இச்சா நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் விமர்சனக் கட்டுரைக்கு, வரிக்கு வரி மறுப்பு எழுத முடியும். ஆனால் அவரை நான் பொருட்படுத்தி வாசிப்பதுமில்லை, உரையாடுவதுமில்லை. வாசித்து அவருக்குப் பதில் எழுதுவதும் வீண் வேலை. அவர் உமா வரதராஜன், சேரன் உட்படப் பலரையும் இப்படியாக அணுகியே பல நீள் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அது அவரின் அறியாமை மட்டும் அல்ல இணையம் கொடுக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் மறுபக்கமும் கூட. படைப்பைக் கொண்டு படைப்பாளியை மதிப்பிடுவதோ, அவருடைய தனி வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்டு படைப்பை விமர்சனம் செய்வதோ இலக்கியம் அறிந்த யாரும் செய்வதில்லை.
அதிலும் படைப்பாளர்களின் பிறழ்வை (?) விமர்சன பூர்வமாக அணுகி யாரும் விமர்சிப்பதில்லை. இலக்கியத்தில் அந்தப் பிறழ்வுகள் கையோடு எடுத்துச் செல்லக் கூடிய ‘டோர்ச் லைட்’ போன்றவை. வாசிப்பவர்கள் திகைத்து நிற்கும் இருண்மையான இடங்களில் மட்டும் ஒளியூட்டி இருளை விலக்கிப் பார்த்துவிட்டுப் பின் மடித்துப் பையில் வைக்க வேண்டியவை. அவை; படைப்பை, படைப்பாளியை நெருங்கிச் செல்லவும், படைப்பின் புதிரை, சிடுக்கைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுபவை. நட்சத்திரன் செவ்விந்தியன் செய்துவருவது போல மதிப்பிடவும் மதிப்பு நீக்கம் செய்யவும் அல்ல. பிறழ்வைக் கொண்டு படைப்பை, படைப்பாளியை மதிப்பிடுவதை இன்று யாரும் செய்வதும் இல்லை அது படைப்பை மதிப்பிட, விமர்சிக்க அவசியமானதும் இல்லை. ஆனால் புரிந்துகொள்ள, நெருங்கிச் செல்ல அவை பயன்படக் கூடும். நட்சத்திரன் செவ்விந்தியனின் கட்டுரைகளில் அப்படியாகப் புரிந்துகொள்ள, நெருங்கிச் செல்ல முயலும் நோக்கு நிலை, தேடல், முனைப்பு இருப்பதில்லை. அவர் செய்வது தான் பிறழ்வுகளாகக் கருதுபவற்றைக் கொண்டு படைப்பாளிகளை வசைபாடுவதற்கான அதிகாரமாக உருமாற்றிக் கொள்வதை அல்லது அவர்களை மதிப்பிட்டு மதிப்பு நீக்கம் செய்வதை மட்டுமே. அதைப் பொருட்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. இம்மாதிரியான எழுத்துகளை ஊக்குவிப்பதை-வெளியிடுவதை குறித்து இலக்கிய இதழ் கவனம்கொள்ளலாம் அல்லது தவிர்க்கலாம்.
