நீராழம்

ளம் போராளி முள்ளந்தண்டு வரை ஊடுருவிப் பார்ப்பதாகத் தோன்றியதுமே என்னுள் சிறு துணுக்குறல்  எழுந்து வியர்த்தது. பனிக்கட்டிக் குளிராக நிலைகுத்தி நரம்புகளில் ஊடுருவும் சில்லிட்ட பார்வை.  என்னுள்ளே மெல்லிய நடுக்கம் ஊறினாலும் அதை மறைக்கக் குரலை லேசாக உயர்த்தினேன். எனக்கே என் குரல் அருவருப்பூட்டுவதாக இருந்தது. யாரோ இன்னொருவனின் கரகரத்த குரல் போல என்னிலிருந்து பிரிந்து காலடியில் நிழலாக நின்றிருக்கும் பிறிதொருவன் குரல் போல ஒலித்தது. போராளியின் பார்வையில் எந்த அசைவும் இல்லை. என் தடித்த குரல் அவனிடம்  சென்று சேர்ந்ததற்கான எந்தச் சலனமுமில்லை. சிறு தடுமாற்றமோ அச்சமோ தெரியாத கண்கள், ஈரலிப்பான கரிய பளிங்குக் கல்லாகச் சலனமற்றிருந்தன. அவனது மூச்சுக் காற்று சீரில்லாமல் சீறி எழுந்து அடங்கியது.  மார்புக்கூடு அறையின் புழுக்கக் காற்றை இழுக்கச் சிரமப்படும் தோறும் உதடுகளை மீன் போலக் குவித்து வாயால் சுவாசித்தான். தேகமெங்கும்  சிறிய முடிச்சுக்களாகக் கண்டல் குருதி கட்டியிருந்தது. உதடு கிழிந்து இரைப்பை வீங்கிய கண்கள் சுற்றிக் கண்றியிருந்தன. 

“அப்படியா” என்றேன் மீண்டும். சற்றே அழுத்தமாக.

“இல்லை சேர்” என்றபடி இரு கைகளையும் கோர்த்துத் தன்னுள் ஒடுங்கிச் சுவரில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தான். மேலும் இலகுவாகி இளகிவிட்டிருந்தான்.  இறுக்கங்கள் மிகை நடிப்புகளிலிருந்து வெளிவந்த தளர்ச்சியும் விடுபட்ட உணர்வும் தெரிந்தது. வியர்வை வீச்சத்தில் பச்சைக் குருதியின் நிண வாசனை. உப்பின் வாசனைபோல நாசியைக் கரகரக்கச் செய்து தொந்தரவு செய்யும் மணமது.  முறுக்கிவைத்த சுருள் வில் தகடு பெரும் விசையுடன் சுருள் விரித்து அவிழ்வது போன்ற வேகமும் விடுதலையுமாக என் முன்னால் அவன் தன் நினைவுகளுள் சுழன்றபடி இருப்பது போலிருந்தது.

“சேர், நான் சொல்வதில் ஒரு சொல்கூட பொய்யோ மிகையோ இல்லை, ஆனால் அவற்றை நீங்கள் ஒருபோதும் நம்ப மாட்டீர்கள். இல்லை.. இல்லை..  நம்ப விரும்ப மாட்டீர்கள். என்னிடம் எதிர்பார்ப்பது பெரிய இரகசியத்தை, அந்த எதிர்பார்ப்பே உங்களைச் செலுத்தும் எரிசக்தி. அது இல்லை என்றால் உங்களால் என்னை அணுகவே முடியாது, மிகுந்த நம்பிக்கையுடன் என் முன்னால் இப்படி நின்றிருக்கவும் மாட்டீர்கள்”  இன்னும் உடல் தளர்ந்து இலகுவாக அமர்ந்தான். தன் கண்களைக் குற்றவுணர்வில் உள் ஒடுங்குவதுபோல கீழே தாழ்த்திக்கொண்டு “நான் இயக்கம் இல்லையென்று உங்களிடம் சாதிக்கப் போவதில்லை ம். அது வரையில் உங்கள் ஊகம் சரிதான் ஆனால் இப்போது நான் இயக்கத்தில் இல்லை. அதிலிருந்து வெளியேறி வந்து விட்டேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அங்கிருந்து தப்பி ஓடி வந்துவிட்டேன். நான் வெறும் கால் தூசு மிக அடிமட்டத்திலிருந்த போராளி, ஆயுதமேந்திக் களத்தில் முன் வரிசையில் நின்றிருந்தவன். உங்களுக்குப் பயனுள்ள தகவல் ஒன்றுமே என்னிடம் கிடைக்காது. அதை நீங்களும் உள்ளூர அறிந்தே இருப்பீர்கள்.நான் நின்றிருந்தது போர்க் களத்தின் முன் கூர் நுனியில். என் பின்னால் பல விசைகளும், சிக்கலான இரகசியப் பொறிமுறைகளுமாக இயக்கம் பிரமாண்டமாக இயங்கியது. எங்கோ அதன் ஆழ் நுனியில் தொற்றிக் கொண்டிருந்தேன்.

 இயக்கத்தின் தாக்குதல் திட்டங்கள் இரகசியங்கள் சிறு துண்டுகளாகப் பிரிந்து இருக்கும். நாளும் கோளும் கை கூடிவரும்போது கண்ணுக்குத் தெரியாத விசைகளால் அவை ஒருங்கிணையும். மேல் மட்டங்களில் இரகசியமாக நிகழக் கூடியவை. புனிதமான இடத்தில் தயாரிக்கப்பட்டு எங்களிடம் பவுத்திரமாகக் கையளிக்கப்படும். அவற்றை எங்கள் தீரமான தோள்களில் தூக்கிக் குருதி சிந்தப் போர்க்களம் எடுத்துச் சொல்வோம்.  

என்னிடம் இருந்தது ஏ.கே47. கூடவே சில 7மி.மி. ரவைகளும். அவையும் மிகச் சொற்பமாகவே எப்போதும் இருப்பில் இருக்கும். எண்ணி எண்ணிச் சுட வேண்டும். சுடும் ஒவ்வொரு குண்டின் நினைவுகளையும் குறித்துவைக்கும் குறிப்புக் கொப்பி வைத்திருந்தேன். ஒரு சூடு சுட்டதும் அந்தக் குண்டின் திசையை தாக்கிய இலக்கைக்  கவனமாகக் குறித்துக் கொள்வேன். கணக்குக் காட்ட அல்ல சொந்த நினைவுகளைப் பேண. ஓய்வான நேரங்களில் – அது அநேகமாகக் காவல் பணியின்  அலுப்பூட்டும் பின்னிரவுகளாக இருக்கும்-  அந்தக் குருதிக்கறை படிந்த குறிப்புக்களில் தங்கிவிட்ட தருணங்களைத் திரும்பவும் நினைவுகூர்ந்து பார்ப்பேன். ஏதும் பெரிதாக நினைவில் இருக்காது. மழுங்கலாக வேறு யாருக்கோ நிகழ்ந்தவை போல பழுப்பாகவே நினைவில் அவை எஞ்சியிருக்கும். அதுவும் மிகச் சொற்பமாக. நிகழ்வுகளின் தொடக்கமோ முடிவுகளோ கூடச் சுத்தமாக நினைவில் இருக்காது. நினைவுகள்  எங்களை மோசமாக வஞ்சிக்கக் கூடியவை. அவற்றுக்கு இருப்பது பேய்களுக்கான ஆன்மாவும் உயிரும். பீடித்துக் கொண்டால் உக்கிரமாக எம்மைப் பிடித்தாட்டக் கூடியவை. அழிந்த மழுங்கல் நினைவுகளை மீட்க மனம் சலித்துப் பெரும் பித்துடன் ஆழ் உள்ளத்துள் தேடியபடியே இருக்கும். அதிலும் போர்க்கள நினைவுகள் தனியான உதிரி நினைவுகளாக ஒருபோதும் மீட்கவே முடிவதில்லை. அவை கூட்டான கனவுகள் போன்றே நினைவுகளில் எஞ்சியிருக்கும். குழம்பிச் சிக்கலாகி இன்னொன்றுடன் பிணைந்து இருக்கும். எவ்வளவுதான் துல்லியமாக் குறித்துவைத்தாலும் என்னுடைய நினைவை அவற்றுள்ளிருந்து தனியே பிரித்தெடுக்கவே முடிவதில்லை.  

