இமிழ் : தொகுப்பும் தவிர்ப்பும்

01.

மிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீது பல சந்தேகங்களும் ஊகங்களும் விமர்சனங்கள் போல முன்வைக்கப்படுகின்றன.  இமிழ் தொகுப்பைத் தற்குறித்தனம் என்று சிலர்  மிகையாக மதிப்பிடுகின்றனர். சிலர் தங்களது ஊகங்கள், கற்பனைகள், தாழ்வுணர்வின் வடிகாலாக உரையாடுகிறார்கள். சிலர் ஷோபாசக்தி, தர்மு பிரசாத்துடைய இலக்கிய அதிகாரச் செயற்பாடாக அதாவது ‘பெரியண்ணர்’ மனநிலையாகவும், கதைத் தெரிவில் கடைப்பிடிக்கப்பட்ட உள்ளக இறுக்கத்தை / வடிகட்டலை சனநாயக மறுப்பாகவும் காண்கிறார்கள். தங்களுக்கு ஒவ்வாதவர்களின் கதைகளையும் சேகரித்துத் தொகுத்ததால் நாம் இருவரும் சேரம் போய்விட்டதாகவும், அங்கீகாரத்திற்குத் துண்டு போட்டுக் கொள்வதாகவும் அக்கறையுடன் கடிந்து கொள்கிறார்கள்.  தங்களுடைய கதைகளை, நாம் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகவும், அதை இலக்கிய மோசடியாகவும் ‘சதி’ என்றும் எண்ணியெண்ணிச் சிலர்  மனம் வெதும்புகிறார்கள். மேலும் சிலர் இலக்கியச் சந்திப்பின் மாண்புக்கு, அதன் சனநாயக வழிமுறைக்கு ஏற்பட்ட இழுக்காகத் தொகுப்பு வழிமுறையை விமர்சிக்கிறார்கள். கூடவே, அங்கொன்றும் இங்கொன்றுமான முகநூல் வம்புப்பதிவுகள்.  வாயில் நுரைதள்ள அறச்சீற்றத்துடன் விமர்சிக்கிறேன் என்று எழுதப்படும் ‘அபத்த’ கட்டுரைகள். இப்படியான  அடிப்படைப் புரிதல்கள் இல்லாத அடிமட்ட விமர்சனங்களே ஒரு சில சகாப்த ஈழ இலக்கியத்தின் புதைசேறாக இருக்கிறது. ஈழ இலக்கியப் பெருந்தேர் பலகாலமாக இப்புதைசேற்றில் மூழ்கிக் கிடக்கிறது. அரசியல் சராசரித்தனம், காழ்ப்பு, சதி, தனிநபர் தாக்குதல், காலாவதியான கோட்பாடுகள், இயக்க அரசியல், வாசிப்பின்மை (ஈழ இலக்கிய  விமர்சகராக இருப்பதற்கான அடிப்படைத் தகுதியே வாசிக்காமையோ என்று எண்ணுமளவிற்கு இருக்கிறது நிலைமை) போன்ற இன்னோரன்ன விசைகளாலான புதைசேறு. இந்தச் சேற்று இழு விசையே ஈழ இலக்கியத்தின் முழு ஆற்றலையும் படைப்பூக்கத்திலிருந்து உறிஞ்சுகிறது.

புத்தர் சொல்வதுபோல, சேற்றில் சிக்கியிருக்கும் கொம்பன் யானையைப்  புதை சேற்றிலிருந்து மீட்க வேண்டியிருக்கிறது.  நாடகமொன்றில் இதைப் போன்றதொரு புதை சேற்றில் மூழ்கும்  நகரம் இருந்தது . அங்கே மக்கள் தங்கள் இடுப்பளவுக்குச் சேற்றில் மூழ்கியபடி புதைசேற்றில்  வசிக்கிறார்கள். நகரம் புதை சேற்றில்  மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டே இருக்கிறது. சிறுகச் சிறுக நிகழும் மூழ்கல். பாதிவரை புதைந்திருப்பவர்களுக்கு மூழ்குதல் ஒரு பொருட்டே அல்ல, மூழ்கியபடியே தங்கள் அன்றாடங்களில் திளைக்கிறார்கள். நகங்களை அழகாகக் கத்தரித்துச் சேற்றில் புதைத்துக் கொள்கிறார்கள்.  சேற்றிலேயே பல் துலக்குகிறார்கள். இணையுடன் கலவி கொள்கிறார்கள்.  தொலைக்காட்சி பார்க்கிறார்கள். ஊழித்தனாமன அந்தப் புறவய மூழ்குதல் அவர்களுக்கு பொருட்டோ அல்லது அது அவர்களது ஓர்மையில் அது இருப்பதோ இல்லை. அதனால் தங்கள் சில்லறை அன்றாடங்களின் பிணக்குகளில் மூழ்கிக் கிடப்பார்கள். இப்புதைசேற்றை இப்படித்தான் கற்பனை செய்ய முடிகிறது. சுரணையில்லாத மரத்த அறியாமையின் புதைசேற்று மூழ்கல்.  ஈழச் சூழலில் இவ்வகைத் தவளைக் கூச்சல்களுக்கே  உடனடிக் கவனம் கிடைக்கிறது. இந்த நுரைதள்ளல்களில் ஏதோ நியாயமும், அறச்சீற்றமும் இருப்பதாகப் பலரும் நம்புகிறார்கள். அவையே உண்மையான இலக்கியச் செயற்பாடாகவும், விமர்சனங்களாகவும் பிழையாகப் புரிந்துகொள்கிறார்கள்.  முன்வைக்கப்படும் ஊகக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையையோ அல்லது அவற்றுக்குக் கொடுக்கப்படும் பொறுமையான விளக்கங்களையோ ஒருவரும் பொருட்படுத்துவதில்லை. இவர்களுக்குத் தேவை உண்மையோ, சிந்தனைத் தெளிவோ அல்ல தங்கள் ஊகங்கள், சதி, காழ்ப்புகளிற்கான வடிகால்கள். அவையே முகநூலில் கொட்டிக் கிடக்கின்றன. அந்தத் தித்திப்பில் எப்போதும் திளைத்திருக்கிறார்கள்.

படைப்புகள் விமர்சிக்கப்படுவதையோ, மறுக்கப்படுவதையோ இங்கே தவறாகச் சொல்லவில்லை.நல்ல இலக்கிய வாசகர் ஒருபோதும் அப்படிச் சொல்லமாட்டார்.  தமிழின் கடுமையான விமர்சனங்களின் வரலாறு பழைய  சிற்றிதழ்களில், புதுமைப்பித்தனின் ‘ரசமட்ட’ கட்டுரைகளில் தொடக்ககால வேர்களைக் கொண்டிருக்கின்றன.  நல்ல படைப்பாளி விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் இருக்கலாம். தடித்தனம் மிக்க விமர்சகர்களின் வாசிப்பு மொன்னைத்தனத்தை மெல்லிய புன்னகையுடன் அவர் கடந்து விடவும் கூடும்.  ஆனால் விமர்சனமற்ற, வடிகட்டல் இல்லாத விதந்தோதும் ஏற்பு நிலையே இலக்கியத்தின் புதைசேறு என்று அவரும் உள்ளூர நன்றாகவே அறிந்திருப்பார். ஆரோக்கியமான இலக்கியச் சூழலின், அறிவுச்செயற்பாட்டின் முன்நிபந்தனையாக விமர்சனங்களும், அசல் கருத்துகளுமே எப்போதும் இருக்க முடியும். அப்படியான விமர்சனங்களின் வழியாகவும், கருத்து மோதல்களின் வழியாகவும் உருவாகி வந்ததுதான் நவீனத் தமிழிலக்கியம். நானும் சில விமர்சனக் கட்டுரைகளை, மறுப்புகளை எழுதியிருக்கிறேன். ஆனால் இங்கே என்னுடைய குற்றச்சாட்டு இமிழ் தொகுப்பின் மீது ஈழ இலக்கியச் சூழலிலிருந்து முன் வைக்கப்படுபவை விமர்சனங்களே அல்ல என்பதே.

