
சமகாலப் புனைவெழுத்தாளர்கள் குறித்து கிரிசாந் இப்படிச் சொல்வதுண்டு, ‘இவர்கள் எழுதும் புனைவுகளை விட, புனைவுகளைப் பற்றிச் சொல்லும் கதைகள், விளக்கங்கள் நன்றாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. இவர்கள் புனைவுக்கு வெளியே புனைவுகளைப் பற்றிச் சொல்வதில் ஒரு பத்து சதவீதத்தையாயினும் இவர்களால் புனைவுகளுள் எழுத முடிந்தாலே இவர்களால் சராசரிக்கும் மேலான நல்ல புனைவுகளை எழுதிவிட முடியும்’ சமகால நாவல்களை வாசிக்கும் தோறும் கிரிசாந்தின் இந்தக் ‘கருத்து’ என்னுள் இறுகி வலுவடைந்து வருகிறது. ஒரு மொழியில் புனைவுகள் கதைகளால் மட்டும் உருவானவை அல்ல. அவை மொழியாலும் ஆனவை. புனைவனுபவம் முதலில் மொழியிலே நிகழ்கிறது. அதனால்தான் மொழி மிக வலுவான தரப்பாக புனைவுகளில் எப்போதும் இருக்கிறது, இருக்கும். அதுவும் தமிழ் போன்ற மொழியில், மொழி வெளிப்பாடு என்பது பல அடுக்குகளினால் ஆனது. புனைவுகளில் செறிவும் கூர்மையும் கொண்டு வெளிப்படுவது. ஆனால் சமீபத்தில் வாசித்த புதிய நாவல்கள் பலவற்றிலும் மொழியின் போதாமையை நன்கு உணரமுடிகிறது. எளிமையான சித்தரிப்புகளைக் கூட புதிய தலைமுறை எழுத்தாளர்களால் தங்கள் புனைவு மொழியால் துல்லியமாக நிகழ்த்திக்காட்ட முடியவில்லை. ஒன்று, தேய்வழக்குகள் மண்டிய நீர்த்த மொழி, அல்லது ‘சோ’ என மழை பெய்தது மாதிரியான பத்திரிகை எழுத்து மொழி. இவை நல்ல புனைவுகளுக்கு போதுமானதல்ல. சமீபத்தில் வாசித்த சுனில் கிருஷ்ணனின் குருதி வழி நாவலும் இந்த மொழிப் போதாமைக்கு விதிவிலக்கல்ல.
குருதி வழி நாவல் சுனில் கிருஷ்ணனுடைய இரண்டாவது நாவல். அவரது முதலாவது நாவல் நீலகண்டமும், ஒரு சில சிறுகதைகளும் வாசித்திருக்கிறேன். நீலகண்டம் நாவலில் ஒரு சித்தரிப்பு ‘நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தாள்’ என்பது மாதிரி வரும். இதைப் படித்ததும் மெல்லப் புன்னகைத்தேன். நாவல் நெடுகிலும் இந்தவகையான ஓட்டமே இருந்தது. பரவாயில்லை. ஆனால் மொழிவெளிப்பாடு என்ற ஒற்றை அம்சத்தையும் தாண்டி நீலகண்டம் நாவல் மிகச் சராசரியான நாவல். அதன் புனைவு உத்திகள் துருத்தலாகவும், குழந்தையின் கற்பனை வெளிப்பாடுகள் எளிமையான ‘பாமர’ தனத்துடனும் இருந்தது. குறிப்பாக வேதாளம்-விக்ரமாதித்தயன் மறு உருவாக்கம். ஆனால் நீலகண்டம் நாவல் குறித்து எழுதப்பட்டவற்றில் மிகை வெளிப்பாடுகளே அதிகம். பலரும் அந்த நாவலை மேலதிக அர்த்தங்கள் கொடுத்து வாசித்திருந்தார்கள். அத்தகைய மேலதிக அர்த்தங்கள் குழந்தையின் நோய்க்கு அஞ்சும் மனிதாபிமானத்தின் அல்லது ஓட்டிசம் நோய் குறித்த மனப்பதிவுகளின் வெளிப்பாடு என அப்போது அதைப் புரிந்து கொண்டேன். அப்படி மேலதிக அர்த்தங்கள் கொடுத்து வாசிக்கத் தோதான புனைவாழங்கள்; படிமங்களாகவோ மொழியாகவோ கதையாகவோ நாவலின் உத்தி, மொழியில் வெளிப்படவில்லை. குருதி வழி வாசித்த பின்னர் முந்தைய நீலகண்டக் கருத்து இன்னும் உறுதியாகிவிட்டிருக்கிறது. சுனில் கிருஷ்ணன் தன்னுடைய நாவல்களில், புனைவுகளில் கற்பனை வளத்துடன் செய்வதாக நம்பிச் செய்யும் உத்தி முயற்சிகள் வெறும் துருத்தல்கள் மட்டுமே. அத்தகைய வறண்ட பழைய உத்திகளால் அவரது நாவல் விரிவு கொள்வதில்லை. புதிய வாசிப்புச் சாத்தியத்தைக் கோருவதில்லை. புனைவில் மேலதிக அர்த்த அடுக்குகள் உருவாவதில்லை. அதனால் அவரால் தன்னுடைய புனைவின் அடுக்குகளில் மேலதிக வாசிப்புச் செறிவூட்டலைச் செய்ய முடியவில்லை.
