கொடிறோஸ் – பதிப்புரை
கொடிறோஸ் குறுநாவலை வடிவமைப்பு முடித்துப் பிழை திருத்தம் செய்வதற்கு தர்மினிக்கு அனுப்பியபோது அட்டையிலேயே “குறுநாவல்” என்று குறிப்பிட வேண்டுமா எனக் கேட்டார். அவரது சந்தேகத்திற்கும் காரணங்கள் உண்டு. தமிழில் சிறுகதைகள் அல்லாத புனைவுகள் நாவல் என்றே பிரசுரிக்கப்படுகின்றன. அதனால் பலருக்கும் நாவல், குறுநாவல், நெடுங்கதை, தொடர்கதைக்கான வடிவ பேதங்களில் ஓர்மை இருப்பதில்லை. பதிப்பாளர்கள் அவற்றைப் பொருட்படுத்துவதுமில்லை. அட்டையில் நாவல் என்று இருப்பதனால் இதை நாவல் எனச் சொல்கிறோம் என்று “குத்திக்’ காட்டியே விடயம் தெரிந்தவர்கள் விமர்சனக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். அந்தக் குத்திக் காட்டலே ஒரு விமர்சனமாகிவிடுகிறது. இந்தவகை நாவல்களுள் பெரும் விழுக்காடுகள் குறுநாவல்களாகக் கூட கருதமுடியாத போதாமையுடையவை. ஆழமில்லாதவை. ஒற்றைப்படையான கதைசொல்லலுடன் கூடிய நெடுங்கதை என்ற வகைக்குள் மட்டும் வரக் கூடியன. அவற்றின் புனைவு வெளிக்குள் அன்றாடத்தின் சள்ளையான நிகழ்வுகள் அன்றிப் படைப்பூக்கத்தின் தெறிப்புகளையோ, புனைவின் உச்ச சாத்தியங்களை மேவிடத் துடிக்கும் கனவுக் கங்குகளையோ, மொழியின் நுட்பங்களையோ உணர முடிவதில்லை. எளிமையான சித்திரிப்பு மொழிகளும் தேய்வழக்கான உவமைகளும் மட்டும் கொண்டிருப்பன. இவை நாவலெனும் பெருவடிவிற்குள் வருவதற்கு இன்னும் நீண்டதூரம் மொழி வழி, அனுபவங்கள் வழி, பார்வை வழி பயணம் செய்து புடம்போடப்பட வேண்டி இருக்கின்றன.
தமிழில் பக்க எண்ணிக்கை அடிப்படையிலேயே புனைவின் வடிவத்தை வகைப்படுத்திக் கொள்கிறார்களா? என்ற சந்தேகம் உண்டு. அது சந்தேகமில்லை மறுக்கமுடியாத உண்மை என அடித்துச் சொல்வோரும் உண்டு. ஆனால் வடிவம் ஒருபோதும் பக்க அளவு சார்ந்தது அல்ல. புனைவின் உள்ளடக்கமும் அதன் வெளிப்பாடும் சார்ந்தே வகைப்படுத்தப்பட வேண்டும். விரிவான சூழல், வாழ்க்கை சித்தரிப்பு, ஒட்டுமொத்தப்பார்வை, விவாதிக்கும் தன்மை என்று ஒரு வலுவான அடித்தளத்தின் மீது பிரமாண்டமாக நிகழக்கூடிய நிகர் வாழ்வனுபவத்தை நாவல் கொண்டிருக்கும். சிறுகதைக்கான கட்டிறுக்கமும் செறிவும் வேகமாக விபரிக்கும் முறையுடனும் குறுநாவல் இருக்கும். ஆனால் சிறுகதை போல வாழ்வின் ஒரு மின்னல் வெட்டுத் தருணத்தை அல்லது ஒரு கருவை மட்டும் சுற்றிப் பின்னப்பட்டிருக்காது. அது சிறுகதையைவிட விரிவான களத்தில் நிகழக்கூடியது கூடவே நாவலின் ஒரு பகுதிபோல ஆகிவிடும் செரிமானத் தன்மையுடனும் இருக்கும். குறுநாவலில் ஒற்றைப்படையான கதை விவரிப்பு இருக்காது. அதே நேரம் நாவல் போல விரிவான களமும் உருவாகியிராது. இந்த இரட்டைத் தன்மையே குறுநாவல் எழுதுவதிலுள்ள சவால்.
