காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன இது கவிதை என்பது வாசகன் வாசிப்பதுதானே, கவிதை வாசகனையும் வாசிக்குமா என நீங்கள் வினவுகையில் இதற்கான விடைகள் இவ்வாறு அமைகின்றன.
அதுதான் கவிதை தரும் மாய அனுபவம்.
இவ்வாறான அனுபவத்தை தருகின்ற தொகுதியாக கவிஞர் கிரிசாந் அவர்களின் “வாழ்க்கைக்குத் திரும்புதல்” அமைகின்றது.
இருளை அதன் பாரம்பரிய வரைவிலக்கணத்துக்குள் வைத்துக்கொண்டு ஒளியினை உயர்த்துகையில் ஆரம்பிக்கின்ற தேடுதலில் அல்லது கள்ளன்-பொலிஸ் விளையாட்டில் நான் அல்லது எனது சுயம் இவ்வாறு அகப்பட்டுக் கொள்கிறது.
/நானே கைகளில் விலங்கிடப்பட்டவன்
நானே தெருக்களில் தனித்திழுபட்டவன்
நானே கடவுளரை மன்றாடித் தீர்த்தவன்
கைவிடப்பட்டவன்.//
கைவிடப்பட்டவனுக்கான அந்தரிப்பு அவனுக்கு ஒரு மிடறாக அமைகையில் சுற்றி இருப்பவர்கட்கோ அது தீராத பானமாக எஞ்சுகிறது. ஏனெனில் கைவிடப்பட்ட ஒரு மனிதனிடம் அதிகமாகக் கேள்விகளில்லை. அன்றாடங்களை மட்டும் கவனித்தபடி நகர்கின்ற வாழ்க்கை அவனுக்கு. ஆனால் சுற்றத்துக்கோ ஆயிரம் கேள்விகள். ஏன், எதற்கு, எவ்வாறென பதட்டங்களால் ததும்பும் பானம் அது.
நான் கைவிடப்பட்டிருக்கையில் கவிதை என்னை கவனிக்கும் என்ற எளிய நம்பிக்கைதானே அதனூடான எனது பயணம். அப்போது கவிதையினைப் பார்த்து என்னால் கூற முடியும் இப்படி.
//ஆனால்
நாம் யாத்திரைக்கு முன்னர் சந்தித்து கொள்ளும் பயணிகள்
இந்த உலகம்
நம் முன் கற்களால் எழும்புகிறது
அதனாலென்ன
ஆழக்கிணற்றின் அடியாழத்தில் நமக்குள்
எந்த கதவுகளும் இல்லை//
கவிதையும் வாசகனும் ஒருபோதும் பிரிவதில்லை என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும். சுவாரசியம் என்னவென்றால் கைவிடப்பட்ட ஒருவனைத் தேடி எழுந்த ஒளியும் ஆழக்கிணற்றின் இருளுக்குள் வந்து விடுவதுதான். அதனாலென்ன இந்த உலகமோ அல்லது வாழ்வோ தீர்வதில்லைதானே. ஏனெனில் “இருள் என்பது குறைந்த வெளிச்சம்” என பயிற்றுவித்திருப்பதன்றோ நம் தொன்மம்.
இப்போது முகிழ்ந்திருக்கும் இந்த உறவுக்கு நான் நிச்சயமாக இடும் பெயர் “காதல்” என்பதாகிறது.
//உனது குளிர் நிறைந்த கண்களுக்கு முன் உனக்காக எப்போதும் அழாதவன் காத்திருக்கிறான்//
//அன்பே
எனது எல்லையோடு தொடங்குகிறது
உனது காடு//
கவிதைக்கும் வாசகனுக்குமான பயணத்தில் பாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மிக இலகுவாகக் கூறுவதாயின் காதலுற்ற ஒரு பெண்ணின் மனநிலைகள் மாதிரி அது மாறிக்கொண்டே இருப்பது. கவிதையை எப்படி பெண் என்பாய் என்கிற கேள்வியை இவ்வாறு எதிர்கொள்கிறேன்.