இலக்குத் தவறாமல் சுடக் கூடியவன். என்னுடைய சுமார் இலக்கும் கூட ஓடும் முயலிடம் எடுபடாது. அது ‘வீர்’ என்று கணத்தில் பறந்து மயமாய்  குறும் புதர்களுள் மறைந்து விடும். நுழைந்த தடம் கூடத் தெரியாதபடி மிக நாசூக்காக நுழைந்துவிடும். என்னுடைய குண்டு ஆடி அசைந்து மெதுவாகப் பின்னால் செல்லும். எதோ பயந்து பதுங்கிச் செல்வதுபோல. அதுவும் நல்ல உச்சி வெய்யிலில் சேற்றுக் கதகதப்பில் மூழ்கிக்கிடந்து அசைபோடும் கொழுத்த எருமைகளிடம் தான் என் இலக்குச் சரி வரும். அசைவின்மையே என்னுடைய குறி தவறாமையின் இரகசியம். ஆனால் குறிப்புக் கொப்பியின் நினைவுகளில் என்னுடைய குண்டுகளின் துல்லிய இலக்கில் காயம்பட்டு இறந்த ஏராளம் இராணுவத்தின் குருதி வடியும் உடல்கள் பழுத்த பொன் கதலி வாலைப் பழச் சீப்புகள் போல வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உடல்கள் ஒரு போதும் அழுகுவதில்லை. இப்போது குண்டுபட்டு இறந்தவை போல இருக்கும். அவற்றின் கண்களில் நிலைத்தன்மையும் வெறுமையும்  நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும். இறந்த என் உடலும் அங்கே கிடக்கும்.  இராணுவத்தின் உடல்களுடன். சீருடைகளும் அழுக்கும் நனைந்த குருதிச் சிவப்பிலுமாகப் பிரித்தறிய முடியா வண்ணம் கலந்து கிடக்கும். இறந்த உடல்கள் பிணைந்திருப்பதில்  அதிர்ச்சியோ திடுக்கிடலோ ஏற்படுவதில்லை. ஆனால் விறைத்து  உணர்வேயில்லாத மரக்கட்டை போல கிடக்கும் என்னுடல் அருவருப்பூட்டும். அதனிடம் அதட்டலுடன் சொல்வேன் “ஏன் இத்தனை இறுக்கம் கொஞ்சம் சிரித்தால் தன் என்ன? மரணம் அவ்வளவு கொடியதா என்ன?” இறந்த என்னுடல் கொஞ்சமாகப் புன்னகைத்து தன் இறுக்கத்தை தளர்த்திக் கொள்ளும்.   

நான் இங்கு வந்து சேர்ந்த கதையைக அல்லவா கேட்டீர்கள்? தற்காலிகப் பாதுகாப்பு நிலைகளில் நிலையெடுத்துத் எதிர் தாக்குதலுக்குக் காத்திருந்தோம். அங்கு ஓர் அசாதாரணத்தை நன்கு உணர முடிந்தது. அல்லது இப்போது அப்படித் தோன்றுகிறதா தெரியவில்லை.  நல்ல வெய்யில் எறித்தது. காற்று அனலாக வீசியது. பூவரச இலைகள் வாடி வதங்கி வேண்டா வெறுப்பாக மரத்தில் சோர்ந்து தொங்கின. அவற்றின் ஒளிவீசும் பச்சைநிறம் கூட ஊதா நிறமாக மாறிவிட்டிருந்தன. எதிர் தாக்குதல் கட்டைளை கிடக்கவில்லை. வானொலி கரகரத்து இரைந்தது கொண்டிருந்தது. கடந்த சில வாரங்களாகவே போரில் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து எம் நிலைகளைப் பின்னால் நகர்த்திவிட்டிருந்தோம். பலாலியிலிருந்து புறப்பட்ட இரணுவம் கிட்டத்தட்ட யாழ் குடாநாட்டை இரண்டாக வெட்டிப் பிளந்தது போல நடுவாக முன்னேறி வலிகாமம் முழுவதையும் கைப்பற்றி விட்டிருந்தது. இது வழமைதான். இராணுவம் தம் நிலைகளில் இருந்து ஆவேசமாக முன்னேறி வருவதும் அவர்களைத் திடீர் தாக்குதல்களால் பின்னால் கொண்டு சென்று விடுவதுமாக எல்லைக் கோடு முன் பின்னாக அலைந்து கொண்டே இருக்கும். 

நேரம் செல்ல எங்கள் அணியினர் எல்லோரும் அப்படியே உளம் கூம்பி தற்காலிக பாதுகாப்பு நிலைகளின் பின்னால் சோர்ந்து அமர்ந்தனர். இராணுவத்தினர் முன்னேறிய இடங்களில் ஓரளவு நிலையெடுத்த பின்னர்  பலாலியில் இருந்து மூன்று பக்கங்களும் விரிந்து பரவத் தொடங்கியது. அப்போது எதிர் சண்டை மூள்வதற்கான சிறு எதிர்பார்ப்பு சரசரப்பாய்த் தோன்றி அந்த வேகத்திலேயே அடங்கியது. இராணுவக் கவசவாகனங்களின் ஆமை ஊர்வு  இலை குழைகளால் உருமறைப்பு செய்த இராணுவ அணிகளின் பக்கவாட்டு நகர்வு  பக்க பலமாக முழங்கிக் கொண்டிருக்கும் ஆட்லறிகளின் வெடிப்பு கால்களின் கீழே நில அதிர்வாக ஊர்ந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர்களின் பெரும் பலமே இடி முழக்கம் போன்ற பேரைச்சலுடன் தொடர் குண்டுகளைப் பொழியும் ஆட்லறிகள். வானிலிருந்து குண்டுகளை சுளகுகளால் சரித்துக் கொட்டுவது போல எங்கள் மீது சொரிந்தனர்.

துப்பாக்கிகளில் எங்களுடைய கைவிரல்கள் துடித்துக் திமிறிக் கொண்டிருந்தன. சிலருடைய விரல்கள் உணர்ச்சியைத் திசை திருப்பத்  துப்பாக்கி விசையில் மிக மெதுவாகத் தாளமிட்டன. அப்போது அது எனக்கு வேடிக்கையாகத் தெரிந்தது. இசைக் கருவியைத் தட்டி மெருகூட்டுவது போன்றிருந்தது. வேடிக்கைக் கதைகளும் வரவழைத்த சிரிப்புகளுமாக அந்த நெருக்கடியை கடக்க முயன்று கொண்டிருந்தோம். அதை நான் கவனித்திருக்கிறேன் போர்க்களத்தில்  போராளிள் தங்கள் பழைய போர்க்கள நினைவுகளில் திளைத்திருப்பார்கள். மயிரிழையில் தப்பிய சாகச நினைவுகளை மீட்டுவார்கள்.  இப்போதே துப்பாக்கிகளின் விசைகள் இழுக்கப்படலம் திரும்பவும் இன்னொரு சண்டை மூளலாம் இழந்த நிலைகளுக்கு வெற்றிகளுடன் மீளலாம் என்னும் கொதிநிலை. ஆனால் பொங்கிய உணர்ச்சி அப்படியே வற்றி அணைத்துவிடுவது போன்று கட்டளை வந்தது.  பாதுகாப்பாகப் பின்வாங்கும் படியும், தற்காலிக நிலைகளைக் கைவிட்டுச் செல்லும்படி கட்டளை வந்தது. ஒருவகையில் உள்ளூர நான் அதை எதிர்பார்த்திருந்தேன் என்று தோன்றுகிறது.  

எங்கள் பூர்வ நிலத்தின் கடைசித் துண்டையும் கைவிட்டு அங்கிருந்து வெளியேறினோம். தோற்றுக் குண்டடிபட்டு அவமானகரமாக. அதனை யாராலுமே நம்ப முடியவில்லை.  இயக்கப் பொறுப்பாளர்கள், ஆயுதங்கள், மோட்டார் வாகனங்கள், உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்ட படைக்கலங்கள் அணிவகுத்து வழிகாட்டி முன்னே சென்றன. பின்னால் மக்கள் பெருந்திரளாக நூல் பிடித்து எங்களுடனே வந்தனர். யாழ் நிலத்தைக் கைவிட்டுச் செல்வதால் எல்லோரும் சோர்வும் கசப்புமாக உணர்ந்தனர். கண்களில் அவநம்பிக்கையும் சினமும் தெரிந்தது. கழிவிரக்கத்துடன் தேள்கள் சோர்ந்து  கைவிட்டுச் செல்லும் நிலத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே சென்றனர். உடலிலிருந்து ஒரு சிறு பாகத்தை வெட்டி வீசியது போன்ற ஆவேசத்துடன் இருந்தனர்.

