நீலகண்டப் பறவையைத் தேடி – நாவல்
அதீன் பந்தோபத்தாய
தமிழில் : சு.கிருஸ்ணமூர்த்தி
வெளியீடு : நசனல் புக் டிரெஷ்ட்
அதீன் பந்த்யோபாத்யாய எழுதிய வங்க நாவல். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது. தமிழில் மொழி பெயர்த்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி.
01.
நீலகண்டப் பறவையைத் தேடி தமிழில் வெளியாகிய காலத்திலிருந்தே தனது நுண்மையான சூழல் சித்திரிப்பினாலும், சிதறுண்ட சம்பவ விவரிப்பினாலும் பலராலும் கவனப்படுத்தப்படும் நாவலாக இருக்கிறது. அது தன்னுடைய காலத்தைய நவீனத்துவ நாவல்களிலிருந்து விலகும் புள்ளிகளே அதன் தனித்தன்மையான மர்ம வசீகரத்தின் காரணம். நவீனத்துவ நாவல்கள் பொன் செதுக்கல் போன்ற குறைந்த விவரணை, மரபை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளல், காமம், பிறழ் உறவுகளைப் பூடகமாகச் சித்திரித்தல், வாழ்வை இருண்மையாக அல்லது எதிர்மறையாக அணுகுபவை எனத் தோராயமாக வரையறை செய்து கொண்டால் – இந்த அத்தனை இயல்புகளிலிருந்தும் நீலகண்டப்பறவையைத் தேடி நாவல் விலகியிருக்கிறது. அது மரபையும், சமூகத்தையும் நவீனத்துவ நாவல்கள் போல விமர்சனத்துடனோ, பூடகமாகவோ, மூடநம்பிக்கைகளின் தொகுப்புகளாகவோ எதிர்கொள்ளவில்லை. காலத்தால் நவீனத்துவ நாவல் என்றாலும் அது நவீனத்துவத்திற்குப் பிறகான புனைவுகளின் உள்ளடக்க, சித்திரிப்பு முறையைக் கைக்கொண்டிருக்கிறது. அந்த வகையிலும் அதொரு முன்னோடி நாவல்.
முன்னோடி நாவலாக
மட்டும் அல்ல, இந்திய நாவல்கள் வரிசையில் இதுவொரு செவ்வியல் நாவலாகவும் வாசிக்கப்படுகிறது. அதன் செவ்வியல் தன்மை நாவலினுள் திரண்டிருக்கும் சமூகப்பார்வையிலும், சிதறுண்ட சம்பவ விவரிப்பிலும், நுட்பமான சூழல் சித்தரிப்பிலும் இருக்கிறது. சிதறுண்ட சம்பவிபரிப்பு இருந்தும் மொத்தமாக ஒரு நாவலாக வாசிக்கச் செய்யும் இணைப்பைத் தருவது சோனாபாலி ஆற்றை ஒட்டியிருக்கும் நிலத்தை, ஆற்று நீரை, தாவரங்களை, விலங்குகளை, மக்களை அதீன் சித்திரித்த நுண்மை. பருவநிலை மாற்றத்தை, நிலத்தை, நீரோட்டத்தை, நீர்ப்பூக்களை, தாவரங்களை உருப்பெருக்கியின் நுண்மையில் சித்தரிக்கிறார். பருவநிலை மாற்றத்தையொட்டி உருவாகும் ஆற்றின் இயல்பை, மணத்தை இந்த நாவல் சித்தரித்த அளவு நுண்மையில் இயற்கையைச் சித்தரித்த நாவல்கள் சொற்பமே.
நாவலில் நேர்கோடானதோ, தொடர்புறுத்தும் இழைகளுடையதாகவோ சம்பவ விவரிப்பு இல்லை. அது பல இடங்களில் தனித் தனி அத்தியாயங்களிலான சிறுகதை போல இருக்கிறது. அதீன் பந்யோபாத்யாயவும் நாவலின் முதல் பதினெட்டு அத்தியாயங்களைச் சிறுகதைகளாக எழுதியிருந்தார். அவை தனிச் சிறுகதைகளாக வெளியாகிப் பின் நாவலின் அத்தியாயங்களாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தனி அத்தியாயங்களிலான சிறுகதைகளை இணைக்கும் சரடாக இருப்பது முக்கியமாகச் சூழல் விவரணை, கொஞ்சமாக மனீந்திரநாத் பாத்திரம். மனீந்திரநாத் முதன்மைப்பாத்திரமா என்றால் அதை ஒத்துக்கொள்ளச் சிறிது தயங்க வேண்டியிருக்கும். நாவலின் தலைப்பும் சரி, சில விவரிப்புகளிலும் சரி முழு நாவலையுமே தாங்கும் ஆகிருதியான பாத்திரம் போல மனீந்திரநாத் தோன்றினாலும் அதுவொரு புனைவு `ஏற்பாடு’ மட்டுமே. நாவலில் பல பாத்திரங்களும் அலைக்கழிப்பும், வேட்கையும், உலகியல் ஆசைகளின்பால் இழுபட்டுச் சென்று தம் இயல்புகளிலிருந்து திரிந்துவிடும், பசியினால் மாறும் குண நலன்களுடன் வருகிறார்கள். மிகச் சிறிய கதாபாத்திரமாக வரும் பக்கிரி சாயிபு கூட முடிவில் நாவலிற்கு ஆழமும், கவித்துவ அர்த்தமும் தரும் நாட்டார் தன்மையுடனான பீர் ஆகிவிடும் `மாயம்’ நிகழ்கிறது.
