ஈழ இலக்கியச் சூழலில் இலக்கியம் தவிர்ந்த, ஒரு புனைவின் அரசியல் உள்ளடக்கமும், புனைவில் துருத்தும் கருத்துகள் குறித்த உரையாடல்களுமே அதிகம் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக இருக்கிறது. கூடவே ஈழத்தவர் ஒரு புனைவின் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்களையும், கேள்விகளையும் இடைவிடாது எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதுவே இலக்கியத்தை அளவிட மதிப்பிட இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு அளவுகோல். அதுவே மூளைச் சோம்பலர்களின் இலகுவான வழிமுறையும் கூட. ஒரு புனைவில் உண்மையை தேடுபவர்கள் தமது கொஞ்ச அனுபவங்களுடனான சிறிய மூளையால் புனைவின் பிரமாண்டத்தைத் தொட்டுப் பார்த்து அச்சம் கொள்கிறார்கள். தங்களது கோழி முட்டை வாழ்பனுபவத்தைக் கழிவிரக்கத்துடன் புனைவில் இரும்புக்கவசமாகப் போர்த்திப் பார்த்துத் திகைக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு மேலாகப் புனைவு குறித்து எழுதும் டி.சே.தமிழன் ஆனாலும் சரி நேற்று இலக்கியம் வாசிக்க வந்த புதிய ஈழத் தமிழன் ஆனாலும் சரி அவர்களுக்கு தெரிந்த ஓரே ஒரு வழிமுறை தகவற்பிழை கண்டுபிடிப்பது மட்டும் தான். ஈழத்தவர்களின் இந்த அரியவகை பிழை கண்டுபிடித்து அந்தத் தகவற் பிழைகளை இலக்கியச் சதியாகவும் ஒட்டு மொத்தப் புனைவையும் நிராகரிக்க முன்வைக்கும் முதன்மைக் காரணங்களாகவும் சுட்டும் இந்தப் போக்கு இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. இது காலங்காலமாக எங்களின் மரபணுவில் இருக்கும் குறைபாடு.
சுஜாதா ஒரு முறை சிவரமணி கவிதைகளை ஆழம் காண முடியாத நிலவறைக் கிணறு என்று கற்றதும் பெற்றதுமில் எழுதியிருந்தார். உடனே ஒட்டு மொத்த ஈழத் தமிழினமும் இரத்தமும் துடித்து, பதைபதைத்து அது நிலவறை கிணறு இல்லை ஆழமே காண முடியாத நிலாவரைக் கிணறு என்று பிழைதிருத்தி கொந்தளிப்புடன் கடிதம் அனுப்பி இருந்தார்கள். விகடன் தபாற்பெட்டி வெளிநாட்டு, இலங்கைத் தபால்களால் நிரம்பி வழிந்தது.
// இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப்போல்
மீண்டும் ஒரு நண்பன்
தொலைந்து போகக் கூடிய
இந்த இரவு
எனக்கு மிகவும் பெறுமதியானது//
என்பது போன்ற மிக நல்ல வரிகளை எழுதிய சிவரமணியை பொதுவெளியில் அறிமுகப் படுத்தியது குறித்து சிறு கவனமோ பாராட்டோ இல்லாமல் எல்லோரும் நிலவறைக் கிணற்றைப் பிடித்துத் தொங்குகிறார்கள் என சுஜாதா நக்கலாக அடுத்த இதழில் பதில் எழுதியிருந்தார். இதுதான் அசல் ஈழத்தமிழ் இனம்.
இந்தப் பிழை கண்டுபிடித்து தங்கள் அறியாமையைப் பறைசாற்றிக் கொள்ளும் இலக்கிய வாசிப்பைத் தொடக்கத்தில் ஈழ இலக்கியத்தின் தனித்துவமாகவும் சத்தான பகுதியாகவும் எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் மிக மிகத் தவறு. இலக்கிய விமர்சனமோ, அல்லது பகிர்வோ குறித்து ஒரு பிரபலமான கூற்று இருக்கிறது. ஒரு விமர்சனம் அந்தப் படைப்புக்கு மேலும் சிறந்த வாசிப்பை அளித்திருக்க வேண்டும். அப்படி அளித்திருந்தால் மட்டுமே அது பொருட்படுத்தத்தக்க விமர்சனம். அப்படி மேலும் சிறந்த வாசிப்பை அளிக்கக்கூடிய விமர்சனம் அப் புனைவின் பண்பாட்டு, கலை, வரலாற்றின் இருள் முடிச்சுகளின் மீது வெளிச்சம் மேலும் சிறந்த வாசிப்பை அளித்திருக்கும். அதுவல்லாத பிழை கண்டுபிடிக்கும் இந்த அரியவகை விமர்சனங்கள் விமர்சனங்களோ அல்லது இலக்கிய உரையாடல்களோ அல்ல இவை தாழ்வுச்சிக்கல் பொச்சரிப்புகளில் உழல்பவர்களின் ஃபேஸ்புக் உளறல்கள் அன்றி வேறு அல்ல. அவை ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்பதற்கு அப்பால் பொருட்படுத்த வேண்டியதுமில்லை.