போரியல் ஆய்வாளர்கள் பல விளக்கங்கள் கொடுத்தார்கள். நம்பிக்கையூட்டும் கதைகள் சொன்னார்கள். இழப்புகளே இல்லாத வெற்றிகரமான பின்வாங்கல் என்றார்கள். போரில் இழப்பை குறைப்பதுதான் முதன்மையானது. ஆளணி ஆயுத வளங்களைத் தக்கவைத்துக் கொண்டால் போதும் அவைதான் விடுதலைப் போரின் பெரும் செல்வங்கள். நிலம் பொருட்டே அல்ல அது வெறும் அடையாளம் அதை எப்போதும் திரும்ப மீட்டுவிடலாம் என்றார்கள். இராணுவமே தங்கள் பெருந்தவற்றை உணர்ந்து யாழ் பெருநிலத்தைத் தக்கவைக்க முடியாமல் பின்வாங்கி ஓடும் என்றார்கள். அது  உண்மை என்றே என்னுடைய சிறு மூளை எண்ணியது. இராணுவம் அகலக் கால் வைத்துத் தன்னை விரித்திருக்கிறது. இலகுவாகத் தாக்கக் கூடிய இலக்காக விரிகிறது. நாம் திட்டமிட்டு எதிர்த் தாக்குதல் செய்தால் உடனடி ஒருங்கிணையவோ தங்களைத் தக்க வைக்கவோ அவர்களால் முடியாது. அவர்கள் கைப்பற்றிய பெருநிலம் புளியம்பழம் போல உள்ளே வெறும் கோதாக இருந்தது.    

ஆனால் எனக்குப் பெரு மகிழ்ச்சி கொடுத்தது எங்கள் பின்னால் நுரை போலப் பெங்கி  நூல்பிடித்து வரும் பெருந்திரளான  மக்கள் கூட்டம். தங்கள் பூர்வ நிலங்களைக் கைவிட்டு எங்கள் பின்னால் வந்தனர். சிறு குன்றிலிருந்து கழுகு பார்ப்பது போல மர உச்சியிலிருந்து நிலத்திலிருந்து வெளியேறும் மக்களை நாட்கணக்கில் பார்த்துக் கொண்டே இருந்தேன். பல சிற்றோடைகள் சோர்ந்து பேராறாக திரண்டெழுவது போல சுழிக்கும் அலைகளும் கொந்தளிப்புமான மக்கள் திரள் மெதுவாக அசைந்து வந்து கொண்டிருந்தது. எண்ணமும் நோக்கமும் ஒன்றாகத் திரண்ட மக்கள். அவர்கள் கூடவே மெதுவாக ஊர்ந்து செல்லும் கறள் பிடித்த இயந்திர வண்டிகள். சில மாட்டு வண்டில்கள் கூட இருந்தன. சடுதியில் சரிக்கட்டிய மரப்பல்லக்குகளில் சுமக்கப்படும் தீரப் பிணியர்கள்.  மர நிழல்களில் கட்டப்பட்டிருக்கும் துணிக்கூடாரங்கள். ஏணைகள். அடி கறுத்த புகைச் சருவங்களில் கொதிக்கும் தேநீர்கள். பூவரசம் இலைகளில் பொதிந்த சோற்று உருண்டைகள் கைகளுக்குத் தாவிக் கொண்டே இருந்தது. வெள்ள நீர் பெருக்குப் போல மக்கள் பெருக்கு சுழித்து எங்கள் பின்னால் திரண்டு பெருகியது. காயம்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் விரைவு வண்டிகளின் பேரொலி மக்கள் திரளிடையே ஓடும் குருதியாறாகப் பிளந்து ஓடின. முழுவதையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் ஒன்றைக் கவனிக்கத் தவறினேன். சட்டென்று களநிலமை முற்றிலுமாக மாறியது. சிறு சலசலப்பு பேரோசையாக மாறுவது போன்ற நிலைமை. அதை நான் எண்ணியிருக்கவேயில்லை. எப்படி மறந்தேன். எங்கள் பின்னால் மந்தைகளாகத் திரண்டு நீண்டிருந்த மக்கள் திரளின் வரிசை உடைந்தது. எங்களுக்கு நேர் எதிராகத் திருப்பி தங்கள் நிலத்தை நோக்கி நின்றார்கள்.  

இராணுவத்தின் கொடூரங்களை ஒலிபெருக்கியில் இடைவிடாது சொல்லிக் கொண்டே இருந்தோம். இடையறாத மேடை  பேச்சுக்களூடாக மக்கள் எண்ணங்களைத் திசைதிருப்ப முயன்றோம். அனைத்து போராட்ட அணியினரும்  இந்தப் பிரச்சாரப் பக்கமாகத் திருப்பிவிடப்பட்டனர். ஒவ்வொருவரிடமும் இராணுத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தோம். முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிரிகளாகத் திரும்பினார்கள். பின் குடும்பமாகத் திரும்பத் தொடங்கினர். நிலைமை எல்லை மீறிச் சென்றது. எங்களால் அவர்களின் மனமாற்ற எண்ண அலையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மனநிலையைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.  எந்தப் பயமும் இல்லாமல் இராணுவத்திடம்  திரும்புகிறவர்கள் மீது ஆத்திரம் வந்தது. தங்கள் கடந்த காலங்களைச் சுத்தமாக மறந்துவிட்டவர்கள் போல,  ஏதோ தங்கள் ஊரும் வீடும் தோட்டமும் துரவும் எங்காவது ஒடிப்போய்விடும் என்பது போல. இந்தச் சுண்ணாம்பு நிலத்தை விட வசதியான நல்ல வயல் நிலங்கள் எங்கள் பக்கம் இருக்கிறது. ஆனாலும்  மக்கள் திரளின் எண்ணங்கள் வேறு விதமாகத் திரும்பியது. முன் கணிப்பிட முடியாமல் இருந்தது. எல்லையில் அலைமோதுபவர்களுடன் சிறு கைகலப்புகள் கூட ஏற்பட்டது. சட்டென்று பிறழ்ந்த மனநிலையின் ஆதி ஊற்றை மக்கள் திரளிடையே  தேடிச் சலித்தேன்.

என்னால் களத்தில் நிலை கொள்ளவே முடியவில்லை. சோர்ந்த என்னுடலில் நடுக்கமும் உதறலும் எடுத்தது. துவக்கை உடலோடு இறுகப் பிடித்தபோது அதுவும் சேர்ந்து நடுங்கியபடி இருந்தது. உடனேயே விதிர் விதிர்த்து அதைத் தூரமாகத் தூக்கி வீசினேன்.  உதடுகள் மக்களையே சபித்தது. மக்களைச் சபிக்கும் உதடுகளை அச்சத்துடன் நோக்கினேன். சிறு கடகங்கள் உரப்பை மூட்டைகளை தலையில் சுமந்தபடி  காத்து நிற்கும் பெண்களைப் பார்க்கும் போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது. இராணுவத்தின் கடந்தகாலக் கொடூரங்கள் அழிப்புகள் வன்புணர்வுகள். அதையே பல கோணங்களிலும் நினைத்துப் பார்த்தேன். நாங்களும் யாழ்பாணம் திரும்பிச் செல்வோம், ராணுவத்திடம் அனுமதி எடுத்து நிவாரணமாக அரிசி வாங்கி அல்ல. எண்ண எண்ண அதன் சாத்தியத்தின் மீது அவநம்பிக்கையே தோன்றியது. அதை எண்ணாதிருக்கவே விரும்பினேன்” 

போராளியின் உதடுகள் துடித்தன, அவன் உணர்ச்சிக் கொப்பளிப்பின் விளிம்பில் அல்லாடிக் கொண்டிருந்தான். நினைவுகள், எண்ணங்கள் எண்ணைக் கொப்பளிப்பாக அவனுள்ளே பொரிந்தன. தன்னுடைய கன்றிய தாடையைத்  தடவினான். நெடுநேரமாக உதட்டோரக் குருதிப் பிசுபிசுப்பில் சிக்கியிருந்த இலையானைக் கிள்ளி எடுத்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் இறுக்கமான தசைகளை நன்கு தளர்த்தி இரும்பு கதிரையில் வாகுவாக அமர்ந்தேன். அது முரட்டுத்தனமாக என்னை உள்வாங்கிக் கிரீச்சிட்டது.

போராளிகளை எப்போதும் மிக நிதானமாகவே அணுகுபவன். கற்பனைக்கும் எட்டாத என்னுடைய ஆழ்ந்த நிதானமே அவர்களில் முதற் சமன் குலைவை நிகழ்த்திவிடுவதைப் பலமுறை கண்டிருக்கிறேன். நான் சற்றே பதட்டமாகி நிதானம் இழப்பதாக உணர்ந்தால் கூட அவர்கள் உள்ளுரக் குதூகலிப்பார்கள். அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதும் நிதானமிழந்த மூர்க்கத்தைத்தான்.  இன்னும் இன்னும் என்னை நிதானம் இழக்கச் செய்ய வைக்க  நுட்பமாக நடிப்பார்கள். நான் சமநிலை இழந்து, தண்ணீராகக் குழைத்து சீமெந்து ஊற்றிய குழாயையோ, இரும்பு குறட்டையோ ஆவேசமாகக் கையில் எடுத்தால் போதும் இறுக்கமான தங்கள் உடல் தசைகளைத் தளர்த்தி வாகுவாக சாய்ந்து அமர்ந்து பெருமூச்சு விடுவார்கள். தங்களை மிக மோசமாக இரத்த விளறலாக அடிக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். நான் மூர்க்கமாக அவர்களைத் தாறுமாறாக அறையும் தோறும் அவர்கள் உடலை இலகுவாக்கி தங்களுள் ஆழ்ந்து இறுகிச் செல்வார்கள். பின் அவர்களை யாராலும் உடைத்துத் திறக்க முடியாது.  பல்லாயிரம் ஆண்டுகளாக அழுத்தி இறுகிப்போன வைரம் போல் ஆகிவிடுவார்கள். தங்களைத் தங்கள் உன்னத லட்சியங்களால் பட்டைதீட்டப்பட்டு ஒளிவீசும் நட்சத்திரங்களாகக் கற்பனை செய்து கொள்வார்கள். 

