01.
தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள் நடமாட முடிகிறது. அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிடதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக கவனமாக என்னைப் பாவிக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்றாலும், அப்பாவிற்கு பதில் செல்லும் போது உள்ளங்கை வியர்த்து, உதடுகள் இறுகிக் கொள்கின்றன. சொற்களை நிதானமாகத் தேர்ந்தெடுத்துப் பதட்டதுடன் பதில் சொல்கிறேன். அவை சரியான பதில்கள் இல்லை என்றாலும், அப்பா உதடுகள் விரியச் சிரித்து வைக்கிறார். ஆசிரியரின் முன் கை பிசைந்தபடி நிற்கும் சிறியவள் ஆகிவிடுகிறேன்.
அம்மா தன்னுடைய மாணவர்களின் கணிதபாட பரீட்சைத் தாள்களைத் திருத்துவதற்கு என்னிடம் தருகிறார். தவறான பதில்களையும் திருத்தம்செய்து, சரி போட்டு, புள்ளி கொடுக்க மனம் விழைக்கிறது. சிறிய கணக்குகள் பிழையாகப் போவது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு இல்லைத்தானே. “பிள்ளை இது பக்கம்,கோணம், பக்கம்” என்று தலையில் தட்டுகிறார். மிக லேசான தட்டுத்தான் என்றாலும் வலிக்கிறது.
வியர்வை ஊறிய தன்னுடைய ரீசேட்டை என் முகத்தில் பந்து போல சுருட்டி வீசி எறிகிறான் தம்பி. அதில் பழைய வியர்வையின் வாசம் இல்லை மருந்தின் வாசம் அடிப்பதாக ‘தூ குரங்கே’ என்றும் சொல்லி அவனை விரட்டுகிறேன். “வைத்தியரின் ரீசேட்டில் மருந்து வாசம் அடிக்கவில்லை என்றால்தான் நீ ஆச்சரியப்பட வேண்டும்” என்கிறான். “உனக்கு இன்னும் முதல் வருடமே முடியவில்லை” என்கிறேன். அதனால் என்ன என்பதுபோல் ஒரு பார்வை.
மீரா வீட்டினுள் நுழையும் போதே அவளுடைய கண்களுள் ஒளிந்திருக்கும் கள்ளத்தனத்தை அறிந்துவிடுகிறேன். ஏன் அது அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தெரிந்தே இருக்கிறது. அவர்கள் அதை ஆசிரியர்களின் பெருந்தன்மையுடன் அனுமதித்திருக்கிறார்கள். தம்பியின் அருகில் நிற்கும்போது அவளுடைய காதுகள் இன்னும் சிவந்து கொள்கின்றன, உதடுகளின் மேலிருக்கும் பூனை உரோம மீசையில் வியர்வைத் துளிகள் துளிர்கின்றன. இரகசியமாகத் தம்பியின் இடுப்பில் ஒரு ‘நுள்ளு’ கொடுக்கிறாள். தம்பி அவள் கன்னத்தில் ஓர் எதிர்பாராத முத்தம் வைக்கிறான்.
அப்பா அழைத்தபோதும் உடனேயே அதே பதட்டத்துடன் மறுத்துத் தலையசைத்தேன். இது அப்பாவின் கடைசி விளையாட்டுப் போட்டி. ஆறு மாதங்களில், அவருடைய பதினைந்து வருடப் பாடசாலை அதிபர் பணி முடிய இருக்கிறது. அவர் திரும்பவும் அழைத்தால் ‘வருகிறேன்’ என்று சொல்லி அவருடன் கைகளைக் கோர்த்துச் செல்லலாம் என்றிருக்கிறது. ஆனால் அப்போதும் ‘மறுத்து’ தலையாட்டுவேன் என்பதையும் அறிந்தே இருந்தேன்.
அம்மாவும், அப்பாவும் புறப்பட்டுச் செல்வதை சமயலறை யன்னலால் பார்த்தபடி இருந்தேன். காதோரமாக வழியும் சுருள் மயிர் பிசிறை இழுத்துச் சொருகி, உதட்டை அழுத்தி நேர் செய்தார் அம்மா. அவரின் உதடுகள் கிளியின் ஆரம்போல சிவந்து இருந்தன. வண்டியில் ஏறும்போது அம்மா குனிந்து அப்பாவின் காதில் ஏதோ சொன்னார். நிச்சயமாக லீலாவதி ரீச்சரைப் பற்றிய பகிடியாக இருக்கும். அப்பா தலையாட்டிப் பெரிதாகச் சிரித்தார். வெடித்த வெள்ளரிப்பழம் போல அவர் உதடு பிளந்து சிரிக்கும் போது உதட்டில் கருவளையங்கள் தெரிந்தன. சிகரெட்டின் வெந்த தழும்புகள். அப்பா சிகரெட் குடிப்பது பள்ளியின் அத்தனை வகுப்பு மூலைகளையும் தாண்டி அறுந்த பட்டம் போல மிக மெதுவாகத்தான் என்னிடம் வந்தது சேர்ந்தது. தம்பி தான் சொன்னான். பதினைந்து வருடங்கள் முன்னர்.
தாழ்வாரத்தில் நுனி புகைந்தபடி கயிறு தொங்கும் செல்லப்பா கடை பள்ளிக்கூட வாசலிற்கு நேர் எதிரில் இருந்தது. அதன் தாழ்வாரத்தில் வைக்கோல் பரப்பி அதன் மேல் சிவந்த மண் கலங்கள் அடுக்கப்பட்டிருக்கும். அப்பாவை கயிற்று நுனிக்கு அருகாக மண் பானைகளின் பின்னாக எப்போதும் காலையில் பார்க்கலாம். கையில் நுனி சிதம்பிய பூவரசங் கம்பு இருக்கும்.
பாடசாலைக்குத் தாமதமாக வருபவர்களைக் கையோடு பிடிக்க அங்கே பதுங்கி நிற்பதாக நினைத்திருந்தேன். தம்பி சொன்ன பின்னர் தான் பூவரசங்கம்பில் ஒரு கண்ணையும் அப்பாவின் கையிடுக்கில் மறு கண்ணையும் வைத்தேன். கயிற்றிலிருந்து மட்டுமல்ல அப்பாவின் கையிடுக்கிலிருந்தும் புகை தயங்கிக் கசிவது தெரிந்தது. அப்பா சிகரட்டை உள்ளங்கையால் பொத்தி, உதடுகளில் பொருத்தி உதட்டை சுழித்து ஓர் இழுப்பு இழுத்துப் புகையை ஆழமாக நெஞ்சுக்குழிக்குள் அதக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. அப்போது அவருடைய உதடுகளும், முகமும் கோணி இருக்கும். அது அப்பாவிற்கு கொஞ்சமும் பொருத்தமேயில்லாத கோணல் முகம்.