சோனாவின் பிறப்பை சோனாவின் தந்தைக்கு அறியத்தர மழை இருளில் புறப்படும் ஈசமில் தொடங்குகிறது நாவல். சோனாவின் பிறப்பில் தொடங்கி
அவனது பால்ய காலகட்ட அறிதலில் முடிகிறது. அந்த `அறிதல்’ இந்திய அரசியலிலும், பண்பாட்டுச் சிக்கல்களிலும் முக்கியமான காலகட்டமாக இருக்கிறது. மூன்று நாடுகளாக உடைந்து செல்லக் கூடிய முரண் நிகழும் பிரச்சினைகளின் மையமாக இருந்த வங்கத்தின் சோனாபாலி நதிக்கரையை ஒட்டிய தன் இளமைக்கால நிகழ்வுகளை நாவலாக்கியிருக்கிறார் அதீன். அவர் வங்கத்தின் ரானதீக நதிக்கரையில் பிறந்தவர்.ஒரு வகையில் அதை அவருடைய தன் வரலாற்றுடன் கூடிய நாவலாகவும் வாசிக்கலாம்.
சோனாபாலி நதியின் ஒரு கரையில் இந்துக்களும், மறுகரையில் `தீண்டப்படாதவர்களான’ முஸ்லீம்களும் வாழ்கிறார்கள். இந்துக்கள் வசதியானவர்கள் நிலவுடமையாளர்கள் கூடவே கடுமையான ஆசாரவாதிகள். முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் இந்துக்களின் நிலங்களில் வேலை செய்பவர்கள். முஸ்லீம்களின் சித்திரிப்பில் `பசி’யும் வறுமையும் அவர்களது இயல்பைத் தீர்மானிக்கும் காரணி என்றால், இந்துக்களின் சித்தரிப்பில் கட்டுப்பாடும் ஆசாரமும் இறுக்கமாகக் கண்காணிக்கும் கண்கள்.
சலவைக்கல் போன்ற இறுக்கமான தேகமும், அழகனும், கல்வியில் சிறந்தவருமான மனீந்திரநாத் மனநிலை சரிந்தவர். போலின் என்ற ஆங்கில இந்தியோ பெண்ணின் மீது பித்தும் காதலுமாக இருக்கிறார். தன் கைகளுக்குச் சிக்காத காதல் இணையைத் தேடி ஆறு, ஏரி, காடுகளில் பித்துடன் அலைபவர். அவருடைய பித்து, கைவிடப்பட்ட காதலினால், அவரது அப்பாவின் இறுக்கமான ஆசாரத்தால் விளைந்த ஒன்று. மிலேச்சப் பெண்ணான போலினைத் திருமணம் செய்ய அவரது அப்பா சம்மதிக்கவில்லை. அதனால் அவர் தன் வாழ்வைக் கனவும், பித்தும் நிறைந்த அரூவ உலகில் பாலினுடன் இருக்கிறார். அவர் யாருடனும் உரையாடுவதில்லை – பாலினையும், சோனாவையும் தவிர. சில நேரங்களில் ஆங்கிலக் கவிதைகளைச் சொல்லிக் கொள்கிறார். மழையை, வெய்யிலை, ஆற்று நீரை, வெள்ளத்தை என எதையுமே பொருட்படுத்தாது கட்டற்று அலைகிறார் அல்லது இந்த வெளிப் பருவமாற்றங்கள் எவையும் அவரது மனநிலை சரிந்த உலகின் யதார்த்தத்தை மாற்றுவதில்லை. அதனால் அவரது செயல்களும் அசாதாரணமாக இருக்கின்றன. அதிமானுடன் போல. இளமையில் ஒரு பீர் சொன்னார் ’நீ பைத்தியமாகத்தான் போகிறாய் உன் கலங்கிய கண்கள் அதையே சொல்கின்றது’. அப்படியே ஆகியவர்.
