உள்ளடக்கத்திற்குச் செல்ல
13.11.2026

பிரடி அடி

புறங்கழுத்து அடிமுதல் தோறை வரை.

சரி, ‘புறங்கழுத்து அடி’யின் பொருள் என்ன? ஒருவருக்கு புறங்கழுத்தில் சட்டென்று ஓர் அறை விழுந்தால் என்ன நிகழும். நிலை தடுமாறுவார். அவரது சமநிலை குழம்பும். அதுவரையும் அவரை உறுதியாக தாங்கி வைத்திருந்த தரை பிளந்து கிடுகிடுத்து ஆடும். கால் தடுக்கி அப்படியே சரிந்து மண்ணில் விழுவார். அவர் சமநிலைக்கு மீள நேரமெடுக்கும். சரி இலக்கியத்தில்? புதுமைப்பித்தன் முதல் சுகுமாரன், ஜெயமோகன் ஈறாகப் பலரும் தங்களுக்கு விழுந்த புறங்கழுத்து அடி அனுபவத்தை எழுதி இருக்கிறார்கள். அந்த உருவகம் துல்லியமாக எதனைச் சுட்டுகிறது? சிந்தனையில் மறுபிறப்பு அல்லது புத்தறிவின் தொடக்கம்.  அதாவது, அவர் அது வரையும் அவர் தான் ஆதுரமாக நம்பிய, அவரை உருவாக்கிய சிந்தனையின் மொத்த அடித்தளமுமே ஆட்டம் கண்டு பொறி கலங்கி நிலையழிதல். அது வரைக்குமான அவரது சிந்தனை, நம்பிக்கை, பார்வை அத்திவாரத்தோடு சிதைதல். மொத்த வாழ்க்கைப் பார்வையும் சிதைந்து கலங்கி, கலங்கள் தெளிந்து ஒளிபெற்று மீள்வதே ‘புறங்கழுத்து அடி’. அடி விழுந்தவருடைய சமநிலை மீண்டாலும், சிந்தனையால் இன்னொருவர். சிதைந்த பழைய சிந்தனைக் கூட்டின் சிதைவுகளிலிருந்து இன்னொரு சிந்தனைக் கூட்டை, பார்வையைத் திரும்பவும் கட்டிக் கொள்கிறார். கிட்டத்தட்ட புத்துயிர்ப்பு. இங்கே நிகழ்வது நிரந்தரமான சரணாகதி அல்ல. தொடர்ச்சியான அறிவுசார் சிதைவு,சிதைவிலிருந்து செங்கல் எடுத்து மறுகட்டமைப்பு.  ஆனால் றியாஸ் குரானாவோ ‘புறங்கழுத்து அடி’ என்பது  ஒருவரைக் கழுத்தில் அடி போட்டு, மடக்கிக் காலடியில் அடிமையாக அமரவைத்தல் என நேரடியாக பிழையாகப் பொருள் கேடல் செய்து எனது பாலையில் பூப்பவை கட்டுரைக்கான மறுப்பை ஆரம்பிக்கிறார். களம் புதிது இதழிலில் வெளியாகி இருக்கிறது. உண்மையில் ஆயாசமே எஞ்சுகிறது. எப்படிப் பிழையாக வாசித்தாலும் புறங்கழுத்து அடிக்கு றியாஸ் குரானாவின் சரணாகதி அர்த்தத்தைக் கொடுக்க முடியாது. சரி றியாஸ் குரானாக்கு இலக்கிய அறிவு, புரிந்து கொள்ளும் திறன் கொஞ்சம் மந்தம் என்றால் அப்படியான ‘மந்தர்களையும்’ கருத்திற் கொண்டு பாலையில் பூப்பவை கட்டுரையிலேயே புறங்கழுத்து அடிக்கு அடுத்ததாக ஒரு வரி எழுதியிருக்கிறேன். அது வரைக்குமான சிந்தனைக் கூட்டை உடைத்துக் கட்டக் கூடிய – என்று. அவரின் புரிதலறிவில் என்னுடைய அந்தத் திட்டம் சி உம் பயனற்றுப் போய்விட்டது. றியாஸ் குரானாவால் அதனையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய வழமையான குறுகலான அறிதலால் பிழையாகப் புரிந்து ஏதோ நான் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து அவருடைய வாதத்தையே ஒப்புக் கொள்வதாக அறிவிக்கிறார். அதுவே முதற் கோணல். வழமை போல முழுவதும் கோணல் ஆகியிருக்கிறது.

 //தர்மு பிரசாத்தோ, தனது “பாலையில் பூப்பவை” கட்டுரையில், ‘ஆமாம், எங்கள் புறங்கழுத்தில் அடித்து உட்கார வைக்க இங்கே ஒரு எஜமானன் இல்லையே, நாங்கள் என்ன செய்வோம்?’ என்று ஒரே வரியில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, எனது ஆய்வின் சுமையைப் பாதியாகக் குறைத்துவிட்டார்.//

அறியாமைக்குரிய திமிரைப் பாருங்கள். ஊகக் கற்பனைக்கு ‘ஆய்வு’ என்று அடைமொழி வேறு. காலம் காலமாகப் பொதுவில் வழங்கும் எளிமையான இலக்கிய உருவகத்தை பிழையாகப் புரிந்து கொள்கிறார். அதற்குச் சுரணை கிஞ்சித்தும் இல்லை. ஆனால் அவர் அப்படி ஒரு கருத்தை, உருவகத்தை பிழையாகப் புரிந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும் இவர் எப்படி பின்-நவீனத்துவத்தின் அமைப்பியலின் சிக்கலான சிந்தனைகளை படித்துக் கிரகித்துப் புரிந்து கொண்டார் என்ற சந்தேகம் உடனே எழுந்தால் நீங்களும் என் சஹிருதயரே. ஆனால்  நமக்கு வேறு வழியே இல்லை இப்படியான கருத்தியல் பாமரர்கள் தான் கடந்த 25 வருட ஈழ இலக்கிய வெளியில் அதிகாரத்தை எதிர்க்கும் புரட்சியாளர்களாகச் சாட்டை சுழற்றி நர்த்தனமிடுகிறார்கள். மருத்துவமே அறியாத போலி மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்து நோயாளியைக் கொல்வது நோயாளிக்கான விடுதலை என்கிறார் ரியாஸ் குரானா. ஒட்டு மொத்த இயக்கியச் சூழலும் கடந்த காலத்தில், பழமையில் தேங்கிய குட்டை என்றும், மரபுவாதிகள் என்றும், தன்னைத் தவிர மிகுதி அத்தனை பேரும் அதிகார விருப்புறுதி உடையவர்கள் என்றும் கற்பனை செய்யும் நோய்க்கூற்று நிலை. மொத்தச் சமூகத்தையும் பீடித்திருக்கும் அடிமையேக்கம் அல்லது அதிகார விருப்புறுதி தன்னிடம் மட்டும் ஏன் வெளிப்படுவதில்லை என்ற சிறு சந்தேகமும் எழாத மடைமை.  அப்படி மீச் சிறு சந்தேகமாவது எழுந்திருந்தால் அவரது வாதங்களின் அபத்தம் புரிந்துவிடும்.

