01.
சாயம் உதிர்ந்து வெளிறிய துணியில் பொதிந்து வைத்திருந்த கல், சிவந்த தணல் துண்டு போல கனன்று எரிந்தது. நொடியில், துணியைப் பொசுக்கிவிடுவது போன்ற மூர்க்கமான தணல். துணியைப் பிரித்து கல்லை எங்கள் முன்னால் வைத்த வைரன், அமைதியாகவும் தீர்க்கமாகவும் அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அப்பா, ஒரு நொடி தயக்கத்தின் பின் அதைக் கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து மேல் கீழாகத் தூக்கிப் பார்த்தார். அது, அவருடைய கையில் ஒட்டாமல் பாதரசத்துளி போல அங்கும் இங்குமாக அலைந்தது. கல்லை ஒளிபடும் வாக்கில் திருப்பியதும் சின்னி விரலின் தடிப்பில் வைரத்தின் துல்லியத்துடன் ஒளிர்ந்தது. இரத்தச் சிவப்பு நிறத்தில்.
அப்பாவின் முகத்தில் நின்றாடும் ஆச்சரியக்குறியை வைரன் உணர்ந்திருக்க வேண்டும். “ஆத்தையோட சிவப்புக் கண்” என்றார். அவரது கண்களிலும் உதட்டிலும் ஒளியின் பிரகாசிப்பு தெரிந்தது. அப்பாவின் முகத்தில் மெல்லிய ஏளனம் நுரைத்து அழிந்தது. ஒரு கடைவாய் இழிப்புப்போல. அது அவருடைய இயல்போ என்று தோன்றும்படி இருந்தது.
“அப்படி நினைக்கக் கூடாது… உடையதே, மாட்டுத் தலையை மான் தலையாக்கிய பரோபகாரி பரிந்து பிடுங்கிக் குடுத்த வலக் கண். எல்லோருக்கும் சொரியும் கருணையின் ஒரு துளி அது. இனி அது அம்மன் காலடியிலோ அவள் நெற்றியிலோ இருப்பதுதான் நல்லது” என்றார் வைரன். அவருக்கு நல்ல இறுக்கமான திரேகக் கட்டு. அதிலொரு கரிய மினுக்கமும் இருந்தது.
அப்பா வற்றிச் சுருங்கிய தாடை தொங்க நிமிர்ந்து ஐயரைப் பார்த்தார். ஐயர் கரிய உடலில் வியர்வை வழிய தோள்த் துண்டை உதறியபடி நின்றிருந்தார். சற்றே மிதந்த காவிப்பல்லை நாவால் உரசியபடி “இருக்கட்டும் செட்டியர், அவளும் அம்மனுடைய பொட்டைதான்” என்றார். அருகில் நின்றிருந்த மாஸ்டர் ஆமோதிப்பது போல தலையாட்டி, அப்பாவிடமிருந்து ஆத்தையுடைய கண்ணை வாங்கிக் கவனமாகச் சோதித்துப் பார்த்தார். அவரது மெலிந்த கூனல் உடலில் தலை சற்றும் பொருந்தாமல் தனியாகச் செய்து வைத்தது போலப் பெருத்து இருந்தது. வெளித் துருத்திய குரல் நாண் திரட்சி மேல் கீழாக அசைந்தது. ஏதோ சொல்ல வாய் உன்னுவது போன்ற தோரணை.
மாஸ்டர் ஏதும் சொல்லாமலே, ஓரமாக இருந்த காஞ்சூரம் பெட்டியுள் ஆத்தையோட கண்ணைக் கவனமாக வைத்தார். அது நல்ல கனமான பெட்டி. வழமையாக மருத மரத்திலேதான் பெட்டிகள் செய்வார்கள். கனமும் பெரிதாக இருக்காது. ஆனால் இதைக் கறையான் ஏறாத காஞ்சூரை மரத்தில் செய்திருந்தார்கள். அது போதாதென்று தேன் மெழுகு பூசிக் கரிய பளபளப்பாக்கியிருந்தார்கள். அதன் ஓரங்களில் இரும்புப் பட்டங்கள் வைத்து வெள்ளி ஆணிகளால் அறைந்திருந்தார்கள். இருபக்கக் கைப்பிடிகளிலும் பூத் தீற்றல். பூட்டுக் கொழுவும் இருப்பு வளையம் பெரிதாக இருந்தது. தூக்கிச் செல்லும் போது அது அடித்து ஒலி எழுப்பாமலிருக்க அதில் பழந்துணி சுற்றிப்பட்டிருந்தது. பெட்டி உள்ளே நகைகள் மண்புழு நெளிவுபோலக் குவிந்து கிடந்தன. இடையிடையே மெல்லிய ஒளித் தெறிப்புகள் தெரிந்தன.
நகைகளைச் சரி பார்த்துக் குறித்து வைக்க விநாசி வருவார். அவரை இன்னும் காணவில்லை. அவர் எப்போதும் தாமதமாகவே வருவார். தாமதமாக வயிறு குலுங்க ஓடி வந்து, சறத்துள் சுருட்டோடு பொதிந்து வைத்திருக்கும் ஆட்டுப் புழுக்கை பென்சிலின் – அதில் கூர் இருக்கவே இருக்காது – நுனியைப் பல்லால் நெரித்து ‘காத்தைக் ஓழி’ என்று சினத்துடன் காறி உமிழ்ந்தபடி, சிறிய கொப்பியில் எழுதுவார். ஆயிரத்து ஐநூறு வருடப் பழைய நகைகளுக்கு ஒரே மூலாதாரம் எச்சில் தொட்டு எழுதிய விநாசியின் ஆட்டுப் புழுக்கை எழுத்துகள். யாராலும் அதைப் படித்தறிய முடியாது. ஊகித்தறிய அபாரமான கற்பனைத் திறன் வேண்டும். வட்டெழுத்துப் போல அல்ல, வட்டெழுத்துக்கே முன் தோன்றிய மூத்த குடியின் ஆதி லிபி போல கோணலாக நீண்டு கிடக்கும் ஆப்பு எழுத்துகள். சுழியும், வளைவும் சொற்பம். குற்றுகளில் அவருக்கு ஆர்வம் இல்லை. அதற்கு இன்னும் ஆயிரம் வருடங்களைக் கடந்து பண்பட்டு வர வேண்டும்.
