வேழாம்பல் தவம் : சில பதில்கள்

கிரிசாந்தின் வேழாம்பல் தவம் நேர்காணல் தொடர்பில் பிரான்சைச் சேர்ந்த எழுத்தாளரும் விமர்சகருமான ப. பார்தீ மேலும் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். அவருக்கான பதில்களைக் கீழே தொகுத்திருக்கிறேன்.
அன்புள்ள தர்மு பிரசாத், கிரிசாந்,
கேள்வி : ஒரு படைப்பாளியின் அகத்தேடல், மொழி, புனைவு, இலக்கிய ரசனை ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பைத் தருகிறது. குறிப்பாக, படைப்பு உருவாகும் உள்முரண்பாடுகளையும் எழுத்தாளன் தன்னைக் கடந்து செல்ல வேண்டிய அவசியத்தையும் பேசுகிறது.
ஆனால், ஒரு படைப்பாளியின் தீவிரத்தைப் பேசுவதோடு இலக்கியத்தின் தரத்தைத் தீர்மானித்துவிட முடியாது. அந்தத் தீவிரம் படைப்பில் எவ்வாறு வெளிப்படுகிறது, அதன் அழகியல் என்ன,அதன் அரசியல் நோக்கமென்ன அதன் பலவீனங்கள் எவை என்பவற்றையும் ஆராய வேண்டும். இலக்கியம் என்பது படைப்பாளியின் அகத்தேடல் மட்டுமல்ல; அது சமூகத்துடனும், வாசகர்களுடனும், முரண்பாடுகளுடனும் நிகழ்த்தும் தொடர்ச்சியான உரையாடலும்கூட. அந்த அடிப்படையில், இந்த உரையாடல் எனக்குள் எழுப்பும் கேள்விகளை உங்களிடம் விட்டுச் செல்கின்றேன்.
பதில் : நான் தீவிரத்தைத் தனித்த ஒற்றை அளவுகோலாக எங்கும் முன்வைத்ததில்லை. அப்படி இருக்கவும் முடியாது. ஆனால் இலக்கியத்தில் தீவிரம் ஒரு முக்கியமான அம்சம். நம் முன்னோடிகளில் கனலும் தீ போன்ற தீவிரத்தைக் காண முடியும். அவர்களுடைய அந்த இயல்பு சமூகத்தில் கூரிய பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறது. கூடவே இது இலக்கியத்தின் தரம் பற்றிய உரையாடலும் அல்ல. அது அப்படித் ‘தீவிரத்தால்’ மட்டும் உருவாவது இல்லை. இலக்கியத்தின் தரம்/மதிப்பீடு பல்வேறு உரையாடல்கள் வழி உருவாகிவரக் கூடியது. தரத்தை அப்படிச் சட்டென்று நிறுவி விடவும் கூடாது. அப்படி நாம் அதை நிறுவி விட முடியாது. இன்று நாம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் ‘தரம்’ உருவாகி வந்த வழியைத் திரும்பிப் பார்த்தால் திகைப்பே ஏற்படும். எத்தனை ஊடுபாதைகள், ஊற்றுகள், கொப்பளிப்புகள் வழியாக ஊறி திரண்டிருக்கிறது அது. அதன் பின்னரும் கூட உறுதியானது அல்ல. தனியே ஒற்றை நபரால், அரசியல் தரப்பால், அல்லது கருத்தியல் நிலைப்பாடுகளால் உருவாகி அளிக்கப்படுவதும் அல்ல. அது பொதுச் சூழலின் பல்வேறுபட்ட தரப்புகள் முட்டிமோதி ஏற்பும்-மறுப்புமான விவாதங்களூடே இந்த விளைச்சலை அடைந்திருக்கிறோம். அன்று, கோலோச்சிய பல கருதுகோள்கள் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன. இப்போது வந்தடைந்திருக்கும் இடம் கூட அத்தனை உறுதியானதோ, என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியதோ அல்ல. செய்வது ஓர் உரையாடல். இடையீடு. சில மதிப்பீடுகளைச் சொல்கிறோம். நாம் நம்புவதை, உணர்வதை ‘தீவிரமாக’ முன்வைக்கிறோம். அது இலக்கியத்தின் வழியும் கூட. அப்படி பல அழகியல், அரசியல் தரப்புகள் இருந்திருக்கின்றன. இருக்கின்றன. அப்படியானவற்றுள் ஒரு தரப்பு மட்டும் தான்.
