சென்னையில் கருப்புப் பிரதிகள் ஏற்பாடு செய்த ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீதான விமர்சனக் கூட்டத்தில் (05.05.2024) ஆய்வாளர் கண்ணன்.எம் அவர்களுடைய விமர்சனங்களைப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் என்ன ‘விமர்சன’ முறையோடு இருந்தேனோ அதே நோக்கோடு அட்சரம் பிசகாமல் ஒரு தொகுப்பை விமர்சித்திருக்கிறார். காலப்பயணம் செய்து என்னையே – நான் பார்த்ததுபோல இருந்தது. என்னுடைய நல்லூழ் ஒரு சில வருடங்களுக்குள்ளேயே என் தேடலின் பாற்பட்டு, குற்றம் கண்டுபிடிக்கும், படைப்புகளில் இல்லாததைத் தேடும் விமர்சன முறையிலிருந்து வெளிவந்து விட்டேன். அந்த முறைமைமீதான போதாமைகளை வாசிப்பின் வழி உணர்ந்ததால் நிகழ்ந்த உருமாற்றமது. அதனால்தான், தோழர் நீலகண்டன் (கருப்புப்பிரதிகள்) அதீத எதிர்பார்ப்பும் அறச்சீற்றமும் பொங்கும் என்னுடைய பழைய விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடக் கேட்கும்போதெல்லாம் தயங்கி, பிற்போட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆய்வாளர் கண்ணனுடைய விமர்சனத்தில் உள்ள அடிப்படைப் பிழை, ‘இமிழ்’ தொகுப்பில் என்னவெல்லாம் இல்லை என்பதிலிருந்து அவரது ‘நிராகரிப்பு விமர்சனம்’ தொடங்குவது. உண்மையில் அவை முடிவில் சுட்டிக் காட்டப்பட வேண்டியவை. விமர்சனமாக அல்ல, ஆலோசனையாக, பரிந்துரையாக ஒரு விமர்சகரால் அவை அடிக்கோடிடப்படலாம். அதற்கு மேல் படைப்பாளர்களுக்கு, கோட்பாட்டு விமர்சகர்களால் நிர்ப்பந்தங்களை அளிக்க முடியாது. அவற்றை நல்ல விமர்சனங்களாகப் பொருட்படுத்த வேண்டியதுமில்லை. நம் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் படைப்புகளையே வாசிக்க, விமர்சிக்க முடியும். அதற்கு மேல் ஒரு விமர்சகர் கோருபவை அந்த விமர்சகரின் அரசியல், கருத்தியல், கோட்பாட்டுப் பீடத்தில் எழுந்தருளியிருக்கும் எளிமையான எதிர்பார்ப்புகள் மட்டுமே அல்லது அவர்கள் தாங்கள் எவை படைப்புகள் எனக் கருதும் சில எளிமையான கருதுகோள்கள் மட்டுமே. அந்த வகை எதிர்பார்ப்புகள் ஒரு பெருந்தொகுப்பை விமர்சிக்கப் போதுமானதல்ல. அப்படியான ‘எளிமையான’ எதிர்பார்ப்புகள் படைப்பாளிகளை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. அந்த விமர்சகர்கள் ஒரு படி கீழிறங்கி நின்று தங்கள் பரிந்துரையை முன்வைக்கலாம் அவ்வளவுதான் இந்தவகை விமர்சகருக்கான இடம்.
முக்கியமாகக் கண்ணன், எடுத்த எடுப்பிலேயே ‘இமிழ்’ தொகுப்பில் இருக்கும் ஒரு கதை கூட சிறுகதை என்ற வடிவினுள் அல்லது அவருடைய சிறுகதைகள் எனும் வரையறைகளினுள்ளே வராதவை என்கிறார். கதைகள் மேலோட்டமான சித்திரிப்புள்ள, ஐம்பதுகளின் மு.வரதராசன் வகையினரின் சிறுகதைகள் போன்ற சொல் முறை, உள்ளடக்கமுடையவை என்பது அவரது விமர்சன நுண்நோக்கு. உலக இலக்கியங்களில் எந்த மொழிக் கதைக்கும் இணை வைக்கக் கூடிய சமதையான கதைகள் தமிழில் உண்டு, ஆனால் அந்தச் சிகர சாதனைகளின் சிறு தடங்களும் தெரியாதவர்களால் எழுதப்பட்டிருக்கும் கதைகளின் தொகுப்பு இமிழ் என்பது அவரது முத்தாய்ப்பான விமர்சனம். அதாவது தமிழின் கடந்த காலச் சாதனைகள், அடைவுகளைத் தெரிந்து கொள்ளாமல் செய்யப்பட்டிருக்கும் குழந்தைத்தனமான பரிதாபத்திற்குரிய முயற்சிகள் என்கிறார். கூடவே புதிய தலைமுறை ஈழப் படைப்பாளிகள் தங்களுக்கான கதை சொல்லல் மொழியைத் தமிழகத்திலிருந்து பிரதி எடுக்கிறார்கள், அவர்களைப் போலச் செய்ய முயல்கிறார்கள். அப்படி அவர்கள் பிரதியெடுக்கும் தமிழகப் படைப்பாளிகள் (சுந்தர ராமசாமி,…) மேம்போக்கானவர்கள் என்பது இன்னொரு தீவிர குற்றச்சாட்டு. இந்தக் கருத்தில் ஈழம் தனித்துவமான சொல்முறை, களங்களுடன் கூடிய படைப்புகளைக் கொண்டிருப்பது போலவும், அதை இளைய தலைமுறை ‘போலச் செய்து’ பிரதியெடுப்பதால் சீரழிப்பது போலவும் ஒரு தொனி இருக்கிறது. அது கடைந்தெடுத்த மாயை.
