2025 நவம்பர் தாய்வீடு இதழில் சயந்தனின் ஆதிரை நாவலுக்கு சு.வேணுகோபால் எழுதிய விமர்சனக் கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு : சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ஆதிரை நாவல். கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததுமே, ஈழப் புனைவுகள் மீதான தமிழக மூத்தவர்களின் வழமையான மைத்திரேயப் பார்வையே இதுவுமென்ற எண்ணமே உடனே வந்தது. கடந்த காலங்களில் வாசித்த விமர்சனங்களின் தரம் அப்படி. ஈழப் புனைவுகளில் புனைவுச் செறிவையோ, எழுத்தாளரின் தனித்த அகம் வெளிப்படும் மேலான படைப்பூக்கத்தையோ, மொழி நுட்பங்களையோ, ஈழத்திற்கேயான தனித்துவமான படிமங்கள், சொல்லாட்சிகள், காட்சிச் சித்திரங்களையோ, எழுத்தாள அகம் துலங்கும் நுண் தளங்களையோ தமிழக மூத்தவர்கள் பொருட்படுத்துவதில்லை. அல்லது மிக அரிதாகவே அவற்றை அடிக்கோடிடுகிறார்கள். (அவை அதிகமும் ஈழப்புனைவுகளில் இதுவரை வெளிப்பட்டிருக்கவில்லை என்பது வேறு விடயம்) அல்லது ஒரு புனைவில் இருக்க வேண்டிய அடிப்படையான இந்த இயல்புகளை ஈழப்புனைவுகளில் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்கு ஈழப் புனைவுகளில் சாட்சியம் போல போரின் அழிவுச் சித்திரம் மட்டும் இருந்தால் போதும். அது எத்தனை தட்டையான மொழியில், எளிமையான காட்சிச் சித்திரத்தில் இருந்தாலும் கிஞ்சித்தும் குறை இல்லை. அதனை ஒரு சாட்சியம் போலவோ ஓர் இனத்தின் அழிவாகவோ வாசித்து, அதனால் தங்கள் மெல்னுணர்ச்சி துலக்கமாகத் தூண்டப்பட அப்படைப்புகளைச் செவ்வியல் என்றும், சோக காவியம் என்றும் தயக்கமே இல்லாமல் முன்வைப்பார்கள். அந்தப் பார்வைகளில் உள்ள கரிசனை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளத்தக்கது. ஆனால் இலக்கிய விமர்சனமாக அது மிகவும் குறைவுபட்டது. வெறும் அனுதாப அபிப்பிராயங்கள் என்பதற்கு அப்பால் புனைவை, மொழியை, பண்பாட்டை கொண்டு படைப்புக்களை ஒப்பு நோக்கும் அகண்ட பார்வை வீச்சைக் கொண்டிருப்பவை அல்ல. ஒரு இளவலாக அந்தக் கரிசனை மட்டும் நமக்குப் போதாது. நாம் புனைவாக முன்வைக்க வேண்டிய போர் சித்திரங்களின், என்றைக்குமான கேள்விகளின், ஈழப் பண்பாட்டின் ஆழங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன.
ஆனால் சு.வேணுகோபாலுடைய ஆதிரைக் கட்டுரை வழமையான கரிசனைப் பார்வையை மட்டும் வெளிப்படும் ஒன்றல்ல. உண்மையில் கட்டுரையின் தலைப்புக்கும் அதன் உள்ளடக்கத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. தலைப்பு பிழையான முன் அனுமானங்களைக் கொடுக்கக் கூடியது. தலைப்பிற்கு முற்றிலும் நேர் எதிரான திசையில் கட்டுரையின் உடல் இருக்கிறது. ஆதிரை நாவலின் அடிப்படைப் போதாமைகள் பலவற்றையும் சரியாகவே சு.வேணுகோபால் சுட்டிக் காட்டுகிறார். யதார்த்தவாத நாவல் ஏன் கதை நிகழும் மண்ணுடன், அதன் பண்பாட்டுடன் ஆழ வேரூன்றியிருக்கவேண்டும், இரத்தமும் சதையுமான கதை மாந்தர்கள், அவர்களின் அக-புற உலகு நுண்தகவல்களாலும், பண்பாட்டுக் கூறுகளாலும் செறிவாக எழுதப்பட வேண்டும் என்பதைச் சுட்டுகிறார். அந்த வகையில் சு.வேணுகோபால் சமகால ஈழ நாவல்கள் மீதான விமர்சனச் சங்கை ஊதியிருக்கிறார். தொடர்ந்தும் நான் ஈழ யதார்த்தவாதப் படைப்புக்களின் போதமைகளாகச் சொல்லிவருபவற்றை சு.வேணுகோபாலும் சரியாக அடயாளம் காட்டியிருக்கிறார். தமிழகத்தில் இருந்து, அதிலும் குறிப்பாக மிக நல்ல யதார்த்தவாதப் படைப்புகளை எழுதிய ஒருவரிடமிருந்து இந்த விமர்சனக் குரல் வந்திருப்பது இன்னும் ஆரோக்கியமானது. நேர் பேச்சில் அடங்கிய குரலில் பலரும் ஈழப் புனைவுகளின் போதமைகளைக் கசப்புடன் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையில் அந்த விமர்சனங்களின் ஒரு பகுதி எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
சு.வேணுகோபாலின் தாய் வீடு கட்டுரையின் முதற்பகுதி பொதுவான ஈழப்போராட்டத்தின் வரலாற்றுச் சித்திரத்தைக் கொடுப்பது. அதை விடுத்து அதன் இரண்டாவது பகுதி விமர்சனத்தைக் கீழ் தருகிறேன்.