@Chaim Soutine

நான் அழுத்தமாகச் சுட்டும் ஒன்று இருக்கிறது. அதிகாரம் என்ற சொல்லை றியாஸ் குரானா மிகப் பிழையான அர்த்தத்தில் பயன்படுத்துகிறார். ஒன்று,  தன்னுடைய பிழையான புரிதல்களைக் காத்துக் கொள்ளும் கவசமாகச் சூடிக் கொள்கிறார். இரண்டு, சமூகச் சூழலைப் புரிந்து கொள்ள மதிப்பிட, தொகுத்துக்கொள்ளும் கருவியாக அதனை அவர் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. ஒட்டு மொத்தமாக பண்பாட்டு, சமூக, அரசியல் செயல்களை நிராகரிக்கவே பயன்படுத்துகிறார்கள். ஓர் ஆயுதமாக. ஏனெனில் இலக்கியம் உட்பட்ட பண்பாட்டுச் செயற்பாடுகளில் நம்பிக்கையோ, நல்லெண்ணமுமோ கூட இவருக்கு இல்லை. ஒரு வகையான எதிர் மனநிலை. அது முழுவதுமாக கசடும், கசப்பு நிறைந்தது. இலக்கிய வம்புகளும், தனிமனித அவதூறுகளும், சிறுமைகளும் நிறைந்தது. சமூக உறவுகளிடையான, பண்பாட்டுச் செயல்களிடையான அதிகாரத்தையும் அதிகார விழைவையும் ஒன்றாகக் குழப்பி தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவு. அதனால் இலக்கியம், பண்பாடுச் செயல்களின் நேர்நிலையான ஆக்கச் செயற்பாடுகளையும் காழ்ப்புடன், குரோதத்துடன் அணுகுவதே கலகக் குரல் என நம்புகிறார்.  உண்மையில் றியாஸ் குரானாக்கு அதிகாரத்தின் சிக்கலான ஊடுபாவுமோ அல்லது அது பண்பாட்டுத்தளத்தில் எப்படி ஊடுருவுகின்றது, செயல்படுகிறது, அதற்கான சமூக நிறுவனங்கள், கட்டமைப்புகள், மன அமைப்புகளில் தொடர்ந்தும் இயங்குகிறது என்றோ அல்லது அதன் நிறுவன கைமாற்ற சாத்தியங்கள் குறித்துக் கொஞ்சமும் புரிதலில்லை. அதற்கு இந்த மறுப்புக் கட்டுரை மட்டுமல்ல, அவர் இதுவரையும் எழுதிய அனைத்துக் கட்டுரைகளில் இருந்தும் வரிக்கு வரி சான்றுகள் கொடுக்க முடியும்.

அதிகாரம் நவீன சிந்தனையில் பல இடங்களிலும் விரிவாக உரையாடப்படும், ஆராயப்படும் ஒரு கருத்தாக்கம்.  அதிகாரம் எப்படி அரசு என்ற அமைப்புகளால் மட்டும் நிலைநிறுத்தப்படுவதில்லை என்பதை பூக்கோ விளக்கினார். அதாவது  அதிகாரம் வெறுமனே ஒரு மையத்திலிருந்து அல்லது மேலிருந்து மட்டுமே உருவாக்கி அளிக்கப்படுவதில்லை. சமூக உறவுகள், நிறுவனங்கள், அன்றாட நடைமுறைகள் அனைத்திலும் அதிகார உறவுகள் உருவாகின்றன. அதிகாரம் மனிதர்களின் நடத்தையையும் செயல்களையும் வடிவமைக்கிறது என்றார். ஃபூக்கோவின் பார்வையில் அதிகாரம் வெறுமனே ஒடுக்குவதல்ல. அது அறிவையும் நடத்தைகளையும் சமூக அடையாளங்களையும் உருவாக்கும் உற்பத்தித்தன்மையையும் கொண்டுள்ளது.அவர் அதிகாரம் செயல்படும் இடங்களில் எதிர்ப்புக்கான சாத்தியமும் இருப்பதை ‘வலியுறுத்துகிறார்’. கூடவே   கிராம்ஷி ஆளும் வர்க்கங்கள் வன்முறையால் மட்டுமல்ல, சமூகத்தின் ஒப்புதலைப் பெறுவதன் மூலமும் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகின்றன. கல்வி, மதம், ஊடகம் போன்ற நிறுவனங்கள் அந்த ஒப்புதலை உருவாக்குவதில் பங்கேற்கின்றன. இதுவே பண்பாட்டு மேலாதிக்கம் உருவாகும் வழிகளில் ஒன்று என்றார். அதாவது  பரஸ்பர ஏற்பின் வழியாகவும்  சமூக அதிகாரம் உருவாகி நிலை நிறுத்தப்படலாம் என்றார். நம் சூழலில் சாதிய மேலாதிக்கத்தைப் புரிந்து கொள்ள அதுவொரு நல்ல பார்வை. பூத்தியார் போன்றவர்கள் தனிமனிதருள் வெளிப்படும் உடல்மொழி, மொழி பேச்சு, ஊடகங்கள், காட்சி விம்பம் சார்ந்து அதிகாரத்தின் ஊடுபாவும் தன்மையை விபரித்திருக்கிறார். ஆனால் இவற்றைக் கொண்டு அந்த பண்பாட்டுச் செயற்பாடுகள் அனைத்தும் அதிகார விழைவு என்று யாருமே வரையறுத்துவிடவில்லை. அவற்றுள் அதிகாரம் இருக்கலாம் என்பதையே அவர்கள் அழுத்தமாகச் சுட்டுகிறார்கள். ஃபூக்கோவின் அதிகாரக் கோட்பாட்டில் ஒரு சமூக உறவுக்குள் அதிகாரம் இயங்குகிறது என்பதற்காக, அதில் பங்கேற்பவர்கள் அதிகாரத்தை விரும்புகிறார்கள் என்று பொருளல்ல என்கிறார். இதையே ரியாஸ் குரானா அதிகாரம் இருப்பதால் ஒன்று அதிகார விழைவு அல்லது அடிமையேக்கம் என எளிமைப்படுத்தி விடுகிறார்.  ஆனால்  ஃபூக்கோ ஒருபோதும் ஒவ்வொரு சமூக, பண்பாட்டு உறவுகளையும் அதிகாரத்திற்கான விழைவாக வரையறுப்பதில்லை. அவற்றினூடாக அதிகாரம் எப்படி உருவாகிறது, செயற்படுகிறது, கடந்து செல்கிறது என்பதனை ஆராய்வதுதான் அவர்களின் ஆய்வு நோக்கம். அதனூடாகச் சமூக, பண்பாட்டு மாற்றம் எப்படி நிகழ்கின்றது என்பதனை விளக்குகிறார்கள் மதிப்பிடுகிறார்கள்.

