மூர்க்கரொடு முயல்வேனை

//  இன்றைய செய்திகளின் தொகுப்பு !

 சோபாசக்திக்கு தன்னறம் விருது வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களுக்காக ஒலிக்கும் குரல் சோபாவினதாம். 

நண்பர் கிரிசாந்தின் சமீபத்திய பேச்சுக்களில் இந்துத்துவ வாடை அடிப்பதாக அடிக்கடி நண்பர்கள் விசனப்பட்டுக்கொள்கிறார்கள். 

தன்னறம் சிவராஜ் ஒரு கடும் இந்துத்துவா என்பது இலக்கிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும்.

நண்பர் கிரிசாந்தின் புத்தக அச்சாக்க பணிகளை முழுமையாக செய்து கொடுத்தது தன்னறம்.

சிவராஜ் மற்றும் தன்னறம் ஜெயமோகனின் B team என்பது எழுத்தாள, இலக்கிய வட்டங்களில் பேசுபொருள்.

ஜெயமோகனை தீவிரமாக எதிர்த்து வந்த நண்பர் கிரிசாந் சமீபகாலமாக அந்த எதிர் நிலையை கடந்து ஜெயமோகனை தனது ஆதர்ச எழுத்தாளராக வரித்துக்கொண்டிருக்கிறார்.

சோபாசக்திக்கு தன்னறம் விருது கொடுப்பதை பகிர்ந்து புளகாங்கிதமடைகிறார் சிராஜுதீன். சமீபத்தில் எழுத்தாளர் கோணங்கி மீது பலரால் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டு முன்வைத்து, கோணங்கி எல்லோராலும் ஒதுக்கப்பட்டவேளை கோணங்கிக்கு வெள்ளையடித்து பாலியல் குற்றச்சாட்டிலிருந்து அவரை காப்பாற்ற முயன்றவர் சிராஜுதீன்.

சோபாசக்திக்கு தன்னறம் விருது கொடுப்பதை மகிழ்வோடு பகிர்ந்துகொள்கிறார் கருனாகரன். விதை குழுமம், பசுமைச்சுவடுகள் குழுமம் மீது சுரண்டல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நேரம் அவர்களை அழைத்து கூட்டங்களில் பேசவைத்து வெள்ளையடித்துவிட முயன்றவர்.

விதை குழுமம் மீது பாலியல் குற்றச்சாட்டு + நிதிமோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது தனது படை பரிவாரங்களுடன் முறியடிப்பு சமரில் இறங்கி கிரிசாந் குழுவினரை காப்பாற்ற கடும் முயற்சி எடுக்கிறார் சோபாசக்தி.

சோபாசக்திக்கு தன்னறம் விருது வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களுக்காக ஒலிக்கும் குரல் சோபாவினதாம். 

குறிப்பு : முதல் பக்கத்தில வாற செய்திக்கும் மூண்டாம் பக்கத்தில வாற செய்திக்கும் ஒரு தொடர்பிருக்கு. எல்லாத்தையும் சேர்த்து பார்த்தாத்தான் நீங்க புத்திசாலி என்கிறார் ஜெயம் ரவி அண்ணா..!

நீங்க புத்திசாலியா? இல்ல சராசரியா ? //

 

நண்பர் ஒருவர் இந்தக் குறிப்பை புலனத்தில் அனுப்பியிருந்தார். இதில் கோர்க்கப்பட்டிருக்கும் இணைவுகளைக் கண்ணுற்றதும் ஒரு கணம் எதனால் சிரிப்பது என்ற சிறு குழப்பம் ஏற்பட்டது. இந்த அரியவகை அறியாமை அற்பர்களின் மூடத்தனத்துடன் மோதுவது வீண். இவை விவாதமோ, விமர்சனமோ கூட அல்ல. கடைந்தெடுத்த அறியாமை. ஆனால் இது ஈழத்திற்குப் இது புதிது அல்ல. அதன் மொத்த இலக்கிய உரையாடல்களுமே இந்த வகை மேம்போக்கான இணைவுகளின் ‘அபார’ கற்பனைகளுடனே இருக்கின்றன. அதனால் இவர்கள் தங்கள் இந்த அறியாமையைக் களைய எந்த எத்தனமும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இவற்றை நம்பிக்கையுடன் கைதூக்கிவிட, விருப்பக்குறியிட்டு இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள இலக்கியமறியாத அடிபட்ட கூட்டமொன்று எப்போதும் தயாராகவே இருக்கும். அவர்கள் இவர்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.  இந்தவகை அறியாமைகளுக்கு எந்த அடிப்படைக் கருத்தியல் தளமும் இருப்பதில்லை. இந்தக் கூச்சல்கள் எவற்றை நோக்கியவை, யாருக்கானவை என்ற ஒரு தெளிவும் இருப்பதில்லை. அது ஒரு வகையில் சமூகவலைத்தள கருத்துதிர்ப்பின் அடிப்படையும் கூட. ஆனால் கொஞ்சமேனும் சிந்திக்கக் கூடிய, இலக்கியம் கலைச்செயற்பாடுகள் குறித்த புரிதலுள்ளவர்களுக்கு இதில் இருக்கும் ‘அபத்தம்’ தெரியும்.

