். இவ்வாறானவர்களை குணப்படுத்துதல் கடினம். அவ்வாறான ஒருத்தியே மரியமலர் அ ல்லது வெண்சுடர் அல்லது நிலாமதி.
பொதுவாக உள நோயாளர்கள் தமது தீவிரத்தினை குறைக்க ஏதாவது பணியில் ஈடுபாடுமாறு அவர்களின் சிகிச்சை உதவியாளர்களினால் பணிக்கப்படுவதுண்டு. ஆனால் இந்த கதையில் நோயாளியே தனக்கான பரிகாரங்களை செய்து கொள்கிறாள். ஓவியம் வரைதல், கதை மற்றும் கவிதை எழுதுதல் போன்றன அவற்றில் சில.
தமிழர்களின் இறுதி புகலிடமாக நெய்தல் நிலம் இருந்தமையால் வெண்சுடர் கடலை நோக்கி அடிக்கடி செல்லுதல் ஒரு குறியீட்டு நிகழ்வு. மன நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடுபவர்கள் அவர்களின் இயல்பினை அடைவது மருத்துவ உலகில் கூறப்படும் உண்மை. இங்கும் இறுதியில் வெண்சுடரின் அம்மாவும் அதேநிலையினை அடைவதாக காட்டப்படுகிறது.
கதையின் முடிவு பகுதியில் காட்டப்படும் படங்கள் வலுவான செய்தியை கூறுகின்றது. இறுதியில் காட்டப்படும் கால்கள் ஆண்களின் கால்களாக இருக்கின்றன. இந்த கால்கள் குறித்த படங்களே அவளின் மனப்பிறழ்வு குறித்த பிம்பங்களாக இருக்க கூடிய சாத்தியங்களை கொண்டுள்ளது. இது இந்த கதையின் இரண்டாம் பகுதிக்கான அத்திவாரமாக அமைய கூடும். ஒரு நல்ல சிறுகதை தீர்க்கமான முடிவுகளுடன் நிறைவுறுவதில்லை என்பதற்கு உதாரணம் இந்த கதை.
ஒரு கவிஞராக அறியப்படும் கருணாகரன் அவர்கள் எழுதி வாசித்த முதலாவது கதை இது. இந்த கதையின் சிறப்பமிசம் யாதெனில்,கதை பின்னப்படுள்ள நேர்த்தி. உள நோயாளர்கள் குறித்த மருத்துவ உண்மைகளை உள்வாங்கி எழுதியுள்ளமைக்காக கவிஞரை பாராட்டிடாமல் இருக்கவியலாது.
6.கன்னி ரத்தம் : சப்னாஸ் ஹாசிம்
ஒரு சிறுகதையின் உயிர்ப்புக்கு கள ஆய்வு எவ்வளவு முக்கியம் என்பதை கூறும் கதை. சமூகத்தில்
அதிகம் கணக்கில் இல்லாத அதாவது விளிம்பு நிலையில் வாழும் மாந்தரை குறித்து எழுதப்படும் கதைகள் வாசகனுக்கு சுவரிசியமான விருந்தாகி விடுகின்றன. அவ்வாறான ஒரு படையல் இது.
இன்றைக்கு இஸ்லாம் மதம் முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட ஒரு இறுக்கமான வைதீக மதமாக கடைபிடிக்கப்பட்டாலும், இற்றைக்கு நான்கு அல்லது ஐந்து சகாப்தங்களின் முன்னால், அதிலும் பல்வேறு விதமான நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் இருந்தன என்பது புதிய செய்தியல்ல. எனது கிராமத்திற்கு எண்பதுகளில் மருதமுனையில் இருந்து வரும் பாக்கீர் பாபாக்கள், அப்பா வியாங்கல்லையில் படிப்பிக்கும் போது அடிக்கடி நிகழ்ந்தா க கூறும் கந்தூரிகள் மற்றும் இன்றைக்கும் நடக்கும் கல்முனை கடற்கரை பள்ளி கொடியேற்ற விழா போன்றவைகள் இஸ்லாம் மதத்தில் நிலவிய புற சமய வழிபாடுகளுக்கான உதாரணங்களாகின்றன.
