ஒழுக்கவாதப் பெண்ணியத்தின் புழுதிப்புயல்

01.

எழுத்தாளர் யதார்த்தன் மீது பாலியல்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதனையொட்டி 51வது இலக்கியச் சந்திப்பின் தொகுப்பான இமிழில் யதார்த்தனின் சிறுகதை பிரசுரமானதைக் கேள்விக்குட்படுத்தியவர்களுக்கு, இலக்கியச் சந்திப்பு அரங்கிலும், முகநூலிலும் ஷோபாசக்தி சில பதில்களைக் கொடுத்திருக்கிறார். (பார்க்க: பின்னிணைப்பு 1)  இதில் கவனிக்க வேண்டியது, உரையாட வேண்டியது, விவாதிக்க வேண்டியது   ‘பாலியல் குற்றவாளி’ யதார்த்தன் – என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைத்தான். இதழ் தொகுப்பில் இருந்த நடைமுறைப் பிரச்சினைக்கான பதிலை ஷோபாசக்தி தன் இலக்கியச் சந்திப்பு உரையிலும்,  பின்னிணைப்பு 1 இலும்  குறிப்பிட்டிருக்கிறார். அதையும் தாண்டி அந்த கேள்விகளில் இருக்கும் அபத்தத்தையும், ஆபத்தையும் அதன் கருத்தியல் வறுமையையும்,  வெளியில் அம்பலப்படுகிறோம், நீதிவாங்கிக் கொடுக்கிறோம், தண்டிக்கிறோம் வகையான போராட்டத்தின் அபாயகரமான புள்ளிகளை ஓர் எழுத்தாளன் என்ற எல்லைக்குள் இருந்து முன் வைக்க விரும்புகிறேன்.

பொதுவெளியில் –  சமூக வலைத்தளங்களில் –  குற்றவாளிகளை, குறிப்பாக பாலியல் குற்றவாளிகளை அம்பலப்படுத்தும் போராட்ட வழிமுறை குறித்து 10 வருடங்களின் முன்னிருந்த புரிதலும் ஆதரவு மனநிலையும் இப்போது இல்லை. அது ஆபத்தான வழிமுறையும் கூட. அதனூடாக நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையோ, இழப்பீட்டையோ பெற்றுக் கொடுக்க முடியாது. இன்று அந்த வழிமுறை சென்றடைந்திருக்கும் அபாயகரமான இடத்தையும், அதன் போதாமைகளையும், யதார்த்தன் விடயத்தில் இதை முன்னெடுப்பவர்கள் ஒழுக்கவாதத்தினூடாக ஆணாதிக்கத்தின் மொழியில், வழிமுறையில் எப்படிச் செயற்படுகிறார்கள் என்பதையும் சுட்டுவதே என் நோக்கம். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க – அது என்ன வகையான நீதி என்பதுக்கான பதில் எங்கும் இல்லை-  யதார்த்தன் மீது அவர் பாலியல் குற்றவாளியென்றும் அவர் பொது வெளியிலிருந்து அகற்றப்பட வேண்டியவரென்றும், அவருடைய கதைகள் இதழ்களிலோ, தொகுப்புகளிலோ சேர்க்க வேண்டாம் என்றும் கண்டனங்கள், அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.  அப்படி அவருடைய கதைகளை வெளியிட்ட இமிழ் தொகுப்பின் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அதாவது,ஒரு குற்றவாளியைச் சமூகநீக்கம் செய்வது போன்ற முனைப்பு தென்படுகிறதே ஒழிய என்ன வகையான நீதியைக் கோருகிறார்கள் என்ற தெளிவு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை அல்லது அவர் புரிந்த குற்றத்தின் தன்மை தொடர்பான எந்தப் பொது உரையாடலுக்கும் இந்த குற்றஞ்சாட்டும் தரப்பு இதுவரை எங்கும் பொறுப்பாகப் பதிலளித்திருக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் சார்பாக ஒரு குழு அல்லது ஓர் அணிச் செயற்பாட்டாளர்கள் அணி திரட்டலைக் கோருகிறார்கள். உண்மையில் இது நல்ல ஆரோக்கியமான விடயம் தானே இதில் என்ன தவறு இருக்க முடியும்? இந்த வகை அணிதிரட்டலைச் செய்யும் அந்த குழு எப்படி ஆணாதிக்கத்தின் மொழியில், வழிமுறையில் அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கிறது அல்லது அந்தக் குழுவை எப்படி ஆணாதிக்கத்தின் காவல்காரர்களாக உரையாட முடியும் என்று ஒரு ’சராசரி’ கேட்கலாம். 

ஒன்று, இந்தக் குழு எவற்றையெல்லாம் பாலியல் குற்றங்களாக வரையறுக்கிறது என்பது தொடர்பான போதாமை அல்லது தெளிவின்மை. இரண்டாவது, அதற்காக அவர்கள் கைக்கொள்ளும் வழிமுறையில் உள்ள அபத்தமும் ஆபத்தும்.

அவர்கள் கோரும் கிடைக்கவே முடியாத நீதி குறித்த அக்கறையோ, தொலைநோக்கு முதிர்ச்சியோ இல்லாத அவர்களின் கடந்தகாலச் செயற்பாடுகள் மீதான ஒவ்வாமையே எழுகிறது. தங்களுடைய கடந்த காலச் சறுக்கல்களில் இருந்து இந்தப் போராட்டக்காரர்கள் ஏதும் கற்றுக் கொண்டதற்கான, பொறுப்புக் கூறியதற்கான தடயங்களோ இதுவரை இல்லை. 

பாதிக்கப்பட்டவர்களுக்கான  ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்காமல் தொடர்ந்து அவதூறாளர்களின் மொழியில் எழுதி-பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கூடவே பாதிக்கப்பட்டவரை தங்கள் குறுகியதும், மிகவும் பிற்போக்கானதுமான போராட்ட வழிமுறைக்குள் இருத்திவைத்து பலிக்கடா ஆக்குகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியையோ, பொது அணிதிரட்டலையோ செய்வதில்  கரிசனை கொள்வதற்குப் பதிலாக தங்கள் அரசியலுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பாகப் பாதிக்கப்பட்டவரை மடைமாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.

தாங்கள் முன்வைக்கும் வழிமுறையான போராட்டம் மட்டுமே சரியானது, அதைச் சந்தேகிப்பவர்கள், மறுப்பவர்கள் ஆணாதிக்கவாதிகள் என்ற பொத்தம் பொதுவான அரசியல் சராசரித்தனத்துடனான மூர்க்கத்துடன்  நடந்து கொள்கிறார்கள்.இவர்கள், பெண்ணியத்தரப்பில் மிகச் குறுகிய தரப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தும் குறுங்குழு மட்டுமே.  இவர்களின் வழிமுறையும் போராட்ட வடிவமும் தான் ஒட்டுமொத்தப் பெண்கள் சார்பான பிரச்சினைக்குச் சர்வரோக நிவாரணியோ தீர்வோ அல்ல என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். கூடவே இதன் மாற்றுச் சாத்தியங்கள், நீதி, போராட்ட வழிமுறைகள் குறித்தும் பெண்களே பொதுவெளியில் முன் வைக்க வேண்டும்.