குருதி வழி நாவலை வாசிக்கும் போதே நாவலின் மொழி வெளிப்பாட்டில், திணிப்பான புனைவு உத்தியில், நாவலின் வெவ்வேறு காலகட்டங்களை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகச் சித்தரிப்பதில் வெளிப்பட்ட சொற்சேர்கைகளின் சோர்வான பட்டியல்களே மூளை முழுவதையும் நிரப்பியிருந்தன. நாவலை வாசித்து முடித்ததும் இந்த நாவல் குறித்து இணையத்தில் எழுதப்பட்டிருப்பவற்றை தேடிப் பார்த்தேன். ஆனால் நாவலுக்கு எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள் என்னுடைய எண்ணங்களுக்கு நேர்மாறானவையாக இருந்தன. நான் உணர்ந்த போதாமைகளின் சிறு தீற்றல்கள் கூட வெளிப்படாத புகழுரைகளாக அவை இருந்தன. எஸ்.ஶ்ரீனிவாஸ் குருதி வழி நாவலின் வடிவத்தின் பொருத்தமின்மை குறித்துச் சுட்டிக் காட்டியிருந்தார். ம. நவீன் குருதி வழி நாவல் குறித்து ஆற்றிய உரையில் குருதி வழி நாவலின் மொழி வெளிப்பாட்டை இப்படிச் சொல்லியிருந்தார். //இந்நாவலின் பலங்களில் ஒன்று அதன் மொழி. எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனிடம் இவ்வாறான ஒரு மொழி திரண்டு வந்துள்ளதை மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். அவரை கைவிட்டு நாவல் தன்னை தானே எழுதிக்கொண்ட பகுதிகளை என்னால் மிக நெருக்கமாக உணரமுடிந்தது. // ம.நவீன் மொழிவெளிப்பாட்டில் திரண்டிருக்கும் மொழியின் எந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு நாவலின் மொழியை நாவலுக்குப் பலம் சேர்க்கும் மொழியெனச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. யோசித்துப் பார்த்தேன். எனக்குச் சுத்தமாகப் பிடி கிடைக்கவில்லை.
என்னுடைய வாசிப்புப் புரிதலில் சமகால எழுத்தாளர் பலருக்கும் மிகச் சிக்கலாக இருப்பது மொழிதான். குறிப்பாகச் சித்தரிப்பு மொழி. அது செந்தில் ஜெகன்நாதன், லஷ்மி சரவணக்குமார், ம.நவீன், சுரேஷ் பிரதீப் உட்பட சம காலத்தில் நன்கு அறியப்பட்ட அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலருடைய புனைவு மொழியையும் கவனத்தில் எடுத்தே சொல்கிறேன். இவர்களின் புனைவுகளில் நல்ல உவமை, துல்லியமான சொற்சேர்க்கை, கூர்மையான சித்தரிப்பு ஆகியவை மிக அரிதாகவே நிகழ்கின்றன ஒரு நாவலுக்கு மொழி மட்டுமல்ல அளவுகோல். ஆனால் இந்த மொழி வெளிப்பாடு ஒருவகையில் அடிப்படையானது. தமிழில் பல நல்ல எழுத்தாளர்களும் செறிவான தனித்த மொழி கொண்டவர்களே. அவற்களை பற்றிய எழுத்துக்களில் அவர்களின் தனித்துவ மொழி குறித்த சிலாகிப்பு இல்லாமல் இருப்பதில்லை. அது அவர்களின் எழுத்தின் தனித்த அடையாளம் கூட. தமிழில் பல செறிவான, கவித்துவமான சித்தரிப்பு மொழி வெளிப்படுகள் இருக்கின்றன. ஒவ்வொன்று அவற்றின் அழகும், கூரியல்பும் தனித்தனியே கொண்டவை. அற்றின் சிறுதடயங்களும் இல்லாத மொழியே குருதி வழி நாவலில் நிகழ்ந்திருக்கிறது. உண்மையில்; வரலாறு, கதை, தொன்மம், எதிர்காலம் எனக் காலம், இடம், மனநிலைகள் தொத்திச் செல்லும் புனைவில் அதன் மொழிக்கு முக்கிய பணியிருக்கிறது. மொழியால் வரலாற்றுக் காலகட்டங்களையும் சமகாலத்தையும் கனவுகளையும் உணர்வுகளையும் செறிவான நிகர் வாழ்வனுபவமாக நிகழ்த்திக் காட்ட வேண்டியிருக்கிறது.