அக்கரைப்பற்று என்ற கிராமத்தில் இவ்வாறு புற சமய கிருத்தியங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு குடும்பத்தின் கதையே இந்த கன்னி ரெத்தம் கதையாகும். மாந்திரீகத்தில் அதிகம் நம்பிக்கை கொண்ட பரிசாரி குடும்பத்தில் இளைய வாரிசாக உதிக்கும் சாரா அல்லது கைர் சாரா என்ற பெண் குழந்தை, இந்த குடும்பத்தின் மூத்தவரான லெப்பை பரிசாரியின் வாக்கின் பிரகாரமாக குடும்பத்திற்கு அழிவை கொண்டு வருவாள என்கிற செய்தியும், அதை தவிர்ப்பதற்காக குடும்பம் செய்யும் பரிகாரங்களுமே கதையாகிறது.
மாந்திரீக கதைகளில் எப்போதும் ஒரு மரம் வரும். அது ஆல், வேம்பு போன்ற மரங்களாக இருக்கும். ஏனெனில் இந்த மரங்களிலேயே துர்தேவதைகள் இருப்பதாக கருதி அவற்றுக்கான படையல் இடப்படுவதுடன், தகடு மற்றும் யந்திரம் பதித்தலும் இடம்பெறும். அதிசயமாக இந்த கதையிலே வில்வ மரம் வருகிறது. வில்வம் இலைகள் சிவனுக்கு மிகவும் பிடித்தவை என்பது ஐதீகம்.வில்வம் மரம், நானறிந்த வரைக்கும் துர் தேவதைகளின் இருப்பிடமாக இருந்ததில்லை.இதில் இவ்வாறு வில்வ மரத்தினை தேர்வு செய்தமை பொது வழக்கிலிருந்து விலகிய ஒரு விடயமே.
குடும்பத்தை பீடித்த துரதிஷ்டம் விலக பல்வேறு பரிகாரங்கள் செய்தும் சரி வராத நிலையில், இறுதியாக சாராவின் அங்கம் ஒன்றை குறிவைத்து நடக்கும் பூசையில், அவள் வயதுக்கு வருவதாக காட்டப்பட்டு, இயற்கை அவளை காப்பாற்றி விடுவதாக கதை முடிகிறது.
கதை மாந்திரீகம் தொடர்பிலானதாக இருப்பினும், பெண்கள் மீதான ஆண்களின் மீறல்கள் கதையுடன் நகர்வது சிறப்பு.சாராவின் பால்யத்தை சரியாக அனுபவிக்க தராத மாமன்கள், சாராவின் மீது இரக்கம் கொள்ளும் மாமிகள் மற்றும் கதை முடிவில் சாராவை மகளாக தாங்கும் பெரியன்னை நஜீமா என பெண்களின் அடங்கிய குரல்கள் இந்த கதையெங்கிலும். இதில் மாமான்களை தவிர்த்து வேறு ஆண் பாத்திரங்கள் தவிர்க்கப்படுவதும் கதைக்கு எது தேவையோ அது என்கிற கதாசிரியரின் தெரிவே.
புதிய கோணமோன்றினூடே நகரும் இந்த கதை, தொகுதியை பெறுமதியடையதாக்கி விடுகிறது. மேலும் முன்னர் ஒரு இணைய இதழில் வாசித்த இவரின் கதையொன்று, அதிகமான பிரதேச மொழி வழக்குகளினால் வாசிப்பதற்கு சிரமமாக இருந்தது. அது இந்த கதையில் தவிர்க்கப்பட்டிருப்பது, வாசகன் கதையுடன் பயணிப்பதை இலக்குவாக்கி விடுகிறது.