காத்திரமான விமர்சனங்களில் கற்றுக் கொள்வதற்கும், அவற்றை அடியொற்றித் தொடர்ந்து சிந்திப்பதற்கும், வாசிப்பின் இருண்ட வழிகளில் ஒளி பாய்ச்சும் கூர்மையும் இருக்க வேண்டும். நிராகரிப்பு அல்ல நிறுவல்களே விமர்சனங்களின் வழி வலியுறுத்தப்பட வேண்டும். ஆனால் இங்கே வெறும் நிராகரிப்பு விமர்சனங்களே முன்வைக்கப்படுகின்றன. அவை அல்ல நான் கோரும் விமர்சனங்கள். விமர்சகர்கள் தங்கள் சொந்தப் பார்வைகளை, வாழ்க்கை அனுபவங்களை, இலக்கிய நுட்பங்களை, வாசிப்பின் இரகசிய வழிகளை,  பெரும் படைப்புகளை, படைப்பாளிகளை, இலக்கிய நோக்கை, விமர்சனக் கருவிகளைத் துல்லியமாக வரையறுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். அவை இறுகிப்போனால் பழுதுபார்க்கவும், திருத்தவும், அகல விரிக்கவும் தயங்காத ஆழமான பார்வைகள் அல்லது தீவிர எழுத்துகளின் வழி தங்கள் ரசனைப் புலத்தை, இலக்கிய மதிப்பீடுகளைத் திரட்டி உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்படி விரிவாகப் படைப்புகளைப் படித்துப் பகுத்து ரசித்து விமர்சிக்கக் கூடிய – விமர்சிக்க வேண்டாம், ஈழத்தின் நல்ல படைப்புகள் நோக்கி வழிகாட்டக் கூடிய, தொடர்ச்சியாக உரையாடக் கூடிய  ஆளுமைகளோ, பரந்த வாசிப்பாளர்களோ, திறனாளர்களோ ஈழச் சூழலில் இல்லை. அதற்கான உழைப்பையும், ஆழமான இலக்கியப் பார்வைகளையும் தொகுத்து ஒட்டுமொத்தச் சித்திரத்தையும் தரக்கூடிய ஒரு தனிப் பெரும் ஆளுமையைக் கூட இங்கே வழிகாட்டியாகச் சுட்ட முடியவில்லை. சலிப்பூட்டும் அன்றாடங்களின் பின் சற்றே இளைப்பாறும் பொழுதுபோக்காக இலக்கிய உரையாடல்களை நிகழ்கின்றன. அவற்றில் தீவிரமோ, ஆழமோ இருப்பதில்லை. சூழலின் பொது மனநிலையின் சற்றே மேம்பட்ட வெளிறிய பார்வைகளே வெளிப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் நடந்த இழிழ் கூட்டத்தில் விமர்சகரொருவர் ‘செவ்வாத்தை’ கதையில் உள்ள ஒரு வசனத்தை அரங்கில் வாசித்துக் காட்டி அதன் ‘ஆபாசத்தை’ கடுமையாகக் கடிந்து கொண்டார். நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம் என நொடி திகைப்பு ஏற்பட்டது. இங்கு இப்படியான ஒடுங்கிய, கடந்தகால மதிப்பீடுகளுடன் இருப்பவர்களே இலக்கிய விமர்சனங்களும், கட்டுரைகளும் எழுதும் முன்னணி முகங்களாக இருக்கிறார்கள். இவர்கள் முதிர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவையோ?  இந்த  இருண்ட சூழலில் இவர்கள் செய்யும் விமர்சனங்கள் ஒரு வகை தனிநபர் சார்ந்தவை – படைப்பாளியை முன்வைத்துப் படைப்புகளை அடித்துத் துவைத்தல் செய்பவை அல்லது ஏன் அவை நல்ல படைப்புகள் என்று துல்லியமாக வரையறுத்துச் சொல்வதில் திணறல் உள்ளவை. பிடித்திருக்கிறது என்பார்கள் அல்லது கட்டுரைகளில் கருத்துகளைத் திரிக்கிறார்கள் என்பார்கள். ஏன் பிடித்திருக்கிறது, என்ன திரிக்கப்படுகிறது என்பதைத் தங்கள் சொந்தப் பார்வைகளால், அனுபவங்களால், வாசிப்பால் முன்வைக்க மாட்டார்கள். ஒரு வாசகர் அப்படிச் சொல்வதில் சிக்கல் இல்லை. ஆனால் விமர்சகர்கள் அப்படிச் சொல்லவே முடியாது. அதற்கான உழைப்பையும், தீவிரத்தையும் கொடுத்தே ஆகவேண்டும். இப்படியாக ஈழ இலக்கிய விமர்சனச் சூழலின் அத்தனை  அபத்த மாதிரிகளும் இமிழ் விமர்சனங்களில் இழையோடியிருப்பதைப் பார்க்கலாம்.

இமிழ் தொகுப்பை முழுவதுமாகப் படித்து அதிலுள்ள  கதைகளைப்பற்றி விமர்சித்தால், அவற்றின் போதாமைகளைச் சுட்டிக்காட்டினால் அது ஆரோக்கியமான விவாதம். அதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் காது கொடுத்துக் கேட்க வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. உண்மையில் ஒரு நல்ல அறிவுச்சூழலோ இலக்கிய வெளியோ ஒரு தொகுப்பை எப்படி எதிர்கொண்டிருக்க வேண்டும்? விமர்சிக்க முன்னர் குறைந்தபட்சம் தொகுப்பை முழுவதுமாகப் படித்திருக்க வேண்டும். அதன் பின் அதில் இருக்கும் கதைகளின் போதாமைகளையோ தரத்தையோ  சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் அல்லது தொகுப்பில் தாங்கள் யாரை எல்லாம் சேர்த்திருக்க முடியும் என்பதை ஒரு பட்டியலாக வெளியிட்டு எங்கள் இடைவெளியை நிரப்புவது மட்டுமல்ல தங்கள் வாசிப்புத் தரத்தையும், இலக்கிய நோக்கையும் வெளிப்படுத்தியிருக்கலாம். அதற்குக் கொஞ்சம் மூளை உழைப்பையும் நேரத்தையும் காவு கொடுக்க வேண்டும். கேள்விகளை முன்வைக்கும் யாருக்கும் அதற்கான திராணியோ, வாசிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. யாராவது  இத்தொகுப்பை முழுவதுமாகப் படித்ததற்கான ஒரு சிறு தடையத்தையோ அல்லது சொந்தப் பார்வையையோ எங்காவது விரிவாக முன் வைத்திருக்கிறார்களா?  பலருக்கும் ஒரு கதைத் தொகுப்பின் அடிப்படையே புரியவில்லை.  அதை மீறியும் சிலருக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம். அவர்களுள் நல்ல வாசகர்களும் இலக்கியத்தில் தீவிர விருப்புள்ளவர்களும் இருப்பார்கள். அவர்கள் இந்த விஷச் சூழலால் கசப்படைந்து மடைமாறிச் செல்லக் கூடும் என்பதால் அடிப்படை விளக்கங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.