பெரியமாமி மனீந்திரநாத்தின் மனைவி. பெரும் கனவுகளுடன் வந்தவர். மணநாளிலே மனீந்திரநாத்தின் அமைதியற்ற சுபாவம் அவரை பயங்கொள்ளச் செய்கிறது. பொன்மானை இழந்தவர்போல் மனீந்திரநாத் பெரியமாமி அருகில் தத்தளித்தபடி அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை விழுங்க முற்படுபவர் போல. “அக்கா பயமாக இருக்கிறது இந்த மனிதர் என்னை முழுங்கிவிடுவார்” என்கிறார் தன் அக்காவிடம். ஆனால் சொற்ப நாட்களிலே பெரியமாமி அர்ப்பணிப்பும் காதலுமாக அந்த வாழ்வை வாழத் தொடங்கிவிடுகிறார். கொள்ளைக்காரனைப் போல அவர், அவரை அணைத்துக் கொண்ட போதும், தன்னுடலை குழந்தையின் ஆர்வத்துடன் அவர் கையாள்வதை விரும்புகிறார்.
மாலதி இளம் இந்து விதவை.அவளது கணவன் இந்து-முஸ்லீம் கலவரத்தில் டாக்காவில் கொல்லப்படப் பின் தன் ஊருக்கு வருகிறாள். இந்து விதவையின் ஆச்சார நெறிகள் மிகக்கடுமையானவை. தனியாகத் தானே சமைத்து உண்டு, தனிக் குடிசையில் வாழவேண்டும். விதவையான அவளது நிலையும் `தீண்டப்படாத’ நிலைதான். அவளது அண்ணன் தயவி
ல் – வனப்பும், இளமையுமான இளம் விதவைக் கோலத்தில் கடந்த கால நினைவுகளுடன் ஆற்றில் வாத்துகளை மேய்த்து வாழ்கிறாள். ஆற்றின் வண்டல் போல வனப்புடன் இருக்கும் அவளுடல் அவளுக்கும் பெரும் பாரமாக இருக்கிறது. அவளது சிறிய விருப்பங்கள் கூட கட்டுக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். ரஞ்சித்திடமும் சாம்சுதினுடனும் துடுக்குடனும், விளையாட்டுமாகப் பழகுகிறாள். இந்தத் தளைகளிலிருந்து தன்னை மீட்பவனாக ரஞ்சித்தை எண்ணிக் கொள்கிறாள்.
ஜோட்டன் மாலதியின் மறு பக்கம். தன் உடலின் தீரா இச்சையை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய பண்பாட்டுச் சூழலில் இருப்பவள். குழந்தைகளையும், நான்கு கணவர்களையும் இயல்பாகப் பிரிந்து வந்தவள். அடுத்த கணவனுக்காக இச்சையுடன் காத்திருப்பவள். குழந்தை பெற்றுக் கொள்வதை அல்லாவிற்கான கடமையாகக் கருதிக் கொள்பவள். கூட்டிச் செல்ல வருவதாகச் சொல்லிச் சென்ற பக்கிரி சயாபுக்காகப் பல வருடங்களாகப் பசியுடன் காத்திருப்பவள். மாலதியையும் ஜோட்டனையும் பிரிப்பது ஒரு சிற்றாறு தான். ஆனால் அவை இரண்டு பண்பாடுகளின் எதிரெதிர் எல்லைகள்.
முஸ்லீம் லீக்கின் வருகையோடு கிராமத்தில் சலனங்கள் உருவாகின்றன. முஸ்லீம் லீக் மாத்திரமல்ல இந்தியத் தேசிய இயக்கங்களின் இரகசிய நடமாட்டமும் கிராமத்தில் இருக்கிறது. அவற்றின் அரசியல் முரண்கள் அண்டாத நிலை, பல சம்பவ அடுக்குகளாக நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. குழந்தையின் களங்கமின்மையின் அள்ளும் இயல்புடன் இயற்கையை, உலகை வேடிக்கையாக நோக்கும் நுட்பத்தை சோனாவின்னூடாகவும். பித்தும், காதலுமான மர்ம வசீகரமான சம்பவங்களை மனீந்திரநாத்தின் ஊடாகவும், வேட்கையும், இச்சையுமான விழைவை மாலதியூடாகவும், பசியை ஜலாலி ஊடாகவும், உடல் இச்சையின் பால் சுதந்திரமாக இழுபடும் விழைவை ஜோட்டனூடாகவும், முஸ்லீம் லீக் அரசியல் செயற்பாடுகளை சாம்சுதீன் ஊடாகவும், இந்தியத் தேசியப் போராட்ட இயக்கங்களை ரஞ்சித் ஊடாகவும், அர்ப்பணிப்பும் வேண்டுதலுமான உலகத்தைப் பெரிய மாமியூடாகவும் சித்தரிக்கிறார். அதில் நேரடியான விமர்சனத்தின் சொடுக்கு இல்லையென்பது சற்று ஆசுவாசம் தரக்கூடியது.