இலக்கியம், படைப்பாளியின் அகத்தேடல் மட்டுமா அல்லது இலக்கியம் சமூகத்துடனான வாசகர்களுடனான உரையாடலாகவும் இருக்க வேண்டுமா என்றால் ஒற்றைப் பதிலை உறுதியாகச் சொல்ல முடியாது. இரண்டும் என்பதே துல்லியமான பதில். ஆனால் இரண்டும் சம காலத்தில் நிகழ முடியாது. அதாவது சமூகத்துடன் அல்லது வாசகருடனான உறவு அல்லது உரையாடல் எழுத்தாளனுக்கு உடனே நிகழ்ந்துவிட முடியாது. அப்படியாக இருவரையும் பரஸ்பரம் பாதித்துக் கொள்வது அரிதான நிகழ்வு. படைப்பாளி எப்போதும் கூர் கொண்டிருப்பது எதிர்காலத்தில். அவன் சமகாலத்தை எரிச்சலூட்டிக் கொண்டிருக்கக் கூடியவன். அதனூடாக பொதுச் சமூகத்தின் ஒவ்வாமையை பிரதிபலிப்பவன். ஆகவே அவனது அந்த இயல்பு ‘அதிகபிரசங்கி’தனமாக பொருள் கொள்ளப்படும். சமூகம் பையப் பையவே அந்த இடத்திற்கு வந்து சேரும். நம் முன்னோடிகள் அவர்களது சமகாலச் சூழலால் புழுவிலும் அற்பமாக மதிக்கப்பட்டவர்கள் தான். சாதனா ஒரு முறை ஒரு துருக்கிய நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது ஆர்வத்தில் ஓரான் பமுக்கை தெரியுமா என்று கேட்டிருக்கிறார். அவர் உடனே ஆவேசமாகி மூக்குச் சிவக்க ‘அவன் ஓரான் நல்ல துருக்கியனே இல்லை. அவன் துருக்கியின் குதம்’ என்று சொன்னதாகச் சொன்னார். நோபல் பரிசு பெற்றவருக்குக் கூட அவ்வளவுதான் பொதுச் சமூகத்தின் ஏற்பு. பின் அவர்கள் மறைந்ததும் அவர்களை மீள் கண்டு பிடிப்புச் செய்து தூசிகளை துடைத்து விக்கிரகங்கள் ஆக்கிக் கொள்வார்கள். இதுதான் காலம் தோறும் நிகழ்கிறது. இன்னும் பொதுச் சமூகம் முகம் சுழிப்புடன் அணுகும் பாரதியின் இயல்புகள் ஏராளம். அந்த அக்கினிக் குஞ்சை அந்த சூழலால் ஒருபோதும் தாங்கவே முடியாது.
ஆனால் நமக்கு இன்னொரு நம்பிக்கை இருக்கிறது. நாம் எங்களை திறந்த உரையாடல்கள் செய்யத் தகுதியான ‘முற்போக்கான’ சமூகமாக நம்ப விழைக்கிறோம். ஆனால் பன்மைத்துவ உரையாடலுக்கான பண்பாட்டுச் சூழல் நம்மிடம் இல்லை. உண்மையில் நாம் அப்படித் திறந்த உரையாடலோ அல்லது இடையீடோ செய்ய முடியாத சமூகம். உள்பக்கமாக எங்களை மூடிக் கொண்டவர்கள். தடித்த ஓட்டினுள் தலையை இழுத்து வாகுவாக வைத்துக் கொள்வது. ஒருவகை தீவு மனநிலை. அது தன்னுடைய அறிவின்மையை, மூடத்தனத்தை வெட்டி ஆராய விரும்புவதில்லை. அதனால் தன்னை உடைத்துக் கட்ட முயல்வதும் இல்லை. என்ன சொன்னாலும் அதன் சிரசில் எதுவும் ஏறாது.
அதனால் இங்கே எழுத்தாளன் ஒரு பொருட்டே இல்லை. அவனது சொற்கள் காதுகொடுத்துக் கேட்கப்படுவதில்லை. அது எப்போதாவது, ஒரு நல்ல எழுத்தாளனை இனம் கண்டு அவனைத் தன் பண்பாட்டின் முகமாக பெருமையுடன் முன்வைத்திருக்கிறதா? தமிழகச் சூழலைக் கவனித்துப் பாருங்கள். பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என அவர்களின் இலக்கிய முகங்களாக இருப்பவர்களின் பண்பாட்டு இடம் சமூகத்தில் எவ்வளவு பெரியது. ஒவ்வொரு வருடமும் அவர்களைப் பற்றிய நூல்கள், எழுத்துகள் உரையாடல்கள் பல தளங்களிலும் நிகழ்கின்றன. அவர்கள் எப்போதும் இலக்கியத்தின் மைய உரையாடலில் இருக்கிறார்கள். உதிரியான பல நிகழ்வுகள். தனிநபர் முயற்சி என்று பல வழிகளிலும் அவர்கள் விரிவாகப் படிக்கப்படுகிறார்கள். விவாதிக்கப் படுகிறார்கள். தமிழகப் பண்பாட்டின் முகங்களாக ஏற்பும் மறுப்புமான உரையாடலில் எப்போதும் அவர்கள் சொற்கள் இருக்கின்றன. மேற்கோள் காட்டப்படுகின்றன. இத்தகைய இடம் முதன்மைப் படைப்பாளிகளுக்கு மட்டும் என்றல்ல. படைப்பூக்கத்தின் அடுத்த அடுத்த படிகளில் இருக்கும் படைப்பாளிகளுக்கும் நடக்கிறது. அவர்களது இடங்கள் வரையறுக்கப் படுகின்றன. அவர்களின் படைப்புகள் குறித்த கவனமும் உரையாடல்களும் நிகழ்கின்றன. அப்ப அப்ப அவர்களின் வரிசைகள் குலைத்து அடுக்கப்படுகின்றன. பலரும் புதிய ஒளியில் மறு கண்டுபிடிக்கப் படுகிறார்கள். ப.சிங்காரம் எழுந்து வந்தது போல. ஆனால் அத்தகைய செயல்களும் கூடப் போதவில்லை என்பதே அங்கிருந்து வரும் கோரிக்கை. நமது நிலை இன்னும் பாதாளம். அதன் கீழ் ஒன்றே இல்லை எனும் அளவிற்குப் பாதாளம்.