ஐரோப்பிய நவீனத்துவம் சமூகத்தை ஒருங்கிணைத்ததுடன், புதிய வகையான அதிகார அமைப்புகளையும் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களையும் உருவாக்கியது. அதனையே நவீனத்துவ காலகட்டம் என்கிறோம். சீரான தரப்படுத்தப்பட்ட ஒரே கல்வி, விரிந்த போக்குவரத்து, அச்சு, பத்திரிகை, கைத்தொழில்கள் என்பன அவற்றின் சாதனங்கள். அந்த சாதனங்களூடாக சமூகங்களிடையே பெரும் தொகுப்புகள் நிகழ்ந்தன.  நவீனத்துவம் உருவாக்கிய செயல்முறைகளும் முரண்பாடுகளும் பல்வேறு சிந்தனை மரபுகளின் விமர்சனத்திற்கு உள்ளாயின. அதாவது ஐரோப்பிய நவீனத்துவத்தின் திரண்ட உச்சத்தில் நவீனத்துவத்தின் போதமையை, அதன் அதிகார விருப்புறுதியை,  ஒற்றைப்படை தன்மையை, அறிவின் வன்முறையைப் புரிந்து கொள்ள மேலவர்களின் சிந்தனைகள் உதவும். ஆனால் நாம் அப்போது நவீனத்துவத்தின் மிக ஆரம்பப் படிகளில் நின்றிருந்தோம். ஒற்றை மொழி, ஒத்த பண்பாடு, போன்றன சரியான அர்த்தத்தில் உருவாகவில்லை. அப்போதுதான் சமூகத்தின் பல அடித்தள சாதிகளும், பெண்களும் தங்கள் இடங்களுக்காக சமூக, அரசியல், பண்பாட்டு  தளங்களில் குரல் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்போது உருவாகியிருந்த நவீன அரசுகளின் பெரும்பான்மை வாதத்தால் அரச அதிகாரமிழந்த ஈழத்தமிழர், ஈழ முஸ்லீம்கள் போன்ற சிறிய இனங்களும் தங்கள் பண்பாபாட்டு கட்டுமானத்தை ஆரம்பித்திருந்தன. தங்கள் சுயநிர்ணய உரிமை, அரசியல் அதிகாரம், விடுதலைப் போராட்டம் நோக்கி நகர்ந்தார்கள். ஐரோப்பிய நவீனத்துவத்தின் வரலாற்றுச் சூழலும், காலனிய ஆட்சியையும் அதன் பின்னரான சிங்களப் பெரும்பான்மைவாத அரசியலையும் எதிர்கொண்ட ஈழத்தமிழ்ச் சமூகத்தின் நவீனத்துவ அனுபவமும் ஒரே படித்தானவையே அல்ல. அவற்றின் சமூக, அரசியல் முரண்பாடுகளும் அதிகாரக் கட்டமைப்புகளும் வெவ்வேறு வரலாற்று நிலைமைகளில் உருவானவை. அதாவது காலனிய ஆட்சியையும் அதன் பின்னர் பெரும்பான்மை வாதத்தின் ஒடுக்குமுறையை எதிர் கொண்ட ஈழத்தமிழர்களுடைய அரசியல் விருப்பை வெறுமே அடிமை ஏக்கம் அல்லது அதிகாரத்துக்கான விருப்பம் என ரியாஸ் குரானா எளிமைப்படுத்தி அல்லது பொதுமைப்படுத்தி வரையறுப்பதில் உள்ள தர்க்கப் போதாமைகளையே இங்கே சுட்டுகிறேன். றியாஸ் குரானா அவற்றை அப்படி அதிகாரத்திற்கான விழைவு அல்லது அடிமை ஏக்கம்  என ஒற்றைப்படையாக முன்முடிவுகளுடன் நிறுவிச் செல்கிறார். அவை உருவாகி வந்த சமூக, வரலாற்றுக் காரணங்களை ஒதுக்கிவிட்டு, அரசியல் அபிலாசைகளையும், சுயநிர்ணய விருப்பையும், பண்பாட்டு உறவுகளையும் வெறுமனே அதிகாரம் என்ற ஒற்றை சொல்லால் நிராகரிக்கும் அவருடைய குறுகல்வாதமே சிக்கலானது. அதன் அபத்தமே றியாஸ் குரானாவின் பண்பாட்டு நிராகரிப்பு கட்டுரைகள் முழுவதும் வெளித்தெரிகிறது. அவர் அனைத்து சமூக உறவுகள், இலக்கிய பண்பாட்டுச் செயல்களையும் அதிகாரமாகக் கூட இல்லை அதிகாரத்துக்கான விழைவாகப் பட்டியிலடைத்து நிராகரித்துவிடுகிறார். அதற்கு அவர் தன்னை ஓரளவு முற்போக்கராகக் காடிக்கொள்கிறார். சூழலில் இருக்கும் ஒரு சில எளிமையான முற்போக்குக் கருத்தியல்களில் சார்புநிலை எடுத்தால் அதற்கான உரிமை தனக்கும் கிடைத்துவிட்டதாக எண்ணுகிறார். அதிகார எதிர்ப்பு, பெணியச்சாய்வு, பாஸிசம் போன்ற நம் சூழலில் இலகுவான எல்லோராலும் அணியக்கூடிய முகமூடிகளை அணிந்து கொள்கிறார். அவற்றின் உண்மையான சமூக, வரலாற்றுப் பங்களிப்பை அல்லது தேவையைக் கருத்தில் கொண்டு இயங்குவது, வெளிப்படுவது வேறு, கவசமாகவும் முகமூடியாகவும் அணிந்து பாவனை கொள்வது வேறு.  அதனூடாக தான் எவரையும் அதிகார விருப்புறுதியுள்ளவர்களாக சித்தரிக்கும் அதிகாரத்தைக் கையிலெடுக்கிறார். அதாவது ஒரு செயலில் அதிகாரம் இருப்பது என்பதனாலேயே அது அதிகாரத்துக்கான விழைவு ஆகிவிடாது என்ற மிக முக்கியமான வேறுபாட்டை அவர் ஒருபோதும் கவனத்தில் எடுப்பதில்லை. அந்தளவுக்கு விரிந்த சிந்தனை அவரிடம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே அவரது பார்வையில் மிகுதி அத்தனை பேருமே அதிகாரத்துக்கு ஏங்குபவர்கள். அடிமை மனநிலையில் இருப்பவர்கள். இதுதான் அவரது மிக எளிமையான அதிகாரத் தர்க்கக் கணக்கு. 

மேற்கில் அறிவுஜீவிகள் சொன்னதை உண்டு செரிக்காமல் அப்படியே திரும்பச் ‘சத்தி’யெடுப்பதையே அவர் காலம் காலமாகச் செய்கிறார். நம் சூழலில் அதன் பொருத்தப்பாடு, அதன் விழைவுகள், அதன் தாக்கம் என்பன பற்றிய கரிசனம் கொஞ்சமும் அதில் இருப்பதில்லை. கிட்டத்தட்ட ஒரு அட்சரம் பிசகாமல் சிரமேற்கொள்ளும் மனநிலை. அதாவது ஒருவகை அடிமை மனநிலை என சுருக்கமாகச் சொல்லிச் செல்லலாம். அது குறித்து தமிழில் ஓரளவு விரிவாகவே பேசப்பட்டிருக்கிறது.  ////ஒரு மண்ணும் விளங்காமல் வெறும் மலிவான அரசியல் சொற்தொடர்களை அள்ளிவீசிப் பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் போன்றவற்றை மட்டுமல்லாமல் மார்க்ஸியத்தையும் கொச்சைப்படுத்தி இலக்கியச் சூழலில் தகிடுதத்தம் செய்து வருபவர்கள் மூன்றாவது பிரிவினர். இந்த மூன்றாவது பிரிவில் எம்.ஜி.சுரேஷ், யமுனா ராஜேந்திரன், ரியாஸ் குரானா போன்றவர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். // இது எழுதப்பட்டது 2009 காலப்பகுதி. எழுதியவர் ஷோபாசக்தி. ஷோபாசக்தியின் தீர்க்கதிசனம் அபாரமானது. உண்மையில் ஷோபாசக்தியின் இந்தக் கூற்றை நான் தீவிரமாக வாசிக்க வந்த ஆரம்பங்களில் படித்திருக்கிறேன். 2010 – 2012 களில்.  அப்போது அது கொஞ்சம் பகடியான மிகை கூற்று என்றே எண்ணிப் புன்னகைத்துக் கொண்டேன். ஆனால் இப்படி போகிற போக்கில் ஷோபாசக்தி சொன்ன பல நுண் அவதானங்கள், இலக்கியக் கருத்துகள் பின்னர் மறுக்கமுடியாத உண்மைகள் ஆகியிருக்கின்றன. ஒருவரை நரகத்து முள் என்றார். நானே அதனை அனுபவித்து அறிந்து கொண்டேன். நான் முக்கியமான சிந்தனையாளர் என நம்பி தீவிரமாக வாசித்த இன்னொரு பின்நவீனத்துவ குறியியல் சிந்தனையாளரைப் போலி என்றார். அவருடைய தழுவல் இசைக் கட்டுரைகள், போலி மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது அந்தச் சொல் எவ்வளவு உண்மை உறுதிகொள்ள முடிகிறது. இப்படி  அன்றே ஷோபாசக்தி உள்ளுணர்வின் அபாரமான சிந்தனைத் தீற்றலுடன் வந்தடைந்த இடத்தை நான் பட்டுத் தெளிந்து இன்று நன்கு கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு ரியாஸ் குரானாவின் கவிதைச் செய்கையில் துளியும் மதிப்பில்லை. வெற்றுச் சொற் குவியல், படிமத் திருகல்கள் என்பது என்னுடைய எண்ணம். அவை மாற்றோ, எதிர்கவிதைகளோ அல்ல என்பது என் மதிப்பீடு. அது நவீனகவிதைகள் குறித்த அடிப்படைப் புரிதலின்மையின் விளைவு.  அதன் புரிதல் போதாமைகளை விரிவாகவே பிரதிபலிப்புக்கு எதிரான பிரதிபலிப்பு  என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறேன். நவீன கவிதைகளை எளிமைப்படுத்தி ஒற்றைப் படையாக புரிந்து கொண்டு அதற்கு மாற்றாக கவிதை எழுத வந்ததன் அபத்தத்தை விரிவாகவே சொல்லியிருக்கிறேன். அத்தகைய பிழையான புரிதலின் இன்னொரு விநோத நடனம் தான் அதிகாரத்தை அதிகார விழைவாகாக்கும் அபத்தக் கட்டுரைகள்.  (பார்க்க : பிரதிபலிப்புக்கு எதிரான பிரதிபலிப்பு)   