51வது இலக்கியச் சந்திப்பில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதுதான் அதன் வழமையும் கூட. அந்த வகையில் நமக்குக் கொடுக்கப்பட்டது இதழ் தொகுப்புப் பணி.  நான் பொறுப்பாசிரியர். ஷோபாசக்தி பதிப்பாசிரியர். இலக்கியச் சந்திப்புக் குழு நமக்களித்த பணியை நாம் செவ்வனே செய்திருக்கிறோம். நமது கதைத் தெரிவில்  51வது இலக்கியச் சந்திப்பு குழுவுக்கு எங்களிடம் ஆட்சேபணை இருக்கவில்லை. பின்னர் ஏற்பட்ட கேள்விகளுக்கு (அவர்களுக்கு இருந்த) யதார்த்தன் கதை தொடர்பான விளக்கங்கள்  சொல்லப்பட்டன. அதைச் ஷோபாசக்தி பதிவு செய்திருக்கிறார்.(பார்க்க: பின்னிணைப்பு 1).

தொகுப்பு என்பது தொகுப்புத்தான்! தொகுப்பு எனும் போது அங்கு தவிர்ப்பும் இருக்கும். இத்தொகுப்பில் பொறுப்பாசிரியரான என்னுடையதும், பதிப்பாசிரியரான ஷோபாசக்தியுடையதுமான சிறுகதைகள் குறித்த பார்வையும் தெரிவும் இருப்பதைத் தவிர்க்க முடியாது. அது 51வது இலக்கியச் சந்திப்புக் குழு எங்களுக்களித்த பொறுப்பின்பாற்பட்ட சுதந்திரம். இல்லையெனில், இலக்கியச் சந்திப்புக் குழு தான் கதைகளைத் தெரிவு செய்யும், ஆனால் பொறுப்பாசிரியராக என்னுடைய பெயரைப் போட்டுக் கொள்ளலாம் என்றால் அது என்ன மாதிரியான தொகுப்பு? அப்படியான வழமை இலக்கியச் சந்திப்பில் ஒரு போதும் இருந்ததில்லை. தொகுக்கப் பொறுப்பெடுத்துக் கொண்டவர்களின் பாற்பட்டே தெரிவும் இருந்திருக்கிறது. ஆக, கதைகளின் தெரிவில் என்னுடையதும் ஷோபாசக்தியுடையதும் பார்வைகளும் அளவுகோல்களும் இருக்க வேண்டும். அதுதான் நீதியானது. அதற்கு நாங்கள் கொண்ட வழிமுறை வழமையாகத் தொகுப்புகளில் பின்பற்றப்படும் வழிமுறைதான். இதுவரையில் உலகில் பொறுப்பாசிரியர் இருந்து தொகுக்கப்பட்ட அனைத்துத் தொகுப்புகளின் தொகுப்பு முறையும் அதுவாகவேதான் இருக்க முடியும்.  நாங்கள் இருவரும் தொடர்ந்து இலக்கியங்கள் குறித்து எழுதிவருவனவற்றின் பாற்பட்டே அந்த தொகுப்பு நிகழ்ந்திருக்கிறது. ஒரு தொகுப்பின் வழிமுறை அதுவாக மட்டுமே இருக்க முடியும். அதுவே நேர்மையானதும் கூட. இப்படியாக ஆசிரியர்களின் வடிகட்டல் இல்லாத தொகுப்புகள் எங்கும் இல்லை. அப்படி இருந்தால் பரிந்துரைக்கலாம், அடுத்த தொகுப்பில் அந்த வழிமுறையைக் கைக்கொள்கிறோம்.

ஊரில் சல்லி அரிப்பதற்கு, சற்றே பெரிய கண்ணுள்ள சல்லடை வைத்திருப்பார்கள். அப்படியான பெரிய கண் சல்லடையால் பொதுச்சூழலில் இருந்து சலித்து எடுக்கப்பட்டவையே இமிழ் தொகுப்புக்கதைகள். சல்லடையின் துளை என்னுடையதும், ஷோபாசக்தியுடையதுமான மதிப்பீடுகளின் அடிப்படையானது. மதிப்பீட்டு அடிப்படையோ தர நிர்ணயமோ இல்லாத இலக்கியத் தொகுப்போ உரையாடலோ எங்கும் இல்லை. அப்படி இருந்தால் அது இலக்கிய உரையாடலாக இருக்க முடியாது. இலக்கியம் கருத்து வெளிப்பாட்டின் களம். அங்கு உக்கிரமான கருத்து மோதல்களும் சீண்டல்களும் பகடிகளுமே முன் செல்லும் கருவிகள். முகநூலில் இங்கிருக்கும் அபலைகளிற் பலர் ஏதோ இலக்கியம் நல்லவர்களின் கூடாரம் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை ஒரு போதும் அப்படி இருந்தது இல்லை, அப்படியாக இருக்கவும் முடியாது. உலகின் அத்தனை கீழ்மைகளும் அங்கு உண்டு. அது படைப்பூக்கக் களம் என்பதால் அத்தனை கீழ்மைகளும் பூதக்கண்ணாடியால் பார்ப்பது போல உருத்துலக்கி வேறு காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். உருத்துலக்கப் பட்ட அந்தக் கீழ்மைகளிலிருந்து ஒளிநோக்கிச் செல்லும் கீற்றுகளும் கிளம்புகின்றன என்பதே இலக்கியத்தின் ரசவாதப் புதிர். அந்த மர்ம வசீகரமே எல்லோரையும் குழப்பக் கூடியது. ஒரு வகையில் அது சகதியில் ஒரு காலை ஊன்றி வான் நோக்கி எழுந்து சிறகுகளில் படிந்திருக்கும் சகதியை உதறிப் பறக்க முயல்வது போன்றது.

கருத்து விவாதக் களம் சனநாயகத்தைப் பயின்று பார்ப்பதற்கான இடமில்லை. சனநாயகம், அதிகாரம் குறித்த பிரச்சனை அல்ல இவை. ஏன் என்றால் கருத்து விவாத வெளியில் யாருக்கும் நிச்சயமான அதிகாரங்களோ, சலுகைகளோ இருப்பதில்லை. பெரும்பான்மையின் குரலுக்கான மதிப்புக் கூட இருப்பதில்லை. அதன் இந்த நிலையழிக்கும் குரூரம் தான் பலருக்கு ஒவ்வாமை தருவது. தொடர் செயல்பாடாக நிகழும் விமர்சன விவாதங்களில் அந்தக் காலகட்டங்களின் எண்ணவோட்டங்கள், அரசியல், பண்பாட்டு, விமர்சனப் பார்வைகளுள் உள்ள பல விசைகளின் தாக்கம்  இருக்கும். அந்தப் பிரமாண்டமான வலை நெய்தலை யாரோ  இருவர் கட்டுப்படுத்தவே முடியாது. அப்படிக் கட்டுப்படுத்தக் கூடிய எளிமையான செயற்பாடு அல்ல அது. புனல் வாதத்தில் கடும் விமர்சனங்களூடே எதிர்நீச்சல் நீந்திக் கரை சேர்பவை இவை. பல நூறு விசைகளினூடே முட்டி மோதிக் கரை சேர்ந்தவற்றை அதிகாரம் கொண்ட நபர்களால் கட்டுப்படுத்துவது போல உரையாட வேண்டியதில்லை.