நான் நட்சத்திர வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதே இல்லை.  அவர்களை அற்பமானவர்களாக மிக மெல்லிய இதயமும் வலிக்கும் சதையுடலும் உள்ளவராக உணரச் செய்ய ஒவ்வொரு விசாரணையின் போதும் குரூரமாகவும் நுட்பமாகவும் முயன்றபடியே இருப்பேன். போராளிகள் தாங்கள் ஒளியேற்றிய நட்சத்திர லட்சியங்களில் இருந்து ஒளி மங்கிய கரிதுண்டுகளாக என் கால்களில் எரிந்தடங்குவதுவரை குரூரமாக அவர்களைத் தொடர்ந்து செல்ல முயல்வேன்.  படிப்படியாக அவர்களை என் பக்கமாக இழுத்து வரும் நுட்பமான விளையாட்டை சோர்வே இல்லாமல் விளையாடுவேன். அவர்களின் பாதி உண்மையிலிருந்தே மீதியை ஊகித்து விடுவேன். பின் மெல்லிதான புன்னகையுடன் அவர்களின் வறண்ட கற்பனையைப் பின் தொடர்ந்து அவர்களது இரகசியங்களை தூண்டிலிட்டு எடுத்து வருவேன். அவர்கள் தீவிர லட்சியவாதிகளாக இருப்பதாலே கற்பனை வறண்டவர்கள். ஒற்றை இலக்கை மட்டும் கண்களுள் தேக்கிக் கொண்டவர்கள். அதனால் சஞ்சலமோ செல்லும் வழிகுறித்த அவநம்பிக்கைகளோ அற்றவர்கள். ஆனால் போராளிகள் கற்பனை செய்ய முடியாத திசைகளிலிருந்தே வருபவர்கள் என்பது அது பொய்யானது. கற்பனையே செய்ய முடியாத கதைகளுடன் இருப்பவர்கள் என்பார்கள் அதுவும் பொய்யானது.  ஆனாலும் அபாரமான என்னுடைய கற்பனைக் குதிரை அவர்களை விட ஒரு நொடி முன்னே பாய்ந்து சென்று கொண்டிருப்பதை ஒவ்வொரு விசாரணையின் போதும் அவர்கள் திகைப்புடன் நோக்குவார்கள்.  

“ஆயுதங்களுடன் இங்கே திரும்பி வரவே முடியாது. அதனை உங்கள் மேலிடம் நன்கு உணர்ந்திருக்கும். இப்படிக் குறுக்குவழியில் வந்தால்தான் உண்டு” என்றேன். எனக்கே அந்த எண்ணம் இப்போதுதான் தோன்றியது. 

“இல்லை இல்லை அதற்கான எல்லாத் திட்டங்களும் இருக்கின்றன. அப்படி சுலபமாக இந்த நிலத்தை விட்டுச் சென்றுவிட மாட்டார்கள். அனைத்தையும் இழந்தாலும் இதைத் தக்கவைக்கவே விரும்புவார்கள். இதுவே எங்கள் மையநிலம் ஆகவே குறியீட்டு ரீதியாக முக்கியமானது. இதை இழந்தால் அனைத்தையும் இழந்ததற்குச் சமம் அதனால் ஒரு போதும் கைவிடவே மாட்டார்கள். ஆனால் என்னுடைய அச்சம் வேறு விதமானது. திரும்பச் செல்லும் மக்களைத் தடுக்க விரும்பினேன். அது ஆபத்தானது. சோர்வு தருவது. எங்களை அவமதிப்பது. நான் மக்களின் முன் ஓடிச் சென்று கண்ணீருடன் மன்றாடினேன். அவர்களது திரும்பிச் செல்லுகை எத்தனை ஆபத்து என்பதை, அதன் தீமைகளை, பாதுகாப்பின்மைகளை எடுத்துரைத்தேன். ஒருவர் கூட என் குரலைப் பொருட்படுத்தவில்லை. அந்த  நிராகரிப்பே என்னை நிம்மதி இழக்கச் செய்தது. துவக்கை வெறுப்புடன் வான் நோக்கித் தூக்கினேன். மனம் பிறழ்ந்த சனத்திரள் முன்னால் நின்று ஆக்ரோசமாகக் கூச்சலிட்டபடி அவர்களை  வசைந்தேன். அவர்களுக்குக் கொஞ்சமும் சுரணையே இருக்கவில்லை.  இயக்கச் சீருடையை அவர்கள் கண்முன்னாலே கிழித்து எறிந்டு அவர்களை நோக்கி ஆவேசமாகச் சுடத் தொடங்கினேன். யரோ என்ன பிடித்து ஊலுக்கிக் ஓங்கி கன்னத்தில் அறைந்தார்கள். ஐந்து விரல்களும் ஆழப்பதியக் கூடியதான கனமான அறை. உள்ளே கரிப்பான இரத்தக் கசிவை உணர்ந்தேன்.  யரோ போத்தலில் குளிர்ந்த நீர் புகட்டினார்கள். குடிக்கவே முடியவில்லை ஓங்காளித்த போது தண்ணீரும் குருதியும் உடைந்த பற்களுமாக சத்தி எடுத்தேன்.  காதுகளில் யாரோ ஆவேசமாக இரைந்தார்கள். அவை எல்லாம் மங்கல் நினைவுகளாக வேறு யாருக்கோ நிகழ்வதாக என்னிலிருந்து தூரமாகிக் கொண்டிருந்தன. இரைச்சல்கள், பேரொலி, வெடிப்புச் சத்தங்கள் எனக் கரைந்து அழிந்தன நினைவுகள். நான் சுருண்டு நிலத்தில் வீழ்ந்தேன்.

உடனே உணர்ந்தது ஆழமான விடுபடலை. மெல்லிசாகக் காதுகளில் இரையும் குளிர்ந்த காற்றை. சுற்றிலும் நிலம் வெறுமையாக அமைதியாக இருந்தது. எல்லைக் கோடு நகர்ந்து எங்கோ சென்றது. எல்லோரும் கிளம்பிச் சென்றனர். நான் தனியனாக அழுக்காக நிலத்தில் வீழ்ந்து கிடந்தேன். சீருடை கிழிந்திருந்த என் மீது யாரோ புண்ணியவான் பழைய சாரத்தால் போர்த்தி விட்டிருந்தார். என் அரைகுறை நிர்வாணத்தை மறைக்க.  எழுந்திருந்து எஞ்சியிருந்த சீருடைகளையும் மூர்க்கமாகக் கிழித்தெறிந்தேன், ஆயுதப்பைகளை களைந்து தூரமாக வீசினேன், கழுத்தில் தொங்கிய குப்பியை அறுத்து எறிந்தேன். பின் நிதானமாக அருகிலிருந்த வைர கோயில் கிணற்றில் நீரள்ளி அழுக்கு உடலில் ஊற்றினேன். கருஞ் சேறாக அழுக்குக் கரைந்து காலடியில் தேங்கிச் சுழன்று சென்றது. சாரத்தால் ஈர உடலைத் துடைத்துச் சாரம் உலரும் வரை நிர்வாணமாகக் கோயிலின் குளிர்ந்த கருங்கல் திண்ணையிலேயே அமர்ந்திருந்தேன். சாரத்தை இடுப்பில் சுற்றியபடி  எழுந்து இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நாங்கள் தோற்றுக்  கைவிட்டுச் சென்ற நிலம் நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கிப் பின் வெறி கொண்டு விரைந்து ஓடத் தொடங்கினேன். கால்களின் கீழே காய்ந்து உதிர்ந்த சருகுகள் சிதம்பிப் பறந்தன. கால்படாத ஒழுங்கைகளை பற்றைகள் வளர்ந்து முடியிருந்தன. திரண்ட கொடிகள் வீடுகளைச் சுற்றிப்படர்ந்து வான் நோக்கி கொழுகொம்புகளால் துழாவி வெற்றிடத்தின் மேல் ஏற முயன்று கொண்டிருந்தன.  வான் நோக்கி வாய் திறந்திருக்கும் கூரைகள் அற்ற வீடுகளின் மேல் தளிர் இலை நீட்டங்கள். வேலி சரிந்த புற்றுகள் மண்டிய வீதிகள். ஓட  அந்தப் பாழ் நிலம் காலடியில் வழுக்கித் காலுக்கு எட்டாத் தூரமாகச் சென்றபடியே இருந்தது. 

உறைந்து அப்படியே நின்று விட்டேன். உடைந்தழுதேன், விம்மல்கள், கோவல்கள், ஓலமாக அது வெளிப்பட்டது.  என்னால் அந்த நிலத்தை ஒருபோதும் சென்றடையவே முடியாது. வில் உடைவது போலத் தெறிப்புடனே அதை உணர்ந்தேன். காலடியிலிருந்த நிலம் முற்றிலும் உருமாறி விட்டிருந்தது. இது பிறிதொரு நிலம். நாங்கள் கைவிட்டுச் சென்ற எங்கள் பூர்வ நிலமே அல்ல. நீங்கள் நின்றிருப்பது உங்கள் காவல் அரண்களைக் கட்டியிருப்பது ஆள்வது ஆன்மா இழந்து வெளிறிய பிறிதொரு நிலத்தின் மேல். எங்கள் பூர்வ நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் இன்னொரு கொடிய வெளிறிய நிலத்தின் மீது. எங்கள் பூர்வ நிலத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை. இனி அது எங்கள் நினைவுகளிலும் கடந்தாகலங்களிலும் மட்டும் எஞ்சியிருக்கும். இராணுவத்தினரிடம் திரும்பி வரும் மனம் பிறழ்ந்த இந்த மக்களும் அதை என்றோ ஒருநாள் உணர்வார்கள். பித்தும் வெறியுமாக ஆடை கிழித்து மனம் பிறழ்ந்து வெறிகொண்டு ஆவேசமாக இந்தப் பாழ் நிலத்தில் தங்கள் பூர்வ  நிலத்தைத் தேடி அலைந்து சோர்ந்து வீழ்ந்து இறந்து எலும்புகளும் மிஞ்சாமல் மண்ணாக உக்கி அழிந்து மறைவார்கள்”

கைகளை அகலமாக வீசி நெட்டி முறித்தேன். சோம்பல் முறித்தபடி எழுந்து சன்னலுக்கு வெளியே பார்த்தேன். இருள் நன்றாக இறங்கிவிட்டிருந்தது. மழைக்கால இருட்டுப் போல அடர்த்தியான இருட்டு. தூரத்தில் உயரிப் பனைமரங்களின் ஆங்காரமான தலைவிரித்தாட்டலுக்கு பின்னான வானத்தின் கீழ் விளிம்பில் சிவப்பு கசிவு தெரிந்தது. தோட்டக் கிணற்றில் துலாவால் நீரள்ளி யாரோ குளிக்கும் சலக் ஓசை. துலாக் கொடி மேலும் கீழுமாகக் கரிய நீட்சியாக நிழலசைவுவாக இருளில் அசைந்தது.  மனதில் புத்துணர்வும் கற்பனைக் கிளர்வும் பீரிட்டு எழுந்தது. உடனே இந்த அறையிலிருந்து வெளியேறிவிட விரும்பினேன். இந்த மூச்சு முட்டும் சிறிய புழுக்கமான அறையில் போராளியை என்னால் எதிர்கொள்ள முடியாது. இன்னும் கொஞ்சம் சென்றால் அவன் காலடியில் மடங்கி அப்படியே அமர்ந்து விடுவேன்.  தோல்வியை அவனிடம் ஒப்படைத்து விடுவேன். அந்த நினைப்பே மனதை நெகிழச் செய்தது பெரும் விடுதலையாகவும் இருந்தது. ஏன் இவன்  கண்களை எதிர்கொள்ள அஞ்சுகிறேன். ஆவேசமாகக் கையை ஓங்கி சன்னல் கம்பியை லேசகக் குத்தினேன். செல்லக் குத்தல். துரு சொர சொரத்து உதிர்ந்தது. என்னைத் தொகுத்துக் கொள்ள முடிந்தது. இல்லை அப்படி வீழ்ந்துவிட மாட்டேன். திரும்பி அவனைப் பார்த்தேன். சிறு கூனலுடன் உள்ளொடுங்கிய உடல். எவ்வளவு அடித்தாலும் உட்சென்று வாங்க ஆயத்தமானது போன்ற வாகு. கூர் நாசி. பூனைமயிர் மீசையில் கடும் ரத்தத் துளிகள். சட்டென்றுதான் அதனைக் கண்டு கொண்டேன், கலைந்திருந்த சுருள் முடியில் அவனது முகத்தில் பெண் சாயல் தெரிந்தது. பெண் சாயல் வெளிப்படும் ஆண்கள்  அழுத்தமானவர்கள். லேசில் இளகி உண்மைகளைச் சொல்லிவிடமாட்டார்கள்.  

உருக்கும் வெப்பமாக எரிந்த மின்விளக்கை அணைத்துவிட்டு அந்த அறையிலிருந்து  வெளியேறினேன். அங்கிருந்து அகல முன்னர் திரும்பி இருளில் நோக்கினேன் போராளி இருளுள் அப்படியே கரைந்து போய்விட்டிருந்தான். அவன் கண்கள் இப்போது அசையுமா, இல்லை தன் உடலை நெகிழ்த்தி தளர்வாக அமர்வனா?  கைகளைக் கோர்த்து உடலை முறுக்கிக் கொள்வானா? இதுவரையும் அவன் எனக்குக் காட்டாமல் ஆழத்தில் ஒளித்து வைத்திருந்த அச்சமும், யாசகமும் அவன் கண்களுள் மீண்டும் வந்திருக்குமா? சட்டென்று திரும்பி மின் விளக்கின் விசையை அழுத்த மனம் உன்னியது.  திடீர் ஒளி பிரவாகத்தில் கண்கள் கூச  என்னை எதிர் கொள்ளக் கூடும். சாலை கடக்கும் விலங்குகள் சாலையில் வரும் வாகனங்களின் திடீர் ஒளிப்பெருக்கை கண்டு அப்படியே உறைந்து நின்று விடுவதைப்போல உறைந்துவிடவும் கூடும்.  தளர்ந்து என் கால்களின் அருகில் மடிந்து அமர்ந்து தன் நோக்கத்தையும் பயிற்சியையும் இரகசிய இடங்களையும் திட்டங்களையும் அப்படியே ஒப்புவித்து விடக்கூடும். மின் விளக்கின் விசையத் தேடிச் சுவரைத் தடவினேன். சுவரெங்கும் குருதி பிசுபிசுப்பு விசிறிக் கிடந்தது. காற்சட்டை பையில் மடித்து வைத்திருந்த  துணியை எடுத்து இரத்த விளறலை  அழுந்தத் துடைத்தேன். அறையிலிருந்து வெளியேறும் போதே அந்த எண்ணம் மனம் முழுவதும் துளிர் விட்டிருந்தது. 

இளம் போராளியைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு முகாமின் பாதுகாப்புக் கடவையைக் கடந்து வெளியே வந்தேன். அவன் சைக்கிளில் என் முன்னால்  தலை குனிந்து அமர்ந்திருந்தான். அவனுடைய உச்சந் தலையில் ஐதான முடிகைகளைப் பார்த்த போது வயதானவன் என்று தோன்றியது. 

வெளியே அறையில் உணர்ந்ததைவிட  இருட்டு வெளிச்சமாக இருந்தது. நிலவு வெளிச்சம் வேறு இருந்தது. காற்றும் கீழே தாழ்ந்து நன்றாக வீசியது. வாசல் காவல் அரணின்  திட்டி வாசலில் மல்சிங்ஹவின் துப்பாக்கி இரும்பு நுணி தெரிந்தது. பின்னால் பச்சைப் புள்ளிகளிட்ட இரும்புத் தொப்பி.  அவன் சிரித்துக் கையசைத்தபடி  “அப்பே யாலுவ” என்று உரக்கக் கத்தினான். கைவிடப்பட்ட வீடுகளில் இருந்த கூரைகளைப் பிரித்துச் சரிக்கட்டப் பட்ட உயரமான காவலரண்கள் வீட்டைச் சுற்றி எழுந்து நின்றிருந்தன. பச்சை மணம் மாறாத பனம் குற்றிகள். அவற்றை இணைக்கும் சுருள் முள் கம்பிகளில் பழைய துணிக் கிழிசல்கள் நெழிந்த தகரப் பேணிகள் நெகிழித் துண்டுகள் சிக்கித் துடித்தன. நடு முகாமின் உட்புறக் காவல் அரண்களின் மண் மூட்டை வரிசை நிரையாக எழுந்து பாதுகாப்புத் தடுப்பாக நின்றிருந்தது. இரவுச் சாப்பாட்டு எடுத்துச் செல்லும் வண்டிகள் பிரதான வீதியில் தடதடத்துச் சென்றன. 