இவர்கள் யதார்த்தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையோ, தங்கள் நிலைப்பாடு தாங்கள் கோரும் நீதி குறித்து எந்த முன்வைப்புகளும் செய்யவில்லை. பொது நீதியைக் கோருவதற்கான குறைந்த பட்ச பொறுப்புடனும் நடந்து கொள்ளவில்லை. இது பாதிக்கப்பட்டவர் மீதான சந்தேகங்கள் அல்ல அவரை வைத்து இந்த மூன்றாம் தரப்பு – மீடியம்-  கைக்கொள்ளும் வழிமுறை குறித்த சந்தேகம். அதாவது ‘நோயாளியும் சாகக் கூடாது நோயும் மாறக்கூடாது’ போன்று செயற்படுகிறார்கள்.

இவையே இவர்களின் செயற்பாடுகள் மீது நான் முன் வைக்கும் சந்தேகங்கள். இவை பதில் குற்றச்சாட்டுகள் அல்ல. அல்லது யதார்த்தன் என்னுடைய சகா, எழுத்தாளர் அல்லது சக ஆண் என்பதன் பாற்பட்ட அக்கறையோ அல்ல. பாலியல் குற்றவாளி என்று முன்வைப்பவர்கள் செல்லும் வழிகுறித்த தெளிவின்மை அதன் ஆபத்து என்பன குறித்த கரிசனை மட்டுமே. 

பொதுநீதிக்கான அணிதிரட்டலுக்குச் சில முன்நிபந்தனைகள் வேண்டியிருக்கிறது. 

  •  முக்கியமாக, போராட்டக்காரர்கள் தங்கள் வழிமுறை மட்டுமே சரி என்பதில் அடாத்தாக நிற்கவே கூடாது. மாற்று வழிகளையும் சாத்தியங்களையும் பரிசீலிக்கத் தயங்கவே கூடாது.
  • அது எவ்வளவு தான் தாமதமாகுமென்றாலும் பாதிக்கப்பட்டவரை, குற்றஞ்சாட்டுபவரை அந்தச் சூழலுக்குத் தயார்ப்படுத்தும் வரை தீர்ப்பு நோக்கி நகரவே கூடாது. 
  • போராட்டக்கார்கள் குற்றச்சாட்டு முன்வைக்கும் போதோ தாங்கள் எதிர்பார்க்கும் நீதியையும் பொதுவில் முன்வைக்க வேண்டும்.

பாதிக்கப்படவரே நேரடியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அதற்கான திராணி அல்லது ஒட்டுமொத்தப் பெண்களின் பொருட்டு சிலுவை சுமக்கும் வலிய இதயமுடையவர்களும் தமக்கு இழைக்கப்பட்ட குற்றத்தைப் பொதுவில் வைத்து நீதிகோரி ஒட்டுமொத்தப் பெண்களுக்குமாகச் செயற்படலாம். அது எல்லோராலும் இயலுமானதல்ல. அதை நாம் கோரவும் முடியாது.

ஏனென்றால், பொதுச்சூழல் அவர்களை மூர்க்கமாக எதிர்கொள்ளும். வாழ் நாள் முழுதும் போராடிக் கொண்டேயிருக்கவேண்டும். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடும், நீதியும் பெற்றுக்கொடுப்பதும், அவர் விரும்பும் சுமுகமான வாழ்வை அமைத்துக் கொடுப்பதும் அறிவுச்சூழலின் கடமை. இங்கே பாதிக்கப்பட்டவர் சார்பாக மூன்றாம் தரப்பு தங்கள் பிற்போக்கான அரசியல் நோக்கோடு செயற்படும் வழிமுறையே பிரச்சினையைச் சிக்கலாக்குகிறது.

முக்கியமாக, இந்தக் குற்றஞ்சாட்டும் தரப்பு ஆதாரங்கள் என்ற விடயத்தில் நுாதனமான வழிமுறையைக் கையாள்கிறார்கள். அதுவும் ஏற்புடையதோ, அறிவுச்சூழல் வழிமுறையோ அல்ல. வலு கூலாக ‘தோழர் ஆதாரம் வைத்துவிட்டா குற்றம் செய்கிறார்கள்?’என்று கேட்கிறார்கள். இது கடந்த காலங்களில், இப்போதும் கூடத்தான் பரவலாகச் சொல்லப்படும் ஒரு மேம்போக்கான பதில். பாதிக்கப்பட்டவர் தான் புழங்கும் கலாசார பண்பாட்டுச் சூழலில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால் அதை எதிர் கொள்பவர்களுக்கு ஆதாரம் வேண்டியிருக்கவில்லை. அல்லது அங்கு பாதிக்கப்பட்டவர் என்பது இரத்தமும் தசையுமான ஓர் இருப்பு. அந்த நீதி கோரும் வட்டத்தில் புழங்கியவர். ஆக அங்கு ஆதாரத்தை கேட்கவேண்டியதில்லை என்பது அறிவுச்சூழல் வலியுறுத்திய பொதுக் கருத்து. அதையும் மீறி அங்கே ஆதாரம் கேட்பவர்களின் நோக்கம் வேறு. ஆனால் இங்கு பொதுவெளி என்பது முகமிலிகளின் பேஸ்புக் புரொபைல்கள். இப்பொது வெளியும், இரத்தமும் தசையுமாக பாதிக்கப்பட்டவர் வெளிப்படும் வெளியும் ஒன்றல்ல. அதை எதிர்க் கொள்ளும் சூழலும் ஒன்றல்ல. அதனால் இவ்வகைக் குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் முன்வைப்பவர்கள் பொறுப்பும் கவனமும் கூடுகிறது. இங்கு அறிவுச்சூழலால் கோரப்படும் ஆதாரங்கள் என்பவை அடையாளம் வெளிப்படுத்தும் ஆதாரங்கள் அல்ல. மிகக் குறைந்தபட்ச ஆதாரங்கள். அவை நம்பகமான தரப்பால் முன்வைக்க வேண்டியிருக்கிறது. அந்த நம்பகத்தன்மையை அவர்களின் உணர்ச்சி மேலிடாத கடந்த காலச் செயற்பாடுகளில் இருந்து ஈட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.  அவை அறிக்கையாகவோ, குரல் பதிவுகளாகவோ, திரைச்சொட்டாகவோ முன் வைக்கலாம். எதுவுமே வெளிப்படுத்தப்படாத அநாமதேயக் குற்றச்சாட்டுகள், பாலியல் சேறடிப்புகள் ஆணாதிக்க அயோக்கியர்களால் காலங்காலமாக  பெண்கள் மீது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக – பதிலடியாகவே நாங்களும் இந்த வகை வழிமுறையைக் கைக் கொள்கிறோம் திருப்பி அடிக்கிறோம் என்று இவர்கள் சொன்னால் அதில் வருத்தங்கள் ஏதும் இல்லை. அந்தத் தார்மீகக் கோபத்தைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் அந்தச் சண்டியர்களுக்கான எதிர்வினையை அவர்களுடன் சாக்கடையில் இறங்கி நின்றுதான் செய்ய வேண்டுமே ஒழிய அறிவுசூழலிடம் வந்து சமூக விலக்கம் செய்யக் கோரக்  முடியாது. ஏன் என்றால் இந்த யதார்த்தன் விடயத்தில்  குற்றச்சாட்டும், யதார்த்தனும் எப்போதும் இணைந்திருப்பார்கள். அவர் வாழ்நாள் எல்லாம் –  ஒழுக்கவாதத்தால் தண்டிக்கப்பட்ட பெண்ணொருவர்  தன்னை நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்க வேண்டுமோ,அதே மாதிரியாக யதார்த்தனும் போராடிக் கொண்டிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர்களுக்கு அடுத்த டிரெண்டிங் கிடைத்துவிடும். அடுத்த புரட்சிப் பதாகையை எழுதக் கிளம்பிச் செல்வார்கள். 