தனிநபர்களின் அதிகாரம் இலக்கியத்தில் செயற்பட முடியாது. அது ஒரு தோற்ற மயக்கம் மட்டுமே அல்லது நம்முடைய படைப்புச் சோம்பலுக்கும், வறட்சிக்கும் நாம் கொடுக்கும் அதீத கற்பனையே அல்லாமல் வேறு அல்ல. அதற்கு நல்லதொரு உதாரணம் ஈழச் சூழலிலேயே உண்டு. க.கைலாசபதி. சிவத்தம்பியைச் சொல்லலாம்.  ஒரு காலத்தில் இலக்கியச் சூழலில் செல்வாக்குச் செலுத்திய நபர்களாக இருவரையும் சொல்லலாம். அவர்கள் இருவரது செல்வாக்கின் பரந்த வீச்சை மு.தளையசிங்கம், எஸ். பொன்னுத்துரை எழுதிய அந்தக் காலத்திய மறுப்பு கட்டுரைகளில் வாசிக்க முடியும். மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை இருவரும் க.கைலாசபதி, சிவத்தம்பியின் மார்க்ஸிய, சோசலிச யதார்த்தவாத மதிப்பீடுகளிற்கு வெளியிலிருந்தவர்கள். கைலாசபதி, சிவத்தம்பியை அவர்கள் காலத்திலேயே மறுத்துக் கட்டுரைகளையும், படைப்புகளையும் எழுதியவர்கள். மு.தளையசிங்கம் ஒரு படி மேலே சென்று க.கைலாசபதியை ‘சோம்பல் துரை’ என்கிறார். சிவத்தம்பியை ‘தமிழ்ப்பற்றுள்ள தேசியவாதி’ என்று முன் கணிப்புச் செய்திருக்கிறார்.  ஆனாலும்  அந்தச் செல்வாக்கை மார்க்ஸிய இரட்டையர்களுக்கு யாரும் கிரீடம் சூட்டிச் செங்கோல் எடுத்துக் கொடுத்து அளிக்கவில்லை. அவர்களது எழுத்து சார்ந்து அவர்களாக உருவாக்கிக் கொண்டது. உயர்கல்விச் சூழல், தினகரன் பத்திரிகை ஆசிரியர் இவை எல்லாவற்றையும் விட  இலக்கியத் திறனாய்வு, இலக்கியத்துக்கும் வாழ்வுக்குமான தொடர்பைத் துல்லியமாக வரையறுத்துச் சொன்ன பாங்கு எனப் பெரும்பணி செய்தவர்கள் அவர்கள்.  அவர்கள் மிக நல்ல படைப்புகளாகச் சோசலிச யதார்த்தவாதப் படைப்புகளையே முன்வைத்துக் கொண்டு இருந்தார்கள். செல்வாக்குள்ள அவர்களது கருத்துகள் என்பதற்காக அந்தப் படைப்புகளை இன்று யாரும் தூக்கிச் சுமப்பதில்லை. அவர்கள் எழுதி நிறுவியதாலே மறுப்பில்லாமல் ஏற்கப்படவுமில்லை. ஆனால் அவர்களால் மறுக்கப்பட்ட மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை படைப்புகள் இன்றளவும் மீள் வாசிப்புச் செய்யப்படுகின்றன. உரையாடப்படுகின்றன. ஆக, அதிகாரத்தோடு பெரியண்ணர்களாக நடந்து கொள்கின்றோம் என்று சொல்வது இலக்கியத்தின் பல்லாயிரம் இயங்கு விசைகளைப் புரிந்து கொள்ளாமையின் விழைவே அல்லாமல் வேறு அல்ல. நாம் எங்கள் இலக்கிய நம்பிக்கைகள் அடிப்படையில் சில முன்வைப்புகளைச் செய்கிறோம்.

இவ்வளவு ஏன்?  இலக்கியச் சந்திப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.  தலைவர், செயலாளர் போன்ற ஓர் அமைப்பிற்கு இருக்க வேண்டிய அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாமல் 30 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் ‘இலக்கியச் சந்திப்பு’ ஒழுங்கமைவைக் கூடச் சனநாயக வழிமுறையில் அனைத்துக் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் கருத்துச் சுதந்திரமுள்ள அமைப்பு என்று வகுக்க முடியாது. அப்படியான ஓர் இலக்கிய அமைப்பு, தொடர் அறிவுச் செயற்பாட்டு நிகழ்வு இருக்கவே முடியாது. அப்படி இருப்பதல்ல இலக்கிய / அறிவுச் செயற்பாட்டின் நோக்கம்.  இலக்கிச் சந்திப்பில் செயற்படுவது தெரிவு செய்யப்பட்ட கருத்துகளின் சனநாயகமாகவே, முடிவுசெய்யப்பட்ட கருத்துகளின் வெளிப்பாட்டுச் சுதந்திரமாகவே இருக்க முடியும். செயற்படும்  இலக்கியக் குழுக்களின், செயற்பாட்டாளர்களின் இலக்கிய நம்பிக்கைகளின் தொகுப்பாக, அவர்கள் சமூகத்தில் நிகழ்த்த விரும்பும் கருத்து தாக்கங்களின் முன் தெரிவு செய்யப்பட்ட கருத்துகளின் தொகுப்பாகவே இருக்கும். அது பிழை அல்ல. அதில் விமர்சனங்களும் இருக்க முடியாது. 30 வருடங்களானாலும் அது ஓர் எல்லைக்குட்பட்ட உறுப்பினர்களுக்குள்ளே சுற்றி இயங்க முடியும். வழமையான ஒழுங்கமைவு இல்லாத கலைந்து கூடிச் செயற்படும் இலக்கியச் சந்திப்பின் செயற்பாட்டுத் தளத்தின் எல்லையே அதுதான். இலக்கியச் சந்திப்பில் வெடுக்குநாறி மலை போன்ற மைய அரசியல் பிரச்சினை கவனங்கொள்ளப்படமாட்டாது. அவற்றைக் கவனப்படுத்த நுரைதள்ளும் உரை வீச்சுக்கு ஆயிரம் தேசிய ஊடகங்கள் இருக்கின்றன. யூரியூப்பில் வெடுக்குநாறி மலை எனத் தேடினால் எத்தனை காணொளிகள் வருகின்றன. ஆனால் இலக்கியச் சந்திப்பில் தமிழ்த்தேசியர் கவனமாகப் பிரயத்தனப்பட்டு மறைக்க விழையும் ’சாதி மதில்’  தனி அமர்வாகவே விரிவாக உரையாடப்படும். வெடுக்குநாறி மலைப் பிரச்சினையைப் பேசாமல் ஏன் சாதி பற்றிப் பேசுகிறீர்கள், எங்களுக்கு வெடுக்குநாறி மலைபற்றி பேச ஒரு அமர்வு தாருங்கள் எனக் கேட்டால்; கருத்துச் சுதந்திரத்தின் பெயரால், அவர்களுக்கு இலக்கியச் சந்திப்பில் வழிசமைத்துக் கொடுக்கப்படுமா?  அல்லது சனநாயகத்தின் பெயரால் வாக்கெடுப்பு நடத்தப்படுமா இல்லையே.  ஆக; அதிகாரம், சனநாயகம் தொழிற்படும் தளம் வேறு, அவற்றைப் பயிலும் இடம் வேறு. ஒரு கதைத்தொகுப்பில், இலக்கியச் சந்திப்பு போன்றவற்றில் அவற்றிக்கான தனித்த கருத்தியல் தளம் உள்ளது. அதன் எல்லைகளுள் இருந்தே அவற்றால் இயங்க முடியும்.  அது சார்ந்தே அவை செயற்பட முடியும். அப்படிச் செயற்படுவதால் அவை அதிகார அமைப்புகளோ, கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் அமைப்புகளோ இல்லை.