07.கரித் தெமலோ : சாதனா சகாதேவன்
“கறுப்பு நிற பைபிள்” என்ற நூலை எழுதிய சாதனா சகாதேவன் அவர்களின் கதை இது. இது ஏற்கெனவே இணையம் ஒன்றில் படித்த கதைதான். இந்த முழு தொகுப்பிலுமே ஏற்கெனவே படித்த கதையாக இருந்தது இது மட்டுமேதான்.
தமிழை மட்டுமே உயிராக நேசித்து, தமிழ் தவிர வேறெந்த மொழியினையும் அறியாத ஒருவன் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை, எள்ளல் நடையுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர். மொழி என்பது ஒருவரின் கருத்தினை வெளிப்படுத்துவதற்குரிய தொடர்பு ஊடகமாக, இருந்த போதிலும் உலகம் முழுவதற்கும் ஒரு பொது மொழி இல்லையென்பதே பிரச்சினைக்கு உரிய விடயமாகிறது.
இந்த கதையில் வரும் நாயகனுக்கு இலங்கையில் இருக்கும்போது சிங்களம் தெரியாததான் காரணமாக ஏற்படும் பிரச்சினை புலம்பெயர்ந்த தேசத்திலும் தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாததன் காரணமாக ஏற்படுகிறது. கதை எள்ளல் மொழியில் நகர் ந்தாலும் தீவிர பிரச்சினை ஒன்றையே மொழிகிறது. ஏனெனில் இலங்கையின் இனப்பிரச்சினை என்பதன் ஆரம்ப தோற்றுவாய் மொழியே.
இன்றைக்கும் இலங்கையில் பொதுமொழி ஒன்று புழக்கத்தில் இல்லாமையே இலங்கையின் இரு இன குழுமங்களிடையேயும் பிளவுகளை ஆழமாக்கியிருக்கிறது. உண்மைஇலங்கையின் அரசியவாதிகள் கையாளும் பிரித்தாளும் தந்திரமென்பது மொழியே.
ஒரு குறித்த சொற்றொடர் (கரித் தெமலோ) ஒரு மனிதனை காலத்திற்கு காலம் அவமானப்படுத்துகிறது.ஆனால் குறித்த சொற்றொடரினை அந்த மனிதனே தனது மொழி பேசும் சக மனிதன் மீது பாவிப்பதற்கு காலம் கடடளை இடுகிறது. கதையின் முடிவில் குறித்த மனிதனான சகாவின் மீது பரிதாபம் ஏற்படுவதற்கு பதிலாக, எரிச்சலே ஏற்படுகிறது. ஏனெனில் உலகம் பூகோளமாக சுருங்கி விட்ட காலத்தே ஒருவன் தனது மொழியை மட்டுமே தூக்கிப் பிடித்துக்கொண்டு இருக்க முடியாது. ஒரு பிரபஞ்ச தன்மையை மனிதர்கள் கண்டடைய வேண்டும் என்பதே கதை கூறும் நியதியாகிறது.
மறுபுறத்தில் சொந்த இனத்தவர்களினாலேயே கூனிகுறுகும் நிலைக்கு ஒரு மனிதன் தள்ளப்படுவதென்பதும் நிதர்சன தரிசனமே. கதையில் வரும் கீழ்கண்ட பகுதி என்றுமே மாறுமென கூற முடியாது.
“சிங்கள மக்கள் இன்னொரு மக்களுக்குதான் அநியாயம் செய்கிறார்கள்;ஆனால், நாங்களோ எங்கள் சொந்த மக்களுக்கே கொடூரம் செய்கிறோம்”
இது சகாதேவனின் பட்டறிவாயும், எழுத்தாளரின் அரசியல் நிலையாயும் இருக்கலாம்.