அவர் பழைய வெங்காய யாவாரி. நகைகளைப் பென்சிலால் புரட்டிக் கண்களை உயர்த்திப் பிடித்து வெயில் படும்படியாக வைத்துச் சோதிப்பார். சந்தேகமிருந்தால் விரலால் நசித்தும் பார்ப்பார். “மோனை உந்த எலிப் புழுக்கை ஏன் அதுக்கை கிடக்கு? எப்பன் அதை எடுத்து அங்காலை போடு” என்று சுற்றி நிற்கும் பொடியன்களை அதட்டுவார். “இது புழுக்கை இல்ல ஐசே அடியல் சுரை” என்பார் மாஸ்டர். விநாசி அதைக் கண்டு கொள்ளாமல் வெற்றிலை வாயைச் சற்றே உயர்த்தி, கருநீல வைர அட்டியலை விரலால் நீவியபடி மாஸ்டரின் காதில் “சிங்கப்பூரான் போட்ட பவுண் அட்டியல் உம்மானை அவன்ரை மனிசிட பாச்சி போல சூம்பினது” என்றபடி வெற்றிலைச் சிவப்புத் தெறிக்க வெடித்துச் சிரிப்பார். மாஸ்டரின் கண்கள் சிங்கப்பூரானின் மனிசியின் சூம்பின பாச்சியைக் கற்பனையில் கண்டுவிட்டிருப்பது தெரியும்.
அம்மன் கோயிலை எடுத்துக் கட்டும் வேலைகள் தொடங்கிவிட்டிருந்தன. உயர்ந்த முகப்புடன் கூடிய, தாழ்வான கருங்கல் கருவறையுள்ள சிறிய கோயில். உள்ளே இருளில் மஞ்சள் பொட்டிட்ட, துாய விசுவாசிகளுக்கு மட்டுமே காட்சி தரக்கூடிய உக்குறுணி அம்மன் பிரதிட்டை. வெளியே சிறு கொடிக்கம்பம் உள்ள முக மண்டபம். அதன் ஓட்டுக் கூரை வேய்ந்த முகப்பைத் தாங்கி நிற்கும் ஆறு பெரிய தூண்களும் தூறல் மழைக்கு ஒதுங்கி நின்றால் கூட தொப்பலாக நனைந்து விடக்கூடிய அளவுக்கு மிக உயரமானவை. ஓட்டுக் கூரை முகப்பைக் கவனமாகப் பெயர்த்தெடுத்து நிலத்தில் வைத்திருந்தார்கள். அதைத் தாங்கி நின்ற தூண்கள் ஆறும் கவனிப்பாரின்றி வான் நோக்கி வாய் பிளந்து நின்றிருந்தன. அவற்றின் நிழல்கள் கரிய இராட்சதக் கைகள் போல கோயில் முற்றத்தில் நீளமாக விழுந்து கிடந்தன. தூணின் அடி நிழலுள் நின்றிருந்த இருவர் இரும்பு ஆப்பு போன்ற கம்பிகளை வைத்துத் தூணின் அடிப்பகுதியை அறைந்து கொண்டிருந்தனர். தூணில் கட்டியிருந்த கயிறு நீட்டங்களை சுற்று மதிலுக்கு அப்பால் நின்ற கருங்காலி மரத்தில் கட்டியிருந்தனர்.
இரண்டு ஆள் நடந்து செல்லக் கூடிய அகலமான கரிய மதில், கருங்காலி மரத்தை ஒட்டி உடைக்கப்பட்டிருந்தது. மதில் என்பதை விடச் சின்னக் குந்து என்றுதான் சொல்ல முடியும். உள்ளங்கை பருமனான சப்பைக் கற்களை மேலே அடுக்கி அதன் இடைவெளிகளில் சுதைச் சாந்து பூசி மெழுகிக் கட்டிய பழைய பாணி மதில். மாரி காலங்களில் ஈரலிப்பாக அதன் உடலில் பச்சைக் கம்பளிப் போர்வையால் போர்த்தியது போல திட்டுத் திட்டாக மெல்லிய பாசி பிடித்திருக்கும். கஞ்சிவார்வை நாட்களில் மடப்பள்ளியில் பொறுக்கிய நல்ல பெரிய சிரட்டைகளை பளபளப்பாக உரஞ்சி எடுக்கத் தோதான மதில். மினுங்கும் சிரட்டைகளை விரல்களால் மெல்ல வருடியபடி உதடுகளுள் பாடியபடி கஞ்சி வரும்வரை குந்து மதிலில் அமர்ந்திருப்பார் விநாசி. பச்சை மிளகாய் மிதக்கும் சுடு கஞ்சியைப் பெரிய அகப்பையால் அள்ளி பளபளக்கும் சிரட்டையில் ஊற்றினால் மெல்லிய கப்பிப்பால் வாசனையில் ஆவி எழுந்துவரும். அதை ஆழ முகர்ந்து “அமிர்தம்” என்றபடி சப்புக்கொட்டிக் குடிப்பார்.
விநாசி தோட்ட வரப்பில் ‘அரக்கப் பறக்க’ ஓடி வந்துகொண்டிருந்தார். அவர் நேர் பின்னால், தோட்டத் தறைகளுக்கு அப்பால் நீண்ட கரிய கோடாக பிரதான தார் வீதி வெயிலுள் கலங்கலாகத் தெரிந்தது. மினி பஸ் வந்து சடுதியாக நின்று, சின்ன உலுப்பலுடன் புழுதி கிளப்பிச் சென்றது. புள்ளியாய் ஓர் அசைவு தோட்ட வரம்பில் இறங்குவது தெரிந்தது. அந்த ஒற்றை நொடியே நான் ஊகித்து விட்டேன். நிச்சயமாக அது அக்காதான். அந்தப் புள்ளியின் எந்த அம்சம் அக்காவின் நினைவை கிளர்த்தியதோ தெரியவில்லை. அந்த உள்ளுணர்வை எண்ணி எண்ணி, பின் வியந்தேன்.
அக்கா வரம்பின் இரு பக்கமும் விரிந்து கிடக்கும் செம்பாட்டு மண் தறைகளை வேடிக்கை பார்த்தபடி வந்தாள். மண்டலவர் தறையிலிருந்து ஏதோ பிடுங்கி -வெண்டிப் பிஞ்சோ -இருமுறை முகர்ந்து பார்த்துத் தூர வீசிவிட்டுக் கைகளைச் சட்டையில் அழுந்தித் துடைத்தாள்.
நான் அக்காவையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மெள்ள அவள் உடலும், முகமும், கத்தி நுனி போன்ற கூர் கண்களும் துலங்கியபடியே வந்தன. அக்கா முற்றிலும் மாறியிருந்தாள். ஹிப்பியாக வெட்டி மேவி இழுத்த தலைமுடி. நினைவில் இருந்ததை விடக் கூடுதலாகவே கறுத்திருந்த உதடுகள். கன்னக் கதுப்பில் நுரைத்த மயிர் பிசுறுகள். புதிதாகச் சேர்ந்திருந்த ஒருவித மிடுக்கு. அவள் தன்னுடைய குறுமுலைகளை தூக்கி நடப்பதால் அப்படித் தோன்றவில்லை.
