தாக்கம், பாதிப்பு, பின்பற்றுதல், பிரதியெடுத்தல்

 

பிரதியெடுத்தல் குறித்து ஒரு வேடிக்கையான கூற்று உண்டு. இலக்கியத்தில் பிரதியெடுத்தல் அனுமதிக்கப்படும்.  ஒரே ஒரு நிபந்தனையின் கீழ். அதாவது பிரதியெடுப்பு மூலத்தைவிட மேலானதாக இருக்க வேண்டும். அப்படி மூலத்திலும் மேம்பட்டதாக வெளிப்பட்டுவிட்டால் பிரதியெடுப்பு ‘கொப்பி’ எனக் கொள்ளப்படாது. அது இன்னொரு மூலப் படைப்பே. அவ்வளவுதான். இந்த வேடிக்கைக் கூற்றில் ஒரு கலை உண்மை இருக்கிறது. இலக்கியமும் சரி கலைகளும் சரி எப்போதும் ஒன்றின் தொடர்ச்சிகளாகவே இன்னொன்று இருக்க முடியும். அது ஓரளவிற்கு உண்மையும் கூட. தாக்கத்தின் விகிதம், தன்மை, முறைகள் மாறுபடலாம். ஆனால் மொத்தச் சமூகப் பண்பாட்டுச் சூழலிலிருந்து நொதிக்கும் விளைவுகளாகவே அவை வெளிப்பட முடியும். ஒன்று இன்னொன்றைப் பாதிக்கும். ஒன்றின் தாக்கம் இன்னொன்றில் அபரிமிதமான கலைவெற்றியாக நிகழ முடியும். இத்தகைய பாதிப்புகள் இறந்த காலத்திலிருந்து மட்டுமல்ல சமகாலத்திலிருந்தும் நிகழமுடியும். கடந்த தலைமுறைப் படைப்பாளியின் தாக்கம் மட்டுமல்ல, சமகாலப் படைப்பாளியின் தாக்கமும் இருக்கும். அப்படித்தான் இவை சமூகப் பண்பாட்டுக் கட்டுமானத்தில்  இடையறாத ஓர் ஒழுக்குப் போல நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கே ‘சுயம்பு’ என்பதெல்லாம் வெற்றுப் பாவனைகள் மட்டுமே. குறிப்பாகக் கலைகளில். அதிலும் மொழிவழிக் கலைகளில்.  அதே நேரம் நுண்ணிய உணர்கொம்பு வேறுபாடுகளையும் ஒவ்வொரு நல்ல படைப்பும் கொண்டிருக்கும். நுட்பமான வேறுபாடு என்பது இன்னொன்றின் தாக்கமற்றிருப்பதல்ல, தாக்கம் இன்னொன்றாக உருமாற்றப்படிருக்கும் விதம். அத்தகைய உருமாற்றம் மட்டுமே அவற்றின் கலைத் தனித்துவம் எனச் சுட்ட முடியும். அவை மிக நுட்பமான உப நுண்கூறுகளாலானது . ஆனால் சில சமயம் மொத்தக் கலைச் சூழலின் போக்கையே மாற்றும் மேதைகளில் அவை அபரிமிதமாக நிகழக்கூடியது. காட்டாற்று ஓட்டம் திடீரென பாதை மாற்றி மடை திரும்புவது போல. தமிழில் பாரதியில் நிகழ்ந்தது போல. புதுமைப்பித்தனில் நிகழ்ந்தது போல. அதை ஒரு யுக சந்தி எனலாம். அவர்கள் தங்கள் காலடியில் பிறப்பித்து விட்டவற்றிலிருந்து இன்னொரு புதிய காலகட்டம் தொடங்கும். ஆனால் அவற்றிலும் கூடக் கடந்த காலத்தின், அவர்களது சமகாலத்தின் தாக்கம் இருக்கும். கருத்துகள், சொற்கள், வெளிப்பாட்டு முறை, கட்டுமான முறை அவற்றின் வீச்சை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். 