முக்கியமாக அவர்களுக்கு, தன்னறம் விருதுக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஒடுக்கப்பட்ட’ என்ற முன்னொட்டின் அர்த்தம் தெரியவில்லை.  ஆரம்பக்கட்ட இலக்கிய வாசகர்கள் கூட அது இன ரீதியான என்பதைப் புரிந்து கொள்வார்கள். அப்படி இனரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் பாடுகளைச் சர்வதேச அளவில் உரையாடக்கூடியவர்களுள் முதன்மையானவருக்கு இந்த விருது கொடுக்கப்படுவதில் என்ன விமர்சனம் இருக்கமுடியும்? அல்லது ஷோபாசக்தியை மறுத்து இந்த விருதுக்குப் பொருத்தமான ஒருவரை இதை விமர்சிப்பவர்களால் முன்வைக்க முடியுமா?  சிராஜ், தன்னறம் சிவராஜ், கிரிசாந் போன்றவர்களை இந்துத்துவ அடையாளத்துக்குள் திணிப்பது போன்ற எத்தனங்களில் இருந்தே இவர்களின் அறியாமையைப் புரிந்து கொள்ளலாம். ஒரு வரை விமர்சிக்க இலகுவான வழி ‘முத்திரை’ குத்திவிடுவது. ஏதுமொரு கருத்தியல் தரப்பினுள் அடைப்பது. ஆனால் அந்த முத்திரை குத்தலுக்கான எந்த அடிப்படைத் தெளிவுகளையும் முன்வைக்க வேண்டியதில்லை. சொல்கிறார்கள், கருதுகிறார்கள் என்ற ஊகங்களின் வழி அவற்றை இலகுவாகக் கடந்து செல்லலாம். யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் அதனை மீறி  சிராஜ், தன்னறம் சிவராஜ், கிரிசாந்  செய்துவரும் பணியையும், இலக்கிய உரையாடல்களையும் அறிந்த ஒருவரால் அப்படி ஒரு போதும் சுட்ட முடியாது. இந்த வகை வசையர்களுக்கு அவர்களின் செயற்பாடுகளில் கவனமோ ஆர்வமோ கரிசனையோ இருப்பதில்லை. ஒருவரின் இடத்தை, கருத்தியலை வரையறை செய்து அவற்றை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதென்பது வேறு; இப்படி முத்திரை குத்துவது பழைய வழிமுறை. இது காலாவதியாகி மிச்சக் காலம் ஆகிவிட்டது.

இவர்கள் அறிவுச் செயற்பாட்டை ஏதோ கொடுக்கல் வாங்கல் யாவாரம் போலப் புரிந்து வைத்திருக்கிறார்கள். கைக்காசைப் போட்டு நாலு இலக்கியக்  கூட்டத்தை கூட்டுவதால் கருணாகரனுக்கு என்ன கிடைக்கும்? அதனால் அவர் அடையும் உலகியல் இலாபம் என்ன? அந்த நேரத்தில் வயலுக்குப் போனால் கூட நாலு கோழிச்சூடனை பிடுங்கி பெரும்போகத்தில் நெல்லைக் கொஞ்சம் கூடுதலாக அறுவடை செய்து கொள்ளலாம். இல்லையா?  அவர் ஒழுங்கமைக்கும் இப்படியான சிறு இலக்கிய வட்டங்களிலான தொடர் உரையாடல் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். ஆனால் ஈழத்திலிருக்கும் அகப் புறத் தடைகளையும் மீறி தொடர்ந்தும் எல்லாத் தரப்பையும் இணைத்து உரையாடல்களை நிகழ்ந்திக் கொண்டிருக்கிறார் கருணாகரன். அது ஈழத்தைப் பொறுத்தவரை மிக முக்கிய பணி. இப்போது வரை அது அவரால் மட்டுமே சாத்தியமாகின்றது.

