உள்ளடக்கத்திற்குச் செல்ல
October 10, 2026
கட்டுரை

பாலையில் பூப்பவை

றியாஸ் குரானாவின் ஆய்வுக் கட்டுரை ஒன்று படிக்கும் நல்லூழ் வாய்த்தது. பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம். அபாரமான ஆய்வுக் கட்டுரை. இல்லை, அப்படிப் பாவனை செய்யும் மாய மான் கட்டுரை. கட்டுரையின் உடல் முழுவதும் கலைச் சொற்களைத் தூவி விடுவதால் கனதியான விசயமிருக்கிறது என நம்பச் செய்துவிடலாமென றியாஸ் குரானா நம்புகிறார். அப்படி அறிவுஜீவிப் பாவனை காட்டுவது அவருக்கொன்றும் புதியதல்ல. ஆனால் ஒன்றை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அறிவுஜீவிப் பாவனையில் பிறர் எவரிடமும் இல்லாத தனித்துவமும் தொடர்ச்சியும் றியாஸ் குரானாவிடம் மட்டுமே இருக்கிறது. அதற்கு அவர் சளைக்காமல் பயின்றிருக்கிறார். இருபது வருடங்களுக்கும் மேலாக. தன் பிறவி நோக்கமே அதுதான் என்பது போல. உண்மையில் அதுவொரு அறிவுச்சூழல் சாதனையே. வாழ்த்துகள் சகாவே.

அறிவுஜீவிப் பாவனைக்கென  ஒரு சில கைச் சரக்குகள் வைத்திருக்கிறார் றியாஸ் குரானா. சில்லறை தெருச் சண்டியர்கள் சிறிய மடக்கு கத்தியை அதன் சிறிய பிடி வெளியே தெரியும்படி இடுப்பில் செருகி வைத்திருப்பது போல. அவர்கள் அதிகமும் அந்தக் கத்தியைக் கொண்டு தங்கள் முதுகைச் சொறிந்து கொள்வார்கள். றியாஸ் குரானா தன்னுடைய ஆயுவ்க் கட்டுரைகளில் தூவி விடுகிறார். அதில் முதன்மையானது எடைமிகுந்த கலைச்சொற்கள். அவர் கை வைத்தியம் போல கலைச்சொற்களை தன் மேற் சட்டைப்பையில் சட்டென்று எடுத்துச் சுழற்ற வாகாக வைத்திருப்பார். அவற்றை இந்தக் கட்டுரையிலும் ஏகத்திற்கும் தூவி விட்டிருக்கிறார். கிழக்கு இலங்கையில் அவருக்கு மட்டும் பத்தியத்தையுடைய சொற்கள். அவர் மட்டுமே அவற்றை பயன்படுத்துகிறார் என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். 

அதிகாரம், பெருங்கதையாடல், காலனியம், கூட்டு நனவிலி, விளிம்பு. இதகைய கலைச்சொல் கலவைகளாக எடைமிகுந்த கட்டுரைகளை எழுதுகிறார். கூடவே பின்நவீனத்துவத்தைதையும் தொட்டுக் கொள்கிறார். ஆகவே அவை விசயமுள்ள கட்டுரைகள் எனப் பலரும் நம்பிவிடுகிறார்கள். களம் புதிது இதழின் ஆசிரியர்கள் போல. பின்நவீனத்துவத்தை தொட்டுக் கொள்வதால், கலைச்சொற்களை தூவி விடுவதால், விளிம்பின் பக்கமிருப்பதாகக் காட்டிக் கொள்வதால், முற்போக்காக இருப்பதாகப் பாவனை செய்வதால் மட்டும் அவருடைய கட்டுரைகள் ஒருபோதும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலோ, விளிம்பின் உரையாடலோ ஆகிவிடாது. ஒருவரை முத்திரை குத்தி நிராகரிக்க அதே சொற்களை அச்சுப் பிசகாமல் யார் வேண்டுமானாலும் தர்க்கபூர்வமாகவே உபயோகிக்க முடியும். குறிப்பாக, அவர் விளிம்பு என்று யாரை வரையறுக்கிறார், அவர்களின் சார்பாகத் தான் எவ்வாறு பேசுகிறார், யாரை அதிகாரத்தின் பிரதிநிதியாகவும் யாரை அதற்கு எதிரானவராகவும் தீர்மானிக்கிறார் என்பதே அவர் நம்புவதாகச் சொல்லும் கோட்பாட்டுடன் முரண்படுகிறது. நிற்க, பின்நவீனத்துவ சிந்தனை எழுப்பும் அடிப்படைக் கேள்விகளில் ஒன்றே “யார் பேசுகிறார்கள்? யாருடைய சார்பாகப் பேசுகிறார்கள்? யாரை விளிம்பாக வரையறுக்கிறார்கள்?” என்பதுதானே. அப்படியிருக்க, “நான் விளிம்பின் பக்கம் நிற்கிறேன்” என்று கூறுவதால் மட்டும் ஒருவர் விளிம்பின் குரலாகிவிட முடியாது. விளிம்பை அவரே வரையறுத்து, அந்த விளிம்பின் சார்பாக உண்மையையும் பொய்யையும், அதிகாரத்தையும் எதிர்ப்பையும், அடிமைத்தனத்தையும் விடுதலையையும் தீர்மானிக்கத் தொடங்கும் இடத்தில், அவர் எதிர்ப்பதாகக் கூறும் அதிகாரத்தின் இன்னொரு வடிவத்தைத் தானே ஏற்றுக்கொள்கிறார். எனக் கோட்பாட்டு விளக்கம் கொடுத்தே இவருடைய வாதங்களை நிராகரித்துவிட முடியும். அது றியாஸ் குரானாவின் வழி. அது முகநூல் அறிவுஜீவுகளின் வழி. அவர்கள் கனதியான கலைச்சொல் விளையாட்டைச் சலிக்காமல் ஆடக் கூடியவர்கள். நான் எப்போதும் சொல்வது ஒன்றுண்டு. எதிர்த்தரப்பை முத்திரை குற்றி பட்டியில் அடைவிடுவது, தங்களை ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலையினர் சார்பானவர்களாக காட்டிக் கொள்வது. அப்படியே அரசியல் சாரசரித்தனத்துடன் முற்போக்குப் பேசினால் போதும். அவர்களுக்கு பிறர் எவரையும் வசையக் கூடிய அதிகாரம் கேள்விகள் இன்றிக் கிடைத்துவிடும். பின்னர், அவர்களின் குறைபாடுகளை, போதாமைகளை, தர்க்கப் பிழைகளை யாருமே கேள்விக்குட்படுத்த முடியாது. கேட்டால் பிற்போக்குவாதி, ஆணாதிக்கவாதி, அதிகாரி என இன்ன பிற கலைச்சொல் கூட்டை கேள்வி கேட்பவர்கள் மீது ஏவிவிடுவார்கள். ஏவுபவர்கள் உண்மையில் முற்போக்காக இருக்க வேண்டியதில்லை, இருப்பதாகக் காட்டிக் கொண்டால் மட்டும் போதும். ஆனால் அவர்கள் ஒருபோதும் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை. இவர்கள் ஓர்மையுடன் செய்யும் முத்திரைகுத்தல் இருபக்கமும் கூரான கத்தி. அவர்களின் பக்கமும் அதனைத் திருப்பிவிட முடியும். அது அவர்களுக்குப் பொருட்டே இல்லை. முகநூலில் முற்போக்காக, பெண்ணியராக, இடதுசாரிகளாக இருந்துவிட்டால் போதுமென நம்புகிறார்கள்.