ஈழ இலக்கியச் சூழலில் படைப்பு, படைப்பாளர், வாசிப்பு, தாக்கம், செம்மையாக்கம், சனநாயகம், விவாதம் குறித்து இன்னோரன்ன மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. உண்மையில் அவை அடிப்படை புரிதல் குறைபாடுகள். ஆனால் அவை வலுவான மூடநம்பிக்கைகளாக இருப்பதாலே அவற்றுக்கு நிரூபணங்கள் கொடுக்க வேண்டியதில்லை. அந்த நம்பிக்கைகளில் ஓரிரண்டைச் சரியான இடங்களில் ஒப்பிக்கத் தெரிந்து வைத்திருப்பதே இங்கே விமர்சனம், எழுத்து. இத்தகைய விநோத ஆனால் திடமான நம்பிக்கை அவர்களிடம் பலமாக இருக்கிறது. கிழக்கிலங்கையில் அது கொஞ்சம் வித்தியாசமாக ஏன் விசித்திரமாகக் கூட ‘பின்நவீனத்துவ’ முகமூடி அணிந்திருக்கும். ஆனால் பாவனை இரண்டிலும் ஒன்றே ஒன்றுதான். தொடர்ந்தும் மூடநம்பிக்கைக் கருத்துகளை ஒப்பித்தே இருபத்தைந்து வருடங்கள் கூட எழுத்தாளராகக் காலம் தள்ளிவிட முடியும். இம்மியும் வளர வேண்டியதில்லை. கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியதில்லை. கருத்துக்களை, சிந்தனைகளைப் பரிசீலித்துக் கொள்ளவேண்டியதில்லை.  அப்படியான பலரும் நம் சூழலில் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் என்னிடம் உரையாட எதுவும் இல்லை, நான் என் படைப்புக்களை வாழையடி வாழையாக வரும் சந்ததியினருக்காகப் பிறப்பித்து விட்டிருக்கிறேன். எனக்கு மிக கூச்சமும் வெட்கமுமாக இருக்கிறது. என்ன என்னத்தை என் படைப்பைப் பற்றி நானே சொல்வது. நான் இன்று கண்டு கொள்ளப்படாமல் விடலாம் ஆனால் வருங்காலத்தில் காப்கா போலவோ, வான்கா போலவோ இந்த உலகமே என் படைப்பைக் கொண்டாடும் என்ற பாவனைகளுடன் இருப்பார்கள். தாங்கள் ஏதோ மொத்த உலகத்தினாலும் வஞ்சிக்கப்பட்டுக் கைவிடப்படவர்களாகக், விமர்சகச் சூழலால் கண்டு கொள்ளப்படாதவர்களாகவே தங்களை எப்போதும் முன்வைப்பார்கள். அதனால்  நிராகரிக்கப்பட்ட கலைஞரின் வேடம் தரித்திருப்பார்கள். ஆனால் அவர்களது  அடியாழத்தில் சமூக ஏற்பிற்கான ஏக்கமும் தவிப்பும் பொங்கி நுரைத்தபடியே  இருக்கும். தங்களுக்கு கிடைக்கும் மீச் சிறிய அங்கீகாரங்களையும் பொதுவில் தாங்களே சொல்லிக் கொள்வார்கள். அப்படிச் சொல்வதில் தவறில்லை. ஆனால் இவர்கள் தங்களை முன் வைக்க கூச்சப்படுவது போன்ற தன்னடக்கமான போலிப் பாவனை காட்டுவார்கள். இவ்வளவு தன்னடக்கம் என்றால் இவற்றை சொல்லாமலே இருக்கலாம் என நாம் ஒருபோதும் எண்ண முடியாது. அது எப்படி அவர்களால் பொதுவில் சொல்லாமல் இருக்க முடியும்? அது ஒரு போதும் முடியாது. இந்தப் பாவனை முகமூடிகளை அணிந்திருப்பவர்களை இலகுவாக  அடையாளம் காண முடியும். மிகை தன்னடக்கமும், பெருந்தன்மையுமாக தொடர்ந்தும் தங்களை முன்வைப்பவர்களாகவே இருப்பார்கள்.  எனக்கு அதில் ஒருவராகத்தான் இளங்கே டிசே தெரிகிறார். அவரது ஒரு பதிவை நண்பர் அனுப்பியிருந்தார். பேஸ்புக் அனுபவப் பகிர்வுகளை பொருட்படுத்தி உரையாடுவதில்லை. ஆனால் இவரது குறிப்பை வாசித்த போது மெக்ஸிக்கோ நாவலை முன் வைக்க ஏன் இத்தனை பாவனை, நடிப்பு, போலித்தனம் என்ற எரிச்சலே உடனே ஏற்பட்டது. கப்கா, வான்கோ இருவரின் நிழலின் கீழ் தன்னை நிறுத்தும் முனைப்பு அருவருப்பூட்டுவது. ஆனால் அவர் சலிப்பில்லாமல் இந்தவகை ‘பாவனை’களையே கடந்த இருபது வருடங்களாக அணிந்து திரிகிறார். எல்லோராலும் கைவிடப்பட்ட, கவனிக்கப்படாத, வஞ்சிக்கப்பட்ட எழுத்தாளர் பாவனை.  இருட்குகைக்குள் எதிர்கால வெளிச்சக் கற்பனைகளுடன் வாழும் மேதை எழுத்தாளராகத் தன்னைக் கற்பனை செய்து கொள்ளும் தன்னடக்கம் அல்லது கழிவிரக்கத் தொனி. அவரது பேஸ்புக் சுவர் முழுவதும் இந்த வெற்றுப் பாவனைகளாலே நிரம்பியிருக்கிறது. 

டி.எஸ்.எலியட்

இளங்கோ டிசே குறிப்பு : 

//

இவ்வாறு மெக்ஸிக்கோ கவனிக்கப்படுவது ஒருபுறமிருக்க அதைச் சிலர் நிராகரிக்கவும் செய்கின்றனர். அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எந்தப் படைப்பும் எல்லோருக்கும் ஏற்ற படைப்பாக ஒருபொழுதும் ஆவதில்லை. ஒரு விமர்சனத்தில் எதையாவது கற்றுக்கொள்வதற்கு இருந்தால் அது மிக நல்லது; காழ்ப்பாக தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக எழுதப்பட்டிருந்தால் அதை நிராகரித்தும் செல்லலாம்.  ஒரு வாசகருக்கு படைப்பை ஏற்கும்/நிராகரிக்கும் உரிமை இருப்பதைப் போல, ஒரு படைப்பாளிக்கும் ஒரு விமர்சனத்தை ஏற்கும்/நிராகரிக்கும் சுதந்திரம் இருக்கின்றது.

மேலும், ஒரு படைப்பு எப்படி ஒரு தரப்பால் நிராகரிக்கப்பட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளும் வாசகர்களால் காலத்தின் நீட்சியில் தொடர்ந்து கொண்டு செல்லப்படும் என்று நம்புகின்றவன் நான். அப்படி இல்லாதுவிட்டால் அவர்களின் காலத்தில் நிராகரிக்கப்பட்ட காஃப்கா வான்கோ போன்ற அரிய படைப்பாளிகள் இன்று நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள். 

ஆக எந்தப்படைப்பாயினும் அது அசல்தன்மையில் இருந்தால் அதற்கான வாசகப்பரப்பைப் பெற்றுக் கொள்ளும். அதை நாம் காலமான நமது முன்னோடி எழுத்தாளர்களின் இன்றும் காலத்தால் கரையுண்டு போகாத அவர்களின் படைப்புக்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

* * *

இதையேன் இவ்வளவு விபரமாகச் சொல்கின்றேன் என்றால், நேற்று நண்பர் ஒருவரோடு பேசும்போது இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் இருந்து வரும் ‘பாவனை’ எழுத்துப் படைப்புக்கள் பற்றிய பேச்சு வந்தது. நண்பர் இன்னொரு தனது நண்பரிடம், அவரில் சமகாலத்தில் எழுதும் படைப்பாளியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகின்றதே என்றபோது, தனது ‘குருவின்’ பாதிப்பு படைப்பில் இருப்பது தனக்குப் பெருமைதான் என்று மற்றவர் சொல்லியிருக்கின்றார்.

நான் சொன்னேன், காலமான படைப்பாளிகளின் பாதிப்பு இருந்தால் கூட கொஞ்சம் சகித்துக்கொள்ளலாம்; சமகாலத்தில் எழுதும் ஒரு படைப்பாளியின் பாதிப்பு இருந்தால் அதை ஏன் ஒருவர் வாசிக்கப் போகின்றார். அசலாக அதை எழுதும் ‘குரு’ எழுத்தாளர்களே நமக்குப் போதுமே என்றேன்.