இலக்கியத்தொகுப்பில் – கவனிக்க: இலக்கியச் சந்திப்பில் அல்ல –  சனநாயகத்தைக் கோருபவர்கள், சலுகைகளை எதிர்பார்ப்பவர்களுடன் உரையாடவோ, விவாதிக்கவோ முடியாது. ஒரு தொகுப்பில் சனநாயகத்தை, பிரதிநிதித்துவத்தைக் கோரும் விசித்திரம் அண்டத்தில் எங்காவது நிகழ்ந்திருக்குமா தெரியவில்லை, பால்வீதியிலேயே  நடந்திருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. அதற்காக வேண்டுமானால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.அப்படி என்றால் சனநாயகத்தை மதிக்காமல் நானும் ஷோபாசக்தியும் அடாத்தாக நடந்து கொண்டோமா? இத்தொகுப்பில் நாங்கள் அதிகாரத்துடன் நடந்து கொண்டோமா என்றால் நிச்சயமாக இல்லை. அப்படி ஒருவர் கூறுவாரேயானால் அவருக்கு அதிகாரம் குறித்தும் தெரியாது, இலக்கிய விமர்சனம் குறித்தும் தெரியாது. இவர்களது இந்த அறியாமையின் மூர்க்கம் தான் அச்சம் கொள்ள வைப்பது. பொறுமையிழக்கச் செய்வது. நாம் நின்றிருக்கும் இந்தத் தளம் எழுத்தின் வழி நாம் ஈட்டிக் கொண்டது. தொடர்ச்சியான செயற்பாடுகளால் அடைந்தது.ஒருவர் இலக்கியத்தின் பொருட்டு எந்தச் செயலையும் செய்யமாட்டார் ஆனால் தனக்கு அங்கீகாரம் வேண்டும் எனப் புலம்புகின்றார் என்றால் என செய்ய முடியும். இலக்கியச் சூழலில் ஒருவருடைய கருத்து விமர்சனத்துடன் ஏற்கவோ மறுக்கவோ படுகிறது என்றால் அதற்கான அவருடைய கடந்தகாலச் செயற்பாடுகள் அப்படி. அதற்கான மதிப்பைக் கொடுத்துவிட்டு உரையாடலாம். 400 பக்கத் தொகுப்பிற்குக் குறைந்தது ஆயிரம் சொற்களில் கட்டுரையாவது எழுதியிருக்க வேண்டும்.

இங்கு என்னுடையதும் ஷோபாசக்தியினதும் கருத்துகள், தெரிவுகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப் படுகின்றனவா என்ன? ஒவ்வொரு சொல்லும் காழ்ப்புடனும், மூர்க்கமாகவும் தானே எதிர்க்கப்படுகிறது. நாம் அதிகாரமுள்ளவர்கள் என்றால் அவை எந்த எதிர்க்கருத்தும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அதற்காக எங்கள் கதைத் தெரிவோ, விமர்சன அளவுகோல்களோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. இங்கு இவர்கள் செய்வது தொகுப்பில் வெளியான கதைகளைக் குறித்த விமர்சனங்களோ, உரையாடலோ அல்ல. எங்கள் கதைகள் குறித்த பார்வையின் போதாமைகளைச் சுட்டிக்காட்டுவதோ நோக்கம்  அல்ல. விமர்சனம் வைத்தவர்களுள் ஒருவர் கூட தொகுப்பைப் படித்துவிட்டு அதன் உள்ளடக்கம், கதைத் தெரிவு சார்ந்து ஒரு சொல் எழுதவில்லை. இந்த வகை விமர்சகர்கள் அந்த நல்ல செயலை ஒருபோதும் செய்வதில்லை. ஒன்று அவர்களுக்கு அதைச் செய்வதற்கான திரணி இல்லை மற்றது ஒட்டு மொத்தமாகத் தொகுத்தும், பகுத்தும் விமர்சிப்பதற்காகத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை. படைப்புகளின் ஒரு கூற்றை, பகுதியை மட்டும் நுனியால் மேய்ந்து தங்கள் அரசியல் பார்வையை அதில் ஏற்றிக் கருத்தை உதிர்ப்பார்கள். அவ்வளவுதான் அவர்களால் முடிந்தது.

ஈழத்திலிருந்து கதை  எழுதும் பலரிடம் தங்கள் கதைகள் குறித்த மிகு கற்பனையும், கதைகளின் தரங்குறித்து ஊதிப்பெருப்பிக்கப்பட்ட பிம்பங்களும் உண்டு. தங்களைத் தாங்களே ஒற்றைவரி அபிப்பிராய மதிப்பான பாராட்டுகளூடாக மிகையாக மதிப்பிட்டுக்  கொள்கிறார்கள், அவர்களை மறுத்து எங்களின்  மதிப்பீடுகளின் ஊடாக நாம் முன் வைக்கும் தொகுப்பு  அவர்களின் போலிப் பெருமிதங்களைச் சீண்டி அல்லாட வைக்கக்கூடியது. ஒரு வகையில் தொகுப்பின் நோக்கங்களுள் அதுவும் ஒன்றுதான் அல்லது தாங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற தாழ்வுச் சிக்கலில் உழல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு வேறுவகை ஆற்றுப்படுத்தல்களும், தாகசாந்தி நிலையங்களும் உண்டு. இந்தத் தொகுப்பில் அவர்களுக்கு இடம் இல்லை.  இப்படியான துல்லியமான பார்வையும் நிராகரிப்புமே  அவர்களைப் புண்படச் செய்கிறது.   நாம் ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டோம் என்று அவர்களின் முன் அடிபணிந்து கூனிக் குறுகி நிற்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

ஒருவரைப் புண்படச் செய்யாத இலக்கியச் செயற்பாடு என்று ஏதும் உள்ளதா? நவீன இலக்கியத்தின் அடிப்படையே இந்தப் புண்படுத்தலும் விமர்சனமும் தான். அப்படி இல்லாதது இலக்கியமாக, இலக்கியச் செயற்பாடாக இருக்க முடியாது. தன்னுடைய படைப்புக் குறித்த நிமிர்வும், ஓர்மையும் உள்ள ஒருவருக்கு இந்த நிராகரிப்பினூடாக எங்கள் அளவுகோல்களைத் தான் சந்தேகிக்க முடியும்.  என்னிடம் சல்லடையை விட மா அரிப்பது போன்ற மிக நுண்ணிய கண்ணுள்ள விமர்சன அரிக்கன் கூட உள்ளது. அதை என்னுடைய கதைகள் குறித்த விமர்சனங்களில் பார்த்திருக்க முடியும். இங்கு அதுவல்ல பிரச்சினை. கிட்டத்தட்ட எங்கள் அளவுகோல்களின் படி 43 எழுத்தாளர்களிடம் கதைகள் கோரப்பட்டன. இதுவரை ஈழத் தமிழ்ச் சூழலில் எழுதப்பட்ட நல்ல கதைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே நாம் கதை கோரியவர்களின் அகண்ட வீச்சைப் புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் வாசிப்பும் ஈழ இலக்கியச் சூழல் பற்றிய புரிதலும் உள்ள ஒருவரால் மட்டுமே இந்தப் பெரு வீச்சை விளங்கிக்கொள்ள முடியும். இதில் நானும் ஷோபாசக்தியும் எவ்வளவு பரந்த வீச்சுடன் கதை சேகரித்திருக்கிறோம் என்பது தெளிவாகும். கடந்த பத்து ஆண்டுகளில், ஈழ – புலம்பெயர்ந்த சூழலில் எழுதப்பட்ட, காலம் தாண்டியும் நிலைத்து நிற்கக் கூடியதான மிக நல்ல கதைகள் என்று  பத்துக் கதைகளைச் சொல்ல முடியுமா? நல்ல வாசகராக அப்படிச் சொல்லவே முடியாது. எண்ணிக்கை அதைவிடக் குறைவாகவே இருக்கும். சூழல் அப்படித்தான் சூம்பலாக இருக்கிறது. அதனோடு ஒப்பிடுகையில் எங்கள் அளவுகோல்கள் அவ்வளவு ஒன்றும் அடாத்தானதாக இல்லை.