மடிப்புக் குலையாத மென் நீலநிறக் காற்சட்டையைக் கால் பக்கமாகச் சிறிது மடித்துவிட்டிருந்தாள். கோடுபோட்ட சட்டை வியர்வை ஊறி நனைந்திருந்தது. இடுப்பில் பெரிய பச்சை நிறப் பட்டியை சற்றே இறுக்கமாக இழுத்துக் கட்டியிருந்தாள். தோளில் துணிப்பை தொங்கியது. அது மிகச் சிறிதாக இருந்தது. இறுகக் கட்டியிருக்கும் இடுப்புப்பட்டியே அவளது புது மிடுக்கின் காரணமென்பதை ஊகித்தபோது சிரிப்பு வந்தது.
அப்பாவுக்குக் கண்ணில் பழுதில்லை என்றாலும் கைக்கெட்டும் தூரத்தில் வந்த பின்னரே அக்காவை அடையாளம் கண்டுகொண்டார். அப்போது அவர் உடலில் மெல்லிய நடுக்கம் எழுந்தது. தளர்ந்த உடலோடு அக்காவைச் சேர்த்து அணைத்து, அவள் தோள் மூட்டில் கைவைத்து லேசாக அழுத்தினார். அப்போது அவர் கண்களிலும் அந்த நடுக்கம் ஓடியது. ஆழமாகச் சிந்திக்கும் பாவனையில் கண்களைச் சுருக்கித் தாடையை அசைத்துக்கொண்டார். அந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க விரும்புவது போன்ற பாவனை. அதில் கொஞ்சம் கர்வமும் இருந்தது. அக்கா கைகளை வீசியபடி என் அருகில் வந்தபோது மருந்து வாசனையும் வியர்வை வாசனையும் அவள் முன்னால் வந்தன. அது நாசியைக் கரகரக்கச் செய்யும் ‘மலத்தியோன்’ வாசனை என்பதை உடனேயே ஊகிக்க முடிந்தது.
அக்காவைப் பார்த்து “பிள்ளை” என்றுவிட்டு உதடுகளைக் குவித்துச் சொண்டை நீட்டி “உம்மானை அசல் ரத்தினம்” என்றார் விநாசி. அவருடைய கையில் ஆத்தையுடைய கண் இருந்தது. ஆர்வமாகக் கண்களை இடுங்கி மேல் வைத்துப் பார்த்தபடி “நல்ல உள்ளோட்டமும் உண்டு” என்றார். பின் அதைக் கவனமாகப் பெட்டியினுள் வைத்தார். ஆத்தையுடைய கண்ணின் ஒளிப் பிரவாகத்தில் கருஞ்சூரைப் பெட்டி ஒரு நொடி இரத்தச் சிவப்பில் தகதகத்து விட்டு அணைந்தது. அருகே குவிந்திருந்த நகைக் குவியல்கள் பொலிவிழந்து தகரச் சிலும்பல்கள் போலத் தெரிந்தன. விநாசி நிலத்துடன் ஒட்டி மடங்கியிருந்து எல்லாவற்றையும் கவனமாகச் சோதித்துக் குறித்துக்கொண்டார். அவரது பென்சில் ஆதிக் கோடுகளை இழுத்தும் வளைத்தும் கொண்டிருந்தது. முடிந்ததும் பெட்டியை மூடி ஆமைப் பூட்டைக் கொழுவிப் பூட்டிவிட்டு, சாவியை அப்பாவிடம் தந்தார். அப்பா “ம்” என்றபடி திரும்பி தூண்களின் அடியைக் கொத்துபவர்களுக்கு ஏதோ சொன்னார்.
அக்கா கோம்பையிலிருந்த விபூதியை இருவிரலாலும் அள்ளி நெற்றியில் இட்டார். இடும்போது வழமையாக உதடுகளுள் ஏதாவது முணுமுணுப்பர். இன்று அது அசையாமல் இறுகிக் கிடந்தது.
படலையைத் திறந்தபோது, அம்மா தலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு, பொச்சுத் தும்பில் ஈரச் சாம்பலை எடுத்து இரும்புச் சட்டியைத் தேய்த்துக் கழுவியபடி இருந்தார். அவர் அக்காவைக் கவனிக்கவில்லை. யாரோ என்னுடைய நண்பன் என்று நினைத்திருப்பார். அருகே வந்த போது “கொப்பா பெட்டியை பெரிய அறேக்கை வைக்கச் சொன்னவரடா தம்பி” என்றபடி நிமிர்ந்தவர் அப்படியே உறைந்து விட்டார். பின் படாரென்று “பிள்ளை” என்றபடி எழுந்துவிட்டார். காலடியில் இருந்த தண்ணிச் சருவம் சரிந்தது. கண்களில் நீர் கோர்த்துத் ததும்பியது. உதடுகள் துடித்தன. அசையாமல் சிறிதுநேரம் அக்காவையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றார். அவரது நினைவுகள் எங்கோ ஆழத்தில் அலைந்து திரிவதான பாவனை. அனிச்சையாகக் கையைச் சட்டையில் துடைத்தார். பின் எப்போதும் போல, கடுமையான சூழ்நிலைகளில், நிர்க்கதியின் முள் நெருடுகையில் செய்வது போல கோயில் முகப்பை நிமிர்ந்து பார்த்தார். அங்கு வானம் மட்டும் இருந்தது. நீல வெறுமை. முடிவே இல்லாத நீலம். தூண்களின் கம்பி நீட்டங்கள் முகில்களை நோக்கி நெளிந்தபடி இருந்தன. ஒரு தூணின் உச்சியில் ஏதோ குருவிக் கூடு இருந்தது. திடீரென சின்ன உலுப்பலுடன் இறைஞ்சும் தூண் அப்படியே சரிந்தது. பொடியன்களின் கூச்சல் வானைப் பிளந்தது. குருவிக் கூட்டின் மரக்குச்சிகள் சிதறிப் பறந்தன. இலவம் பஞ்சுப் புழுதி எழுந்தது. படார் என்ற பெரும் சத்தத்துடன் இராட்சதத் தூண்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிலத்தில் அதிர்வுடன் வீழ்ந்து நொருங்கின.
02.
அக்கா கால் முகம் கழுவி சட்டை மாற்றி வந்து, அம்மாவுடன் கிணற்றுக் கட்டில் அமர்ந்துகொண்டாள். சட்டென்று சுருங்கிச் சிறு பெண்ணாகத் தெரிந்தாள். அவளிடமிருந்த விலக்கம் நீங்கி இணக்கமானவளாகத் தோன்றினாள். அம்மாவின் ‘நைற்ரி’ அவளுக்குப் பொருந்தாமல் இறுக்கமாக இருந்தது. அவளது உடலை அருவருப்புடன் இறுகிக் கெளவிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. இடை பெருத்தது பிதுங்கித் தெரிந்தது. முழங்கை மூட்டு சற்றே கோணலாகத் துருத்திப் பெரிதாக இருந்தது.