//ஒரு ஊருக்குள் நாட்டின் அரசியல் பிரச்சினைகள், கலவரங்கள், போர் அழிவுகள், திடீர் தாக்குதல்கள், மரணங்கள், வன்முறைகள் செய்திகளாக வந்து சேர்வது இயல்பு. அதன் பாதிப்பு வாழும் வாழ்க்கையில் புதிதாகத் தோன்றவும் செய்யும். பயணமோ, கல்வியோ, வாணிபமோ தடைப்படும். அச்சம் ஏற்படும். செய்திகளுக்குப் பின் ஏற்படும் நேரடிப்பாதிப்புகள் இவை போன்றவை நாவலில் செய்திகளாக வெளிப்படுத்திக் கொள்வது இயல்பானதுதான். அதேசமயம், ஒரு ஊரை களமாகக் கொண்டு இயங்கும் நாவலில் வரும் மக்களின் சில மரணங்கள், பாலியல் வன்கொடுமைகள், பயணங்கள், கடத்தல்கள், மோதல்கள் செய்திகளாகச் சொல் லப்படும்போது படைப்பின் வீரியத்தைக் குறைக்கின்றன. மலரின் முதல் காதல்; சிங்கமலை காட்டில் தலையற்ற முண் டாகக் கிடப்பது; சங்கிலி பன்றி தாக்கி வீழ்வது; போன்ற சில நிகழ்கால நிகழ்வுகள் செய்தியாகத் தரப்படுகின்றன. படைப் பாளி காட்சிகளின் வழியாக நிகழ்த்திக் காட்டியிருக்க வேண்டிய இடங்களைச் செய்தியாகத் தரும்போது படைப்பின் வீச்சு மங்கிப்போகிறது. கதாசிரியர் ஒரு வசதிக்காக ஒதுங்கிக் கொள்கிறார் போல் தெரிகிறது. போர்ச் சூழலில் ஒருவரின் தலை துண்டித்து கிடக்கலாம். இந்த மரணம் அதிர்ச்சிக்குரியதுதான். ஆனால் அந்த மனிதன் நம்மிடயே (நாவலில்) பிரிக்க முடியாத அம்சத்தில் வாழ்ந்திருந்தவராக இருந்தால் கூடுதல் ஆழமும் அழுத்தமும் பெறும். அப்படியான மாந்தர்களுக்குச் சாவுக்கு முன் கூடுதல் உறவு சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த கூடுதல் பகுதிகள்தான் நாவலில் இல்லை.
பல கதாமாந்தர்கள் நம் இதயத்தைத் தொந்தரவு செய்யாமல் போனதற்கு வாழ்வில் நின்று விரியவில்லை என்பதுதான் காரணம். மனிதர்களின் உறவுகள் போரினால் சிதைவுறுவதைப் படைப்பிற்கு நெருக்கமாகச் சொல்லிவிடுகிற சயந்தன் அவர்கள் புற உலகின் பிணைப்பினைத் துல்லியமாக உருவாக்கவில்லை. இந்தத் துல்லியத்தன்மை இல்லாததால் வரலாற்றின் செய்திகளுக்கு ஒரு கதை வடிவம் கொடுத்து எழுதப்பட்ட நாவலாக மாறும் இடங்கள் நிறைய இருக்கின்றன. வாழ்ந்து அனுபவப்பட்ட சம்பவங்களாக உருவாகாமல் மாதிரிச் சம்பவங்களாக இருக்கின்றன. தனிக்கல்லடியில் இவர்கள் செய்யும் உழவு, விதைப்பு, களையெடுப்பு, நீர்ப் பாய்ச்சுதல், அறுவடை, மாடுமேய்த்தல் என்ற நிலையில் நாவலில் அவை ஒரு இயக்கமாக உருவாகி வரவில்லை. காட்டுடனான உறவில் ஒரு பன்றிவேட்டை மட்டும் இருக்கிறது. அம்மக்களின் பொதுவான காட்டுறவு இல்லை. ஊரின் எல்லைச்சாமியாக நின்ற இத்தி மரத்தின் பிரமாண்டமும் அதனுடனான சிறியவர் பெரியவர்களின் உறவும் ஆழமாகத் துலக்கம் பெறவில்லை. பெரும்புயலில் இத்தி மரத்தின் வீழ்ச்சி அடர்த்தி கொள்ளவில்லை. ஒரு குறியீடாக இதனைக் காட்ட வந்தது போல இருக்கிறது. பிற்பகுதியில் அதே இடத்தில் அதன் வேரடியிலிருந்து தோன்றிய புதிய இத்தி மரமும் அப்படியே.
இதெல்லாம் மேலைநாட்டு இலக்கிய உத்திபோல இருக்கிறது. இத்தி மரம் ஆழமான பிணைப்பை கொண்டு எழவில்லை. சிங்களவர்களின் குடியேற்றம் அவ்வப்போது சொல்லப்படுகிறது. நிலத்தில் அவர்களின் குடியேற்றத்தின் துல்லியத்தன்மை இல்லை. இந்திய இராணுவம் வருகிறது. மலரைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கிறது. போய்விடுகிறது. அதன் நடமாட்டம் சிறப்பாக நாவலில் சித்திரிக்கப்படவில்லை. மலருக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகூட நாவலில் திட்டமிட்ட நிகழ்வாக வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகப் போகிறவர் என்று ஊகித்து விட முடிகிறது. மீனாட்சி பசு வைத்திருக்கிறாள் என்பதற்கு மேல் பசுவிற்கும் அவளுக்கும் தனித்துவமான எந்த உறவும் இல்லை. ஒரு நாள்கூட பசுவிற்கு அவர் தண்ணீர் வைக்கவில்லை. வரப்போரங்களில் அதனைப் பிடித்து மேய்க்கவில்லை. போர் உண்டாக்கிய சிக்கலின் ஊடே பாடசாலை இயங்குகிறது. அது எப்படி இயங்குகிறது, அதன் சிதிலம் எப்படி இருக்கிறது என்று இல்லை. இறுதிப் போரில் மக்கள் ஊர்விட்டுச் செல்லும் சித்திரங்கள், அவர்கள் தங்கும் இடங்கள், ஏரிகள், மரத்தடியில், நடையிடையே மிதித்த சேறுகள், பரல்கற்கள் எதுவுமே துல்லியம் பெறவில்லை. புற உலகம் சார்ந்த உறவுகளில் துல்லியத்தன்மை இல்லாத நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. ஒரு கிராமத்தின் அழிவு மிக நுட்பமாகப் பதிவு செய்யப்படவில்லை. அத்தார் – சந்திரா இருவரின் மணவாழ்க்கை, அவர்களின் கருத்தியல் முரண், லட்சுமணனின் இயக்க வாழ்க்கை சரியாக உருவாகவில்லை. சிங்கமலை தன் மகனை சந்திரா – அத்தர் தம்பதிகளிடம் ஒப்படைக்கிறான். இதற்கு வலுவான காரணம் ஏதும் இல்லை. மகளை வளர்ப்பவர் மகனை வளர்க்கமாட்டாரா? சரி அத்தார் வீட்டில்தான் அவனுக்கு என்ன வேலை. ஒன்றுமில்லை. வெள்ளையன் பாத்திரம் முன்பகுதியில் வலுக்கொள்ளவில்லை. குண்டடிபட்டு இயக்கத்திலிருந்து விடுபட்டு வந்தபின் அவனின் வாழ்க்கை அழுத்தம் கொள்கிறது. பின் பகுதி சிறப்பாக வந்திருக்கிறது. இயக்கத்திற்குள் அவனின் செயற்பாடு இல்லை. பின்பகுதியில் மிதிவெடி வைக்கும் வேலை என்று செய்தி குறிப்பாக சேர்க்கப்படுகிறது. அவனுடைய மெளனத்திற்குப் பெரிய அர்த்தம் இல்லை. சந்திரா – அத்தார் குடும்பமாக வாழும் இடத்திற்குத் தேடி வரும் சந்திராவின் தாயின் சாதிப் பற்று வெளிப்படும் இடம்தான் அழுத்தமாக இருக்கிறது.