ஒப்பீட்டளவில் தமிழக இலக்கியச் சூழல் தரமான விவாதக் களமாகவும், நல்ல படைப்புகளைக் கவனப்படுத்தும் இலக்கிய வட்டங்களுள்ள சூழலுமாக இருக்கிறது. இலக்கியத்திற்கு அவசியமான புழங்கு வெளிகள், சிறு அமைப்புகள், செயற்பாட்டுக் களங்கள் உள்ள பொறாமைப்பட வைக்கும் வளமான கலவையாகவே தமிழகம் எப்போதும் இருக்கிறது. சயந்தனின் ஆறாவடு, குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, ம.நவீனின் பேய்ச்சி, யதார்த்தனின் நகுலாத்தை, ஏன் இமிழ் உட்பட்ட நல்ல படைப்புக்களுக்கான உடனடிக் கவனமும், வாசிப்பும், விமர்சனமும், இடித்துரைப்பும் அங்கிருந்தே ஒட்டு மொத்த தமிழ்ச் சூழலுக்கும் கிடைக்கிறது. கலங்கரை விளக்கின் ஒளிப்பாய்ச்சல்போல. கூடவே ஒரே மொழிச் சூழலில் இப்படியான தொடர்ச்சிகள், விடுபடல் நிரப்பல்கள் எப்போதும் நிகழ்பவை. ஈழ – தமிழகப் பகுப்பு எல்லாம் ஒருவகை வாசக ஏற்பாடுகள் என்றே கருதவேண்டும். ஒரு மொழிச் சூழலை அப்படிப் பகுத்து விமர்சிப்பது ஏற்புடையதுமல்ல. ஈழ இலக்கியச் சூழல் சுயம்புவான தனிப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதுமல்ல. எப்போதும் அது தமிழகச் சூழலின் பகுதியாக இருந்து கொண்டு உண்டும் கொடுத்தும் ஊடாடியபடியுமே இருக்கிறாது. தேச உருவாக்கக் கனவுள்ளவர்கள் இப்படியான அரசியல் பிரிப்பை எப்போதும் நிகழ்த்தியபடி இருப்பார்கள். இலக்கிய வாசகருக்கு அதுவொரு பொருட்டே இல்லை. அது தமிழின் இன்னொரு வட்டார வழக்கு. இலக்கியத்தில் அப்படியான தமிழக முன்மாதிரிகளின் தொடர்ச்சியாக இருப்பதில் என்ன குறை அல்லது விமர்சனமிருக்க முடியும்? இலக்கியம் அப்படி வாழையடி வாழையாகத்தானே கைமாறிச் சென்று கொண்டிருக்கிறது. வெறும் அறுபது வருட தேச எல்லைகளின் கோடுகள் இலக்கியத்திற்கு ஒரு தடையா என்ன? ஒருவேளை, தனக்கு உவப்பானவர்களின் தொடர்ச்சியாக நாங்கள் மீந்திருந்தால் ஆய்வாளர் கண்ணனுக்கு விமர்சனம் இருந்திருக்காதுபோல. ஈழம் மட்டுமல்ல, மலேசிய, சிங்கப்பூர் எழுத்துகளும் தமிழகத்தின் தொடர்ச்சியையே கொண்டிருக்கின்றன.
தமிழகச் சூழலில் புதுமைப்பித்தனை, இமிழ் கூட்டத்தில் இன்னொரு பேச்சாளராக வந்திருந்த அழகியபெரியவனை முன்மாதிரிகளாக, நல்ல கதைகள் எழுதியவர்களாகச் சுட்டும் அவர் ஈழச் சூழலில் டொமினிக் ஜீவா, ஓரளவு கே.டனியல் கூடவே மு.தளையசிங்கம், பிரமிள் ஈறாகச் சொல்லி அழுத்தமாக ரஞ்சகுமாரை முன்வைக்கிறார். மேற்குறிப்பிட்டவர்களின் தரத்துக்கு அல்லது தனித்துவமான ஈழச் சொல்முறைக்கு கொஞ்சமும் கிட்ட வராத, மொழி கைகூடாத, எல்லாம் திகட்டத் திகட்டச் சொல்லி முடிக்கப்பட்ட, வாசகருக்கு வசிப்பிற்கு இடம் இல்லாத கதைகள் என்பது அவரது திரண்ட கருத்து. கூடவே இலங்கையின் சமகாலப் பொருளாதார வீழ்ச்சியோ, பட்டினியோ, அரசின் அரசியல் நெருக்கடிகளோ ஒரு கதையில் கூடப் பதிவாகவில்லை என்பது அவரது அறச்சீற்றமான விமர்சனம். புலம்பெயர்ந்தோர் எழுதிய கதைகள் அவர்கள் வாழும் நாடுகளுடனான பண்பாட்டு ஊடாட்டம் இல்லாத இன்னும் ஊர் குறித்த நினைவேக்கங்களுள் கட்டுண்டு கிடக்கின்றன என்றும், கூடவே கதைகள் தீவிரமான வாழ்வனுபவம் இல்லாமல் வெறும் கேள்வி ஞானமாகவே பதிவாகியிருக்கின்றன என்கிறார்.
அதாவது, படைப்பாளர்களின் தீவிர வாழ்வனுபவத்திற்கு உரையின் பல இடங்களிலும் அழுத்தம் கொடுக்கிறார். இதுவொரு கடந்தகால நவீனத்துவ நோக்கு மட்டுமே. தீவிரமான அனுபவங்கள் நல்ல படைப்புகளாகும் என்றோ, அல்லது மேம்போக்கான கேள்வி ஞானம் ஆழமில்லாத படைப்புகளாகும் என்பதற்கோ எந்த உத்தரவாதமுமில்லை. இரண்டிற்குமே மிக நல்ல உதாரணங்கள் உலக இலக்கியப்பரப்பில் இருக்கின்றன.