என்னுடைய பாலையில் பூப்பவை கட்டுரைக்காகன ரியாஸ் குரானாவின் மறுப்பு முழுவதும் இரண்டு அடிப்படைகளில் நின்றிருக்கின்றன. ஒன்று புறங்கழுத்து அடி, இரண்டு அதிகாரம். ‘அதிகாரம்’ என்ற ஒற்றை சொல்லைத்தான் உப்புதூள் தடவி புரட்டி புரட்டி சப்புக் கொட்டுகிறார். ஏதோ அது தனக்கு மட்டும் உரியது போலவும், தான் மட்டும்தான் அதிகாரத்துக்கு எதிரான குரல் என்பது போலவும் அந்தக் குரல் கேட்டும் மொத்த இலக்கியச் சூழலும் பொலபொலத்துப் போய்விட்டது போலவும் பாவனை செய்கிறார். ‘புறங்கழுத்து அடி’ என்ற எளிமையான உருவகத்தைப் புரிந்து கொள்ள முடியாத குருவி மூளைக்காரருடன்தான் நாம் அதிகாரம் குறித்தும், பின்நவீனத்துவம் குறித்தும், அமைப்பியல் குறித்தும் விவாதம் செய்யவேண்டி இருக்கிறது. இதில் பண்பாட்டு அதிகாரம், கூட்டு நனைவிழி, அடிமைத்தனத்துக்கான ஏக்கம் போன கனதியான கலைச் சொற்கள் போன்ற பம்மத்துகள் வேறு இருக்கிறது. பொறுத்தருள்க. 

எளிமையாகச் சொன்னால்  என்னுடைய பாலையில் பூப்பவை மறுப்புக் கட்டுரை றியாஸ் குரானாக்கான ஒரு புறங்கழுத்து அடி தான். அவருக்கு சித்தம் கலங்கியிருப்பது அவரது பதிலில் அப்பட்டமாகத் தெரிகிறது. புறங்கழுத்து அடியைப்ப் பிழையாக புரிந்துகொண்டு அவரது வாதத்தின் மொத்த பலமும் ஆட்டங்கண்டிருந்தாலும் அவரது பதிலின் மேலோட்டமான இணைப்புகள், தர்க்கமற்ற ஊகங்கள், பிழையான புரிதல்கள் என இன்னும் ஒரு சில விடயங்களை திரும்பவும் அழுத்திச் சொல்ல முடியும்.  அது நம் கடமை. கவிமணி சொல்வார். தினமும் வீட்டைக் கூட்டுகிறோம். குப்பைக்கு சுரணை இருந்தால் திரும்ப வருமா? ஆனால் வருகிறதே. நாம் தான் பெருக்கித் தள்ளிக் கொண்டே இருக்கவேண்டும்.

உண்மையில் றியாஸ் குரானா அடுத்த தலைமுறையினரிடம் எதிர்பார்க்கிறார்?  எளிமையான உருவகத்தைப் புரிந்து கொள்ள முடியாத  ரியாஸ் குரானா போன்ற அதிகார எதிர்ப்புப் புரட்சியாளர்களையா, ஈழத்தின் அடுத்த தலைமுறை வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டும். அதற்கு  இவர்களுக்கு என்ன அடிப்படை தகுதி இருக்கிறது? உண்மையில் அவரை எண்ணிப் பரிதாபப்பட மட்டுமே முடியும். தமிழக முன்னோடிகளை வழிகாட்டிகளாகக் கொள்வதற்கு அவர் கற்பனை செய்துகொள்வது போன்ற ஈழ அடிமை ஏக்க மனநிலை அல்ல உண்மைக் காரணம். ரியாஸ் குரானா போன்றவர்களுக்கு அப்படியான தகுதி இல்லை.  றியாஸ் குரானா போன்றவர்களுக்கு ‘அதிகாரம்’ என்ற ஒரு பி.நவீனத்துவச் சொல்லுக்கு அப்பாலான அசல் சிந்தனையோ, இலக்கியச் செயற்பாடுகளோ, இலக்கிய நுட்பங்களோ கொஞ்சம் கூடத் தெரியாது. ஏன் அதிகாரம் என்பதைக் கூட அதன் சரியான ஆனால் சிக்கலான ஊடுபாவும் அர்த்தத்தில் சூழலைப் புரிந்து கொள்ள விளக்க அவர் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. பிறரை நிராகரிக்க கருத்தியல் ஆயுதமாக மட்டும் அதை ஏவுகிறார்கள். முதல் தலைமுறையினரின் தாக்கம் ஒரு படித்தானதும் இல்லை. அது தாக்கம், செல்வாக்கு, பாதிப்பு, தழுவல், பிரதியெடுத்தல் எனும் தளங்களில் இயங்கக் கூடியது. அது விரிவாக உரையாடப்பட வேண்டியவை. இளைய தலைமுறை இலக்கியத்தின், வாழ்கையின், தன்னுடைய அகக் கேள்விகளின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டு முன்னகரச் செய்யக் கூடிய சிந்தனை தீற்றலோ, விரிவான வாழ்க்கைப் பார்வையோ இந்த மூன்றாம் நிலை இலக்கியக்காரர்களிடம் இல்லை. ஏன் தாங்கள் 20 வருடங்களாக நின்று பேசும், உரையாடும் களம் குறித்த அடிப்படைகளே கூட அவர்களுக்கு தெரியாது. அதை மறைக்க கொஞ்சம் புரட்சியாளார் வேடம்கட்டுவார்கள். ஆவேசமாக அதிகாரத்திற்கு எதிராக இரைவார்கள். அவ்வளவுதான் அவர்களின் அறிவின் எல்லை.