உண்மையில் இவர்களால் ஏன் இலக்கிய உரையாடல்கள் செறிவாகச் செய்ய முடியவில்லை என்று பலமுறை எண்ணிப் பார்த்திருக்கிறேன். ஒன்று அவர்களுக்கு புனைவுகள் குறித்த அல்லது இலக்கியம் அதன் தொடர்புறுத்தும் வழிமுறைகள் குறித்த சரியான புரிதல் இல்லை. அது குறித்த தேடல் இல்லை. அப்படியான சொந்த கண்டைதல்களுக்கான சிறு தடையங்களும் அவர்களது விமர்சனக் குறிப்புகளிலோ, அனுபவப் பகிர்வுகளிலோ வெளிப்படுவதில்லை. குறிப்பாக டிசே தமிழன், கற்சுறா போன்றவர்களின் இலக்கியக் கருத்துகள் ஃபேஸ்புக் உளறல்கள் மட்டுமே. ஏன் அவர்கள் இத்தனை நீண்ட காலம் இலக்கியத்தில் செயற்பட்டும், கட்டுரைகள், வாசிப்புச் செய்தும் காத்திரமான குரல்களாக மாறமுடியவில்லை. ஏன் அவர்களால் ஃபேஸ்புக் வட்டத்தை விட்டு பொருட்படுத்தும்படி ஒரு வரியோ புனைவோ எழுத முடியவில்லை. எழுத முடியவில்லை என்பதல்ல அவர்களால் ஒரு போதும் எழுத முடியாது. காரணம் ஒன்று அவர்களிடம் புனைவை அணுகுவதற்கான திறந்த மனநிலை இல்லை. அவை குறித்த தேடலோ, சொந்தப் பார்வையோ உருவாக்கிக் கொள்ளும் அறிவு உழைப்போ இல்லை அல்லது அவர்களது எழுத்தில் அது இதுவரை வெளிப்படவில்லை.
ஒருவர் கற்சுறா போல அடிமுட்டாளாக, அவதூறராக இருப்பதில் பெரிய பிழையோ தவறோ இல்லை. அப்படிப் பலரும் பிறந்தும் வாழ்ந்தும் மடிகிறார்கள் தான் அல்லது வாசிப்பின், எழுத்தின் ஆரம்பத்தில் அப்படி இருப்பதும் இயல்பானதுதான். ஒவ்வொருவரும் அப்படி இருந்து தமக்கான தேடல் உழைப்பின் வழி தங்கள் இலக்கிய நோக்கை பார்வையை விரித்துக் கொண்டு மேல் எழுந்தவர்கள் தான். ஆனால் ஒருவர் 30 வருடங்களாக இலக்கிய முட்டாளாக இருப்பதும், அதை ஏதோ புரட்சி வீரம் என்பதும், ஈழ இலக்கியத்தை மீட்கும் குரல் தன்னுடையதுதான் எனப் பாவனை செய்து வாய் நுரைதள்ள அவதூறுகளை அள்ளிவீசுவதும் கற்சுறாவிற்குரிய தனித்துவம். வெறும் ஊகங்கள் வழி எதனையும் நிறுவி விட முடியாது. கூடவே உரத்து ஒலிப்பதால் அல்லது தனித்து ஒலிப்பது போல பாவனை காட்டுவதால் அது உண்மைகளும் ஆகிவிடாது.