அக்கா இயக்கத்தில் இருந்து திரும்பி வந்த பின்னர் ஆரம்பக் கிளர்ச்சியும், பரபரப்பும் வற்றி என்னுள் ஓர் ஆழ்ந்த இறுக்கம் கவிந்தது. கண்ணின் கீழ் இருக்கும் கருமைபோல அது கூடவே தங்கி நின்றது. இரகசியமாக அடைகாத்து வைத்திருந்த பெருமிதத்தின் குமிழ் உடைந்து பரிகசிப்பது போல இருந்தது. எவ்வளவு யோசித்தும் அதன் ஆதி ஊற்றை என்னால் இனம் காண முடியவில்லை. அக்காவின் அருகில் அம்மா மிகவும் தளர்ந்து வயதாகிவிட்டவர் போலத் தெரிந்தார். அரிதாக என்றாலும் அக்காவிடம் சிரித்துப் பேசுவதையும் பார்க்க முடிந்தது. ஆனால் நான் எதிர்பார்த்திருக்காத திடீர் நெருக்கமும் இரகசியத்தனமும் அவர்களுக்குள் குமிழ் விட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
நான் அக்காவிடமிருந்து விலகி நின்றிருந்தாலும், அவளிடம் நெருங்கிச் செல்ல முயன்றபடியே இருந்தேன். அவளது ஒவ்வொரு செயலையும், அசைவையும், உதட்டுச் சுழிப்பையும் தீவிரமாகக் கவனித்தபடியே இருந்தேன். எனக்கே இது வியப்பாக இருந்தது. அவளிடம் நான் எதை எதிர்பார்க்கிறேன். அவளிடம் வெளிப்படும் எந்த அம்சத்தைத் தேடிக் காத்திருக்கிறேன். அவள் அசாதாரணமானவள் என்றும் இந்தச் சலிப்பூட்டும் அன்றாடத்திலிருந்து விலகி அசாதாரணத்தின் பயங்கரத்துள் வீழ்ந்து விட்டவள் என்றும் சற்றே பிரமிப்புக் கலந்த விலக்கம் முன்னர் மேலோங்கியிருந்தது. அவள் திரும்பி வந்ததும் சட்டென்று இருள் கவிந்தது போன்ற வெறுமை படர்ந்தது. விடுமுறையில் வந்திருக்கிறேன், இன்னும் ஓரிரு நாளில் திரும்பச் சென்று அணியில் சேர்ந்துகொள்வேன் என எந்தக் கணமும் சொல்லிவிட வேண்டும் என எதிர்பார்த்தேன்.
அக்கா இயக்கத்தில் இருந்த காலங்களில், போர் முனை வன்னிக்கு நகர்ந்துவிட்டிருந்தது. வன்னி எங்கோ தூரத்தில் இருப்பதான எண்ணமே என்னிடம் இருந்தது. பலாலியில் இருந்து இராணுவம் அடிக்கும் ஷெல் எங்களுடைய தலைகளின் மேலே கூவியபடி அக்காவிடம் செல்லும். நிலம் அதிர நெஞ்சுக்குள் வெடிப்பது போன்ற உறுமலுடன் அறுபது ஷெல்கள் முழங்காத நாள்கள் இல்லை. கட்டில்கள் கூட அதிரும். ஷெல் கூவத் தொடங்க அம்மா, அம்மன் கோயில் முகப்பை வெறித்துப் பார்ப்பார். இருளில், பகல் வெளிச்சத்தில், மழையில் ஆறு இராட்சதத் தூண்களிலும் சலனமற்று நின்றிருக்கும் முகப்பு. ஒவ்வொரு ஷெல்லும் தூரத்தே இருமுறை வெடித்து அடங்கும். அம்மாவில் சலனமோ, அசைவோ இருக்காது. உதடுகளுள் வேண்டுதலோ, முணுமுணுப்போ இருக்காது. வான் நோக்கி நீண்டிருந்த சிறு கூர் முனை அவருக்கு எந்த ஆறுதலைக் கொடுத்திருக்க முடியும்? வெறும் உறைந்த பார்வை மட்டும்தானா? அப்போது திடீரென்றே எனக்கு அக்காவின் நினைவு வரும். வெட்கமும், தாழ்வுணர்வும் கூடவே எழும். அதைக் கலைக்க அக்காவை முன்னணிப் படை வீராங்கனையாக நினைத்துக்கொள்வேன். அகன்ற தோள்களும், தரையில் ஊன்றி நிற்கும் வலிமையான கால்களும் உள்ள விடுதலைப் போராளி அவள். அவள் அசுர பலமும் ஆக்ரோசமாகச் சிலும்பிய தலையுமாக முன்னேறிக்கொண்டிருப்பவள். தரையோடு ஒட்டி ஊர்ந்தபடி எதிரிகளை வேவு பார்த்துக்கொண்டிருப்பவள். குண்டடிபட்ட தன் தோழியின் இரத்தக் காயத்தை சாரத்தைக் கிழித்துக் கட்டுப் போட்டுவிட்டுத் தோள்களில் சுமந்து செல்பவள். பெருங் கூட்டத்தின் முன் ஆக்ரோசமாக உரை நிகழ்த்திக்கொண்டிருப்பவள். சோர்ந்திருக்கும் தோழர்களுக்கு புத்துணர்வூட்டி போர்க்களம் அழைத்துச் செல்ல வீரஞ் செறிந்த கதைகளை வேடிக்கையாகச் சொல்லக் கூடியவள். அந்த கற்பனையின் வெம்மை இரவுகளை நீண்டதாக்கும்.