கருணாகரனுக்கு தமிழ் தோட்டத்தின் கவிதைக்கான 2026ம் ஆண்டின் விருது கிடைத்திருந்தது. அதற்கு றியாஸ் குரானா கண்டனம் தெரிவித்திருந்தார். ஓர் இலக்கியத் தரகருக்குக் கிடைத்த விருது என்பது கண்டனத்தின் சாரம். உள்ளாடி வேலைகள் செய்து விருதைப் பெற்றுக் கொண்டார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு.  பின்னர் அந்த ஊகங்களுக்கான பிரமாணங்களாக கலைச்சொல் கூட்டை ஏவி ஓர் அறிவுஜீவிப் பாணி கட்டுரை எழுதியிருந்தார். இப்போது அந்த ஊகங்களை இன்னும் விரிவாக களம் புதிது கட்டுரையில் வளர்த்தெடுத்திருக்கிறார். அவரது ஆய்வின் வளர்ச்சி அபாரமானது. படைப்பூக்கம் திகைக்க வைப்பது. இந்த ஆய்வுக் கற்பனையின் ஒரு சிறு வீதத்தையாவது கவிதைக்கோ, புனைவுக்கோ அவரால் மடைமாற்ற முடிந்திருந்தால், ஈழத்தின் அடுத்த தலைமுறை பொருட்படுத்தும் படைப்பாளியாவதற்கான அத்தனை தகுதியுமுள்ள கற்பனைவீச்சு. 

கருணாகரன் சரணாகதி இலக்கியச் செயற்பாட்டாளர். கருணாகரன் அதிகாரத்துக்கும், மேலாதிக்கத்திற்கும் பணிந்திருப்பவர். அவர் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் ஒட்டிக் கொள்பவர். அதற்கான ஆதாரங்களாக ஒரு சில ஊகங்களை முன்வைத்திருந்தார் றியாஸ் குரானா. அவன் முன்வைத்த ஊகங்களைப் பலரும் அவை அடிப்படைகள் இல்லாத அவதூறுகள் எனக் கடுமையாகக் கண்டித்திருந்தார்கள். அந்த ஊக வாதங்களின் அடிப்படையான பிழைகளை சரியாகவே சுட்டிக் காட்டியிருந்தார்கள். அவை வெறும் அவதூறுகள் மட்டுமேயென்று இடித்துரைத்தனர். அதகையை தனிமனித அவதூறு ஒருபோதும் அதிகார எதிர்ப்போ, விளிம்பின் குரலோ அல்ல என்றார்கள். அதனால் றியாஸ் குரானா கொஞ்சம் தெளிந்து தன்னுடைய ஊக வாதங்களை கருணாகரனின் கடந்த கால அரசியல், பண்பாட்டு, கலைச் செயற்பாட்டுகளை சந்தேகித்து, ஊகித்து இன்னொரு பேஸ்புக் பதிவு ஒப்பேற்றியிருந்தார். ஒருவர் விடுதலைப்போரில் பங்குபற்றியதே  குற்றம் என்று கண்டுபிடிக்கும் அளவில் சென்று முடிந்திருந்தது அது. அப்படிச் சென்றவரை சந்தேகிக்கலாம், குற்றவாளியாக்கலாம், அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பேற்கக் கேட்கலாம் என்பது மாதிரியான தொனி.

ஈழப் போராட்டத்தை, அது சமூகத்தில் நிகழ்த்திய அழிவு, இறுதி விளைவுகளூடு ஆராயலாம். விமர்சிக்கலாம். அல்லது அதன் ஆயுதப் போராட்ட வழிமுறைகளில் வெளிப்பட்ட போதாமைகள், போராட்ட காலங்களில் வெளிப்பட்ட அதிகார விருப்புறுதி, கருத்துச் சுதந்திர மறுப்பு, முஸ்லிம்கள் வெறுப்பு, இனத் தூய்மைவாதம், எதோச்சதிகாரம் போன்றவற்றினூடாகக் கேள்விக்குட்படுத்தலாம். போரின் அழிவுகுறித்து புனைகதையாளருக்கு எழும் கேள்விகள் இன்னும் நுட்பமானவை, ஆழமானவை. விடுதலைப் போர் ஏன் அப்படிப் பேரழிவில் முடிந்தது? விடுதலைப் போர் ஏன் சகிப்புத் தன்மையையும், அறத்தையும் கைவிட்டது? போர் அறம் என்றைக்கும் ஒன்றே தானா? போரில் வலிமை மட்டும்தான் கணக்கா? உரிமையை விட மானுட உயிர் அவ்வளவு ஒன்றும் பெறுமதியற்றதா? பெருங்கும்பலின் எதிர்கால நலனுடன் ஒப்பிடும் தனிமனித உயிர் பொருட்டே இல்லாத,  ஊதி அணைத்துவிடக் கூடிய சிறு சுடர் மட்டும்தானா? ஒரு புற எதிரிக்கெதிரான விடுதலைப்போர் சட்டென்று எப்படி அகவயமாகத் திரும்புகிறது? மனிதன் வெறும் நம்பிக்கைகளும் சொற்களுக்கும் மட்டும் கட்டுப்பட்டவனா?  இத்தனை அழிவுகளுக்கும் வரலாற்றில் என்ன பொருள்?  இத்தனை அழிவுகளின் பின்னரும் சமூகம் ஏன் கொஞ்சமேனும் கற்றுக் கொள்ள மறுக்கிறது? எனப் பல கேள்விகள் பொங்கும் ஊற்றுமுகம். ஆனால் அதில் பங்கெடுத்ததை ஒருபோதும் குற்றமாகச் சுட்ட முடியாது. விடுதலைக்காகப் போராடும் உரிமை ஆதியானது. அது எந்த வகைப் போராட்டமாகவும் இருக்கலாம். போராட்ட வழிமுறையைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் இருக்கின்றன. சில தற்செயல்கள் கைகூடிவிடுகின்றன. சூழல், காலகட்டம், அரசியல் ஓட்டங்கள், சமூக, வரலாற்றுக் காரணிகள் போன்ற ஏராளம் உள்ளோட்டங்களின் முரண் விளைவுகளால் அவை தீர்மானிக்கப்படுகின்றன. தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் மூவருமே வெவ்வேறு வழிகளில் தங்கள் அரசியல் அதிகாரம் நோக்கி நகர்ந்தனர். மலையகத் தமிழர்களின் சிக்கல் ஒப்பீட்டளவில் வேறுவிதமானது. அவர்கள் தங்கள் நில அமைவிடத்தால் சிறைப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் ஓரளவுக்கு ஒத்த சமூக கலாசார சூழலில் வாழ்ந்த இரு இனங்களும் கூட முற்றிலும் வேறுபட்ட வழிகளையே தெரிவு செய்தன. தமிழ்ச் சமூகம் ஆயுதப் போராட்டத்தை கைக்கொண்டது. முஸ்லிம் சமூகம் இலங்கை அரசுடன் அரசியல் அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொண்டது. அவை இருவேறுவகைப்பட்ட தெரிவுகள். ஆனால் கடந்த காலப்பட்டறிவிலிருந்து  இன்று ஆயுதப் போராட்டத்தை நான் தீர்வாக முன்வைக்க மாட்டேன். நான் மட்டுமல்ல தமிழ் பெரும்பான்மையினர் கூட அதனை தீர்வாக, வழிமுறையாக எண்ணக் கூட மாட்டார்கள்.  முஸ்லிம்களின் அரசியல் தெரிவும் கூட பயனளித்ததாகத் தெரியவில்லை. தமிழ் சமூகம் இழந்தவை என்பதற்கு அப்பால் இவ்விரு சமூகங்களும் தொடங்கிய இடத்திலேயே நின்றிருக்கின்றன.  கைவிடப்பட்டிருக்கின்றன. ஆக முஸ்லிம்களின் வழிமுறையும் அதன் விளைவைக் கொண்டு மதிப்பிட்டால் இன்று விமர்சனத்திற்குரியதே.  அந்த அரசியல் நகர்வினூடாக முஸ்லிம்களுக்கு மீச் சிறிய அரசியல் பாதுகாப்புக்கூடக் கிடைக்கவில்லை. குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தைக் கூட அடைய முடியவில்லை. அதிகாரத்தில் பங்கெடுத்ததனூடாக ஒரு சிலர் மட்டும் தங்கள் பைகளை, ஏழு தலைமுறைக்கும் போதுமான அளவுக்கு நிறைத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான்.