 “பிதாவே, இவர்களை மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று இயேசு தன்னைச் சிலுவையில் அறையும்போது சொன்னதைக் கூட இவர்களுக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் இவ்வாறு பாவனை செய்து ‘அதே நடையில்’ எழுதுவதை தெரிந்தே செய்கின்றவர்களுக்கு நாம் எதைச் சொன்னாலும் இந்தப் ‘பித்தம்’  இப்போது தெளியப் போவதில்லை.

ஆனால் அவர்கள் எழுதும்போது ஒன்றைக் கவனத்தில் கொள்ளலாம். உண்மையிலே எழுத்து எனக்கு அந்தரங்கமான மகிழ்வையும் நிறைவையும் இப்படிப் பாவனை/பாதிப்போடு எழுதுகின்றபோது தருகின்றதா, இல்லையா? என்று. 

சிலவேளை தங்களுக்குள் ஏதோ ஒரு தருணத்தில் ஆழ்ந்து பார்க்கின்றபோது அவர்களைப் போன்றோர் தமது தனித்துவத்தை எழுத்தில் கண்டடையக்கூடும். அப்படி எழுதுகின்ற எழுத்துக்களே அவர்களை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துமே தவிர, பாவனை எழுத்துக்கள் அல்ல.

* * *

மெக்ஸிக்கோ வாசித்துவிட்டு பேச விரும்பிய நண்பரின் அழைப்பை நான் எடுத்திருந்தாலும் எனக்குப் பேசுவதற்கு நாவல் குறித்து எதுவும் இருக்கப் போவதில்லை. எழுதியவர் அந்த நாவலைப் பற்றிப் பேச பிரதிக்கு அப்பால் என்ன சுவாரசியமாக இருக்கப் போகின்றது. 

கடந்தகாலத்தில் அவ்வாறு மெக்ஸிக்கோ பற்றியோ மற்ற என் படைப்புக்கள் பற்றியோ பேச விரும்பியவர்களுடன், நான் வேறு விடயங்களைப் பேசியே கடந்து வந்திருக்கின்றேன். 

ஒருவர் ஒரு படைப்பை வாசித்துவிட்டு நேரமெடுத்து அது குறித்து பேச விரும்புகின்றார் என்று அறிவதே எனக்குப் போதுமானது. அது எனக்குத் தரும் நிறைவை வேறு எதுவும் தரப்போவதில்லை.

அத்துடன் என் படைப்பை வாசித்து ஒருவர் தனது கருத்தை எழுத்திலோ/பேச்சிலோ பகிரும்போது அவரை வாசகராக அல்ல, அவரை நண்பராகவே நான் ஒவ்வொருமுறையும் நினைத்துக் கொள்வதுண்டு. 

இப்போது மெக்ஸிக்கோ வாசித்து என்னோடு பேச விரும்பிய நண்பருக்கு நன்றி. நீங்கள் இந்த அழகிய கோடை நாளை இன்னும் வனப்புடையதாக எனக்கு ஆக்கியிருக்கின்றீர்கள். 

அவ்வாறே பதிப்பாளர் வேடியப்பனுப்புக்கும் மிக்க நன்றி.

இளங்கோ. டிசே

//

நான் இந்தவகைப் போலியான மிகு பாவனை வெளிப்படும் குறிப்புகளை எள்ளலுடன் கடந்து செல்லவே விரும்புவேன். காரணம் இதில் வெளிப்படுவது தன்னடக்கம் அல்ல என்பது ஒரு காரணம். மற்றது பண்பாடு அல்லது அறிவுச் சூழல் விவாதத்தில் பங்காற்றும் அல்லது பயன் கொள்ளத்தக்க எதுவும் இதில் இல்லை என்பது. 