நீதி எப்போதும் குரூரமானதே.

யதார்த்தன் மேல் இதுவரையில் பொதுவெளியில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இவர்கள் எப்படிப் பாலியல் குற்றங்களாக வரையறுக்கிறார்கள் என்பதிலும் எனக்குப் பெருத்த சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கின்றன. ஏனென்றால் எங்கும் இவர்கள், அப்படியான குறிப்புணர்தல்களோ, குற்றத்தின் தாக்கம் விழைவு குறித்த முன்வைப்புகளோ இதுவரை செய்யவில்லை. எல்லாக் குற்றங்களும் ஒரே அளவானவையோ,ஒரே தண்டனை வழங்கப்பட வேண்டியவையோ அல்ல. இந்தச் சட்டத்தரணிகள் சூழ் பேரவைக்கு இது புரியாததும் அல்ல. ஒரு குற்றச்சாட்டில் இவையே முக்கியமாகக் கவனங்கொள்ள வேண்டிய விடயங்கள். 

இதுவரை யதார்த்தன் மீது வைக்கப்பட்டிருக்கும் பொதுவெளியிலான  குற்றச்சாட்டுகள் மூன்று.

  1. ஒரே சமயத்தில் இரு பெண்களுடன் காதல் உறவில் இருந்தமை.
  2. ஆடை தொடர்பான கேள்விகளுடன் ஒரு பெண்ணுடன் தொலைபேசியில்  பாலியல் நோக்குடன் உரையாடத் தொடங்கியமை . 
  3. நகுலாத்தை நாவலில் நன்றிக்குரியவர்கள் பகுதியில் ஒரு பெண்ணின் பெயரை அவரிடம் அனுமதிகோராமல் சேர்த்திருப்பது.

இவை தவிர வேறு எந்தக் குற்றச்சாட்டும் பொதுவெளியில் யதார்த்தன் மீது இல்லை. இம்மூன்று சம்பவங்களையும் தாங்கள் எப்படிப் பாலியல் சுரண்டல் குற்றங்களாக வரையறை செய்கிறோம் என்பதை  யதார்த்தனைப் பாலியல் குற்றவாளி என்று சுட்டுபவர்கள் எங்கும் முன் வைக்கவில்லை. பாலியல் குற்றம் தொடர்பான தங்களுடைய பார்வையை/ நிலைப்பாட்டை வரையறையை தெளிவுபடுத்தவில்லை. ஆனால்  இந்த மூன்று மீறல்களும் பாலியல் குற்றங்கள் ஆகாது. இவற்றை வேண்டுமானால் ஒரு வகையான ஒழுக்க மீறல்களாக, நம்பிக்கைத் துரோகமாக, வீழ்ச்சியாக உரையாட முடியுமே தவிர இவற்றைப் பாலியல் குற்றங்களாக எந்தச் சமூகநிலையிலும் கருதி, பொதுவெளியில் தண்டனைகோர முடியாது. அதிலும் பாதிக்கப்பட்டவரின் தரப்பாகச் செயற்படும் மீடியங்கள் கோரும் தண்டனையை அளிக்கவே முடியாது.

இல்லை இவற்றை அப்படிப் பாலியல் குற்றமாக முன்வைக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழிமுறைதான் உண்டு. ஒழுக்கவாதக் கண்ணோட்டம்! இவற்றைப் பாலியல் குற்றங்களாக முன்வைப்பவர்கள் ஒழுக்கவாதம் என்ற எல்லையுள் இருந்தே இவற்றை முன் வைக்கிறார்கள். ஒழுக்கவாதத்தில் நல்ல ஒழுக்கவாதம் – கெட்ட ஒழுக்கவாதம் என்ற பிரிவினை எல்லாம் இல்லை. ஆணுக்கு ஓர் ஒழுக்கம் பெண்ணிற்கு ஓர் ஒழுக்கம் என்றெல்லாம் இல்லை. ஆணின் மீறல் குற்றம் என்றால் பெண்ணின் மீறலும் குற்றம் தான்,தன் பாலியல் ஒழுக்கத்தை மீறியதற்காக, ஒரு பெண்ணையும் பாலியல் குற்றவாளி என்று பொது வெளியில் கல் எறியவேண்டி வரும். தேசியத்தில் எப்படி நல்ல தேசியம், முற்போக்குத் தேசியம் என்றெல்லாம் இல்லையோ அது போலத்தான் ஒழுக்கவாதமும் கடும் பிற்போக்கானது. இந்த ஒழுக்கவாதத்தைக் கைக்கொள்வது, கண்காணிப்பது குற்றஞ்சாட்டுவது கலாசாரக் காவலர்களின் வழி. அது விடுதலைக் கருத்தியலை முன்வைக்கும் பெண்ணியர்களின் வழிமுறையாக ஒருபோதும் இருக்கவே முடியாது.

அதற்கு இவர்கள் முன்வைக்கு மிக முக்கியமான ஒரே ஒரு வாதம் அசமத்துவம் நிலவும் சூழலில் இந்தவகை மீறல்கள் குற்றங்களாகின்றன என்பதாயிருக்கிறது. அதாவது பால் அசமத்துவம் நிலவும் கலாசார பண்பாட்டுச் சூழலில் இதன் பின் விளைவுகளால் ஆணும் பெண்ணும் ஒரே அளவான பாதிப்பை அடைவதில்லை என்ற நிபந்தனையின் கீழ் இவை குற்றங்கள் ஆகின்றன என்கிறார்கள். அப்படியென்றால், நம் கலாசார பண்பாட்டுச் சூழலில் பால் அசமத்துவம் மட்டும் தான் இருக்கிறதா? இல்லையே. வர்க்கம், சாதி. மிக முக்கியமாக சாதி போன்ற அசமத்துவங்களின் பங்கும், வர்க்கத்தின் பங்கும் அல்லவா நிபந்தனைக் குற்றங்களை முன்வைக்கப்படும் போது கவனித்திருக்க வேண்டும். ஆக சமூகம் ஆண்-பெண் என்ற இரு அடுக்கு அசமத்துவத்தில் இல்லை. அது வர்க்கம், சாதி என்ற நூற்கண்டு போன்ற சிக்கலான அசமத்துவத்தின் கீழ் இருக்கிறது. இதைக் குற்றமாக வரையறுக்க ஒரு நிபந்தனை அசமத்துவமான பால், அசமத்துவம் தானே இங்கே முன்வைக்கப்படுகிறது. தலித் ஆண், ஆதிக்க சாதி பெண் என்ற இணைவில் குற்றம் நிகழ்ந்தால் இது எப்படியாகும். அதனால் தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன் இந்த மீறல்களைக் குற்றங்களாக முன்வைத்து நீதியோ தண்டனையோ கோர முடியாது. ஓர் எழுத்தாளனாக இவை மீறல்கள் என்று சொல்லக் கூட மாட்டேன். அது வேறு தள உரையாடல்.