08.சஹரானின் பூனைகள் : சித்தாந்தன்
இந்த தொகுதியிலேயே அதிகம் சர்ச்சையினை கிளப்பிய கதை இதுவாகத்தான் இருக்கும். சித்தாந்தன் அவர்களுக்கு ஒரு எழுத்து பாணி உண்டு. அனேகமாக குறியீடுகள் மற்றும் உருவகங்கள் சார்ந்து எழுதும் பாணி இவருடையது. அம்ருதாவின் புதிர் வட் டங்கள் என்ற இவரின் தொகுதியில் இவ்வாறான சில கதைகள் இருக்கின்றன. கவிதைகளில் இவரின் மொழி அலாதியானது. சில காலங்களுக்கு முன்னர் இவ்வறான அலாதியான மொழியுடன், புனைவினை கையாண்டு ஜீவநதி இதழில் சிறுகதை ஒன்று எழுதியிருந்தார். என்னை பொறுத்து இவரின் சிறுகதைகளில் உச்சமானதாக அதனையே கருதுகிறேன்.
சஹரான் என்ற பெயர் இலங்கையின் வரலாற்றில் எவ்வாறான தாக்கங்களை கொண்டு வந்தது என்பது யாவரும் அறிந்ததே.சஹரான் என்ற ஒருவன் தனது குழுவை உருவாக்கி எவ்வாறு தாக்குதலை நடத்தினான் என்பதே கதை. இதில் குழு உறுப்பினர்களுக்கான உருவகமாக பூனைகள் எடுத்தாளப்படுகின்றன. பொதுவாக பூனைகள் சுதந்திர விரும்பிகள். அவை நாய்கள் போல விசுவாசத்தின் பெயரினால் ஏவல் செய்பவை அல்ல.ஆனால் இவ்வாறான பூனைகளையே தனது போதனைகள் மூலமாக எவ்வாறு தாக்குதல் கருவியாக மாற்றுகிறான் என்பதே இங்கே கதையின் மையமாகிறது.
தற்கொலை குண்டுதாரிகளின் மனங்கள் உக்கிரமான ஒன்றாக மாறுவதற்கு, அவர்களுக்கு அளிக்கப்படும் போதனைகளே காரணம். இங்கே சஹரானின் போதனைகள் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டன என்பதே விவாதமாகிறது.பொதுவாக வேத நூல்கள் அல்லது மறை நூல்கள் யாவுமே சர்ச்சையை கொண்டு வருவன. ஏனெனில் இவற்றில் எதுவுமே ஆதியில் இருந்த வடிவமாக இருப்பதில்லை. காலத்திற்கு காலம் வெவ்வேறு பிற்சேர்க்கைகளை கொண்டவை அவை. தீவிரவாதிகள் மத நூல்களில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளை தங்கள் போதனைகளுக்கு பயன்படுத்துவது ஒன்றும் பரரகசியமல்ல.
இறைவனின் பெயரில் உயித்தியாகம் செய்வோருக்கு, மறுமையில் 72 “தேவகன்னியர்” என்ற விடயமும் விவாதத்துக்குரிய ஒன்றுதான். இனி, இந்த கதையில் சர்ச்சைக்குள்ளக்கும் இடங்களுக்கு வருவோம்.
1.போதனை வழங்கும் புத்தகத்தை, அதாவது தேவகன்னியர் தொடர்பில் குறிப்பிடும் பு த்தகத்தினை சஹரானின் இரகசிய நூல் என்றே இந்த கதையில் குறிப்பிடப்படுகிறது. அது “திருமறை” என்ற ரீதியில் பொருள் கொள்ளப்படவில்லை. உருவகம் என்ற வகையில் இது சரி. கதையின் இறுதி வரையில், சஹரான் என்ற பிரபலமான பெயர் தவிர்த்து ஏனைய விடயங்கள் உருவகரீதியிலேயே புனையப்பட்டு இருக்கின்றன. ஆனால் கதையின் இறுதியில் ஒரு பாதிரியார் வருகிறார். இந்த இடம் உருவகத்திலிருந்து யதார்த்த நிலைக்கு தாவும் இடம்.