என்னுடைய மறுப்பும் சந்தேகங்களும் எளிமையானவை. ஆங்கிலேயர் காலத்தில் அடிமை சேவகம் செய்தவர்கள் வெள்ளாளர்கள். போராட்டகாலத்தில் எப்படி அது ஒட்டு மொத்த மக்களின் மனநிலையாகியது? அப்படி அதிகாரம் உருமாறிச் செல்வதற்கான பாண்டுபாட்டு, சமூகக் காரணிகள் என்ன? சமூக நிறுவனங்கள் என்ன? சரி ஆயுத முனையில் பயந்து மெளனித்திருப்பதும் அடிமை மனநிலையும் ஒன்றா? இல்லையே. ஒரு சமூக ஆயுத முனையில் மெளனித்திருந்தது என்று அவரே சொல்கிறார். பிறகு அது அடிமை மனநிலை என்கிறார்? அது எப்படிச் சாத்தியம். மெளனமகாக இருத்தல் விடுதலை அமைப்பின் செயல்களுக்க மொத்த சம்மதத்தையும் வழங்குவதல்ல? ஒரு அமைப்பின் நோக்கத்தில் நம்பிக்கை வைத்தும் மெளனமாக இருக்கலாம். அல்லது அதன் உறுப்பினர்கள், பங்குபற்றாளர்கள் என அது இன்னும் சிக்கலாக இயங்கக் கூடிய தளம். ஒரு அமைப்பு தன்னுடைய விடுதலை நோக்கிய பயணத்தில் எதோச்சதிகாரத்தைக் கைக்கொள்ளலாம். தடம் புரண்டு போகலாம். அல்லது அதிகார விருப்புறுதி நோக்கிச் சரிந்து வீழலாம். அது விடுதலைக்கான பாதையாக தெரிவு செய்திருக்கும் வழிகளில் எதிர்ப்படும் இடர்கள். ஆனால் அது எப்படி அடிமை நோக்கம் கொண்டுதான் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தது எனச் சொல்லமுடியும்? அதாவது ஒரு சமூகத்தின் விடுதலை விருப்பமும், அந்த விடுதலையை முன்னெடுப்பதாகக் கூறும் அமைப்பின் அதிகார விருப்பமும் ஒன்றல்ல. பின்னாளில் அந்த அமைப்பு எதேச்சதிகாரத்தை நோக்கிச் சென்றிருந்தாலும், அதற்கான மக்களின் ஆதரவு முழுவதையும் அடிமைத்தனத்திற்கான விருப்பமாகப் பின்னோக்கி வரையறுத்துவிட முடியாது. “காலனிய ஆட்சியிடம் சேவகம் செய்த மேட்டுக்குடியினரின் விசுவாசத்தையும், ஆயுத அதிகாரத்தின் கீழ் வாழ்ந்த மக்களின் மௌனத்தையும், தமிழக எழுத்தாளர்களிடம் அறிவைப் பெறும் இளைய தலைமுறையின் செயல்பாட்டையும் ஒரே ‘அடிமை உளவியல்’ என்று வரையறுப்பதற்கான வரலாற்று அடிப்படை என்ன?”  இந்த மூன்றுக்கும் அப்படியான பொது வேர் இருக்க முடியுமா? இவை மூன்றும் வெவ்வேறு தளங்களில் இயங்கக் கூடிய பண்பாட்டு செயல்கள். இப்படி பல தொடர்பே இல்லாத முன் ஊகங்கள் இணைப்புகள். மூன்று காலகட்டங்களிலும் வெவ்வேறு சமூகக் குழுக்கள், தரப்பினிடையே அதிகாரம் எப்படி ஒற்றைப் படையானதாகப் பயனிக்கிறது? அதற்கு வரலாற்றில் எங்கும் முன் உதாரணங்கள் இருக்கின்றனவா? என்னுடைய அடிப்படைக் கேள்விகள் எதனையும் எதிர் கொள்ளாமால் பின்கதவால் தாவிச் சென்று விடுகிறார். ஈழத்தமிழரின் அடிமை மனநிலைக்கு வேராக காலனிய ஆதிக்க சாதி அடிமை சேவகத்தை தூக்கிவரும் போது அவரது தர்க்க வலு பிசுபிசுத்துவிடுகிறது. பின்னர் அதனை இயக்கத்துக்கான கீழ்படிதாக்கி, பின் அதனை தமிழக அறிவாளுமைகளிடம் கற்றுக் கொள்வதை அடிமை ஏக்கமாக முன்வைக்கும் போது மொத்தமாகத் தூர்ந்து விடுகிறது. மூன்றும் அடிப்படையில் வேறுவேரு பண்பாட்டுச் செயற்பாடுகள். இல்லை பண்பாட்டுச் செயற்பாடுகளை அதிகாரம் என வரையறுத்துக் கொண்டாலும் ஒரே படித்தானவை அல்ல. அவை எப்படி அடுத்த அடுத்த தலைமுறையில் எந்த நிறுவனம், செயலூடாகக் கடத்தப்படுகிறது? அதற்கான நிரூபணங்களையோ, கொள்கைகளையோ, பார்வைக் கோணங்களையோ அவரால் முன்வைக்க முடியவில்லை. எனக்கு அவரால் அவற்றை முன்வைக்க முடியாது என்பது தெரியும். அப்ப ஏன் விரிவாக மறுப்பு எழுத வேண்டும். அதற்கு  ஒரே ஒரு காரணம் தான். நம் ஈழ இலக்கியச் சூழலில் சீத்துவத்தை பிதுக்கிக் காட்ட. ஒரு சிந்தனையாளரின், அதிகாரத்துக்கு எதிரான மாபெரும் புரட்சியாளரின் அறியாமையை துலக்கிக் காட்ட. நீ என்ன வெளிச்சமிட்டுக் காட்டுவது நானே என்னை, என் அறியாமையை வெளிக்காட்டிக் கொள்கின்றேன் என்று என்னை விட அவரே முனைப்பாக தன்னுடைய அறியாமையை, ஏன் ஈழத் தமிழ் புதிய தலைமுறை தமிழக முன்னோடிகளைத் தங்கள் வழிகாட்டிகளாக வரித்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையை நிரூபித்து விடுகிறார்.மிக்க அன்பும், நன்றியும் சகவே.

முடிவாக . ஒன்று அதிகாரத்தின் கீழ் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பலவகையான செயல்பாடுகளை ஒரே அடிமை உளவியலுக்குள் குறுக்கிவிட முடியாது. அதாவது, ஒரு விடுதலைப் போராட்டத்தை மக்கள் ஆதரிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தேசிய உரிமைக்கான விருப்பம், பாதுகாப்பின் தேவை, அரசியல் நம்பிக்கை, சமூக அழுத்தம், அச்சம் ஆகியவை ஒரே காலத்தில் செயல்படக்கூடும்.  

@Francis Bacon

தமிழகத்தின் இன்றைய இலக்கிய முகங்களாக அறியப்படும் ஆளுமைகளில் பெரும் விழுக்காட்டினருக்கு தொடர்ச்சியும் ஆசிரியர் நிரையும் இருக்கிறது. பலருக்கும் அவர்களது எழுத்துகளில் வெளிப்படும் தொனி, சொல் முறை, கவனம் குவியும் விடயம் போன்றவற்றைக் கருத்திலெடுத்து அப்படியான தொடர்பை விமர்சகர்கள் சுட்டிக் காட்டுவார்கள். அது விமர்சனத்தின் வழி. அவர்கள் எல்லாம் தங்கள் முன்னோடிகளின் மடத்தலால் புறங்கழுத்து அடி வாங்கி சித்தம் கலங்கித் தெளிந்தவர்களே.  நீண்ட பட்டியல் கொடுக்க முடியும். அது நவீன சிற்றிதழ் மரபில் மட்டும் அல்ல. இடதுசாரி அணியிலும் உண்டு. அது ஒரு வகையில் இலக்கியம், சிந்தனை, அறிவுச் செயற்பாடு தலைமுறைக்கும் கைமாறிச் செல்லும் வழிமுறையும் கூட. அறிவின் சுடர் தகிக்கும் மூளைகளில் தொற்றி ஏறிச் செல்கிறது. தீ என்பதால் மட்டும் அது ஒன்றும் அல்ல. இன்று தனித்த ஆளுமைகளாக இருப்பவர்கள் பலரும் தங்கள் முன்னோடிகளிடம் பணிந்து கற்றுக் கொண்டவர்கள் தான். அதை வெளிப்படையாகப் பொதுவில் முன்வைத்தும் இருக்கிறார்கள். முன்னோடிகளிடம் விவாதித்து, விலகி தங்களுக்கான தனிப்பாதையை அமைத்துக் கொண்டவர்கள். தன்னுடைய முன்னோடியால் சிந்தனையில் புறங்கழுத்து அடிபடாத ஒருவரைக் கூட சுட்ட முடியாது. இவர்கள் ஏதோ முன்னுரை வாங்குவதையும், ஒரு முன்னோடி தனது அடுத்த தலைமுறைப் படைப்பாளியை முன்வைப்பதையும் அடிமைச் சாசனமாக எண்ணிப் பேதலிக்கிறார்கள். ஏன் ரியாஸ் குரானா கூடத்தான் தன்னுடைய நூலிற்கு கருணாகரனிடம் முன்னுரை வாங்கினார். அப்படியென்றால் என்ன றியாஸ் குரானா கருணாகரனின் புறங்கழுத்து அடிமையா என்ன? அது இலக்கியச் செயற்பாடு. அதை அடிமைகளை உருவாக்கும் செயலாகவோ, உண்டும் கொடுத்தும் மொய்வைக்கும் செயலாகவோ மட்டும் குறுக்கிவிட முடியாது. 