ஒரு மொழி எப்போது செறிவும் துல்லியமுமாக புனைவில் வெளிப்படுகிறது. அல்லது எதை நல்ல புனைவு மொழியெனச் சொல்ல முடியும். புனைவில் மொழியின் தரம் அதன் தளுக்கில் இல்லை; அதன் துல்லியத்தில் இருக்கிறது. புனைவின் கதைமாந்தர், களம், உணர்ச்சி ஆகியவற்றை மிகக் குறைந்த சொற்களில் மறக்க முடியாதபடி சித்தரிக்கும்போதே புனைவு மொழி செறிவடைகிறது. புதிய உவமைககளால் மட்டும் மொழி செறிவானதாக துல்லியமானதாக ஆவதில்லை; அவை புனைவின் அனுபவத்திலிருந்து இயல்பாக உருவாக வேண்டும். தேய்வழக்கான உவமைகள், சொற்சேர்கைகள் மொழியைச் செறிவூட்டுவதில்லை; மாறாக அதன் அனுபவத்தை நீர்த்துப்போகச் செய்கின்றன. அதாவது நல்ல மொழிவெளிப்பாடு, பழக்கமான உவமைகளைக் கொண்டிருக்காது. கதாபாத்திரத்தின் தனித்தன்மைகளை துல்லியமாக வரையறுத்துச் சொல்லும். புனைவு வெளியை, சூழல் தனித்துவத்தை காட்சிபூர்வமான சொற்களில் சித்தரித்துக் காட்டும். அதனால் அது உணர்ச்சிகளை சமநிலையுடன் கையாளும் முனைப்புடன் இருக்கும். ஒரு கேலிச் சித்திரக்காரனின் எளிமையான கோடுகள் போன்று. அப்போதே அந்த மொழியால் வாசிப்பில் செறிவான புனைவனுபவத்தைக் கொடுக்க முடியும்.
குருதி வழியின் மொழி இப்படியான எந்த வகை மொழி வெளிப்பாட்டையும் தனிச் சிறப்பாகக் கொண்டிருக்கவில்லை. நன்கு பழக்கமான புட்டம் தேய்ந்த உவமைகள், சொற்தொடர்களே சித்தரிப்பு மொழியை நாவல் முழுவதும் நிறைத்திருக்கிறது. தேய்வழக்கான உவமைகளை, சொற்தொடர்கள், சொற்சேர்கைகளை நாவல் பக்கத்துக்குப் பக்கம் கையாளும் போதே அதன் மொழிச் சாறு நீர்த்துவிடுகிறது. பல்லில் பச்சை தண்ணீர் படவில்லை, வாயைக் கிண்டினார்கள், முதலையிடமிருந்து தப்பியது போல, ஊரே அமளிதுமளிபட்டது, வெட்டிய வாழைமரம் போல உயிரற்ற, நெருப்பிலிருந்து தப்பிக்கும் விலங்குகள். இந்த வகையான நவீன தமிழிலக்கியம் சீந்தாத சொற்களின் குவியலாகவே நாவல் அதிகமிருக்கிறது. மொத்த நாவலிலுமே ஒரே ஒரு உவமையை தான் கொஞ்சம் நல்ல உவமை எனச் சுட்ட முடியும். அந்தச் சந்தர்ப்ப சூழலில் புதுமையானதும் கூட. புதுமை என்பதை விடச் சட்டென்று காட்சியாக விரியக்கூடியதும் கூட. சாத்திரம் சொல்பவரின் தளர்ந்த மார்பை முக்கோணத் துணிப்பொட்டலம் போல மடிந்து கிடந்தது என விபரிக்குமிடம் சட்டென்று அந்த காட்சியை அகக் கண்ணில் காட்டிவிட்டுச் சென்றுவிடும் கூர்மையுடன் இருந்தது.
மொழியின் சவாலை, சித்தரிப்பு நுட்பத்தை அடையக் கூடிய காட்சித் தருணங்கள் நாவலில் இருக்கிறன. ஆனால் அவை மிக நீர்த்த மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. ஒன்று சுடலை குழந்தை வேலனைக் கொல்லும் இடம். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பிரிட்டிஷ் ராணுவ வீரனும், பழைய மதிபீடுகளுடனான குழந்தைவேலும் மோதும் இடம். அங்கே அவர்களை இரு வேறு காலகட்டங்களின், மனநிலையின், சாதியின் பிரதிநிதிகளாக எழுந்துவரச் செய்ய மொழியால் முடியவில்லை. சுனில் கிருஷ்ணனின் சித்தரிப்பு மொழி அவர்கள் இருவரது சிறுவயது நினைவேக்கத்துக்குள் சென்று போலியாக நெகிழ்வு கொள்கிறது. கிழவர் மிகவும் பாரமான இரும்பு வேலை அநாயசமாக தூக்கி வெறியாட்டு ஆடும் இடம். அந்த அநாயசமான தருணம் ஏதோ எடையற்ற வெள்ளி வேலை தூக்கியாடுவதற்கு ஒப்பாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் இராணுவத்தின் கொடுமைகள். அங்கே வன்முறையை நேரடியாக எழுதுவதூடாக அல்ல அந்தச் சூழலின் மனநிலையை துல்லியமாக சித்தரிப்பதனூடாகவே அந்த கால கையாறு நிலையை, இந்திய பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் கருவிகளாக்கப்படும் கையாறுநிலையின் அவலத்தை, பெரும் படைக்கு முன்னால் வலுவற்றவர்களாக நின்றிருக்கும் கிராம மக்களின் அவலத்தை எழுதிக்காட்ட முடியும். ஆனால் அவை எவற்றிலும் கொஞ்சம் கூட காட்சிபூர்வமான மொழியனுபவத்தைக் கொடுக்கக் கூடிய மொழித் துல்லியமோ, மொழி வெளிப்பாடோ, புதிய அரிதான சொற்சேர்க்கைகளோ புனைவு மொழியில் நிகழவில்லை. குருதி வழியில் நிகழ்ந்திருப்பது தட்டையான மொழி வெளிப்பாடு. இதனை ஒரு போதும் நல்ல மொழிவெளிப்பாடு எனச் சுட்டவே முடியாது. அப்படிச் சுட்ட வேண்டும் என்றால் ஒருவரை ஒருவர் மாறி மாறிப் பாராட்டிக் கொள்வதற்கவே இருக்க முடியும்.