ஒரு அரசியல் கருத்து, சமூகப் பிரச்சனை குறித்து பல் துறைசார் விவாதங்கள் நிகழ்கின்றன. நமக்கு அப்படி பொதுச் சூழலே விவாத மரபே இல்லை. நம் ஆள், நமக்கு ஆதரவானர், நமது அரசாங்கம், நமது இயக்கம் என்பது மட்டுமே எங்களுடைய கணக்கு. இப்போது கூடப் பாருங்கள் இது கே.டானியலின் நூற்றாண்டு. அவரளவுக்கு யாழ்ப்பாணப் பண்பாட்டுக் கூறுகளை எழுதியெடுத்த இன்னொருத்தர் எஸ்.பொ. ஆனால் இந்த இரட்டையர்களுக்கு எங்காவது ஒரு சிறு சலனம், நினைவு கூரல் நிகழ்ந்திருக்கிறதா? அவரது மகன் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதைக் கேட்கவில்லை. பொது சமூகத்தைக் கேட்கிறேன். பொதுச் சமூகத்தால்? பிறரால் எங்காவது நம் பண்பாட்டின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறார்களா? இல்லை எதிர்காலத்தில் வைக்கப்படுவார்களா? இல்லை ஒரு போதும் இல்லை.
இலங்கை அரசின் புத்தகத் தடையைக் கண்டித்து நேரடி ஆர்ப்பாட்டம் யாழில் பஸ் நிலையம் முன் நிகழ்ந்தது. அதற்கு இலக்கியத்திற்கு வெளியில் இருந்து வந்த ஒரே ஒருவர் அருண் சித்தார்த்தன் மட்டுமே தான். அவருக்கு மட்டுமே அரசியலுக்கு அப்பாலான பண்பாட்டுச் செயல்களின் மீது கரிசனை உண்டு எனப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் சமகால யாழ்ப்பாண நிலைமை. நமக்கு நல்லூர் கந்தன் தான் அடையாளம் என்று வெளிநாடுகளில் இருந்து படையெடுத்துச் செல்லும் கும்பலை என்ன செய்வது? அதை பண்பாட்டுச் செயற்பாடு என்று நம்பும் அசட்டுக் கூட்டத்தை யார் நோவது? சரி அடுத்த கட்டம் கொஞ்சம் வாசிப்பில், எழுத்தில் இருக்கும் யாராவது எதாவது செய்திருக்கிறார்களா, சிறு குறிப்பு எதுவும் இல்லை. இது எத்தனை பெரிய அநீதி. அரசு புத்தகங்களை தடுப்பது மிக அடிப்படைக் கருத்துச் சுதந்திரப் பிரச்சனை. சர்வதேச சமூகம், சிந்தனையாளர் எல்லாம் சேர்ந்து எதிர்க்க வேண்டியது. இதனைக் குறித்து பொதுவெளியில் தன்னுடைய கோணத்தை, சிந்தனையை எழுதியவர்கள் என ஒருவரையாவது சுட்ட முடியுமா? சிங்களவர்கள் திரண்டிருக்கும் அளவிற்குக் கூட தமிழ்ச் சமூகத்தில் புத்தகத் தடை பொருட்படுத்தப்படவில்லை. ஏதோ நல்ல அரசின் சிறிய நிர்வாகப் பிரச்சினையாக அல்லது எழுத்தாளர்களின் மலினமான விளம்பர உத்தியாக விளங்கிக் கொள்ளும் சிறுமதியர்களை என்ன செய்வது?
ஷோபசக்திக்கு பிரஞ்சு விருது கிடைத்தது. அது நாங்களே எங்களுக்குக் கொடுக்கும் விருது அல்ல. சர்வதேச விருது. ஈழத்தில் விடுங்கள், இங்கே பிரான்சில் எங்காவது ஒரு சிறு சலனம். இதனை விடச் சிறிய ஓர் விருது தமிழ்தேசியர்க்குக் கிடத்திருந்தால் என்ன நடந்திருக்கும். லா-சப்பல் வர்த்தகர் சங்கம் என்ன செய்திருக்கும்? யானை ஒன்றை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்து விருதாளரை யானையில் அமரவைத்து, நாலு நாள் மேளக்கச்சேரி ஏற்பாடு செய்திருக்க மாட்டார்களா? எங்கட பெடியளுக்கு என்றால் முதுகை கூனிக் கும்பிடு போடுபவர்கள் அவர்கள். ஷோபாசக்தி எங்கட பெடியன் இல்லையா?