அப்பா சிகரெட் குடித்த ஒரேயொரு முறை அருகில் நின்றிருக்கிறேன். எதிரில் சங்கப்பா. லொறி வில்லுத்தகட்டில் செலமன் ஆசாரியின் பட்டடையில் கடைந்தெடுத்த வில்லுக்கத்தியை நித்திரையிலும் சண்டிக் கட்டினுள் வைத்திருக்கும் சங்கப்பா. பழுத்த மிளகாய்ப்பழக் கண்கள், வெளிறிய தும்பு தும்பான சடை மீசை, சரிந்த பானை வயிறு, மெல்லிதாக வளைந்திருக்கும் வலது கை. சங்கப்பாவின் முன்னாக சிகரெட் புகையைச் சிறு வளையங்களாக ஊதினார் அப்பா. நான் சங்கப்பாவின் வளைந்த கையில் ஒரு கண்ணையும், சண்டிக்கட்டில் மறு கண்ணையும் வைத்தேன். உள்ளங்கை வியர்த்து ஈரமாகியது. துளி வியர்வை தொடைவழி உருண்டு விழுந்தது.
சங்கப்பாவின் வில்லுக்கத்தியைப் பார்த்திருக்கிறேன். தம்பி பயப்படுத்திய அளவுக்கெல்லாம் பென்னம் பெரிய கத்தியாக இருக்கவில்லை. குட்டி மடக்கு கத்தி. நிறமும் அவ்வளவு பளபளப்பு இல்லாமல் துருப்பிடித்த நிறத்தில் இருந்தது. சங்கப்பா கத்தியை விரித்து முதுகு சொறிந்துவிட்டு அதை மடக்கும் போது ஓர் இலையான் கத்திக் கூரில் தன் குட்டிக் கால்களைத் தேய்த்து அமர்ந்தது. கத்தியை விசுக்கி இலையானை வீழ்த்தினார். பாவம் இலையான். சங்கப்பாவின் தம்பி செல்லப்பாவின் முகத்திலிருக்கும் அட்டைத் தழும்பை இலையானுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செல்லப்பாவின் உதடுகளிலிருந்து தொடங்கி வெண் சோழியாய் கலங்கிய கண்ணைச் சரி இரண்டாகப் பிளந்து நெற்றிவரை நீண்டிருக்கும் தழும்பு. பேனை அட்டை முகத்தில் ஊர்வது போல.
சங்கப்பா கத்தியை உருவி காணி எல்லையை முதலில் நிலத்திலே தான் கீறினாராம். அடிமட்டம் வைத்தது போல் நேரான கோடு இல்லை என்றாலும் ஞாயமான கோடுதானாம். அவரின் தம்பி செல்லப்பா அடாத்திற்கு நெஞ்சை நிமிர்த்தி ஞாயமான கோட்டை அழித்துவிட்டு, புதிய கோட்டைப் பத்து அடிகள் தள்ளிக் கீறினாராம். தன் தம்பியாரின் கோட்டை கால்களால் நிதானமாக அழித்து விட்டு, தரவைக்காணியின் எல்லைக் கோட்டை செல்லப்பாவின் முகத்திலே கீறினாராம். மடக்கு கத்தியால்.
வண்டிச்சவாரி தவிர்ந்த நாட்களில் இறந்தவர்களின் ஆவிகள் உலாவும் உவர்ந்தகாணியின் எல்லைக் கோட்டில் கொஞ்சம் செல்லப்பா முகத்தில் இருப்பது அப்பாவிற்கு நன்கு தெரியும். இருந்தும் அப்பா ஒரு துண்டு நிலத்திற்காக சங்கப்பாவுடன் அடாத்திற்கு நின்றார். நெல்லிக்காய் இனிப்பில் கிணறும், வேப்பமர நிழலின் சிறு கல்மேடையில் கைவிடப்பட்ட அம்மனும் அந்தக் காணியினுள் இருந்தன.
சின்னஞ் சிறு கிராமத்தின் பள்ளிக்கூடத்திற்கு அதிபராக அப்பா வந்தபோது ஒற்றைக் கல்கட்டிடம் மட்டுமே பள்ளிக்கூடமாக இருந்தது. கல் கட்டிடத்தின் மேற்குச் சுவரில் கன்னம் வைத்தது போன்ற கேப்பை மாடுகளும் நுழைந்து படிக்கக் கூடியதான பெரிய துளைகள் இருந்தன. துளையச் சுற்றி செல் சன்னங்களின் மயில்தோகை விசுறல்கள். அதிபர் அறையும் அந்த ஒற்றைக் கல்கட்டிடத்திலிருந்து இறக்கிய பத்தியினுள் இருந்தது. தூறல் மழைக்கே கற் சுவரில் சுவறி வழியும் தண்ணீர் அப்பாவின் கால்களிடையே செந்நிறத்தில் சுழித்து ஓடும். எல்லாமும் சில வருடங்களுக்குத் தான். அதற்குள் அப்பா ஒற்றை ஆளாகச் சிவப்பு ஓடு வேய்ந்த பதினொரு கல் வகுப்பறைகளையும், விரிந்த மைதானத்தையும் பள்ளிக்காக உருவாக்கிவிட்டிருந்தார். ஒற்றை ஆளாக என்றா சொன்னேன், இல்லை அதில் என்னுடையதும் அம்மாவினதும் பங்கும் இருந்தது.
அப்பா வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்களின் விலாசங்களைச் சேகரித்தார். சில நாட்களே படித்திருந்தாலும் விடவில்லை. தன்னுடைய மேசையில் அமர்ந்து லாம்பின் மங்கிய வெளிச்சத்தில் அவர்களுக்கு கடிதங்கள் எழுதுவார். அம்மாவிடம் “சிவன்கோயில் தேர்த்திருவிழாவிற்கு விடுமுறை கொடுக்க வேண்டுமா?” என்பார். “இடம்பெயர்ந்து சென்று வர முன்னர் தீர்த்தத்திற்கும் விடுமுறையாம்” என்றபடி கடிதங்களை உறையிலிட்டு ஒட்டி அதன் மேல் விலாசங்களை எழுதுவார். நான் அஞ்சலகப் பட்டியலில் விலைளைப் பார்த்துச் சரியான முத்திரைகளை நாக்கில் நனைத்து கடித உறைகளில் ஒட்டுவேன். ஈயக் கேற்றிலில் நீர் சூடாக்கி கடும் சாயத்தில் ‘பிளேன்ரி’ வைத்துக் கொடுப்பேன். அப்பா பெரிதாகச் சத்தமெழ உறிஞ்சிக் குடிப்பார். அம்மா “பெடியன் எழும்பி விடுவான் மெதுவாகக் குடியுங்கோ” என்பார். அப்பா தலையை துாக்கிச் சிரித்தபடி என்னிடம் “பிள்ளை இப்போதைக்கு முடியாது நீர் போய்ப்படும்” என்பார். அவரின் உறிஞ்சல் ஒலி அறைக் கதவை மூடும்வரை கேட்கும்.
கடிதங்களின் பலன் சிறு தொகைகளாகச் சேரத் தொடங்கியதும் அப்பா கட்டிட வேலைகளை ஆரம்பித்தார். பாடசாலை முடிந்ததும் தன்னுடைய நீளக்காற்சட்டையை முழங்கால்வரை மடிப்பார். வெறும் மேலுடன் அத்திவாரம் தோண்டுபவர்களுடன் தானும் சேர்ந்து மண் அள்ளுவார். இரண்டடி தோண்டினால் முட்டை ஓடு போல வெள்ளைக் கற்பாறை இருக்கும் கடும் நிலம். கால்களில் சாக்குகளை சுற்றிக் கல் உடைப்பார்கள். அப்பா கமூகம் பாளைகளைக் கட்டியபடி உடைத்த சல்லி கற்களை அள்ளிக் கொட்டுவார். அம்மா தந்துவிடும் வெறும் தேத்தண்ணியை பள்ளிக்கூட வாசலில் வந்து வாங்கிச் செல்வார்.