சம்பத்துடைய “இடைவெளி’, பிரமிளுடைய “லங்காபுரிராஜா’, எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி’, ஜி.நாகராஜனின் “குறத்தி முடுக்கு’, ஜெயமோகனின் “டார்தீனியம்’, “லங்காதகனம்’, அசோகமித்திரனின் “தண்ணீர்’, எஸ்.பொன்னுத்துரையின் “தீ’, “சடங்கு’, கே.டானியலின் “கோவிந்தன்’, மு.தளையசிங்கத்தின் “தனி ஒரு வீடு’, போன்றன குறுநாவல்கள். கபிரியேல் கார்சியா மார்க்கேஸின் “கார்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை’, தாக் ஸூல்ஸ்தாதின் “உடைந்த குடை’, ஹெமிங்வேயின் “கிழவனும் கடலும்’ ஆகியன குறுநாவல்கள். எ.ஜே.அசோக்குமாரின் “குதிரைமரம்’, க. அரவிந்தின் “சீர்மை’ போன்றன மிகச் சமீபத்தைய உதாரணங்கள். குறுநாவல்களின் வசீகரம் அல்லது சாவால் என்பது அதில் கையாளப்பட்டிருக்கும் வாழ்க்கைப் பார்வை சிறுகதையை விட விரிவானதாக இருப்பதும், சிறுகதைபோல ஒற்றை முரண் அனுபவமாகச் சுருங்கிவிடாதிருப்பதும் தான். தொண்ணூறுகளில் தமிழில் அதிகமும் எழுதப்பட்ட வடிவம் குறுநாவல். அவற்றைப் படிக்கும் ஒருவர் இயல்பிலே நாவல் கொண்டிருக்கவேண்டிய விரிவையும் குறுநாவலின் செறிவையும் உணர முடியும்.
நாவல், சிறுகதை, குறுநாவல்கள் வாசிப்பதற்கான மனநிலை ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக நாவல் வாசிப்பதற்கான மனநிலை புனைவின் ஏனைய குறுவடிவங்களை வாசிக்கும் போது இருப்பது போன்றதல்ல. வாழ்கை குறித்த ஒட்டுமொத்தப் பார்வையை, பல குரல்களினாலான விவாதத் தன்மையை உத்தேசித்து நாவலுக்கான எதிர்பார்ப்புடன் வாசிக்கும் ஒருவர் சிறுகதை, குறுநாவல்களில் மிகுந்த கசப்பும் ஒவ்வாமையும் அடையவே செய்வார். ஒருவித திருப்தியின்மையையும், சட்டென்று முடிந்து போனதான உணர்வையும் அடைவார்கள். அதாவது மேடைநாடகத்தை நல்ல தரமான அசையாத ஒளிப்பதிவுக்கருவியில் பதிவுசெய்து திரைப்படம் எனத் திரையரங்கில் பார்ப்பது போன்ற ஒவ்வாமையும் திகைப்பும் ஏற்படும். கூடவே கசப்பும் ஏமாற்றப்பட்டதான சினமும் ஏற்படும். இந்த இடர்களைக் கருத்தில் கொண்டே மிகத் தெளிவாகவே குறுநாவல் எனும் சுட்டுதலுடன் கொடிறோசைப் பிரசுரிக்கிறோம்.
கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் “நோவிலும் வாழ்வு’ கவிதைத் தொகுப்பை அடுத்து கிரிசாந்தின் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளுக்கும் ஈழச்சூழலில் குறைவான வாசிப்பே நிகழ்ந்திருக்கின்றன. இவற்றிற்கு என்றில்லை அனேகமான ஈழப் படைப்புகளின் நிலையும் அதுதான். காரணம் ஈழ வாசிப்புச் சூழல் பல முன்முடிவுகளுடன் இருக்கின்றது. அதனால் தன்னிச்சையான வாசிப்போ அல்லது இலக்கிய ரசனை சார்ந்த உரையாடற் குழுக்களோ இங்கே உருவாக முடிவதில்லை. உதிரிகளின் அபிப்பிராயங்கள் என்ற அளவிலேயே விமர்சனங்கள் இருக்கிறன. மிகச் சிறு அரசியல் வட்டங்களுக்கு அப்பால் நிகழும் இலக்கிய வாசிப்புக் குறித்த சந்தேகமும் அவநம்பிக்கையும் எப்போதும் இருக்கிறது. அவற்றை மெய்ப்பிப்பது போலப் புனைவுகளின் அரசியல் உரையாடல்களே இங்கே மூர்க்கமாக நிகழ்கின்றன. அப்படியான வாசிப்பிற்கும் விமர்சனத்திற்கும் மட்டுமே நம் சூழல் இசைவாக்கமடைந்திருக்கிறது. அதனால் அரசியல் உள்ளடக்கம் இல்லாத, நேரடியாகக் கதை சொல்லாத அதாவது படைப்பூக்கமான சித்தரிப்புடன் கூடிய காட்சி மொழி வழி நிகர் வாழ்வனுபவமாக திரட்டியளிக்கும் படைப்புகள் வாசிக்கப்படுவதோ உரையாடப்படுவதோ இல்லை. அவற்றின் இலக்கிய நுட்பம், வெளிப்பாடு, வாழ்க்கைப் பார்வை கவனப்படுத்தப்படுவதில்லை. அவை ஏதோ இரண்டாம் நிலைப்படைப்புகள் என்ற கவனிப்பின்மை எப்போதும் இருக்கிறது. அவற்றைக் கவனப்படுத்தும் பெரு விருப்புடன் கொடிறோசை வெளியிடுகிறோம்.
கிரிசாந்துடைய கவிதை மொழி செறிவும் படிம அடர்த்தியுமாக இருந்து, எளிமையான வெளிப்பாட்டுடன் கூடிய எடையில்லாக் கவிதைகளாகி இன்று புனைவுக்கான சித்திரிப்பு மொழியாகக் கைகூடியிருக்கிறது. கவிஞன் தன்னுடைய வெளிப்பாட்டை கவிதையில் இருந்து புனைவுகளுக்கு நகர்த்தும்போது எழும் இடர்களை மிக எளிதாக இந்தப் புனைவு மொழியால் கடந்து செல்ல முடிகிறது. கவிஞனின் புனைவு மொழியால் அரிதான உவமைகளுடன் யாழ்ப்பாணப் புறச்சூழலையும், உணர்வுகளையும் அச்சொட்டாகப் பின் தொடர முடிகிறது. நமக்கு இந்த வகைப் புனைவனுபவம் அரிதானது. நான் இங்கு இதனை அழுத்திச் சொல்லப் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக இணையத்தில் இன்று சிதல் பெருக்குப் போல வெளியாகும் கதைகளில் இந்த மொழி வெளிப்பாட்டிற்கான சவால் துளியும் இருப்பதில்லை. தட்டையான சித்திரிப்பு மொழியில் எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதுகிறார்கள். அது வாசிக்க எளிமையான மொழி போல தோற்றமளித்தாலும் புனைவுக்கான மொழியே அல்ல. அந்த மொழியால் படைப்பூக்கமான புனைவுகளை உருவாக்க முடியாது. கிரிசாந்தின் புனைவு மொழியில் அந்தப் பேரிடர் நிகழவில்லை. அதனால் அவரின் அந்த மொழியால் உணர்வுகளின் நுண் தருணங்களையும் செறிவான புறச் சூழல் விவரிப்புக்களையும் ஆனையின் துதிக்கை ஒற்றல் போல மிக மென்மையாக தொட்டெடுக்க முடிகிறது. அத்தகைய நுண் மொழிவெளிப்பாடு முதற் புனைவில் கைகூடியிருப்பதே நல்லூழ். இனிக் கிரிசாந்திடமிருந்து வரவிருக்கும் பெரு நாவல்களுக்கான கட்டியமாகவும் அதைக் கொள்ளலாம்.
தர்மு பிரசாத்
சித்திரை, 2025
o o o
கொடிரோஸ் கிடைக்குமிடங்கள்.