இன்னொன்று இந்தவகையான இலக்கிய, பண்பாட்டு ஊடாட்டம் ஏதோ யுத்தத்திற்குப் பின்னராக அடிமை ஏக்கத்தின் விழைவாக தோன்றிய ஒன்றாக குறுக்குவதும் பிழையானது. முதலில் அது பண்பாட்டு ஊடாட்டம். அறிவுச் செயல்பாடு கைமாறிச் செல்லும் வழி என்ற புரிதல் வேண்டும். இல்லை என மறுப்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். கடந்தகால ஈழ இலக்கிய வரலாற்று அறிவோ, பண்பாட்டு ஊடாட்டம் குறித்த அடிப்படைகளோ தெரியாத ஒருவராக இருக்க வேண்டும். இரண்டுக்கும் தகுதியானவர் ரியாஸ் குரானா என்பதால் அப்படிக் கருதிக் கொள்வற்கு அதனை உரிமையும், அறிவுத்திறனும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது அல்ல உண்மை நிலமை. தமிழகம் – ஈழம் இரண்டும் எத்தனை தனித்துவமானதோ அத்தனைக்கு அத்தனை பண்பாட்டு ஊடாட்டமும் உள்ள வெளிகள். அவற்றின் தொடர்பு வேர் தொன்மையானது. இந்தப் பிரிப்பை ஆதிக்கம்- அடிமையாக உரையாடுவர்கள்  ஈழத்தின் தனித்துவத்தை அறியாதவர்கள். கூடவே தமிழகத்தின் தொடர்ப்பைப் பங்களிப்பைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள். ஒரே இலக்கிய மரபினுள் இருக்கும் அறிவு ஊடாட்டத்தை எப்படி இரண்டு இனங்கள், வேறுபட்ட பண்பாடுகளுக்கிடையான அதிகாரா ஊடாட்டமாக உரையாட முடியும்? அது கொஞ்சம் திறமை குறைந்தவர்கள் தங்களுக்காக தனித்த அணி அமைத்துக் கொள்வது போன்றது.  ஈழம் எத்தனைக்கு எத்தனை தனித்துவமான பண்பாட்டு அடையளாங்களைக் கொண்டிருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை ஒத்த கூறுகளையும், உரையாடலையும் ,ஊடாட்டத்தையும் கொண்டிருக்கிறது. இரண்டையும் பிரித்து அடிமை-ஆண்டானாக ஒரு போதும் உரையாடவே முடியாது. அதாவது ஈழத்தின் இலக்கியச், சமூகப், பண்பாட்டுத் தனித்துவம் சமீபத்தியது அல்ல.  ஈழம் போரின் பின்னராக புதுத் திணையைத் திறந்த போது உருவானதுமல்ல. அதற்கு முன்னரும் இருந்தது. இருக்கிறது. இருக்கும்.  ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மொழி, இலக்கிய, பண்பாட்டு உறவை எனது முதல் கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். அந்த வரலாற்று விளக்கத்தை எதிர்கொள்ளாமல், ஏன் 2009க்குப் பின்னரான இலக்கிய உறவை மட்டும் அடிமை உளவியலின் தொடர்ச்சியாக வாசிக்க முடியுமா? நம் முன்னோடிகளோ அல்லது இலக்கியவாதிகளோ யாரும் அப்படியான பிரிப்பை செய்து கொள்வதில்லை. அது அவசியம் கூட இல்லை. ஒரு மொழிக்குள் பல பண்பாட்டு, பிரதேச, வட்டாரக் கூறுகள் இருக்கலாம். அவை கொண்டும் கொடுத்தும் ஊட்டம் பெற்றுக் கொள்ளலாம். அப்படியான ஒரு இடம்தான் ஈழம். 

உண்மையில் இவர்களிடம் அடிப்படைப் புரிதலில் பல குறைபாடுகள் இருக்கின்றன. தாங்கள் புழங்கும் கருத்துக் கூறும் சூழல் குறித்த அடிப்படை வாசிப்பே இருப்பதில்லை. அதன் வரலாறுகளோ, நடந்த விவாதங்களோ வாசித்துப் புரிந்து கொண்டதற்கான தடயங்களோ எழுத்தில் இல்லை. போருக்குப் பிறகான ஈழத் தலைமுறை தமிழக முன்னோடிகளிடம் அறிவுசார் அடைக்கலம் தேடுகிறது என்பதை தெரிதா, பூக்கோ துணைக்கொண்டு விளக்க மழுமட்டிகளால் மட்டுமே முடியும்.  அதற்கு ஒரு சில முன் முடிவுகளுடன் கூடிய அபிப்பிராயங்களுக்கு பின்நவீனத்துவ சிந்தனையின் கலைச் சொற்களை இரவல் வாங்கி வருவார்கள்.  நான் உலகின் முதல் குரங்கு தமிழ் குரங்காக இருந்த காலத்தில் இருந்து தொடரும் பந்தம் என்பதை ஏதோ பெருமிதத்தில் சொல்வதாக வாசித்திருக்கிறார். உலகின் முதல் குரங்கு தமிழ் குரங்கு என்பது புதுமைப்பித்தனின் கூற்று. அவர் தமிழ் பெருமிதத்தை எள்ளல் செய்ய சொன்ன கூற்று. 

ஈழத்தின் புதிய தலைமுறை மட்டுமல்ல அதற்கு முந்தைய தலைமுறை கூட எப்போதும் தமிழகத்தின் உள்ளேயான பண்பாடாகவே தன்னை முன்வைத்து செயலாற்றி இருக்கிறது. அதன் தொடர்ச்சி நீண்டது. சி.வை.தமோதரம் பிள்ளையில் இருந்து ஆறுமுகநாவலர், விபுலானந்தர் வரை பலரும் செயற்பட்ட களம் தமிழகமாகத்தான் இருந்திருக்கிறது. விபுலானந்தர் தான் பாரதியின் புதுக்கவிதைகளை மிக தொடக்க நிலையிலே முன்வைத்து அடையாளப் படுத்தியவர். உண்மையில் இவ்விரு இரண்டு களங்களையும் அப்படி எதிரெதிராகப் பகுக்க முடியாது. டொமினிக் ஜீவாக்கு புறங்கழுத்து அடி கொடுத்து அவரது சிந்தனைக் கூட்டை கலைத்து அடுக்கியவர் ப.ஜீவானந்தம். அப்படி நம் முன்னோடிகள் பலரும் அங்கிருந்தே ஊக்கம் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் ஈழத்தின் மிக நல்ல படைப்புக்களுக்கான கவனம் எப்போதும் தமிழகத்தில் இருந்தே வந்திருக்கிறது. இன்று வரையும் அ.முத்துலிங்கத்தையும், ஷோபாசக்தியையும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முகமாக முன்வைத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழகத்தவர்கள் தான். ஈழம் தன்னுடைய எளிமையான அரசியல் காழ்புகளால் அவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. அவர்களது படைப்பு குறித்து உருப்படியான ஒரு கட்டுரை இதுவரை இல்லை. ரியாஸ் குரானா இச்சா க்கு ஓர் பதிவு எழுதினார். அது இச்சா நாவலில் வரும் பெரியபள்ளன் குளம் என்று ஒன்று உண்மையில் இருந்ததா என்பதை ஆராய்ச்சி செய்வதில் சென்று முடிந்தது. அவ்வளவுதான் புனைவுப் புரிதல். ஈழம் தன் முக்கிய முன்னோடிகளில் கருத்துகள், பார்வைகள் பொதுவில் பொருட்படுத்தப்படுவதுமில்லை. அவர்களை தங்கள் பண்பாட்டின் முகங்களாக முன் வைப்பதுமில்லை. இவர்களுக்கு மட்டுமல்ல ஈழத்தின் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளையும் தமிழகம் கரிசனையுடன் சரியாக தொடர்ச்சியாக முன்வைத்தபடியே இருக்கிறது. இதழ்களில் மதிப்புரைகள் வருகின்றன. கூட்டங்கள் ஏற்பாடாகின்றன. கே.டானியலின் முழுத்தொகுப்பு வருகிறது.  அதற்கு தமிழகத்தில் சிறிய வலுவான பண்பாட்டு அமைப்புகள் இருக்கின்றன. சிற்றிதழ் சூழல் இருக்கிறது. அறிவுரையாடலுக்கான தொடர்ச்சியான களம் இருக்கிறது. ஒரு இளம்படைப்பாளி தன் தடுமாற்றங்கள், அடிப்படை புரிதல் பிழைகளைக் களைவதற்கான மூத்த ஆசிரியர் நிரை இருக்கிறது. ஒன்றைப் பற்றிப் பிடித்து தொற்றி ஏறிவருவதற்கான வலுவான கவனப்படுத்தல் இருக்கிறது. 