மிகத் தீவிரமான அனுபவங்கள் ‘சாதாரண’ கதைகளாகியிருக்கின்றன. ஈழப் போர்ச்சூழலின் நேரடி அனுபவங்களிலிருந்து எழுதப்பட்ட இன்னோரன்ன கதைகள் அந்த வகைக்குள் வருபவைதான். அநேகமாகக் கடந்த 400 – 500 ஆண்டுகளில் தமிழ் மக்களுள் அதிதீவிரமான வாழ்க்கைச் சூழலும், நெருக்கடியையும் மூன்று சகாப்தங்களாக அனுபவித்தது ஒப்பீட்டளவில் ‘ஈழத் தமிழ்’ சமூகமாகத்தான் இருக்க முடியும். ஆனால் அங்கிருந்து வெளிவந்த படைப்புகளில் பெரும்பாலானவை அந்த நேர் வாழ்வு அனுபவத்தின் சூட்டைக் கொண்டிருப்பதில்லை. ஏன் அந்தத் தீவிர வாழ்வனுபவம் மகத்தான படைப்புகளாகவில்லை? தீவிர வாழ்க்கைச் சூழலை அனுபவித்த, அதனைப் பெரும் வடுக்களாக சுமந்தலையும் ‘பரிதாபத்திற்கு’ உரிய அந்தச் சமூகத்தால் ஏன் அவர்களடைந்த வாழ்வனுபவத்தின் தீவிரத்தையும், வெப்பத்தையும் தங்கள் படைப்புகளுள் கடத்த முடியவில்லை? அவற்றுள் கழிவிரக்கம் கோருபவை என்பதிலிருந்து மேலெழுந்து படைபூக்கமும், கலைவெற்றியும் கைகூடிய படைப்புகளை இரு கை விரல்களிலும் எண்ணிவிட முடியும்.
தீவிர வாழ்வனுபவமோ, அல்லாதவையோ படைப்பாளியின் புனைவறிவில் படைப்பூக்கமான கேள்விகளாக வேண்டும். பின் அவை தீவிர வாழ்வனுபவங்கள் போலவே படைப்பில் வெளிப்பட முடியும். தீவிரமான வாழ்வனுபவம் ஒருபோதும் நல்ல படைப்புக்கான முன்நிபந்தனையாக இருக்கவே முடியாது. ஆக, தீவிர வாழ்வனுபவம் அல்ல இங்கு பிரச்சினை. கண்ணன் தன்னுடைய விமர்சன அளவுகோலாக அதை எப்படிக் கைக்கொள்கிறார் என்பதும், அதை எப்படித் தொகுப்பிற்கு முன் வரையறை செய்து பிரயோக்கிக்கிறார் என்பதுமே இங்கே கேள்விக்குரியதாகிறது. அவருடைய முன்வைப்பின்படி உண்மையில் தீவிர வாழ்வனுபவங்களை நேரடியாக அனுபவித்த ஈழத்தமிழ்ச் சமூகத்தின் படைப்புகள் தான் மிக நல்ல படைப்புகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கண்ணன் ஈழத்தமிழர் கதைகளின் அனுபவங்களைக் கேள்விக்குட்படுத்தி தான் கொடுக்கும் அனுபவ வாதத்தின் அழுத்தத்திற்கும் முரணாக அவற்றை நிராகரிக்கிறார். இப்படியான அடிப்படைகளற்ற முரண்களே அவருடைய உரை முழுவதும் நிரம்பியிருக்கிறது. அவர் ஆய்ந்திருக்க வேண்டியது, ஈழத்தமிழர்களின் தீவிர வாழ்வனுபவம் ஏன் கலைவெற்றி கூடிய படைப்புகளாகவில்லை என்பதையே.அந்த நோக்கில் சிந்தித்திருந்தால் இந்த மட்டையடி விமர்சனம் செய்திருக்க மாட்டார். அவர் எதிர்பார்ப்பதற்கு மேலான வகைகளில் கதைகளும், வாழ்க்கைச் சூழலும் வாழ்வனுபவங்களும் தொகுப்பில் அவருக்குப் பிடி கிடைத்திருக்கும். அதற்கு இறுக்கமான கற்சுவர் போன்ற கோட்பாட்டு முன்முடிவுகளை அவர் பெருந்தன்மையுடன் கழற்றி, கைவிட்டு இத்தொகுப்பை அணுகியிருக்க வேண்டும்.
கண்ணனுடைய உரையை எப்படித் தொகுத்துப் பார்த்தாலும் சிறுகதை பற்றிய அவருடைய வரையறையை எதிர்பார்ப்பைச் சரியாக வகுத்துக் கொள்ள முடியவில்லை. இது, அவருடைய புகைமூட்டமான அடிப்படைகளை தெளிவுபடுத்தாத அணுகுமுறையால் விழைந்திருக்கும் இடர். போகிற போக்கில் அடிப்படையில் முரணுள்ள படைப்பாளிகளை முன்வைக்கிறார்.
புதுமைப்பித்தன் தமிழின் முதுபெரும் முன்னோடி, தமிழ்ச் சிறுகதைகளில் பேரடியை எடுத்து வைத்தவர். அவரது அந்த முதுபெரும் பாய்ச்சலே அவரின் தொடர்ச்சியாக எழுதும் பலருக்குச் சவாலாகவும், அவரைக் கடக்க முடியாத இடரையும் கொடுக்கிறது. நம் வரமும், சாபமுமாக அவரே இருக்கிறார். அழகியபெரியவனின் கதைகள் எளிமையான யதார்த்தவாதக் கதைகள். அவருடைய சித்திரிப்பும், கதைகளும் மிகப் பலகீனமானவை. தலித் அனுபவ நீட்சியாக மட்டுமே அவற்றுக்கு மதிப்பும், இடமும் இருக்கிறது. அவரைவிட அந்தத் தளத்திலிருந்தே மிக முக்கிய கதைகளை பூமணி, சோ.தர்மன், இமயம் அடைந்திருக்கிறார்கள். தலித் அனுபவம் என்ற இடத்திலிருந்து அவை மேலெழுந்து விட்ட அழுத்தமான படைப்புகளவை. ஆக, கண்ணனுடைய இந்த இணைப்பே மிகக் குழப்பமும், அபத்தமுமானது.