‘ஆதிரை’ நாவலைப் படித்த நண்பர்கள் ஈழப்போரின் வலிமிகுந்த நாவல் என்றனர். இந்த நாவலில் வரும் பல பகுதிகள் ஏற்கனவே படித்திருப்பது போலவும் இருந்தது. ஒரே சந்தர்ப்பத்தில் ஈழப்போர்ச்சூழலில் எழுதப்பட்ட பல சிறு கதைகளைப் படித்தேன். சிறுகதைகளின் தீவிரம் என்னை ஆட்கொண்டன. உமா வரதராசனின் ‘அரசனின் வருகை’. சேரனின் ‘எல்லாவற்றையும் மறந்து விடலாம்’ கவிதை, மலைமகள், தமிழ் நதி, தமிழ்ச்செல்வியின் கதைகள், சு. வில்வரத்தினத்தின் கவிதைகள் என்று யாவற்றையும் படித்ததின் விளைவு ‘ஆதிரை’ நாவல் என்னை உலுக்கி எடுக்கவில்லை. போர்ச்சூழலில் எழுதப்பட்ட 50 கதைகளேனும் ஒரே சமயத்தில் படித்திருப்பேன். அந்த வாசிப்பு, அறிந்த விடயங்களைப் படிப்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தந்தது. இந்தக் கதைகளைப் படிக்காதிருந்தால் ‘ஆதிரை’ இன்னும் கூடுதலான பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தியிருக்கும்.
நாவலில் புனைவின் வெற்றிகூடிய இடங்களாக சங்கிலியின் பன்றிவேட்டை, ஆச்சிமுத்துக் கிழவி தன் பேரன் பேத்திகளைப் பார்த்து வர மூட்டையைச் சுமந்து செல்கிற பகுதி; இலங்கை இராணுவம் தனிக்கல்லடியில் இறங்கி 16 வயது தம்பியை அமுத்து சிதைப்பதும் அக்காவின் ஓலமும், நடராசனை இராணுவம் கொன்ற இடமும் வெள்ளையனுக்கு வரும் யானைக் கனவும் போர் உண்டாக்கிய மானிட துக்கத்தைப் புதிதாக வெளிப்படுத்தியிருக்கின்றன. உணவு விநியோகம் நடக்கும்போதே விழும் ஷெல்லுக்குத் தப்பி ஓடும்போது பேரனுக்காக உணவு வேண்டி நிற்கும் கிழவியின் துயரம்போன்ற சிறிய அளவிலான பல வெளிப்பாடுகளைச் சொல்லலாம்.
பெண் போராளி மலர், விநோதினி, ஆதிரை இவர்களின் உலகம் அசலாக உருவாகி இருக்கிறது. வெள்ளையன், சிங்கமலை போல மற்ற மாந்தர்கள் சிறப்பாக உருவாகவில்லை. ஈழப்போரின் இறுதிநாட்களில் மக்கள் பட்ட அவதிகளையும், அழிவுகளையும், ஆசைகளையும், அலைச்சல்களையும், இழப்புகளையும் சொல்லும் பகுதிகள் அழுத்தத்துடன் வந்திருக்கின்றன. போர் செய்த மானிட அழிவை இப்பகுதி பதட்டத்துடன் கொடுக்கிறது. இறுதி 200 பக்கங்கள் தமிழர்களின் கையறுநிலையைப் பெருந்துக்கத்தோடு விவரிக்கின்றது. நாவலின் பலமான பகுதி இது. இந்த பெரிய வரலாற்றுத் துயரம் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் முக்கியமான நாவலாக ஆகிறது.
ஈழத்தமிழர்களின் எழுச்சியும் வீழ்ச்சியுமான இந்த வரலாற்றுப் பின்னணியை ஒட்டி தமிழர்கள் பட்ட பேரவலங்கள், அபத்தங்கள், உணர்ச்சிகரமான தருணங்கள், நம்பிக்கை இழப்புகள், பற்றுக்கோடுகள் என வாழ்வின் பல்வேறு வெளிப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வாழ்க்கை இங்கு புனைவாகத் திரட்டப்பட்டிருக்கும் விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அசலான இலக்கியப் பிரதியாகவும் மாறுகிறது. சயந்தனின் படைப்பாளுமையின் தனித்துவத்தால் வடித்தெடுக்கப்பட்ட வெற்றி என்பதைவிட போர் உண்டாக்கிய பேரழிவின் விழைவால் உண்டான இலக்கிய வெற்றி எனலாம்.
