மூர்க்கரொடு முயல்வேனை 2

என்னுடைய எதிர்வினைகளும் கருத்துகளும் ஏன் உரையாடல்களும் கூட மதுரன், சன்சிகன் போன்ற அறியாமையின் மூடர்களுடன் இல்லை. இந்த வசையர்களுடன் உரையாடுவதில் அர்த்தமோ, பிரயோசனமோ இல்லை. ஒரு விடயத்தைக் கிரகிக்க இயலாதவர்களுடன் என்ன உரையாடல் செய்ய முடியும்? கொஞ்சம் வாசிப்பும் எழுத்துப் பரீட்சியமும் இருந்தாலே இவர்களிடம் வெளிப்படும் அறியாமையின் மூர்க்கத்தை அறிந்து கொள்ள முடியும். இவர்களால் சிறு கட்டுரையையோ அதன் மையக் கருத்தையோ வாசித்துக் கிரகித்து தங்கள் எண்ணங்களைத் தொகுத்து முன்வைக்க முடியாது. என்னுடையது மிகச் சிறிய கட்டுரை. அதில் பிரச்சினையின் மையத்தைமட்டும் தொட்டு என்னுடைய மாற்றுப் பார்வையை முன்வைத்திருந்தேன். அவ்வளவுதான் இந்த விவாதங்களில் செய்ய முடியும். அதில் தனிநபர் தாக்குதலோ, இடுப்புக்கீழ் அடிப்பது போன்ற சில்லறைச் சண்டித்தனங்களோ செய்வதில்லை. அது சொந்தக் கருத்துகள் இல்லாதவர்கள் பொது விவாதங்களைச் செய்யமுடியாதவர்களின் வழிமுறை. நமக்கு இது என்ன கடைசி உரையாடலா? கடைசி விமர்சனமா? கடைசிக் கருத்தா?  இன்னும் தொடர்ந்து உரையாடவும் விவாதிக்கவும் களங்கள் இல்லையா? கூடவே இந்த உரையாடல்களில் மதுரன், சன்சிகன் முகாந்திரங்கள் மட்டுமே. பின்னணித் திரைச் சீலை போல. அவர்களை முன்வைத்து உரையாடல்களை பொதுவில் செய்ய விழைகிறேன். நம் சூழலில் பொது விவாதங்கள் எல்லாம் இப்படியான கசடுகள் கொட்டியே இருக்கின்றன. விவாதத்தில் மாற்றுத் தரப்பு எதிரிகள் அல்ல என்பதும் அது கருத்தியல் தரப்பு மட்டும் தான் என்பதுமே முக்கியம். சிற்றிதழ்ச் சூழலிலிருந்து வந்தவர்களால் அதை ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடியும். கடுமையான கருத்தியல் விவாதங்களும் கூட சட்டென்று அணைந்து கூடிக் குலாவுவதாக அமைந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் நாங்கள் இயக்கப் பாரம்பரியமுள்ளவர்கள். அதன் சிந்தனைத் தொடர்ச்சியை காவுபவர்கள்.  எமக்கு மாற்றுக் கருத்தாளர்கள் பரம எதிரிகள். அவர்கள் அவர்களின் கருத்துகளுடன் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதே இயல்பான மனநிலை. 