முக்கியமாக ஒரு புனைவின் செம்மையாக்கம் தொடர்பான தங்கள் அறியாமையை அவதூறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவை கற்சுறாவுக்கோ அல்லது டி.சே.தமிழனுக்கான பதில்களோ இல்லை. அவர்களது இலக்கியப் புரிதலும், புனைவு வெளிப்பாடும் அவ்வளவுதான். அவர்கள் இனி திருந்தவோ, முன்னேறவோ துளியும் இடம் இல்லை. டி.சே தமிழனால் தட்டையான மொழியில் மெக்ஸிக்கோ மாதிரியான நாலாந்தர நாவல் மட்டுமே எழுத முடியும். அதற்கு நாவல் செம்மையாக்கம் தொடர்பான சிக்கல்கள் இல்லை. எழுதி அப்படியே பிரசுரத்துக்கு அனுப்பிவைத்து எழுதிய புத்தக எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டிக் கொள்ள வேண்டியதுதான். கற்சுறாவுக்கு அந்தக் கொடுப்பினை கூட இல்லை. அவருக்கு இந்த வாழ்க்கையில் கிடைத்திருப்பது தவளைக்கத்தல் மட்டும்தான். ஆனால் இவர்களது வட்டத்துக்கு வெளியில் ஒரு நல்ல வாசிப்புச் சூழல் இருக்கிறது. அது ஆனைக்கோடரி வெளிவந்த போதும், கொடிரோஸ் வெளிவந்த போதும் நேரடியாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆக நான் பேச விழைவது அந்த கண்ணுக்கு தெரியாத ஆனால் கவனித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுடன். அவர்களுக்கு ஒரு சில தெளிவுகளை அளிக்க வேண்டுமென நினைக்கிறேன். அது கடமையும் கூட.
சதி செய்து தனி ஒருவரால் இலக்கியத்தில் எதனையும் நிறுவவோ, போலியாக முண்டு கொடுத்து நிறுத்தவோ முடியாது. ஒருவரின் இலக்கிய இடம் வாசகர்கள் என்ற பெரும் திரளின் மெளன ஏற்பின் வழிமட்டும் உருவாகி வரக்கூடிய ஒன்று. ஷோபாசக்தி அதற்கான அத்தனை உழைப்பையும் படைப்பூக்கத்தையும் கடந்த காலங்களில் கொடுத்திருக்கிரார். அதற்கான வாசக ஏற்பையும் பரந்த வாசிப்பையும் அடைந்திருக்கிறார். இது ஈழத் தமிழ் சமூகத்தில் நிகழ்ந்த ஓர் அற்புதம். அவரளவிற்கு உள்ளூர் சர்வதேச அளவில் ஏற்புக் கிடைத்த ஈழ இலக்கியவாதி அரிது. அதற்கான தகுதியும் திறனும் அவருக்கு இருக்கிறது. எலிவேட்டையில் தொடங்கிய சிறுகதைக்கான வட்டார மொழி, நேரடியான பகடிகள் சமநிலையும் ஆழமுமடைந்து சலாம் அலைக்கில் எப்படியாகக் கவித்துவமாக உருமாறி வந்திருக்கிறது என்பதைச் சிரத்தையுடன் கவனித்துப் பார்த்தாலே அவரது இலக்கிய வளர்ச்சியின் படிநிலைகள் புரியும். ஆக அவர் இவ்வளவும் எழுதி எழுதி அடைந்த ஒன்று. அந்த இடத்தை அப்படி எழுதும் எவரும் ஈட்டிக் கொள்ள முடியும். அதற்கான சாட்சியும் அவரே. நான் உணவகத்தில் கோப்பை கழுவினேன், அலுவலகத்தில் சுத்தம் செய்பவராக வேலை செய்தேன், கஸ்டப்பட்டு கடையைப் பூட்டிவிட்டு இலக்கிய இதழ் நடத்தினேன் என்பதெல்லாம் அளவுகோல் அல்ல. இவர்களை விடத் தமிழ் இலக்கியத்திற்காக தங்கள் தலைமுறைகளையே இழந்தவர்களின் பட்டியல் என்னால் கொடுக்க முடியும். ஆக இறுதியில் எஞ்சுவது என்ன, நீ என்ன எழுதிச் சாதித்தாய், உன் புனைவுப் பெறுமதி என்ன, உன் விமர்சன அளவுகோல் என்ன, என்பதாகவே இருக்க முடியும். அப்படி எடுத்து முன்னால் வைப்பதற்கான நல்ல படைப்புகள் ஷோபாசக்தியிடம் இருக்கிறது.