மு.தளையசிங்கம், பிரமிள் தமிழின் நவீனத்துவர்கள். அவர்களது கதை சொல்லல் நவீனத்துவக் கதை சொல்லலின் அநேக இயல்புகளின் முன்மாதிரியாகவும் உள்ளவை. இருண்மையாகச் செதுக்கிச்செதுக்கிச் சொல்லுதல், பூடகமாகச் சித்திரித்தல், வெளிப்படையாக அல்லாமல் அடக்கமாக எடுத்துரைத்தல் போன்ற இயல்புகள் வெளிப்படக்கூடியவை. கூடவே நவீனத்துவத்தின் எல்லையுள் சிறையுண்டிருப்பவை.
டொமினிக் ஜீவா,கே. டானியல் படைப்புகளைப் பற்றிப் பேசும் போது பலருக்கும் ஓர் இடர் இருக்கிறது. அவர்களது படைப்புகளை எப்படி மதிப்பிடுவது, தமிழ் இலக்கியத்தில் அவர்களின் படைப்புக்கான இடம் என்ன என்பதில் பலரும் ஒரு வித “மழுப்பல்” மனநிலையே இருக்கிறது. துல்லியமாக வரையறுத்துச் சொல்வதைத் தவிர்க்கிறார்கள். டொமினிக் ஜீவா, கே.டானியலின் கதைகள் முற்போக்கு / சோசலிச யதார்த்தவாதக் கதைகள்.
டொமினிக் ஜீவாவின் கதைகள்:
//டொமினிக் ஜீவாவின் ஆரம்பகாலச் சிறுகதைகளின் எல்லைகள் குறுகியவை. சிறுகதைகளின் குறுக்கம் என்பது ஒருவகையில் முற்போக்கு யதார்த்தவாதச் சிறுகதைகளின் போதாமைதான். அவை கனவையும், சமூக மாற்றத்தையும் முன்வைப்பவை. அதாவது சமத்துவ சமுதாயம் நோக்கிய கனவைப் படைப்புகளில் கற்பனை செய்பவை. அவரது கதைகளில் அந்த முற்போக்குப் பார்வை என்பது எளிமையான மனிதாபிமானமாகவே வெளிப்பட்டிருகிறது. சமூக அநீதியை நோக்கிய ஒரு மனிதாபிமானத்தின் குரலாக. இன்று அவற்றை மீள வாசிக்கும் போது காலத்தால் சற்றே பின்னகர்ந்துவிட்ட முற்போக்குக் கதைகளாகவே இருக்கின்றன. அவர் எழுத வந்த காலத்தில் சமூக அநீதிக்கு எதிரான வலிமையான குரல்களாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவற்றை இன்று முற்போக்கு யதார்த்தவாதத்தின் எல்லையுள் இருந்தே இன்று மதிப்பிட வேண்டியிருக்கிறது. த.ஜெயகாந்தன், ராஜேந்திரசோழன், சா.கந்தசாமி போன்றவர்கள் அடைந்த நுட்பத்தை அடையமுடியாமல் மனிதாபிமானத்தின் எல்லையுள் நின்றுவிடுகின்றன ஜீவாவின் அதிகமான கதைகள். கதைகளில் வெளிப்படும் முரண் என்பதும் வர்க்க முரணும், சாதிய முரணும் தான்.//
– தர்மு பிரசாத்
(பார்க்க : டொமினிக் ஜீவா தலித் எனும் தன்னுணர்வு.)
கே.டானியலுக்கான இலக்கிய இடம் அவருடைய பெரு நாவல்களிலேயே இருக்கிறது. அதுவும் அவர் யாழ்ப்பாணச் சாதியச் சமூகத்தைச் சித்திரித்த நுண்மையால் உருவாகி வந்திருக்கும் இடமே. அவரளவுக்கு யாழ்ப்பாணச் சாதிய அதிகார அடுக்கை நுட்பமாகச் சித்திரித்தவர்கள் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லிவிட முடியும். அவர் சித்திரித்தது இன்றைய யாழ்ப்பாணச் சமூகம் அல்ல. இந்தச் சமூகம் உருவாகி வர முன்னர் நேரடியான சாதிய வேறுபாடுகளுடன் இருந்த கொடூர அடக்கு முறையும், அடிமை – குடிமை சேவைகளுடனும் இருந்த சமூகம். அவர் எழுதிய காலத்தில் நிகழ்ந்த பெரும் இடதுசாரிப் போராட்டங்களால் உருவாகி வந்ததே இன்றைய யாழ்ப்பாணச் சமூக அடுக்கு. அது தன் பழைய சாதியப் பெருமைகளை, வெளிப்படையான சாதிய வேறுபாடுகளை, ஒடுக்குமுறைகளை இன்னும் நுட்பமாகத் தகவமைத்துக் கொண்டு பெரும் நுண்ணமைப்பாகத் தன்னை திரட்டிக் கொள்வதற்கும் ‘முந்தைய நிலை’. ஆக, ஒருவர் கே.டானியலின் இடத்தை அப்படியாகத்தான் புரிந்து கொள்ள முடியும். அவரது படைப்புகளிலே `முந்தைய நிலை` சமூக அதிகார அடுக்குகள் நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவரது படைப்புநோக்கு சோசலிச யதார்த்தவாத நோக்குத்தான். சமூக மாற்ற நோக்குத்தான். அவர் சாதிய அதிகார அமைப்பை மார்க்ஸியக் கண்ணோட்டத்தோடு பொருளாதார வர்க்க முரணாகச் சுருக்கிவிடாமல் – பல இடதுசாரி எழுத்தாளர்கள் இன்றுவரை செய்துவருவதுபோல – அப்பட்டமாகவும் மிக நேரடியாகவே ‘நெத்தியடி’ போல சாதி முரணாக உரையாடியதிலேயே அவரது முக்கியத்துவம் இன்றளவும் இருக்கிறது. அது தமிழ்ச் சூழலில் ஒரு முன்னோடி முயற்சி. ஆனால் அவரது படைப்புகளில் வெளிப்படும் கனவு அல்லது சமத்துவச் சமுதாயம் நோக்கிய இலட்சியப்பயணம் கனவாக, இலட்சியமாக மட்டுமே எஞ்சிவிடுவது அவரது படைப்பின் போதாமை. அது சோசலிச யதார்த்தவாதக் கதைகளின் போதாமையும் கூடத்தான். அந்த எல்லையைக் கடந்தவராக தகழி சிவசங்கரப்பிள்ளையைச் சொல்லலாம்.