மொத்த நாவலிலும் புனைவுருவாக்கத்தில் பல குறைகளும், போதாமைகளும், தேவையற்ற திணிப்புகளும் இருக்கின்றன. அதற்கான காரணமும் ஊகிக்கக் கூடியது. நாவல், சிறுகதைக்கான கேள்வியை மட்டும் கொண்டிருக்கிறது. அப்படிச் சிறுகதையாக எழுதப்பட்டது என்று சுனில் கிருஷ்ணனுடைய பின்னுரைக் குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. நாவல், கொலைப்பழி குருதி வழியினருக்கு நீளுமா? பூட்டானார் செய்த கொலைக்கு பேரர்கள் மன்னிப்புக் கோர முடியுமா? அப்படி முடியுமென்றால் அதற்கான வழிகள் என்ன? நாவல் அவற்றை கதையாக அல்லது புனைவாக உருமாற்றி எழுதிக் கடக்கமுயலாலாம் என்பதை மெல்லியதாக அடிக்கோடிடுகிறது. கவனிக்க மிக மெல்லியதாக. நாவலுக்கான கேள்வியாக விரிந்து கொள்ளக் கூடிய கரு. அதற்கான இடங்களும் நாவலில் இருக்கின்றன. ஆனால் அப்படிச் சிறுகதை நாவலாகும் உருமாற்றம் குருதி வழியில் நிகழவில்லை. ஒரு சிறுகதையாக எழுதப்பட்டது, அப்படியே நாவலாக விரிக்கப்பட்டதன் அத்தனை பலகீனங்களும், அபத்தங்களும், பொறுப்பின்மைகளும், பாமரக் கற்பனைகளுமே மலிந்து கிடக்கிறது. சிறுகதை நாவலாக விரிய வேண்டுமென்றால் அதன் மையக் கேள்வி குறித்து ஆசிரியருக்கும் விரிவான வாழ்க்கைப் பார்வை இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கேள்வி கூட நம் மரபில் இருப்பதுதான். நம் மரபு வினைகள் அப்படி தலைமுறைகள் தோறும் அது சேமிக்கப்படும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது. வினையாக. அப்படியென்றால் அதற்கான மீட்சி என்ன? அந்தக் கேள்வியை ஒட்டி ஒரு சில கோணங்களிலான வாழ்க்கை சூழல், சம்பவ அடுக்குகளாவது நாவலில் கையாளப்பட்டிருக்கவேண்டும். கொலையின் முன் கதைகள் அல்ல அதற்குப் பிறகான குருதிவழியினரின் வாழ்க்கை. உண்மையில் நாவலில் அந்தக் கொலையூடாகவே சுடலையின் பின்னைய வாழ்வு முழுவதும் கட்டப்படுகிறது, அவனுக்குப் பெரும் செல்வம் சேர்கிறது என வைத்துக் கொண்டால் (நாவலில் அப்படி வரவில்லை) அந்தக் கொலையே மையமாக பின்னைய அவன் வாழ்வை ஒட்டுமொத்தமாக அச்சில் நிறுத்துகிறது என நிகழ்ந்திருந்தால்? இது ஒரு சாத்தியம் மட்டுமே. ஆனால் தன்னுடைய கொலைக்கு அவனே வருந்திக் குற்றவுணர்வு கொள்கிறான் அதன் பிறகும் குருதி வழியினரும் அதன் பாரத்தைச் சுமக்க வேண்டுமா? இப்படியான மாற்று சாத்தியங்கள் கேள்விகளை எழுப்பியிருந்தாலே குருதி வழி நாவலின் கேள்விக்கான ‘புனைவுச்சிக்கல்’ நாவலில் இன்னும் பெரிதாக விரிந்திருக்கும். பெருமாள் மன்னிப்புக் கேட்பதில் இருக்கும் அகத் தடை என்ன? கொலைசெய்யப்படவரால் காவு வாங்கப்படவர்கள் நிலையென்ன? அவை என்ன பொருள் கொடுக்கின்றன? ஆனால் இப்படி மையக் கேள்வியை இன்னும் பெரிதாக விரித்துக் கொள்ளக் கூடிய சாத்தியமிருந்தும் நாவல் அது நோக்கிக் குவியவில்லை, அப்படியான பார்வை விரிவு நாவலின் எந்த இடத்திலும் வெளிப்படவில்லை. ஒரு சிறுகதையின் மையச்சம்பவத்திற்கு ஒரு சில கிளைக்கதைகள் சேர்த்து செய்த வெட்டி-ஒட்டல் தன்மையே நாவல் முழுவதும் இருக்கிறது. வேலுடன் கொல்லப்பட்ட குழந்தைவேலரின் காவுவாங்கும் படலத்தில் இருந்து, அதற்கு பின்னரான இணைப்புகளும் கூட வலிந்து உருவாக்கப்பட்டவையாகத் துருத்தித் தெரிகின்றன. சேகர், சுடலை உரையாடலில் வரும் படைப்பு, வரலாறு குறித்த உரையாடல்கள் புனைவுலகிற்கு கொஞ்சமும் ஒட்டாத, ஆசிரியரின் நேரடியான குரல்களாகவே இருக்கின்றன. ஒரு நாவலில் அப்படியான விரிவான விவாதங்களோ, அல்லது உரையாடல்களோ நிகழக் கூடாது என்பதல்ல. ஜெயமோகனுடைய அநேக படைப்புகளில் அப்படியான அறிவார்ந்த உரையாடல்கள் உண்டு. அவரிடம் கேட்டால் ‘ஆம் நான் அப்படியான அறிவார்ந்த பாத்திரங்களையே புனைவுகளில் எழுதுகிறேன். அவர்களுக்குதான் என் புனைவுகளில் இடம் உண்டு’ எனச் சொல்வார். அதையே ஜெயமோகன் மீதான விமர்சனமாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு புனைவுகளில் வெளிப்படும் அப்படியான அறிவார்ந்த உரையாடல்களில் ஆர்வம் உண்டு. அது அவசியமானவை என்பது என்னுடைய எண்ணம். ஆனால் அது நிகழ்வதற்கான புனைவுசூழல், கதாபாத்திரம், வடிவமைப்பு, கேள்விகள் கதாபாத்திரங்களின் பின்புலங்களில் இருந்து விரிவாக உருவாகி வர வேண்டும். குருதி வழியில் அப்படியான புனைவுசூழல் உருவாக்கம் பல இடங்களில் மேலோட்டமாக இருக்கிறது.