2009ல் ஈழத்தமிழருக்கு நிகழ்ந்தது ஓர் முற்றழிவு. அதுவொரு அராஜகச் சூழல். அந்தக் கட்டாற்று வெள்ளத்திலே எல்லோரும் ஏதோ துரும்புகளைப் பற்றிப் பிடித்தே அங்கிருந்து மீண்டிருக்கிறார்கள். படுகளத்திலிருந்து தப்பி, உயிருடன் பிழைத்திருத்தல் மன்னிக்கமுடியாத குற்றமோ, வீரத்துக்கு இழுக்கோ அல்ல. அந்தப் படுகளத்திலிருந்து ஒருவர் மீண்டு வந்திருப்பதே காட்டிக் கொடுத்தல், அதிகாரத்திற்கு அடிபணிந்ததற்கான சான்றாதாரம் அல்ல. அது மிக எளிமைப்படுத்துதல். ஊகம் என்பதற்கு அப்பால் அது ஒருவரை நிராகரிக்க ஒருபோதும் எடுக்கக் கூடாத ஆயுதம். இதனைக் கழிவிரக்கத்தினால் சொல்லவில்லை. அல்லது அது கடந்த காலப் போராட்ட வரலாற்றை விமர்சனமாகவோ அணுகுவதை மறுப்பதற்காகச் சொல்லவில்லை. கூட்டுப் பொறுப்பைக் கோருவது அது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே அதன் மாற்று சாத்தியங்களும், ஆயுதப்போராட்டத்தின் அவநம்பிக்கைகளும் அடங்கியேனும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கின்றன. எத்தனை உயிர் அச்சுறுத்தல் இருந்த போதும்.  பலர் தங்கள் உயிரைக் கூட கருத்துகள், சொற்களுக்காகக் காவு கொடுத்திருக்கிறார்கள். ஆக ஆயுதப் போராட்டம்தான் ஒற்றை நம்பிக்கையாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் அது மலையின் குத்துச் சரிவிலிருந்து உணர்ச்சிப் பெருக்கு, இனவீரத்துடன் சரிந்து இறங்கிய பெரும் பாறை. 2009ல் கடலில் சென்று சேரும் வரை அதனை நிறுத்தக் கூடிய ’பெரும்’  எதிர் விசைகள் ஏதும் தமிழ் சமூகத்துள் இருக்கவில்லை.

றியாஸ் குரானா தன்னுடைய இரண்டாவது குறிப்பில் இன்னொரு புதுமையான வகையான வாதங்களை முன்வைத்திருக்கிறார். என்ன செய்தார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதைக் கொண்டுதானே ஒருவரை மதிப்பிட முடியும். ஆனால் றியாஸ் குரானா கருணாகரன் என்னவெல்லாம் செய்யவில்லை என்பதூடாக கருணாகரனை விமர்சன பூர்வமாக அளவிட முயன்றிருக்கிறார். கருணாகரன் போல புலிகளின் கலை, பண்பாடு அமைப்புகளில் பங்காற்றியவர்களின் அதிகார எல்லைகள் ஊகிக்கக் கூடியது. அது ஒன்றும் புதிரானதோ, அபரிமிதமானதோ அல்ல. அங்கே அதன் பண்பாட்டு அமைப்பில் செய்யக் கூடிய வேலைகளின் எல்லைகளும் அறிந்தது. ஆனால் அவற்றிற்கு எல்லாம் மேலாக கருணாகரனின் இறுதிப் போர் காலகட்ட எழுத்துகள் இன்றும் முக்கியமான பதிவுகள். இறுதிப் போரின் நேரடி ஆவணங்கள் அவை.  பேரிடரின் உள்ளிருந்து மானுடம் நோக்கி துடித்த பெருநாக்கு அது.  இன்றும் அந்தப் பதிவுகளைப் படிக்கும் போது அதில் வெளிப்பட்டிருக்கும் அபாரமான சமநிலையை உளச் சிலிர்ப்புடன் உணரமுடியும். அந்த நேரடிக் களப் பதிவுகளின் பொருட்டுக் கூட அத்தனையும் மன்னிக்கப்படலாம். 