ரஞ்சகுமார் ‘மோகவாசல்’ என்ற ஒற்றைத் தொகுப்புடன் தீர்ந்து விட்ட படைப்பாளி. அவர் தன்னுடைய கைச்சிறங்கையளவு அனுபவங்களைக் கொண்டு குறிப்பிடத்தக்க ஒரு தொகுப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த வீழ்ச்சி தமிழில் பலருக்கும் நிகழ்ந்ததுதான். அது ஆய்வாளர் கண்ணன் அழுத்தம் கொடுக்கும் `அனுபவவாதம்` சார்ந்த இடரால் நிகழும் ஒன்று. தங்களுக்குக் கிடைக்கும் சொற்பமான அனுபவங்களைக் கொண்டு கணிசமான நல்ல சிறுகதைகளை எழுதிவிடுவார்கள். பின்னர் அப்படியே தீர்ந்து போவார்கள் அல்லது அந்த அனுபவங்களிலேயே திரும்பத்திரும்ப எழுதிக் கொண்டே இருப்பார்கள்.இச்சொற்ப அனுபவவாத அழுத்தத்தின் சூம்பலை நம் நவீனத்துவப் படைப்பாளிகளின் அநேக படைப்புகளில் உணர முடியும். மிகச் சொற்பமான அனுபவத்தளத்தை இருண்மையான, பூடமான, செதுக்கிய மொழியால் திரும்பத்திரும்ப நிகழ்த்தியதே அவர்களின் சாதனை. பின்பு மேலெழுந்து அடுத்த கட்டக் கதைகளை எழுத; படைப்பூக்கம், கற்பனை, வாசிப்பு, கேள்வி ஞானமும் வேண்டியதாகிறது.
அதற்கும் மேலும் ரஞ்சகுமாரின் ‘மோகவாசல்’ தொகுப்பு ஈழ நிலத்துக்குரியதான என்ன தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. சொல்முறையா? கதைக்களமா? விபரிப்பா? இல்லை வட்டார வழக்கா? தொகுப்பின் அநேக கதைகள் யதார்த்தவாதக் கதைகள். தொடக்கம், நடு, முடிவு என்பதாக, சிறுகதைக்கான செவ்வியல் வடிவத்துடன் இருக்கின்றன. ரஞ்சகுமார் காட்டும் ஈரினப் பண்பாட்டுக் களம் மட்டுமே ஈழ நிலத்துக்குரிய தனித்துவமான கூறாக உரையாட முடியும். கபரக் கொயா, கோளறு பதிகம், காலம் உனக்கொரு பாட்டெழுதும், கோசலை ஆகிய கதைகள் தனித்துவமான களத்தைக் கதைக்கருவாகக் கொண்டிருக்கின்றன. அத்தனித்துவம் ஈரினக் கலப்பான பண்பாட்டுப் புலத்தையும் (கபரக் கொயா) மற்றைய மூன்று கதைகளும் விடுதலைப் போராட்டத்தின் தொடக்க கால இலட்சியவாதச் சந்தேகங்களை எழுப்புவதால் உருவாகிவந்த ஒன்றே அல்லாமல் மேலதிகப் படைப்பூக்க, கதை சொல்முறை, கதை வடிவம் போன்ற இலக்கியம் கோரும் தனித்துவத்தையோ, முன்வைப்புகளையோ சிறப்பாகக் கொண்டிருக்கவில்லை. மிகுதிக் கதைகள் தமிழின் பெரும்பான்மைக் கதைகளுடனும் இணை வைக்கக் கூடிய உறவுச்சிக்கல்களையே பேசுகின்றன. அவர் எழுதியதற்குப் பத்துவருடங்களுக்கு முந்தைய தமிழக் கதைகளுடன் அவற்றைக் கலந்து விட்டால் பிரித்தெடுப்பது கடினம்.