ஆக, இந்த ஒழுக்கவாதத்தின் நிபந்தனை குற்றங்கள்; குற்றங்கள், சுரண்டல் என்ற வகைக்குள் வராத மீறல்களே. அதற்கு அவர்கள் புழங்கும்  வெளிகளில் உரையாடலும், நீதியும், இழப்பும் கோர முடியுமேயொழிய பொதுவெளிக் கூட்டுச் சேர்ந்து நீதியோ, சமூக விலக்கமோ கோரமுடியாது.. இவற்றை மட்டும் வைத்து ஒருவரை பாலியல் குற்றவாளி என்பதும் அறிவுச்சூழலில்  ஏற்புடையதும் அல்ல.

இவர்கள் இதற்கு இன்னொரு வாதத்தையும் முன் வைக்கிறார்கள்.அதாவது கடந்த 3000 ஆண்டு கால  ஆண் மைய ஒடுக்குமுறை இந்த வகை வெளிப்பாட்டுக்கும், நீதிகோரலுக்குமான உரிமையைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இது மிகத் தவறான வாதம். கடந்த கால பால், சாதி ஒடுக்குமுறைக்கான இழப்பீட்டையும், சமத்துவ சமூகம் நோக்கிய நகர்தலுக்கான முதற்படியாக சமூக உரிமைகளில் தான் கோரமுடியும். அதாவது பிரதிநிதித்துவத்தில் பங்கு, அதிகாரத்தில் இட ஒதுக்கீடு சமூகக் கூட்டு உரிமைகள், வாய்ப்புகள், சலுகைகளிலே கோர முடியும்.  இதுமாதிரியான தனிநபர் குற்றம் தண்டனை போன்ற விடயங்களில் அல்ல. 

யதார்த்தன் மீது முன்வைக்கப்படும் இரண்டாவது குற்றச்சாட்டு பாலியல் நோக்கோடு ஆடை தொடர்பான தொலைபேசி உரையாடலைத் தொடங்கியமையாகும். ஒருவர் பாலியல் விருப்பத்தைத் தெரிவிப்பதும் அது மறுக்கப்படும் போது விலகிவிடுவதும் தானே ஒரு நல்ல இணக்கமான சமூகத்தின் அறிகுறிகள். யாழ்ப்பாணத்தில்  பால்யகாலம் எனக்களித்த ஆண் நோக்கை நினைவு கூறுகிறேன். ஒரு பெண் தன் காதலையோ,பாலியல் விருப்பத்தை மறுக்கும் போது தொடர்ந்தும் பொறுக்கித்தனமாகத் தொந்தரவும் நச்சரிப்பும் செய்வதுதான் ஆண் என்று கற்பிக்கபட்டது. அந்தக் கலாசார பண்பாடு வெளியிலிருந்த வந்த ஆண் தன் பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்தி, அது ஏற்காமல் நிராகரிக்கப்படும் போது தொடர்ந்து தொந்தரவோ, நச்சரிப்போ செய்யாமல் அந்த மறுப்புடன் அதை விட்டு நாகரிகமாக விலகிச் சென்றது எவ்வளவு பெரிய யுக மாற்றம். (ஆனால் யதார்த்தன் விசயத்தில் தன் இணையுடனான உரையாடல் தவறுதலாக இன்னொருவரைச் சென்றடைந்தது என்று தான் சொல்லப்பட்டது).  இதையல்லவா பெண்கள் அனைத்து ஆண்களுக்கும் முன்னுதாரணமாகக் காட்டியிருக்க வேண்டும். ஒருவர் தன் பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்துவதையே இவர்கள் குற்றமாக கருதுகிறார்களோ என்னவோ. அப்படி என்றால் அவர்கள் ஒழுக்கவாதத்தின் உச்சாணிக் கொம்பில் ஊடாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம்.

மூன்றாவது ஒரு பூடகமான குற்றச்சாட்டு. அது யதார்த்தன் என்றே ஊகிக்கிறேன் அல்லது வேறு நபராகவும் இருக்காலம். ஆனால் இந்தப் பிரச்சினைகளை ஒட்டிக் குறிப்பிடப்படுவதால் அதையும் இங்கே குறிப்பிடுகிறேன். தவறு என்றால் விலக்கிக் கொள்கிறேன். இப்படியான நூதனமான குற்றச்சாட்டுகளை அரசியல் சராசரித்தனத்தில் கடைந்தெடுத்த  NGO  களால் தான் முன்வைக்க முடியும் அல்லது விவாகரத்து வாங்கிக்கொடுக்க வழக்கெழுதும் வக்கீல்களால். ஆனாலும் இதில் என்ன குற்றம் இருக்கிறது என்று விளங்கவில்லை. தொடர்ந்து பெண்ணின் உழைப்பும், இடமும் மறுக்கப்படும் சூழலில் நன்றியை புத்தகத்தில் போட்டிருப்பது மிக நல்ல முன்னுதாரணம் தானே. இதையெல்லாம் குற்றம் என்று முன் வைத்தால் உண்மையில் இவர்களின் நோக்கம் தான் என்ன?

இதில் யாரும் கண்டுகொள்ளாத, கவனப்படுத்த விரும்பாத ஒரு மிக முக்கியமான விடுபடல் உள்ளது. அதை ஒழுக்கவாதப் பெண்ணியர்கள் மிகக் கவனமாகத் தவிர்க்கிறார்கள். அது அவர்களது அரசியல் இருப்புக்கே மிக ஆபத்தானது. அவர்களது நோயைச் சுகப்படுத்திவிடக் கூடியது. அதாவது யதார்த்தன் தன் கடந்த கால ஒழுக்க மீறலுக்காக பொதுவெளியில் பொறுப்பும் மன்னிப்புக் கோரியிருப்பது தானது. (பார்க்க: நான் யாருடைய உப்பு ) 2000 ஆண்டு தமிழ் கூறும் நல்லுலகில் தன்மீதான ஒழுக்க மீறல் என்ற குற்றச்சாட்டிற்கு பொதுவில் மன்னிப்பும் பொறுப்பும் கூறிய முதல் நபராக, எழுத்தாளராக அவரே இருப்பார். மிக முக்கியமாக எல்லாப் பெண்ணியர்களும் முன்வைத்தும், கொண்டாடியுமிருக்க வேண்டிய குறிப்பிடத்தக்க வெற்றி இதுவல்லவா!