கருணாகரன் மகிழ் பதிப்பகமூடாக புத்தகங்கள் பதிப்பித்தார். அதற்கு புலம்பெயர்ந்தவர்களிடம் காசுவாங்கினார் என்கிறார். கருணாகரன் ஒரு தலித் படைப்புகளும் வெளியிடவில்லை. ஆகவே தலித்துக்களுக்கு எதிரானவர் என்கிறார். கருணாகரனுக்குக் காசு கொடுத்துதான் புத்தகம் போடுவதென்றால் புலம்பெயர்ந்தவர்கள் ஏன் கருணாகரனிடம் செல்ல வேண்டும். விற்பனைக்கே வழியில்லாத இலங்கையில் அவர்கள் புத்தகம் போட வேண்டும். கைக் காசைக் கொடுத்து இந்தியாவிலேயே ஏதோ ஒரு பதிப்பகத்தில் புத்தகம் போட்டுக் கொள்ள முடியுமே. அவர்களே பிரிண்டரை ஓடவிட்டு விட்டு வலைபோட்டு ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அனுப்புபவற்றை, பறித்து அப்படியே பிரசுரிக்கத் துடிக்கிறார்கள்.  புத்தகங்கள் பதிப்பிற்க பு.பெயர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக் கொள்கிறார் என்றால் அதில் என்ன இருக்கிறது. முற்றிலும் விற்பனைக்கே சாத்தியமில்லாத, அதனூடாக ஒரு சில்லறையும் பெயராத களத்தில் அப்படிச் பெற்றுக் கொள்வதில் என்ன பிழை இருக்கிறது. ஒரு பண்பாட்டுப் பங்களிப்பிற்குப் -பணக்காரப் பிள்ளைகளிடம்- பணம் வாங்குவதில் என்ன அறப்பிழை இருக்கிறது. குக் வித் கோமாளிகளுக்கு, மூன்றாம் தரப் பாடகர்களுக்கு, மதுரை முத்துவிற்கு, சீமானுக்கு என விழலுக்கு இறைப்பவர்களிடம் இன்னும் கொஞ்சம் தாராளமாகவே கருணாகரன் சுரண்டிக் கொள்ளலாம். கை காசை வைத்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்து நிற்கும் அபலைகள் அவர்கள். அதனால் சுரண்ட தயங்க வேண்டியதில்லை. அதை வைத்து இன்னும் வருடத்திற்கு பத்துப் புத்தகங்களும் அய்ந்து இலக்கிய விழாக்களையும் அவர் ஒழுங்கு செய்ய வேண்டும்.

கருணாகரன் ஒருவகை சனநாயக விருப்புறுதியைக் கைக்கொளக் கூடியவர். அதாவது சனநாயகத்தின் கடைசி எல்லைவரை சகிப்புத் தன்மையுடன் பயணிக்கக் கூடியவர். ஈரோஸ் மனநிலையோ எனச் சந்தேகிக்கும் அளவிற்கு சகிப்புத்தன்மையானது. அது அதிகாரத்திற்கான விருப்பல்ல. அவரது அரசியல், போராட்ட வாழ்வு நீண்டது. பல வடிவங்களிலும் பயணித்தது. எப்போதும் களத்தில் இருந்திருக்கிறார். தன் வழிமுறைகளை மாற்றியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை அரசின் புத்தகத் தடைக்கெதிரான போராட்டம் வரை கையால் எழுதிய துணிப் பதாகைகளுடன் முன்களத்தில் வந்து நின்றிருக்கக் கூடியவர். றியாஸ் குரானா போல சாய்வுநாற்காலிப் புரட்சியாளர் அல்ல. முஸ்லிம்களின் சமூகம் இலங்கை அரசுடன் அதிகாரத்தில் பங்குபோட்டுக் கொள்வதை கையாறுநிலையாக முன்வைக்கும் றியாஸ் குரானா இறுதிப்போரின் பின்னர் கையாறுநிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கியது அடிமை மனநிலையாகத் தெரிகிறது. வழமையாக தமிழ் தேசியர்கள்தான் தங்களின் முஸ்லிம் வெறுப்பை காட்ட, முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் அதிகாரத்தில் பங்குபோட்டுக் கொண்டதை விமர்சனமாகச் சுட்டுவார்கள். ஆனால் கருணாகரன் அப்படிச் சேர்ந்தியங்கினாரா தெரியவில்லை. இயங்கியிருந்தாலும் அந்தக் கையாறுநிலை புரிந்து கொள்ளத்தக்கது. இரண்டுமே இரு வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கையறுநிலை தான். அவை ஒருவரை நிராகரிக்கும் விசக் கருவிகள் அல்ல. இந்தவகை ஊகங்களை றியாஸ் குரானாவிற்கும் போட்டுப் பார்க்கலாம். அப்படி அவர் செய்யாத எண்ணற்ற செயல்களைச் சுட்டி அவரை வஹாபியராக, அடிப்படைவாதியாக, பெண்களைச் சுரண்டுபவராக கத்திபிடி விளக்கம் கொடுத்து அவரை அவதூறு செய்ய முடியும். அதுவல்ல விமர்சனத்தின் வழி. அதுவல்ல அறிவுச் செயற்பாடு.

றியாஸ் குரானா களம் புதிது இதழில் வந்த கட்டுரையூடாகத் தன் ஊகக் கற்பனைகளின் ஒரு படி மேல் ஏறிச் சென்றிருக்கிறார். கருணாகரனின் அதிகாரவிருப்புறுதி, சரணாகதி அடிமை மனப்பான்மை எனச் சொன்னவற்றை, இப்போது ஒட்டுமொத்த ஈழத் தமிழ் சமூகத்தின் அடிமைகளாக இருக்கும் ஏக்கத்தின் விருப்பம் என்று கோட்பாட்டாக்கம் செய்திருக்கிறார்.

அவரது களம் புதிது கட்டுரையை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம். ஈழத் தமிழ் சமூகம் எப்போதும் ஒரு அடிமை மனநிலையில் ஊறியிருந்தது. எஜமானர்களுக்கு பணிந்திருக்க ஏங்கியிருக்கிறது. அதற்கான உளவியல் வேர் காலனிய காலகட்டத்தில் இருக்கிறது. அவர்கள் காலனியகாலகட்டத்தில் வெள்ளையருக்கு அடிமை சேவகம் செய்தார்கள். பின்னர் அந்த அடிமை விசுவாசம் இயக்கத்திற்குக் கீழ்ப்படிதலாக மாறியது. 2009க்குப் பின்னர் இயக்கத் தலைமை அழிந்ததும், அந்த விசுவாசம் எதை நோக்கிச் செல்வது என்று தெரியாமல் திகைத்த சமூகம், இந்திய முன்னோடிப் படைப்பாளிகளை ஆசான்களாக வரித்து, அவர்களிடம் அறிவுசார் அடைக்கலம் தேடுகிறது. இதுவே ஒரு பெரும் பண்பாட்டுத் தற்கொலை. அதாவது ஈழத் தமிழ் சமூகத்தின் பண்பாட்டுத் தற்கொலை. வாசிக்கும் போதே உங்களால் மெல்லப் புன்னகைக்க முடிகிறது இல்லையா. ஆம் அதேதான். நீங்கள் ஊகிப்பது சரி. இதனைத்தான் மூவாயிரம் சொற்களில் கலைச் சொற்களின் அபாரமான திரைமறைவில் உருட்டி பிரட்டி எழுதியிருக்கிறார். அறிவுஜீவிப் பாவனைக் கட்டுரையின் எளிமையான வரையறை சட்டென்று அவரது மொத்த வாதத்தையும் அபத்தமாகிவிடுகிறது. இப்படிப் புரியும்படி எழுதினால் அவரது ஊகக் கற்பனை திறனின் வெளுறல் எல்லோருக்கும் புரிந்துவிடும். முடிவுகளை ஊகங்களை முடிவான உண்மைபோல முன்வைத்து விட்டு நகர்ந்து செல்வது, அதற்கான நிரூபணங்களோ, பார்வைகளையோ கண்டுகொள்ளாமல் விடுவதென அடிப்படைகளே இல்லாத சொற்கட்டுமானத்தில் நின்றிருக்கும் மாயக்கோட்டை போலிருக்கிறது மொத்தக் கட்டுரையும்.