ஆனால் இந்த வசையர்கள் ஏதோ ஒடுக்கப்பட்டவர்களின் / பாதிக்கப்பட்டவர்களின் மீட்பர்களாகத் தங்களைப் போலியாகக் கருதி, புரட்சி செய்வதுதான் வேடிக்கையானது. அந்தப்  போலி நியாயத்தின்’ திரைமறைவில் எந்தக் கீழ்மை வரையும் செல்லலாம் என்பதும், பின் நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் பின்னால் இருக்கிறோம் என்று சட்டையைத் தூக்கி விடுவதும் எவ்வளவு பெரிய அபத்தம். இவர்கள் இதுவரை ஒடுக்கப்பட்டவர்கள் குறித்த கரிசனையோ, செயற்பாடோ நிகழ்த்தாதவர்கள். அது குறித்து செயற்களத்தில் ஒருபோதும் நின்றிராதவர்கள். அதற்கான கருத்தியல் தெளிவோ, கரிசனையோ கிஞ்சித்தும் இல்லாதவர்கள். அதற்காக ஒரு ஈர்க்குக் குச்சியைக்கூட நகர்த்தாத நாற்காலிச் சோம்பலர்கள். மற்றவர்கள் என்.ஜி.ஓ தனமானவர்கள். தங்கள் மூளையை வசதியாக அடகு வைத்திருப்பவர்கள். சமூகவலைத்தளம் போன்ற சராசரிகளைச் சங்கமிக்கச் செய்யும் இடம் இல்லை என்றால் இவர்களின் குரல்களை வாசகசாலை விவாதங்களில் கூட யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். மெல்லிய எள்ளலுடன் மட்டம்தட்டிக் கடந்து சென்றுவிடுவார்கள். ஒருவர் தன்னுடைய கருத்தியல் தளத்தை வலுவாக உருவாக அதற்கான உழைப்பை, வாசிப்பைக் கொடுத்த வேண்டும். ஆனால் இவர்கள் ஒரு பிரச்சினை வந்தவுடன் ஒடுக்கப்பட்டவர் சார்பான புரட்சியாளர்கள் என்ற முகமூடியை அணிகிறார்கள். இதற்குச் சில தோற்றுப்போன இலக்கியவாதிகளின், அரைவேக்காட்டுச் சிந்தனையாளர்களின் ஒத்தூதல் இருக்கிறது. இவர்களுடைய அடிப்படைச் சிக்கல் என்ன என்பதும், இவர்களது நோக்கம் என்ன என்பதும் பொதுச் சூழலால் உணர்ந்து கொள்ள முடியாததல்ல. ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பவர்கள் இவர்கள் போல் வம்பு செய்யவோ, வசை சொல்லவோ மாட்டார்கள். இந்தவகைப் போராட்டத்தின் எல்லைகளை நன்றாகவே தெரிந்தவர்கள்,  ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கரிசனையுடன்  இயங்குபவர்கள், கருத்துச் சொல்பவர்கள் பலரும் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் யாரும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக என்று சொல்லிக் கொண்டு கீழ்மையின் கடைசி எல்லைக்கு இறங்கிச் செல்வதில்லை. அப்படியான போலி முகமூடியின் திரைமறைவுள் இருந்து தங்கள் மனக்கசடுகளை, தாழ்வுணர்வுகளைக் கூச்சமே இல்லாமல் பொதுவில் கொட்டுவதில்லை.

பொதுச் சூழலில் ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் தான், அதற்கான பொறுப்பையும் பொதுச் சமூக ஏற்பைக் கோரும் செயல்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். குற்றச்சாட்டின் மீது எழுப்பப்படும் சந்தேகங்களைக் களைய வேண்டும். அதுதான் அடிப்படை. அதனூடாகவே அதற்கான பொது நீதியை நோக்கி நகரமுடியும். அது நீண்ட தொடர் செயற்பாடுகளினூடாக விவாதங்கள் ஊடாக ஈட்டிக் கொள்ளவேண்டியது. தங்கள் செயலில் அர்ப்பணிப்பு, சமூக அக்கறையும் சமூகவியக்கம் குறித்த அடிப்படைப் புரிதலுள்ளவர்களால் மட்டுமே இயலக்கூடியது. ஆனால் இந்த வசையர்கள் தொடர்ந்தும் ஆதாரங்கள் விடயத்தில் ஏதோ காணொளி ஆதாரம் கேட்பது போலவும் அது சாத்தியமில்லை என்பது போலவும் எகத்தாளமாகக் கருத்துதிக்கிறார்கள். தொலைபேசி இலக்கம் இருக்கிறது அழையுங்கள் என்கிறார்கள். இவை பொதுவில் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள்.  தனிப்பட இருவர் பேசித் தீர்ப்பிட வேண்டியவை அல்ல, அந்த எல்லையை இவை ஆரம்பத்திலேயே கடந்துவிட்டன.  ஆனால் குற்றச்சாட்டுகளில் அறிவுஜீவித் தரப்புக் கோரும் ஆதாரங்கள் அப்படி இவர்கள் முன்வைப்பது போன்ற காணொளி ஆதாரங்கள் அல்ல. அப்படி யாருமே கோரவில்லை. கோரவும் மாட்டார்கள். இவர்கள் தங்கள் போராட்டப் போதாமையை மறைக்க  அவிழ்த்துவிடும் பொய்களன்றி வேறல்ல. இங்கும் தொடர்ந்து குறைந்தபட்ச ஆதாரங்களே கோரப்படுகின்றன. அவை பாதிக்கப்பட்டவர்களின்  சொந்த வாக்குமூலங்களாகக் கூட இருக்கலாம். குற்றத்தின் பாதிப்புகள். அதற்காகப் பொதுவில் எதிர்பார்க்கும் நீதி அவ்வளவே திரும்பத் திரும்பக் கோரப்படுகிறது. இந்த பிரச்சனை மீ ரூ போல் அல்ல என்பதும், கூடவே நிபந்தனைக் குற்றங்கள் என்ற அளவிலுமே நீதி கோரப்படுகிறது என்பதும் வெளிப்படை.  