ஈழத்தின் வாசிப்பு, இலக்கியப் பண்பாட்டு சூழல் மிகவும் நஞ்சூறியது. அதற்கு விரிந்த நேர்நிலையான பார்வைகள் இல்லாதது. ஆதாயம் இல்லாத செயல்களை அது அசட்டை செய்கிறது. உதறி விடுகிறது. இலக்கியமும், கலைகளும் இன்றுவரை பொழுதுபோக்காகவே அணுகுகிறது. அதனை ஒரு அறிதலாகவோ, வாழ்கைக்கான அடிப்படைகளை தெரிந்து கொள்ளும் வழியாகவோ கொள்ளும் அறிவுசார் உரையாடலே தொடங்கப்படவில்லை. ஒரு வகைச் சிந்தனைத் தேக்கம். திரைப்படத்தின் முதற் காட்சிக்கு மனம் கோணமல் காசு இரப்பவர்கள். புத்தகங்களுக்கு இரக்க கை கூசுகிறது. அது அநாவசியம் என நினைக்கிறார்கள். 

ஒரு புத்தகம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டால் அது புத்தகத்துக்கான விளம்பரம் எனப் புன்னகைக்கிறார்கள். தடையிலிருக்கும் அநீதி, கருத்துச் சுதந்திர மறுப்பின், அரச ஒடுக்குமுறையின் அவலத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத இருள் மண்டியவர்கள். தோறை நாவலின் தலைப்புக்கு பலரும் விமர்சனம் எழுதியிருந்தார்கள். முகநூல் விமர்சனம். விமர்சனம் அல்லக் கண்டனம். அல்ல ஓர் கலாச்சார ஒழுக்கவாதத் தடை. ஒன்று கொந்தளித்த யாரும் நாவலை படிக்கவில்லை. படிக்கப் போவதும் இல்லை. ஆனால் அது பிரச்சனை இல்லை. ரியாஸ் குரானா உட்பட பலரும் எழுதுகிறார் அடுத்த தலைமுறை இந்த சொல்லைப் பார்த்துக் கெட்டு விடுமாம். கூடவே ஆணதிக்க வசைச் சொல் என்ற அரிய கண்டுபிடிப்பு வேறு. சூழலில் மறைந்த சொல்லை ஆணாதிக்க வெறியர்கள் புதுப்பிக்கிறார்கள் என்ற ஆதங்கம் வேறு. அமைப்பியல் மொழியில் புழங்கும் சொற்களுக்கு நிலையான அர்த்தம் என்று ஒன்று இல்லை என்கிறது. அது அமைப்பால் பரஸ்பர ஒப்புதலுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட தற்காலிக ஏற்பாடுதான் என்கிறது. பழைய மொழிக் கொள்கை விபரித்த பொதுநம்பிக்கை போல சொல்லிற்கும், சொல் சுட்டும் பொருளுக்குமான அர்த்தம் என்றும் நிலையானதோ, என்றும் மாறாதிருக்கக் கூடியதோ இல்லை என்கிறது அமைப்பியல். சொற்களுக்கும் அவை சுட்டும் பொருள்களுக்கும் இயற்கையான, மாறாத தொடர்பு இல்லை என்பது நவீன மொழியில வந்தடைந்திருக்கும் இடம்.  சரி அமைப்பியல் வேண்டாம். தலித்தியம் பெண்ணியம் போன்ற விடுதலைக் கருத்தியல்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவான அடையாளங்களை எதிர்ப்பின் வடிவங்களாக பெருமிதமாக முன்வைத்திருக்கின்றன. அது ஒர் போராட்ட வழிமுறை. கவிதைகளில், கதைகளில் நேரடியாக இழிவுச் சொற்கள், உறுப்புக்களை பயன்படுத்தியிருக்கிறது பெண்ணியம். தூமை, நீலி பெண்களால் நடத்தப்படும் பெண்ணிய இதழ்களின் பெயர்கள். பறை ஒரு காலத்தில் இழிவின் அடையாளாக இருந்தது. தலித்தியம் அதை மீட்டெடுத்து புது அர்த்தம் கொடுத்திருக்கிறது. சாதியில் ஊறிய தமிழ் சமூகத்தின் முதன்மை அடையாளமாக எதிர்ப்பின் வடிவமாக பொதுச் சூழலிற்கு வந்திருக்கிறது. சாவு வீட்டில் இழிவுடன் பார்க்கப்பட்ட, ஒதுக்கப்பட பறை போராட்டங்களின் முன் களத்தில் கார்வையுடன் ஒலிக்கிறது. மலேசியாவில் இருந்து வந்த இதழின் பெயர் பறை. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க நடந்த பெரும் சமூக மாற்றம் அது. இந்த வகை சிந்தனைகள், வரலாறுகள் எவையுமே தெரியாத அற்பர்கள், பெண்ணியர்கள் தான் நம் சிந்தனையாளர். அப்படியென்றால் தோறை நாவலில் எப்படி பொருள் கொள்கிறது என்பதுதான் கேள்வி? அதாவது அது பழைய இழிவான ஆணாதிக்க அர்த்தத்தை மறு உற்பத்தி செய்கிறதா இல்லை அதனை மறுத்து மறுவரை செய்கிறதா என்பதே உரையாடலாக இருக்க முடியும். அதற்கு நாவலைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. அதெல்லாம் செய்ய இவர்களுக்கு எங்கு நேரம், பொறுமை, பொறுப்பு இருக்கிறது. அதற்காக புரட்சியாளர் வேடம்கட்ட கிடைத்த வாய்ப்பையும் கைவிட மனமில்லை. ஆனால் தமிழகச் சூழல் அப்படி அல்ல. அங்கே என்றால் எத்தனை கோணங்களில் அது விவாதிக்கப்பட்டிருக்கும். பெருமாள் முருகனின் மாதொருபாகனுக்கு நிகழ்ந்தது போல. கலாச்சார தடை அழுத்தங்கள் வந்த போதும் அதன் புனைவு, வரலாறு, தொன்மம் சார்ந்த பல புனைவு முறைகள் கவனத்தில் எடுக்கப்பட்டிருந்தன. எப்போதும் தமிழகத்தின் நல்ல இலக்கிய ரசனைக்கான உணர் கொம்புகள்  சலித்துத் தேடியபடி இருக்கிறது. தேடி தேடி தனித்துவங்களை முன்வைக்கிறது. விமர்சிக்கிறது. கரிசனை கொண்டு கைதூக்கி விடுகிறது. அது பல நூற்றாண்டுகளாக நிகழும் தொடர் செயல். இன்றும் தமிழின் முதல் சிந்தனையாளார் என்பவர் மு.தளையசிங்கம் தான். அவரை ஈழத்தவர்கள் ஏதோ கொஞ்சம் கிறுக்கான ஆன்மீகவாதி என்றே வாசிக்கிறார்கள். சில ஈழத்தவர் மு.தளையசிங்கம் எழுதிய சமூக அவதானங்களுக்காக சாதியவாதி எனவும் அவரை வசைபாடுகிறார்கள். ஆனால் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தால் ஆதிக்க சாதியால் தலையில் அடிபட்டு அது அவரை இறப்பு வரை கொண்டு சென்றது என்பது அவர்களுக்கு கணக்கு இல்லை. தங்களின் சாதி எதிர்ப்புமனநிலையைப் பிதுக்கிக்காட்ட ஒரு சாட்டு.  தமிழிலக்கியத்தின் விமர்சன முன்னோடி க.கைலாசபதிதான். இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்குமான தொடர்ப்பை- விமர்சன மரபை உண்மையான அர்த்தத்தில் தொடங்கி வைத்தவர் அவர்தான் என்கிறார்கள் தமிழகத்தவர்கள். இதையும் தமிழகம் தான் நமக்கு இடித்துரைக்க வேண்டி இருக்கிறது. நவீன தமிழின் பாரதிக்குப் பிறகான பெருங்கவிஞன் பிரமிள் தான். அதையும் தமிழகம் தான் நிறுவியிருக்கிறது. எஸ்.பொன்னுத்துரையின் படைப்புப் பற்றி விரிவாக எழுதப்படிருக்கிறது. அவரது படைப்புக்களில் வெளிப்படக் கூடிய யாழ்ப்பாண மத்தியதர வாழ்க்கையின் கலாச்சார உட்குறிப்புகள் கூட விரிவாக அணுகப்பட்டிருக்கிறது.  தமிழின் தலித் இலக்கிய முன்னோடிகளுள் முக்கியமானவர்கள், சில தொடக்கங்களை செய்தவர்கள் கே.டானியல் என்கிறார்கள் தமிழகத்தவர்கள். மரணத்துள் வாழ்வோம் கவிதைத்தொகுப்பு தமிழகத்தில் இன்றுவரை செய்துவரும் தாக்கம் குறித்து கவிஞர் சாம்ராஜ் பேசியிருக்கிறார். என்.கே.ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் கதை குறித்து மிகச் சமீபத்தில் கூட ஓர் உரையில் கேட்டேன். நாம் அதை மறந்து பல மாமங்கம் ஆகிவிட்டது. தெளிவத்தை ஜோசப் புதிய தலைமுறை தமிழக வாசகர்களால் வாசிக்கப்பட்டு உரையாடப்படுகிறார். நம் முன்னோடிகள் குறித்து, அவர்களது படைப்புகள் குறித்து, அவர்கள் வாழ்க்கை நோக்கு குறித்து, அவர்களது பண்பாட்டுப் பங்களிப்புக் குறித்து நம் அடுத்த தலைமுறை பொருட்படுத்தி வாசிக்க கூடிய ஒரு கட்டுரை கூட இன்னும் நம்மவர்களால் எழுதப்படவில்லை. அப்ப இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எளிமையான அரசியல் கணக்குகள். பிழையான கோட்பாட்டுப் புரிதல்கள். காழ்பு. தனிநபர் வசையூடாக இலக்கியத்தை மதிப்பிடுவது. அதாவது இல்லாததை உடைக்கிறார்கள். இல்லாததை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள். அதிகாரத்தை எதிர்த்து மாபெரும் புரட்சி செய்கிறார்கள். எப்படி வாயால் தான். 