தேவாலயத்தின் முன் கொட்டகையில் பலர் படுத்திருந்தனர். பின்னால் மண் அரண்கள், முள் கம்பி வேலிகள். வீதி ஓரமாகக் கிடந்த குற்றிகளில் சிலர் அமர்ந்திருந்தனர். வீதியின் ஓரமாக சப்பாணி கட்டி அமர்ந்து இருட்டில் சாப்பிட்டனர். சிலர் துண்டு விரித்து சிறிய பைகளை கைகளுக்கு அணையாகக் கொடுத்துப் படுத்திருந்தனர். இராணுவக் கட்டுப்பாட்டிற்குத் திரும்பிவரும் மக்களை உள்ளே எடுப்பதற்கான மூன்றவது வடிகட்டலிடம். படையினர் ஆளுக்கு அரை இறாத்தல் பாணும், சுடச்சுடப் பருப்புக் கறியும் இன்று கொடுத்திருந்தனர். இடித்த செத்தல் மிளகாய் போட்டு செய்த உறைபுப் பருப்புக் கறி. என்னைக் கண்டதும் அவர்களது உடலில் ஒரு வித குழைவும் புன்னகையும் தோன்றியது. காலையில் நான் அவர்களது விபரங்களைக் குறிப்பெடுத்தேன். குடும்ப விபரங்கள் சரிபார்க்கபட்டு அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு அனுமதிப்பத்திரம் வரும் வரை இடைத்தங்கலில் காத்திருக்க வேண்டும். கூடவே அது அவர்களைக் கண்காணிப்பதற்கான நேரம். சந்தேகம் என்றால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். சிலர் என் சைக்கிளின் பின்னால் இழுபட ஓடி வந்து எதோ சொன்னார்கள். ஒவ்வொருவருக்கும் பொறுமையாக நின்று பதில் சொன்னேன்.  போராளியைப் பார்த்து சற்று தயங்கி சிலர் பின் செல்வதாகவும் தோன்றியது. நான் பிரதான சாலையிலிருந்து சரிந்து வந்த அடுத்த ஒழுங்கையுள் சைக்கிலை சரித்து இறக்கினேன். இரு மரங்கிலும் வளர்ந்திருந்த பூவரசம் மரங்களின் அடர்ந்த கூரையுள் இருட்டே தெரிந்தது. மார்சலின் வீட்டு வாசல் படலை திறந்தே இருப்பது இருட்டினுள்ளும் நன்றாகவே தெரிந்தது.  

மார்சல் கையில்லாத வெள்ளைப் பனியனும் சாரமுமாகச் சோம்பல் கதிரையில் படுத்திருந்தார். அருகே வெறுமையான சில்வர் பேணி விளிம்பில் சில இலையான்கள் கால் சுருக்கி அமர்ந்திருந்தன.  தட்டில் பாணும் இருந்தது. பின்னால் அடுப்படியுள் விமலாவின் குரல் மிக மெலிதாகக் கேட்டது. மார்சல் கண்களைச் சுருக்கிப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும் மெல்லப் புன்னகைத்தார். 

கையோடு எடுத்து வந்த புத்தகங்களை அவர் அருகில் வைத்தேன். ஒன்று அ.பாலமனோகரனின் நிலக்கிளி குறுநாவல். மெல்லிய கிளர்ச்சிக் குறுகுறுப்புடன் இளமையில் அதைப் பலமுறை படித்திருக்கிறேன். மார்சல் அதன் அட்டையை சில நொடி உற்றுப் பார்த்து நினைவுகளுள் எதோ துழாவினார். அட்டையில் வெளிறிய சிவப்புச் சாயச் சேலையில் தலை சரித்து நிற்கும் மதர்ப்பான பெண். பதஞ்சலி. அப்போதுதான் அதைக் கவனித்தேன் பதஞ்சலி மேற்சட்டை அணிந்திருக்கவில்லை. கனத்த முலைகளைச் சேலையால் மறைத்து இடுப்பில் மண்குடம் ஏந்தி நின்றிருந்தாள். அதுதான் அய்ம்பதுகளின் பெண்களின் இயல்பான ஆடையோ? கேட்டால் மார்சல் விரிவாக வரலாற்றுப் பின்புலங்களுடன் விளக்குவார். வேறு நூல்களையும் பரிந்துரைப்பார். இன்று அவற்றைக் கேட்கும் மனநிலை சுத்தமாக இல்லை. இரண்டு வீரகேசரி தொடர் கதைகள் பச்சை அட்டையில் கட்டப்பட்டிருந்தன.  ஓரிரு பக்கம் புரட்டிப் பார்த்துவிட்டு ஓரமாக வைத்தார். புத்தூர் நூலகத்தின் சிதைவிலிருந்து மீட்டு எடுத்தவை. “மழையிலும் நாங்கள் போட்ட குண்டுகளிலிலும் இருந்து தப்பியவை இன்னும் இருக்கிறது அவை எதுக்கும் உதவாத கதைப் புத்தகங்கள். சில வேளை உங்களுக்கு உதவலாம்” என்றேன். 

மார்சல் புன்னகைத்து வெளியே பார்த்தபடி “நாள் முழுவதும் படுத்துக்கிடந்து வாசிக்கேலாது பள்ளிக்கூடத்தைத் தொடங்கினால் பொழுது போகும். ஆரும் வராட்டிக்கும் குறையில்லை” என்றார்.

“காலமை பார்த்தன் தொங்கலில் இரண்டு வீடு துப்பரவாக்கிக் கிடக்கு பின்னால் கோயிலடி தனபாலனும் வீடு துப்பரவாக்கினார். குடிக்கத் தண்ணி அள்ள இங்கதான் வந்தார்.  நாளைக்கே குடும்பத்துடன் வருவதாகச் சொன்னார். குறைந்தது ஐந்து பேர் என்றாலும் படிக்க வருவினம்”  என்றபடி கரிப்பிடித்த துணியால் சூடான வெள்ளிச் செம்பைச் செவிப்பக்கமாகப் பிடித்துத் தூக்கியபடி விமலா வந்தாள். ஆவி எழும் வெறும் தேத்தண்ணி மணமும் வந்தது. உதடுகளின் மேல் வியர்வைத் துளிகள். இறுக்கமான சட்டை அவளுக்குப் பொருத்தம் இல்லாமல் இருந்தது. பருத்த புயங்களில் காவிநிறக் கெளரிக்காப்பு நூலில் செருகியிருந்த நொச்சிப் பூ வாடியிருந்தது. 

“எல்லோரையும் ஒரு வகுப்பில் இருத்திப் பொதுவா படிச்சுக் கொடுங்கோ, பள்ளிக்கூடத்திலோ நூலகத்தின் கிழக்கு கட்டிடத்திலோ இடம் ஒதுக்கித் தரலாம். வாங்கு, மேசை கரும்பலகைகளும் இருக்கு. மதியச் சாப்பாட்டுக்கு முகாமிலிருந்தே ஒழுங்கு செய்யலாம். கொஞ்சம் புதிய கொப்பிகளும் இருக்கின்றன. எதற்கும் ஓர் அறிவிப்பும் கொடுக்கலாம்.  ஒரு சொல் பொறுப்பாளரிடமும் சொல்லிவிடுகிறேன்” என்றேன். 

மார்சல்  உடனேயே உச்சாகமாகித் தன் திட்டங்களைக் கண்களில் ஒளி மின்ன விவரிக்கத் தொடங்கினார். உதிரியாகச் சில நகைச்சுவைத் துணுக்குகளும் வந்து விழுந்தன. விரக்தியான நகைச்சுவை என்று தோன்றும்படியாக அபாரமாக வெளிப்படும் கரிய பகிடி. அவர் எதையோ கடக்க முயல்கிறார் என்று தோன்றும்படியான சிரிப்பே இல்லாமல் வெடிச் சிரிப்புச் சிரிக்கவைக்கும் பகடிகள். “ஆனால் ஒன்று… இது நல்ல சாதகமான நிலைமைதான்  சில நாட்களிலேயே எல்லாரும் திரும்பி வந்து பள்ளிக்கூடம் முழுவதும் நிரம்பிவிட்டாலும் ஆச்சரியமில்லை..  உண்மையில் நானோ ஏன் யாருமே நினைத்திருக்காத வேகம். மக்கள் திரும்பிவரவே மாட்டார்கள் என நினைத்திருந்தேன்.  ஆனால் மக்கள் உறுதியானவர்கள் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்”  பேசிக் கொண்டிருக்கும் போதே மார்சலின் கண்கள் வழமைபோலச் சோர்ந்து மூடிக் கொண்டன. ஆழமாகச் சிந்திப்பதுபோல இருக்கும்.  எனக்கும் மனம் சற்றே நெகிழ்ந்தது போலத் தோன்றியது. மார்சலின் அருகாமையில் அந்த நெகிழ்வை பலமுறையும் உணர்ந்திருக்கிறேன். படலையில் பேராளியின் கரிய நிழலசைவு தெரிந்தது. 