பாதிக்கப்பட்டவர் இரத்தமும் சதையுமாகப் பொது வெளிப்பட்டு நீதிகேட்கும் வெளியும், இந்தச் சமூக வலைத்தள ஊடக வெளியும் ஒன்று அல்ல. இரண்டின் வெளிப்பாடும் பாதிப்புக் கோரும் வழி முறைகளும் ஒன்று அல்ல. பாதிக்கப்பட்டவர் நேரடியாக வெளிப்பட்டு நீதி கோருவதும், ஒழுக்க வாத-பிற்போக்கு குழு பாதிக்கப்பட்டவர்களை தங்களின் அரசியலுக்காக இழுத்துவருவதும் ஒன்று அல்ல, அல்லது இது போன்ற கீழ்மைக் கும்பல் சொல்லும் குற்றச் சாட்டுகளை எல்லாம் பொருட்படுத்தவோ, அல்லது அதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு தண்டனை நோக்கி நகரக் கூடிய அளவிலோ இந்தப் பிரச்சினை இல்லை என்பதே இங்கிருக்கும் சிக்கல். காரணம் இவர்களுடைய கடந்த காலச் செயற்பாடுகள் கூட அல்ல. குற்றச்சாட்டு வெளிப்படுத்தப்பட்ட பின்னரான செயற்பாடுகளும் கூட எந்த நம்பகத் தன்மையையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதை முகமூடியாக வைத்துப் பிறரை வசைபாடுவதும், குற்றவாளி எனத் தீர்ப்புரைப்பதும், அவதூறு பரப்புவதும், தங்கள் மனக்கசடுகளைக் கொட்டுவதுமே தொடர்ந்து நிகழ்கிறது. உண்மையில் இதில் கரிசனை இருப்பவர்கள் முதலில் செய்திருக்கவேண்டியது எந்த அடிப்படைக் கருத்தியல், சமூகப் புரிதலுமற்ற இந்த வசையர்களை பாதிக்கப்பட்டவர்கள் பக்கமிருப்பதாகக் காட்டி தங்கள் மன வக்கிரங்களைக் கொட்டாதிருக்கக் கோருவதும், கண்டிப்பதுமே. ஆனால் இவர்கள் இதனுடன் விடாமல் வம்படியாக ஒட்டிக் கொண்டே இருப்பார்கள். இந்த ஒடுக்கப்பட்டவர் பக்கம் இருக்கிறோம் என்ற பதாகைகளே இவர்களின் விசமமான மனக் கசட்டை, வன்முறையைக் காக்க இவர்களிடமிருக்கும் ஒரே கவசம். 