சேனனின் சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்களுக்கு நான் எழுதிய கட்டுரையானாலும் சரி, லஷ்மி சரவணகுமாரின் கொமோரா, ரூஹ் இரண்டிற்கும் எழுதிய கட்டுரைகளானாலும் சரி, விமர்சனக் கட்டுரைகளானாலும் சரி (இவை இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன) அவற்றில் படைப்பு, படைப்பாளியின் கருத்துநிலை, அரசியல் செயற்பாடு தவிர்த்த அவர்களின் தனி வாழ்வு குறித்த ஒரு சொல்லாவது எழுதப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் தீர்க்கமான பதில். ஆனால் நட்சத்திரன் செவ்விந்தியன் கட்டுரையோடு என் கட்டுரைகளும் சேர்த்துப் பேசப்படுகின்றன. இதைவிடப் பெரிய தீயூழ் ஏதாவது இருக்கிறதா? இருக்கிறது. அப்படி இணைத்துப் பேசுபவர்கள் வேறு யாரும் இல்லை சேனனும், லஷ்மி சரவணகுமாரும் என்பது இன்னுமொரு தீயூழ். அவர்கள், அப்படி நான் அவர்களை விமர்சித்த ஒரு வரியையாவது சுட்டிக் காட்டினால் அம்மூன்று விமர்சனங்களையும் மீளப்பெற்று அவற்றிற்குப் பதிலாகப் புகழ்மாலைகள் எழுதிக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். லஷ்மி சரவணகுமார் நான் அவரை //“கொமோரா எழுதின காலத்திலிருந்து சோபாவின் நண்பரான தருமு பிரசாத் நான் ஐரோப்பாவிலிருக்கும் புலி ஆதரவாளர்களிடம் பணம் வாங்கி இருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்”இதெல்லாம் தனிமனித அவதூறில் வராதா?// என்கிறார் .நான் ஒரு போதும் இப்படியான குற்றச்சாட்டை லஷ்மி சரவணகுமார் மீதோ அல்லது வேறு யார் மீதோ வைத்ததில்லை. எனக்கும் லஷ்மி சரவணகுமாருக்குமான பிரச்சினை அவரின் போலித்தனமான அரசியல் தகிடுதத்தங்கள் குறித்தானவையே அல்லாமல் பணம் பெற்றுக் கொண்டார் என்பது மாதிரியான குற்றச்சாட்டுகளில் இல்லை. ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டம் நிகழ்ந்த போது, தனக்குக் கிடைத்திருந்த யுவபுரஸ்கார் விருதை ஆர்ப்பாட்டமாகத் திருப்பிக் கொடுத்தவர், அதன் பின் வெளியாகிய தன் புத்தகத்தில் எப்படி யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர் என்ற குறிப்புடன் வெளியிடலாம் என்ற என்னுடைய சந்தேகத்திலிருந்து தொடங்கியது(விருதைத் திருப்பிக்கொடுத்தல் என்றால் என்ன? அது கொடுக்கும் அத்தனை அங்கீகாரங்களையும் அல்லவா துறக்க வேண்டும்? ) பின் பிரபாகரன், புலிகள், இலங்கை முஸ்லீம் பராமிலிற்றி குறித்த அவரது பார்வை சார்பான மாற்றுக் கருத்துகளையும், விமர்சனங்களையும் வைத்திருக்கிறேனே தவிர, லஷ்மி சரவணகுமார் பணம் பெற்றுக் கொண்டு எழுதுகிறார் என்று ஒரு போதும் எழுதியதில்லை. அவருக்குப் பணம் கொடுத்து எழுதச் சொல்லும் அளவிற்கு அப்பாவிகள் அல்ல புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் என்பதும் அப்படிச் சொல்லாததற்கு இன்னொரு காரணம். அவர்களுக்குத் தமிழீழம் பிடிக்க ஒரு சீமான் போதும் தானே, ஏன் இன்னொரு இலக்கியச் சீமான்?