பதினொரு கல் வகுப்பறைகளையும் கட்டி முடித்து நிமிர்ந்து பார்த்தால் பள்ளிக்கு மைதானம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. வருட விளையாட்டுப் போட்டிகள் கோயில் முன்றலில் விரிந்திருக்கும் தரவைக் காணியினுள் நடக்குமாம். இடம்பெயர்ந்து வந்த பின்னர் தரவைக்குள் மாடுகளால் மட்டுமே சென்றுவர முடிந்தன. அங்கு ஈச்சம் பற்றைகளைவிட மிதிவெடிகளே அதிகம் இருந்தன. மிதிவெடிகளை விலத்திச் சென்று வரும் சூட்சுமம் மாடுகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் அவற்றிடம் நான்கு கால்கள் இருந்தன. மிதிவெடிகள் ஒரு காலை எடுக்கும் சிக்கனத்துடன் சொற்ப வெடிமருந்துகளை தம்முள் அதக்கி வைத்திருந்தன. அதனால் அப்பா பள்ளிக்கு அருகிலிருந்த காணிகளை வாங்கி மைதானமாக்க விரும்பினார். முன்னர் அங்கு இயக்கத்தின் சிறிய பயிற்சி முகாமும் மாமரங்களில் மாம்பிஞ்சுகளைக் கொறித்தபடி சோம்பிக்கிடக்கும் தாட்டான் குரங்குகளும் இருந்தனவாம். அந்த நிலங்களை இயக்கம் கைவிட்டு சென்றபின்னர் முட்கம்பி வேலிகளால் சிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
காசியப்பு தன் நிலத்தை இலவசமாத் தந்தார். கராத்தே செல்வம் மாஸ்டர் அரை விலைக்குத் தரச் சம்மதித்தார். அய்ம்பது தென்னைகளையும் தறித்து எடுத்து வீட்டுக் கொல்லையில் கல் வைத்துச் சிலாகைகளாக அடுக்கிய பின்னர். புவனம் அன்ரி இயக்கத்திற்கு போய்விட்ட மூத்த மகள் ரூபிக்கு வைத்திருக்கும் சீதனக் காணி என்றார். முகமாலைக் களமுனையில் காயம்பட்டு இறந்துவிட்ட மகளின் சாவு அறிவித்தலை இரகசியமாக அறிந்ததும் நிலத்தின் உறுதியைத் தன் கடைசி மகளிடம் கொடுத்து அனுப்பினார். கிடைத்த காணிகளின் சரி நடுவில் அறுந்த ஒற்றைச் செருப்புப் போல கவனிப்பின்றிக் கிடந்த நிலம் சங்கப்பாவுடையது. “தம்பிக்கு எழுதிக் கொடுத்த காணி கண்ட நாய்கள் விளையாட எல்லாம் விடேலாது” என்றார் சங்கப்பா. “அப்படியா சங்கதி நாங்கள் அப்ப தம்பியிடமே காணியை வாங்கிக் கொள்கிறோம்” என்றார் ரத்னா பேக்கரி சீலன்மாமா. அடிச்சுருட்டை உதடுகளால் ஈரப்படுத்திக் கயிற்றில் பற்ற வைத்து புகையை ஆழமாக இழுத்தபடி “தம்பியை எங்கை எண்டு பிடிக்கிறது இந்தியன் ஆமிக்கே அவன் இருந்த இடம் தெரியாதே” என்றார் சங்கப்பா.
அதன் பின்னர் தான் ஒவ்வொரு நாளும் சங்கப்பா காலையிலே காணிக்குக் காவலுக்கு வந்தார். கையில் இரும்பு வாளியும் கயிறும் தோளில் பச்சை துவர்த்தும் கொக்கத்தடியுமாக வருவார். அவர் கிணற்றில் நீர் அள்ளித் தலை சிலுப்பி முழுகும் சத்தம் பிரார்த்தனை மண்டபம் வரை கேட்கும். காணி வாசலில் நின்று தலை துவட்டும் போது ஈரச் சாரத்தினுள் மடக்கு கத்தி ஈரமாகத் தெரியும். நெற்றி நிறைய திருநீறு பூசி அம்மனுக்கு கற்பூரம் கொழுத்துவார். இடுப்பில் கட்டிய துவர்த்துடன் மனமுருகித் தேவாரங்கள் பாடுவார். அவருடைய ஈரச் சாரம் கொக்கத்தடியில் பறந்து, காற்றில் காய்வது கிளுவம் வேலிக்கு மேலாகத் தெரியும். அவர் தேவாரம் பாடி முடிய பள்ளிக்கூட மணி அடிக்கும். பள்ளிக்கூடம் முடியும் வரை குளிர்ந்த கிணற்றுக் கட்டில் படுத்திருந்து பழைய பாடல்களை ராகத்துடன் பாடுவார். மதியம் போல தென்னை மரத்தில் இளநீர் பிடுங்கி அவற்றைக் கத்தியால் சரி இரண்டாக பிளந்து சாப்பிடுவார். அவருடைய நிலத்துள் உருண்டு செல்லும் துரதிஸ்டம் பிடித்த பந்துகளை தன் கைகளாலே எடுத்துத் தருவார். சரி இரண்டாகப் பிளந்துவிட்டு. குண்டு எறியும் உருண்டு சென்றுவிட்ட அய்ந்து கிலோ இரும்புக் குண்டையும் எடுத்துத் தந்தார். சரி இரண்டு துண்டுக் குண்டுகளாகப் பிளந்து விட்டு. பாதிக் குண்டு எறியும் போட்டியே அம்முறை நடத்தது.
முதல் விளையாட்டுப் போட்டி அன்று சங்கப்பா காணிக்கு வந்தபோது சிவத்தார் சவுண்ட் சரி செய்து கொண்டிந்தார். சிவன் கோயில் கொடியேற்றத்திற்குக் கட்டும் லவுட்ஸ் ஸ்பீக்கர் பூங்காவனமன்றுதான் இரைச்சலுடன் பாடவே தொடங்கும். இரைச்சலை சரி செய்ய அடுத்த கொடியேற்றம் வரை காத்திருக்க வேண்டும். காலையில் தொடங்கினால் தான் போட்டிகள் முடியும் மம்மல் பொழுதுள்ளேனும் கொஞ்சம் இரைச்சலைச் சரி செய்வார். சுட்டுவிரலால் மைக்கில் தட்டியபடி <ஒலிவாங்கிப் பரிசோதனை, ஒலிவாங்கிப் பரிசோதனை> என்றார் சிவத்தார். சங்கப்பாவின் உயரித் தென்னையிலிருந்து சில்வண்டுகளின் கரகரத்த இரைச்சல் எழுந்தது வந்தது. சங்கப்பா மேலே பார்த்தார் சிவத்தாரின் நான்கு லவுட்-ஸ்பீக்கர்களும் உயரித் தென்னையில் கட்டப்பட்டிருந்தன. கொக்கைத் தடியை மெள்ள நீட்டி இளநீர் குலை போல லவுட்-ஸ்பீக்கர்கள் நான்கையும் பக்குவமாகக் கீழே இறக்கினார். ஒற்றையடிப் பாதையால் கவனமாக அவற்றை எடுத்துச் சென்று சிவத்தாரிடம் கொடுத்துவிட்டு வந்து கிணற்றில் நீரை அள்ளி தலையில் இறைத்தார்.