குற்றச்சாட்டுப் பிரச்சனையின் பின்னும் அதற்கான எந்தப் பொறுப்புக் கூறலையும், நியாயமான கவனம் கோரலையும் இந்தத் தரப்பு இதுவரை செய்திருக்கவில்லை. குறைந்தபட்சக் கேள்விகள் கூட பொருட்படுத்தப்படவில்லை. அடிப்படைச் சந்தேகங்களுக்குக் கூட பதிலளிக்கப்படவில்லை. இதை விமர்சிப்பவர்கள், கேள்வி கேட்பவர்கள் எல்லோரையும் எதோ ஒடுக்கப்பட்டவர்களுக்கு / பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரானவர்களாகச் சித்திரிப்பதும், முத்திரை குத்துவதுமே இவர்கள் செய்வது. அதற்குமே தாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் இருக்கிறோம் என்ற போலி நம்பிக்கையூடாக எதிர்த்தரப்பை எந்த எல்லை வரை சென்றும் கீழ்மையுடன் தாக்கத் தயங்குவதே இல்லை. அதில் ஒரு பாசிச உளவியலும் இருக்கிறது. மிகையாகவே தாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கமாக இருப்பதாகப் பாவனை செய்கிறார்கள். அதன் பொருட்டு மிகையாக ஆவேசமாக பொதுவெளியில் நடிக்கிறார்கள். அதனூடாக எதிர்த்தரப்பை வசைபாட தங்களுக்கு உரிமை, அதிகாரம் இருப்பதாக வெளிப்படுகிறார்கள். தங்கள் சொந்தச்சிக்கல், கசடு, அறியாமை, அறிய விரும்பாமைகளை இதனூடாக மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இருப்பது ஒருவகை மனச் சிக்கல். தங்கள் கசடுகளைக் கொட்டத் தேவை ஒரு கவசம். பாதிக்கப்பட்டவர்களை அதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்களின் அறியாமையின் மூர்க்கம் நம் சூழலின் பெரும் அச்சுறுத்தல். ஒருங்கிணைந்து தங்கள் உரிமைகளைக் கோரவேண்டியவர்கள் சொந்த நலன்களின் பொருட்டு ஒருங்கிணைவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த அற்பர்களின் அறியாமையுடன் மோதிக் கொண்டே இருக்க வேண்டியதே நமக்கிருக்கும் ஒரே வழி. இவர்களைத் திருத்துவதோ அல்லது அம்பலப்படுத்துவதோ அல்ல நோக்கம். தங்களாகவே அம்பலப்படுபவர்கள்தான் அதற்காக நாம் பிரயத்தனப்படவேண்டியதில்லை. 

நான் எழுதிய கட்டுரைகளில் இவர்களது அறியாமையையும், இவர்களது போராட்ட வழிமுறையின் போதாமையையும், இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் தரப்பே அல்ல என்பதையுமே திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். இந்தப் பிரச்சினை விவாதத்திற்குரியது.  ஆனால் இந்தப் பிரச்சினையில் இவர்கள் ஒரு தரப்பே இல்லை. ஏனென்றால் உண்மையில் பாதிக்கப்பட்ட தரப்புடன் நிற்பவர்களுக்கு கருத்தியல் நிலைப்படு, விவாதத் தளம், இலக்கு நோக்கிச் செயற்படும் விதம் என்பவற்றில் கரிசனை இருக்கவேண்டும். அதைப் பொதுவில் வைத்தபடியும், அதை நோக்கிய உரையாடல்களைச் செய்தபடியும் இருப்பார்கள். இவர்கள் நிகழ்த்துவது,  நிகழ்த்த விரும்புவது அப்படியானதொரு உரையாடலே அல்ல. இவர்கள் கொடிய விசமேறியவர்கள். திடீரென ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் என்ற கருத்தியல் கோசத்துடன் களத்தில் குதித்தவர்கள். உண்மையில் தாங்கள் களமாடும், கோரும் நீதியிலோ அக்கறை இருந்தால் அவர்கள் செய்வதற்கும் வெளிப்படுவதற்கும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. ஆனால் அந்த எளிமையான அடிப்படைகளைத் தெளிவுபடுத்தாமல் சிக்கலாக்கிக் கொண்டே செல்பவர்கள். இந்தப் பிரச்சினையின் பின்னும் கூட தங்கள் போதாமைகள், பிரச்சினைகளை ஒரு போது பழுதுபார்த்ததோ அல்லது அதை நோக்கிய சிறு முயற்சியைச் செய்ததற்கான எந்தவகை எத்தனமும் இவர்கள் செய்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் ஒடுக்கப்பட்ட / பாதிக்கப்பட்டவர் பக்கமே இல்லை. அது ஒரு பாவனை மட்டுமே. அதனூடாக அதையொரு கேடயமாகக் கொண்டு எதிர்த்தரப்பை வசைபாடி கீழ்மையின் எல்லை வரை சென்று தங்கள் அறியாமையின் தாழ்வுணர்வுகளையும், வன்மத்தையும் கொட்டிக் கொள்வதே. கேட்டால்; நாம் ஒடுக்கப்பட்டவர் / பாதிக்கப்பட்டவர் பக்கம் இருக்கிறோம் என்று தங்கள் நெஞ்சைக் கிழித்துக் கோசமிடுவார்கள். அவர்களது நெஞ்சுக்குள் இருப்பது கீழ்மையின் கசடுகள் மட்டுமே. 

***

இவற்றையும் பார்க்க :

ஒழுக்கவாதப் பெண்ணியத்தின் புழுதிப்புயல்

மூர்க்கரொடு முயல்வேனை

Scroll to Top