நிகழ்வுகள் அனுபவமாகி, அனுபவங்கள் மொழியின் சாரத்தில் இறங்கி வெளிப்பட்ட இலக்கியத்துவமான, சில இடங்கள் இந்நாவலில் வருகின்றன. ‘வதை சாவைத் தட்டித்தட்டி திறக்க முயற்சிக்கும்’, ‘இந்திய நாய் என்றான் விஜேயரத்ன. முகத்தில் கணச்சலிப்பு, நான் புழுதி கிளறும் காலக்குதிரையொன்றில் காற்று நெஞ்சிலறைய என் மூதாதையரின் தலை முறைகளைக் கடந்து பயணித்து மீண்டேன்’, ‘ஒரு மின்னல் பளிச்சென்று வெட்டியது. தொடர்ந்து ஆகாயம் ஒரு பிரமாண்டமான கண்ணாடியைப் போல சிதறிப் பூமியில் கொட்டுவதைப் போல மழை பொழியும் சத்தம்”, என்று எழுதிய இடங்களைச் சொல்லலாம். விடலைப் பையனின் மனநிலையை ஒரு பன்றி வேட்டையை முன்வைத்து சொல்லியிருக்கும் இடம், ‘சங்கிலி மும்முரமாக வாரினார். பன்றி வெள்ளை நிற இளங்கன்றைப் போல உருமாறிக் கொண்டிருந்தது. தலையை வேறாக்கினான். முண்டம் லட்சுமணனை கலவரப்படுத்திற்று. அதுவரை அவனை ஆட் கொண்ட உற்சாகம் சடுதியில் காலடியில் வழிந்து தகித்த நிலத்தில் ஆவியாகிப் போனது. ‘பக்கத்து காணியில் செவலையின் வீடு அமைதியாகக் கிடக்கிறது. அவன் குடும்பத்தோடு கண்டிக்குப் போயிருக்கிறான். பிள்ளைகளை எதிர் பார்த்து காத்திருக்கும் கிழவியின் முகத்தைப் போல ஆளரவமற்ற அந்த வீட்டில் துயரம் படிந்திருந்தது’ என்று எழுதுகிறார்.
இம்மாதிரியான கவிதைக் கணங்களும், மனம் அடைகிற விநோதங்களுமான படைப்பு முழுக்க இயல்பாக வெளிப்படவில்லை. முதல் இரண்டு அத்தியாயத்தோடு இந்த மனவெழுச்சி மறைந்துவிட்டது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் சம்பவங்களைத் தொகுத்து செல்ல முனைந்துவிட்டது. மனவெழுச்சி ததும்ப எழுதப்பட்ட நாவலாக ‘அம்மா வந்தாள்’, ஜே.ஜே. சில குறிப்புகள்’ முதலானவற்றைச் சொல்லலாம். இம்மாதிரியான வரலாற்றைச் சார்ந்து எழுதப்படும் நாவலில் இம்மாதிரியான பார்வைத் தேவையும் இல்லை. சில இடங்களில் சொருகப்பட்ட பகுதிகள் செண்டிமெண்டாக இருந்தாலும் பொருத்தப்பாடாக இருக்கின்றன. சில இடங்களில் இயல்பாகவும் கூடி வந்திருக்கின்றன. போர்முனையில் மரத்திற்குப் பின் ஒளிந்திருந்த இரு குழந்தைகள் திடுக்கென ஒருவரைக் கண்டதும் பயந்து அப்பா கிழித்து தந்த வேட்டியின் துண்டு பகுதியை வெள்ளை கொடியாக அசைப்பதும், ஆளற்றுப்போன ஊரில் வயதான பூசாரி கடமையைச் செய்வதும், குழந்தைகளால் ஊதி ஒலி எழுப்பமுடியாத சங்கை வாங்கி மலர் ஒலியெழுப்புவதும் மனதிற்குள் புதிய மனவெழுச்சியை, துக்கத்தைக் கிளர்த்துகின்றன. இத்தோடு, தமிழ் நாவல் இலக்கிய வகைக்கே புதிய களத்தில் நின்று இயங்குவதால் இந்நாவல் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தமிழின் குறிப்பிடத்தக்க நாவல் வரிசையில் சயந்தனின் ‘ஆதிரை’யும் ஒன்று. //
சு.வேணுகோபால்
தாய்வீடு நவம்பர் இதழ்.

கட்டுரைத் தலைப்புச் சுட்டுவதுபோல ஆதிரை ஒரு `காவியம்` என்று முன்வைப்பதற்கான சிறு எத்தனம் கூடக் கட்டுரையில் இல்லை. யதார்த்தவாதப் போர் நாவலின் அடிப்படைக் குறைபாடுகளின் பட்டியல்களே அதிகம். நாவலில் காட்டுறவு, விவசாய நிலத்துடனான ஆழமான பிணைப்பு மிக மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பது. நாவல் களத்திற்குப் புறத்த நிகழும் முக்கிய பல சம்பவங்கள் வெறும் செய்திகளாக திணிப்புகளாக மட்டுமே எழுதிச் சேர்க்கப்பட்டிருப்பது. கதை காட்சிபூர்வமான சித்திரங்களை அளிப்பதற்கு பதில் செய்திகளாக நகர்வது. முழு வாழ்வனுபவமாக உரு மாறுவதற்கான புனைவுத் தருணங்கள், செறிவான சூழல் பண்பாட்டுச் சித்திரங்கள் மிக அரிதாக வெளிப்பட்டிருக்கும் புனைவே ஆதிரை. இந்த இயல்புகள் ஒரு யதார்த்தவாதப் புனைவின் அடிப்படைகள் என்பது என்னுடைய வாசிப்புப் புரிதல். கூடவே படைப்பாள அகம் திரளாத அல்லது தரிசனமோ இல்லை எழுத்தாளரை மீறிச் சென்று புனைவு வெளிப்படக் கூடிய இடங்களோ கூட இல்லாத அதாவது மறைபிரதி இல்லாத புனைவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதற்கு அப்பால் வாசக அகம் சென்று தொடுவதற்கோ கண்டடைவதற்கோ ஏதும் இல்லாத மிகவும் செயற்கையான கடதாசிப்பூ நாவலாகவே இன்று ஆதிரையைப் படிக்க முடிகிறது. அது உருவாக்கியளிக்கும் புனைவனுபவம் என்பது செய்திகளே. அதில் அத்தனை பக்கங்களில் எழுதி எடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் அலுப்பூட்டும், அக புற எழுச்சிகளோ தேடல்களோ கண்டடைதல்களோ இல்லாத செயற்கையான கதாமாந்தர்கள். நிலமும் மக்களும் துருத்தித் தெரியும், ஏன் அதில் கொடுக்கப்படிருக்கும் போர்செய்திகளுக்கு அப்பால் அதான் உருவாகியளிக்கக் கூடிய ஈழப்பண்பாடு வெளியென்பது என்ன? ஏன் இவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டியிருக்கிறது என்றால் அது அட்டையிலே செவ்வியல் எனும் குறிப்புடன் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆழமான திறனாய்வுக் கட்டுரைகளோ, நல்ல விமர்சனப் பர்வைகளிலானதோ முன்வைப்புகள் ஏதும் இன்றி அபிப்பிராயங்கள் என்ற அளவவில் இருக்கக் கூடிய முகநூல் குறிப்புக்களைக் கொண்டு ஈழப் போர்நாவல்களின் முகமாக முன் வைக்கப்படுகிறது. நான் இதுகாறும் படித்த செவ்வியல் நாவல்களில் எல்லாம் அவை எழுந்து நின்றிருக்கும் பண்பாட்டின் திரண்ட கூறுகளும், சத்தான பகுதிகளும் துல்லியமாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டிருந்தன. அவை பதிப்பாளர் அட்டையில் செவ்வியல் என்று அச்சடித்து வெளிட்டதால் அப்படிச் செவ்வியல் ஆனவை அல்ல. அல்லது முகநூல் அபிராயங்களின் மிகை மதிப்பீடுகளால், உணர்ச்சிக் கொந்தளிப்பால் அப்படி ஆனவையும் அல்ல. அவற்றின் உள்ளடக்கத்தில், ஆழமான வெளிப்படுத்தலில் ஒட்டு மொத்த பண்பாட்டின் திரண்ட அனைத்துக் கூறுகளையும் கோடி விதைகளாக சுமந்திருப்பதால் செவ்வியலாக முன்வைக்கப்படுபவை. அவ் விதைகள் பாலையில் விழுந்தால் கூட துளி நீர் கிடைத்தால் போதும் அவை சுமந்திருக்கும் இனத்தின் பெரும் பண்பாட்டுக் காட்டை செழிக்கச் செய்யும் வீரியமும் தகிப்புடனும் இருப்பதால் அப்படிக் கருதப்படுகின்றன.

ஒருவராலும் யதார்தத்தை அப்படியே அச்சொட்டாகத் திருப்பி எழுதிவிடமுடியாது. ஒரு சம்பவம் மொழியால் சொல்லப்படும் போதே அதில் புனைவின் அம்சங்களும் ஒட்டிக் விடுகின்றன. யதார்த்தம் என்பதும் இன்னொரு புனைவு ஏற்பாடு மட்டுமே. அது இலகுவானதென்பதால் இன்றும் பலரால் பல்லாயிரம் பக்கங்கள் எழுதிக் குவிக்கப்படும் புனைவுவடிவம். காந்தத் துண்டை சிறு கயிற்றில் கட்டி மண்ணுள் இழுத்துச் செல்வது போல. அதில் அந்த மண்ணின், பண்பாட்டின், மனிதர்களின் இன்னொரன்ன இயல்புகளின் செறிவான அம்சங்கள் புனைவில் ஒட்டி வருகின்றன. அவை யதார்த்தவாத நாவல்களில் வெளிப்படும் தன்மைக்கு ஏற்ப வாசகர்களுக்கு நிகர் வாழ்வாக மாறக்கூடிய நாவல் அனுபவத்தைக் கொடுக்கின்றன. ஆனால் ஒரு பெரும் நாவலில் அத்தகைய யதார்த்தத்தை மட்டும் எழுதியெடுப்பது போதுமானதல்ல. அல்லது தமிழின் நவீனத்துவ நாவல்கள், சிறுகதைகளில் வெளிப்படுவது போல அனுபவம் மிக செறிவாக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது மட்டும் போதுமானதல்ல. அதற்கும் அப்பாலான ஒரு தரிசனம் நாவலில் உருத்திரள வேண்டியிருக்கிறது. செறிவான வாசிப்பனுபவத்திற்கு, நிகர்வாழ்பனுபவத்திற்கு அத்தகையை நுணுக்கமான யதார்த்தவாதச் சித்தரிப்பு அவசியம். ஆனாலும் அதற்கு மேலும் படைப்பாள அகம் அப்படைப்பில் மின்னலடிக்க வேண்டும். அது அந்தரங்கமாக, நுணுக்கமாக, கொந்தளிப்பாக, சீண்டலுடன் வாசகருடன் உசாவ வேண்டும். இந்த இயல்பே தனித்தும், நுண்மையாகவும் ஒவ்வொரு புனைவைவும் நெய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. ஆதிரையில் அடிப்படையான செறிவான பண்பாட்டு கூறுகளுடனான யதார்த்தத்தையே எட்ட முடியவில்லை. அதனால் அது உருவாகிக் கொடுக்கப்படும் பல காட்சிச் சித்திரங்கள், சம்பவங்கள் செய்திகளாக, செயற்கையாக, கதைச் சுருக்கங்களாக எஞ்சியிருக்கின்றன. அதனாலேயே அதன் புனைவு வீச்சு மிக எளிமையானதாக, சராசரியானதாக இருக்கிறது.