புதிய மைதானத்தின் முதலாவது விளையாட்டுப் போட்டி எட்டு திசைகளுக்கும் கட்டிய சரி பாதி லவுட்ஸ் ஸ்பீக்கர்களுடன் தொடங்கியது. வழுவழுப்பாக மழித்த முகத்தில் சிவந்த பருக்களின் நுனியுமாக பியதாஸ இராணுவ விறைப்புடன் கொடியை ஏற்றினார். அன்றிலிருந்தே யாழில் தொடங்கியது பள்ளிக்கூடங்களில் இராணுவப் பொறுப்பாளார் கொடியேற்றும் வழக்கம். அப்பாதான் அதனைத் தொடக்கி வைத்தார். மடித்திருந்த சிங்கக் கொடிக்குள் காய்ந்திருந்த பூவிதழ்கள் காற்றில் உதிரும் போது கிழுவம் வேலிக்கு மேலாக சங்கப்பாவின் கொக்கத்தடி உயர்ந்தது. அதன் கொக்கைச்சத்தக நுணியில் ஈரமான சிவப்பு கெளபீனத் துண்டு ஒன்று சோம்பலாக அசைந்தது. சிங்கக் கொடிக்கு நேர் சரியாகப் பறக்கும் துண்டு நிலத்தின் கிளர்ச்சிக் கொடிபோல அது காற்றில் மெள்ளச் சட சடத்துப் பறந்தது.
அடுத்த நாள் செல்லாப்பா கடையடியில் சங்கப்பாவை எதிர்பாரமல் சந்திதார் அப்பா. சங்கப்பா கையில் சுருட்டும், மீன் பையுமாக நின்றிருந்தார். “என்ன ஒரு முப்பது வருடம் இருக்குமா” என்றார் அப்பா சங்கப்பா பக்கம் திரும்பி. சங்கப்பா அப்பாவை என்ன என்பது போலப் பார்த்தார். அப்பா சீகரெட் ஒன்றை அவரிடம் நீட்டியபடி “இல்லை.. நீங்கள் சிறீமுருகனில் கிண்ணம் வென்று முப்பது வருடம் இருக்குமா”
“யார் மறந்தாலும் என்னால் அந்தப் போட்டியை மறக்க முடியாது, கருக்கு மட்டைச் சிராய்ப்பு மாதிரி கண்டல் இன்னும் என்னுடைய பழுவில் இருக்கிறது” என்றார் அப்பா.
சங்கப்பா சீகரெட்டை அப்பாவிடமிருந்து வாங்கி கயிற்று நுணியில் பற்றவைத்தார்.
“எல்லாருக்கும் பொந்தன் அடித்த ‘டாஸ்’ தான் தெரிந்தது, கனிந்த பழம் மாதிரி நீங்க கொடுத்த ‘செற்’ தான் தரம், பந்து வலைக்கு மேலே இரண்டடி உயரத்தில் மிதந்தபடி நின்றது, பொந்தன் இல்லை அந்த இடத்தில் யார் அடிக்க எழும்பி இருந்தாலும் அடித்திருப்பார்கள், பெட்டிக்கு வெளியில் பின்பக்கமாக திரும்பி நின்று அப்படிச் ‘செற்’ கொடுப்பது கடினம், பந்து ‘அவுட்’ தான் நினைத்தார்கள்… உங்கள் கைக்குள் பந்து விழுந்தது தெரியும், ஆ என்று பார்த்துக் கொண்டு நின்றேன், தேங்காய் விழுந்த மாதிரி ஒரு சத்தம், மயங்கிவிட்டேன், பிறகு வெளியில் இருந்து போட்டியைப் பார்த்தேன், அதுக்குப் பிறகு எங்கட அணி அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை” என்றார் அப்பா.
“சேரும் சிறிமுருகனுக்கோ விளையாடியது” என்றார் சங்கப்பா.
“அப்போது நான் ‘தவ்வல்’ பதினேழு வயதிருக்கும், எந்த அடியையும் உடைத்து நல்லா ‘பிரேக்’ செய்வேன் என்று ‘சப்’ ஆக ‘தேர்டில்’ விடுவார்கள்… பொந்தனின் அடி பழுவிலை விழுந்த பின்னர்தான் தெரியும் அதுவரை நான் வாங்கியவை அடிகளே இல்லை, நீங்க பொந்தனுக்கு வைக்கிற ‘செற்’க்கு மலையை தூக்கி ‘கவர்’ பிடித்தாலும் பந்து பிரித்துக் கொண்டு செல்லும், சிறீமுருகனில் வென்றது உங்களுடைய முதல் கிண்ணம் என்று நினைக்கிறன் பிறகு நீங்கள் யாப்பாணத்திலை அடிக்காத கிண்ணமே இல்லை இல்லையா” என்றார் அப்பா.
சங்கப்பாவின் வலதுகையில் வைத்திருந்த கண்ணை வெளியே எடுத்தேன். அந்த வளைவுக்கு ஓர் அர்த்தம் இருப்பதாகப் பட்டது. அவருடைய உதடுகள் இழுபட்டன. முதுகை மடக்கு கத்தியால் சொறிந்து கொண்டார். அப்பாவைப் பார்த்தேன், சிகரெட் புகையை சங்கப்பாவின் மூக்கு நுனிக்கு அருகாக சிறு வளையங்களாகக் காற்றில் ஊதினார். அந்தக் கோணல் முகம் அப்பாவிற்குப் பொருத்தமானதாக இருந்தது.
அன்று மாலையில் வெளிக்கதவில் பெண் குரல் கேட்டுக் கதவைத் திறந்தேன். அடிக் கமுகுமாதிரி ஒடிந்து விழுந்தும் ஒல்லியில் கவிப் பற்களால் சிரித்தபடி ஒரு பெண் நின்றிருந்தார். சுற்றியிருந்த சாறியினுள்ளே பூப்போட்ட ‘நைற்ரி’ தெரிந்தது. “பிள்ளை இதை ஒருக்கால் சேரிடம் கொடுத்து விடமுடியுமோ” என்றபடி மாட்டுத்தாள் பையில் சுற்றிய காகிதப் பொட்டலம் ஒன்றை என்னிடம் தந்தார். அதனுள் செம்பாட்டு மண்படிந்து நுணிகள் மடங்கிய காணி உறுதி ஒன்றும் இருந்தது.
02.