எனக்கு இலக்கியத்தில் சில வலுவான நம்பிக்கைகள் இருக்கின்றன. படைப்பு, படைப்பாளர், புனைவு, உத்தி, சித்திரிப்பு, தாக்கம், செம்மையாக்கம் குறித்து கருத்துகளும், எண்ணங்களும் இருக்கின்றன. அவற்றை ஓரளவு விரிவாகவே  உரையாட முடியும். ஆனால் இளங்கோ டிசேயிடம் வெளிப்படுவது ஒரு வகை போலித்தனம். ஒன்று இவர் போன்றவர்கள் எங்கும் யாரையும் பெயர் சுட்டி எழுதவே மாட்டார்கள். பொதுவாக எழுதிச் செல்வார்கள். விவாதத்தின் எதிர்தரப்பை வரையறை செய்தால் அதே தரத்தில் சிந்தனை தீரத்தில் தன்னையும் முன்வைக்க வேண்டிய இடர் எழும். அது அவர்களால் முடியாது.  இன்னொன்று  தங்கள் விமர்சனங்களை  பெயர் சுட்டி எழுதினால்  தங்கள் எதிர்த் தரப்புக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் எனப் பசப்புவார்கள். அல்லது அது வீண் கவனக்குறிப்பு என அதை தன்னடக்கத்துடன் தவிர்ப்பதாகப் பாவனை செய்வார்கள். ஆனால் இவர்கள் அடியாழத்தில் ஏங்குவது தங்கள் மீதான சூழலின் ஒட்டு மொத்தமான கவனத்தையும். அதனால் பிறரை அவர்களால் முன்வைத்து எழுத முடிவதில்லை. தங்களுக்கு தோதான பலகீனமான எதிர்த் தரப்பை மட்டும் முன்வைப்பார்கள்.  அதனால் அதை நேரடியாகச் செய்யாமல் இப்படித் தங்களையே முன்வைத்துக் கொள்வார்கள். ஆனால் தாங்கள் பாராட்டி எழுதும் ஒன்றுக்கும் உதவாத புத்தக வாசிப்புப் பாராட்டுக் குறிப்புகளில் கருணையுடன் பெயர் சுட்டுவார்கள். ஏதோ தாங்கள் வாசித்து அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குகின்றோம் என்ற பாவனை மட்டுமே அதில் இருக்கும். பெயர் சுட்டி விமர்சிக்க, கருத்துரைக்க விரும்பாதது பிரச்சனை அல்ல, அப்படி என்றால் அதைக் ’கிசுகிசு’ ஆக எழுதக் கூடாது. கருத்து அல்லது விவாதத் தரப்பாக முன்வைத்து எதிர் கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால் நான் எப்போதும் பெயர் சுட்டி நேரடியாக எழுதவே விரும்புகிறேன். அது இலக்கிய, பண்பாட்டு விவாதத்தில் அவசியமும் கூட. அப்படி பெயர் சுட்டி எழுத விரும்பாவிட்டால் ஒரு போதும் கிசுகிசு பாணியில் எழுதக் கூடாது என்பது என்னுடைய எண்ணம். ஒரு கருத்துத் தரப்பாக எதிர்த் தரப்பின் கருத்துகளைத் தொகுத்து முன்வைத்து உரையாடலாம். அது உரையாடலின் அல்லது விவாதத்தின் அடிப்படைகளுள் ஒன்று. இவர்களுக்குப் பல அடிப்படைகளில் புரிதல் சிக்கல் இருக்கிறது. குறிப்பாக புனைவு, எழுத்து, கதாபாத்திர உருவாக்கம், அசல் தன்மை, பாதிப்பு, செம்மையாக்கம், ஒரு படைப்பில் வெளிப்படும் தகவற் பிழைகளின் எல்லை எனப் பல அடிப்படைக் குழப்பங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை பொதுவில் விவாதிக்க மாட்டார்கள். ஆனால் இவர்களால்  இப்படிக் கிசுகிசு பாணியில் எழுதாமல் இருக்கவும் முடியாது. நான் பெயர் சுட்டி எழுதக் காரணம் எல்லாம் ஓர் கருத்துத்தரப்பு என்ற எண்ணத்தில் தான். உண்மையில் மெக்ஸிக்கோ நூல் தொடர்பான என்னுடைய விமர்சனம் என்பது இளங்கோ டிசேயை நிராகரிப்பதற்கானதல்ல. அப்படி யாரையும் யாரும் நிராகரிக்கவே முடியாது. என்னுடைய புனைவு சார்ந்த சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பியிருந்தேன். அவ்வளவே. அது வெறும் மெக்சிக்கோ நாவல் குறித்த உரையாடல் மட்டுமல்ல. நம் சூழலில் சீழ் போல புரையோடிச் செல்லும் சராசரித்தனத்திற்கு எதிரான விவாதம். ஆனால் இந்த விமர்சனங்களை மெத்தனமாகக் கடந்து செல்ல மிக எளிமைப்படுத்தப்பட்ட சனநாயகப் பார்வை இருக்கிறது. இலக்கியத்தில் இந்த சனநாயகப் பார்வையைக் கோருபவர்களின் போதாமையை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களில் யாரும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை. அத்தகையதொரு பெருந்தன்மையான சனநாயகப் பார்வையை இந்தக் குறிப்பில் இளங்கோவும் லேசாக தொட்டுக் காட்டுகிறார். விமர்சிக்க, நிராகரிக்க அவர்களுக்கும் உரிமை இருக்கிறதுதானே என்கிறார் பெருந்தன்மையாக. இதுவொரு மொண்ணைத் தனமான கடந்து செல்லல் உத்தி. ஒரு விமர்சனத்தை ஒரு படைப்பாளி பொருட்படுத்தலாம், பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அதுவும் ஒரு கருத்து என்ற அளவில் இடமிருப்பதாக சனநாயகத்தின் பண்புகளுடன் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்று, விமர்சனத்தை நிராகரிப்பாக எடுக்க வேண்டியதில்லை. இரண்டு, அது படைப்பாளியை நோக்கியதல்ல. அப்படி விமர்சனத்தின் குரலைக் கேட்டு ஒரு படைப்பாளி திருந்தவும் முடியாது. ஒரு படைப்பு பொதுவில் வந்தபின்னர் அது அந்த சூழலின் பண்பாட்டின் அங்கம். அந்தச் சூழலில் அனல், புனல் வாதம் புரிந்தே தன் இலக்கிய இடத்தை நிறுவிக் கொள்ள வேண்டும். கவிஞர் சுகன் கேட்பது போல இதென்ன மரக்கறிச் சந்தையா? எல்லோரும் கூடி யாவாரம் செய்ய? அவர் பாகற்காய் கொண்டுவருகிறார், நான் கல்லுக் கட்டி நேராக்கிய புடலங்காய் கொண்டுவருகிறேன், பாவம் டிசே அவருக்குத் தோதானது போல வழித் தேங்காயை எடுத்து வருகிறார். ஒன்றாகக் கடை போடுவம், விற்போம் என்று அறைகூவுவதற்கு. 

மெக்ஸிக்கோ விமர்சனக் கட்டுரையில் அதனை ஏன் ஒரு சராசரிப் படைப்பு என மட்டும் சொல்லவில்லை. அது ஏன் ஒரு சராசரியான இலக்கிய முயற்சி என என் கலைப் பார்வை, மொழிப் பார்வை, ஒரு சில உதாரணங்களூடாக விரிவாகவே எழுதியிருந்தேன். ஒரு புனைகதை மெக்ஸிக்கோவில் நடக்கிறது என்றால் அதன் தனித்துவம் புனைவில் எப்படிப் பங்களிப்பாற்றுகிறது, அது எப்படிப் புனைவாக வெளிப்படுகிறது என்பது என்னுடைய அடிப்படைக் கேள்வி. இளங்கோ டிசே புனைவு மொழியில் மெக்ஸிக்கோ பண்பாடு, கலாசாரம், நிலக்காட்சிகள், அவர்களது வாழ்க்கை முறை, அவர்களது ஆண் பெண் உறவுகள் (அது நாவலின் மையம் என்பதால்) எப்படி வெளிப்படுகிறது என்பது கேள்வி. பாரில் மதுக்கலவை குடிப்பது, கடற்கரையில் அமர்ந்து பாடுவது மட்டும் மெக்ஸிக்கோ பண்பாடு ஆகாது. அல்லது ஒரு சில மேலோட்டமான சுற்றுலா தளங்களுக்கு செல்வது மட்டுமாக புனைவு இருக்க முடியாது. அந்தக் கதை நிலம், பண்பாடு, உறவுகள் எப்படி கதாநாயகனின் ஈழப்பண்பாடுடன் உரையாடுகிறது, சேர்கிறது, கொழுகொம்பாக முட்டிப் பற்றி கொள்கிறது என்பது கேள்வி. அவை மொழியால், புனைவு உத்தியால், வாழ்க்கைப் பார்வையால் எப்படி புனைவாக்கப்பட்டிருக்கிறது என்பதே என் கேள்வி? மெக்ஸிக்கோவின் பண்பாட்டை, நிலத்தை எழுதுவதற்கான ஆழமான பார்வை டிசே இளாங்கோவிடம் இல்லை. அதற்கான வாழ்க்கை பார்வையும் இல்லை. முதிரா ஆண் பெண் உறவு மட்டும் இருக்கிறது. ஒரு எளிமையான பகற்கனவு போல. ரமணிச் சந்திரன் பரவாயில்லை என்று எண்ண வைப்பது மாதிரியான தட்டையான மொழி நடை. சித்திரிப்பு அறவே இல்லை. அவர் மொழியூடாக எதனையும் காட்சியாகவோ, உணர்வு நிலைகளையோ சென்றடையவே முடியாது. சிடுக்கோ, மொழி ஆழமோ, கூரிய சொல்லிணைவுகளோ, நல்ல புதிய உவமைகளோ இல்லாத சராசரிக்கும் கீழான புனைவு மொழி என்பது என்னுடைய கருத்து. இல்லை அது ஆண் பெண் உறவின் சிடுக்கை பிராய்டிய நோக்கில் அபாரமாக விளக்குகிறது என்றோ, அல்லது மொழியில் லேசர் துல்லியமும் செறிவுமாக வெளிப்படுகிறது என்றோ யாராவது மறுக்கலாம். அப்படி மறுத்தால் எப்போதும் உரையாடத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் காரணங்கள் இல்லாமல் முன் முடிவுகளை மென்மையாக, தன்னடக்கத்துடன் சொல்லிச் சென்றால் நல்ல பிள்ளையாக பாவனை மட்டுமே செய்ய முடியும். மேற் சுட்டிய கட்டுரைகளில் எத்தனை முடிவுகள் வருகின்றன. இவற்றுக்கு டிசே இளங்கோவின் அபிப்பிராயம் என்பதற்கு அப்பால் ஏதும் கருத்து மதிப்பு இருக்கிறதா? ஒன்றும் இல்லை.