ஆக 51வது இலக்கியச்சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழு நமக்களிக்கப்பட்ட பொறுப்புகளின்பாற்பட்டு எங்கள் தொகுப்பு வேலையைச் செய்திருக்கிறோம். தொகுப்புச் செயற்பாட்டின் வழி நம் மதிப்பீட்டையும், விமர்சனப் பார்வையையும் ஒட்டியே இக்கதைகளைத் தெரிவு செய்திருக்கிறோம்.  எங்கள் பார்வை ,விமர்சன அளவுகோல்களின் படி மட்டுமே நாம் செயற்பட முடியும். அதுவே எங்கள் நோக்கமும். அரசியல் சராசரித்தனத்துடனோ, இரக்கப்பட்ட கை தூக்கிவிட வேண்டிய தேவையோ இலக்கியத்தில் இல்லை. கூடவே அது அல்ல இத்தொகுப்பின் நோக்கம். இதனூடாக நாம் சொல்ல விரும்பும் செய்தி ஒன்றே ஒன்று. சம கால ஈழ – புலபெயர் இலக்கியத்தின் சராசரிக்கும் மேற்பட்ட கதைகள் என நாம் முன்வைப்பனவற்றின் தொகுப்பு. அதை ஒருவர் ஏற்கலாம், மறுக்கலாம், விமர்சிக்கலாம். தங்களுடைய அளவுகோல், மதிப்பீட்டின் வழி இன்னொரு தொகுப்பு கொண்டுவரலாம்.  அதன் இடைவெளிகள், குறைகள் சுட்டிக் காட்டப்படலாம். அதுவே அறிவுச்சூழலின் வழி. கதைகளின் தெரிவு தொடர்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு, இமிழ் தொகுப்பின் கதைகளே  ஒரே ஒரு பதிலாக இருக்கும்.

02.

ஈழ இலக்கியத்தின் புதைசேற்றுத் தேக்கநிலைக்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்? ஒன்று அறவே இல்லாத தீவிர இலக்கிய வாசிப்பு அதன் பெரும் சுமை.  எழுத்தாளர்களே வாசகர்களாகவும், விமர்சகர்களாகவும், உளம் குமைபவர்களாகவும், தாழ்வுணர்வில் வெம்புபவர்களாகவும்  இருப்பதால் ஓயாது நிகழும் ஆளுமைப் பூசல்கள் அடுத்த பெரும் சுமை. இந்த ஆளுமைப் பூசல்கள் கருத்தியல் சார்ந்ததோ இலக்கிய நுண் ரசனை சார்ந்ததோ, வாழ்க்கை நோக்கு சார்ந்ததோ இல்லை என்பதே ஒட்டுமொத்தச் சீரழிவுகளுக்குமான அடிப்படைக் காரணியாக இருக்கிறது. அவை வெறும் அடையாள, பொச்சரிப்பாகச் சுருங்கிவிடக் கூடியவை. அவதூறுகளும், தனிப்பட்ட தாக்குதல்களாகவும் எஞ்சிவிடக் கூடியவை. மிக எதிர்மறையாக, கொந்தளிப்பாக மட்டும் படைப்புகளை அணுகக் கூடியவை. அவற்றில் ஒருவித அற ஆவேசம் இருப்பதுபோல பாவனை தெரியும்.  பாவனையின் கீழ் மறைந்திருப்பது அறியாமையின் மூர்க்கம் மட்டுமே.

விமர்சனத்தில் படைப்பின் நல்ல கூறுகளைக் கவனப்படுத்திப் பட்டியலிட்டு விமர்சிப்பது என்பது வேறு.  இந்தக் கடுமை என்பதையும் மிகத் தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தனிமனித தாக்குதல் என்ற ‘எல்லையை’ விட்டு, தங்கள் விமர்சனங்களை, கருத்துக்களை நகர்த்துவதோ உரையாட முற்படுவதோ இல்லை. அதனால் அவை எல்லாம் வெற்றுக் கூச்சல்களாக, தாழ்வுச்சிக்கல்களாக எஞ்சிவிடுகின்றன.

சூழலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வாசிப்போ, மனத்திடமோ, சிந்தனைத் தெளிவோ இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களது கட்டுரைகளில் சிந்தனையின் புதிய கருத்துகள், பார்வைகள், சொந்த அவதானங்கள், ரசனைக் குறிப்புகள், வாழ்க்கை நோக்குகள் சார்ந்த எந்த நேர்த் தடையத்தையும் வாசகர்களால் கண்டடையவே முடியாது.  நுரை பொங்கும் ஆவேசக் கூச்சல்கள். உக்கிரமான சனநாயகம், ஆணாதிக்கம், விளிம்பு முக்கியமாக அதிகாரம் போன்ற குரல்களின் கலவையாக இருக்கும். இங்கே ஆணாதிக்கவாதி, சனநாயகம், அதிகாரம் எல்லாம் இன்னும் நன்கு செல்லுபடியாகக் கூடிய செலவாணிகள். அதை யாரும், எப்படியும், எங்கு வேண்டுமானாலும் அள்ளி இறைக்கலாம். அதன் பின்னால் ஒரு கணிசமான கும்பல் திரளும். அதன் கடந்தகாலச் செயற்பாடுகளோ, எழுத்துகளோ, கேள்விகளோ கூட அங்கு பொருட்டு அல்ல. அந்தக் கணத்தின் இன்பம் போதும் என்பது மாதிரியான கும்பல் அது. அதற்கு இலக்கியம், எழுத்து, கருத்து, சமூகம் போன்ற எதிலும் பொருட்டோ, கரிசனையோ இருப்பதில்லை.

அவர்களால் படைப்பில் / தொகுப்பில் இருக்கும் அம்சங்களைச் சரியாகத் தொகுத்து முன்வைப்பதிலேயே பெரும் சிக்கலும் குழப்பமும் இருக்கும். ஒரு படைப்பை, தொகுப்பை முழுவதுமாகப் படித்து அதனைச் சாரப்படுத்தி, தகவல்களைச் சரியாக அடுக்கி தன் கருத்தைச் சரியாக முன்வைக்க முடியாததால் – அப்படித் தொகுத்துக் கொள்ளும் திராணி இல்லாதிருப்பதால் தங்களுக்கு உகந்த இலகுவான வழிகளில் ஊருடுவிச் செல்வார்கள்.  தாங்கள் எளிமையான புரிதல், அரசியல் சராசரி நிலை, கருத்துகளைப் படைப்புகளிலிருந்து கிள்ளி எடுத்துக் கொள்வார்கள். மகள் சோறு அள்ளுவது போல இருக்கும் அது. அவளது கை விரல்கள் குவிவதற்கு இன்னும் பண்படாததால் அய்ந்து விரலையும் விரித்து வைத்து அள்ள முடியும். ஒவ்வொரு அள்ளலிலும் ஓரிரு சோற்றுப் பருக்கைகளே உள்ளங்கையில் ஒட்டியிருக்கும்.   அவளது வயதிற்குத் தகுந்த மாதிரியான கிள்ளல். இவர்கள் குறிப்பிட்ட அரசியல் சராசரி நிலை, கருத்தை மட்டும் காகக் கொத்தலாகக் கொத்திச் செல்வார்கள். பிறகு அதை வைத்து மிகுதியைத் தங்கள் கற்பனைகளால் நிரப்பிக் கொள்வார்கள். அது அவர்களது கட்டவிழ்ப்பு வாசிப்பு. படைப்பில் இருக்கும் இடைவெளிகளை கற்பனையால் நிரப்பி வாசிப்பதென்பது வேறு. தனக்கு உகந்ததாகக் கொத்தி எடுத்துக் கொள்வதென்பது வேறு. முன்னது சிந்தனை, வாசிப்பை விசாலமாக்கும். பின்னது தன்னைக் குறுக்கிக் கொண்டு அபத்தமான விசித்திர  – நவீனம் கடந்த கவிதைகள் போன்ற –  அர்த்தங்களைக் கற்பித்துக் கொள்ளும்.