அவள் இயக்கத்துக்கு போனபோது என்னவகையான மனநிலையில் இருந்தேன்? சுத்தமாக நினைவில்லை. அந்த நாளில் கனதியான ஏதும் நிகழ்ந்ததா தெரியவில்லை. ஆனால் அவள் இங்கிருந்து போவதற்குத் தன்னைச் சிறுகச் சிறுகத் தயார்படுத்திக்கொண்டிருந்தாள் என்று இப்போது தோன்றுகிறது. இங்கிருந்து இயக்கத்திற்குத்தான் போக விரும்பினாளா? என்னைச் சீண்டாத எந்த அம்சம் அவளைத் தூண்டி நிம்மதியிழக்கச் செய்து துரத்தியிருக்கக் கூடும். எதன்மீது சலிப்புற்று அவள் சென்றாள். துல்லியமாகத் திட்டமிடவில்லை என்றாலும், அது ஒரு தற்செயல் இல்லை என்பது மட்டும் நிச்சயம். அவள் போன பின்னர் வீடு கழுவித் துடைத்தது போன்றிருந்தது. அம்மா சட்டென்று கோபமும், சிடுசிடுப்புமானவராக மாறினார். அவரில், எப்போதும் துப்பத் தயாரான விசக் கொடுக்கு முளைத்திருந்தது. வெறுமையான இருள் சூழ்ந்த வீட்டினுள் அவர் தன்னைக் குறுக்கிக்கொண்டார். ஏதோ அது தன் தவறு என்பது மாதிரியான பாவனை. தன்னை அக்காவில் கண்டு கொள்கிறாரா? அல்லது அவளைக் கண்டு அஞ்சினாரா? இரவுகளில் காடுகளில் தனித்திருப்பதையும், போர்க்களங்களின் முன்னணியில் துப்பாக்கியுடன் நின்றிருப்பதையும் கற்பனையில் பார்த்திருப்பாரா தெரியவில்லை. ஆனால் அவரைக் கனத்த மெளனம் சூழ்ந்தது. அப்பா தோட்டத்தில் பழியாகக் கிடந்தார். கடுமையான உழைப்பு அவரைத் தளர்வுறச் செய்தது. ஆவேசமாக தெருவலை மண்வெட்டியால் ஆயிரம் கண்டு தறைகளையும் தனி ஆளாகக் கொத்திச் சீர்படுத்தினார். முன்னர், கோரைப் புற்களில் முத்துப்பரவல் போல சிலும்பியிருக்கும் பனித் துளிகளை மிதித்துச் சென்றே கொஞ்சமாகக் கொத்துவார். வெயில் ஏற வியர்வை வழிய வந்துவிடுவார். ஆனால் இப்போது, தோட்டம் கொத்திக் களைத்து மண்வெட்டியைக் கால்களுக்கு இடையில் இடுக்கியபடி அமர்ந்திருக்கும் அப்பாவை அரிதாகவே பார்க்க முடிந்தது. அப்போது அவருடைய கண்களில் தளர்ச்சி தெரியும். வெறும் தேத்தண்ணியைக் கையில் கொட்டிய சீனியை துளியாக நக்கிக் குடித்துவிட்டு ஆவேசமாக எழுந்து திரும்பவும் தறையைக் கொத்துவார். மண் சிதம்பிப் பறக்கும். அழுத்தமான கால்களுக்கிடையே தெருவலை மண்வெட்டியின் சதுரமான மண் துண்டுகள் சேரும். ஈர மண்வாசம் எழும். தறைக்குத் தண்ணீர் கட்டும் போது உடைக்கும் பாத்திகளில் வேகமாக மண் அள்ளி உடைப்பைச் சீர் செய்துவிட்டுப் பெருமூச்சு விடுவார். சில சமயம் உடைத்துப் பெருகும் பாத்திகளை வெறுமையாகப் பார்த்துக்கொண்டிருப்பார். கைவிடப்பட்டிருந்த போதி தோட்டத்தைக் கூட கொத்திச் சீர்படுத்தி, தக்காளிச் செடிகள் நட்டார். தக்காளிச் செடிகள் துளிர்த்து வளர்வதைப் பொறுமையாகக் கவனித்தபடி இருந்தார். அதன் பொன் மஞ்சள் பூ குமிழ் விரிந்து, பாசிப்பச்சைக் காயாகி, பச்சையை ஆக்கிரமித்துப் படரும் சிவப்பு பழங்கள் நிலத்தோடு சரிந்துவிடாமல், மரவள்ளித் தடி ஊன்றி, நீரில் ஊறப்போட்ட வாழை நாரால் கோர்த்துக் கட்டுவார். தக்காளிப் பழங்களில் அடிப்பக்கமாக -தக்காளி குண்டி என்பார் விநாசி- அழுகல் பிடித்தால் -போதி தோட்டத்தில் எப்போதும் அழுகும்- முட்டைக் கோதுகளை அரைத்து நீர் விட்டுத் தெளிப்பார். ஆச்சரியமாக தக்காளி அழுகல்கள் மறைந்து செம்பழமாகப் பழுத்ததும் அச்சுவேலிச் சந்தைக்குக் கொண்டு செல்வார். அக்காவின் நினைவுகளில் இருந்து முதலில் மீண்டதும் அவர்தான்.
அக்கா இன்னும் ஓரிரு வருடங்களில் திருமணமாகி வெளிநாடு சென்று விடக்கூடும். தன் கடந்த கால வாழ்வை நினைவுறுத்த எந்த அடையாளங்களும் இல்லாத ஊரில் அவள் வாழ்வு கரைந்துவிடவும் கூடும். ஒருவேளை அதையே அவள் விரும்பியிருக்கவும் கூடும். எப்போதாவது அரிதாக ஃபோனில் அழைத்து, தன் மகளை “மாமா சொல்லு.. மெ இல்லை மா” என்று திருத்தி விட்டு “பார்த்தியா மருமகளை” எனச் சிரிக்கவும் கூடும். சட்டென்று எனக்கொரு எண்ணம் வந்தது. பின் அதைத்தான் நான் விரும்பினேனா என்ற சந்தேகமும் தலை தூக்கியது. நான் அங்கிருந்து வெளியேறி இயக்கத்துக்குச் சென்றுவிட விரும்பினேன் என்றென்றைக்குமாக. ஒருபோதும் திரும்பிவராமல். அக்காவை விரும்பி நெருங்குந்தோறும் அவளிடம் ஆழமான விலகலையே உணர்ந்தேன். நாள்பட்ட வடுபோல அதை அந்தரங்கமாக வருடிக் கொண்டேன். என்னுள் கூசிச் சுருங்கினேன். அவளுடையே இருப்பே என்னை அச்சுறுத்துவதாக மாறியது. நான் மிகவும் சோர்வும் படபடப்புமானவனாக ஆனேன். இரவுகளில் தூக்கம் குறைந்துகொண்டு வந்தது. இப்போதே இந்த நொடியே இங்கிருந்து விலகி ஓடிவிட விரும்பினேன்.
அப்போது இயக்கத்துக்கும் படையினருக்கும் சமாதான காலம் தொடங்கிவிட்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் தொண்டைக் குழி இறுக்கம் சற்றே நெகிழ்த்தப்பட்டு வெளிக்காற்று கலாதியாக வீசத் தொடங்கியிருந்தது. இயக்கம் தன்னுடைய அரசியல் துறை அலுவலகங்களை ஊருக்கு ஒன்றாகத் திறந்திருந்தது. பள்ளி விளையாட்டுப் போட்டிகளில், கோயில் திருவிழாக்களில் மிக நேர்த்தியாகச் சட்டை அணிந்த இயக்கப் பொறுப்பாளர்கள் வெள்ளைச் சிரிப்பில் நின்றிருந்தார்கள். சின்னப் பெட்டைகளும், பெடியளும் வெட்கம் கலந்த விலகலுடன் அவர்களிடம் கதை கேட்டார்கள். அவர்களிடம் சொல்வதற்கு பொறுப்பாளர்களிடம் ஆயிரம் கதைகள் இருந்தன. ஊரின் சில்லறைச் சண்டைகளில் கூட பொறுப்பாளர்களின் பிரசன்னம் இருந்தது.