சரி இந்த ஊகப் பார்வையின் அடிப்படைச் சிக்கல் என்ன? காலனியகாலகட்டத்தில் அடிமைச்சேவகம் செய்தவர்கள் ஆதிக்கசாதி வெள்ளாளர். அவர்களின் அதிகாரத்திற்கான அடிமை இயல்பு எப்படி சட்டென்று இயக்கங்களின் காலத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் இயல்பாக மாறியது? அப்படி மாற முடியுமா? பின் 2009 பின் இளம் இலக்கியவாதிகளின் இயல்பாக மட்டும் சிறுத்துப்போனது? இந்த வகை உருமாற்ற ஊகத்திற்கு சமூக, பாண்பாடு, இனவரைவியல், அல்லது அறிவியல் கோணத்தில் என்ன பிரமாணங்கள் இருக்கின்றன? ஒருவகை அறியாமை மட்டும் தான் இருக்கமுடியும். மூன்று காலகட்டங்களிலும் அதிகாரம் இருக்கிறது. அதற்கு அப்பால் அவை எப்படி சமூக பண்பாடு அல்லது இனத்தின் கூட்டு நினைவிலியில் ஒழுகிச் செல்கிறது என்பதே என் கேள்வி? எப்படிக் கைமாறுகிறது? வெள்ளாளரின் இயல்பு எப்படி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்குமான இயல்பாகிறது? அப்படி ஆக முடியுமா? அதற்கான சமூக, பண்பாட்டு நிறுவனங்கள் என்ன? சமூகச் செயன்முறை என்ன? மூன்று காலகட்டங்களிலும் செயற்பட்ட அதிகாரங்களும் ஒரே படித்தானவை அல்ல. காலனிய நிர்வாக அதிகாரம் ஒன்று. சாதி அதிகாரம் ஒன்று. இயக்கத்தின் இராணுவ/அரசியல் அதிகாரம் ஒன்று. இலக்கியத்தில் ஒரு மூத்த எழுத்தாளரின் குறியீட்டு அல்லது அறிவுசார் செல்வாக்கு வேறு. அவை பொதுமைப்படுத்தப்பட ஒற்றைச் சமூகத்தின் தனித்த இயல்புகளும் அல்ல. ஈழச் சமூகத்தின் உள்ளே பல சாதிகள், வட்டாரங்கள், நிலம் எனப் பல படிநிலையும், ஊடுபாவுகளும் இருக்கின்றன. பெருங்கதையாடல்களை மறுப்பதாகச் சொல்லும் அவர்- உண்மையில் அப்படி அல்ல அவர் இன்னொரு பெருங்கதையாடலையே போலியாக உருவாக விழைகிறார் – உருவாக்கும் இன்னொரு பெருங்கதையாடல் அல்லாமல் வேறு அல்ல.

அடுத்து, ஈழபோரட்டத்தை ஏதோ ஒரு சில  தளபதிகளுக்கு அடிமைசேவகம் செய்யும் விருப்புறுதியின் வெளிப்பாடாக மட்டும் குறுக்கிவிடுகிறார். புலிகளிடம் வெளிப்பட்டது இராணுவம் கோரும் ஒழுங்கு, இராணுவப் படிநிலையாக்கம். அது எல்லா இராணுவங்களுக்குமான பொதுவிதி. அப்படித்தான் அது செயற்படமுடியும். விடுதலை இயக்கங்களை முன்னகர்த்துவது அடிமைசேவகமனநிலை அல்ல. இது விடுதலைப் போராட்டங்களும் பொருந்தும் விதியா இல்லை ஈழத் தமிழ் இனத்தின் தனித்த அடிமை மனப்பான்மையின் வெளிப்பாடா என்பதை றியாஸ் குரானாதான் சொல்ல வேண்டும். உண்மையில் அவருக்கு இராணுவ ஒழுங்கு கோரும் கீழ் படிதலுக்கும்,  விடுதலைப் போராட்டங்கள், சமூகமாற்றம் குறித்த அவநம்பிக்கையின் விளைவே. ஈழப் போராட்டத்தின் வழிமுறைகளும், அதன் அழிவுகளுமே விமர்சனத்துக்குரியன. ஆனால் ஆயுதப்போரட்டம், அதனுள் இழையோடிய இராணுவ ஒழுங்கு, கீழ்ப்படிதல் மொத்தச் சமூகத்தின் அடிமை மனநிலையின் வெளிப்பாடு அல்ல.

சரி றியாஸ் குரானா கட்டமைப்பது போல காலனிய காலத்தின் அடிமையுணர்வு ஈழச் சமூகத்தில் தலைமுறைகளுக்கும் பயணிக்கக் கூடிய அவர்களின் ஆதார இயல்பாக இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் காலனிய காலத்தில் அடிமைச்சேவகம் செய்தவர்கள், காலனிய எஜமானர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியதும் என்ன செய்திருப்பார்கள். அதுவரையும் காலனிய அதிகாரத்துடன் அண்டிப் பிழைத்து தங்கள் சமூகப் பண்பாட்டு சாதிய மேலாதிக்கத்தை நிறுவிக் கொண்ட அவர்கள் முன்னிருந்த இலகுவான வழி என்ன? சிங்கள இன, மொழி, அரசியல் மேலாதிக்கத்தை அப்படியே ஏற்றிருக்கவல்லவா வேண்டும். அடிமைத் தனத்திற்குப் பழகிப்போன ஆதிக்க சாதியினர் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சிக்கு வந்த சிங்களவர்களின் மொழி, இன மேட்டிமையை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டிருக்கலாமே. அவர்கள் ஏன் தாங்களே ஒருபோதும் ஊகித்திருக்காத இன விடுதலைப் போராட்டம் நோக்கித் திரும்பினார்கள்? இல்லை இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு காலா காலத்திற்கும் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்திருக்கலாமே. ஆனால் நம் அறிந்த தெரிந்த வரலாறு அப்படி இல்லையே. உண்மையில் காலனிய அதிகாரம் வேறு, இயக்கத்தின் இராணுவ அதிகாரம் வேறு, இந்தியா செலுத்தும் பண்பாட்டு மேலாதிக்கம் வேறு. றியாஸ் சுட்டுவது போல அடிமை மனநிலை ஈழத் தமிழ் சமூகத்தின் உள்ளார்ந்த இயல்போ, வெளிப்பாடோ அல்ல. இது ஒருவகை பொதுமைப்படுத்தல், அதிகாரம், சமூக உறவுகள், வரலாறு குறித்த புரிதலின்மையின் விளைச்சல்.