காந்தியைக் குறித்த சித்தரிப்புகளில் ஆகட்டும், ஹிட்லர் குறித்த சித்தரிப்பில் அந்தக் காலக் கட்டம் குறித்த ஒற்றை வரிகள் மட்டுமே வருகின்றன. அதுவும் பொதுவான பார்வை. பிர்லா இல்லத்தின் இரவு விளக்குகள் ஆங்காங்கு ஒளிர்ந்து கொண்டிருந்தன. கம்பளியும் குல்லாவும் அணிந்த வெள்ளுடை காங்கிரஸ்காரர்கள் ஓரிருவர் தென்பட்டனர். அவ்வளவு தான் காலைப் பயணத்தில் காந்திய கால விபரணை. பழைய பாணி ஐரோப்பியக் கட்டிடங்கள் போன்ற கட்டிடங்கள். இது மட்டும் தான் ஹிட்லர் கால புறச்சூழல் குறித்த விபரணை. உண்மையில் கடந்த காலம், வரலாற்று மனிதர்கள் புனைவுகளில் ஏன் வர வேண்டும்? அவை என்ன வகையான புனைவனுபவத்தைக் கொடுக்க வேண்டும். வெறும் செய்திகளாகவா இல்லை அந்த காலகட்டம் உயிர்ப்புடன் எழுந்துவரும் செறிவில் அவை எழுதப்பட வேண்டுமா? இல்லை அவை ஆசிரியரின் கோணத்தில் தனித்துவமாக வெளிப்பட வேண்டும் இல்லையா? அல்லது புனைவுக்கு இன்னொரு அடுக்கு கேள்வியை / தேடலைக் கொடுக்காவிட்டால் புனைவுகளில் அவற்றின் பயன் என்ன? இவற்றைத் திறம்படக் கையாள்வதே புனைவெழுத்தாளரின் சவால். சவால் மட்டும் அல்ல படைப்பூக்கமும் நிகழக்கூடிய இடங்கள் கூட. அங்கேதான் எழுத்தாளரை மீறி எழும் நாவல் கணங்களும், இருட் பிலங்களும் உருவாகமுடியும். குருதி வழியில் தெரிந்த அறிந்த சிறிய ‘வரலாற்று’ எல்லைக்குள்ளே தேங்கி நின்று விடுகிறது. குருதி வழி நாவலில் பொதுக் கருத்துகளும், பொதுவில் அறிந்த தெரிந்த உண்மைகளின் வெளிப்பாடாகவே வரலாற்றுச் சம்பவங்கள் நாவல் விபரிப்புகளில் வருகின்றன. அதனால் அந்த வகை உத்திகள் சுமையாக, பொருத்தமில்லாத திணிப்புகளாக நாவலில் அமர்ந்து விடுகின்றன. வரலாற்றுக் காலகட்டம் மேலதிகமாக கொண்டிருக்க வேண்டிய தொகுப்புப் பார்வை அல்லது தரிசனம் திரண்டு வரவில்லை.