கரிய பல்ஸர் வண்டியில் வந்து என்னை ஏற்றிச் செல்லும் பொறுப்பாளரிடம் அக்காவிற்கு பெரிய மதிப்பில்லை என்பதை நான் உள்ளூர அறிந்திருந்தேன். அந்தப் பல்ஸர் வண்டியைக் கருவண்டு என்று பழிப்பாள். கருவண்டு வரும் போது அவள் தன்னுள் சுருங்கி வீட்டுள் மறைந்து விடுவதை உவகையுடன் கவனிப்பேன். அருவருப்பூட்டும் கொடூர சத்தத்துடன் சந்தியில் திரும்பி வீட்டுப் படலையடியில் தலைகுத்தி நிற்கும் கருவண்டிற்காக ஏங்கினேன். அதன் கட கட ஒலி தூரத்தில் கேட்டதும் – பனிக்காலத்தில் அது பிரதான வீதியில் வரும் போதே வீட்டிற்குக் கேட்கும் – கிளர்வுடன் அக்காவைப் பார்ப்பேன். அவள் சினந்து மூக்குத் துடிக்க “தம்பி பேசாமல் படித்து முடிக்கிற வழியைப்பார்” என்பாள்.
யாழ்ப்பாணத்துக்கே உரிய பங்குக் கிணற்றுப் பிரச்சினை. சொரியல் காணியின் பங்குக் கிணறு. இன்னும் பத்துத் தலைமுறை போனால் கூட தீராத சிக்கலும், கொடும் பகையுமான சண்டை. அலவாங்கு, பிக்கான், கொலை விழுந்தால் புதைக்கத் தேசிமரத்தின் கீழ் அளவான கிடங்கு கூட வெட்டிவைத்து, பல வருடங்களாகக் குளிப்பு முழுக்கே இல்லாமல் பெருஞ் சண்டைக்குத் தயாராக இருந்திருக்கிறார்கள். கருவண்டிலே நானும் பொறுப்பாளரும் சென்று இறங்கினோம். இல்லை, வண்டியில் சடுதியாக பிரேக் அடித்துக் குதித்து இறங்கினார் பொறுப்பாளார். நான் கருவண்டைக் கவனமாகப் பிடித்துக்கொண்டேன். மடிப்புக் கலையாத பொக்கற்றிலிருந்து குட்டித் துவக்கை உருவித் துணியால் துடைத்தபடி “ம் சொல்லுங்கம்மா உங்கடை பிரச்சனையை.. அதையுமொருக்கா வடிவாக் கேப்பம்… அதுக்கு பிறகு விடுதலைப் போராட்டத்துக்கு வருவம்… அங்க பாவம் தலைவர் காட்டுக்கை இருந்து சிங்களவனை கலைக்க…” என்று தொடங்கினார் பொறுப்பாளர். அவ்வளவுதான். அதற்கு மேல் அவர் ஏதும் சொல்லவில்லை. சொல்ல வேண்டிய தேவையும் இருக்கவில்லை. கதிரைகளை மாமர நிழலில் இழுத்துப் போட்டு பகையாளிகள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து, வெறுந்தேத்தண்னி குடித்தபடி பொறுப்பாளரிடம் கதை கேட்டார்கள். ஆனால் பங்குக் கிணற்றில் பின்னும் கூட இருவீட்டாரும் குளிக்கவில்லை. “அசல் யாழ்ப்பாணத்தான்” என்றார் மாஸ்டர். கிணற்றின் ஊற்று எப்போதோ தூர்ந்து சவர்க்காரம் நுரைக்க முடியாத கடும் சவர் ஆகிவிட்டிருந்தது தண்ணீர். “சவர் எண்டாலும் உருத்து உருத்துத்தானே” என்றார் விநாசி. பொறுப்பாளர் கருவண்டில் ஏறியபோது ‘கவனம் அப்பன் பார்த்துப் போங்க’ என விநாசி வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார் என்றேன் அக்காவிடம். அவள் மாறாத புன்சிரிப்புடன் “அரசியல் துறைக்காரர் இயக்கத்தில் சேர்ப்பு இல்லை” என்றாள். என்னுள் ஏதோ ஒன்று படீர் என்று அறுந்து வீழ்ந்தது.
03.
சுட்ட சுண்ணாம்பாக வெளிறிய ரஷ்யனின் தலையில் மாட்டியிருந்த அடையாள மின் விளக்கு, பனிப்புயலினூடே கலங்கிய மெல்லிய நீலக் கீறலாகவே தெரிந்தது. அது குன்றின் உச்சியில் அப்படியே அசையாமல் நிலைகுத்தி நின்றிருக்கிறது. நாங்கள் கீழே இறங்கிச் செல்வதையே நோக்கிக்கொண்டிருக்கிறான். சுற்றிலும் இடைவெளியே இல்லாத அடர்த்தியாகப் பனி பொழிந்துகொண்டிருந்தது. தாரையாக நின்று கொட்டும் மழை போன்ற பொழிவு. ஆனால் கனத்த துளிகளாக இல்லாமல் மிக மிருதுவான பனிச்சிறகுகள் போன்றிருந்தன. எனக்கு நேர் கீழே தூனகையின் வழிகாட்டு விளக்கு மெல்லிய சிவப்புக் கோடாகக் கலங்கித் தெரிந்தது. அவள் மின்விளக்கைத் தளர்த்தி பிடரியில் கட்டியிருக்க வேண்டும். தன்னைத் தொடரச் சொல்லும் சமிக்ஞை. நான், அடுத்த நொடியில் அவள் பனிக்குள் மறைந்து விடக் கூடும் என்ற இடைவெளியில் அவள் பாதங்களைக் கவனமாகப் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். அவள் கால்களை அழுத்தமாக ஊன்றி மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். வாத்து அரக்கிச் செல்வது போல இருந்தது. நான் அவளை விட இன்னும் மிக மெதுவாக. என்னுடைய முழு ஆற்றலையும் திரட்டி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன். கால்கள் ஈரமூறி சப்பாத்துகள் பாரமாக இருந்தன. கனமான ஒவ்வொரு அடியும் புதுப் பனிக்குள் புதைந்தன. தூனகையுடைய கால் தடங்கள், அவள் கால்களை தூக்கியதுமே மூர்க்கமான பனிச் சொரிவால் நிரம்பி அழிந்தன. உடலை மெள்ளக் குனிந்து, தலையை ஒரு பக்கமாகத் திருப்பி மூர்க்கமாக அறையும் பனிக்காற்றை உள் வாங்கியபடி கீழ் நோக்கி நடந்தேன். சுற்றிலும் வெண்கம்பளம் விரித்தது போன்ற கண்கள் கூசும் வெண்மை. மெதுவாகக் கடந்து செல்லும் மரங்கள் மேல் விளிம்பில் வெண்பனிச் சேகரம் நீளத் தொப்பி போல இருந்தது. கீழே கரும்பச்சை இலை நீட்டங்கள்.