ஆனால் ஒரு புனைவின் அல்லது தன்வரலாற்றின் செம்மையாக்கம் பற்றி இவர்களுக்கு அடிப்படையோ அல்லது அது குறித்த ஓரளவான சரியான பார்வையோ இல்லை. இவர்களிடம் வெளிப்படுவது ஒரு வகை அறியாமை. ஒரு நல்ல புனைவை எழுதியிருந்தால் அல்லது செம்மையாக்கம் செய்திருந்தால் அதன் தள எல்லைகளை ஓரளவிற்கேனும் புரிந்து கொண்டிருக்க முடியும். ஒன்று சி.புஸ்பராணியின் அகாலமும் சரி , தனுஜாவின் புத்தகமும் சரி தன்வரலாறுகள். படுபட்சி தற்புனைவு. சி.புஸ்பராணி அகாலம் எழுத முன்னரும் சரி எழுதிய பின்னரும் சரி பல கட்டுரைகள், கதைகள், புத்தக வாசிப்புகள் குறித்து எழுதியிருக்கிறார். தன் இறுதிவரை வாசித்தும் எழுதியும் விவாதித்தும் கொண்டிருந்த ஒருவர். இறப்பதற்கு சில மாதங்கள் முன்னர் வெளியாகியிருந்த கிரிசாந்தின் வாழ்க்கைக்குத் திரும்புதல் கவிதை தொகுப்பை வாசித்து அது குறித்துப் பேசியுமிருந்தார். அவரது கட்டுரைகள், கதைகளிலே அவரது எழுத்தின் தடத்தையும் விட்டே சென்றிருக்கிறார். ஆனால் தனுஜாவும் சரி டிலுக்சனும் சரி அப்படியான இலக்கியத் தொடர்ச்சியோ செயற்பாடுடனோ இருந்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் இருவரின் குரல்களுக்கு இருக்கும் அவசியத்தையும், கனத்தையும் உணர்ந்த ஒருவர் செம்மையாக்கம் செய்வதில் என்ன சிக்கல் இருக்கிறது? அவர்களது இயங்குதளம் இலக்கியமோ புனைவுக்களமோ இல்லாத போது அதனை ஒருவர் செம்மையாக்கம் செய்து கொடுப்பதில் என்ன அறப்பிழை இருக்கிறது? அந்தச் செம்மையாக்கத்தின் எல்லைகளை அவர்கள் இருவருமே உருவாக்கிக் கொள்ள இயலும். அது தான் வழமையும் கூட. வெளியில் இருந்து தங்கள் ஊகங்களைச் சொல்லி படைப்பை நிராகரிப்பது அல்லது தாங்கள் எண்ணுவது போல எழுதவில்லை, சுயம் என்றெல்லாம் பிதற்றுவது விமர்சனங்கள் அல்ல.
புனைவெழுத்தாளனாக செம்மையாக்கத்தின் எல்லைகள் அதன் அவசியம் எனக்கு நன்றாகவே தெரிகிறது. செம்மையாக்கத்தின் அனுகூலத்தை, அதன் சாதக அம்சங்களை எல்லைகளைக் குறித்து சொந்த அனுபவங்களினைக் கொண்டே விரிவாகவே எழுத முடியும். வெளிவரவிருக்கும் ’சிறகை’ குறுநாவலுக்கு நண்பர்களின் வழிகாட்டலும் கருத்துகளும் மிகவும் பயனுள்ளவையாக இருந்திருக்கின்றன. அதன் வழி நான் பல பகுதிகளை விரித்தும் சுருக்கியும் எழுதியிருக்கிறேன். நான் கவனமில்லாமல் மேம்போக்காகக் கடந்து சென்ற இடங்களைத் தொட்டு மேலெடுக்க அந்தவகைச் செம்மையாக்கங்கள் உதவியிருக்கின்றன. நண்பர்களுடனான உரையாடல்களில் கூட அவர்கள் தங்கள் புனைவுகளை எல்லைகளை விரிவை செம்மையாக்கத்தின் வழி எப்படி மேம்படுத்தியிருந்தார்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆக அதில் சிக்கல் இல்லை. அது இலக்கிய வழமையும் கூட. தங்கள் சுயத்தை இழக்காமல் இவர்கள் இதுகாறும் படைப்பூக்கமான ஒரு சொல்லையேனும் எழுதிவிட்டார்களா என்ன? காலம் கடந்து நிற்கக் கூடிய ஒரு கவிதை அல்லது படைப்பையேனும் எழுதியிருக்கிறார்களா?