கற்சுறா ஆக்காட்டிக்கு ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். ஷோபாசக்தி, கருணாகரன், சுகன் மீதான நுரைதள்ளும் விமர்சனக் கட்டுரை. ஒன்றுக்கு மூன்றுமுறை படித்துப் பார்த்தேன். அதில் தர்க்க ஒழுங்கோ, தகவல் கோர்ப்போ, ஏன் தன்னுடைய கருத்தை வலுவாக்கும் வாதங்களோ இல்லாத – அபாரமான கற்பனையின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருந்த `அபத்தக்` கட்டுரை அது.  அதைப் பிரசுரிக்க முடியாமைக்கான காரணங்களைப் பட்டியலிட்டு அனுப்பியிருந்தேன். கட்டுரைக்கான அடிப்படைகளே சரியாக இல்லை. நீங்கள் சொல்லும் ஊகங்களுக்கான சரியான வாதம், தர்க்கம் இல்லை .இவை தனிமனிதக் காழ்ப்பு என்பதைத் தாண்டி ஒரு அம்சங்கூட பொருட்படுத்தும்படி இல்லை என்று பதில் அனுப்பினேன். அதற்கு கற்சுறாவின் பதில் : ‘’எனக்கு நீங்கள் கோருவதுபோல கட்டுரை எழுதத்தெரியாது,  நான் ஒரு ‘அக்கடமிக்கல்’ எழுத்தாளன் இல்லை’’.  நான் கோரியது கட்டுரைக்கான சில அடிப்படைகளை. கட்டுரையில் அவருடைய வாதத்திற்கு சரியாக முன்வைக்கப்படும் தர்க்கங்கள். அவற்றிற்கு அவர் கொடுக்கும் ஊகங்களின் தெளிவுபடுத்தல்களை. இந்தவகைக் கட்டுரைகளில், இவை எதுவுமே இருப்பதில்லை.  மனம் போன போக்கில் எழுதுவது தங்கள் ஊகங்கள், சதியை நம்பி  அறச்சீற்றத்தின் தோள்கள் மீதேறி  எழுதுவது. கடந்த பல வருடங்களாக இந்தச் செக்கு மாட்டுத்தனத்துள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தங்கள், அல்லது தாங்கள் முன்வைக்கும் படைப்பு சார்ந்த, விமர்சனம் சார்ந்த கருத்து மண்டலத்தையோ, விமர்சனத் தொகையையோ ஏன் உருவாக்க முடியாமல் இருக்கிறது எனச் சிந்தித்தாலே அவர்களால் கொஞ்சமேனும் முன் நகர முடியும். இல்லைஅந்த அறியாமைச் சகதியில் அழுந்திக் கிடக்க வேண்டியதுதான். இவர்களின் இவ்வகைக் கட்டுரைகள், கருத்துகள் அதனால் அந்தக் கண நேர இன்பத்தின் பின் பொருட்படுத்தப்படுவதோ, மீள் வாசிக்கப்படுவதோ, எங்காவது அடிக்குறிப்பாகச் சுட்டப்படுவதோ சிலாகிக்கப்படுவதோ இல்லை. அவற்றின் கருத்தியல் அறிவுசூழல் பெறுமதி அவ்வளவுதான். அவை பின்னர் கட்டுரைத் தொகுப்பாக்கப் படுவதோ கூட இல்லை.  ஆழமில்லாத மேம்போக்கான கருத்துகளைச் சீராக அடுக்கிச் சொல்ல முடியாத இந்த  அரியவகை விமர்சனக் கட்டுரைகளின் கரையான் புற்றுப் பெருக்காகவே ஈழ இலக்கியச் சூழலின் பெரும் பகுதி இருக்கிறது. ஆயிரம் புற்றுகள் கொண்ட பெரும் புற்று.

கற்சுறாவின் கட்டுரைகளைப் படிக்கும் போதெல்லாம்; எனக்கு ஒன்று தோன்றிக் கொண்டே இருக்கும்;ஆதங்கமாக, புதிராக. இவ்வளவு அபாரமான கற்பனைத் திறன் உள்ள ஒருவரால் ஏன் நல்ல கவிதையோ, சிறுகதைகளோ எழுதமுடியவில்லை? நல்ல படைப்புகளைக் கொடுக்க அபாரமான கற்பனைத் திறன் மட்டும் போதாது; கொஞ்சம் நேர்மையும், சூழலைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் திராணியும் வேண்டும்.  அவரிடம்  அது இல்லை. அவரிடம் வெளிப்படுவது ஒருவகைத் தாழ்வுமனப்பான்மையே. ஒருமுறை அவரை நேரில் சந்தித்த போதே அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. கோர்வையாக் தன் கருத்தை முன்வைக்க முடியாத திணறலுள்ளவர். திணறல் கருத்து, சிந்தனைத் தெளிவின்மையால் வரும் திணறல். அந்தப் போதாமையைச் சரிக்கட்ட, பிறர் மீதான ஆவேசமான நுரை கக்கும் மடைமாற்றக் குற்றச்சாட்டுகளை கட்டுரைகளில் இலக்கிய விமர்சனம், அறச்சீற்றம் போல முன்வைக்கிறார். சாரு நிவேதிதா மீதான அந்தக் ‘கமெரா’ குற்றச்சாட்டே எவ்வளவு அபத்தமானது என்பதைப் புரிந்து கொள்ளமுடியாத சிறிய மூளை உள்ளவர். அப்படியானதொரு குற்றச்சாட்டை 20 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் சொல்லுவார் என்றால் அவரது முதிரா மனம் பெருந்தன்மையுடன் புரிந்து கொள்ளத்தக்கது. அதையே ஒருவர் 20 வருடங்களாகச் சொல்லிக் கொண்டே இருப்பார் என்றால் அவரது அந்தச் சிந்தனை வளர்ச்சியை எதைக் கொண்டு அளப்பது? ஆயுள் தண்டனையே 14(?) வருடங்கள் தான். சாரு நிவேதிதாவின் ஒட்டுமொத்தப் படைப்புக்களுக்குமான மொத்த விமர்சனமாக அந்தக் ‘கமெரா’ குற்றச்சாட்டு மட்டுமே கற்சுறாவிடம் உள்ளது. இதுவே இவரது கடந்த இருபது வருடங்களான விமர்சன நோக்கு.  அது கற்சுறாவின் வயிற்றுப்பாடு.  அதை அவர் ஏதோ இலக்கியச் செயற்பாடு, அறசீற்றம், விமர்சனம் என எடுத்துக் கொள்வதில் பிழை அல்ல.  ஆனால்  அவை விமர்சனங்களோ, கருத்துகளோ, குற்றச்சாட்டுகளோ பொருட்படுத்தக் கூடியவை அல்ல. இந்தவகைச் சீழ்ப் பொருக்குகள் ஈழ இலக்கியப் புண்ணின்  பகுதிகளாகச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த அறியாமையின் மூர்க்கர்கள் மத்தியிலும் இமிழ் தொகுப்பிற்குக் கிடைத்திருக்கும் ஆதரவும், பாராட்டுகளும், கதைத் தெரிவில் வழங்கப்பட்டிருக்கும் விரிந்த தளம் குறித்த சுட்டிக் காட்டல்களும் நான் ஒருபோதும் எதிர்பார்க்காதவை. இளவலாக இந்தச் சூழலை நம்பிக்கையுடன் பற்றிக் கொள்வதற்கான தும்பாக அவற்றைப் பற்றிக் கொள்கிறேன். புதுமைப்பித்தன் சொன்ன வாழையடி வாழையாக வரும் நல்ல இலக்கிய  வாசகர்கள், வம்பு நுரைகளுக்கு மேல் இலக்கியத்தின் உண்மை அக்கறையுடனும் தீராத தேடலுடனும் இருப்பவர்களை நோக்கி முன்வைக்கப்பட்ட இத்தொகுப்பு அடிப்படைகளே இல்லாத சர்ச்சைகளைத் தாண்டியும் உரியவர்களைச் சென்றடைந்திருப்பது பெரும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. அந்த வகையில் ‘இமிழ்’ ஓர் இனிய அனுபவமாக நான் இனி முன் செல்லவேண்டிய திசையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