கனத்த கழுத்துப்பட்டியை நெகிழ்த்தி மறுபடியும் பின்னால் திரும்பிப் பார்த்தேன் அதே வெண்சொரிவு. அதை மீறி ஏதும் கண்ணில் தட்டுப்படவில்லை. கண்களை இடுக்கி ஏதும் அசைவு தெரிகிறதா எனப் பார்த்தேன். வெண்பனி திரட்சி நீண்டிருந்தது. என்னுடைய பாதச் சுவடுகளைப் பனி உண்டு செரித்திருந்தது. மெல்ல “தூனகை” என்று குரல் கொடுத்துப் பார்த்தேன். அதைப்போல மடத்தனமான செயல் குளிரில் வேறு இல்லை. உதடுகள் தனியே இருப்பது போன்று உணர்விழந்து இருந்தன. வெடித்த உதடுகளில் குளிர்ந்த மெல்லிய புளிப்புச் சுவை. மேலே ரஷ்யன் நின்றிருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மேற்சட்டையில் கொழுவியிருந்த ஊதலை உதடுகளில் பொருத்தி இருமுறை விட்டு விட்டு ஊதினேன். பனித் துகள்கள் சிதறிப் பறக்க மெல்லியதாகவே ஒலி எழுந்தது. ஈரச் சாக்கால் மூடி ஒலிப்பதுபோல மிக அடங்கின ஒலிச் சிதறல். புளிப்பும் குளிரும் நாவில் இறங்கின. பதில் ஊதல் கொஞ்ச நேரம் கழித்தே கிடைத்தது. காற்றின் திசையில் இருந்து வந்ததால் நன்றாகக் கேட்க முடிந்தது. தூனகை புரிந்துகொண்டு வேகத்தைச் சற்றே குறைத்தாள். குன்றின் கீழ் விளிம்பு வெகுதூரத்தில் இருக்க வேண்டும். சரிவு குறைந்துகொண்டே வந்தது. பனிமூடிய வெள்ளைக் குறும்புதர்கள் அடர்த்தியாக வரத் தொடங்கின. அவற்றை விலகி நடப்பது சிரமமாக இருந்தது. குப் என்று குளிராடையுள் வியர்த்தது. இனிமையாகக் கதகதப்பு வெப்பத்தைக் குளிராடையுள் உணர்ந்தேன். கால் இடறி அப்படியே பனிக் குவியல்களுக்குள் சரிந்தேன். ஊதலை எடுக்க முடியவில்லை. அது எங்கோ சிக்குண்டு கிடந்தது.
இந்தக் குன்று, மரவீட்டிலிருந்து பார்த்தபோது சிறிதாகவே தெரிந்தது. மதியத்துள் ஏறிக் கடந்துவிட முடியும் என நினைத்திருந்தேன். ஆனால் குன்றின் அருகில் வரவே நெடுநேரம் நடக்க வேண்டியிருந்தது. அப்போது தூனகையின் முகத்தில் சீறி எழும் மூச்சுக்காற்றையும், பெரிதாகச் சுருங்கி விரியும் மூக்குத் துவாரங்களையும், சிவந்த நுனி மூக்கையும் கவனித்தேன். காலையில், கைகளை உரசிவிட்டு தடித்த மென்மயிர்க் கையுறைகளை அணிந்தபடியே “மூச்சைப் பிடிச்சு ஒராச்சல்லை ஏறிட்டம் எண்டா.. இறங்குறது ஈஸி பிறகு பொன் உலகம்தான்…” என்ற போதிருந்த தூனகையின் முகம் அல்ல அது. குன்றின் அப்பால் விடியலின் மெல்லிய பொன்னொளிப் பொசிவு தெரிந்தது. அப்படிப் பொசிந்து பரவுவது போன்ற கதிர்ப் பரவலை பனியில் மட்டுமே பார்க்க முடியும். நீரால் ஒற்றி எடுத்த ஓவியம் போல இருந்தது. ஆனால் குன்றில் ஏறத் தொடங்கியதும் அவள் ரஷ்யனுக்கு இணையாகவே நடந்தாள். பல இடங்களில் இருவரும் எனக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. பனிச்சிகரத்தில் காத்திருப்பதுபோல மடைத்தனம் வேறு இல்லை என்றான் ரஷ்யன்.
குன்றின் கீழ் இருக்கும் மரவீட்டிற்கு வந்த போது, உள்ளே தூனகை இருந்தாள். என்னைப் பார்த்ததும் அனிச்சையாகக் கால்களை ஒடுக்கிக்கொண்டு, கணப்பில் கைகளை நீட்டி வெப்பத்தை வாங்கினாள். ரஷ்யாவில் பார்த்த வீடுகள் போல் அல்லாமல் வட்ட வடிவில் கூம்புக் கூரையுடன் நடுவே கணப்புடன் இருந்தது. கணப்புள் மரக்கட்டைகள் கடலை பொரிவது போல ஓசையெழுப்பி எரிந்தன. அதிலிருந்து ஒரு வித தைல வாசனை வந்தது. அதன் மேல் பித்தளைப் பாத்திரத்தில் நீர் கொதித்துக்கொண்டிருந்தது. மென்மயிர் பாவிய தடித்த விலங்குத் தோல்கள் சுற்றிலும் தொங்கின. ஆனால் மாமிச நெடி இல்லை. இருந்த ஒரேயொரு மேசையும் குட்டையாக இருந்தது. பீங்கான் கோப்பைகள் எல்லாம் மிகக் குட்டியாக விளையாட்டுப் பொருட்கள் போலவே இருந்தன.
தூனகையும் அப்போதுதான் வந்திருக்க வேண்டும். அவளது ஈரக் காலுறைகள் கணப்பின் அருகில் இருந்தன. அவளது கால்கள் குறண்டிச் சுருங்கியிருந்தன. அதைக் கைகளால் மெல்ல நீவி விட்டுக்கொண்டிருந்தாள். சுற்றிலும் உறைய வைக்கும் கடுங்குளிர். மூவர் கதகதப்பான சிறு குமிழுள் அமர்ந்திருந்தோம். அந்த நினைப்பே புத்துணர்வூட்டக் கூடியதாக இருந்தது. குமிழுள் எழும் இதமான கதகதப்பு. “ஃபிரான்ஸுக்கா?” என்றேன். புன்னகைத்து “இல்லை வெளிநாட்டுக்கு” என்றாள். பின்னிரவில் ஓசை கேட்டு விழித்தபோது, அருகே தூனகையின் மெல்லிய குறட்டை கேட்டது. ரஷ்யன் கணப்பை சிறு கம்பியால் கிளறி, உடைத்த சிறு மரக் குற்றிகளைச் சொருகிவிட்டு, மென்மயிர் கதகதப்புக்குள் புதைந்துகொண்டான். காலையில் எழவே விரும்பமில்லாத இனிய சோம்பல் பீடித்திருந்தது. அப்படியே சோம்பிப் படுத்திருந்தேன். தூனைகை எழுந்து குளிராடைகள் அணிந்து பளிச்சிடும் சிரிப்பில் முன்னால் நின்றிருந்தாள்.