நாவலின் கால, சம்பவ இணைப்புகள், அதன் எதிர்காலக் கற்பனைகள் மிக பாமரத்தனமானவை. நாவலின் அடிப்படைச் சிக்கல்கள் அவற்றிலேயே இருக்கின்றன. அவற்றின் தழையால் நாவலால் மேல் எழ முடியவில்லை. ஒரு கொலை மிகக் குறுகிய காலத்திலேயே சாமியாகக் கூடிய மக்கள் மனநிலையை உருவாக்குகிறது. அங்கே சாதிய, அரசியல் பின்புலங்களும் கடந்த காலங்களும் கூடப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இங்கே புனைவும், வரலாறும், கதைகளும் ஊடும் பாவுமாத் திருந்து கிடக்கின்றன. ஆனால் நாவல் நேர் கோடற்று கதை சொல்வதாக தோன்றினாலும் அதன் கதை நேர்கோடானது. சிடுக்கு இல்லாதது. கதைக் காலகட்டத்தை முன் பின்னாக ஒழுங்கின்றி கலைத்து அடுக்குவதால் அது நேர்கோடற்றதாக வெளிப்படுவதில்லை. அந்த கலைப்பினுடாக புனைவில் சம்பவங்களின் அர்த்த வேறுபாடுகளோ, கதைகளில் புதிய வாசிப்புச் சாத்தியமோ அதன் உத்தியால் இங்கே உருவாகவில்லை. வெவ்வேறான நான்கு காலகட்ட கதைகள். ஒரு வேல் அவற்றை இணைக்கிறது. முதல் தலைமுறையில் சேகரமாகும் பழி / பாவம் அல்லது மன்னிப்பு எப்படி தலைமுறையாக நீளும் என்ற கேள்வியை நோக்கி நாவல் குவியமுடியவில்லை அது மையக் கேள்வியாக இருந்த போதும். காலகட்டங்களின் வெவ்வேறு மிக பலகீனமான கதை முடிச்சுக்களைக் கொண்டிருக்கிறது. அது அதன் புற அரசியல் காரணிகளிலேயே நாவல் நின்றிருக்கிறது. ஓடும் புளியம் பழமும் போலான நிலை. இந்த இடத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலின் கட்டமைப்பை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதுவும் காலகட்டங்கள் மாற்றி அடுக்கப்பட்ட நாவல்தான். அதன் வெளிப்பாட்டு மேதமையென்பது என்பது அதன் உண்மை மனிதர்கள், புராண கால மனிதர்களாக கதைகள், சூதர்களின் பாடல்கள் வழி உருவாகிவரும் விதம். காலம் உண்டு செரிக்கிறது. பெரிதாக்குகிறது. அந்த தற்செயல்களின் களி நடனம் திகைப்பூட்டக் கூடியது. ஒரு கால கட்டத்தின் பெரிய ஆகிருதிகள் சிறுத்து மண் மூடி சிறு பாதச் சுவடுகள் கூட எஞ்சமல் அழிந்து போகிறார்கள். மறக்கப்படுகிறார்கள். அதன் மயக்குறு வசீகரம் அந்த இத்திலேயே மையங் கொண்டிருக்கிறது. எங்கோ தொலைவான ஆழத்தில் இருப்பதாக புராண மனிதர்கள் உயிர்ப்புள்ளவர்களாக வருகிறார்கள். அவர்கள் அகச்சிகலும் தேடலுமாக விஷ்னுபுரத்தில் அழிகிறார்கள். நீர்ப் பெருக்குப்போல ஒழுகிச் செல்லும் வரலாற்றின் முன் வாசிப்பவர்களைப் பெருளற்ற அகத்தனிமை சூழ்கிறது. கால்களின் கீழே மணல் துகள்களாக பெருகும் வரலாறு எனும் அதன் தொடக்க வரி கொடுக்கக் கூடிய படிம எழுச்சி நாவல் முழுவதும் இழையோடிச் செல்கிறது. அப்படியே குருதி வழிக்கு வந்தால் அதன் வெவ்வேறான நான்கு காலகட்டங்கள். அல்லது மூன்று. பிரிட்டிஷ் காலகட்டம். குழந்தைவேலர் சாமியாவது, பின் பெருமாள் மூத்தவரின் கொலை மன்னிப்பிற்காக அலைவது, எதிர்காலம் என்ற கால அடுக்கில் என்ன வகையான வரலாற்று, புரிதல் சார்ந்த உருமாற்றம் நிகழ்கிறது நாவலில். ஒரே ஒரு உருமாற்றம் மட்டுமே கொலைசெய்யப்படவர் சுதந்திரப்போராட்ட தியாகியாகி வீர-தீர கதைப்பாடல்களுடன் பெருவீரராகி வேலுடையார் சாமி ஆகிறார். அது கூட மக்களின் மனநிலை, அவர்களது வரலாற்றுப் புரிதல் சார்ந்த விபரிப்புகளாக நாவலில் வருவதில்லை. அரசியல் பகடையாட்டமாக மட்டுமே நாவல் குறுகிவிடுகிறது. இன்னொன்று அது சாதி குறித்து வெளிப்படையாக உரையாடாமல் மிக மிகப் பூடகமாக உரையாடுவதும், அதை குறிப்பால் மட்டும் உணர்த்த பிரயத்தனப்படுவதும் நாவல் வாசிப்பில் மிகச் சோர்வளிக்கிறது. இங்கே விஷ்ணுபுரத்துடன் ஒப்பிடக் காரணம் அதுதான் ஒற்றை அளவுகோல் என்பதற்காக அல்ல. அதன் கட்டமைப்பு உத்தி எப்படி நாவலின் விரிவுக்கும் இயைகிறது என்பதைச் சுட்டவே. அதிலும் இரண்டு நாவல்களிலும் ஒன்றாக இருக்கும் வரலாறும், கடந்த காலமும் இயைந்து வரக்கூடிய தன்மைக்காகவும் மட்டுமே. இந்த உத்தி விஷ்ணுபுரத்தில் அபாரமான உணர்வெழுச்சியுடன் கூடிய வாசிப்பானுபவமாகவும், இங்கே குருதி வழியில் திணிப்பாகவும் இருப்பது என்பதைச் சுட்டவே.