ஏற்றத் தாழ்வுகளிலான கிராமம். மதத்தாலும் துண்டுபட்டுக் கிடக்கிறது. மத வேறுபாடுகள் பொருளாதார முரண்களின் நிழலில் கூர்தீட்டப்படுகின்றன. முஸ்லீம் லீக்கால் முஸ்லீம்களின் வறுமைக்கான காரணமாக இந்து நிலவுடமையாளர்களின் ஏக-போகமும், அதிகாரமும் சுட்டப்படுகிறது. தீர்வாக இந்துக்களிடமிருந்து நிலங்களை மீட்பதும், முஸ்லீம்களின் தனி நாடும் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் விதி என்று நம்பி வாழும் வறுமை வாழ்வு அவர்களது விதி அல்ல அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்கிறான் சாம்சுதீன். மக்களை அரசியல் ரீதியாகத் திரட்ட முயல்கிறான். வறுமை வாழ்வை இயல்பானதாக ஏற்று வாழும் முஸ்லீம்கள் அந்த அரசியல் உரையாடல்களை முதலில் தவிர்க்கிறார்கள்
. கருணையும் , பெருந்தன்மையுமான இந்து தாகூர்களை அவர்களின் மரபார்ந்த அறிதலால் எதிரிகளாக நோக்க முடியவில்லை.
மரபின் வழமைகளும், ஏற்றத்தாழ்வுகளுமாகத் தேங்கி இறுகிய கிராமத்தின் வீழ்ச்சி உள்ளார்ந்தது. ஒரு வகையில் நவீன உலகை எதிர்கொள்வதற்கான வாசல்களாகவும் வீழ்ச்சிகள் இருக்கின்றன. அந்த வீழ்ச்சிகளின் சிதிலங்களிலிருந்து நவீன சமத்துவ உலகு கட்டியெழுப்பப்பட வேண்டிய சூழல். மெல்ல நிலவுடைமை, கூலி உழைப்பு என்பதிலிருந்து சமூகம் விலகும் ஆரம்ப நாட்கள். அவற்றின் வெளிக்காரணிகளாக தேசிய இயக்கங்களின் வருகை இருக்கிறது. தேசியம் மதக் கூட்டுணர்வாக முன்வைக்கப்படுகிறது.
அந்தத் தேசிய உணர்வு விடுதலைக்கான பாதையாக முன்வைக்கப்படுகிறது. சிதறிக்கிடந்த பெரும் மக்கள் திரள் பெரும் சரட்டில் இணைக்கப்படுகின்றன. அதிகாரம் நோக்கிய இணைப்பின் நாக்குகள் பிளவுகளாகச் சின்னஞ்சிறு கிராமங்களையும் தீண்டுகிறது. இயைந்திருந்த வாழ்வில் கண்ணாடி விரிசல்கள் உருவாகின்றன. சிறு பூசல்கள் மத முரண்பாடுகளாகி பெருங்கலவரங்களாகின்றன. இரண்டு சமூகங்களும் அச்சமும் பகையும் உள்ள எதிரிகளாக மெல்ல உருமாறுகிறார்கள்.
இந்த இடத்தில் நாவலைக் கடந்த காலத்தின் மிதமிஞ்சிய நினைவேக்கமாகவோ, அந்த ஏற்றத்தாழ்வுகளிலான சூழலைப் பொற்காலமாகவோ நாவல் சித்திரிக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் விடுதலைக்கான பாதையாகக் கைக்கொண்ட அணிதிரட்டல் விட்டுச் சென்ற மிச்சங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. நாடும், ஆளும் அதிகாரமும் கிடைத்த பின்னரும் அந்த வறுமை ஒழிந்துவிடவில்லை. அது இன்னும் சிக்கலான வறுமையாகவும், எதிர்த்துப் போராட வழியில்லா மீளவும் தம் விதி என நொந்து வாழ வேண்டிய கட்டாயத்தையே புதிய நாட்டிலும் அவர்கள் அடைந்திருக்கிறார்கள். திரும்பவும் தாங்கள் நம்பிய மரபார்ந்த அறிதலின் விதியின் முன்னால் தங்கள் வறுமைக்கான விடையை கண்டடைய வேண்டியவர்களாக உள்ளார்கள்.