ஆவியெழும் வெறும் தேத்தண்ணியும், சாப்பிட பாணும் இருந்தன. ஊரின் அச்சுப் பாண் போல அச்சு அசலான நீள் சதுரப் பாண். ரஷ்யன், இறைச்சி வத்தல்களை சிறு கத்தியால் சீவி, வெட்டிய இரு பாண் துண்டுகளுக்கும் இடையில் பொதிந்து தந்தான். தூனகை அதில் இரண்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். எனக்கு அதன் வாசம் குமட்டியது. பாணை மட்டும் தேத்தண்ணியில் தோய்த்துச் சாப்பிட்டேன். கணப்பின் வெப்பத்தை குளிராடையுள் நன்றாகத் தேக்கியபடி “தோழர்களே ஆண்டவரின் அருள், இன்று பனிப்புயலுக்கு சாத்தியம் குறைவு. பொழுது சாயமுன்னர் குன்றின் உச்சிக்குச் சென்றுவிடலாம், உச்சி வரையே நான் வருவேன், கீழே உங்களுக்கு ஆண்டவருடைய துணையிருக்கும், இறங்குவதில் சிரமம் இருக்காது” என்றான். அப்போது பனி மிக மெல்லிதாகத் தூவியது. புதிதாகத் துருவிய மிருதுவான தேங்காய்த் துருவல் போல அவ்வளவு மென்மை. வீட்டுக் கூரை விளிம்பில் ஏராளம் குத்தூசிகள் பூத்திருந்தன. உறைந்த நீராலான ஊசிப் பூக்கள். ஒடித்துப் பார்த்த போது எதிர்பார்த்ததை விடக் கடினமாக இருந்தது. தலையில் மின்விளக்கைப் பொருத்த தோல் வாரினால் இழுத்து இறுக்கிக் கட்டிவிட்டு, குன்றை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. அப்படியே மல்லாந்து கிடந்தேன். அப்படியே உருண்டு பிரதட்டை போல கீழ் விளிம்பைத் தொட்டுவிடலாமா என்று கூட விசித்திரமாக யோசித்தேன். குளிர் என்மேல் ஊறி மெல்ல ஏறி வருதை உணர முடிந்தது. கை நுனி மெல்ல மரக்கத் தொடங்கியது. அச்சத்துடன் கீழே நோக்கினேன். தூனகையின் ஒளிப்பொட்டை எங்கும் காணவில்லை. சூடான மூத்திரம் பிரிந்து உள் சட்டையை நனைத்தது. கீழே ஆழத்தில் வெறும் வெண்படுதா விரிப்பு. இடையிடையே பெரிய வெண்காளான் போன்ற குட்டைப் புதர்கள். என்னுடைய நினைவுகள் கலங்கி மார்புக்கூடு விம்மித் துடித்தது. என்னுடைய பயணத்தின் திசையை மாற்றிய அந்த இறுதி இரவை ஏனோ நினைவுகூர விரும்பினேன்.
அன்று, வழமையைவிடப் புழுக்கமாக இருந்தது. மேற்சட்டையைக் கழற்றி, தலையணையைச் சுவரோடு சரித்து ஒருக்களித்துப் படுத்திருந்தேன். மனதில் வெறுமையான கனத்த இறுக்கம் கவிந்திருந்தது. வயிற்றுள் அசெளகரியமான சிறு புரளல். நாளை அதிகாலை இங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறேன். கருவண்டுப் பொறுப்பாளர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். அம்மா என்னுடைய இலட்சியபூர்வமான கடிதத்தைப் படித்துவிட்டுக் கோயில் முகப்பை வெறித்துப் பார்ப்பார். அங்கே புதுப் பெயிண்டின் பளபளப்பில் வெண்கலசம் வைத்த சிமெண்ட் முகப்புத் தெரியும். அக்கா தன்னுள் நொறுங்கி… சட்டென்று கதவிடுக்கில் ஓர் ஒளி அசைவைப் பார்த்தேன். கவனித்தபோது அசைவு அல்ல ஒளி வேறுபாடு எனப் புரிந்தது. ஓசையே எழுப்பாமல் மெல்ல எழுந்து சென்றேன். பெரியறையுள் காஞ்சூரைப் பெட்டி திறந்திருந்தது. புகைபோன்ற அடர்த்தியான சிவப்பு ஒளி வெள்ளம் அறை முழுவதும் நிறைந்திருந்தது. பெட்டியின் எதிரே அக்கா கால்களை மடித்து ஒருபக்கம் சரிந்து ஒயிலாக அமர்ந்திருந்தாள். சிவப்பு ஒளியில் கூர் விழிகள் இன்னும் கூர்மை கொண்டிருந்தன. அவளுடைய அம்மண உடல் முழுவதும் பொன்னொளி தககதகத்தது. பொன்னாலான சதை உடல் போல. குரும்பை போன்ற கூரான சிறு முலைகளை அட்டியல் வளைந்துத் தழுவியிருந்தது. ஆத்தையுடைய சிவப்புக் கண்ணை எடுத்து இரு கூர் விழிகளுக்கும் இடையில் நெற்றிச் சுட்டி போல வைத்தாள். அப்படியே எழுந்து யன்னலூடாக இருளை நோக்கியபடி நின்றாள். அவளது தளர்ந்த புட்டம் சிறு மேடு வளைவாகத் தெரிந்தது. அவளையே அப்படியே உற்றுப் பார்த்தபடி நின்றேன். ஒளியாலான சிவந்த புகை வெள்ளத்துள் அவள் உருவம் மெல்ல அமிழ்ந்தது. கண்களைக் கூசச் செய்யும் சிவந்த ஒளிப்பிரவாகம் பெரியறைக் கதவிடுக்கின் வழியாக என்னை நோக்கிப் பேய் வேகத்தில் பாய்ந்து வந்தது.
சிக்கியிருந்த ஊதலை ஆவேசமாக இழுத்து, முழு விசையையும் திரட்டி ஊதினேன். உயிர் மூச்சை ஊதி விடுவது போன்ற வேகம். காற்றின் திசை மாறிக் குளிர்ந்த காற்று சுழன்று கீழ் நோக்கிச் சென்றது. சிறிது நேரத்தின் பின் மெல்லிய பதில் ஊதல் ஒலியைச் சன்னமாகக் கேட்டேன். கீழிருந்து சிவந்த குறு ஒளிப்பொட்டு மிக மெதுவாக என்னை நோக்கி அந்தரத்தில் மிதந்தபடியே வந்து கொண்டிருந்தது.
**
நன்றி : இமிழ் தொகுப்பு