//கடல்களிடமும் அதன் உறக்கத்திலிருக்கும் புயல்களிடமும் இருந்து உன் போன்ற ஒருத்தி
உருவாகிறாள்//
என்னளவில் கவிதையின் உருவாக்கம் இவ்வாறு நிகழ்வதால் கவிதையை பெண்ணாக்கித் தொடர்கிறேன். இப்போது காடென இருக்கிறது கவிதையாகிய பெண்.
காடென்பதும் மனதில் உருவாக்கும் பச்சையத்துக்குள் பதுங்கி கிடக்கின்றன செந்நிற குருதியாறுகள். ஏனெனில் காடு என்ற படிமம் என்னுள் பதித்திருக்கும் தொன்மம் வேட்டை என்கிறேன். நான் இந்த காட்டினுள் இறங்கி வேட்டை கொள்கையில் அதனுள் பதுங்கியிருக்கும் மொழியாகிய விலங்குகள் எனக்கிரையாகின்றன. ஆனாலும் இங்கேயும் சில இடங்களில் நான் தோற்றுவிடுகிறேன். ஏனெனில்
//ஆபத்தான கணங்களில்
ஊடுருவும் விழிகளில் பதுங்கியிருக்கும்
என் மிருகத்தை ஒரு வளர்ப்பு நாயைப்போல தடவிக்கொடுப்பவளிடம்//
ஆனாலும் அவளின் இந்த சாகசம் நிலைக்கவில்லை.
//பற்றி விறாண்டி ,கடித்து, உண்டு, கொன்று என்மேல் ஏறி இறங்கும் பெருவிலங்கொன்றை வேட்டையாடி உண்கிறேன். கடித்து, ரத்தம் தளும்பிய விரல்களால் உன்னை ஆரத்தழுவுகிறேன்//
நான் வேட்டை கொள்வது மொழியாகிய பெருவிலங்கினை. இப்போது பச்சையமாகிய மிஞ்சி நிற்கும் அவளை ரத்தம் தளும்பிய விரல்களால் தழுவுகிறேன்.
ஆனாலும் அவளினால் எனது மூர்க்கத்தைச் சகிக்க முடியவில்லை. மொழியகன்றபின் எனக்கும் அவளுக்குமிடையிலான சம்போகம் இவ்வாறிருந்தது.
//எஞ்சிய உடலைக் கொண்டு
என்னைப் பார்த்தாள்.
சூரியன் எங்களுக்கு முன்
எரிந்து கொண்டிருந்தது//
இத்தனையும் நிகழ்ந்த பின் எங்களுக்குள் என்ன நிகழ்ந்திருக்க வேண்டுமென்பது உங்கள் ஊகமாயின், அது இவ்வாறே நிகழ்ந்தது என்பது வெளிப்படை உண்மை.
//மீண்டும் பரிசளிக்க முடியாதபடி
பழையதாகிவிட்ட ஒரு இதயத்தைப் போல விம்முகிறது இரவு.
இந்த விளக்கினை அணைத்து விடு
இது தான் கடைசித் துயரம்//
இனி என்ன?
//ஆமைகள் முட்டையிட்ட நினைவுகளுக்குள் குஞ்சுகள்
மணல் மூடியிருக்கின்றன.
விடியும் போது வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.
படகை முறித்த பின்
காட்டை எரித்த பின்//
அவளிலிருந்து வெளியேறி விடுகின்றேன். இனி எனக்கான வீட்டிற்குத் திரும்புகிறேன். எனது வீடு சமகாலத்தின் உண்மையை உங்களுடன் பகர்கிறது.