இலங்கைச் சூழலில் இந்தப் பிளவின் கொடூர முகம் நன்றாகவே புரிந்து கொள்ளப்படக் கூடியது. இன்று அய்ந்து (சிங்களவர், வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத்தமிழர் ) தேசிய அபிலாசைகளுடனும், வேறுபட்ட தேவைகளுடனும் பயணிக்கும் இனங்களின் கடந்த காலம் இயைந்த வாழ்வுகளின் தொகையிலானது. ஆனால் அவற்றின் இன அடையாளங்கள் இன்று பெரும் பகைப் பின்புலமாக இருக்கின்றன. சிறு பொறி பெரும் காட்டையே அழிக்கும் எத்தனிப்புடன் இருக்கிறது. ஒவ்வொரு சமூகமும் பிற சமூகங்களைத் தீவிரமாகக் கண்காணிப்பவையாகவும், தண்டனை வழங்கக் காத்திருப்பவையாகவும் உருமாறியிருக்கின்றன. அச்சமும் பதட்டமுமான அன்றாடம். சிறு எல்லைப் பிரச்சினை, ஓர் அடி தடி, நிராகரிப்பு, அவமதிப்பு போன்றவை இனப் பகைப்புலத்தில் வைத்து நோக்கவும், எதிர்கொள்ளவும் எதிர்வினையாற்றவும் படுகின்றன. ஆக இவை, இனிச் சீர் செய்து கொள்ளவே முடியாத கண்ணாடிப் விரிசல்கள். இவை முகிழ்ந்த நாட்களை ஒத்தவையாக இருக்கின்றன நாவல் சித்திரிக்கும் வங்கத்தின் காலமும். பின்னால் முஸ்ஸீம் லீக்கின் ஆதிக்கத்திலிருந்து- பாகிஸ்தானிலிருந்து- கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேஷ் உருவாகுவதான முரண்களின் ஆரம்பக்காலத் தெறிப்புகளும் நாவலில் உண்டு,என்றாலும் நாவலின் தளமும், களமும் அது அல்ல. அது சமூகத்தைச் சித்திரிக்க முயன்ற புதிய கோணங்களே அதன் கவித்துவ ஆழத்தின் காரணங்களாக இருக்கின்றன. அதற்காக அதீன் கைக்கொண்ட உத்திகள் விசேட படைப்பூக்கமானவை. பித்து, குழந்தைமை, இச்சை,வேட்கை, உணர்ச்சி, அர்ப்பணிப்பு, காதல் என்ற கலவைகளினாலானவை.
மனீந்திரநாத் பித்தான யானையில் ஏறி ஊரைச் சுற்றும் காட்சி கவித்துவமானது. அவர் பித்து என்ற கட்டும் இலக்குமில்லாத யானையின் மீதே பயணம் செய்து கொண்டிருப்பவர். பித்தின் மீதான பயணம் என்பதே `இயல்பான’ சமூகத்தில் சமன்குலைவை ஏற்படுத்தக் கூடியது. ஆகவே அவரை அதிமனிதனாக, பீர் ஆக நோக்
குகிறார்கள். அவர் காணாமல் போனால் ஊரே சேர்ந்து அவரைத் தேடுகிறார்கள். அவரது பித்து அவருக்கு மதம் கடந்த ஒரு அபூர்வ ஏற்பையும் கொடுத்து விடுகிறது. அந்தப் பித்தே அவரை இறந்த ஜலாலியின் உடலை ஆற்றிலிருந்து ஆவேசமாக மீட்டு தன் தோளிலேயே தூக்கிக் கொண்டு ஓடக் கூடிய வலிமையைத் தருகிறது. சோனாவைத் தேடி நகரத்திற்கு ஆற்றிலே தனியாக நீந்திச் சென்று பாசியும், கடல் தாவரங்களுடனும் புராதன நீர் விலங்கு போல எழுந்து செல்ல உந்துதலாக இருக்கிற
து. நாயுடன் சோனாவைத் சதுப்புக் காட்டில் கைவிட்டுச் செல்ல வைக்கிறது. குழந்தையாக சோனா சதுப்புக்காட்டில் தனித்திருக்கும் காட்சியும், ஓநாய்களிடமிருந்து நாய் அவனைப் பாதுகாக்கும் நிகழ்வுகளும் உக்கிரமானவை. தற்செயல்களின் இழை அவரது பித்தை ஞானியின் கண்கள் நோக்கி நகர்த்துகின்றன. அவர் அரூபமான அந்த இரு புரிதலுக்குமிடையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். அவரே தான் சோனவையும், நாயையும் தனியே படகில் அழைத்து வந்திருந்தார். பின் அவர்களைத் தனியே கைவிட்டுவிட்டு தன் போக்கில் சென்றுவிடுகிறார். அது யாருமற்ற கைவிடப்பட்ட நிலம். நாய் தனியாக ஓநாய்களுடன் சண்டையிடுகிறது. ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராகி மனீந்திரநாத் வெட்ட வெளியை நோக்கி `கோத்திரச் சாலா’ எனக் கூவுகிறார். உண்மையில் அவரது காதல் மரபின் மீறல் தான். அந்த மீறலை அவரது மரபு அனுமதிக்கவில்லை. அவரது பித்தை கீழை மனம் நவீனத்துவத்தைத் தெரி கொண்ட போதிருந்த சமன் குலைவாகவும் வாசிக்க முடியும். சமூகக் கடமை எனும் கூட்டுணர்விலிருந்து தன்னைப் பிய்த்து… தனியனாக, தனக்கே தனியான ஆசைகளும், விருப்பங்களும் தெரிவு செய்யும் உரிமைகளு
ம் வேண்டிய சனநாயகத்தினை நோக்கிய மீறல் எனலாம். இங்கு அந்த மீறலை, பித்தின் மூலம் எதிர் கொள்கிறார். ஆனால் அவரது வீழ்ச்சியும் கூட்டுணர்வாலே எதிர்கொள்ளவும் படுகிறது. அதைத் தம் கடமைபோல எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவரது பித்தில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பங்கை நேர் செய்யப் போராடுகிறார்கள். அந்தப் பித்து நாவல் முழுவதும் விரவியிருப்பது ஓர் அர்த்த அடுக்கு என்றால் சோனாவின் கண்கள் இயற்கையைப் புதிதாக நோக்குவதைச் சித்திரிப்பது இன்னொரு அடுக்கு.