ஈழத் தமிழருடனான தமிழகப் பண்பாட்டு ஊடாட்டத்தை அடிமை மனநிலை என்பது கூட எளிமைப்படுத்தப்பட்ட வாதம். பண்பாடுகளின் வரலாற்று புரிதலின்மை. ஆனால் அதனை ஒருபோதும் மேலாதிக்கம் எனச் சுட்ட முடியாது. அது ஊடாட்டமே. பண்பாட்டு ஊடாட்டம் ஒரு படித்தானது அல்ல. வரலாற்றுக் காலகட்டம் தொடக்கம் ஈழம் இந்தியப்பெரும் பண்பாட்டின் நீட்சியாகத்தான் இருந்திருக்கிறது. இன்று ஈழம் தன்னுடைய பண்பாட்டு வேர்களை அங்கிருந்தே அடையாளம் காண்கிறது. தொட்டிலாக. மதலை தன் தொட்டில் வாசனையை நினைவு கூர்வது போல. அது ஒருபோதும் தனித்த பிற நிலமாகக் கருதிக் கொள்வதில்லை. அது பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து, போராட்ட கால வீரநாயக்கர்கள் உருவாக்கம் என பல தளங்களிலும் கூட இன்னும் நிகழ்ந்த படியிருக்கும் சமூக இயக்கம். அதாவது அதன் பண்பாட்டு வேர் அங்குதான் ஊடுருவியிருக்கிறது. அங்கிருந்துதான் சத்துக்களை உறிஞ்சிக் கொள்கிறது. தன் அருகில் இருக்கும் சிங்களப் பண்பாட்டுடன் கொண்ட உறவைவிட தமிழகத்துடனான பண்பாடு உறவே நீடித்தது. வலிமையானது, நெருக்கமானது. அந்தப் பிணைப்பு நாம் ஊகிப்பதிலும் தொல் ஆழமானது.

ஈழத் தமிழ் பண்பாடும் தமிழகத் தமிழ் பண்பாடும் தனித்த தீவுகளாக உருவானவை அல்ல; நீண்டகால மொழி, இலக்கிய, சமய, வணிக, குடியேற்ற, குடும்ப, அறிவுசார் ஊடாட்டங்கள் வழியாக ஒன்றோடொன்று தொடர்புடைய இரு பண்பாட்டு வெளிகள். அதேவேளை ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கு தனித்த வரலாற்று அனுபவங்களும் பிராந்தியப் பண்பாட்டுக் கூறுகளும் உருவாகியுள்ளன. தமிழகத்தின் வட்டார வேறுபாடுகள் போல. அதனை தனித்த இரு பண்பாடுகளாக பிரித்து எதிரிடையாக நிறுத்தி ஆதிக்கம் – அடிமைத்தனம் என உரையாடவே முடியாது. பண்பாட்டு ஊடாட்டத்தை அடிமை மனநிலையெனச் சுட்ட முடியாது. ஆனால் அது ஒற்றை வழியில் நிகழும் அதிகாரத்துடன் கூடிய மேலாதிக்க பண்பாட்டு ஆக்கிரமிப்பல்ல. அது ஆறு நீர் கடலில் சேர்வது போல ஒரே படியில் நிகழ்வதில்லை. கடல் ஓதம் கடல் நீரையும் ஆற்றுவழியில் கொண்டு செல்லும். எல்லாப் பண்பாட்டு ஊடாட்டங்களுக்கும் இருப்பது போல இரண்டும் ஒன்றை ஒன்று பாதித்தும் உண்டும் கொடுத்தும் கொள்ளக் கூடிய உறவே அவற்றிற்கு இருக்கின்றன.

இலங்கை என்ற நிலவழி அரசியல் அலகுப் பிரிப்பு மிகச் சமீபமானது. ஈழம் தமிழகத்துடன் நிலத்தொடர்பு அற்றிருக்கிறது என்பதற்காகவே அது சுயம்பு அல்ல. நிலம் பண்பாட்டுப் பிரிப்பு, கலப்பிற்குத் தனித்த நிபந்தனையும் அல்ல. அதனால் தனித்ததும் அல்ல. வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும் காவியம் ஆக்கியளித்த மொழியுள் நாம் ஒன்றாக இருக்கின்றோம். முதுப்பாட்டனின் சொற்களஞ்சியத்தில் கொஞ்சத்தை இரக்காமல் உரிமையுடனே அள்ளி மடியில் கட்டிக் கொள்கிறோம். யாவரும் கேளிர் தான். இவை மிக வெளிப்படையானவை. ஆனால் கடல் இரண்டாகப் பிரித்தாலும் தமிழகப் பண்பாடு, கலை, இலக்கிய ஊடாட்டம் ஈழப் பண்பாட்டினுள் அதிகம். அசல் காரணம் இரண்டும் ஒரே மொழிவழிப் பண்பாட்டின் விளைநிலங்கள். அதற்கு றியாஸ் குரானா கண்டுபிடித்திருப்பது போல அடிமை மனநிலை விசுவாசம் அல்லக் காரணம். மொழி. அது ஒன்றே காரணம். அது ஏதோ 2009 இறுதி யுத்தத்தின் பின்னரான நிகழ்வும் அல்ல. அதற்கு குறைந்தது இருபது நூற்றாண்டுகளின் வேர்ப் பிடிப்பு இருக்கிறன. கூடியது 60 ஆயிரம் ஆண்டுத் தொடர்பு. அதாவது முதல் குரங்கு தமிழ் குரங்காக இருந்த காலத்திலிருந்தே வரும் தொடர்பு அது.அதாவது, அந்தத் தொடர்பு 2009க்குப் பிறகு மட்டும் உருவானதல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடரும் மொழி–இலக்கிய–பண்பாட்டு ஊடாட்டத்தின் விளைவுகளே.