மெக்ஸிக்கோ நாவல் பற்றி தான் பேசப் போவதில்லை என்கிறார். மெக்ஸிக்கோ படைப்பைப் பற்றி மட்டுமல்ல தன்னுடைய எந்தப் படைப்பைக் குறித்தும் பேசப்போவதில்லை என்கிறார். யாருடனும் பேசியதும் இல்லை என்கிறார். சட்டென்று பார்த்தால் மிக நல்ல எழுத்தாள நிலைப்பாடு எனத் தோன்றும். ஆனால் இது ஈழச் சூழலில் இருக்கும் இன்னொரு மூட நம்பிக்கை மட்டுமே. இவருக்கு மெக்ஸிக்கோ குறித்தோ, அல்லது அவரது வேறு படைப்புக்கள் குறித்தோ பேச முடியாமல் இருப்பதன் காரணம்; பேச விரும்பாமையோ, தன்னடக்கமோ அல்ல மெய்க் காரணம். அவற்றில் பேச எதுவுமே இல்லை என்பதே காரணம். ஒரு படைப்புக் குறித்துப் பேச விவாதிக்க எப்போது புனைவில் ஓர் இடம் இருக்கும். அது படைப்பாழங்களை விட்டுச் செல்லும் போது. மொழியில், பண்பாட்டில் செறிவான நுண் விமர்சனங்களை, உரையாடல்களை முன்வைக்கும் போது. அல்லது உறவுகளின், சமகால வாழ்வின் போலிப் பாவனைகளின் இருள் முடிச்சை அவிழ்க்கும் போது. அப்படியான படைப்புகள் எழுத்தாளர் உத்தேசித்ததிலும் ஆழமாக அவர்களை மீறியும் வெளிப்பட்டு இருக்கும். அவற்றில் பேச உரையாட விவாதிக்க விடயங்கள் இருக்கின்றன. அவை ஒருவகையில்  நிலாவரைக் கிணறு போல. உள்ளே இருள் ஆழத்தில் நூற்றாண்டுகளின் பழைய மாட்டு வண்டில் இருக்கும். பீரங்கி இருக்கும், புக்காரா விமானத்தின் செட்டை இருக்கும், எலும்புக் கூடுகளும் இருக்கும். வரலாறாக, தொன்மமாக, கதைகளாக. அதனுள் கால் நனைத்துப் பார்த்துக் கூட அதன் ஆழத்தை தெரிந்து கொள்ள முடியாது. அதை பேசி விவாதித்தே அறிந்து கொள்ள முடியும்.  ஆனால் இவர்களது படைப்புகள் வீட்டுக் கிணறுகள் போல. அவற்றின் அடியாழம் வரை எல்லாம் அப்பட்டமாக தெரியும். படைப்பில் இருப்பதற்கு மேலதிகமாக வாசிக்கும் அர்த்த அடுக்குகளோ, புனைவு இருளோ இருக்காது. வீட்டுக் கிணற்றின் உள்ள இருப்பவை நமக்கு நன்கு தெரிந்த பழக்கமான பொருட்கள்.காகம் எங்கிருந்தோ கொண்டு வந்து போட்ட தேய்ந்த சவற்காரத் துண்டு, அம்மாவின் சட்டை ஊசி போன்றவை.  இதில் பேச, உரையாட, பகிர, விவாதிக்க என்ன இருக்கிறது? குற்றமும் தண்டனையிலும் ரஸ்கல்நிக்கோவின் குற்றமனம், குற்ற விழைவை விவாதிக்கலாம். அம்மா வந்தாளில் அலங்காரத்தமாவின் முடிவை, அப்புவை விடாப்பிடியாக நின்று வேதம் படிக்க அனுப்பிய காரணிகள் வெவ்வேறு கோணங்களில் உரையாடலாம், அந்நியனின் மெர்சே கொலை செய்யும் புறக்காரணிகளை நாள் முழுவதும் விவாதிக்கலாம், பேசலாம். போரும் வாழ்விலும்  நாவலில் நடாஷா ரோஸ்டோவா, அழகனும் மிக நல்லவனுமான இளவரசர் அன்ரூவை விட்டு விட்டு,  முரடனும், அநாகரிகமானவனுமான அனடோல் குராகினுடன் ஓர் இரவில் காதல் வயப்பட்டு ஓடிச் செல்கிறாள் என்பதை விரிவாகவே பேசலாம். கங்கா ஏன் தன்னை வன்புணர்ந்தவனையே(?) திருமணம் செய்து கொள்கிறாள் என்பது உரையாடக் கூடிய கேள்வி. மெக்ஸிக்கோவில் அல்லது இளங்கோ டிசேயின் பிற படைப்புகளில் பேச என்ன இருக்கிறது? ஏதாவது புனைவாழம் வெளிப்படுகிறதா? இல்லை, சிலாகிக்க நல்ல உவமை இருக்கிறதா? இல்லை, நல்ல சொற்சேர்கை இருக்கிறதா? இல்லை, மொழியழகு, சித்தரிப்பு இருக்கிறதா?  இல்லை, புதிய நிலக்காட்சி? இல்லை, உறவுகளின் பாவனைகள் என ஏதாவது இருக்கிறதா? எதுவும் இல்லை. இவர்கள் தங்கள் படைப்புகள் பற்றி உரையாடாமல் தவிர்ப்பதன் முக்கிய காரணம் தன்னடக்கமோ அல்லது தன்னுடைய தன்னுடைய படைப்பை பற்றித் தானே பேசக் கூடாதென்ற நல்லெண்ணமோ (அது நல்லெண்ணம் இல்லை என்பது வேறு விசயம்) இல்லை. அதில் பேச எதுவுமே இல்லை என்பதே ஒரே ஒரு தனிக் காரணம். ஆனால் அதற்கு இத்தனை போலிப் பாவனைகள், வேடங்கள். ஒரு சில அரிதான எழுத்தாளர்களைவிட அநேகம் தங்கள் படைப்புகள் குறித்து பேசியும், உரையாடியும், விவாதித்த படைப்பாளிகளே அதிகம். ஒரு வகையில் அவர்கள் படைப்புகளுக்கு வெளியேயும் தங்கள் படைப்புகளை பேசியும் விவாதித்தும் கொண்டே இருந்தார்கள். அதனால் அவர்களால் நல்ல படைப்புகளை எழுத, தங்கள் போதாமைகளை இட்டு நிரவ முடிந்திருக்கிறது. இந்த போலிப் பாவனையாளார்களால் தங்கள் முந்தைய படைப்பில் இருந்து அடுத்த படைப்புக்கு ஒரு அடி கூட முன்நகர முடியாமைக்கு இந்த வெற்றுப்பாவனைக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. இவர்கள் நம்புகிறார்கள் போல ஏதோ ஒரு மகத்தான படைப்பை எழுதிவிட்டதாக. இந்தச் சூழல் தனக்கும், தன் படைப்புக்கும் எதிராக ஓயாமல் இயங்கிக் கொண்டிருப்பதாக. காப்கா, வான்கோ போன்றோர் தங்கள் காலகட்டத்தை, அதன் அபத்தத்தை, அதன் நெருக்கடியை தம் படைப்புக்களில் மேதமையுடன் படைத்தவர்கள். அவர்களது காலச்சூழல் நின்றிருந்த இடத்திலிருந்து காலத்தால், படைப்பு மேதமையால் முன் நகர்ந்து கொண்டிருந்தவர்கள். அதனால் அவர்களை அவர்களது காலச் சூழலில் சரியாக உள்வாங்க முடியவில்லை. ஆனால் இன்று, அவர்கள் காலத்தை அச்சொட்டாக அவர்கள் வெளிப்படுத்துவதாலே அவர்களின் இடம் உருவாகியிருக்கிறது. இளங்கோ படைப்பில் அப்படி என்ன காலத்தை மீறிய மேதமை வெளிப்படிருக்கிறது? மொழியில்? சொல் முறையில்? உளப்பகுபாய்வில்? இது வெறுமனே நிராகரிக்கப்பட கலைஞர்களுடன் தங்களை பொருத்திக் காணும் இனிய சோம்பல் கனவு அல்லாமல் வேறு அல்ல.