சு.வேணுகோபால் தான் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஈழப் போர்ப் படைப்புக்களைப் படித்திருப்பதால் ஆதிரை கேட்ட அறிந்த கதை போலவும், தன்னில் தாக்கம் செல்லுத்தமுடியாத எளிமையான புனைவானுபவமாகவும் வெளிப்பட்டு இருக்கிறது என்கிறார். இந்த இடர் ஏன் நிகழ்கிறது? அல்லது அப்படியான கூறியது கூறல் போன்ற சராசரியான வாசிப்பனுபவத்தை ஆதிரை ஏன் அளிக்கிறது என்று சிந்தித்தால் அதன் மொழி, புனைவனுபவமாக மாற்றும் பண்பாட்டுக் கூறுகளின் போதமை புரியும். அது ஏன் தனித்துவமான தனித்த புனைவாக தன்னை வெளிப்படுத்த முடியாமல் கேட்ட அறிந்த கதைகளின் தொகுப்பாக இருக்கிறது? ஐம்பது புனைவுகள் படித்த அவருக்கே ஆதிரை உருவாக்கும் புனைவுவெளியால் தாக்கமோ, அல்லது போரின் அழிவுச்சித்திரங்களால் உலுப்பலோ நிகழவில்லை என்றால் அந்தப் போர்ச்சூழலில் வாழ்ந்த நமக்கு ஆதிரை கொடுக்கும் புனைவனுபவம் எப்படியானதாக இருக்கும்? முதிராத, எளிமையான லெளகீக முரண்களை இன்னும் எளிமைப்படுத்தும், மேலோட்டமான வாழ்க்கைப் பார்வை, தட்டையான காட்சிச் சித்திரங்களைக் கொடுக்கக் கூடிய புனைவாகவே இருக்கும். இருக்கிறது. செயற்கையான மாதிரிக்கதையாக நிலமும் பண்பாடும் மக்களின் மனநிலையும் துலங்கிவராத அழுத்தமான உள புற மாற்றங்கள் நிகழாத களிமண் பொம்மைகளிலாளான கதைமாந்தர்கள் வெளிப்படுகிறார்கள். அவர்களுக்கும் புறச்சூழலுக்கும் ஏன் போர் நிலத்துக்கும் கூட அத்தனை ஆழமான பிணைப்புகள் இல்லை. இழப்பு, புறவயமான போர் அழிவு எனும் சித்திரத்தை எடுத்துவிட்டால் எஞ்சுவது எளிமையான சில ஆண் பெண் உறவுச் சிக்கல்கள். ஆழமோ உள்ளோட்டமோ இல்லாத வாழ்க்கைப் பார்வை. வரலாற்றுணர்வு துளியும் திரளாத செயற்கையான புனைவுவெளி.
கிட்டத்தட்ட 700 பக்களிலிலான நாவலில் கடைசி 200 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் போரின் அழிவுச் சித்திரங்களால் மட்டுமே அது முக்கியமான படைப்பு என்கிறார் சு.வேணுகோபல். செவ்வியல் அல்ல கவனிக்கத்தக்க முக்கிய படைப்பு, அவ்வளவே அதன் இடம். அது ஓரளவுக்கு மட்டுமே உண்மையும் கூட. ஆனால் ஆதிரையில் இருக்கும் சிக்கல் இரண்டு விதமானது. ஒன்று, அது யதார்த்தவாத நாவல்கள் கொண்டிருக்க வேண்டிய அடிப்படைகளான நிகர்வாழ்வனுபவமாக்கும் புனைவுத்தருணங்கள் அற்று வெளுறிக் கிடக்கிறது. மற்றது போர் அழிவுச் சித்திரங்கள் எல்லாம் மிகப் புறவயமான அழிவுகளாகவே எழுதப்பட்டிருக்கிறது. அதனால் அவை இன்று படிக்கும் போது நெகிழிக் காகிதங்களாகவே ஒவ்வொரு இதழாக ஒட்டி எடுக்கப்பட்ட உணர்வையே கொடுக்கிறது. இந்த இரு அடிப்படைச் சிக்கல்களும் நாவல் முழுவதுமே இருப்பதால் அது கதைக் கொத்துக்களின் தொகுப்பாகவே இருக்கிறது. அதில் இன்னும் எவ்வளவும் எழுதிச் சேர்த்தபடியே செல்ல முடியும். நெடும் கதைபோல நீண்டு கொண்டிருக்க முடியும். போர் மனநிலை, நெருக்கடி, வீழ்ச்சிகள், தோல்விகள், அழித்தெடுப்புகள் எல்லாம் வெறும் செய்திகள் தான். அதன் போதிருக்கும் அலைபாய்தல்கள், இலட்சிய வீழ்சிகள் அனுதாபம் என்ற எல்லைக்கு அப்பால் செல்வதில்லை. அல்லது அவை உருவாக்கும் தீவிரமான மன ஓட்டங்கள், அக-புற நெருக்கடிகள் நாவலில் தொட்டுக் கூடப் பார்க்கப்படவில்லை. அதனாலே தான் ஆதிரை அதில் இருக்கும் கடைசி 200 பக்க அழிவுச் சித்திரத்துக்கு அப்பால் ஒரு நாவலாக அல்லது புனைவனுபவமாக விரியமுடியாமல் இருக்கிறது. வெறும் அனுபவங்களின் எளிமையான முரண் தொகுப்பாக எஞ்சியிருக்கிறது. இதில் வெளிப்பட்டிருக்கும் அழிவுச் சித்திரம் கூட நாவலுக்கு ஒட்டாத தன் உதிரி நிகழ்வுகளின் தொகையாகவே பின்னிணைப்பாக இருக்கிறது.

போரினால் நிகழும் புற அழிவையோ, மனிதர்களின் இழப்பையோ ஒரு புனைவில் புறவயமாக நிகழ்த்திக் காட்டுவதென்பது அவ்வளவு கடினமானதோ மகத்தானதோ பணி அல்ல. நல்ல போர்நாவல் அந்த அழிவுச் சித்திரங்களை மட்டும் திகட்டத் திகட்ட சித்தரித்துக் கொண்டிராது. அல்லது போரின் முன்னால் கைவிடப்படவர்களின் கண்ணீரை மட்டும் அது உருப்பெருக்கிக் காட்டாது. அது மட்டுமல்ல போர் வாழ்க்கை. இந்த சமானியரின் கண்ணீர் போர் யதார்த்தம் என்றாலும் அது போரை அதன் தீமைகளின் தீவிரத்தை அதன் ஆவேசமான அழித்தெடுப்பை மெத்த இனத்தின் நிர்கதியையும் சித்தரித்தெடுப்பதற்குப் போதுமானதல்ல. போரில் நசிபடும், உருத்தெரியாமல் அழிந்து போகும் சமானியர்களின் வாழ்க்கை திகட்டத் திகட்டவே