//சுவர்ப் பிளவில் அரசமரங்கள் – வேர் விடத் துடிக்கும் உன் வீடு//
இனியும் நான் இதுவரை உங்களுடன் பகர்ந்த எனது உழலை வெறுமனே புனைவென கடக்க முடியுமா?இல்லவே இல்லை. ஏனெனில்
//கவிதை, உண்மையை விட ஆழமான உண்மை.//
லலிதகோபன்
***
ஒற்றைக்கோடை கவிதைகள். ஆதி பார்த்தீபன் தாயதி
// ஆதியின் கவிதைகள் வாழ்விற்கும் வாழ்வின் ஆன்மீகத்துக்குமான ஒரு உரையாடலின் தலைவாயில் என மதிப்பிடுகிறேன். அதில் இன்னும் விரிவாக எழப்போகும் ஆலயமொன்றின் தோரணவாயிலென ஒற்றைக்கோடையைச் சொல்லலாம். அவரது கவிதைகளில் உள்ள களியினதும் உக்கிரத்தினதும் பாவனைகள் ஒருவகை ஆன்மீகம். காதலும் அன்பும் மானுடருக்கு ஆன்மீகமான அகப்பயணத்தை உண்டாக்கும் வழிகளைக் கொண்டிருக்கிறதா என எண்ணிக் கொள்ளச் செய்பவை. ஒருவர் குடும்பத்தை அமைத்துக் கொண்டு தன் கனவையும் சூடிக் கொண்டு உலகியலில் வென்றமையும் இடத்தின் அளவு கொண்ட ஆன்மீகம் கொண்டவை. இங்கிருந்து விரியும் பலதிசைகளும் விந்தைகளும் அவரது எழுத்தில் உருவாகி வரவேண்டும்.
கலை தன் நுண்மையினால் மதிப்பினால் என்றுமுள தன்மையினால் பிறிதொரு சொல்லின்றி தன்னை முன்னிறுத்தி அமைய வேண்டியது. ஆதி பார்த்திபனின் கவிதைகள் தமிழ்ச்சூழலில் கவனிக்கப்பட வேண்டிய குரல் என்பதே இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம். இங்கிருந்து அவரை வாசித்தவர்கள் தங்களது பார்வைகளைத் தொகுத்து வைப்பதன் வழி நீண்டதொரு பண்பாட்டுச் செயல்பாட்டின் இன்றைய கருவியெனத் தன்னை ஆக்கிக் கொள்ள முடியும். ஒரு எழுத்தாளருக்குச் சமூகம் அளிக்க வேண்டிய முதன்மையான மதிப்பென்பது அவரின் சொற்களைக் கவனித்தல். அதை விவாதித்தல். அங்கிருந்து வருங்காலம் நோக்கிய கனவின் பெருந்தொலைவு வரை நீண்டிருத்தல். //
– கிரிசாந்
000
தொகுப்பில் இருந்து சில கவிதைகள்
பிரியமற்ற வெளி
பிரார்தனைகளோ கருணையின் கடைசியிருப்புகளோவற்ற
கூட்டைவிட்டு எடுத்தாகிவிட்டது ஒரு முட்டையை -கோதுகழன்று பிரமாண்டமாய் வளரும்
சிறகற்ற தனிப்பறவை வெறுப்பு
அதுவதன் நம்பிக்கையின்மையை துரோகத்தை ஏமாற்றுதலைக் கொண்டு பறக்கும்
எனது பறவைகளே கூடு திரும்புங்கள்
ஒளியற்றது உறவுகளற்ற பூமி – இருந்தும்
அழியாது இவ்வுலகு
பறவைகளே! அன்பின் சிறகிருந்தும் அனாதையானது காலம்
வானம் தனிப்பது மழை
ஆறு கடல் ஆழி பிரியமற்றவெளி
கண்ணீர் பொதுத்திரவம் -வாழ்தல் என்பதோ வலிகளின் ஞானம்
நேசமற்றது என் பறவை -ஆயினும்
அன்பின் இறுதித் தானியத்தையும் எனது
வளர்ப்புப் பறவைகளுக்கே எறிகின்றேன்
கருணையின் கடைசித்தானியமுமற்றது பசி
பறவைகளே கண்ணீரே ஞானம்.