ஆய்வாளர் கண்ணன், ஓரளவுக்கு சொல்முறை சித்திரிப்பில் நவீனத்துவ நோக்கையும். உள்ளடக்கத்தில் முற்போக்கு யதார்த்தவாத / தலித் யதார்த்தவாதக் கதைகளின் இயல்புகளையும் எதிர்பார்ப்பதாகவே வரையறுக்க முடிகிறது. இக்குறுகிய ஒற்றைப்படையான அளவுகோல் ஒரு பெரும் தொகுப்பை அளவிடப் போதுமானதல்ல. அப்படியாகக் குறுக்கிச் செய்வது விமர்சனமும் இல்லை. தமிழில் நிகழ்ந்த பின்நவீனத்துவ அலையில் இந்த அனுபவவாதம் முற்றிலும் அடிபட்டுப்போய் இன்னும் விரிவான கற்பனைக் களங்கள், மொழிபுகள் முயற்சிக்கப்பட்டிருந்தன. அந்த வகைக் கதைகளின் தொகுப்பாக இமிழை முன் வைத்து உரையாட முடியும். அதற்கு ஒற்றை இலக்கோ நோக்கமோ இல்லாத ஒரு காலத்தைச் சிறைப்பிடிக்க முயன்ற தன்மையை அதில் அடிக்கோடிட முடியும். தொகுப்பில் பல வகையான கதைகளும் இருக்கின்றன. யதார்த்தவாதக்கதை, மிகுபுனைவுக் கதை, பண்பாட்டு ஆவணமாக எஞ்சும் சித்திரிப்புள்ள கதை, கலைத்து அடுக்கப்பட்ட கதை, நனவிடை தோய்தல், இயல்புவாதக் கதை, உருவகக்கதை உள்ளிட பல வகைக் கதைகளின் தொகுப்பாகவே இமிழ் இருக்கிறது. அவ்வாறன கதைகளை இப்படி ஒற்றை எதிர்பார்ப்புள்ள அளவுகோல்களினூடாக நிராகரிப்பதல்ல ஓர் ‘ஆய்வாளர்’ செய்யக் கூடியது.
புலம்பெயர்ந்தோரின் எழுத்துகள் மீது காட்டமான விமர்சனம் ஒன்று தொடர்ந்தும் பல நல்ல விமர்சகர்களாலும் (நிச்சயமாக, ஆய்வாளர் கண்ணன்.எம். அல்ல) முன் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. புலம்பெயரிகளின் படைப்புகளை பிற சமூகங்களுடனான பண்பாட்டு ஊடாட்டம் நிகழாத ஒரு வகை கடந்தகால, ஊர் நினைவேக்கக் குறிப்புகளாகவே இந்த ‘விமர்சகர்கள்’ வாசிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒருபோதும் இந்தப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களால் ஏன் பிற சமூகங்களுடனான பண்பாட்டு ஊடாட்டத்தைத் தம் படைப்புகளில் வெளிப்படுத்த முடியவில்லை என்பதை ஆய்வதில்லை. உண்மையில் அது ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கான சிக்கல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த சமூகங்களுக்குமான சிக்கலது. அரசியல் புலம்பெயரிகளால் இந்த விமர்சகர்கள் எதிர்பார்க்கும் பாண்பாட்டு ஊடாட்டத்தை ஒருபோதும் நிகழ்த்த முடியாது. அதற்கு இரண்டு முதன்மைக் காரணங்களைச் சுட்ட முடியும்.
ஒன்று; புலம்பெயரிகள் உதிரிகளாக வாழும் புறநகர்ச் சூழல். இரண்டு; அவர்களால் மீண்டும் செல்லவே முடியாத அவர்களது – அவர்கள் குருதி அளித்து மீட்க எத்தனித்த பூர்வநிலம் குறித்த நினைவேக்கம். இந்த நினைவேக்கம் எரித்திரியர்களிலிருந்து ஈழத்தமிழர் வரை நீளக்கூடியது.
நவீன பொருளாதாரப் புலம்பெயரிகளான இந்தியர்களுக்கும் அடித்தள அரசியல் அகதிகளுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. அது இந்தவகை விமர்சகர்களால் ஒருபோதும் கவனங் கொள்ளப்படுவதில்லை. படித்த பொருளாதாரப் புலம்பெயரிகளால் கல்விவட்டங்கள், பல்கலைக்கழகங்கள், வேலை இடங்கள், வாழ்வுச் சூழலில் ஓரளவிற்குப் பிறசமூகங்களின் அன்றாடத்துடன் புழங்க முடிகிறது. அதனூடே அவர்களால் பண்பாட்டு உரையாடலை நிகழ்த்த முடிகிறது. மிக நல்ல உதாரணம், அ.முத்துலிங்கம் கதைகள். ஆனால், அகதிப் புலம்பெயரிகளால் அது முடியாது. அதற்கு அவர்களுக்கு இரு பெரும் தடைகள் இருக்கின்றன. 30-40 வருடங்கள் கடந்தாலும் அத்தடை விலகுவதில்லை. அவர்கள் தாங்கள் மீண்டு செல்ல முடியாத பூர்வநிலம் குறித்த கற்பனையில் விடுபட முடியாதவர்களாகிறார்கள். அதனால் தங்கள் துண்டு நிலத்தை, கலாசாரத்தை, பண்பாட்டை இங்கே பனிக்குளிரில் பதியனிட முனைகிறார்கள். அரிதாகவே அவர்களின் பண்பாட்டு வேர்ப்பிடிப்பும், கிளைபிரிதலும் அந்நிய நிலத்தில் நிகழ்கிறது. அதனால் இன்னும் இறுக்கமான பண்பாட்டுக் காப்பாளர்களாக, அடையாளங்களைப் பேணுபவர்களாக உள்ளொடுங்கிச் செல்கிறார்கள். கூடவே அவர்கள் வாழும் புற நகரச் சூழல் அப்படியான இயல்பான புழங்கு வெளியைக் கொடுப்பதில்லை. பிற சமூகங்களைப் பழிக்காத, சந்தேகத்துடன் அணுகாத புலம்பெயரிகளை காண்பதரிது. அவர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் சமூகங்களுக்குள்ளே ஒடுங்கிக் கொள்கிறார்கள். அகதிப் புலம்பெயரிகளுக்கும் பிறசமூகத்துக்குமான ஊடாட்டம் என்பது பணியிடம் மட்டும்தான். அதுவும் கூட தொடர்பாடலற்ற அடித்தளப் பணிகள் செய்யும் பணியிடங்கள் தான் பெரும்பாலும். அங்கு இயல்பான புழங்கு வெளியென்பது சாத்தியமேயில்லை. பின் அவர்கள் அங்கிருந்து நீங்கி, தன் கற்பனையான பூர்வநிலத்துள் புகுந்து கொள்கிறார்கள். தன்னுடைய புனைவுகளை தன்னால் மீள முடியாத அந்த நிலத்தை மீளமீளக் கனவு கண்டு கொள்கிறார்கள். அதை ஒரு வகைப் பாவனையாகக் காண்பவர்கள் நல்ல விமர்சகர்கள் அல்ல. அவர்களது கேள்வி ஏன் இந்தப் புலம்பெயரிகளால் பண்பாட்டு ஊடாட்டத்தை நிகழ்த்த முடியவில்லை என்பதிலிருந்தே தொடங்க வேண்டும். அப்படி இந்த விமர்சகருக்கு, பண்பாட்டு ஊடாட்டம் தான் வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது அ.முத்துலிங்கம் கதைகள். அவரை விட யார் இந்தப் பண்பாட்டு ஊடாட்டத்தைச் சிறப்பாகக் கதைகளில் கையாண்டவர்?