மார்சல் திடுக்கிட்டு விழித்து இருளைக் கண்களால் துழாவி மறுபடியும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும் போதே சன்னமாக மூச்சொலி வந்தது. சில்வர் பேணியில் இரு முறை தேநீர் ஊற்றிக் கொடுத்தேன். மிச்சம் வைக்காமல் குடித்தார். விமலா பாண் தட்டை எடுத்துச் சென்றாள். மார்சலுடைய போர்வையும் தலை அணையும் கவனமாக ஒழுங்குபடுத்திச் சென்றாள். மார்சல் பேசியபடியே பேச்சினூடே ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றார். நான் அவருடைய போர்வையை தலை வரை இழுத்துவிட்டேன்.  நல்ல வெக்கை நாட்களிலும் தலைவரை போர்த்தியபடி மார்சல் உறங்குவார்.  எழுந்திருக்கும் போது வியர்வையில் தொப்பலாக ஊறி நனைந்திருப்பார். 

அரவமின்றி எழுந்து அடுப்படி வாசலில் நின்று விமலாவை பார்த்துக் கொண்டிருந்தேன். என் நேர் பின்னால் மாஸ்டரின் மூச்சொலி மெல்லச் சீராகி ஒடுங்கியது. அனிச்சையாகத் திரும்பியவள் என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள். என்ன என்பது மாதிரியான இரகசிய உதட்டுச் சுழிப்பு. கழுவிய முகத்தில் முடிகள் பிரி பிரியாக ஒட்டியிருந்தன. என்னை ஆவேசத்துடன் இறுகக் கட்டியணைத்தாள். ஈர மஞ்சள் வாசனை. திமிறி அவளிடமிருந்து விடுபடக் கைகளை உதறினேன். காற்றுப்பை இறுக்கமாக உடலை தழுவுவது போன்று என்னை தன்னுள் இழுத்து அணைத்தாள். அவளது கைகளின்  அபாரமான இறுக்கத்தை என் எலும்புகளில் உணர்ந்தேன். 

“பாழாப்போன இந்த இரும்பு உடம்பை கொஞ்சம் தளர்த்தினால் என்ன”  என்றபடி அவள் என்னை நிமிர்ந்து பார்த்தபோது சுருங்கி விரியும் அவளது மூச்சொலியை மிக நெருக்கமாக உணரமுடிந்தது. விரல்களை நீட்டி தாடி முடிகளை இழுத்து அவற்றினுள் விரல்களைக் கோர்த்து நீவினாள். வெள்ளை நரையோடிய சுருள் முடிகளைக் குழிந்து நீண்ட விரல்களில் இறுக்கச் சுற்றினாள்.  என்னுள் குருதி வெப்பமாகப் பாய்வதையும் மூளை மடிப்புகள் விரிவதையும் இடுப்பில் அனல் சூட்டையும்  உணர முடிந்தது. உதிரி நினைவுகளின் அலையான படையெடுப்பு.  சாரத்தைக் உரிந்து கிழித்து முறுக்கி அவற்றால் கைகள் இரண்டும் பின்பக்கமாகப் பிணைக்கப்பட்டு ஒடுக்கமான இருண்ட அறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். அறை முழுவதும் கரிய நிர்வாண உடல்களின் அலை நெளிவு உப்பு வீச்சத்துடன் நிரம்பியிருந்தன. உடல்களுள் புழுப்போல நசிந்து வதங்கிக் கிடக்கிறேன். உடலெங்கும் சகதியாக மூத்திர நாற்றம்.  தோழர்களைக் கைக்கட்டுடன்  வெளியே அழைத்து செல்கிறார்கள். தோழர்களின் எண்ணிக்கை குறையும் போது உடல்களைத் தளர்த்தி இறுக்கத்திலிருந்து விடுபடும் ஆசுவாசம் கிடைக்கிறது. அருகில் படுத்திருக்கும் தோழனைப் பார்க்கிறேன். அவனிடம் வெளிப்படும் விரக்தியான புன்னகையில் எதையோ முடிவு செய்துவிட்ட பாவனை தெரிகிறது. என்னுடைய  முணுமுணுக்கும் உதடுகள் நடுங்கி வெளிறுகிறது.  ஒற்றைத் துப்பாக்கி வேட்டுச் சத்தம் மிகச் சன்னமாக ஆனால் துல்லியமாகக் கேட்கிறது. அடுத்த தோழரை அழைத்துச் செல்லவரும் சப்பாத்துக் கால்களின் அடியொலி எங்களை நெருங்கி வருகிறது.  அடுப்புக் கரி படிந்தது போன்ற மென்மயிர் பாவிய யோனி. சுளித்த பூவிதழ் விரிவு. கூரான வாழைப் பொத்தி முலைகள். அவை அவளுடலுக்கு சற்றும் பொருந்தாத துருத்தல்கள் என்பது போல தள்ளியே நின்றிருக்கின்றன. ஒவ்வொரு முறை ஆடை களையும் போதும் முலைகளை அனிச்சையாகப் பொத்திக் கொள்ளும் நாணமுறு கைகள். திடமான கனத்த இரு தொடைகளும் என்னுடலை இறுக அழுத்தின.  நீர்ப்பாசியின் வாசனை எழுந்து என்னுள் மூழ்கியது. அவள் என் மேல் இயங்கினாள். அவளது புட்டம் என்னுடலில் ஆவேசமாக அறைந்து ஓய்ந்தது. இளகி மெல்லத் தளர்ந்து என்னுடல் அருகில் சோர்ந்தமர்ந்த போது என்னுள் சில துளி  கண்ணீர் துளிகள் துளிர்த்தன. மெல்லச் சுருண்டு அவளுடலின் வியர்வைக் கதகதப்புள் புகுந்து கொண்டேன். விரல்கள் நீண்டு  கணீரைத் துடைத்தன. வெளியே வந்த போது மார்சல் திடுக்கிட்டு விழித்து இருளில் கண்களால் துழாவி என்ன என்று தடுமாறினார். “அப்ப நாளை பார்ப்போம் மார்சல்” என்றபடி அங்கிருந்து வெளியேறினேன். கரிய உருவமாக இளம் போராளி சைக்கிள் அருகே அசையாமல் நின்றிருந்தான்.  

அப்படியே முகாமிற்குத் திரும்பிவிடவே எண்ணினேன். ஆனால் இருளில் தூரத்தே சிவந்த தீக்கங்குகளைப் பார்த்தபோது நிலாவரைக் கிணற்றில் குளிக்கும் ஆர்வம் கிளர்ந்தது. அந்தப் பக்கமாகச் சைக்கிளை திருப்பினேன். ஏனோ இந்த இரவு இப்போதைக்கு விடியாது என்ற எண்ணம் தோன்றியது. வீதியின் இருபக்கமும் ஆள் அரவமில்லாத கைவிடப்பட்ட வீடுகள். உடைந்த மண் அரண்கள். உடைத்து வீசப்பட்ட தளபாடங்கள். குறுங்காடுபோல் வளர்ந்த மரங்களின் ஆங்காரமான தலையாட்டல். கைவிடப்படக் காத்திருந்தது போல மூர்க்கமாக தங்கள் இழந்த நிலங்களை மரங்கள் முட்புதர்கள் கொடிகள் பற்றியிருந்தன. வயிறு புடைத்துப் பளபளக்கும் இரண்டு மாடுகள் கரிய இருளாக வீதியை மெதுவாகக் கடந்து சென்றன. கழுத்துக் கயிறுகள் வெட்டப்பட்டிருந்தன.   

முச்சந்தியில் பெரிய காவல் அரண். மண் மூட்டைகள் நிரையாக அடுக்கி குறுக்காக துலாக் கட்டி வீதியைத் தடுத்திருந்தனர். சுட்ட மரவள்ளிக் கிழங்கு வாசனை. தீ கங்கின் அருகில் வேரகம அமர்ந்திருந்தான். அவனது துவக்கு பின்பக்கமாகச் சரிந்து தொங்கியது. அருகில் நெகிழித் தண்ணீர்ப் போத்தல். சுட்ட கிழங்கை வாழை இலையில் பிளந்து வைத்திருந்தான். அதிலிருந்து மா அவியும் நீராவி மணம் எழுந்தது. நல்ல வெள்ளைக் களிக்கிழங்கு. அருகே தொட்டுக் கொள்ள இடித்த சம்பல். அதைப் பார்த்ததுமே பசியை அடிவயிற்றில் உணர்ந்தேன். மதியத்திலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. இல்லைக் காலையிலிருந்தா? சுத்தமாகப் பசியே இருக்கவில்லை. 

கிணற்றுப்பக்கமாக வாளியும்  பிழிந்த ஈர உடுப்புமாகச் கமகே வந்தான். கழுத்தில் தடித்த வெள்ளிச் சங்கிலி மின்னியது. வெளிறிய பச்சை காற்சட்டையில் நீர்க்கோடுகள்.