கண்ணாடியில் இருந்த பொட்டை உரித்து நெற்றியில் ஒட்டும் போது அதை உணர்ந்தேன். விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் விருப்பம் மணற்கேணி போல மனமெல்லாம் ஊறியிருந்தது. புது உற்சாகம் பிறந்தது, படபடப்புக் குறைந்தது. உதடுகளைக் குவித்துச் சீழ்க்கை ஒலித்தேன், காற்றில் மிதப்பது போல லேசாக இருந்தன உடலும் மனமும். முகம் கழுவிச் சட்டை மாற்றினேன். தம்பியின் குரல் வீட்டிற்கு வெளியே வாசல் பக்கமாக கேட்டது. நான் உடுத்தித் தயாரக இருந்ததைப் பார்த்ததும் சிறு வியப்புடன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.
“நீ வர மாட்டேன் என்று சொன்னியாமே” என்றான்.
“உனக்கு மீரா வந்தால் போதும் தானே, நான் எதுக்குடா”
“மீராவை பின்னேரம்தான் வரச் சொல்லியிருக்கிறன் பயங்கர வெய்யில்”
“அச்சச்சோடா”
தம்பியின் வண்டியில் ஏறினேன். தம்பி மோட்டார் சைக்கிளை ஒரு உலுக்கு உலுப்பி எடுத்தான். அந்த உலுப்பலில் குட்டன் நினைவுக்கு வந்தான். சிவந்த தணல் தகிக்கும் நெருப்பு வளையங்களை, மழைக்காடுகளை, புழுதி மலைகளை, நீண்ட கிரவல் வீதிகளை மோட்டார் சைக்கிளில் கடந்து என்னிடம் வந்த குட்டன்.
குட்டன் நெருப்பு வளையங்களினூடே, அடுக்கி வைத்த மண் மூட்டைகளின் மேலால், தகர பரல்களின் ஊடாக மிக லவகமாக பாய்ந்து பாய்ந்து மோட்டர் சைக்கிள் ஓட்டினான். மோட்டார் சைக்கிள் பழகிய அணில் குட்டியாக அவன் கைகளுள் சுருண்டு கிடந்து, ஒவ்வொரு திருப்பங்களிலும் அவனுடைய உடல் அசைவை திரும்ப நடித்தது. சம நேரத்தில்.
வாடல் உருவம். அந்த வாடல் உருவத்துள் அறுந்த பல்லிவால் போன்ற அபூர்வமான ஒரு துடிப்பும் இருந்தது. பயிற்சி முடித்து கிணற்றடிக்கு நீர் குடிக்க வந்தபோதே அவனை மிக அருகில் பார்த்தேன். அவனுடைய வரிச் சீருடையின் வரிகள் வித்தியாசமாகக் குத்தண இருந்ததை கவனித்தேன். அள்ளிக் கொடுத்த இரண்டு வாளி தண்ணிரையும் முழுவதுமாகக் குடித்தான். “இந்த பனஞ்சிலாகை உடம்பிற்கு இரண்டு வாளி அதிகம்” என்றேன். “தமிழீழ தாகம்” என்றான். “மாலினி அக்கா சொல்ல நாங்களும் திரும்பச் சொல்லுறனாங்கள் அர்த்தம் விளங்கவில்லை” என்றேன். சிரித்தான். சிரிக்கும் போது அய்தான மீசைக்குள்ளாக தெத்துப்பல் தெரிந்தது. தெத்துப்பல் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் அவன் மிகவும் அரிதாகவே சிரித்தான்.
ஆறுமாதங்களில் பழகிய பின்னர் அவனைப் ‘பிடித்திருப்பதாக’ சொன்னேன். தெத்துப்பல் தெரியச் சிரிப்பான் என எதிர்பார்த்தேன். தலையைச் சரிந்து நிலம் பார்த்து லேசாக வெட்கப்பட்டான்.
தன்னுடைய கைத்துவக்கின் அடிப் பக்கத்தை எனக்குக் காட்டினான். அதில் என்னுடைய பெயர் ஆணிக் கூரால் பொறிக்கப்பட்டிருந்தது. அவனுடைய உள்ளங்கைச் சொரசொரப்பினுள் எனது பெயர் அடக்கமாக இருந்தது. என்னுடைய சயனைட் குப்பியின் அடிப்பகுதியை அவனுக்குக் காட்டினேன். அங்கே அவனது பெயரின் முதல் எழுத்து துளி விசத்தினுள் பத்திரமாக இருந்தது. பாயும் புலி உருவம் பொறித்த அரைப்பவுண் தாலியை மஞ்சல் நூலில் கோர்த்து என் கழுத்தில் கட்டிய சில மாதங்களுள் சமாதானம் முடிவுக்கு வர இருந்தது அல்லது கடைசிச் சண்டை தொடங்க இருந்தது.
எங்களுக்கு ஒதுக்கிய வீடு வயல்களின் முடிவில் தனித்து இருந்தது. கிரவல் பாதையில் அரைக் கட்டை தூரம் நடந்து உள்ளே வர வேண்டும். அகலமான பெரிய நடுச்சுவர். வாசல் பக்கமாக உயரத் திண்ணையும் இரண்டு அறைகளும் இருந்தன. பொருட்கள் வைத்த பிறகும் அறைகளில் இடம் நிறையவே மிச்சம் இருந்தது.
வீட்டின் பின்னால் கலங்கிய நீர் பாயும் சிறு வாய்க்கால். பாயும் நீரின் மெல்லிய ஓசை இரவுகளில் வீட்டினுள் கேட்டது. சரிந்து கிடந்த வீட்டின் பின் வேலியை இருவருமாக நிமிர்த்தி முண்டு கொடுத்தோம். மாமரத்தில் கட்டிய நார்க் கொடியில் குத்துவரி உடுப்பின் பக்கத்தில் என்னுடைய வரிச்சீருடையும் காயப் போட்டோம். வரிச் சீருடைகளின் மேலால் கறுப்பு எறும்புகள் நிரையாக பெரிய இரைகளைச் இழுத்துச் சென்றன.
எனக்கு A9 வீதியின் சுங்கத்தில் தற்காலிகப் பணி. “மேலிடத்தில் கதைக்கிறேன், நீங்கள் தாராளமாக நம்பலாம், அவர்கள் உங்களுக்கு மிக நல்ல பதில் தருவார்கள், இத்தடவை இந்தப் பொருட்களுக்கு மட்டும் தயவு செய்து வரியை கட்டுங்கள் போதும்”. எல்லா உரையாடல்களையும் இந்த வசனம் நோக்கி இரைகளை இழுத்துவருவது போல மெல்ல இழுத்துவர வேண்டும். அது எவ்வளவு பெரிய இரைகளாக இருந்தாலும். மாவீரர்கள் தியாகம், வித்துடல், மண், வீரம், தலைவர்… போன்ற மதிப்பு மிக்க சொற்களையும் சிக்கனமாகக் கலந்துவிட்ட வேண்டும். நெஞ்சை நிமிர்த்திச் சட்டம் பேசுபவர்களும், சண்டைக்கு நிற்பவர்களும் கூட வரியைக் கட்டிவிடுவார்கள். வரி கட்டிய பொருட்களை ‘பங்களிப்பாக’ எங்களிடமே கொடுத்து நன்றி சொல்லிச் செல்வார்கள்.