யதார்த்தன், கிரிசாந் விடயத்தில் கேட்கப்பட்ட அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களைக் குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் எங்குமே இதுவரை கொடுக்கவில்லை. தொடர்ந்து செய்வதெல்லாம் சேறடிப்புகள். நாங்கள் சொல்கிறோம் நம்புங்கள் என்பது மாதிரியான பாராமுகம் மட்டுமே.  மறுத்து எழுதப்பட்ட கட்டுரைகளுக்கோ, கேள்விகளுக்கோ இவர்களால் ஒருபோதும் பதில் சொல்ல முடிந்ததில்லை. அதற்கான சிந்தனைத் தெளிவு, தருக்க ஞானம் இவர்களிடம் இருப்பதில்லை. சரி, அது கூட வேண்டியதில்லை தங்கள் தரப்பை எங்கும் விரிவாக முன்வைத்ததில்லை. தாங்கள் கோரும் நீதி தொடர்பான பொறுப்பைக் கூடக் கொஞ்சமும் எடுத்துக் கொண்டதில்லை இதுவரை.

இதைவிட, தன்னறம் விருது தொடர்பான வேறு சில பரிந்துரைகளையும் காண முடிந்தது. ஓர் ஓர்மை மிக்க எழுத்தாளர் இந்த விருதை மறுத்திருக்க வேண்டும் என்றும், ஏற்றுக் கொண்டதனூடாக ஷோபாசக்தியின் மாண்பு கெட்டுவிட்டது என்பது மாதிரியான அபார நம்பிக்கையுடன் கூடிய ஆலோசனைகள். அதைச் சொல்பவர்கள் யார்? இப்படிப்பட்ட விருதுகளுக்கு தங்களைக் கொஞ்சமேனும் தகுதிப்படுத்திக் கொள்ளாத மேம்போக்கான சிலவற்றை எழுதியவர்கள். அவர்களுக்கு அவர்கள் எழுதியவை பெரும் படைப்புகள் என்ற நம்பிக்கை இருக்கலாம். அவர்களின் தன்னம்பிக்கை விருதுகளுக்கான தகுதிகளாக ஒருபோதும் ஆகிவிடுவதில்லை. இலக்கியம் தொடர் செயற்பாட்டையும், அர்ப்பணிப்பையும் கோரி நிற்பது. அதற்கு ஒருவர் தன்னைத் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்படி தங்கள் மொத்த வாழ்கையையும் ஆகுதியாக்கி அளித்த நவீனத்துவ எழுத்தாளர்களின் எலும்பிலும் தோலிலும் குருதியிலுமான பீடங்களிலிருந்தே நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் விருதை மறுப்பது, எதிர்வினையாற்றுவது என்பது ஒரு நவீனத்துவ நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு மட்டுமே. அது காலாவதியாகி நிரம்ப நாள் ஆகிவிட்டது. தமிழின் நவீனத்துவர்களுக்கு ‘பொப்புலிஸ்ட்’ கலாசாரத்தின் மீது கடும் விமர்சனம் இருந்தது. அந்த விமர்சனங்களில் உண்மையும், ஒரு வரலாற்றுத்தேவையும் கூட இருந்தது. அவர்கள் காலத்தில்; அதிகாரத்தை, கல்விவட்டங்களை அண்டி வாழ்ந்த வணிக எழுத்தாளர்களுக்கு, பேராசிரியர்களுக்கு பெரும் விருதுகளும், பணமுடிப்புகளும், பட்டாடைகளும் கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனால் தமிழின் உயிர் மூச்சைக் கையில் பிடித்தபடி இருண்ட, ஒடுங்கிய, நவீனத்துவ இடுக்குகளுள் மறைந்து வாழ்ந்த நவீனத்துவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் வசைகளும் புறக்கணிப்புகளுமே. ஏதோ ஒரு எதிர்கால நம்பிக்கையில் ஓர்மையுடன்  எதிர்காலம் நோக்கிச் செயற்பட்டார்கள்.  ஆக அந்தக் காலத்தில் அந்த பொப்புலிஸ்ட் மனநிலைக்கு எதிராக அவர்களின் நிலைப்பாடு கடுமையாக இருந்தது. இந்தவகை விருதுகள், பாராட்டுகளை பெறுவதை வீழ்ச்சியாகப் பார்த்தார்கள். இழிவாக இடித்துரைத்தார்கள். இன்னொரு தரப்பான முற்போக்குத் தரப்பு விருதுகளை மறுப்பதை ஒரு வகை அரசியல் செயற்பாடாக முன்வைத்தார்கள். நவீனத்துவத்தின் இன்னொரு சாரார்  பெரும் சமூக ஆகிருதிகள். ஜெயகாந்தன் ஒரு விருதை மறுத்தால் அதற்கு ஒரு பெறுமதி இருக்கிறது. அதன் அர்த்தம் வேறு. ஆனால் பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்ற பெரிய ஆகிருதிகளோ, புஜ பல பராக்கிரமமுடையவர்களோ அல்ல. கூட்டத்தில் அமுங்கிய ஒருவர். அவர்கள் விருதை மறுப்பதனூடாக அடையக் கூடியதொன்று இன்று ஏதும் இல்லை. தன்னகங்காரத்தை கொஞ்சம் திருப்திப்படுத்திக் கொள்ளலாம். முதிரா முகநூல் புரட்சியாளர்களைப் புளகாங்கிதமைடையச் செய்யலாம். அவ்வளவே. விருதை ஏற்பதனூடாக, பின்நவீனத்துவ எழுத்தாளன் அடையும் வீழ்ச்சியென ஏதுமில்லை. 