 அவர்களது கடந்தகாலப் போராட்டம் அடைந்த நேர்நிலை வெற்றிகளில் முக்கியமானதும், கணிசமானதில் இதுவும் ஒன்று. வழமையான ஆண் செய்வது போல இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பாராமுகமாக, ஆணாதிக்கத் திமிருடன் இருந்திருக்க முடியும் அல்லது பதில் குற்றச்சாட்டுகளை பெண்களின் ஒழுக்கம் சார்ந்து முன் வைத்திருக்கலாம். ஆனால் எவற்றை எல்லாம் ஓர் உச்ச ஆண்மையச் சமூகம் அவமானமாக, கெளரவக் குறைவாகக் கருதுமோ அதை எல்லாம் துணிந்து உதறி  பொதுவில் மன்னிப்புக் கோரியிருக்கிறார். அவரை ஆணாதிக்கச் சூழலில் இருந்து தன் மீறலுக்கான இடம் நோக்கி நகர்த்தி வந்ததில் இலக்கியத்திற்கும் பெரும் பங்கு இருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த வகையிலும் இலக்கியக்காரனாக அது எனக்கும் சற்றே பெருமிதம்தான். மன்னிப்புக் கோரிய பிறகும் ‘மன்னிப்பு போதுமா?’ என்கிறார்கள். ‘அது மட்டும் போதுமா என்ன? ’ என்கிறார்கள். சரி, என்ன வேண்டும் என்றால் பதில் இல்லை. இனி என்ன யதார்த்தன் தன் ஆண்குறியை அரிந்து பொதுவில் வைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ.

ஒழுக்கவாதப் பெண்ணியர்களின் முதிர்ச்சியற்ற அரற்றல்களையும், அவர்களின் குற்றம் பற்றிய வரையறைகளோ,  குற்றத்தின் தன்மைபற்றிய வெளிப்படுத்தலோ இல்லாத, நீதிபற்றி குறிப்புணர்தல் இல்லாத போராட்ட வழிமுறைகளில் கசப்படையும் அடுத்த தலைமுறைப் பெண்கள் நோக்கி முன்வைக்கப்படும் எதிர்பார்ப்புகளே கீழ் வருபவை. இந்த ஒழுக்கவாதப் பெண்ணியர்களால் ஆண்மையச் சமூகம் உருவாக்கியளித்த ஒழுக்க விதிமுறைகளை மீறிச் சிந்திக்கவோ முடியாது. அவர்கள் அதன் எல்லைக்குள் சுருண்டுகிடந்தே அவற்றைப் பேச முடியும். அவர்கள் பேசும் சின்ன ஒழுக்கச் சிறையை உடைத்துவிட்டு வெளிவந்து பார்த்தால் ஆணாதிக்கச் சமூகம்  அவர்களைச் சுற்றி எழுப்பியிருக்கும் பெரிய கற்கோட்டைகளைக் காண்பார்கள். அங்கே அதன் அடியாழத்தில் ஆணாதிக்க எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லலுறும் அபலை ஆண்களையும் காண்பார்கள். அவர்களுக்கும் சேர்த்தே புதிய பெண்கள் தங்களை விடுதலைக் கருத்தியலை முன்வைப்பார்கள். 

இந்த ஒழுக்கவாச் சுமையால்  கசப்படையும் அடுத்த தலைமுறைப் பெண்கள் தங்கள் உள்ளுணர்வால் அந்த இடத்துக்கு விரைவிலேயே வந்தடைவார்கள். அவர்கள் இந்த ஒழுக்கவாதப் பெண்ணியர்கள் சொல்வது போன்ற அபலைகளோ, சுயசிந்தனையோ இல்லாதவர்களோ அல்ல. அவர்கள் இப்படிப் பிற்போக்கான ஆண், ஒழுக்கவாதப் பெண்ணியர்களோ கையகப்படுத்த முடியாதவர்கள். தமக்கான தனித்த பார்வையும், சுயசிந்தனையும், நிமிர்வும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குத் தன்னுடைய பாலியல் தெரிவு குறித்த குற்றவுணர்ச்சியோ  அல்லது ஆணாதிக்கம் கொடுத்த ஒழுக்க மதிப்பீடுகளை சதா நிரூபித்திக் கொண்டிருக்க வேண்டிய கடப்பாடுகளோ இருக்காது.ஆயிரம் காதல்கள், பாலுறவுகள் கண்ட பின்னர் இன்னும் நிதானமாகத் தனக்கான தன் சுயத்தை அங்கீகரிக்கும், தன்னுடன் சமத்துவத்துடன் இந்த வெளியைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய சமதையான இணையைத் தெரிவு செய்யக் காத்திருப்பார்கள். முக்கியமாகக்  காதல் உறவுக்குள் எழும் உணர்வுச் சிக்கல்களை பாலியல் குற்றங்களாக வகைப்படுத்த மாட்டார்கள். 

இந்த முழு விடையத்திலும் மிகக் கீழ் மகனாக நடந்து கொண்டது அருண்மொழிவர்மன். அவருடைய தன்னிலை விளக்கங்களை வாசித்த போது குமட்டலே வந்தது. ஒவ்வொரு வரியிலும் தன்னை ‘ஒழுக்கவாதி’ என்றும் ‘தூய ஆன்மா’ என்றும் நிறுவிவிடத்துடிக்கும் பதட்டமே தெரிந்தது. விதை குழும விசயம், கணக்கு வழக்கு எல்லாம் அமைப்புசார்ந்த விசயங்கள். அதை அவர்கள் அமைப்பினுள்ளே பேசிச் சரிக்கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வளவு காலம் பேசாமல் இருந்தவர், இந்தப் பாலியல் குற்றப் பிரச்சினைகளின் போது தன்னுடைய குற்றத்தைக் கை கழுவிக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய கற்பை மீண்டும் நிரூபிக்க, பெரும் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார். யதார்த்தனாவது தன் மீறலுக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டார். ஆனால் இந்த தூய ஆத்மாவுக்கு தான் குற்றமாக கருதி –  கிரிசாந் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் பொறுப்பும் பங்கும் இல்லையா?.  அவரும் சேர்ந்தல்லவா – இவற்றை அவர் குற்றமாகக் கருதினால் – பொறுப்பெடுத்திருக்க வேண்டும். இந்த ஒழுக்கவாதிகளின் ஆண் தரப்பு எச்சமாக அவர் இவ்விடத்தில் மீந்திருக்கிறார். அவர்களுடைய அமைப்பின் உள் குற்றச்சாட்டுகளுக்கு பொதுவில் நாம் தீர்ப்பிட முடியாது. அதை அவர்களது அமைப்பு தான் பொறுப்பெடுத்து தீர்த்துக் கொள்ள வேண்டும். அதனைக் காரணமாகக் கொண்டும், ஒரு  கட்டுரை எழுதினார் என்பதைக் கொண்டும் இந்த ஒழுக்கவாதப் பெண்ணியர்கள் கிரிசாந்தை இலங்கையில் நடக்கும் இமிழ் அறிமுகக் கூட்டத்தில் பேசவிடாது தடுக்க அணிதிரள்வதுமே இவர்களது உள் நோக்கங்களையும் கருத்தியல் வறுமையையும் புலப்படுத்துகிறது. இதைப் போன்ற முதிராத கோசங்கள் வேறில்லை. தொடர்ச்சியாக அமைப்புச் செயற்பாடுகளிலும், இலக்கியத்தரப்பிலும் இயங்கிக் கொண்டிருக்கும் கிரிசாந் இமிழ் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்ற இலங்கையில் இமிழ் வெளியீட்டுக் குழு தெரிவு செய்திருப்பது மிக நல்ல தெரிவுதான். 