அவர் துண்டிக்கப்பட்ட ஒரு கையினையும், அதில் ஒரு தேவ புத்தகத்தையும் காண்கிறார். தேவ புத்தகம் என்பது “மறை நூலுக்கு “ சமமான பதமே. இதையும் விட கிறிஸ்தவர்கள் தங்களின் பிரார்த்தனைக்கு அவர்களின் தேவ புத்தகத்தையும் எடுத்து செல்வது வழக்கம். எனவே அந்த கை யாருடையதாயும் அமைய சாத்தியம் உண்டு. ஆனால் தொடர்ச்சியாக, அந்த பாதிரியார் செய்யும் “கடவுளே இந்த பாவிகளை மன்னியுங்கள்” என்ற பிரார்த்தனையே கதையில் பெரிய திருப்பம் மற்றும் சர்ச்சையை கிளப்பி விடுகிறது. இந்த இடத்தினை உருவக ரீதியில் கையாண்டு இருக்கலாம் என்ற எண்ணமே என்னிடத்தில் உண்டு.
2.மரணத்தின் பின்னர்அந்த ஆத்மாக்கள், தேவகன்னியரை அடையவில்லை என்று காட்டப்படுகிறது.இது அறம் என்ற ரீதியில் சரி. ஆனால் இந்த இடத்தில், அறமா அல்லது நம்பிக்கையா என்ற கேள்வி எழுகிறது.
மொத்தத்தில் இந்த கதை முழுதுமாக உருவகம் சார்ந்து எழுதப்பட்டு இருப்பின் சர்ச்சைகள் எழுந்திராது என்பதே எனது கருத்து.
09.கோதுமை முகங்கள் : செந்தூரன் ஈஸ்வரநாதன்
சிறிய வயதிலிருந்தே மனப்பிறழ்வுக்கு உள்ளான ஒருவனின் கதை. திடமான ஒரு தொடக்கமும் முடிவுமற்ற கதை. கதைச்சொல்லியின் மனப்பிறழ்வுக்கு ஏற்ற விதத்தில் கதை கூறப்படுகிறது.
அம்மாவின் தனிப்பட்ட வாழ்வின் சிக்கல்களும் முடிவுகளும் எவ்வாறு குழந்தைகளை பாதிக்கின்றன என்பதை, இலங்கையின் இனப்போரின் பின்னணியில் கூறிச்செல்லும் கதை இது. கதைச்சொல்லியின் மனப்பிறழ்வின் ஆரம்பம் தனது தாயுடன் தன்னை ஒப்பிடுவதில் இரு ந்து ஆரம்பிக்கிறது. அம்மாவின் துணை தேர்வு நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த பின்பும் தொடர்வதுடன், இவனின் மன பிறழ்வே வாழ்வில் வந்த காதலியும் இடைநடுவில் பிரிய காரணமாகிறது.
தனது சிக்கல்களை முகங்களை வரைவதன் மூலம் தீர்த்துக்கொள்ளும் இவன், முகங்களுக்கு பிராத்தியேக நிறங்களையும் கூட தருகிறான். பிரதானமாக இரண்டு நிறங்கள் கோதுமை மற்றும் மஞ்சள்.
கதையின் சிக்கல்கள் பல தடவைகள் வாசித்த பிறகும் பிடிப்படுவதாயில்லை. வரைதலின் மூலமும் நிறங்களின் மூலமும் கதாசிரியர் சொல்ல வரும் விடயங்களும், கதை நிகழும் நிலங்கள் குறித்தான தெளிவற்ற குறிப்புக்களும் இது போன்ற கதைகள், சிலருக்காக எழுதப்படும் கதைகளாக்கி விடுகின்றது. மன்னிக்கவும், அந்த பட்டியலில் நான் இல்லை.
10.சிவப்பு நிற உதட்டு சாயம் : டானியல் ஜெயந்தன்
போர் முடிவில் கைவிடப்பட்ட மூன்று பெண்களின் கதை இது. ஒரு ஆச்சியும் இரண்டு குமரிகளும். ஆனால் மூவருமே உறவில்லை. அநாதாரவான அபலைகள் என்ற பதமே மூவரையும் இணைததது. சமூகத்தில் இவர்கள் சார்ந்த சமூகம் தீண்டாமைக்கு உள்ளா கியதும் கூட. வறுமை கூட வருகிறது;வயிற்று பசி போக்கும் வழியாக, இவர்கள் தேர்வு செய்யும் பாதை சமூகத்தின் பார்வையில் பிறழ்வானது. ஆனால் “எது தேவையோ அதுவே அறம்” என்ற ரீதியில் அறத்தின்பாலானது.