 “இதைக் குளம் என்றே சொல்ல வேண்டும்.  இங்க நிலமட்டத்திலே குளு குளு என்று தளும்பும் நீர். பாசிகளின் கரும் பச்சை நிறம். பாதுகாப்பிற்கு அடித்த இரும்பு வலை உக்கி விழுந்து விட்டிருக்கிறது. அதன் மிச்சம் இன்னும் இருக்கிறது’’ என்றபடி குந்தி அமர்ந்து சுட்ட கிழங்கை பிய்த்து எடுத்துச் சாப்பிட்டான்.

ஆங்காரமான மர நிழலில் அகலமான சதுரக் கட்டு கிணறு இருந்தது. பக்கச்சுவரில் இடிந்த கட்டிடத்தின் எச்சங்கள் இருந்தன. பழைய நீர் வடிகால் அமைப்பின் சிதைவுகள். பாசி படிந்த படிகள். நீரின் கரிய பளபப்பு இருளில் மினுங்கியது. ஆடை களைந்து நீருள் குதித்தேன். வெதுவெதுப்பன நீர் இதமாக இருந்தது. முதலில் புறங் கழுத்தில் மெல்லிய எரிவு தெரிந்தது. பின் முதுகிலும், உதட்டிலும். நகக் கீறல்களாக இருக்கும். நீரில் உப்புத்தன்மையே இல்லை. எப்படி எரிகின்றது என்பது புதிராக இருந்தது. ஏதும் அமிலநீராக இருக்குமோ?  தலையை நீருள் கவிழ்த்துச் சுழன்று இரு கால்களையும் மேல் நோக்கி உந்தினேன் பாரமாக மூச்சுகுழல் இறுகிக் கனக்க ஆழமாகச்சென்றேன். இருளில் கலங்கிய கரிய பரபரப்பு. மெல்லிய ஒளிக் கீறல் போல சிறு நீர் கொந்தளிப்புகள் கண் முன் அலைந்தன. மூன்றாம் முறை மூழ்கியபோது உள்புறமாக கூராக நீட்டியிருக்கும் அடுக்கடுக்கான பாறை நீட்டங்கள் தெரியத் தொடங்கின. கரிய தேன் கூடு போன்ற துளையுள்ள பாறை நீட்டங்கள். இருளுள் கண்களின் இசைவாக்கம் பிரமிப்பூட்டியது. 

கிணற்றின் ஆழம் அறியப்படாதது. உள் ஒடுங்கிக் குறுகி நீண்டு சென்று கொண்டே இருப்பது. தனது போர்ப் படைகளின் பெரு விடாய்க்கு இராமர் அம்பு எய்து தோண்டியது. தீ பற்றி எரிந்த அசோக வனத்தை அணைக்க நீர் வேண்டி இராவணன் தன் கால் பெருவிரல் ஊன்றிய இடம் என்பவை பழைய கதைகள். வெள்ளை துரை ஆழம் அறிய முடியாமல் மனம் பிறழ்ந்து  தோற்று ஓடினார் என்பது மிகச் சமீபத்தயது. “வெளைக்காரச் சாயம் பூசிவிட்டால் மறு பேச்சின்றி எதனையும் ஏற்றுக் கொள்வார்கள் இல்லையா” என்பார் மார்சல்.

யாழ்பாண ராசா என்று அழைக்கப்பட்ட வெள்ளைத் துரை ஊரெல்லாம் அலைந்து இரும்புச் சாமான்களை வரியாகப் பெற்று வண்டில்களில் ஏற்றி வந்தார். அதன் வல்லிய சாட்சியாகச் சில்லுடைந்த பெரிய உருளைச் சகடை பலகாலம்  கிணற்றருகே சரிந்து நின்றிருந்தது. விடுதலைப் போர் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு இயக்கமும் ஆளுக்கு ஒருபக்கமாக அதைப் பிரித்து எடுத்துச் சென்றார்கள். மிச்ச இரும்புச் சங்கிலிக் குவியலே சந்நிதி கோயில் தேரைவிட உயரமாம். கிணற்றின் அருகிலேயே பெரிய உலைக்களம் அமைத்து தீ வளர்த்து உருக்கிய இரும்பு செந்தணலாக ஓடியதில் அந்த மண்ணே செந்நிறம் ஆகிவிட்டது. கிடுகு வேய்ந்த மண் குடில்களில் தங்கிய ஆயிரம் கொல்லர்கள் இரவு பகலாகக் களி மண் அடுப்புகளில்  இரும்பை உருக்கி அச்சுகளில் வார்த்துக் குளிரவைத்துத் தறைந்து சங்கிலி நீளத்தை நீட்டிக் கொண்டே இருந்தார்கள். வட்ட நார் தொப்பியும் இடுங்கிய பூனைக் கண்களுமுடைய வெள்ளைத் துரையின் மேற்பார்வையில் பெரிய உருளைச் சகடையில் சங்கிலிகளைப் பொருத்தி அதன் நுணியில்  இரும்புக் குண்டை இணைத்து கிணற்றுள் இறக்கினார்கள். குண்டு தங்கு தடையில்லாமல் வழுக்கிச் சென்று கொண்டே இருந்தது. மரச் சகடை இரவு பகல் கோடை மழை வெய்யில் பாராமல் பல ஆண்டுகளாக கரகரத்து சுழன்று கொண்டே இருந்ததாம். 

கோடையிலும் வற்றாமல் நில மட்டத்திலே நீர் தளும்புவதே கிணற்றின் மர்ம வசீகரம். அதற்கு மார்சல் அறிவியல் விளக்கம் சொன்னார். அவை ஒன்றும் நினைவில் இல்லை.  குகைக் கிணறு. பக்கவாட்டில் பல தூரம் நீளும் சிறு குகைகளும் ஊற்றுகளும் இருக்கின்றன. சுண்ணாம்புப் பாறைப் பிளவுகள். மயோசின் காலம். அடி நீரோட்ட இணைப்பு. அவற்றில் ஆர்வமே எழவில்லை. அலுப்பூட்டும் அறிவியல் விளக்கங்கள். ஆழமே அறியமுடியாத கிணறு. ஆயிரம் செதில் பாறை மூட்டங்கள் புடைத்துச் சென்று கொண்டே இருக்கும் உட்புறம். எண்ண விசித்திரமாக விரியும்  கற்பனைச் சுருள்.  திடீரென்று அதை உணர்ந்தேன். மூச்சுப்பை கனத்தபடியே வந்தது அழுத்தினால் அடுத்த நொடியே வெடித்து விடும் என்பது போன்ற கனம். என்னால் நீருள்ளிருந்து மேலே எழவே முடியவில்லை. கரிய நீர்கைகள் ஆழத்துள் அழுத்த நீருள் சுழன்றேன். தலைக்கு மேலே ஆயிரம் செதில் பாறை மூட்டக் கைகளின் அழுத்தல். எந்தப் பக்கமாகச் சுழன்று திரும்பினாலும் என்னால் அங்கிருந்து மீள முடியவில்லை. சுற்றிலும் கரிய நீர் கொந்தளிப்புள் ஆற்றலிழந்து துவண்டு கொண்டே சென்றேன். அப்போது அதைக் கவனித்தேன் கரிய நிழல் உருவம் என் தலைக்கு மேல் மிகப் பிரமாண்டமாகத் தோன்றி, சமவெளியில் சூரியனை மறைத்துச் செல்லும் மேகத்துண்டு போல என்னைக் கடந்து சென்றது.

மேலே வந்ததும் தலையைப் பாரமாக உணர்ந்தேன். வாயாலும் மூக்காலும் நீர் ஒழுகியபடி இருந்தது. சளியும் நீரும் கலந்தது வழிந்தது. நுரையீரல் கனத்து வலித்தது. ஆற்றல் இழந்து சோர்வாக உணர்ந்தேன். படிகளில்  தடுமாறிச் சென்றபோது காவல் அரண் ஓரமாக  அணைந்த கங்கின் அருகில்  வேரகமவும், கமகேயும் அமர்ந்திருந்தார்கள். வாழை இலையில் இரண்டு சுட்ட மரவள்ளி கிழங்குகளை எடுத்து வைத்திருந்தார்கள்.  சைக்கிள் விட்ட இடத்திலேயே நின்றிருந்தது. அருகே இளம் போராளி தன்னுள் ஒடுங்கிக் குறுகி இருளோடு நின்றிருந்தான். அவன்உடலிலிருந்த  ஈரப் பளபளப்பு இருளிலும் துல்லியமாகத் தெரிந்தது. நான் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அப்படியே இருளுள் கரைந்து மறைந்தான். அதன் பின் அவனை நான் ஒருபோதும் பார்க்கவுமில்லை தேடவுமில்லை. 

***

நன்றி நீலம் (நீலம் அக்டோபர் 2024 இதழில் வெளியாகி இருந்தது)

ஓவியங்கள் : egon schiele

Scroll to Top