சமூகத்துடனான உரையாடல் என்பது அவர்களது சுறணையின்மை மேல் கருணை பொலிவதல்ல. அவர்களது அறியாமையைத் தட்டிக் கொடுப்பதல்ல. நடு வீதியில் ஆயிரம் தேங்காய் உடைக்கும் அடிமுட்டாள் தனத்தை எங்கட கலாச்சாரம், பண்பாடு என்று உச்சி முகர்ந்து பாராட்டுவது அல்ல. அவர்களின் அறியாமையைச் சுரண்டித் தான் கொழுப்பதல்ல. கூடவே எழுத்தாளன் என்ன சமூகம் இல்லையா? அவன் இந்தச் சமூகத்துள் தானே இருக்கிறான். ஆகவே அவனும் சமூகம் தான். அதன் வினைத்திறனான, செயலூக்கம் உள்ள உறுப்புதான். ஒரு வகையில் நம் மூத்த படைப்பாளிகளின் அகக் – கொந்தளிப்பு என்பது சாமூகத்தினதும் தான். அது அவனுள் கூர் கொண்டிருக்கிறது அவ்வளவுதான் வேறுபாடு. இரண்டையும் எதிரிடையாகப் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.
கேள்வி : படைப்பாளியின் தனிப்பட்ட அனுபவமும் அகத்தேடலும் இலக்கியமாக மாறுவது முக்கியமானதுதான். ஆனால், அந்தத் தனிப்பட்ட அனுபவம் சமூகத்தின் பொதுவான அனுபவமாக மாறுவதற்கான அளவுகோல் என்ன? படைப்பாளியின் தீவிரத்தை மதிப்பிடும்போது, தனிப்பட்ட ரசனைக்கும் இலக்கிய விமர்சனத்திற்கும் இடையிலான வேறுபாட்டை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?
பதில் : இலக்கியத்தை சமூகம் – தனி மனிதர் என்ற எதிரீடாக உரையாட முடியாது. அவர்கள் இந்தச் சமூகத்தில் இருந்து தனித்த உதிரிகளோ அல்ல. பாரதியோ, புதுமைப்பித்தனோ, கே.டானியலோ தனிமனிதர்களா என்றால் தனி மனிதர்கள் ஆனால் அப்படி அல்ல. அவர்கள் தான் சமூகமும். இந்தியச் சுதந்திரப் போராட்ட சூழலில் தான் புதுமைப்பித்தன் எழுதிக் கொண்டிருந்தான். பாரதி எழுதிக் கொண்டிருந்தான். பாரதியில் அந்த கணல் தீயாக இருந்தது. எழுது சுட்டெரித்தது. புதுமைப்பித்தனை அது சீந்தக் கூட அல்ல. அவன் அதை பொருட்படுத்தினான் என்பதற்கான சிறு தடையமும் இல்லை. அவன் அகலிகை தொன்மத்தை மீளுருவாக்கினான், கபாடபுரம் எழுதினான். ஆனால் அவன் காலத்தில் சுதந்திரத்தை, சமூகநிகழ்வை எழுதியவர்கள் இப்போது தடம் தெரியவில்லை. அந்த காலகட்டத்துடனே தங்கி மறைந்து போனார்கள். ஆக அதனில் இருவகையும் இருக்கிறது. பாரதி தன் சமகால கனலை சிரசில் ஏற்றிக் கொண்டவன். புதுமைப்பித்தன் அதை சீண்டாதவன். ஆனால் இருவரும் தான் நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி முகங்கள். அது ஒற்றை அளவுகோல் அல்ல. இருவகையிலும் நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள். உண்மையில் அவர்களிடம் வெளிப்பட்டது என்ன? தீவிரம் மட்டுமா? அது தீவிரம் மட்டுமேயாக அல்ல. அவரது மொழி, சொல்முறை, வாழ்க்கைப் பார்வை ஏன் எடுத்துரைப்பு என ஒரு புனைவில் நாம் எதிர்பார்க்கக் கூடிய அடிப்படைகளைக் கொண்டு மதிப்பிட விழைக்கிறேன். முன்வைக்கிறேன்.
ரசனைதான் இங்கே விமர்சனமே. நாம் நம்புபவற்றை முன்வைக்கிறோம். மறுத்து உரையாடுகிறோம். கூடுமானவரை ஓர் விவாதச் சூழலை தக்க வைக்க முயல்கிறோம். எங்கள் தரப்பு, எங்கள் பார்வை, எங்கள் சிந்தனை என்பதை தொகுத்துக் கொடுக்கிறோம். உண்மையில் நாங்கள் மூவரும் படைப்பு வெளிப்பாடிலும், நம்பிக்கைகளிலுமே கூட வெவ்வேறு திசையில் இருக்கக் கூடியவர்களே. நமக்குள்ளே கூட படைப்புக்களில், விமர்சனங்களில், பார்வைகளில் பெரும்பாலும் விலகல்களே அதிகம். எம்மை ஒன்றிணைத்திருப்பது இப்போதைக்குத் தீவிரம் மட்டுமே.
கேள்வி : சமகால ஈழ இலக்கியத்தில் தீவிரமான படைப்பாளிகள் குறைவாக உள்ளனர் என்று மதிப்பிடும்போது, அந்த மதிப்பீட்டுக்கான அளவுகோல்கள் என்ன? குறிப்பிட்ட படைப்புகளின் மொழி, படிமம், வடிவம், கதைசொல்லல் ஆகியவற்றை நேரடியாக ஆராய்ந்து, அவற்றின் பலங்களையும் பலவீனங்களையும் ஒப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்லையா?