பலராலும் எழுதப்பட்டிருக்கிறது. அதன் வெம்மையில் மட்டும் போரும், வன்முறையும் எதிர்க்கப்படுவதில்லை. போர் என்றல்ல எந்தவகை இலட்சியவாதப் போராட்டங்களின் மொத்த எடையுமே சமானியர்களையே நசித்தழிக்கும். அவர்களோ ஒரு வகையில் அதன் எரி சக்தியும் கூட. ஆனால் அவற்றை சித்தரிப்பதூடாக போரின் கயமையை, தீவிரத்தை, அழிவின் சிறு பகுதியேனும் எழுதிவிட முடியாது. நிர்க்கதியின் கண்ணீரைக், கழிவிரக்கத்தை மட்டுமே அதனால் உருவாக்க முடியும். போரின் அக புற வீழ்ச்சிகள், போர், போர் மனநிலை வாழ்வின் ஒவ்வொருத் தளத்திலும் நிகழ்த்திய ஊடுருவல்கள், தாக்கங்களை நுட்பமாக எழுதியெடுப்பதே பெரும் சவால். போரென்பது மனித நாடகீயத் தருணங்கள் நிகழும் உச்ச கணம், களம். அதில் மனிதனின் கீழ்மையின், தியாகத்தின் எல்லைகளும் அவன் அடைந்த இத்தனை நூற்றாண்டு நாகரிக வளர்சிகளும் ஏன் அறிவின் கண்களும் குருடாகி வன்முறையும் காம குரோதங்களும் முளைத்தெழுந்தபடியே இருக்கும். போரில் மனிதன் தன் புராதன மிருக இயல்புடன் ஆங்காரமாக வெளிப்படுகிறான். நெறிகள், கட்டுப்பாடுகள் இல்லாதவனாகின்றான். அவன் ஆற்றலும் விருப்பும் எல்லையற்று விரிகிறது. அதன் தீவிரத்தை, தீமையை, அழிவை நாம் ஒவ்வொரு போர்க்காலங்களிலும் அனுபவித்தபடியே இருந்தோம். தேசியத்தின், மண்மீட்பின் பெயரால். அந்தவை தீவிரமோ, வாழ்க்கை நோக்கோ இல்லாமல் போரின் புறத்திலிருக்கும் அழிவுகளைச் சித்தரித்துக் கொண்டிருப்பதால் தான் ஈழப் புனைவுகள் குறிப்பாகப் போர் படைப்புகள் ஒர் எல்லைகும் மேல் அழிவின் சித்திரம் என்பதற்கு அப்பால் நாவல்களாக, புனைவுகளாக பெரு விரிவு கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. அவற்றை வாசிப்பவர்களும் கூட அந்த அழிவுச் சித்திரத்துக்கு அப்பாலான வாழ்வை நெருக்கடிகளை வீழ்ச்சிகளை போரின் தீவிரத்தை கவனிக்க முடியாதவர்களாகிறார்கள். போர் முடிந்து 16 வருடங்களின் பின்னரும் கூடப் போரின் கரிய நகக் கீறல் தடம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இருக்கிறது. கரிய பேரிருப்பாக. திரண்ட மேகமாக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அது பிடித்தாட்டுகிறது. இன்னும் உடலில் எஞ்சியிருக்கும் ஒரு செல் துண்டு போல அதன் வீச்சு அத்தனை அழுத்தமாக, அதன் சவுக்கு நுனி அத்தனை துல்லியமான இரத்த விளறலாக ஒவ்வொருவர் வாழ்விலும் சுழன்றபடியே இருக்கிறது. ஒரேவகைப் புறவயமான அழிவுச் சித்திரங்களுக்குள் குறுகிக்கிடக்கும் இந்தப் படைப்புக்களால் போரின் இத்தகைய குரூரம் நோக்கி நகர முடியாமைக்கான காரணமும் அதுதான். தனித்த அகம் நோக்கி நுணுகிச் செல்வதற்குப் பதில் பெருவட்டான அழிவுச் சித்திரம், ஒரேமாதிரியான கதைகள் என போர் கொடுத்த நெருக்கடி அல்லது அழிவின் புறவயமான ஒரு சிறு தீற்றல் மட்டும் ஆதிரையில் வெளிப்பட்டிருக்கிறது. அதற்கு அப்பால் அது உருவாக்கியிருப்பவை ஒரு வகை மாதிரிக் கதைமாந்தர்கள் நிலமும் வாழ்க்கையும் மட்டுமே. மிகவும் செயற்கையான வாழ்க்கைத் தருணங்கள் மட்டுமே. ஈழத்தின் போர் நிலத்திற்கும் அதற்கும் எந்த விதமான ரத்தமும் சதையுமான பிணைப்பும் இல்லை.

ஆதிரையில் புனைவனுபவம் சராசரியாக வெளிப்பட்டிருக்கும் போது அதனை ஒரு வகைப் பண்பாட்டு ஆவணமாகப் படிக்க முடியுமா? கே.டானியல் படைப்புக்கள் சோசலிச யதார்த்தவாத அலை வடிந்து தடமாக எஞ்சிவிட்ட இன்றும் கூடப் படிக்க முடிகிறது. படிக்கப்படுகிறது. அதில் உணர்வெழுச்சியும் பெரும் கனவுமாக எழுதிச் சேர்க்கப்பட்ட ஒரு லட்சியவாத எதிர்பார்ப்புக்கும் அப்பால் ஒரு பண்பாட்டு அகம் உயிர்ப்புடன் தகித்திருப்பதே அதற்கான காரணம். சடங்குகள், வாழ்க்கைமுறை, சாதிய பழக்க வழக்கங்கள் என்று ஒரு பண்பாட்டின் அடித்தளக் கூறுகள் அனைத்தையும் நுண் தகவல்களால் உருவாகியளித்திருக்கிறார் கே.டானியல். அவற்றிலிருந்து அந்தக் காலகட்ட யாழ்பாணத்தை விரித்தெடுக்க முடியும். ஆனால் ஆதிரையில் அந்தவகை நுண் தகவல்களிலான புறவுலகு உருவாகப்படவேயில்லை. அது மிக மேலோட்டமான ஈழப் பொதுச் சித்திரத்தையே நாவல் முழுவதும் கொடுக்கிறது. எளிமையான பண்பாட்டு உசாவல் கூறுகள். உறவுகள். விவசாய வழிமுறைகள். அ.