சாரமாக, இந்த வகைக் குற்றச்சாட்டுகள்  நிகழ்ந்ததா? இல்லையா? நிரூபியுங்கள் என்ற தளத்திலே இதுவரையும் நடந்து கொண்டிருந்தது. அதை நான் முற்றிலுமாக வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறேன். இந்த வகையான ஆண்கள் -பெண்களுக்குள் இருக்கும் காதல்கள், திருமணம் தாண்டிய உறவுகள், பல காதல்கள், பல பாலுறவுகள் போன்ற இந்த மீறல்களைக் குற்றம், சுரண்டல் என்று வரையறுக்க முடியாது. அவை ஒருவகை மீறல்கள் மட்டுமே. இல்லை குற்றம் என வரையறுக்கு முடியுமெனில் ஒன்று ஒழுக்கவாதத் தரப்பாக இருக்கவேண்டும் அல்லது நிபந்தனைக் குற்றம் என்ற வகைக்குள் மட்டும் வைத்தே உரையாட முடியும். இதில் ஒழுக்கவாதம் கடும் பிற்போக்கானது. அது கலாசாரக் காவலர்களின் வழி. நிபந்தனைக் குற்றம் வகை போதாமையானது. அதில் இங்கே பால் அசமத்துவத்தை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு நோக்கி நகர முடியது. மிகுதி அசமத்துவங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் இவற்றை இந்த வகை மீறல்கள் நிகழும் வெளிக்கு அப்பால் கையாள முடியாது. அவை அந்த மீறல் நிகழ்ந்த வெளிக்குள் எல்லா அசமத்துவங்களும் கருத்தில் கொண்டு இழப்பீடு, தீர்வு என நகரக்கூடிய எளிமையான பிரச்சினைகள். இதுவே அறிவுச்சூழலில் இந்தவகை மீறலுக்கான இடம். 

முடிவாக, என்ன வகையான குற்றம் என்றோ, குற்றத்தின் தன்மை பற்றியோ பொறுப்புக்கூறாமல், தொடர்ந்தும் ஒழுக்கவாதப் பெண்ணியர்களால் ’பாலியல் குற்றவாளி’ ’பாலியல் குற்றவாளி’… என்று ஆயிரம் முறை காறி உமிழப்படும் யதார்த்தனின் கரங்களை இவ்விடத்தில் ஆதுரமாகப் பற்றிக் கொள்வதே எழுத்தாள அறமாக இருக்கும். ஓர் எழுத்தாளனாக நான் வந்தடையக் கூடிய இடமும் அதுதான் அல்லது நான் அரசியல் சராசரித்தனத்துடன் தவளைக் கூச்சாலிடும் மீடியங்களின் பக்கம் நின்று ஆம் நானும் சாட்சி என்று யதார்த்தன் மீது கல் எறிந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அதன்பின் என்னால் ஒரு சொல்லும் எழுத முடியாது. கூடவே, யதார்த்தன் பொருட்டு சிலுவையில் அறையப்படும் கிரிசாந்துடனும், அரைஅவியல் மீடியங்களால் பலிக்கடாவாக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களுடனும் கரங்கோர்த்துக் கொள்கிறேன். இந்த ஒழுக்கவாதப் பெண்ணியத்தின் புழுதிப்புயலை நம் படைபூக்கத்தால் கடந்து செல்வோம் தோழர்களே.

 பிற்குறிப்பு 1.

யதார்த்தன் மீதான குற்றச்சாட்டில் ஒட்டுமொத்தத்தையும் ஒரு முறை தொகுத்துக் கொண்டால் மிக முக்கியமான பல விடுபடல்களைக் கவனிக்க முடியும். பாலியல் சுரண்டல் என்று ஆரம்பித்து, பாலியல் சுரண்டல் குற்றவாளி என்றாகி இப்போது பாலியல் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறி தண்டனை வழங்கும் இடம் நோக்கிக் குற்றச்சாட்டு நகர்ந்திருக்கிறது. இதில் குற்றச்சாட்டு முன்வைப்பவர்கள் எப்படிக் கேட்டாலும் சொல்லாது தவிர்க்கும் சில அடிப்படை விடயங்கள் இருக்கின்றன. உண்மையில் அவைதான் குற்றச்சாட்டின் ஆரம்பத்திலேயே தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்க வேண்டியவை. அவர்கள் அப்படித் தவிர்பதில் உள்நோக்கம் உண்டு. அதாவது என்ன குற்றம், அந்தக் குற்றம் பாதிக்கப்பட்டவர்களில் என்ன வகையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, அதற்காக அவர்கள் எதிர்பார்க்கும் நீதி என்ன? இந்த குறைந்தபட்ச அடிப்படைகளை பூர்த்திசெய்யாத, வெளிப்படையாக முன்வைக்காத எந்தத் தவளைக் கத்தல்களையும் அறிவுச்சூழல் பொருட்படுத்த வேண்டியதில்லை. பொதுவில் அம்பலப்படுத்துகிறேன் பார் என்று சொல்லி மிரட்டும் ஆண் பொறுக்கிகளுக்கும், இதற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடும் இல்லை. இவர்கள் இந்த அடிப்படைகளை தெளிவுபடுத்தினாலே இவர்கள் பாலியல் குற்றம் என்று அழுத்தம் கொடுக்கும் குற்றத்தின் தன்மை குறைந்து சுருங்கிவிடும் என்று அவர்களுக்கே தெரிந்திருக்கிறது. அதனால் தொடர்ந்தும் இதனைத் தவிர்த்துவருகிறார்கள். இந்த அடிப்படைகளை இவர்கள் தெளிவுபடுத்தினால் நான் அதற்கான என்னுடைய பார்வையை இன்னொரு கட்டுரையில் முன்வைக்கிறேன். அநேகமாக அதை அவர்கள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அந்த வகையான அறிவுச்சூழல் உரையாடல் அல்ல அவர்களின் நோக்கம்.