பதில் : நிறையவே சுட்டிக் காட்டலாம். அதை அந்தரங்கமாக நீங்களே உணர்ந்து கொள்ளமுடிந்த பல சந்தர்ப்பங்கள் இங்கே உண்டு. தீவிரம் என்பது செயல் என்பதுதான் ஓர் அர்த்தம் என்றாலும் அது அல்ல முழுமையான அர்த்தம். அல்லது கடுமையான கருத்துகள், விமர்சனங்கள் என்ற அர்த்தத்திலும் கூறவில்லை. கருத்துகளில் வெளிப்படக் கூடிய தனித்த பார்வை. சமூகத்தை, பிரச்சனையை ஒற்றைப்படையாக அணுகாத தன்மை. சமநிலை. அல்லது சமூகப் பிரச்சனையைப் பல கோணங்களில் இருந்தும் அணுகும் பார்வை விரிவு உரையாடல்களில் வெளிப்படுகின்றதா என்பதே கேள்வி. முக்கியமாகக் கருத்துகள் பார்வைகளில் வெளிப்படக் கூடிய முன்முடிவுகளற்ற தன்மை.
முக்கியமாக நான், கிரிசாந், யதார்த்தன் போன்றவர்கள் புறவயமான ஆய்வாளர்களோ, ஆய்வுக் கண்ணோட்டம் தரவு கொண்டு ஒரு முடிவைச் சொல்பவர்களோ அல்ல. அது அல்ல எங்கள் வழி. அதையே கிரிசாந்தின் பதிலில் உணர்ந்தேன். அதனால் தான் அவரை நம் முன்னோடிகள் வரிசையில் நிற்க வைத்திருந்தே, அவர்களின் குரலின் நீட்சியாக அவரை அடையாளம் காட்டியிருந்தேன். அவர்களிடமும் வெளிப்பட்டது இத்தகைய குரல் தான். அதற்கான பெறுமதி வெளிப்படையான தரவுகளில் இல்லை. அல்லது துல்லியமான நிரூபணங்களைக் கொடுப்பதில் இல்லை. அவர்களுள் கனலும் அறக் கோபத்தில் வெளிப்படுவதாக நம்புகிறேன். அதனால் தான் அந்தக் குரல்கள் எரிச்சலூட்டுகின்றன, தொந்தரவு செய்கின்றன. ஆய்வுகளின் வழி சென்றால் அடையமுடியாத ஓர் நுண்மையான, ஆனால் எல்லோராலும் அந்தரங்கமாகக் கண்டுணரக் கூடிய இருள் முடிச்சைத் தொட்டெடுக்கின்றன. அந்த பிறிதொன்றால் அடையமுடியாத நுண் தளம் தான் அவற்றின் இடமென நினைக்கிறேன்.
மொழி, வடிவம், கதை சொல்லல் – முறை குறித்து தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். என்னுடைய தளத்திலே ஏராளம் கட்டுரைகள் இருக்கின்றன. பலரைக் குறித்தும் என் மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன், எழுதிக் கொண்டும் இருக்கிறேன். எழுதுவேன். நாம்மிடம் இதுவரை இல்லாததும் அந்த விமர்சன நோக்குத்தான். கடந்த காலத்தில் அரசியல் உள்ளடக்கம் மட்டும்தான் ஒற்றை அளவுகோலாக இருந்தது. அதனூடாக மட்டுமே மதிப்பிடவும், நிராகரிக்கவும் செய்தோம். அதனால் நாம் இழந்தவை அதிகம். எளிமையான அரசியல் கருத்துகள் கூட ஒரு படைப்பை நிராகரிக்கும் அபத்தம் நிகழ்ந்தது. ஆனால் நான் தொடர்ச்சியாக மொழி வெளிப்பாடு, அதன் உள்ளடக்கமும் வடிவமும் இணையும் வெளி, கூர்மை, உவமை என இலக்கியத்தின் அடிப்படைக் கருவிகளைக் கொண்டே மதிப்பிட விழைகிறேன். அது நல்ல விழைவுகளைக் கொடுக்கிறது. 30 வருட இடைவெளியில் இவற்றைப் பேசுவதால் சில அடிப்படைகளை அழுத்தமாகப் பேச வேண்டியுமிருக்கிறது. முன்னர் என்றால் புலி ஆதரவு, எதிர்ப்பு என்பதே எங்களுடைய ஒற்றை அளவுகோல். ஆனால் அதனையும் தாண்டி குணா கவியழகன், தீபச்செல்வன், அகரமுதல்வன், தமிழ்நதி போன்றவர்களின் படைப்புக்களை அவற்றின் புனைவுக்கூறுகள் சார்ந்து மதிப்பிட்டிருக்கிறேன்.
கேள்வி : இலக்கிய வளர்ச்சியைப் படைப்பாளியின் தனிப்பட்ட தேடலுடன் மட்டும் இணைத்துப் பார்க்க முடியுமா? பதிப்புச் சூழல், சிற்றிதழ்கள், வாசகர்கள், பொருளாதார நெருக்கடிகள், இலக்கிய நிறுவனங்கள் போன்றவை படைப்பின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் செலுத்தும் தாக்கங்கள் குறித்து நாம் எந்த அளவுக்கு விவாதிக்கிறோம்? எழுத்தாளரின் நோக்கத்தைத் தாண்டி, வெவ்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட வாசகர்கள் ஒரு படைப்புக்கு உருவாக்கும் புதிய அர்த்தங்களையும் இலக்கிய வளர்ச்சியின் பகுதியாகப் பார்க்க வேண்டாமா?
