உள்ளடக்கத்திற்குச் செல்ல
14.10.2026

வண்ணச்சீறடி – நாவல்

பதிப்பாளர் நீலகண்டன் செய்தி அனுப்பியிருந்தார். நல்ல செய்திதான். வண்ணச்சீறடி நாவல் அச்சாகிவிட்டதாம். அச்சகத்திலிருந்து தாளும் ஈர மையுமாகச் சுடச்சுட வந்திருக்கிறதாம். செய்தியுடன் நாவலின் ஒரு படமும் அனுப்பியிருந்தார். படத்தில் நாவலின் அட்டையின் கறுப்பும் செம்மஞ்சளும் துலக்கமாகத் தெரிகின்றன. உதயத்தை அளையும் தளிர் விரல்களா? அன்னையின் ஈரக் கதகதப்புள் சுருண்டிருக்கும் மகவா? கருவறையின் செம்மஞ்சள் பிரதிபலிப்பா? தெரியவில்லை. ஈழ வழக்கில் சொல்வதென்றால் மாட்டுத்தாள் சுற்றி அழகாகப் பொதியப்பட்டிருக்கும் பொதியின் மேல் சரிந்து அமர்ந்திருக்கிறது நாவல்.

ஆம், வண்ணச்சீறடி நாவல் வெளியாகிவிட்டது நண்பர்களே.

பிரதி விரும்பும் இந்திய நண்பர்கள் கருப்புப் பிரதியில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தோழர் நீலகண்டனைத் தொடர்பு கொள்ளலாம்.

ஐரோப்பிய நண்பர்களுக்கு வெள்ளிவீதி இலக்கியக் கூடுகையில் கிடைக்கும். நவம்பர் 1ஆம் திகதி சூரிச்சில் நடைபெறவிருக்கிறது. வண்ணச்சீறடி மட்டுமல்ல,  காலச்சுவடு வெளியீடுகளான கிரிசாந்தின் ‘தத்வமசி’யும் யதார்த்தனின் ‘தோறை’யும் கூட வெள்ளிவீதி இலக்கியக் கூடுகையில் கிடைக்கும்.

கிரிசாந்தும் யதார்த்தனும் ஏலவே நாவலாசிரியர்கள். அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர்கள்.  அதிலும் யதார்த்தன்; கோணங்கி, ப.வெங்கடேசன் போன்ற மூத்தவர்களால் ஏலவே ஞானஸ்தானம் அளிக்கப்பட்டவர். கிரிசாந் ஜெயமோகனின் அனலில் கொஞ்சத்தை அள்ளித் தன் உச்சந்தலையில் வைத்திருப்பவர். நான் இளவல்.  அவ்விரு மூத்த நாவலர்களுடனும் என் முதல் நாவலும் வெளிவருவது நல்லூழே. இப்படியாக என்னுடைய வண்ணச்சீறடியை தமிழின் இடையறாது ஒழுகும் பெரும்பரப்பில் மிக மென்மையாக ஊன்றிக் கொள்கிறேன்.

பிரதி வேண்டும் ஐரோப்பிய நண்பர்கள் அறியத்தரவும். நவம்பர் 1ஆம் திகதிக்குப் பின்னர் வீட்டு முகவரிகளுக்கு அனுப்பிவைக்க முடியும்.

கருப்புப் பிரதிகள் இணையதளம்

***