நவீன அகதிப் புலம்பெயரிகளுடன் ஓரளவிற்கு ஒப்பிடக் கூடியவர்கள் மலேசியாத் தமிழர்கள். நூறாண்டுளின் முன்னர் – குறிப்பாக பிரித்தானிய ஆட்சிக் காலங்களில்- ஒப்பந்தக் கூலிகளாக தோட்ட வேலைக்காக சென்ற அடித்தள மக்கள் எவ்வளவிற்கு பிற சமூகங்களுடன் பண்பாட்டு ஊடாட்டத்தை நிகழ்தியிருக்கிறார்கள். மிகச் சமீபகாலம் வரையுமே அவர்களது படைப்புகள் பிற மலேசியச் சமூகங்களுடனான பண்பாட்டு ஊடாட்டம் இல்லாத, தங்கள் பூர்வ நிலத்தின் நம்பிக்கை, சடங்கு, விழுமியங்களைத் தக்கவைப்பவையாகவே இருந்திருக்கின்றன இருக்கும். கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளின் பின்னர்தான் – மிகச் சமீப காலமாகவே – அவர்களின் புதிய தலைமுறை பிற சமூகங்களை, பண்பாட்டு ஊடாட்டகங்களை தங்கள் படப்புகளுள் கொண்டு வர முயல்கிறது.
கூடவே தற்காலச் சூழலில் இன்னொரு உலகளாவிய நெருக்கடியும் அகதிப் புலம்பெயரிகளுக்கு இருக்கிறது. அதனாலும் அவர்கள் தங்கள் மொழி, சடங்குகள், பழக்க வழக்கங்களை இறுகப்பற்றிக் கொள்கிறார்கள். அந்தத் தீவிரம் புலம்பெயர் நாடுகளிலேயே பிறந்து வளர்ந்த, மேற்கத்தேயக் கல்வி கற்ற அடுத்த தலைமுறைவரை நீளக் கூடியதாக இருக்கிறது. அதற்குச் சமூக பண்பாட்டுக் காரணங்கள் பல இருந்தாலும் பிரதானமானது அபரிதமான உலகமயமாக்கம். அது ஒவ்வொரு சிறுபண்பாட்டுக் கலாசாரக் கூறுகளையும் உண்டு செரித்து பெரும்பான்மையின் கூறுகளாக்க முயல்கிறது. அதில் கணிசமான வெற்றியும் அடைகிறது. அந்த வகை ஆக்கிரமிப்பிற்கு எதிராக அகதிப் புலம்பெயரிகள் தங்கள் அடையாளங்கள், பண்பாடு, சடங்குகளை மூர்க்கமாகத் தக்க வைத்திருக்க முயல்கிறார்கள். அவர்கள் விட்டு நீங்கிய நிலத்திலும் பெரும் பண்பாட்டு அழிப்பு நிகழும் சூழலில் அகதிப் புலம்பெயரிகள் ஒருவகை உள்ளொடுங்கிய பண்பாட்டு இறுக்கத்துள் மூழ்கிச் செல்கிறார்கள். அதன் நீட்சியாகவே அவர்களின் (நினைவேக்க) படைப்புகளை வாசிக்க வேண்டும். அவை வெறும் நினைவேக்கங்கள் அல்ல, தங்கள் இருப்பை, பண்பாட்டை தக்க வைக்கும் கடைசி மூச்சுப் பிடித்தல்களாகவே புனைவுகளில் அவர்களால் ஓர்மையுடன் வெளிப்படுத்தப்படுகிறது.