பதில் : உண்மையில் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்தரங்கமாக தேடி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது வாசிப்பு கருத்துக்களாகத் திரண்டு சமூகத்தின் சிந்தனையில் அவற்றைச் சேர்கக்கூடிய பண்பாட்டு அமைப்புகள், சிற்றிதழ்கள் நம்மிடையே இல்லை. அவர்கள் எல்லோரும் உதிரிகளாகவே இருக்கின்றனர். அது தான் நம் பிரதான சிக்கல். என் ஆனைக் கோடாரி சிறுகைதைத் தொகுப்பு வெளி வந்த போது மிகச் சிறிய வட்டத்துக்கு மட்டும் தெரிந்த எழுத்தாளன். அப்போது நான் ஆக்காட்டியில் மட்டும் எழுதியிருந்தேன். நானே அச்சுக்கோர்த்து, அச்சடித்த இதழ். மிஞ்சிப்போனால் 10 பேர் அதைப் படித்திருப்பார்களா தெரியாது. சிறுகதைத் தொகுப்பை யாழில விற்பனைக்குக் கொடுத்த போது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் வெண்பாவில் ஓரிரு நாட்களுள் 10 புத்தகம் விற்பனையாகியது. உண்மையில் அதிக எண்ணிக்கை.
இலக்கிய நிறுவனங்கள் வாசகர்கள் அச்சகங்கள் இரண்டாம் நிலையில் இருப்பவை. அவை இரண்டாம் கட்டுமானம். அடிப்படைகளைப் படைப்பாளி உருவாக்கிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆக நான் கோருவது அடித்தளத்தை பலமாக்கத்தான். அடித்தளம் இறுகினால் போதும். மேலே எப்போது வேண்டுமானாலும் எத்தனை மாடி வேண்டுமானாலும் கட்டிக் கொள்லாம்.
கேள்வி : முன்னோடிகளின் பாதிப்பிலிருந்து புதிய படைப்பாளிகள் எவ்வாறு தமது தனித்துவத்தை உருவாக்குகிறார்கள்? மரபைத் தொடர்வது, மறுப்பது, மறுவாசிப்புச் செய்வது ஆகியவற்றுக்கிடையில் புதிய இலக்கியத்தின் தனித்துவத்தை எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்? அதேவேளை, பெண்ணிய எழுத்துகள், சாதிய அனுபவங்கள், தொழிலாளர் வாழ்வு, விளிம்புநிலை மக்களின் குரல்கள், புலம்பெயர் இலக்கியம் போன்றவற்றை மதிப்பிடுவதில் நமது விமர்சன மரபு எந்த அளவுக்கு திறந்திருக்கிறது? இலக்கியத் தரத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதையும் நாம் கேள்விக்குட்படுத்த வேண்டாமா?
பதில் : நம்மிடம் இப்போது விமர்சன மரபே இல்லை. நம்மிடம் இருப்பது அபிப்பிராய உதிர்ப்பு மரபு. அபிப்பிராயமும் தெரிந்தவர், அறிந்தவர் என ஒரு பக்கமாக குடை சாய்ந்திருக்கும் தேர். ஆக அதனூடாக நாம் செய்வது நிராகரிப்பை. அது அல்ல நல்ல விமர்சனத்தின் வழி. விரிவான கவனப்படுத்தல், முன்வைப்புகளே அவசியமானவை. தனித்துவத்தையும், தொடர்பையும் முன்வைத்தல். இன்னும் மேலான வாசிப்பை வழிகாட்டுதல். அதனால் முன்னோடிகள் பாதிப்பு தவிர்க்க முடியாதது. அது பல வழிகளிலும் நிகழலாம். யாரும் அது திட்டமிட்ட அப்படிச் செய்து கொள்வதில்லை. சில உடனே தெரிகின்றன. சில இன்னும் காலம் தாழ்த்தி வெளிப்படுகின்றன. சிலருக்கு அவர்களை அறியாமலே விமர்சகன் அந்த தொடர்ச்சியையும், பாதிப்பையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. அதிலும் கூட பாதிப்பு, தாக்கம், பிரதிஎடுப்பு, மீளச் செய்தல், தனித்துவம் எனப் பல படிநிலைகள் இருக்கின்றன. மானுட அறிவும் அப்படித்தான் கைமாற்றப்படுகிறது. நாம் நின்றிருப்பது இது மிக ஆரம்பக் கால கட்டம். பாதிப்பை தாக்கத்தை மதிப்பிட இன்னும் காலங்கள் இருக்கின்றன. வித்தியாசங்கள் தனித்துவங்களை துல்லியமாக வேறுபடுத்த முடியும். குழந்தை பிறந்த உடனே நமக்கிருக்கும் வாஞ்சையில் அம்மாபோல, அப்பா போல எனச் சொல்லிக் கொள்வது உண்டு. வளரட்டும் மதிப்பிட்டுக் கொள்வோம். அவசரப்பட்டு நிராகரிக்க வேண்டியதில்லை. ஆனால் இப்போது முன்னோடிகளின் பாதிப்பு பற்றிய அக்கறை, அல்லது பொச்சரிப்பு எல்லாம்
‘நிராகரிப்பு’ என்ற தளத்திலே இருக்கிறது. அதற்கு இத்தனை அவசரம் வேண்டியதில்லை. பொறுமையாகச் செய்து கொள்ளலாம். அப்படி முன்னோடியின் நிழல் கொஞ்சம் நம்மீதும் விழுந்திருப்பது ஒன்றும் அவ்வளவு இழுக்கு இல்லை.