பிற்குறிப்பு 2

Screenshot

இந்த ஆர்வக்கோளாறுப் புரட்சியாளரின் முட்டாள்தனத்திற்கு அளவேயில்லையா? இவர்களின் அம்பலபடுத்தும் போராட்ட வழிமுறையில் உள்ள அநீதி யாருடைய கண்களுக்கும் தெரியவில்லையா? எவ்வளவு அறியாமையின் தடித்தனம் பாருங்கள். இவர்கள் பாலியல் குற்றச்சாட்டைப் பொதுவெளியில் ஒருவர் மீது சுமத்துவார்களாம். அறிவுச்சூழல் திரண்டு வந்து சில அடிப்படைகளை குறித்துக்கேட்டால், அதன் பின் தான் ஆதாரம் திரட்டச் செல்வார்களாம். எங்கு? அந்தக் கடந்தகாலங்களில் இருந்து நகர்ந்துவிட்ட, பாதிக்கப்பாட்ட பெண்கள் என இவர்கள் நம்புபவர்களிடம். இவர்களது இந்த மத்தியதர வர்க்க ஒழுக்கவாத அறியாமைக்கு அளவேயில்லை. இவர்கள் தங்கள் குறுகிய கண்ணோட்டத்தில் பாதிக்கப்பட்டதாக நம்பும் பெண்களுக்கு இந்த ஒழுக்கவாதம் ஒரு பொருட்டாகவே இல்லாது இருந்திக்கலாம் அல்லது வேறு வகைகளில் அவர்கள் அதைக் கடந்து சென்றிருக்கலாம். ஒரு பெண் இவர்களிடம் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என நீதிகேட்டு வந்தால் அதற்காகப் போராடுவது, அணிதிரட்டுவது என்பது வேறு. அதில் நியாயம் உண்டு. தங்கள் அரைஅவியல் புரட்சிக்கு, பாதிக்கப்பட்டவர்களென்று கருதி, அவர்களை வம்படியாக இழுத்து வருவதென்பது வேறு. அப்படி யாருக்கு எதை நிரூபிக்கப் போகிறார்கள்? தங்கள் ஆர்வக் கோளாறுத்தனத்துக்கான ஆதாரத்தையா? யாருக்கு இந்த சமூகவலைத்தள அறியாமையின் மூர்க்கர்களுக்கா. இவர்களுக்கு குற்றம், தண்டனை, தீர்வு, பாதிக்கப்பட்டவர்களை பெறுப்பெடுத்தல் போன்றன குறித்து அடிப்படை வாசிப்பும் புரிதலும் கொஞ்சமாவது இருக்கிறா? இதை முட்டாள்தனம் என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்னதற்கு மன்னிக்க. அது மிகத் தவறு. பொதுவில் எப்படி அப்படி உண்மைகளை நேரடியாகச் சொல்லலாம் எனச் சில சராசரிகள் கிளம்பிவருவார்கள். மன்னித்தருள்க. உண்மையில் அடிமுட்டாள்தனம் என்றே சொல்லியிருக்கவேண்டும்.

இது யதர்த்தனுக்கும் மட்டும் பொதுவெளியில் இழைக்கும் அநீதியில்லை. இவர்கள் பெண்களுக்கும் சேர்த்தே – பாதிக்கபட்டவர்களுக்கு நீதி என்ற போர்வையில் பெருங் குற்றம் இழைக்கிறார்கள்.

பிற்குறிப்பு 3

கடந்தக் காலங்களில் இந்த பாலியல் குற்றச்சாட்டுகளின் போதெல்லாம் ஒன்றைக் கவனித்துக் கொண்டே இருந்தேன். இதற்குப் பொதுச்சூழல், அறிவுச்சூழல் ஆதரவு ஒரு போதும் கிடைத்ததில்லை. ஆரம்பத்தில் அதை இயல்பாக்கம் செய்யப்பட்ட ஆண்மையவாதத்தின் நோய்க்கூறோ என்ற என்ற சந்தேகத்தில் இருந்தேன். ஆனால் இந்தவகை ஆண்கள் மீதான சேறடிப்புகளில் பல பெண்களும் கசப்படைந்து இருந்ததைப் பார்த்த போதுதான் கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டிய தேவையை உணர்ந்து கொண்டேன். ஆனாலும் இதில் ஓர் அநீதியும், போதாமையும் இருப்பதாக உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் அதைச் சரியாக வகுத்துரைக்க முடியவில்லை. அந்தச் சிக்கல் பலருக்கும் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. பலரும் அரசியல் சராசரித்தனத்துடன் ஏன் வம்பு என்ற மோகன நிலையில் இருந்தனர். அதை இந்த அரை அவியல் போராட்டக்காரர்கள் தங்களுக்கு கிடைத்த ஆதரவாக கருதிக்கொண்டு கீழ்மையின் எல்லைகே சென்று கொண்டிருந்தார்கள். இக்கட்டுரையில் இந்தப் பிரச்சினையின் ஒட்டு மொத்தப் பார்வையையும் தொகுத்து அது நிகழவேண்டிய தளத்தையும் சரியாக அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.  இந்த விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்த சகதியிலிருந்து அதைத் தூக்கி அறிவுச்சூழலில் வைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த விவாதத்தின் செல்திசையையும் சரியாக இனம் காட்டியிருக்கிறேன். கூடவே ஒழுக்கவாதப் பெண்ணியம், நிபந்தனைக்குற்றம் போன்ற இனி இந்த விவாதங்களில் புழங்கப்போகும் சொற்களையும் மறுவரையறை செய்திருக்கிறேன். இமிழ் தொகுப்பின் மூலம் அந்த வாய்ப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்திருப்பது நல்லூழ் என்றே கொள்ளவேண்டும்.

பின்னிணைப்பு 1

ஷோபாசக்தியின் முகநூல் பதிவு.

இலக்கியச் சந்திப்பில் என் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருந்தேன். இங்கே இன்னும் சற்று விரிவாக:

  1. யதார்த்தன் மீதான குற்றச்சாட்டுகள் பெப்ரவரி கடைசியில்தான் முகநூல் பதிவர்களால் வைக்கப்படுகின்றன. அதற்கு முன்பே தொகுப்புப் பணிகள் நிறைவேறிவிட்டன.
  2. மார்ச் 6 தேதி, ‘இமிழ்’ தொகுப்பின் அட்டைப்படம் 51வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தொகுப்பாசிரியர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. அட்டையில் 25 எழுத்தாளர்களின் பெயர்களும் அச்சிடப்பட்டிருக்கின்றன (யதார்த்தனின் பெயர் உட்பட). குழு உறுப்பினர்கள் யாருமே எழுத்தாளர்கள் தேர்வு குறித்து எந்த ஆட்சேபத்தையும் அப்போது தொகுப்பாசிரியர்களுக்கோ அல்லது பொதுவெளியிலோ தெரிவிக்கவில்லை.
  3. இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து மார்ச் 21ம் தேதியன்று, ‘இமிழ்’ குறித்த பொது அறிவித்தல் எழுத்தாளர்களின் பெயர்கள் உட்பட சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டன. தொகுப்பில் யதார்த்தன் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறித்து அப்போதும் இலக்கியச் சந்திப்புக் குழு உறுப்பினர்கள் யாருமே கருத்தோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. குழுவுக்கு வெளியேயும் வேறு யாராவது (நீங்கள் உட்பட) எங்காவது எதிர்ப்புத் தெரிவித்ததாக எனக்குத் தெரியவில்லை.
  4. இலக்கியச் சந்திப்புக்கு 6 நாட்கள் முன்னதாக மார்ச் 24ம் தேதியன்று, 51வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்தவர்களில் ஒருவரான விஜி, இமிழில் யதார்த்தனின் கதை வெளியிடப்படுவதற்கான கண்டனத்தை ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் வெளியிட்டார். அதாவது மார்ச் ஆறாம் தேதியன்றே எழுத்தாளர்களின் தேர்வு குறித்த விபரம் இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தும், மார்ச் 21ம் தேதியே விஜியின் எதிர்ப்பு முதன்முதலாக ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் பதிவு செய்யப்படுகிறது.
  5. அடுத்தநாளே தொகுப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு விளக்கமளித்தோம். பதிப்புப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன என்பதை அவர்களும் அறிந்திருந்தார்கள். எனவே விஜி உட்பட குழுவிலிருந்த எல்லோருமே எங்களது விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள். (இந்த விளக்கமும் ஏற்பும் உங்களுக்கு உப்புச் சப்பற்றதாகத் தோன்றுமானால்… உங்கள் உப்பு உங்கள் உரிமை!)
  6. இலக்கியச் சந்திப்பில் இமிழை வெளியிட்டு வைத்துவிட்டு ‘இந்தத் தொகுப்பு உருவாக்கம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று பதிப்பாசிரியரான நானும் பொறுப்பாசிரியரான பிரசாத்தும் அறிவித்தோம். கேள்விகளும் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்குக்கூட நாங்கள் பதிலளிக்காமல் நழுவிச் செல்லவில்லை. அவை முகநூலில் நேரலையாக ஒளிபரப்பாகின.
  7. ‘நூல் அச்சுக்குப் போவதற்கு முன்பாகவே யதார்த்தன் மீதான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்தால், தொகுப்பிலிருந்து யதார்த்தனின் கதையை நீக்கியிருப்பீர்களா?’ என்றொரு கேள்வி எங்களை நோக்கி கௌரி என்ற தோழரால் முன்வைக்கப்பட்டது. ‘யதார்த்தனது கதையைத் தொகுப்பிலிருந்து நீக்குவதா /சேர்ப்பதா என்ற முடிவை இலக்கியச் சந்திப்புக் குழுதான் எடுக்க முடியும்’ என்று பதிலளித்தோம்.

ஏனெனில், தொகுப்பில் இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்த எழுத்தாளரைச் சேர்ப்பது என்று முடிவெடுக்கும் உரிமையை மட்டுமே தொகுப்பாசிரியர்களுக்கு ஒருங்கிணைப்புக்குழு வழங்கியிருந்தது. ஓர் எழுத்தாளர் மீதான குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பதால், அவரது கதையை நிராகரிக்கலாமா வேண்டாமா என்பது ஒருங்கிணைப்புக் குழு கூடி முடிவெடுக்க வேண்டிய ஆழமான – நுட்பமான பிரச்சினை.

ஏதாவது ஒரு விடயத்தில் குழுவிற்குள் ஒரேயொருவர் எதிர்ப்புத் தெரிவித்தால் கூட அந்த விடயம் குறித்த நீண்ட விவாதங்களுக்குப் பின்பு ஒருமனதாக முடிவு எட்டப்படுவதே 51வது இலக்கியச் சந்திப்பின் பொதுப்பண்பாக இருந்தது. இலக்கியச் சந்திப்பு முடிந்த பின்பும்கூட இந்தக் கூட்டுச் செயற்பாட்டையும், சனநாயகப் பண்பையும் நாங்கள் கடைப்பிடித்தோம். இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ விற்பனையால் கிடைத்த பணத்தை எவ்வாறு கையாள்வது? இலங்கையில் ‘இமிழ்’ வெளியீடுகளை நடத்தும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது? போன்ற எல்லா விடயங்களும் ஒருங்கிணைப்புக் குழுவால் விவாதிக்கப்பட்டு முடிவுகள் ஒருமனதாகவே எட்டப்பட்டன. 51வது இலக்கியச் சந்திப்புக் குறித்த எல்லாப் பணிகளும் நிறைவேறியதால், ஏப்ரல் 6ம் தேதி ஒருங்கிணைப்புக் குழுவின் இறுதிக் கூட்டம் நிகழ்ந்து, இனிதே 51வது இலக்கியச் சந்திப்புக் குழு கலைக்கப்பட்டது.

  1. தோழர் கௌரியின் இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது நான் இவ்வாறு சொன்னேன். நேரலையில் உள்ளது. விரும்பியவர்கள் ‘செக்’ செய்து கொள்ளலாம்.

“இதுவே எனது தனிப்பட்ட தொகுப்பாக இருந்தால், நானே முடிவெடுத்திருப்பேன். யதார்த்தன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டிருந்தால் தொகுப்பில் அவரது கதையை நிச்சயமாகச் சேர்த்திருக்கமாட்டேன்.”

  1. மதுரன்! சில வருடங்களாகவே நான் முகநூலில் விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். எனினும், தோழமையுடனும் நிதானமாகவும் நீங்கள் கேள்விகளை முன்வைத்திருப்பதால், நேரம் ஒதுக்கி உங்களுக்குப் பதிலளிக்கலாம் என முடிவெடுத்தேன். உங்களுக்குப் பிறகாலே ஒருவர் அவதூறாக ஒரு கொமென்ட் போட்டிருந்தார். உடனடியாகவே அவரை நட்பு நீக்கம் செய்துவிட்டேன். வெறுப்புத்தானே அவதூறுக்கு அடிப்படை. வெறுப்புணர்வாளர்களை நட்புப் பட்டியலில் வைத்திருந்து என்ன செய்யப் போகிறோம் சொல்லுங்கள். அவதூறுகளுக்கு அள்ளிக் கட்டிக்கொண்டு பதிலளிக்குமளவுக்கா நாம் வேலையற்றுள்ளோம். ‘இமிழ்’ விடயங்களை முன்வைத்து ஒரு முழுமையான கட்டுரை எழுதலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்…

கிரிசாந் விடயம் குறித்து:

முதலில், இலங்கையில் நிகழவிருக்கும் இமிழ் விமர்சனக் கூட்டங்களில் என் தலையீடோ ஆலோசனையோ ஏதுமில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்துகொண்டு யாழ்ப்பாணத்தில் பினாமி வைத்து இலக்கியம் செய்யும் துர்ப்பாக்கியம் எனக்கு இன்னும் நிகழவில்லை. யாழ்ப்பாண வெளியீட்டுக் கூட்டத்தின் அனைத்து அம்சங்களையும் முடிவு செய்பவர்கள் அங்குள்ள ஏற்பாட்டுக் குழுவே.

கிரிசாந் அந்தக் கட்டுரைகளை எழுதியிருப்பதால் அவரை இலக்கியச் சபைசந்தியில் சேர்க்கக்கூடாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு நிச்சயமாகவே கிடையாது. ஒருவர் எழுதிய கட்டுரையில் எதிர்க் கருத்துகள் / மறுப்புகள் இருந்தால் அதை எழுதியே எதிர்கொள்ள வேண்டுமே தவிர சமூகப் புறக்கணிப்பு என்பது சரியான வழியாகாது என்பதே எனது நிலைப்பாடு. வால்டேயரை உங்களுக்கு மறுபடியும் நினைவுபடுத்த வேண்டியிருக்காது என்றே எண்ணுகிறேன்.

Scroll to Top