குருதி வழி நாவலில் வரும் அறிவியல் புனைவுக் காலகட்டம் வறட்சியின் உச்சம். குழந்தைக் கற்பனைகளில் கூட விளையாட்டுத்தனமும், பகடியும், கோணலுமாக வெளிப்படும். இங்கே வெளிப்பட்டிருப்பது ஒரு வகை வெளிறல். சுனில் கிருஷ்ணனுடைய ஒரு சில கதைகளிலும் இந்த தேவையற்ற திணிப்பு, அதன் பொருத்தமின்மையை, வாசிப்பில் அது கொடுக்கக் கூடிய ஒவ்வாமையை உணர்ந்திருக்கிறேன். இற்றைக்கு 200 வருடங்களுக்குப் பின்னரான எதிர்கால உலகு பற்றிய சித்தரிப்பு வருகிறது. அங்கே எழுத்தாளரின் ஊகக் கற்பனையின் உச்சம் அல்லது அவரது வாழ்க்கைப் பார்வையின் உச்சமென்பது ஒற்றைக் கற்பனை தான். அதாவது ஸ்டெப்பி புல்வெளி பாலைவனமாகிவிட்டது, இங்கே இந்தியாவின் குன்னக்குடி பனிப் பிரதேசமாகிவிட்டது. தலைகீழான காலநிலை மாற்றம். சூழலியல் விமர்சனம்? ஆகவே பாலைநிலமாக உரு மாறியிருக்கும் அய்ரோப்பாவில் இருந்து பனியைப் பார்க்க பயணிகள் இந்தியா வருகிறார்கள். அதற்கு ஒரு பயண வழிகாட்டி இருக்கிறார். எப்போது இது நிகழ்கிறது? இன்னும் 200 வருடங்களின் பின். அதாவது 2225ம் ஆண்டு எனத் தோராயமாக வைத்துக் கொள்ளலாம். எதிர்காலம் என்பது வெறும் காலநிலை மாற்றம் அல்ல; மனித உறவுகள், அரசியல், நினைவு, உடல், தொழில்நுட்பம், மொழி ஆகிய அனைத்தையும் மறுசிந்திக்கும் கற்பனையாக இருக்க வேண்டும். அதில் ஆண் பெண் உறவு வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கருவிகள் வருகின்றன. அரசாங்கம் குறித்த எள்ளல் இருக்கிறது. வரலாற்று சின்னத்தில் காதலர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்திருக்கும் சிறுமை வருகிறது. அதாவது வரலாற்றில் வாழ எளிய வழி எனும் கசப்பான விபரணையுடன். உண்மையில் இன்னும் இருநூறு வருடங்களில் இருந்து, நம் உலகைப் பார்க்க, அது குறித்துச் சொல்ல அல்லது விமர்சிக்க படைப்பூக்கமுள்ள ஓர் எழுத்தாளருக்கு எவ்வளவு கற்பனையும், விமர்சனங்களும், எள்ளல்களும், பகடிகளும் இருக்கின்றன. அவை நாவலின் மையம் இல்லை என்றாலும் அதற்கான ஓர் இடம் நாவலில் இருக்கிறது. அப்படியான எளிமையான விமர்சனங்கள் குருதி வழியில் இருக்கின்றன அவை 2225ம் ஆண்டு மனநிலையின் விமர்சனங்கள் போல அல்ல, சமகாலத்தின் விமர்சனங்கள் என்பதே சொல்ல வருவது. கூடவே நான் இங்கே வெறும் தொழில்நுட்ப சாத்தியத்தை மட்டும் சுட்டிக்காட்டவில்லை. எதிர் காலத்தில் ஆண், பெண் உறவு எப்படி இருக்கும். அவர்கள் இப்போது போன்ற மாறாத பால் அடையாளங்களுடன் இருப்பார்களா?, இல்லை, வேறா. அல்லது இப்படிப் பயணம் செய்து பனியை அறிந்து கொள்ளும் தேவை இருக்குமா? இல்லை இந்த உலகின் இயற்கைக் கவர்ச்சி வடிந்துவிடுமா? இடம், காலம் குறித்த ஓர்மையை தொழில்நுட்பம் என்ன செய்திருக்கும் என்ற சாத்தியமான ஊகக் கற்பனைகள். இன்றைய அரசுக்கு என்ன பொருள் இருக்கும். அதன் அதிகார எல்லைகள் எப்படி இருக்கும். அரசு குடிமக்களை எப்படிக் கட்டுப்படுத்தும். நாடுகளின் வரைபடம் எப்படி இருக்கும். மூலதனம் போல அவையும் உலகு தழுவியதாக விரிந்திருக்குமா? தெளிவான வேறுபாடுகள் ஏதும் இருக்குமா? இன்றைய அதிகார மையங்கள் எப்படி இருக்கும். சமூக நிறுவனங்கள், சாதிய அமைப்புகளின் நிலையென்ன என்ற ஊகக் கற்பனைக்கு சாத்தியமான புனைவு வெளி. அவை வெறும் ஊகக் கற்பனைகள் கூட இல்லை, நம் சமகாலத்தை புரிந்து கொள்ளும் வழியும் கூட. அல்லது அவர் விரும்பி உரையாடும் காந்தியச் சிந்தனைகளூடு கூட எழுத்தாளர் சென்றிருக்கக் கூடிய தொலைவு அதிகம்.
