
இந்திய செவ்வியல் நாவல்களில் வெளிப்படும் விரிவான சமூகச் சித்திரங்கள் இப்போதும் ஆர்வமூட்டக் கூடியவை. நீலகண்டப் பறவையைத் தேடி, கறுப்பு மண், விஷக்கன்னி, அரை நாழிகை நேரம், ஒரு குடும்பம் சிதைகிறது, அழிந்த பிறகு, ஆரோக்கிய நிகேதனம் போன்றவை. இன்னும் பட்டியல் விரிவானது. அவை மொழிபெயர்பாக தமிழிலும் கிடைக்கின்றன.
இந்த நாவல்களில் பலமாக இருக்கும் இரண்டு முக்கிய இயல்புகள், இதுவரை வந்த ஈழ நாவல்களில் பெரும் குறைபாடுகளாக இருக்கின்றன. ஒன்று, இவை கொடுக்கக்கூடிய விரிவான சமூகச் சித்திரங்கள். இரண்டு, கதாபாத்திரங்கள், சூழல் விவரணைகள் ஆகியவை மிக விரிவாகவே எழுதியெடுக்கப்பட்டிருக்கும் விதம். இந்த முக்கியமான அடிப்படை இயல்புகள் நம்மிடம் தவறவிடப்பட்டிருக்கிறது.
நமது நாவல்களில் மட்டுமல்ல, கவிதைகளிலும் கூட அரசியல் பிரச்சனைகளுக்கு இடம் மிக அதிகம். அவற்றில் வெளிப்பட்ட உணர்ச்சி வேகங்கள்கூட ஒரு ‘காலகட்டத்துடன்’ அப்படியே தங்கிவிட்டவை. அவற்றில் வெளிப்பட்ட சமூகக் கோபம், மனிதாபிமானத்தின் குரல் அளவுக்கு இலக்கிய நுட்பங்களும், நுண்தகவல் செறிவும், மொழிவெளிப்பாடும் மிகக் குறைவு.
தர்பாரி ராகம் நாவலில் நம் நாவல்களைப் போல அரசியல் விமர்சனத்தின் கனல் அதிகம். ஆனால் அதில் காலத்தைக் கடந்த ஒரு பார்வையும் உண்டு. நம் காலத்தின் சனநாயகத்தின் கேலிக் கூத்தைக் கூட அதில் படிக்க முடியும். நம் அரசியல் விமர்சனங்கள் தவறவிட்ட ஒன்று அதில் வெளிப்பாட்டு, அந்த வெளிப்பாடு கலை வெற்றியாகவும் அமைந்திருக்கிறது.
அத்தகைய தர்பாரி ராகம் நாவல் குறித்து ஒரு கட்டுரையை கலைமுகம் இதழ் 82-ல் எழுதியிருக்கிறேன். நண்பர்கள் படிக்கலாம்.