பணி முடிந்து பஸ்ஸில் வந்து இறங்கும் போது குட்டன் மோட்டார் வண்டியுடன் காத்திருப்பான். வண்டி செம்மண் கிரவல் வீதியினூடாக மிக மெதுவாகச் செல்லும். குளிர்ந்த வயல் காற்று, வயல் மடிப்பில் மறையும் சூரியனின் சிவந்த தணல் தகடுகள், கரித்துண்டுகளாகப் பறக்கும் கொக்குகள் எல்லாம் மோட்டார் சைக்கிளின் கைப்பிடியளவு வெளிச்சத்தின் மேலாக விரிந்திருக்கும். என்னுடைய இரு கைகளாலும் அவன் தோள்களை சுற்றிக் கொள்வேன். கலவையான வியர்வை வாசனையும் மெல்லிய உடற் சூடும் டீசல் புகையினுள் அமிழ்ந்தபடி வரும்.
முதல் நாள் குட்டன் கத்திப்பிடியால் மிளகு குத்திப் போட்ட மாட்டிறைச்சிப் பிரட்டல் கறி சமைத்தான். சிரசிலடிக்கும் உறைப்புடன் இருந்த ருசி நெடுநேரம் நாசியில் இருந்தது. அடுத்த நாள் நான் தேங்காய்ப்பூப் போட்ட வெள்ளைப் புட்டு அவிக்க வெளிக்கிட்டு மாவுக்கு தண்ணியும் தண்ணிக்கு மாவும் சேர்த்து முடிவில் மாவை எறிய விருப்பமில்லாமல் உக்குறுணியாக நறுக்கிய கொச்சி மிளகாயும், வெங்காயமும் கலந்து ரொட்டியாகச் சுட்டேன். கருகிய ரொட்டியைப் பிய்க்கும் போதே “நீர் பனிஷ்மென்டில் ஒரு நாளும் சமையலில் நின்றது இல்லைப் போல” என்றான். நான் தலை சரிந்து நிலம் பார்த்து லேசாக வெட்கப்பட்டேன்.
இரவுகளிலும் வெறும் மேலுடன் குட்டனைப் பார்க்க முடிவதில்லை. பகலின் நெருக்கமும், சீண்டல்களும் இருள் ஆழங்களில் மறைந்து கொண்டன. இல்லை அப்படி அவை மறைந்து விடுவதாக நம்பினோம். குழந்தையைக் கற்பனையாக நினைப்பதே இன்னும் சிரமமானதாக இருந்தது. அதை ஒரு பாவத்தின் நீட்சியாக, தியாகத்தின் தடையாக பாவனை செய்தோம். பாவனை சிறிய வேலிதான். ஏராளம் பொட்டுக்களுடன் இருக்கும் வேலி. வேலியின் அந்தப் பக்கமாகக் குட்டன் தன்னுள் சுருண்டு படுத்தான். இடையில் சூனியப் பிரதேசம். கனமான இருளின் போர்வை. உடலில் கிளர்ந்தெழும் வெப்பக் காற்றை, மூச்சின் அனுங்கல் ஒலிகளை, நாசியின் ஆழம் உணரும் மெல்லிய வியர்வை நொடியை, சதைகளின் வாசனையை உறிஞ்சிக் கொள்ளும் தியாகத்தின் இருட்போர்வை.
நான்காம் நாள் பின்னிரவில் சத்தம் கேட்டு விழித்தபோது கலவையான உறுமல் ஒலி மிக அருகாகக் கேட்டது. குட்டன் அறையின் யன்னல் ஓரத்தில் நின்று வேலியைக் கவனமாக நோட்டமிட்டபடி இருந்தான். இரவுக் காவல் கொட்டில்களில் இருக்கும் ‘எச்சரிக்கை’ உணர்வு அவனுடைய முகத்தில் அடங்காமல் திமிறிக் கொண்டிருந்தது. எச்சரிக்கை பயத்தின் அக்கா என்பாள் சுடர்விழி, அவனுடைய கண்கள் பயத்தினால் கூசிச் சுருங்கியிருந்தன.
காட்டு விலங்கு வேலியை மிக அருகாகப் பிறாண்டும் சன்னமான ஓசை, கடுமையாக மூசி மோப்பம் பிடிக்கும் ஓசை, பின் அச்சமான அலறல். குட்டனின் கண்கள் ஒவ்வொரு வேலிப் பொட்டுக்களையும் ஊன்றிக் கவனித்தபடி இருந்தன. விலங்கு வேலியைக் கடந்துவிடுமோ என்ற அச்சம் அவன் கண்களில் இருந்தது. ஏனோ அதை அவன் விரும்பாதது போலவும் இருந்தது. விலங்கு வேலியைக் கடந்து உள்ளே வந்துவிட்டது. இனி விலங்கை இருளினுள் கண்டுகொள்ள வேண்டும். குட்டனால் அதை ஒருபோதும் கண்டுகொள்ள முடியாது. இருளைத் துளைத்து விலங்கைப் பார்ப்பதற்கு கண்களை நம்பினால் மட்டும் போதாது கொஞ்சம் உள்ளுணர்வையும் பின் தொடரத்தெரிந்திருக்க வேண்டும்.
எழுந்து அவன் பின்னால் சென்றேன். அவனது பச்சை ரீசேர்ட் வியர்வையில் ஊறி நனைந்திருந்தது. காது முடிகள் குத்திட்டு நின்றிருந்தன. அதிக எச்சரிக்கையால் குழம்பி இருந்தான், போரின் முன் களத்தில் நிற்கும் போதில்லாத பதட்டமும், மிகை நடுக்கமும் அவன் உடலில் தெரிந்தது.
“அது இன்னமும் வேலிக்கு வெளியில் தான் இருக்கிறது” என்றான் பதட்டத்துடன்.
நான் புன்னகைத்தேன். அவனது நெற்றியும் புருவமும் சுருங்கியது.
“ அது எப்போதோ இந்தப் பக்கம் வந்து விட்டது” என்றேன்.
அதனை நம்ப மறுத்த அவனது உதடுகள் நடுங்கின, மூச்சை சிரமத்துடன் இழுத்துவிட்டான். மார்புக்குழி, நாசித் துவாரமும் விரைவாகச் சுருங்கி விரிந்தன. அஜீரணத்தின் குடல் பிசைவு. அவனது முகம் கோணலாகியது. அவனை என் இடையோடு சேர்த்து அழுத்தினேன். உடல் திமிறி மெள்ள அடங்கியது,பறவையின் சிறகடிப்பு.
என்னுடைய எலும்புகள் முறுக்கிக் கொண்டன. என்னுள் குருதியும், உடலும் மெள்ளச் சூடாகியது. வியர்வையின் ஆவி வாசனை எழுந்தது. அவன் இடையில் செருகி வைத்திருந்த துவக்கை உருவி எடுத்தேன். மூச்சை உள் இழுத்து இருளுள் குறிவைத்தேன். துவக்கின் விசையை அழுத்தினேன். சிறு மின்னல் வெட்டு, ஓர் உதறல் என் உடலிலிருந்து அவனுடலினுள் மெள்ளப் பரவியது. மின்னல் தெறிப்பில் கரிய பன்றியின் சிவந்த மூக்கு மின்னி மறைந்தது. இருளின் கடுந்திரை கிழிந்தது. பன்றியின் உறுமல் கமறலாகி உயிரின் துடிப்பு ஒலியாகத் தேய்ந்து கரைந்து இருளில் மறைந்தது. துப்பாக்கியை அவனிடம் நீட்டினேன். படபடப்புடன் வங்கிக் கொண்டான். அதனை இடுப்பில் செருகியதும் அவனது முகம் மலர்ந்தது. என் கண்களையே ஊடுருவிப் பார்த்தான்.