மூத்தபடைப்பாளி இளம் படைப்பாளிகளை கவனப்படுத்துவதைக் கூட எதிர்மறையாக, ஏதோ அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதாகக் கருதுகிறார். நம் முன்னோடிப் படைப்பாளிகள் பலரும் அப்படியாகத் தங்கள் முன்னோடிகளிடம் இருந்து கற்று தங்கள் இடங்களை, தனித்த இலக்கியப் பார்வையை உருவாக்கிக் கொண்டவர்கள் தான். அது இயல்பான இலக்கியச் செயன்முறை. மூத்தவரை ஆசானாகக் கொள்வதும் அப்படித்தான். ஒரு எழுத்தாளரிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கும், அவரிடம் அறிவுசார் அடிமையாக இருப்பதற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இவர்கள் இரண்டையும் குழப்பிக் கொள்கிறார்கள். அது ஏதோ இளம் எழுத்தாளரின் தனித்துவத்தின் இழுக்கு, அடிமைமனநிலையெனக் கொந்தளிக்கிறார்கள். ஒருவரை ஆசானாக ஏற்றுக்கொள்வது அவரது சிந்தனையை அப்படியே ஏற்றுக் கொள்வதாகாது. ஒரு அறிவு மரபைத் தொடர்வது, அந்த மரபை விமர்சிப்பதற்கும், மாற்றுவதற்கும், தாண்டிச் செல்வதற்குமான உரிமையை அது மறுப்பதில்லை. மேற்கு தத்துவத்திலும், ஏன் மார்க்ஸியத்திலும் கூட அந்த தொடர்ச்சி இருக்கிறது. கார்ல் மாக்ஸ்–ஹெகல், கார்ல் மார்க்ஸ்–கிராம்சி, பிராய்ட்–லக்கான் போன்ற அறிவுசார் உறவுகளின் தொடர்ச்சி அப்படித்தான் இருக்கிறது. இந்திய மரபிலும் அதற்கு வேர்கள் இருக்கின்றன. விளக்கம் – மறுவிளக்கம் – வாதம் – எதிர்வாதம் – உரை – உரைக்கு உரை – புதிய தரிசனம். இவர்கள் தாங்கள் முன்வைக்கும் பின்நவீனத்துவத்தை, மார்க்ஸியத்தை அக்கரைப்பற்றில் தனித்த ஆய்வுகூடம் வைத்துச் சிந்தித்துக் கண்டுபிடித்தார்களா என்ன? தெரிதாவைப் படிப்பவர், சிந்தனையைப் பின் தொடர்பவர் மேற்கத்திய அறிவுசார் அடிமையா? Foucault-வைப் பயன்படுத்துபவர் பிரெஞ்சு சிந்தனையின் அடிமையா? Marx-ஐப் படிப்பவர் ஜெர்மன் சிந்தனையின் அடிமையா? அவர்களை அப்படியே முன்வைக்கும் றியாஸ் குரானா மேற்கின் அடிமைச்சேவகரா என்ன? இல்லை ஒருபோதும் அப்படி அல்ல. அது அல்ல சிந்தனை தொடர்ச்சி நிகழும் வழிமுறை. “செல்வாக்கு, தொடர்ச்சி, உரையாடல், விமர்சனம், மறுவிளக்கம் ஆகியவற்றுக்கும் கீழ்ப்படிதலுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.”

ரெனே மாக்ரிட் — Utopia (1945)

சரி ஏன் ஈழத்து இளந்தலைமுறை தமிழகப் படைப்பாளிகளை முன்னோடிகளாகக் கொள்கிறது. காரணம் றியாஸ் குரானா சொல்வது போல அடிமை ஏக்கம் அல்ல. உண்மையில் அதன் முதன்மைக் காரணம் வேறு. நாம் தலைமுறை ஆசானாகக் கொள்ளக் கூடிய ஒரு அறிவுசார் ஆளுமைக் கூட நம்மிடம் இல்லை. அதாவது உடைந்து காலில் பணிந்தமர்ந்து விடக் கூடியதாக நம் சிந்தனைக் கூட்டை, புறங்கழுத்து அடியைக் கொடுக்கக் கூடிய ஒரு ஆகிருதியும் நம்மிடம் இல்லை. அப்படி ஒருவரையாவது சுட்டிக் காட்ட முடியுமா? அறிவுத்தாகமும், தேடலும், சிந்தனைப் பசியுமுள்ள இளந்தலைமுறைக்கு நம்பிக்கையுடன் வழிகாட்டக் கூடிய ஒரு ஆளுமை கூட நம்மிடம் இருக்கிறாரா என்ன? இல்லவே இல்லை. நமக்குக் கிடைத்திருப்பவர்கள் இலக்கியத்தின் பின் வாங்கில் முதுகுக் கூனலுடன் அமர்ந்திருப்பவர்கள். அவர்கள் மிகச் சிறிய அன்றாடங்களை தேய்வழக்கான மொழியில் எழுதிய சில்லறை எழுத்தாளர்கள். அல்லது அரச விருதுக்கு கையேந்துபவர்கள். நமக்கேன் வம்பென கருத்துதிர்க்காமல் ஒதுங்கியிருக்கும் நாகரிகமானவர்கள், முனைவர் பட்ட ஒற்றை புள்ளிக்கு வேண்டி புத்தகம் எழுதுபவர்கள். சுக்கில விருத்திக்கான லேகியம் போல இலக்கியத்தை அன்றாட லெளகீகத்தின் எல்லையுள் மட்டும் மதிப்பிடத் தெரிந்தவர்கள். அதற்கு அப்பாலான கூரிய நோக்கோ கனவோ எதுவுமற்றவர்கள்.

ஒரு பெரும் பண்பாட்டை எழுதக் கூடிய அல்லது அதன் நுண் கூறுகளுடன் உரையாடத்தக்க பெரிய அறிஞரோ, பண்பாட்டு ஆளுமையோ, ஆகிருதியான அல்லது எதிர்மறையாகவேனும், அடங்கியேனும் சமூகத்தில் ஒலிக்கக் கூடிய குரலுள்ள எழுத்தாளரோ கூட நம்மிடம் இல்லை. இலக்கியத்தின் அடிப்படைகளை குறைந்தது அரைமணிநேரம் தொகுத்து உரையாடக் கூடிய, தொடர் உரையாடலில் இருக்கக் கூடிய படித்தவர்கள் கூட நம்மிடம் இல்லை. ஏன் துறை சார் அறிஞர்கள் கூட நம்மிடம் இல்லை. ஒரு நல்ல பத்திரிகை. சமூகப் பிரச்சனையைப் பற்றி அலசக்கூடிய அசலான பார்வையுடைய சிந்தனையாளர் நம்மிடம் இல்லை. நம்மிடம் இருப்பவர்கள் கட்சிசார்ந்த சிறு அறிஞர்கள். எல்லாவற்றையும் சதியாக, அரசியல் சராசரித்தனத்துடன் மட்டுமே சிந்திக்க, உரையாடக் கூடிய சிறுமதியர்கள். அவர்களுக்கு அரசியலுக்கு அப்பாலான புனைவின் நுட்பங்களோ, சமகால இலக்கியப் போக்குகளோ, அல்லது புதிய தலைமுறையினரின் சிக்கல்களோ, ஏன் அவர்களின் அறிவுப்பசியை வழிநடத்தக் கூடிய தகுதியோ கூட அவர்களிடம் இல்லை. அப்படி யாருமே தம்மை தகுதிப் படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை. அது நம் வீழ்ச்சி. ஈழம் போன்ற கொந்தளிப்பும், நெருக்கடியுமான சூழலில் இருந்து மானூடம் நோக்கிப் பேசக் கூடிய பெருங்குரல்கள் எழுந்து வந்திருக்க வேண்டும். மொத்த பண்பாட்டையும், வரலாற்றையும் தொகுத்தளிக்கும் குரல்கள் உருவாகியிருக்க வேண்டும். நேற்று நோபல் பரிசு பெற்ற மூளை அறிஞரில் இருந்து, கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம் எனத் தொகுத்தளிக்கும் ஒட்டுமொத்த பார்வையும் முன்வைக்க கூடியவர் ஒரு சிலரேனும் உருவாகியிருக்க வேண்டும். நம் தீயூழ் அப்படி ஒருவர் கூட நம்மிடம் இல்லை.