சோன நாவலின் போக்கில் வளர்ந்து விடுகிறான். அவன் உருவத்தில் மனீந்திரநாத்தை ஒத்திருக்கின்றன். அவரது சிறுவயது விம்பம் போல. மீந்திரநாத்தும் அவனில் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறார். மனநிலைச்சரிவுகள் இல்லாத ஒரு சிறுவனாக. அவனும் பேய்க்கதைகளில் ஆர்வமும் பயமும் உள்ளவன். ஈசமின் பேய்கதைகளும், ராம்நாதின் விசித்திரக் கதைகளும் அவனைக் கவர்கின்றன. ஆற்றில் பிடித்த மீனைச் சிறு குழி தோண்டி நீர் விட்டு வேடிக்கை பார்க்கிறான். பாத்திமாவுக்கும் அவனுக்குமான நட்பு குழந்தைகளின் வேடிக்கை நிறைந்தது. ஆனால் அவளைத் தொடுவது தீட்டு என்பதும் தொட்டால் குளிக்க வேண்டும் என்பதும் அவனது சிறுபராயத்துத் தீராத கவலைகள். அவன் கிராமத்திலிருந்து காளி பூசைக்காக நகரம் செல்லும் போது அங்கு அவன் பழகும் அமலா சித்தி, கமலா சித்திகளுடனான குறுகுறுப்பான உறவும். காளி பூசையும் அவனைப் பெரியவனாக்கிவிடுகிறது. வாஸ்து பூசைக்காகப் பலி கொடுக்க அழைத்துச் செல்லும் எருமையின் கண்களை அவன் பரிதாபத்துடன் நோக்குகிறான். அதில் வெளிப்படுவது குழந்தைமையின் வேடிக்கை என்றால் ஜலாலியிடம் எரிவது பசி.
மாலதியி
ன் ஆண் வாத்தைத் திருடி நீருள் அழுத்திக் கொன்று சாப்பிடும் அளவிற்கு ஜலாலியின் வறுமையும் பசிக்கான வேட்கையும் இருக்கிறது. வாத்தைச் சுட்டுத் தின்ற பின்னரே அவள் முகத்தில் அழகு கூடி வருகிறது. அவள் அல்லிக் கிழங்கு பறிக்க அல்லிக் கொடியைத் தொடர்ந்து ஏரியின் ஆழத்துள் செல்லும் போது புராதன பெரிய மீன் அவளை வயிற்றில் தாக்குகிறது. பல யுகங்களாய் ஏரியில் வாழும் பழைய மீன். தன் உடலில் பல தாக்குதல்களின் சுவடுகளைக் கொண்டிருக்கும் மர்ம மீன். அதன் உடலில் ஈட்டில், அம்புகள், கொக்கிகள் எல்லாம் யுகங்களின் வடுவாகத் தங்கியிருக்கின்றன. அந்த மீனின் பிரமாண்ட சித்திரிப்பும், தாக்குதலும் உக்கிரமானவை. கொடும் பசியை வயிற்றில் அதக்கிய மிகவும் பலகீனமான உயிரியாக ஜலாலி அதன் முன் நிற்கின்றாள். வெல்ல முடியாத பசி என்ற பேராற்றலின் முன் அவள் இறக்கிறாள். // பிரம்மாண்டமான மீன். அதன் நெற்றியில் செந்தூரமிடப்பட்டது போன்ற அடையாளம். அதற்கு எவ்வளாவு வயசோ. யார் கண்டார்கள். மனிதர்கள் காலங்காலமாக ஈட்டிகளால் அதை வேட்டையாடிய அடையாளங்கள் அதன் உடலில் காணப்பட்டன. அதன் வலது உதட்டில் இரண்டு பெரிய தூண்டில் முட்கள் டோலாக்கைப் போல தொங்கின. அதன் உடலில் மூங்கில் ஈட்டிகளின் சிறிய முனைகள் குத்திக் கொண்டு இருந்தன. தேடிப்பார்த்தால் இது போல நிறைய அந்த மீனின் உடலில் பார்க்கலாம். அந்த மீன் இப்போது மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் நீரைக்கிழித்துகொண்டு மேலே பாய்ந்து வந்தது. \\ (ப.235)