என்னை அவனே கட்டிலுக்குத் துாக்கிச் சென்றான். என் எடை சரிந்து காற்றில் மிதந்தேன். என் ஆடைகளை ஒவ்வொன்றாக உரிந்து எறிந்தான். திரும்ப எடுக்கவே முடியாத இருளின் ஆழங்களில் அவை விழுந்தன.
கையடக்கமான சிறு முலைகளின் திரட்சியை உற்றுப் பார்த்தான். தென்னங் குரும்பைகள் போல சாம்பல் நிறப் புள்ளிகளுடன் இருந்தன. இரு கைகளாலும் ஏந்தி முலைக்காம்பை விரல்களினால் உரசினான். பின் மூக்கு நுனியால். அவனுடைய மூச்சுக் காற்றை வெப்பமாக முலைகளுள் உணர்ந்தேன். கண்களில் இருந்து நீர் வழிய உதடுகளைக் குவித்து முலைக்காம்பில் வைத்தான். ஓராயிரம் துளைகளாக மெல்ல விரிந்து முலைக் காம்பு. அவனுடைய ஒடுங்கிய மார்பில் மெல்லிய பூனை உரோமங்கள் இருந்தன. தொப்பையே இல்லாத பனை வரியோடிய சப்பை வயிறு. உழுத்தம் விதைகளை ஒட்டியது போல கரிய மார்புக் காம்புகளும் இரு கரிய கண்களாக முன்னால் அசைந்து கொண்டிருந்தன.
விடிய, வெங்காயமும், உள்ளியும் நறுக்கிக் கொடுத்தேன். குட்டன் மஞ்சளும் உப்பும் போட்டு அவித்த பன்றிக் கறி சமைத்தான். வார இறுதியில் குட்டனின் பொறுப்பாளரிடமிருந்து இருவருக்கும் விசாரணைக்கு அழைப்பு வந்தது. குட்டன் ஒற்றைக் குண்டால் பன்றியை சுட்டு வீழ்த்தியதை பொறுப்பாளர் நம்பவில்லை. தலைவரைத் தவிர அது யாராலும் இயலாத காரியம் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. மீதமாயிருந்த பன்றிக் கறியைச் ‘சாட்சிக்கு’ எடுத்து வந்திருக்கலாமோ என்று நினைத்தேன். குட்டன் மிக நிதானமாகவே பொறுப்பாளரிடம் சொன்னான் “அது ஓர் அபூர்வ தருணம்”.
“குட்டா நீ தற்பாதுகாப்புக்குச் சுட்டதாக அறிக்கை கொடுத்திருக்கலாம் இல்லையா” என்றார் பொறுப்பாளர்.
“இல்லை நான் இவளுக்காகவே சுட்டேன்” என்றான். அவனது கைகள் என் கைகளை அழுந்தப் பிடித்திருந்தன.
பொறுப்பாளர் இருவருக்கும் தண்டனை கொடுத்தார். உயிரைக் குடிக்கும் பித்தளைக் குண்டையும், பன்றியின் உயிரையும் அவமதிக்க கூடியதான மிகவும் சிறிய தண்டனை. மிச்சம் இருந்த பன்றிக்கறியைப் பொட்டலமாகக் கட்டி எடுத்துக் கொண்டு தண்டனைக்குச் சென்றோம். தண்டனை முடிந்து சரியாக மூன்று நாட்களில் A9 வீதி பூட்டப்பட்டது. சண்டை தொடங்கியது. சண்டையின் போது இருவரின் அணிகளுக்கு இடையிலும் இருளின் கடும்போர்வை திரும்பவும் வீழ்ந்தது. வள்ளிபுனத்தில் குட்டனைப் பார்த்தேன். மோட்டர் சைக்கிள் இல்லாமல் வெறுமனே நின்றிருந்தான். இருவருக்குள்ளும் பேசிக் கொள்ள ஒன்றுமே இருக்கவில்லை. இருவருக்கும் மட்டுமல்ல யாருக்குமே பேசிக் கொள்ள எதுவுமே இருக்கவில்லை. நம்பிக்கையின் அத்தனை வார்த்தைகளும் முடிந்து போயிருந்தன. எழும் தீக் கங்குகள், கந்தகமணம், மின்னி மறையும் ஒளிப்பிளம்புகள் சூழ்ந்திருக்க முடிவை அறிந்த மெளனம் மட்டுமே இருவருக்கும் இடையில் இருந்தது. கண்கள் சோர்ந்திருந்தன. ஏனோ ‘சட்’ என்று ஏதோ தோன்ற அவனது சயனைட் குப்பியைச் சிறு கத்தியால் வெட்டி எடுத்தேன். அவன் ஒன்றும் இரண்டு குப்பிகளை ஒன்றாகக் கடித்தால் கன நேரம் துடிக்க வேண்டியதில்லையாம்” என்றேன். தெத்துப்பல் தெரியச் சிரித்தான்.
பின்னர் புனர்வாழ்வு முகாமில்தான் அவனைக் கண்டு கொள்ள முடிந்தது. வெறும் மேலில் சாரம் மட்டும் அணிந்திருந்தான். அவனுடைய பல்லிவால் துடிப்பு எங்கோ ஒளிந்து விட்டிருந்தது. சிரிப்பு அப்படியே தான் இருந்தது. தெத்துப்பல்லை மட்டும் காணவில்லை. வலது கை மணிகட்டில் பழுப்புநிறச் சாரத் துணி கட்டியிருந்தான். சாரத்துண்டை அவிழ்த்துக் காயத்தைப் பார்த்தேன். அழுகல் வாசனையுடன் பச்சையாக இருந்தது புண் வாய். பழுப்பு துணியை மாற்றி தூய வெள்ளைத் துணி கட்டினேன். எத்தனை முறை சுத்தம் செய்து துணிமாற்றிக் கட்டினாலும் புண் வாய் ஆறாமல் அழுகல் வாசனையுடன் பச்சையாகவே இருந்தது.
காயத்திற்குத் துணி மாற்றக் குட்டனின் கைகளை என் மடியில் வைத்திருந்த போதுதான் அப்பாவும் அம்மாவும் என்னைப் பார்க்க வந்திருப்பதாக அழைத்தார்கள்.
அய்ந்து வருடங்களில் அப்பாவின் மீசையில் சில நரை அடர்ந்து மயிர்கள் தெரிந்தன. கன்னம் அதைத்து, உதடுகள் இன்னும் கறுத்திருந்தன. அவருடைய உருண்டையான விரல்களினுள் என் கையைப் பொதிந்து வைத்திருந்தார். அம்மாவின் கண்களில் நீர்ப் படலம் மெல்லியதாகத் திரண்டிருந்தது. உதடுகளை மடிந்திருந்தார். கணித ஆசிரியரின் கண்டிப்பு வடிந்து முகம் கனிந்திருந்தது. வேறு யாரோ போல இருந்தார். கையில் குட்டியாக வெள்ளைச் சோக் கறை மிச்சமிருந்தது.