நமது பாரம்பரியத்தில் ஆச்சி அல்லது பாட்டி என்பதற்கு பிரத்தியேகமான அர்த்தங்கள் உண்டு. குடும்பம் அல்லது சமூகத்தின் மூத்த உறுப்பினராக, தனது இளைய தலைமுறையை கட்டமைக்கப்பட்ட அறத்தின் வழியே நாடாத்தும் பொறுப்பு இந்த முதிய தலைமுறையின் பொறுப்பு. ஆனால் கதையில் வரும் சுந்தரி ஆச்சி தனது பேத்தி வயதா னவர்களை “சரியான பாதையில்” நடாத்தும் நிலையில் இல்லை. ஏனெனில் ஒவ்வொருவர் வயிற்றுப்பாடும் அவரவரை சார்ந்ததே.
குமாரியின் “உழைப்பில்” ஓடும் குடும்ப வண்டியில் இளையவளான நிஷாவின் சிறிய ஆசை என்பது, அக்கா போலே தானும் சுதந்திர பிறவியாக மாற வேண்டும் என்பதே. வறுமையை வெல்ல அக்கா குமாரியின் வழியில், இறுதியில் அவளும் பயணிக்க வேண்டிய நிலையினை சமூகமே அவளுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறது.
இந்த கதை சொல்லாத சேதிகள் பலவற்றால் நிறைந்துள்ளது. அவற்றை குறியீட்டு நிகழ்ச்சிகளாயும் கொள்ள முடியும்.
1.வீட்டின் அருகில் கேட்கும் பல்சரின் சத்தமும், தொடர்ச்சியாக ஆச்சியும் நிஷாவும் குமாரியை வீட்டில் விட்டு விட்டு நகருக்கு செல்லுதல்.
2.குமாரிக்கான பிரத்தியேக அறையும் அங்கிருக்கும் பொருட்களும். குமாரி வெளிநாடு சென்றதும் ஆச்சி அந்த பொருட்களை நிஷாவிடம் தருவது.(அடுத்த வாரிசுக்கான அங்கீகாரம் )
3.வீட்டுக்கு வரும் மகேசனுக்கு ஆச்சி சில பனங்கிழங்குகளை தந்து, “சாப்பிட்ட ருசியில் மீண்டும் மீண்டும் வருவீர்கள்” என கூறுவது.
4.குமாரி ஒரு ஆணுடன் தனித்திருக்கையில், நிஷா கேட்கும் அலறல் சத்தம்.
5.நிஷாவை தனிமையில் விட்டு விட்டு ஆச்சி மட்டும் நகருக்கு செல்லுதல்.
சில விடயங்களை குறியீட்டு நிகழ்வுகள் மூலமாக சொல்கையில் கதைக்கான பெறுதி அதி
கரிக்கிறது. இந்த கதையில் இவ்வாறான உத்தி கதைக்கான சிறந்த எடுத்துரைப்பு முறையாகிறது.
மூன்று குரங்கு பொம்மைகளின் கருத்துருவங்கள் எல்லா காலங்களிலும் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. எது தேவையோ அதுவே அறம் என்பதை ஒவ்வொருவர் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களே நிர்ணயம் செய்கின்றன.
(இந்த தொகுதியின் குறிப்புகள் நூலில் இடம்பெற்ற ஒழுங்கின் பிரகாரமாகவே எழுதப்படுகின்றன)
(தொடரும்.. )
இமிழ்
ஈழ – புலம்பெயர் சிறுகதைகள்
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
2024
51 இலக்கியச்சந்திப்பு வெளியீடு
திருஞானசம்பந்தன் லலிதகோபன் முகநூலில் இமிழ் தொகுப்பு குறித்து எழுதியவை.