நம்மவர்கள் செய்வதெல்லாம் கோட்பாடுகளை அறைகுறையாக ஒப்பிப்பது. தனிநபர் அரசியல் சரிநிலை சார்ந்து இலக்கிய விமர்சனம் செய்வது. இலக்கிய விமர்சனத்தின் அளவுகோல் நபரின் ’நல்ல’ குண இயல்பில் இருக்கிறது என்பதுபோல் பேசுவார்கள். அது சராசரிகளின் பொதுப்புத்திப் பார்வை.

றியாஸ் குரானாவையே எடுத்துக் கொள்வோம். அவருக்கு ஈழத் தமிழ் படைப்பாளிகளுக்கு இருந்தது போல புற நெருக்கடிகூட இருந்ததில்லை. ஆனால் கடந்த 25 வருடங்களாக அவர் அடைந்த அடைவு என்ன? உருவாகியளித்த பண்பாட்டுப் பங்களிப்பென்ன? நினைவில் நிற்கக் கூடியதான ஒரு வரி, குறிப்பிடும்படியான ஓர் சொல்லையாவது அவரால் எழுதியெடுக்க முடிந்திருக்கிறதா? பிழையான கோட்பாட்டு விளக்கத்துக்கு அப்பால் அவரால் சமூகம் பற்றி, போர் வரலாறு பற்றி அல்லது இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு நெருக்கடி குறித்து ஏதும் சொல்ல முடிந்திருக்கிறதா? பொருட்படுத்தக் கூடிய  அசல் பார்வை ஒன்றையேனும் அவரால் முன்வைக்க முடிந்திருக்கிறதா? இல்லையே. துருப்பிடித்த கோட்பாட்டு இரும்புக் கவசத்தைக் காவித்திரிவதை விட இவர்கள் என்ன பெரிதாகச் சாதித்து விட்டார்கள். இவர்களை என்ன அடிப்படையில் நாம் முன்னோடிகளாக வரித்துக் கொண்டு பின் தொடர முடியும்? அச்சடித்த தாள் நிறைக்குக் கூட பெறுமதியில்லாத எழுத்துக்கள். அய்ந்து நிமிடங்கள் உரையாடினால், சட்டென்று தனிமனித அவதூறுக்கு நுட்பமாகத் தாவிடும் மனப் பழக்கமுள்ளவர்கள். அதற்கு அப்பால் இவர்களுக்கு இலக்கியத்தின் மீதோ, தன்னலமில்லாப் பண்பாட்டுச் செயல்கள் மீதோ துளியும் மதிப்பில்லை. இலக்கியத்தை அறிதற் கருவியென்றோ, விடுதலைக்கான, மீட்சிக்கான வழியக் காட்டும் முதன்மையான அறிவுத்துறை என்ற நம்பிகையோ, மதிப்போ இல்லாவர்கள்.  இலக்கியத்தை ஏதோ மொய் வைப்பதுபோல போல கொடுக்கல் வாங்கல்களாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் விமர்சன உச்சம் தனிமனித அவதூறுக்கான கருவியாக அதனை வினைத்திறனாகப் பயன்படுத்துவது மட்டுமே. இலக்கியச் செயற்பாடு ஏதோ அதிகாரச் சதி, விளிம்புநிலை ஆபத்து, உழைக்கும் மக்களிமீதான சுரண்டல் என்பதாக உரையாடத் தலைப்படுவர்கள். இவர்களுடைய இத்தகைய சிறுமதியினாலே தான், ஈழத்தின் அடுத்த தலைமுறை சிலிர்ப்புடன் அண்ணாந்து பார்க்கக் கூடிய சிகர சாதனை ஒன்றைக் கூட அவர்களால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.

ஆனால் இது பாலை பூக்கும் காலம். ஈழத்தின் கலை, இலக்கியப் பண்பாட்டு செழிப்பிற்கான துடிப்பான கீற்றுகள் அடிவான் மடிப்புகளில் தெரிகின்றன. சிவந்த தணல் துண்டுகள். அது வெறுமனே இலக்கியத்தில் மட்டுமல்ல என்பது நம் நல்லூழ். அது சினிமா, புத்தக வாசிப்பு, இலக்கியக் கூட்டங்கள், ஓவியம், நாடகம், விமர்சனம், வரலாற்று எழுத்து என பல தளங்களிலும் முகிழ்ந்து வருகிறது. கடந்த காலத்தின் அரசியல் கசப்பற்ற தலைமுறை அதனைச் சுமக்கத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் தங்கள் கலை, இலக்கிய, பண்பாட்டின் சத்தான கூறுகளைத் நுண்ணுனர்வுமிக்க துதிக்கைகளால் தொட்டெடுக்க விழைகிறார்கள். இதுகாறும் நம் சூழலை அர்த்தமற்ற சொற்குவியல்களினால் நிறைத்த பழைய இரும்புக் கோட்பாட்டு காவிகளுக்கு அது அச்சுறுத்தலாகிறது. அவர்கள் அமர்ந்திருந்த போலியான அறிவுஜீவிப்பீடம் கவிழ்க்கப்படுகிறது. அவர்களின் அறியாமை, அறிவின் பெரு வெள்ளத்துள் அடித்துச் செல்லப்படுகிறது. அவர்கள் மதிப்பு மிக்க வாழ்கையாக கருதிய கடந்தாலம் அவர் கண் முன்னாலே துடைத்தளிக்கப்படுகிறது. இது ஒருபோதும் பண்பாட்டுத் தற்கொலை அல்ல. அப்படித் தற்கொலை செய்வதற்கோ, கைவிடுவதற்கோ, உதறுவதற்கோ ஏதுமற்றிருந்த குருதியுண்ட கடும்பாலைதான் பூக்கத் தொடங்கியிருக்கிறது. தகித்திருந்த பாலையின் விதைகளின் மேல் அறிவின் சாரல் பொழிகிறது. நிச்சயம் அது தமிழகத்திலிருந்துதான். கடந்த காலங்களில் அய்யன் வள்ளுவனிடமிருந்து உரிமையுடன் அள்ளி இடையில் கட்டிக் கொண்டதுபோல, இப்போதும் அள்ளியெடுக்க ஒரு நொடியும் தயங்க வேண்டியதில்லை. கடும்பாலையின் விதைகள் நிலத்தை அறைந்து திறக்கட்டும். 


***

றியாஸ் குரானாவின் களம் புதிது கட்டுரைக்கான இணைப்பு.
பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம்

றியாஸ் குரானா கவிதைகள் குறித்த என்னுடைய மதிப்பீடு.

பிரதிபலிப்புக்கு எதிரான பிரதிபலிப்பு.