அடுத்தது இந்தத் தாக்கம், பாதிப்புக் குறித்து. செம்மையாகம் குறித்த உரையாடல்களின் போதும் கூட இந்த தாக்கம், பாதிப்பு குறித்து எதிர்மறையாக கருத்துகள் உதிர்த்திருந்தார்கள். ஆனால் அதற்கான தர்கபூர்வமான காரணங்களை முன்வைக்கவில்லை. ஒருவர் படைப்பில் இன்னொருவரின் செம்மையாக்கத்தை அனுமதித்தால் அவருடைய தனித்துவம் கெட்டு விடும் என்றார்கள். அது இழுக்கு, இழிவு என்றார்கள். இப்போது இன்னொருவரின் பாதிப்பு இருந்தால் படிக்க மாட்டோம் என்கிறார்கள். அதிலும் இளங்கோ டிசே இன்னொரு உச்சத்திற்கு சென்று இறந்தவரின் பாதிப்பு இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம், சம காலத்தவரின் பாதிப்பு இருந்தால் என்று அங்கலாய்க்கிறார். இறப்புத்தான் பாதிப்பதற்கான அளவுகோலா என்ன?  முதலில் இவர்கள் பதிப்பு, தாக்கம், பின்பற்றுதல், பிரதியெடுத்தல் என்று எவற்றை சொல்கிறார்கள் என்ற குழப்பம்  இருக்கிறது. நான்கையும் குழப்பிக் கொள்கிறார்கள்.  இன்னொன்று பின்பற்றுதல் அல்லது முன்னோடியாகக் கொள்ளுதல் குறித்த மிக எதிர்மறையான கருத்துக்கள். இது ஏதோ இழுக்கு, ஒரு படைப்பாளியின் ‘தனித்துவதிற்கு’ கேடு என்பது மாதிரிக் காய்கிறார்கள்.  பெரும்பாலும் ஒரு படைப்பாளியை நிராகரிக்க ‘பாதிப்பை’ ஒரு கூரிய ஆயுதமாகக் கையில் எடுக்கிறார்கள். ஆனால் அது எந்தவகையான பாதிப்பு? அது ஏன் சிக்கல்? அந்தப் பாதிப்பு படைப்பின் தரத்தை அல்லது புனைவு அனுபவத்தை எப்படிச் சீரழிக்கிறது என்பது மாதிரியான கருத்துகள் எங்கும் முன்வைப்பதில்லை. 