இன்று குவிந்திருக்கும் பெரும் எழுத்துக் குவியல்களைத் தாண்டி நல்ல படைப்புகள் கணிசமானவர்களைச் சென்றடைய இது போன்ற சிறிய அமைப்புகளின் விருதுகளே கைவிளக்கு வெளிச்சங்களாக இருக்கின்றன. இப்படியான நல்ல படைப்புகளுக்குக் கிடைக்கும் விருதுகள் ஆரோக்கியமானவை. கூடவே தன்னறம் விருதாளரின் தேர்ந்தெடுத்த படைப்புகளில் 1000 பிரதிகளை இளம் வாசகர்களிடம் இலவசமாக எடுத்துச் செல்கிறது. அளப்பரிய பணியிது. ஆக இப்படியான விருதுகளை பழைய நவீனத்துவ எழுத்தாளர்களின் மனநிலையில் நின்று இன்று மறுக்கவேண்டிய எந்த அவசியமுமில்லை. அப்படி மறுப்பதினூடாக அடையக்கூடியதென்று ஏதுமில்லை. மாறாக விருதை ஏற்பதனுாடாகச் சென்றடையக் கூடிய இடம் இன்னும் பெரிதாக இருக்குமே அல்லாமல் சுருங்கிவிடப்போவதில்லை. தமிழின் நவீனத்துவர்களுக்கு ஒரு வரலாற்றுத் தேவை இருந்தது, இப்போது அந்தத் தேவை வேறு விதமாக இருக்கிறது. விருதை மறுக்கவேண்டுமென்பதற்கான காரணங்களாக எதையும் அவர்கள் முன்வைத்திருக்கவில்லை. விருதை மறுக்க வேண்டுமென்போர் காலத்தால் சற்றே பின் தங்கிய பழைய நவீனத்துவ மனநிலையின் எச்சங்களே அன்றி வேறில்லை.

பி.கு : இங்கே மாணிக்கவாசகரிடமிருந்து  தலைப்பை எடுத்தாண்டிருப்பதால் இவர்கள் என்னையும் இந்துத்துவர் என்று ‘முத்திரை’ குத்தினாலும் ஆச்சரியமில்லை.

 

Scroll to Top