2225ல் நிகழும் கதைக்களத்தின் சித்தரிப்பில் சமகாலத்தின் சயலே இருக்கிறது. ஏதோ இன்னும் ஒரு சில சகாப்தங்களின் பின் நிகழும் கதை போலவே புறச்சூழல், உரையாடல்கள், ஆண்-பெண் உறவுகள், அவர்களது மனநிலைகள் வருகின்றன. 2225ல் வாழும் ஒருவனுக்கு காலப்பயணம் செய்து கடந்த காலம் செல்லும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவனுக்கு தான் வாழும் உலகத்தின் அழிவின் அல்லது வீழ்ச்சியின் காரணங்களாகத் தெரியப்போகும் நோய்க்கூறுகள் என்னவாக இருக்கக் கூடும். ஒருபோதும் காந்தியின் இறப்போ, ஹிட்லரின் எழுச்சியோ இருக்கப் போவதில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அவனது சொந்தக் ‘கர்மவினை’ சார்ந்த சிக்கல்களுக்கு சில வேளை அவை காரணங்கள் இருக்கலாம். அவையும் ஊழ்வினை போன்றவற்றைக் கொண்டே புனைவில் விளக்க முடியும். அதற்கும் தர்க்கபூர்வமான சாத்தியம் மிகச் சொற்பமே. அப்படியான புனைவு இணைப்புகள் எவையுமே நாவலில் எழுதப்படவில்லை. நம் சமகாலத்தில் வாழ்பவன் கூட தான் வாழும் இந்த உலகின் நவீன சீரழிவுக்கு தீர்வாக காந்தியையும், நோய்க்கூறாக ஹிட்லரையும் காண்பானா என்பதே சந்தேகம். அந்தத் தெரிவு அவனது வாழ்க்கைப் பார்வை, வரலாற்றுப் பார்வையை ஒட்டியதாக இருக்கும். அப்படியாக வரலாற்றுப் புரிதலும், கடந்த காலம் குறித்த ஓர்மையும் கொண்டிருந்தால் காந்தியைத் தீர்வாகக் கொள்வானா என்பது சந்தேகமே. காந்தியின் இடத்தை, அவருடைய நவீனத்துவம், அதிகாரக் குவிப்பு, தேசிய அரசுகள், மைய அதிகாரம் சார்ந்த சிந்தனை தீற்றலின் வீச்சை அவனால் துல்லியமாகவே உணரமுடியும். நிச்சயமாக பிரதானமான முறிமருந்தாக அல்ல. சர்வலோக நிவாரணியாக அல்ல. இப்படிப் பல பொருளற்ற இணைவுகள் சுனில் கிருஷ்ணனுக்கு தெரியும் என்பதாலேயே நவலில் புகுந்துவிடுகின்றன. அதுவும் இல்லாமல் இந்தக் குருதி வழி நாவலின் மையக் கேள்வியுடன் 2225ம் ஆண்டு உலகநிலை எந்த வகையில் இணைந்து கொள்கிறது? அல்லது இந்த மையக் கேள்வியை அது எப்படி மறுவாசிப்புச் செய்யக் கோருகிறது. அதனூடாக வெளிப்படுவது சுனில் கிருஷ்ணனின் கற்பனை வறட்சி அல்லாமல் வேறு அல்ல. அந்தக் காலப்பயணம், அதனூடாக கடந்த கால உலகில் நிகழ்த்தும் மாற்றங்கள் கூட எளிமையான கற்பனை சாத்தியங்களின் மேலே நின்றிருக்கின்றன அதனால் அவற்றால் வாசிப்புச் சுவாரசியத்தைக் கூடக் கொடுக்க முடியமால் இருக்கிறது.
இந்த நாவலின் அடிப்படைச் சிக்கல் மொழி மாத்திரம் அல்ல. அதன் கட்டமைப்பும் கூடவே. நாவல் உருவாக்கியளிக்கும் புனைவுத் தருணங்கள், சம்பவங்கள் உரையாடல்கள் கூட செறிவாக இல்லை. இரண்டு முரண் பாத்திரங்கள் அப்ப அப்ப சொற்களில் மட்டும் உரையாடிக் கொள்கிறார்கள். அவை இரண்டு தரப்புகளின், மனநிலையின், காலகட்டத்தின் பார்வை வேறுபாடு, கோணங்களுக்கான மோதலாக உரையாடலாக எழுதியெடுக்கப்படவில்லை. அதாவது, குருதி வழி நாவல் ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக்கொள்கிறது. ஆனால் ஒரு முக்கியமான கேள்வி மட்டுமே ஒரு நாவலை நல்ல நாவலாக மாற்றிவிடாது. அந்தக் கேள்வியை மொழிவெளிப்பாடு, நாவல் கட்டமைப்பு, கற்பனை, கதாபாத்திரம், புனைவில் கையாளப்படும் உணச்சிகள் ஆகிய அனைத்திலும் மறுஉருவாக்கும் புனைவாற்றலே ஒரு நாவலின் இலக்கிய மதிப்பை நிர்ணயிக்கிறது. அந்தச் சோதனையில் குருதி வழி பெரும்பாலும் மிகச் சராசரியான முயற்சி மட்டுமே.
*** குருதி வழி சுனில் கிருஷ்ணன் நாவல் வெ. யாவரும் ~ 2026