நெடுநேரம் பேசிய பின்னர் ஒரு நிமிடம் என்றுவிட்டு அப்பா எழுந்து வெளியே சென்றார். அம்மா என் கையை தன் கைகளினுள் பொதிந்தார். அம்மாவின் கை விரல்கள் குளிர்ந்திருந்தன.பின் நீண்ட பெருமூச்சுடன் “பிள்ளை நீ போன மாதிரியே வருகிறது என்றால் வா குறைந்தது மூன்று மாதத்தில் வெளியில் எடுப்பாராம், அவருக்கு ஆட்களைத் தெரியும்” என்றார்.
அப்பாவை தேடினேன் முகாம் தாழ்வாரத்தில் தனியனாக நின்றிருந்தார். அவரைச் சூழ்ந்து சிறு வளையங்களாகச் சீக்ரெட் புகை எழுந்தது. அப்பாவின் முகத்தை நினைவின் ஆழங்களிலிருந்து மெள்ள மேலே எடுத்து வந்தேன். மிக மெதுவாகக் கலங்கலில் இருந்து துலங்கி வந்தது.
சரியாக மூன்று மாதத்தில் முகாமிலிருந்து வீட்டிற்கு வந்தேன்.
03.
லவுட்ஸ்-ஸ்பீக்கர் இரைச்சலில் மைதானம் நிறைந்திருந்தது. முக்கோண வடிவக் காகிதக் கொடிகள் மைதான வேலிகளில் பறந்தபடி இருந்தன. வாசலில் சிறிய தும்புமுட்டாஸ் இயந்திரம் வண்டு போல இரைந்து கொண்டிருந்தது. தலையில் அழுக்குக் கைக்குட்டை கட்டியிருந்த வயதானவர் சுழரும் இயந்திரத்தினுள் மரக் குச்சியை மிக நளினமாகச் சுழற்றியபடி இருந்தார். மரக் குச்சியில் சின்னஞ் சிறு இனிப்புத் தும்புகள் சேகரமாகிப் பெரிய கனவுக் கோளமாக விரிந்தபடி இருந்தன. மைதானத்தின் தகர பந்தலினுள் வெக்கை அணலாகக் கொதித்தது.சிறப்பு விருந்தினர்களின் கைகளில்,கழுத்துகளிலும் தொங்கும் மாலைகள் வெப்ப அனலில் வாடியிருந்தன.
அம்மா, தன்னுடைய கொண்டைக்கு மேலாகப் பிடித்திருந்த சேலைத்தலைப்பின் துண்டு நிழலுள் நின்றிருந்தார். அவருடைய கண்கள் பூஞ்சல் கோடுகளாகத்தூரத்தில் தெரிந்தன. கையில் காகிதக்கட்டுடன் குடை நிழலில் லீலா மிஸ் அமர்ந்திருந்தார். அப்பா மைதானத்தின் எதிர் முனையில் நின்றிருந்தார். கொதிக்கும் வெயிலில் காற்று உருகிக் கண்ணாடிப் படலமாகத் இருவருக்குமிடையில் இருந்தது. உருகிய படலத்துள் அப்பா கலங்கிய நீரின் அழுக்கு விம்பமாகத் தெரிந்தார். அவருடைய உடல் அசைவுகளே இன்னாரென அவரை இனம் காட்டின.
இரைச்சலைக் கிழிக்கும் துவக்கு வெடி மைதானத்தின் நடுவாக எழுந்தது. ஓட்டப் பந்தய வீரர்களை உற்சாகப்படுத்தும் கூச்சல்கள், காட்டுக் கத்தல்கள் அலை அலையாக எழுந்தன. மிகச் சிறிய இலக்கை நோக்கிக் கையில்லாத பெனியன்களுடன் விரையும் சிறுவர்கள்.
என்னுடைய கண்கள் மைதானத்துள் அலை பாய்ந்தபடி இருந்தன. குட்டி மானின் இளந் துழாவல் போல. வரண்ட புல் திட்டுக்களையும், அலையும் பொலித்தீன் பைகளையும், காகிதக் பெட்டிகளையும், நீர் படலமாக அசையும் சேலைத் தலைப்புகளையும் மோப்பமிட்டுத் துழாவியபடியே இருந்தன. வெய்யிலில் உருகி மைதானம் முழுவதும் வழிந்தபடியிருந்த சந்தோசக் கூச்சல்கள், ஆரவார கைதட்டல்களில் சீரான லயங்கள் எல்லாம் என்னிடமிருந்து தூரமாகிக் கொண்டிருந்தன. அவை எங்கோ நீழ் ஆழங்களில் ஒலிப்பவை போலிருந்தன. நினைவின் ஆழங்களில் இருந்து மெல்ல எதுவோ மேல் எழுந்து வந்தது. மைதானத்தின் நடுவாக துடிப்புடன் குட்டிமானின் இளந் துழாவல் பாய்ந்து சென்றது. சங்கப்பா கிளர்ச்சிக் கொடி ஏற்றிய துண்டு நிலத்தின் எந்தத் தடையங்களும் அங்கு இல்லை. சின்ன அம்மன் கோயில், நினைவில் இனிப்பதைவிட இனிப்பாக இருந்த கிணற்று நீர் எதுவுமே. சிறு திட்டுக்களிலான புற்களே படர்ந்திருந்தன. எல்லாம் கரைந்து அழிந்து முழு மைதானத்தின் பகுதியாகி விட்டிருந்தன.
தூரமாகிய கூச்சல்கள், மகிழ்ச்சி ஆரவாரங்கள், கைதட்டல்கள் எல்லாம் திரும்பவும் என்னைச் சூழப் பேருருக் கொண்டு எழுந்துவந்தன. கையில்லா பெனியன் அணிந்த சிறுவர்கள் இறுதிச் சுற்றைக் ஆவேசமாகக் வலித்து ஓடியபடி இருந்தனர். லீலா ரீச்சர் ‘ஃபாஸ்ட், ஃபாஸ்ட்’ என்று கூவியபடி சிறுவர்களுடன் இழுபட்டுப் பின்னால் ஓடினார். சிவப்பு ரிப்பன் சிவப்புச் சால்வையாக ஒரு சிறுவனின் நெஞ்சில் படர்ந்தது. கூச்சல்கள், கைதட்டல்கள் மெள்ள அடங்கின. ஓட்டப் போட்டியில் கடைசிக்கு முதலாவதாக வந்திருந்த சிறுவன் ஓய்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்து தன் தலையைத் தாழ்த்தி வணக்கம் சொன்னான். அவனுடைய முகமும், உதடுகளும் மிகவும் மலர்வுடன் இருந்தது. அந்த மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது உற்சாகமாக மைதானத்தை நோக்கிக் கைகளை அசைத்தேன்.
***
02.04.2020
(வல்லினம் இதழில் வெளியாகியிருந்த கதை)