சரி, இவர்கள் எதைப் பாதிப்பு, தாக்கம், அல்லது பின்பற்றுதல் என வரையறுக்கிறர்கள்? சொற்றொடர் அமைப்பையா? கதை சொல்லும் முறையையா?  பாத்திர உருவாக்கமா? காட்சியமைப்பா? மொழிநடை? சிந்தனை முறையா? புனைவின் கட்டமைப்பா?. ஒரு படைப்பை முன்வைக்க ஒற்றைப்படையான ‘பாதிப்பு’ என்ற அம்சம் மட்டும் போதுமானதல்ல. இந்த பாதிப்பு இதனை விரிவாக அல்லது படைப்புகளை பரவலாக வாசித்து ஒப்பிட்டு இந்தவகை பாதிப்பு சிக்கல், இது புனைவனுபவத்தை மடைமாற்றுகிறதென இவர்கள் முன்வைத்ததாக நான் எங்கும் வாசிக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் உத்தேசிக்கும் ஒற்றைக் குற்றச்சாட்டு மொழிநடை சார்ந்தது என்பது என்னுடைய எண்ணம். பெரும்பாலும் அது மட்டுமே அவர்களுக்கு ஓரளவுக்கு கணில்படுகிறது. அதுவும் ஒரு சில பிரத்தியேக சொற்களைக் கொண்டு அந்தப் பாதிப்பை வரையறை செய்து விடுகிறார்கள். இதிலும் கூடக் குழப்பம் இருக்கிறது. ஒரே சொற்களைத் தொனியை இருவரும் பயன்படுத்துவதால் அது தாக்கம், பின்பற்றுதல், பிரதியெடுத்தல் ஆகிவிடுமா என்பதே கேள்வி. இல்லை அதன் எல்லைகள் என்ன? ஒரு களம் அல்லது புனைவு வெளி இப்படி எதை குறிப்பாக முன்வைக்கிறார்கள் என்ற தெளிவு இவர்கள் எழுத்துகளில் ஒருபோதும் வெளிப்படவில்லை. இலக்கியத்தில் அப்படிச் சுயம்புவாக குறிப்பாக மொழி வழிக் கலைகளில் யாருமே திகழ முடியாது என்பது என்னுடைய எண்ணம். அது டி.எஸ். எலியட்டின் மரபும், தொடர்ச்சியும் கட்டுரையின் தாக்கத்திலிருந்து உருவானது. மொழி, பண்பாட்டு உரையாடல், புனைவுகள் சூழலின் தொடர் நிகழ்வுகள். ஒன்றின் மேல் ஒன்று தொற்றி ஏறிச் செல்பவை. ஒன்றை இன்னொன்று நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதித்துக் கொண்டே இருக்கும். அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தவிர்க்க வேண்டியதுமல்ல. அப்படிப் பாதிப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதற்காகவே ஒற்றை வரியில் ஒரு படைப்பை நிராகரிக்க வேண்டியதுமில்லை. அந்தத் தாக்கம் படைப்பில் எப்படி உருமாறியிருக்கிறது என்பதே கேள்வி. அது கூட எடுத்துரைப்பு, மொழி வெளிப்படு, கதாபாத்திர உருவாக்கம், புனைவுவெளி சார்ந்து இன்னும் நுட்பமாக உரையாட முடியும். இவர்கள் பெரும்பாலும் முன்வைப்பது மாதிரியான மொழித்தாக்கம் அல்லது சொற்களின் தாக்கம் புனைவில் ஒரு பெரிய சிக்கலே இல்லை. அல்லது நிராகரிக்கக் கூடிய அளவான குற்றம் அல்ல. நல்ல கூரிய உரை நடை பலரில் செல்வாக்குச் செலுத்தியபடியே இருக்கும். அப்படி ஒருவரின் சொல் முறையை இன்னொருவர் அடைந்தாலும் அது அதன் மேம்பட்ட, சரி மேம்பட்டது இல்லை என்றாலும் இன்னொரு வடிவம்தானே அல்லாமல் இரண்டும் ஒன்று அல்ல. தாக்கம் பெற்றிருந்தாலும் தனித்த படிமங்கள், சொற்கள், வெளிப்படும் சிந்தனை சார்ந்து என்று அது தனித்துவமாகவும் வெளிப்படக் கூடியது என்பதே உண்மை. அந்தக் கூறுகளின் உட் பட்டியலைக் கவனத்தில் கொள்ளாமல் வெறுமனே ஒற்றை வரியில் பாதிப்பு எனக் கடந்து செல்வது அறியாமை அன்றி வேறல்ல. பாலஸ்தீன கவிதைகளின் பாதிப்பு இல்லாத எண்பதுகளின் ஈழக்கவிஞர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? குறிப்பாக மஹ்மூத் தர்வீஷ். அதனால் எண்பதுகளின் கவிஞர்கள் அனைவரையும் உடனே நிராகரிக்க முடியுமா என்ன? ஆனால் அந்த பாதிப்பு, தாக்கம் ஒரே படித்தானது அல்ல. அதை இங்கே பலரும் கவனிப்பதில்லை. சிலர் சொற்கட்டுமானத்தால் தாக்கம் பெற்றார்கள். சிலர் எடுத்துரைப்பு முறையை எடுத்துத் தங்களதில் பயன்படுத்திக் கொண்டார்கள். சிலர் கவித் தொனியால் தாக்கமுற்றார்கள். இன்னும் சிலர் சொல் உடைப்பை, உணர்வை என அது எத்தனை விதமாகத் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பதைக் கொஞ்சமாகச் சிந்திக்க முடிந்தாலே தெரிந்து கொள்ள முடியும்.  அப்போதே இந்தப் ‘பாதிப்பு’, ‘தாக்கம்’ என்ற ஒற்றை வரி நிராகரிப்பின் அபத்தமும் புரியும்.