ஒரு கொலைகாரனாக தன் ஊரை, நில புலங்களை, மக்களை நீங்கி வந்தவர் பக்கிரி சாயபு. சதுப்புக்காட்டில் இறந்தவர்களுக்கு மரங்களில் எண்ணெய் விளக்கு ஏற்றிச் சடங்கு செய்து வாழ்பவர் அவர். ஆயிரம் பொத்தல்கள் உடைய விசித்திர உடை அவரது. அவர் மாலதியை மீட்டு நரேன் தாஸிடம் ஒப்படைக்க வரும் போது கொடிய பசியும், வயிற்றுப் போக்குமாக இருக்கிறார். ஆனாலும் தன் முஸ்கில்லான் விளக்கொளியில் ஓர் அபூர்வ ஆற்றல் நிறைந்த பீர் ஆக உருமாறி மாலதியைத் தன் பையிலிருந்து எடுத்து நரேன் தாஸின் கையில் கொடுக்கிறார். அவர் இறந்த நேரத்தை முன்னாக நகர்த்துவதன் மூலமும் பேராற்றலும், மாயமும், கருணையும் உள்ள `பீர்` ஆகிவிடுகிறார் பக்கிரி சாயபு.
நாவல் பல நிகழ்வுகளின் தொகுப்பு. அதீன் கதையைத் தொடர்புறுத்தும் இழைகளுடன் தொடர்ச்சியாகச் சொல்ல முயற்சிக்கவில்லை. தன் மனம் போன போக்கில் அவற்றைக் கோர்ப்பதாகத் தோன்றும் தற்செயல்களாக அவையிருக்கின்றன. அவரது சம்ப விவரிப்பில் உள்ள நுட்பம், சூழல் சித்திரிப்பில் கூடியிருக்கும் ஒருமை என்பன சிதறுண்டிருக்கும் சம்பவ விவரிப்பை, முழு நாவல் அனுபவமாக மாற்றும் திறனுடன் இருக்கின்றன. நாவலில் இப்படியான பல வெளிச்சப் புள்ளிகள் அடிக்கடி மின்னியபடியே இருக்கின்றன. இவையே கவித்துவ ஆழம் மிக்க சம்பவங்களின் கோர்வையாக நாவலை வாசிக்கச் செய்துவிடுகின்றன. நுட்பமான சித்திரிப்பில் நிகர் வாழ்வை சோனாபாலி ஆற்றின் கரையில் நிகழ்வதூடாக அந்த ஆற்றின் இயற்கையுடன், மக்களுடன், அவர்களது வேட்கைகளுடன் நாமும் இணைந்துவிடும், அவர்கள் வாழ்வனுபவங்கள் நம் அனுபவங்களாகக் கைமாற்றிவிடும் படைப்பூக்கத்தால் நீலகண்டப் பறவையைத் தேடி… தமிழில் தொடர்ந்தும் வாசிக்கவும், உரையாடப்படும் முக்கிய நாவலாகவே இருக்கிறது.
தமிழக நாவல்களில் நீலகண்டப் பறவையைத் தேடி… நாவலைப் போலச் சூழலை நுட்பமாகக் காட்டிய நாவல்கள் பல உண்டு. ஆனால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் அப்படியான நாவல்கள் மிக அரிதானவை. கொஞ்சம் ஆழமாக துழாவினால் `ஒண்டு ரண்டு’ அகப்படும். எஸ்.பொன்னுத்துரை படைப்புகளில் சூழல், மண் சித்தரிப்புகளும் நுட்பமாக இருக்கும். பிரமிளின் லங்காபுரி ராஜாவில் அதை அனுபவிக்கலாம். மு.தளையசிங்கத்தின் ஒரு தனி வீடு குறுநாவலில்ம் அப்படியான நுண் பார்வைகள் உண்டு. இவர்க
ளைத் `தவத்தி’ விட்டுப் பார்த்தால் அப்படியான நுண் சித்திரிப்புகளுடன் கூடிய புனைவுகள் அதிகம் இல்லை. இலங்கைத் தமிழ் நிலங்களின் மண்ணின் தன்மை, பருவநிலை வேறுபாடுகள், தாவரங்கள், மண்ணின் நிறம், பயிர்கள், களைகள், வாழையினங்கள், மழைக்காலத்தில் மண்ணின் இயல்பு போன்றவையும் புனைவின் ஓர் உறுப்பாக இயைந்திருக்கும் படைப்புகள் அறவே இல்லாத நிலையே இருக்கிறது. அந்த வகையில் இலங்கை தமிழ் புனைவுகள் படைப்பூக்கத்தில் ஒரு மாற்றுக்குறைவானவையாக மதிப்பிட முடியும். அவை கனவு நிலத்தில் அல்லது எங்கும் பொருந்தக் கூடிய புனைவுடலைக் கொண்டிருப்பதால் அவற்றைத் தம் பூர்வ நிலத்தில் ஆழக்கால் பதிக்க முடியாத ‘பறக்கும்’ படைப்புகள் எனலாம். நல்ல புனைவுக்கு நுட்பமான சூழல் சித்திரிப்பும் ஒரு முன் நிபந்தனையாக என்றால் இல்லை என உடனடியாக மறுத்துவிடலாம். ஆனால் அது `முக்கிய’ காரணி.