சித்தாந்தன் கதை ஒருவகை உருவகக்கதை அல்லது திரிந்த உருவகக் கதைகளின் வடிவம் எனலாம். அந்த வகைக் கதைகளின் போக்கை ஈழச் சூழலில் உமா வரதராஜன் ‘அரசனின் வருகை’, திசேரா, இராகவன், சித்தாந்தன் கதைகள் – அம்ருதாவின் புதிர் வட்டம்- தொகுப்பில் இருக்கும் கதைகளில் பார்க்கலாம். எனக்கு இந்த வகைக் கதைகளில் பெரிய மதிப்பில்லை. அது சும்மா பூச்சுற்றல் செய்வது என்பது தற்போதைய எண்ணம். அதற்கு அந்த நிகழ் சூழலில் மட்டும் பொருளும், வாசிப்பும் இருக்கமுடியும் எனத் தோன்றுகிறது. மிக நல்ல கதையாக முன்வைக்கப்பட்ட அரசனின் வருகை இன்று படிக்கையில் உருவகக் கதைகள் என்ற எல்லையுள் வராமல் சித்திரிப்புப் பலத்தால் மட்டும் எழுந்து நின்றிருக்கும் கதையாகவும், சித்திரிப்புகள் கூட உக்கிரமும், வெம்மையும் இல்லாத கவித்துவ மென்மையுள் புதைந்திருக்கும் சொற் திரட்டுகளுமாகவே எஞ்சியிருக்கின்றன. ஆனால் ஈழச் சூழலில் அது வலுவானதும், பலராலும் படித்துச் சிலாகிக்கப்படுவதுமான கதை வடிவம். அதனால் தொகுப்பில் அந்த வகைக் கதையாக இதை இணைத்தோம். அதில் தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றிய விவரணை இருக்கிறது. அதைப் புலிகள் மீதான – குறிப்பாகத் தற்கொலைப் போராட்ட வடிவ- விமர்சனமாகவும் வாசிக்கலாம். ஆனால் அது சஹ்ரானின் பெயர் இருப்பதால் பிழையாகப் படிக்கப்படலாம், படும் என்று அப்போது தோன்றவில்லை. இந்திய, உலகளாவிய இஸ்லாமோபோபிய மனநிலையில் அதைத் தவிர்த்திருக்கலாம் அல்லது வேறு தலைப்பில் (பிரபாகரனின் பூனைகள்) பிரசுரித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் அதில் கண்ணன்.எம். சொல்வதுபோல இஸ்லாமியப் பொதுமைப்படுத்தல் இல்லை. உண்மையில் அதில் வெளிப்பட்டிருப்பது உருவகக் கதைகளின் போதாமைதான். சஹ்ரான் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் ஏகபிரதிநிதியோ, முன்வைப்பாளரோ அல்ல. அவர் இஸ்லாமிய அடிப்படைவாத நம்பிக்கைகளுடன் இருந்த ஒருவர். அதற்காகத் தற்கொலைத் தாக்குதலையும் நடத்தினார். கதையில் சித்திரிக்கபடுகிறது அவ்வளவே. சஹ்ரானின் பெயருடன் கதை ஆரம்பிக்கும் போதே அது அவருடைய தனிப்பட்ட ‘அடிப்படைவாத’ நம்பிக்கைகளுடன் தான் உரையாட, உருவகப்படுத்த விழைகிறது. கதைத்தலைப்பிலேயே மிகத் தெளிவானதொரு கோட்டைக் கீறியே சித்தாந்தன் உருவகக் கதையைத் தொடங்குகிறார். ஆக, இதை முஸ்லீம்களுக்கு எதிரான பொதுமைப்படுத்தலாக வாசிப்பதென்பது ஈழ நிலத்திற்கே உரிய ஒருவகை அரிய அரசியல் கோட்பாட்டு நோய்க்கூற்று நிலை. அது ஆய்வாளர் கண்ணனிடமும் தொற்றியிருக்கிறது. வாசுமுருகவேலின் ‘ஜஃப்னாபேக்கரி’யை – நாசிபேக்கரி எனச் ஷோபாசக்தி எழுதிய கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன். இரண்டுக்குமான வேறுபாடு துல்லியமானது. ஜஃப்னா பேக்கரி எதார்த்தவாதக் கதை. அது பொதுமைப்படுத்தலையும், அநீதியின் நியாயப்படுத்தலையும் எதார்த்தச் சித்தரிப்பினூடே செய்ய நாவல் முழுவதும் பரிதாபமாக முயன்று கொண்டே இருக்கிறது. அந்நாவலின் அடிப்படைக் கேள்வியே ஒரு குறுங்குழுவின் செயல்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் எப்படி விடுதலைப் புலிகளால் ஓரிரவில் அவர்களது பூர்வ நிலத்திலிருந்து ஆயுதமுனையில் வெளியேற்ற முடியும் என்பதாகவே இருந்திருக்க வேண்டும். அதுவே ஒரு நல்ல நாவலுக்கான வலுவான அடிப்படை வினாவாக இருந்திருக்க முடியும். அந்தக் கேள்வியை அவரால் நாவலின் உள்ளயோ வெளியிலோ எழுப்ப முடிந்திருந்தால் அந்த நாவல் விடுதலைப் போராட்டம், இனக்குழு, தான் – பிறன் என்பனவற்றை வரலாற்றில் வைத்து நோக்கியிருக்க முடியும். அதற்கான வரலாற்று நோக்கோ, புனைவாக்கத் திறனோ, அரசியற்பார்வையோ வாசு முருகவேலிடம் இருப்பதற்கான தடயம் அவர் எழுத்துகளில் இல்லை. ஆனால் இந்த வரலாற்று நோக்கு, அரசியற் பார்வை என்பன முன் நிபந்தனைகளோ அல்ல. வாசு முருகவேல் எளிய மனிதாபிமானத்தின் தர்க்கத்துடன் நோக்கினாலே விடுதலைப் புலிகளில் வெளிப்பட்டது, ஒட்டு மொத்த ஈழத்தமிழ் மக்களின் முஸ்லீம் ‘வெறுப்பின்’ திரண்ட வடிவமே என்பதை உணர்ந்திருக்க முடியும். ஆனால் ஜஃப்னா பேக்கரி நாவல் ஓர் ஈழத்தமிழ்ச் சராசரியின் கோணம் மட்டுமேயுள்ள எளிமையான யதார்த்தவாத நாவல். மாறாகச் சித்தாந்தனுடைய ‘சஹ்ரானின் பூனைகள்’ உருவகக் கதை. இரண்டும் நிகழ்த்த, உரையாட விரும்பும் அல்லது ‘கட்டமைக்க’ எண்ணும் உரையாடற் களமும் ஒன்று அல்ல.
இமிழ்
ஈழ – புலம்பெயர் சிறுகதைகள்
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
2024
51 இலக்கியச்சந்திப்பு வெளியீடு
பின்னிணைப்புகள் :
அ.ரமசாமி கட்டுரை : இமிழ் உலக இலக்கியத்துள் நுழையும் முயற்சிகள்
கிரிஷாந் கட்டுரை : வெட்டுக்கிளிகள், தவளைகள், ராட்சத நத்தைகள்