இமிழ்

 ஈழ – புலம்பெயர் சிறுகதைகள்

கருப்புப் பிரதிகள் 2024

51 இலக்கியச்சந்திப்பு

பின்னிணைப்பு1 :

இலக்கியச் சந்திப்பில் என் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருந்தேன். இங்கே இன்னும் சற்று விரிவாக:

  1. யதார்த்தன் மீதான குற்றச்சாட்டுகள் பெப்ரவரி கடைசியில்தான் முகநூல் பதிவர்களால் வைக்கப்படுகின்றன. அதற்கு முன்பே தொகுப்புப் பணிகள் நிறைவேறிவிட்டன.
  2. மார்ச் 6 தேதி, ‘இமிழ்’ தொகுப்பின் அட்டைப்படம் 51வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தொகுப்பாசிரியர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. அட்டையில் 25 எழுத்தாளர்களின் பெயர்களும் அச்சிடப்பட்டிருக்கின்றன (யதார்த்தனின் பெயர் உட்பட). குழு உறுப்பினர்கள் யாருமே எழுத்தாளர்கள் தேர்வு குறித்து எந்த ஆட்சேபத்தையும் அப்போது தொகுப்பாசிரியர்களுக்கோ அல்லது பொதுவெளியிலோ தெரிவிக்கவில்லை.
  3. இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து மார்ச் 21ம் தேதியன்று, ‘இமிழ்’ குறித்த பொது அறிவித்தல் எழுத்தாளர்களின் பெயர்கள் உட்பட சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டன. தொகுப்பில் யதார்த்தன் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறித்து அப்போதும் இலக்கியச் சந்திப்புக் குழு உறுப்பினர்கள் யாருமே கருத்தோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. குழுவுக்கு வெளியேயும் வேறு யாராவது (நீங்கள் உட்பட) எங்காவது எதிர்ப்புத் தெரிவித்ததாக எனக்குத் தெரியவில்லை.
  4. இலக்கியச் சந்திப்புக்கு 6 நாட்கள் முன்னதாக மார்ச் 24ம் தேதியன்று, 51வது இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்தவர்களில் ஒருவரான விஜி, இமிழில் யதார்த்தனின் கதை வெளியிடப்படுவதற்கான கண்டனத்தை ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் வெளியிட்டார். அதாவது மார்ச் ஆறாம் தேதியன்றே எழுத்தாளர்களின் தேர்வு குறித்த விபரம் இலக்கியச் சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தும், மார்ச் 21ம் தேதியே விஜியின் எதிர்ப்பு முதன்முதலாக ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் பதிவு செய்யப்படுகிறது.
  5. அடுத்தநாளே தொகுப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு விளக்கமளித்தோம். பதிப்புப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன என்பதை அவர்களும் அறிந்திருந்தார்கள். எனவே விஜி உட்பட குழுவிலிருந்த எல்லோருமே எங்களது விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள். (இந்த விளக்கமும் ஏற்பும் உங்களுக்கு உப்புச் சப்பற்றதாகத் தோன்றுமானால்… உங்கள் உப்பு உங்கள் உரிமை!)
  6. இலக்கியச் சந்திப்பில் இமிழை வெளியிட்டு வைத்துவிட்டு ‘இந்தத் தொகுப்பு உருவாக்கம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று பதிப்பாசிரியரான நானும் பொறுப்பாசிரியரான பிரசாத்தும் அறிவித்தோம். கேள்விகளும் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்குக்கூட நாங்கள் பதிலளிக்காமல் நழுவிச் செல்லவில்லை. அவை முகநூலில் நேரலையாக ஒளிபரப்பாகின.
  7. ‘நூல் அச்சுக்குப் போவதற்கு முன்பாகவே யதார்த்தன் மீதான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்தால், தொகுப்பிலிருந்து யதார்த்தனின் கதையை நீக்கியிருப்பீர்களா?’ என்றொரு கேள்வி எங்களை நோக்கி கௌரி என்ற தோழரால் முன்வைக்கப்பட்டது. ‘யதார்த்தனது கதையைத் தொகுப்பிலிருந்து நீக்குவதா /சேர்ப்பதா என்ற முடிவை இலக்கியச் சந்திப்புக் குழுதான் எடுக்க முடியும்’ என்று பதிலளித்தோம்.

ஏனெனில், தொகுப்பில் இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்த எழுத்தாளரைச் சேர்ப்பது என்று முடிவெடுக்கும் உரிமையை மட்டுமே தொகுப்பாசிரியர்களுக்கு ஒருங்கிணைப்புக்குழு வழங்கியிருந்தது. ஓர் எழுத்தாளர் மீதான குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பதால், அவரது கதையை நிராகரிக்கலாமா வேண்டாமா என்பது ஒருங்கிணைப்புக் குழு கூடி முடிவெடுக்க வேண்டிய ஆழமான – நுட்பமான பிரச்சினை.

ஏதாவது ஒரு விடயத்தில் குழுவிற்குள் ஒரேயொருவர் எதிர்ப்புத் தெரிவித்தால் கூட அந்த விடயம் குறித்த நீண்ட விவாதங்களுக்குப் பின்பு ஒருமனதாக முடிவு எட்டப்படுவதே 51வது இலக்கியச் சந்திப்பின் பொதுப்பண்பாக இருந்தது. இலக்கியச் சந்திப்பு முடிந்த பின்பும்கூட இந்தக் கூட்டுச் செயற்பாட்டையும், சனநாயகப் பண்பையும் நாங்கள் கடைப்பிடித்தோம். இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ விற்பனையால் கிடைத்த பணத்தை எவ்வாறு கையாள்வது? இலங்கையில் ‘இமிழ்’ வெளியீடுகளை நடத்தும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது? போன்ற எல்லா விடயங்களும் ஒருங்கிணைப்புக் குழுவால் விவாதிக்கப்பட்டு முடிவுகள் ஒருமனதாகவே எட்டப்பட்டன. 51வது இலக்கியச் சந்திப்புக் குறித்த எல்லாப் பணிகளும் நிறைவேறியதால், ஏப்ரல் 6ம் தேதி ஒருங்கிணைப்புக் குழுவின் இறுதிக் கூட்டம் நிகழ்ந்து, இனிதே 51வது இலக்கியச் சந்திப்புக் குழு கலைக்கப்பட்டது.

பின்னிணைப்புகள் :

ஷோபாசக்தி கட்டுரை : இமிழ் : எழுத்தாளர்கள் தேர்வும் தொகுப்பும்

அ.ரமசாமி கட்டுரை : இமிழ் உலக இலக்கியத்துள் நுழையும் முயற்சிகள்

கிரிஷாந் கட்டுரை : வெட்டுக்கிளிகள், தவளைகள், ராட்சத நத்தைகள்

தர்மு பிரசாத் கட்டுரை : அரசியல் புலம்பெயரிகளால் பிற சமூகங்களுடன் ஏன் பண்பாட்டு ஊடாட்டம் செய்ய முடிவதில்லை?

திருஞானசம்பந்தன் லலிதகோபன் முகநூல் பதிவு  ப1

இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன், பகுதி 1

திருஞானசம்பந்தன் லலிதகோபன் முகநூல் பதிவு  ப2

இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன், பகுதி 2

Scroll to Top