இந்தச் சூழல் சித்திரிப்பு எனும் முக்கிய காரணி இலங்கை தமிழ்ச் சூழலில் விடுபட்டுப் போனதற்குக் காரணம் அவர்களின் புனைவு குறித்த புரிதலில் இருக்கும் போதாமையே. அவர்களின் யதார்த்தம் என்பது சம்பவங்களையும், மனிதர்களையும் சித்திரிப்பதிலேயே இருக்கிறது. அதாவது அதிகமும் சொல்வதிலேயே தம் படைப்பூக்கத்தைச் செலவு செய்கிறார்கள். காட்சிகளாகச் சித்திரிப்பதில் அல்ல. அவர்கள் சொல்லும் மனிதர்கள் காலூன்றியிருக்கும் / சம்பவம் நிகழும் நிலம் என்பது அவர்களுக்கு `பொருட்டு’ அல்ல. `யாவும் கற்பனை’ என்று முடியும் முடமான கற்பனைத்திறத்துடன் இருப்பதால் அவர்களால் சூழல் சித்திரிப்பு எனும் புனைவு ஏற்பாட்டைத் திறம்படப் பயன்படுத்த முடியவில்லை. நுட்பமான சூழல் சித்திரிப்பு என்பது வெறும் புனைவு ஏற்பாடு மட்டும் அல்ல, அது பண்பாட்டு ஆவணமும் கூட. இலங்கைத் தமிழ்ப்புனைவுகள் புனைவைக் கதை நிகழ்வாக, முரண்களின் வெளிப்பாடாக அல்லது அரசியல் முரண்களாக மட்டும் சுருக்கிவிடுவதால் ஒரு எல்லையினுள் சிக்குண்டே ஒரே வகைப் புனைவுகளாகவே இருக்கின்றன. தொடர்ந்த வாசிப்பில் ஒரு நிறைவின்மையையும், போலச் செய்தலான படைப்புகளாகவும் தம்மை உணரவும் சோர்வடையவும் செய்கின்றன. இப்போதாமைகளுடன் இருக்கும் படைப்புகளைச் சிலாகிப்பவர்கள் நீலகண்டப் பறவையை வாசித்தால் மண்ணில் கால் புதைத்து நி
லைகொண்டிருக்கும் படைப்பின் நிறைவை உணர்ந்து கொள்ள முடியும்.
* * *
முக்கியமாகச் சுட்ட வேண்டியது. சு.கிருஸ்ணமூர்த்தியின் சரளமான மொழிபெயர்ப்பு. குறிப்பாக நாவலின் தலைப்பை அவர் தெரிவுசெய்த நுட்பம். நாவலின் தலைப்பில் சுட்டப்படும் பறவையைத் தமிழில் பாற்குருவி (Blue Jay) என அழைப்பதாகச் சொல்கிறார் அம்பை. ஆனால் அதைத் தவிர்த்து விட்டு ‘நீலகண்டப் பறவை’ எனத் தெரிவு செய்ததில் ஒரு மர்ம வசீகரம் இருப்பதாகப்படுகிறது. நாவலில் எங்கும் விரிந்து விபரிக்கப்படாத ஒரு கனவு போல சுட்டப்பட்டிருக்கும் பறவையை அருவமாகவே மொழிபெயர்த்திருப்பதும் நாவலிற்குக் கவித்துவ ஆழத்தைக் கொடுக்கிறது. கூடவே மாதங்களின் பெயர், சில தாவரங்களின், விலங்குகளின் பெயரை மூல மொழியிலே `அப்படியே’ மொழிபெயர்த்திருப்பதும் சுவாரசியமான வாசிப்பனுபவமாக இருக்கிறது.
***