ஆனால் இன்னொன்றும் உண்டு இளங்கோ டிசே மாதிரி எழுதுவதற்கு ஒருவர் பிற எழுத்தாளராலோ, அல்லது சூழலாலோ அல்லது கடந்த காலத்தாலோ பாதிப்புற வேண்டியதில்லை. சும்மா இருந்தாலே இந்த சராசரி மொழி, சொல் முறை, சொற்கள், சித்தரிப்பு கைகூடிவரும். அதை அப்படியே வெற்றுப் பாவனைகளுடன் உருட்டிக் கொண்டிருக்கலாம். அவர் சமீபத்தில் சில சிறுகதைகள் எழுதியிருந்தார். ஈழத்தின் உண்மை ஆளுமைகள் பற்றிய புனைவுகள். உண்மை மனிதர்களின் கதைகள். ஆட்டக்காரி ஆனந்தி, புளியடி சாமுவேல். ஆட்டக்காரி ஆனந்தி ஈழத்தின் பழைய தமிழ் துடுப்பாட்டக்காரர் பற்றிய சிறுகதை. மகாதேவன் சதாசிவம். சுருக்கமாக சதா. அவர் ஒரு தனித்துவமான, ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஆட்டக்காரர். அவரை இயற்கை ஆட்டக்காரர் என்பார்கள். அவரது தனித்துவம் சுழல், வேகப் பந்து இரண்டுக்கும் மிக வேகமாக நகரும் காலாட்டம் கொண்டிருப்பது. இந்தியாவின் குலாம் அகமட் ஒருமுறை சொல்லியிருந்தார். ’சதா தன்னுடைய வேகமான அசாதரணமான காலாட்டம் மூலம் என்னை நான் நினைக்கும் இடத்தில் பந்தை பிச் செய்யவிடவேயில்லை’. சதாவின்  காலமான நாற்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு துடுப்பாட்டத்தில் டெஸ்ட் அந்தஸ்துக் கிடைக்கவில்லை. அதனால் உறுதிபடுத்தப்பட்ட தரவுகள் குறைவு. ஆனால் அவரது ஆட்ட முறை குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் இந்திய அணிக்கு எதிராக அவர் அடித்த 215 ஓட்டங்கள் இன்றளவும் செவ்வியல் ஆட்டங்களுள் ஒன்றாக கிரிக்கெட் விமர்சகர்களால் சிலாகிக்கப்படுகிறது. இவை எல்லாமே இணையத்தில் கிடைக்கும் தகவல்கள். இப்படி ஒரு ஆளுமையின் பல கோணங்கள், பார்வைகள் இருக்கின்றன. இவற்றின் சிறு துளிகூட சிறுகதையில் புலப்படவில்லை. ஆட்டக்காரி ஆனந்தி கதையில் மகாதேவன் சதாசிவத்தின் துடுப்பாட்டங் குறித்து ஒரே ஒரு விவரணை மட்டும் இருக்கிறது. அவரது துடுப்பாட்டம் குறித்து. மின்னல் போல மட்டையை சுழற்றக் கூடியவர். இதை எழுத ஒரு புனைவெழுத்தாளன் எதற்கு? அவ்வளவுதான் இவரால் முடிகிறது. இவருக்கு புனைவின் அடிப்படைகள் கூடத் தெரியவில்லை. ஒரு கடந்த கால ஆளுமையைத் தற்காலப் பெண்ணியப் புரிதலுடன் அளக்கும் அரசியல் சராசரித்தனம் மட்டுமே அவரின் கதையில் இருக்கிறது. நீர்த்த மொழியில் புனைவருபவமாகக் கூட விரிக்க முடியவில்லை. இத்தகைய துடுப்பாட்ட மேதையான சதாக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அது புனைவுக் களம். அதில் ஒரு நல்ல படைப்பாளி செல்லக் கூடிய ஆழம் அதிகம். துடுப்பாட்டத்தில் எவ்வளவு மேதையோ,  தனி வாழ்வில் அந்தளவுக்கு வீழ்ச்சியும், மூர்க்கமுமானவர். அவரது வாழ்க்கை பல அடுக்குகள் கொண்டது. குற்றப் பின்னணியானது.  குற்றம், அங்கீகாரம். கொந்தளிப்பு. வீழ்ச்சி என. அதில் பல இருள் முடிச்சுக்கள் இருக்கின்றன. இத்தகைய எந்த அர்த்தத் தளங்களும் இம்மியும் தொட்டுக் கூடப் பார்க்கப்படவில்லை. இது ஒரு சிக்கல். இன்னொன்று அவருக்குக் காலகட்டத்தை, மனநிலையை புனைவில் எழுதுவது என்றால் என்ன என்பது தெரியவில்லை. அந்த காலத் துடுப்பாட்ட பிச் அமைப்பு, துடுப்பாட்ட முறை, உறவுகள், உணர்ச்சிகள், அப்போதிருந்த சிங்கள, தமிழ் உறவு. மேட்டுக்குடி வாழ்வு, மேதமை கொடுத்த புகழ் வெளிச்சம், வீழ்ச்சி,  கிரிக்கெட் வரலாறு என எண்ணற்ற புனைவுச் சாத்தியங்கள் அவரது வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால்  என்ன ஆட்டக்காரி ஆனந்தி கதையில் இதன் எந்த அடிப்படைகளுமே தொட்டுக் கூடப் பார்க்கப்படவில்லை. மாறாக எள்ளளவேனும் நல்ல புனைவனுபவம் கொடுக்க கூடிய புனைவுகளை எழுத, செறிவான மொழியைக் கைக்கொள்ள, நல்ல உவமைகள், சித்திரிப்பை எழுத பாதிப்புக் கொஞ்சமேனும் நிகழவேண்டியிருக்கிறது. அது சங்கத்தின் வெள்ளிவீதியாரில் இருந்து ஜெயமோகன் வரை நீளக் கூடியது. அப்படித் தாக்கம் பெற்ற பலரும் பின்னால் அத்தகைய தாக்கங்களை இன்னொன்றாக மாற்றிக் கொண்டு தங்கள் வெளிப்பாட்டு உச்சங்களை அடைந்ததுதான் நம் இலக்கியவரலாறு. ஒரு படைப்பின் தனித்துவம் அது யாருடைய தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதில் அல்ல; பெற்றவற்றை அது எவ்வாறு வேறொன்றாக உருமாற்றியிருக்கிறது என்பதிலே தங்கியிருக்கிறது. 

“Good artists copy; great artists steal.”  என்ற இன்னொரு கூற்றும் உண்டு. டி.எஸ்.எலியட் சொன்னதன் மாற்றிப்போட்ட வடிவம் என நினைக்கிறேன். இங்கே கொப்பி என்பது ஒரு நல்ல படைப்பின் நுட்பம், பாணி, வடிவம், எடுத்துரைப்பு சார்ந்து இன்னொருவர் பெற்றுக் கொள்ளும் தாக்கம். அதை நல்ல கலைஞன் பிரதியெடுக்கிறான். ஆனால் மேதையோ தன்னுள் உட்செரித்து அதனை இன்னொன்றாகத் தன்னுடைய மேதமையால் நுட்பமாக உரு மாற்றிவிடுகிறான்.  ஆக இருவருமே தாக்கமுறுகிறார்கள் என்பதே நான் இங்கு சுட்ட விரும்புவது.