பலமனோகரனின் நிலக்கிளியோடு ஒப்பிட்டால் கூட அது தன் மிகக் குறைந்த பக்கங்களில் திரட்டியளித்த வன்னியின் தண்ணிமுறிப்புக் காடுகளில் காடழித்து விவசாயம் செய்யும் வழி முறை, காற்றின் திசை, காற்றின் வெப்பம், தீவைக்க வேண்டிய பருவம், பருவகாலங்கள், விவசாய வாழ்கை, வேட்டை என்ற பல தளங்களிலும் புறசூழல், பண்பாட்டு அக விழிப்படையக் கூடிய தகவல்களை புனைவனுபவமாக்கியிருப்பதை உணர முடியும். அந்த நாவலின் தொடக்கமாக இருக்கும் கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்களில் முரலிப்பழங்கள் பழுத்துக் கனிந்து அழுத்தமான மணம் வீசும் தண்ணிமுறிப்புக் காட்டில் எருதுகள் பூட்டிய வண்டியில் பதஞ்சலி இளைமைத் துடிப்புடன் செல்லும் சித்திரமே சட்டென்று வன்னிக் காடுகளின் அக எழுச்சியை உருவாக்கிவிடக் கூடியது. அல்லது நடு இணைய இதழில் வந்த தமிழ்கவியின் காடுலாவு கதையில் மிக நுணுக்கமாக நுண் தகவல்களாலும், வாழ்க்கை அனுபவங்களாலும் எழுதப்பட்டிருக்கும் வவுனிக்குளத்தின் ஆரம்ப கால வாழ்கையின் அழுத்தமான சித்திரம். அது 1950களின் வன்னியின் சித்திரம். கொக்குகளை கொட்டன்களால் அடித்து சமைக்கும் சித்தரிப்பு, கொக்கு இறைச்சிக்கும், கோழி இறைச்சிக்குமான வேறுபாடு. அல்லது பன்றி வேட்டையின் சித்தரிப்பு, சுட்ட ஈரலை படைப்பது என அது உருவாக்கியளிக்கும் சித்திரம் ஒரு வனமகளின் சொலில் திரண்டெழும் புனைவனுபவமாகின்றன. அல்லது பிரமிளின் லங்காபுரி ராஜாவில் வெளிப்பட்ட ஈழ நிலத்துக்கே உரிய கரிய பேரிருப்பாக இருந்து கண்காணிக்கக் கூடிய யானையின் சித்திரம். அதன் அழிப்பு நிகழ்வுகளூடான காட்டுச் சூழல் விவரணைகள் எல்லாம் குறைந்த சொற்களில் அத்தனை அழுத்தமாக எழுதியெடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். அவற்றில் வெளிப்பட்டிருக்கக் கூடிய அந்தப் பண்பாட்டு வெளியென்பதே அபூர்வமானவை. தனித்த எழுத்தாள அகம் வெளிப்படும் நுண் தகவல்களினால் ஆனவை. அல்லது மு.தளையசிங்கத்தின் தனி ஒரு வீடு நாவலில் உருவாகிவந்திருக்கும் புங்குடுதீவுச் சித்திரம். சமகால நாவல்களான கிரிசாந்தின் கல்விரல் நாவலில் வரும் கல்லெடுத்தான் குளம். யதார்த்தனின் நகுலாத்தை நாவலில் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு உசாவல்கள், வன்னிக் காடுகளின் அழுத்தமான சித்திரம். இவை எல்லாவற்றிலும் வெளிப்படக் கூடிய பண்பாட்டு அகம் என்பது மிக நுண் தகவல்கள், தனித்த அகம் வெளிப்படும் தருணங்களினாலும் எழுதியெடுக்கப்பட்டிருப்பதால் அவற்றில் அழுத்தமான பண்பாட்டு வாசிப்பனுபவத்தை அடையமுடியும். ஆனால் ஆதிரையில் போர் அழிவுச் சித்திரம் என்ற திரைமறைவிற்கு அப்பால் நுண் தகவல்களிலான உலகோ, கதாபாத்திரங்களின் தீவிர உணர்வெழுச்சிகளோ, அகப் போராட்டங்களோ, போரின் நாடகீயத் தருணங்களோ மருந்துக்கும் தொட்டுக் கூடப் பார்க்கப்படவில்லை. தியாகத்தின் எளிமையான நெகிழ்ச்சி என்பதற்கு அப்பால் மனித அகம் கொந்தளிக்கும் லட்சியவாதத்தின் கணலோ, போர் உள நெருக்கடிகளோ எழுதப்படவேயில்லை. இஸ்ரேலிய எழுத்தாளரான டேவிட் கிரஸ்மனின் நிலத்தின் விளிம்புக்கு நாவல் படிக்கும் போது ஈழ நாவல்களில் செயற்கையாகவும் மிகையாகவும் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கும் போரின் அழிவுச் சித்திரத்தின் அபத்தத்தை உணர்ந்து கொள்ள முடியும். அந்த நாவலும் கிட்டத்தட்ட 800 பக்க நாவல். அது அந்த 800 பக்கங்களிலும் சித்தரிப்பது நால்வரின் வாழ்கை. குறிப்பாக இரு ஆண் பிள்ளைகளின் தாயான ஓர் இஸ்ரேலிய அன்னையின் வாழ்க்கை. இத்தனைக்கும் அது போரை நிகழ்த்தும் ஆதிக்கத்தரப்பிலிருந்து எழுதப்படிருக்கிறது. அத்தனை நுணுக்கமாக போரின் மன நெருக்கடியை, அழிவை, வீழ்ச்சியை எழுதிச் செல்கிறது. நால்வரின் வாழ்வும் இரு தேசங்களின் பகைமையின், தீராத குருதிவேட்கையின் கதையாக விரிகிறது. அங்கே நேரடியான போரின் அழிவுச்சித்திரம் அறவே இல்லை. ஆனால் அது கொடுக்கும் அக நெருக்கடிகள், அழுத்தங்கள், மன மாற்றங்கள், போலித்தனங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அது அளிக்கக் கூடிய மிகை பதட்டம், சந்தேகம், போலியான தேசிய உணர்வுகள் துல்லியமாகவே எழுதப்படுகிறது. அது குரூர அழிவின், குருதியின் சித்திரத்தை மிகை வன்முறையின், இறப்பின் சித்திரத்தை படைப்பூக்கத்துடன் நிகர் வாழ்வனுபவமாக்கும் நுண் தகவல்களிலாலான புனைவனுபவமாக எழுதியெடுக்கிறது. அத்தகைய நுட்பமும் படைப்பூகமும் மிக்க இடம் நோக்கி நகர வேண்டியதே நம் புனைவுகளின் தற்போதைய தேவை.

***
சு.வேணுகோபாலின் கட்டுரைக்கான இணைப்பு : தாய்வீடு நவம்பர் இதழ்