கேள்வி : அரசியல் கருத்தியல் ஒரு படைப்பின் அழகியலைப் பாதிக்கிறதா? அல்லது அரசியல் சார்புள்ள ஒரு படைப்பும் கலைத்தன்மையில் உயர்ந்த படைப்பாக இருக்க முடியுமா? கருத்தியலை முன்வைக்கும் படைப்புகளையும் கருத்தியலையே கேள்விக்குட்படுத்தும் படைப்புகளையும் எவ்வாறு மதிப்பிடுகிறோம்? இங்கு கருத்தியலுக்கும் அழகியலுக்கும் இடையிலான உறவை எளிமையான எதிர்நிலையாகப் பார்க்காமல், அவற்றுக்கிடையிலான முரண்பாடுகளையும் சிக்கல்களையும் ஆராய வேண்டியிருக்கிறது.
பதில் : இது ஆதியிலிருந்தே இலக்கியம் சந்திக்கும் கேள்வி. தொடர் விவாதமும், உரையாடலும் நிகழ்கிறது. தமிழிலும் நிகழ்ந்திருக்கிறது. வடிவமா? உள்ளடக்கமா? நான் வடிவத்தின் பக்கம் நிற்கக் கூடியவன். அதற்கான காரணங்களையும் விரிவாக முன்வைக்க முடியும். பல கட்டுரைகளில் அதனை விளக்கி எழுதியுள்ளேன். புனைவு மொழியெனும் கல்லுளியும், புனைவில் திரளவேண்டிய நிலமும் என்ற கட்டுரையில் அவற்றின் வடிவ போதாமைகளை சுட்டியிருக்கிறேன். ஆதனால் நான் கடுமையாக விமர்சிப்பது ஒரு கருத்தியலுக்காக மட்டும் கவனிக்கப்படும் படைப்புக்களை. அவை ஓர் புனைவிற்குப் போதது என்பது என்னுடைய எண்ணம். நான் நின்றிருக்கும் நவீனத்துவ மரபு ஒரு நல்ல கருத்து என்பதற்காகவே ஒன்றை இற்றை வரை நல்ல படைப்பு என முன்வைத்ததில்லை. எப்போதும் அதற்கு எதிராகப் போர்கொடி தூக்கியே இருக்கிறது. அப்படி ஒரு படைப்பைக் கூட சுட்ட முடியாது. அதற்கு கே.டானியலே நல்ல உதாரணம். அவர் தன் அனைத்துப் படைப்புகளிலும் உருவாகிக் கனவு கண்ட சமூக லட்சியம் இப்போது இல்லை. அவர் எதிர்பார்த்த வழியில் கூட சமூக மாற்றம் நிகழவில்லை. அவர் காலத்தில் எழுதிய பலரும் மனிதாபிமானத்தின் குரலில் எழுதியவர்கள். அந்தக் காலகட்டம் முடிந்ததும் அவர்களும் மறைந்துவிட்டார்கள். இன்று அவற்றில் வெளிப்படும் கருத்துகளும் கூட மிக எளிமையானவையாகத் தோன்றுகின்றன. கே.டானியல் படைப்புக்களில் இன்றும் மிகவும் சோர்வூட்டும் அம்சமாக எஞ்சியிருப்பதும் அந்த சோசலிச எதிர்பார்ப்பு மட்டும் தான். நல்ல கனவு என்பது போல. ஆனால் அவர் தன் படைப்புகளில் சொல்லிய சோசலிசக் கருத்துக்காக அல்லாமல் அவர் யாழ்பண்பாட்டை எழுதிய செறிவினாலே இன்று முக்கிய படைப்பாளி. அவரிடம் நுண் தகவல்களினாலான செறிவான விபரிப்பு இருக்கிறது. அதனை நுட்பமாக எழுதியதாலே அவர் முக்கியத்துவம் இன்றும் இருக்கிறது. இன்னும் ஒரு படிமேலான நல்ல படைப்பாளியாக அவரை முன்வைக்கிறேன். அதுவே என்றைக்கும் அவரது அழியாத இடம். எஸ்.பொ, மு.தளையசிங்கம், கே.டானியல் மூவரையுமே நம் இலக்கிய முகங்களாகப் பெருமையுடன் முன்வைக்கலாம்.
கேள்வி : இலக்கியத்தின் போதாமைகளை அடையாளம் காண்பது அவசியமானது. ஆனால், அவற்றைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல், புதிய படைப்பாளிகளை உருவாக்கவும், ஆரோக்கியமான விமர்சன மரபை வளர்க்கவும், படைப்புகளுக்கிடையிலான திறந்த விவாதங்களை உருவாக்கவும் நாம் என்ன நடைமுறை முயற்சிகளை முன்னெடுக்கிறோம்?