அப்படி என்றால் இவர்களுக்கு ஏன் இந்தச் சிக்கல் வருகிறது. இவர்களது ஆசையும் எதிர்பார்ப்பும் அல்லது ஒரு புத்தகத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இலக்கியப் பெறுமதி சார்ந்ததோ, புனைவம்சம் சார்ந்ததோ அல்ல. அதில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகள், கருத்துகள் சாா்ந்தவை மட்டுமே. அதை மட்டும் புனைவுகளில் தேடுவது குறைவுபட்ட வாசிப்பு. அதை மட்டுமே இவர்களால் தங்கள் விமர்சன அளவுகோல்களாக வைக்க முடியும்.
தனுஜா போலவோ அல்லது சி.புஸ்பராணி போலவோ டிலுக்சனும் தன்வரலாறாக தன் கதையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது தற்புனைவு. அவரது தெரிவுச் சுதந்திரத்தை நாம் கேள்வி கேட்க முடியாது. அவரது தெரிவு புனைவில் எவ்வளவு தூரம் தன்னை முன்வைத்திருக்கிறது என்பதும் அதன் இலக்கிய ஆழமுமே இங்கு கேள்வியாக விமர்சனமாக உரையாட முடியும். காலத்தை, இடத்தைப் புனைவாக விரித்துக் கொள்வதற்கான புனைவின் சாத்தியத்தை அவர் வரித்துக் கொண்டிருக்கிறார். அவற்றையும் கவனத்தில் எடுத்து நாம் சுதந்திரமாகவே வாசிக்கலாம். அந்தவகையில் நல்ல வாசிப்பனுபவம் கொடுக்கக் கூடிய நல்ல புனைவே படுபட்சி. டிசே.இளங்கோவின் மெக்ஸிக்கோ, அனோஜன் பாலகிருஷ்ணனின் தீக்குடுக்கை, குணா கவியழகனின் கடைசிக் கட்டில், தீபச்செல்வனின் பயங்கரவாதி போன்ற ஈழப் புனைவுகளுக்கு மேலான மொழியும், படைப்பு ஆழமும் கொண்டிருக்கும் புனைவு படுபட்சி. அதில் இருக்கும் ஷோபாசக்தியின் பங்களிப்பு அல்லது செம்மையாக்க உதவி என்பது டிலுக்சனுக்கும் அவருக்குமான வெளி. அதை ஊகங்கள் அவதூறுகள் பொய்களின் வழி இட்டு நிரப்புவது இலக்கிய விமர்சனமோ, ஈழ இலக்கிய மீட்சிக்கான போராட்டமோ அல்ல.
ஒரு புனைவின் தகவற் பிழைகள் குறித்து விரிவாகவே உரையாடலாம். அது எந்தவகைப் புனைவு என்பதும் அந்தத் தகவற்பிழை புனைவின் மையப் பிரச்சினையுடன் இணைந்திருக்கிறதா என்பதுமே கேள்வி. அதாவது அது புனைவின் மையக் கேள்வியைச் சிதைக்கிறதா என்பதே கேள்வி. வரலாற்றுப் புனைவில் புதிய ஆதாரங்கள் வழி புதிய தகவல்கள் கிடைத்தாலும் ஒரு புனைவில் அதன் மையக் கேள்வியைத் தேடலை அது பாதிக்கவில்லை என்றால் சிக்கல் இல்லை. அதே போல தற்காலப் புனைவுகளிலும் அந்த தகவல் பிழை நாவலின் மையக் கேள்வியுடன் முரண்படுகிறதா? அல்லது தகவல் பிழையின் மேற்தான் புனைவின் ஒட்டுமொத்த கட்டுமானமும் நின்றிருக்கிறதா என்பதே கேள்வி. அப்படியான சிக்கல் படுபட்சியில் இல்லை. இவர்கள் சுட்டுவது உதிரித் தகவற் பிழைகள் அந்த வகைப் பிழைகள் படைப்பை நிராகரிப்புக்குரியதாக்குவதில்லை. அவை எந்த வகையிலும் புனைவு வாசிப்பனுபவத்தை இடையூறு செய்வதுமில்லை. ஆக பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆக இவர்கள் இந்த வகைக் அவதூறுக் குற்றச்சாட்டுகளினூடே உருவாக்க நினைப்பது டிலுக்சன் மோகன் மீதான இலக்கிய அக்கறையோ அல்லது ஈழ இலக்கியத்தைக் காப்பாற்றும் நோக்கமோ இல்லை என்பது இங்கு வெளிப்படை. கி
கிரிசாந் கட்டுரைகளுக்கான இணைப்பு :
யதார்த்தன் கட்டுரைக்கான இணைப்பு :
படுபட்சி – அவமானங்களின் முன் நிற்கும் கலை