உண்மையில் ரியாஸ் குரான மாற்றுச் சித்தனையாளரோ, அதிகாரங்களை எதிர்க்கும் கலகக்காரரோ அல்ல. அதற்கான விரிவான வாசிப்போ, பண்பாட்டு புரிதலோ, இலக்கிய அறிவோ அவரிடம் இல்லை. ஒரு பண்பாட்டை விமர்சிக்க, அதனை எள்ளல் செய்ய அல்லது இடித்துரைக்க அந்தப் பண்பாட்டின் சமூக வரலாற்றினுள் ஆழங்கால் பட்டிருக்க வேண்டும். நிராகரிக்க அல்ல முதலில் புரிந்துகொள்ள முடியவேண்டும். தொகுத்துக் கொள்ளவேண்டும். விரிவான சிந்தனைப் புலத்தில், வரலாற்றில் வைத்து அதன் சமூக கலாச்சார பின்புலங்களை மதிப்பிடத் தெரிந்திருக்க வேண்டும். கிளிப்பிள்ளை மாதிரி ஒரே சொல்லை பல்லாண்டுகளாக ஒப்பித்துக் கொண்டிருக்க முடியாது. இருபத்தைந்து வருடங்களாக இயங்கும் களத்தின், நிலத்தின் சமூக வரலாற்றின் அடிப்படைகள் தெரியாதவர்களுடன் என்ன விவாதிக்க உரையாட முடியும்? உண்மையில் அவரிடம் இருப்பது ஒரு வகை புரட்சிப் பாவனை. கொஞ்சம் கனமான கலைச்சொற்கள். ஆனால் அவற்றை மட்டுமே வைத்து இருபத்தைந்து வருடங்களாக ஈழ இலக்கியச் சூழலில் சிந்தனையாளராக, விமர்சகராக, கவிஞராக ஒருவரால் காலம் தள்ள முடிகிறது என்பது எத்தனை பெரிய சாதனை. நம் சூழலின் சீத்துவம் அப்படி.  அடுத்த தலைமுறை வந்து அவரது பிரடியில் இண்டு அடி போடுகிறது. கேள்விகள் கேட்கிறது. சரி, ஈழத்தில் போர் முடிந்த பின்னர் உருவான வெற்றிடத்தில் தான் புதிய தலைமுறை அடிமையேக்கம் கொண்டு தமிழகத்துடனான பண்பாட்டு இலக்கிய அறிவுசார் உரையாடலில் ஈடுபடுகிறதா? தமிழக முன்னோடிகளை அறிவுசார் முன்னோடிகளாகக் கொள்கிறதா? என்று கேட்டால் உடனே திகைத்து விடுகிறார்கள். ஓட்டுக்குள் தலையை இழுத்துக் ஒளிந்து கொள்கிறார்கள். இது அடிமை மனநிலை, ஈழத்தின் தனித்துவத்தை தொலைத்துவிட்டார்கள் என்ற ஒப்பாரி வைக்கிறார்கள். அட பதரே, ஈழத்தின் தனித்துவம் அது இலக்கியத்தில் போர் திணைகளை உருவாக்கியதில் மட்டும் இல்லை. அது ஓர் தற்செயல். விடுதலைப் போர் உருவாகி நிகழ்ந்திருக்காவிட்டாலும் அதன் பண்பாட்டு, கலாச்சார தனித்துவம் எப்போதும் இருந்த ஒன்று தான். அதனை ஒரு நாலுபேர்  தமிழகப் படைப்பாளிகளை அறிவுசார் முன்னோடிகளால் வரித்துக் கொள்வதால் ஒன்றும் அழித்துவிடவும் முடியாது. இந்த அறிவுசார் பண்பாட்டு ஊடாட்டம் இரு வழிகளிலும் நிகழ்வது. தவிர்க்க முடியாதது என்பதல்ல தவிர்க்க வேண்டியதில்லை. அது ஆரோக்கியமானது சத்தானது இருவருக்குமே ஊட்டத்தை அளிப்பது. அதன் தாக்கம் கடந்த நூறு வருட இலக்கிய வரலாற்றை தொகுத்துப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். எஸ்.பொ மித்திர பதிப்பகம் சென்னையில் தான் இருந்தது. அவர் எல்லோருடைய நூல்களையும் வெளியிட்டார். கே.டானியல் பிரகஷ் வெளியீடுகளில் தான் புத்தகம் போட்டார். அவரது பெரும் தொகுப்புகள் அங்கிருந்துதான் வந்தன. நம் முன்னோடிகளின் கதைகள் சரஸ்வதி, தாமரையில் வந்தன. எண்பதுகளின் பின் தளமே தமிழகம் தான். அது போராட்டம் என்றாலும் சரி, இலக்கியம் என்றாலும் சரி. எண்பதுகளில் மட்டுமல்ல அதற்கு முன்னரும் அதுதான் நிலைமை. இப்போது மட்டுமே பண்பாடு, அறிவுசார் ஊடாட்டம் நிகழவில்லை. போரின் பின் மட்டும் நிகழ்வதில்லை. நூலுக்கு முன்னுரை வாங்குவதை, கவனப்படுத்தலுக்கு ஏங்குவதாக, தமிழகத்தின் அங்கீகாரத்துக்காக கூனுவதாகக் கற்பனை செய்வது போலி அறச்சீற்றம். பெயர் தெரியா அமைப்புகள் கொடுக்கும் விருதுகளை ரியாஸ் குரானா தான் பல் இழித்துக் கொண்டு வாங்கலாம். பிறர் வாங்கினால் அது தரகு வேலை. இது கயமை.

முடிவாக, இரு நிலங்களுக்குமான இலக்கிய ஊடாட்டம் மொழி வழிப் பெரும்பண்பாட்டின் விளைச்சலால் உருவாகி வருவது. உண்டும் கொண்டும் கொடுத்தும் கொள்வது. அதற்கு அடிமையேக்க மனநிலைக்கும் துளியும் தொடர்பில்லை. இது கடந்த காலம் அறியாத, பண்பாட்டு வேர் தெரியாத சமூகவலைதளச் சராசரிகளின் பொது மனநிலையின் பிரதிபலிப்பு. ஈழத்தின் கடந்தகால இலக்கிய, சமூக பொருளாதார, பண்பாட்டு வரலாறுகளைத் தெரிந்த யாரும் அப்படி சொல்லி கதவுகளை அடைத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.  அடைத்துக் கொண்டதுமில்லை.

 

***

பாலையில் பூப்பவை கட்டுரையைப் படிக்க இங்கே அழுத்தவும்.

 

பிரதிபலிப்புக்கு எதிரான பிரதிபலிப்பு