பதில் : அப்படித் தண்ணீர் ஊற்றி, அடி உரம் போட்டு எல்லாம் படைப்பாளியை வளர்த்துவிட முடியுமா தெரியவில்லை. சொந்தத் தேடலும், கொந்தளிப்பும் உள்ள ஒருவர் வந்தடையக் கூடிய இடம் அது. அதனால் அப்படி நாம் அதை புறவயமாக வளர்த்தெடுக்க முடியாது. நல்ல சூழலினூடா மட்டுமே நல்ல படைப்பாளிகள் உருவாகி வரவும் முடியாது. ஓரளவிற்குத்தான் அது பயன்கொடுக்கக் கூடியது. ஒரு வகையில் அது தற்செயல். ஊழ் மட்டும் தான். இன்னொரு வகையில் அது தனித்த பயணமும் கூட. உண்மையில் அப்படிக் கடுமையான சூழல் நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் என்றிருந்தால் அதற்குத் தகுதியும், தேவையும் உள்ள இனம் நம் இனம் நாம் தான். ஆனால் அப்படியான ஊழ் எதுவும் நிகழவில்லை. மாறாக நாம் மிகச் சராசரியான புனைவுகளையே உருவாக்குகிறோம். ஆனால் இந்தச் சூழலில் செய்ய ஒன்றுண்டு. தொடர்ந்தும் விரிவான மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். கறாராக, விரிவாக. எதிர்காலத்தின் காதுகளில் அது விழக் கூடும். இன்று நமக்கு வாய்த்திருப்பது எருமைத் தோல் மனநிலை.
கேள்வி : இன்னொரு கேள்வியும் இருக்கிறது. ஒரு படைப்பாளியைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகளுடன் உரையாடலைத் தொடங்கும்போது, அந்த மதிப்பீடுகளையே கேள்விக்குட்படுத்துவதற்கான இடம் குறைந்துவிடாதா? ஒரு படைப்பாளியின் கருத்துகளுடன் முரண்படுவதற்கும், அவரது படைப்பின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டுவதற்கும், மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதற்கும் உரையாடலில் போதிய இடம் இருக்க வேண்டாமா? விமர்சனம் என்பது ஒருவரை உயர்த்துவதற்கோ தாழ்த்துவதற்கோ அல்ல; படைப்பையும் அதன் பின்னணியையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான முயற்சி அல்லவா?
பதில் : அப்படியான உயர்ந்த மதிப்பீடுகளை தனியொருவரக அல்லது கூட்டாக யாராலும் சட்டென்று நிறுவிவிட முடியாது. அவை அனல் புனல் வாதத்தில் வென்று வர வேண்டும். நிராகரிக்கவும், ஏற்புமான சூழலினூடே உருவாகி வரும். எப்போதும் அதற்கான இடம் இருக்கிறது. அதை இலக்கிய விமர்சனங்களில் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இது ஒரு வகை தொகுத்துக் கொள்ளுதல் மட்டும் தான். ஆனால் முடிவோ, இறுதி இலக்கோ நம் கைகளில் இல்லை.
கேள்வி : இறுதியாக, இலக்கிய வளர்ச்சி என்பது சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காண்பது மட்டும்தானா? அல்லது சிறந்த படைப்புகள் உருவாகவும், அவை விமர்சிக்கப்படவும், புதிய குரல்கள் பழைய அதிகாரங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பவும், ஏற்கப்பட்ட மதிப்பீடுகள் மறுபரிசீலனை செய்யப்படவும் கூடிய ஓர் இலக்கியச் சூழலை உருவாக்குவதுமா?
பதில் : வளர்ச்சி என்பதை விட ஆரோக்கியமான சூழல் என்பதையே நான் விரும்புவேன். நல்ல படைப்பாளி இனம் காண்பதுவும் விமர்சனங்களூடாக அதனை முன்வைப்பதும் இலக்கியச் சூழலின் ஒரு பகுதிதான். உண்மையில் அதிகாரம் என்பது நாம் மிகப் பிழையாக எல்லா இடங்களிலும் எடுத்துக் கொள்ளும் ஆயுதம். அது உண்மையான சரியான அர்த்தத்தில் தமிழ் சூழலில் பயன்படுத்தப்படுவதே இல்லை. இன்று பழைய அதிகாரங்களை நீங்கள் தாராளமாகவே கேள்வி கேட்கலாம். முன்னர் போல அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனூடாக நீங்கள் உருவாக்க நினைப்பது என்ன என்பதே முக்கியம். அதனால் தானே மதிப்பீடு, விமர்சனம், மறுபரிசீலனையைச் செய்ய முடியும். தனித்த குரல்களாக இல்லை. பல குரல்களாக அதனைச் செய்ய முடியும். ஆக அதுவும் நீங்கள் சொல்லும் அதனைச் செய்வதற்கான முதற்படி. அவசியமான படியும் கூட.
//
***

கிரிசாந் நேர்காணல்
கிரிசாந் பதில்.
வேழாம்பல் தவம் – மேலும் சில கேள்விகள் –