சேனனின் நாவல் மொழியைப் பார்த்து அவர் தமிழில் புனைவுகளை வாசிப்பதில்லையோ என்று கட்டுரையில் சந்தேகித்திருந்தேன், இல்லை அப்படி அவர் வாசித்தாலும் அவற்றைப் புரிந்து கொள்வதும் இல்லை என்பது அவரது எதிர்க் கட்டுரையிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. கஜனும், நடேசனும் நல்ல நகைச்சுவையாளர்கள் என்கிறார் கட்டுரையில். ஆனால் அவர்கள் இருவரையும்விட நல்ல நகைச்சுவையாளார் சேனன். அதற்கு இந்தக் கட்டுரையே சாட்சி. கஜனோ ப.நடேசனோ தங்கள் பார்வையை, கருத்துக்களை, இலக்கிய நோக்கை முன் வைத்து எழுதிய ஒரு பக்கக் கட்டுரையாவது படிக்கக் கொடுக்க முடியுமா சேனனால்? கஜன் எழுதிய சில கட்டுரைகளை அம்ருதாவில் வாசித்திருக்கிறேன். வெறுமனே தகவல் சொல்லும் தொகுப்புத் தன்மையுடன் இருக்கும் ஆரம்பநிலைக் கட்டுரைகள். அவருக்கென்று கட்டுரைகளில் தனித்த நோக்கோ, பார்வையோ கருத்துகளோ இருப்பதாக அந்தக் கட்டுரைகளில் தெரிவதில்லை.அவர் அப்படி எழுதுவதில் தவறோ அல்லது விமர்சனமோ என்னிடம் இல்லை. ஆனால் அவை தான் நல்ல கட்டுரைகள் என்று சேனன் கூறுகிறார் என்றால் என் சந்தேகங்கள் வலுக்கவே செய்கின்றன. நான் கட்டுரைகளில் முன் வைப்பது என் பார்வை, புரிதல் மற்றும் சில மதிப்பீடுகளை அவை அப்போதைய வாசிப்பை ஒட்டி தொகுத்துக் கொண்டவையாக இருக்கும். அவற்றின் கருத்துகள் மாறுவதும், பார்வை விரிந்து செல்லும் என்பதும் இயல்பானது. கருத்துகள், பார்வைகள் மாறாத திண்மமுடையவை என்று, என்றும் நம்பியதில்லை. சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் தொடர்பான கட்டுரையில் இரு நாவல்களிலிருந்தும் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டியது அழகியல் சார்ந்ததாகக் கற்பனை செய்து கொள்வது சேனனுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது போலும். அதில் அப்படியான அழகியல்ரீதியான சுட்டல்கள் எதனையும் நான் செய்திருக்கவில்லை. அது சேனனின் மொழிப்போதாமை தொடர்பானவை. அவர் பிரக்ஞை பூர்வமாகச் சொல்லும் மொழி என்பது நாவலின் மிகுந்த பலவீனமானது என்பது எனது புரிதல். வரிக்கு வரி சொல், பொருட்பிழையோடு எழுதுவது அறியாமை அன்றி மீறல் அல்ல. சாலைக்கும், சவலைக்கும் வித்தியாசம் புரிந்து கொள்ள முடியாத புரட்சியாளர்களிடம் என் கட்டுரையைப் படித்து தனிப்பட்ட தாக்குதல்கள் ஏதும் இருந்தால் சுட்டுங்கள் என்று கேட்பதும் தீயூழ் தான் இல்லையா?
சேனனும், லஷ்மி சரவணகுமாரும் விமர்சனங்களை அவதூறு எனக் கடந்து செல்லக் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். அதற்காக இல்லாததும், பொல்லாததுமான கருத்துக்களை என் பெயரில் புனைந்து விடுகிறார்கள். எனது விமர்சனக் கட்டுரைகளுக்கு இதுவரை அப்படியான கண்டனங்கள் – நல்ல வாசகர்களிடம் இருந்தோ, மூத்த படைப்பாளிகளிடமிருந்தோ – ஏதும் வந்திருக்கவில்லை என்ற எளிமையான உண்மையைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக நான் கட்டுரைகளில் தனிநபர் தாக்குதல் செய்திருப்பதாகச் சுட்டிக் காட்டினாலோ, படைப்பிற்கு வெளியே, அரசியல் கருத்து நிலைகளை விமர்சிக்காமல் யாரையும் தனிப்பட அவதூறு செய்திருப்பதை இருவரும் சுட்டிக்காட்டினாலோ அதற்கு வருத்தம் கோரவும், அக்கருத்துக்களை மீளப் பெறவும் எப்போதும் தயாராகவே இருக்கிறன்.