பச்சையவிரல் தொடுகை
கடந்த முத்தங்களின் ஒவ்வொரு திசுக்களிலும் கழன்று போகின்றது
பிரபஞ்சநிழல் – பின்வரையின் மஞ்சள்நிறவொளியிலிருந்து
எச்சில் பிசுக்கை மெல்ல நகர்த்தியிறங்கும்
புழுவைப்போல மெல்ல எனது
அந்தரத்தனிமையில் இறங்குகிறது
உன் ஞாபகப்புடகம்
உன் பச்சையவிரல் தொடுகையின் பின் களைத்துப்போயிருக்கின்றது
திசுக்களின் புத்துயிர்ப்பு
உச்சந்தலையின் ஞானத்துவாரம் வழி – அல்லது
பெருவிரல்களின் நகக்கணுக்கள் வழி
ஏறிக்கொண்டிருக்கிறது
உன்னைப்பற்றிய புரை
தாடிநரையில் அல்லது அந்திமகால நோய்ச்சளியில் காய்ந்துபோயிருக்கிறது
உன் பால்யகாலத்தின் நினைவுப்பாசி…
***
நோவிலும் வாழ்வு கவிதைகள் வசிகரன் ஆக்காட்டி
// வசிகரனின் முதற் தொகுப்பு நம்பிக்கையளிக்கும் குரலொன்றின் நுழைவு. நோவிலும் வாழ்வு தொகுதியில் ஒரு துறைமுக நகரிலிருந்து ஒலிக்கும் குரல்களின் ஓசைகளும் அதன் தெருக்களும் விளக்குகளும் கடலின் கரையும் பாசிகளின் நீர்மையும் கலைந்து உருக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. கவிஞரின் அகம் தன் நிலத்தில் எங்கனமோ ஒருவிரலைத் தொட்டுக் கொண்டே வான் நோக்கி எழுகிறது. இளையவர்களுக்கு அது முதன்மையான அம்சமும் கூட. வசிகரனின் கவிதைகள் எளிமையும் அன்றாடமும் பின்னிக் கொண்டு சொல்லின் சங்கீதத்தையும் கைவிடப்பட்டு உள்ளொடுங்கி ஒலிக்கும் ஆணின் குரலையும் மெல்லிய கேவலென கூவிச் செல்லும் பறவைக் குரல் போல இக்கவிதைகளில் ஒலிக்கிறது. ஒருவகையில் நிர்வாணத்தை நோக்கும் அன்றாடனின் விழிகள் கொண்டவை. சலிக்கும் கரைமணலில் எஞ்சும் வண்ணக் கற்களும் கடலுயிரிகளின் எலும்புகளும் சொல்லால் உயிர்பெற்று எழப்போகுபவையென மயக்குக் கொண்டவை இக்கவியுலகு.
வசிகரனின் சொற்தேர்வுகளும் அகம் சென்று கொந்தளிக்கும் கணங்களும் முழுதிலும் நிகழ்வாழ்வுக்குரியவை. அவை பெருங்கனவுகளை நோக்கி அறைகூவவில்லை. எளியவை குறித்து இரங்கவில்லை. தான் எனத் தருக்கி நிற்கும் ஓர் உயிர் அடையும் வாழ்கணங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிகழ்ந்து மறைகிறது. நினைவில் தங்கும் சாம்பிராணிக் குச்சியொன்றின் வாசனை போல. //
– கிரிசாந்
தொகுப்பில் இருந்து சில கவிதைகள்
சிந்தாத கண்ணீர்
ஒட்டியிருந்த நீ
பிய்த்துக்கொண்டு சென்றாய்
வாள் வெட்டிச்செல்லும் தசைத்துண்டைப்போல்
திக்கற்ற நிலை
எழுந்தோடத் துடிக்கும் உடல்
முடியாமல் பொருமும்
கூரையைப் பிய்த்துக்கொண்டு குண்டுவிழுந்தால்
உடல் சிதறும்
அமைதி பரவும்.
கண்கள்
மழைக்காலக் கேணியைப்போல முட்டியுள்ளன
நீர் திரண்டு
வழிய முன்
அகன்றது மேகம்
குத்தியது வெய்யில்
உறைந்தது கேணி
இனி…
நீர் சேறாகும்
கேணி சாகும்
மழை வரும் வரை.
*
நினைக்காத கள்ளு
உன்னிடம் விடைபெற்று
அவளைக் காணச் செல்கின்றேன்
தெருவெல்லாம் பாடல் ஒலிக்க
நீண்டு செல்லும் தெரு
ஞாபகங்களின் நீளமாய்
விறகடுப்பு எரிகிறது
வீட்டில் அவள் மட்டுமில்லை
தவிப்பு புகையாய் எழும்பும்.
உயிர்ச்சூடு இதயத்தை உந்துவது போல்
ஏதோவொன்று
உனை நோக்கி இழுக்கும்.
நினைவில் நீ…
தனிமையில் சீக்காகிக் கிடக்கிறாய்
நமக்கிடையில் நெடுந்தூரம் நடந்துவிட்டோம்.
புன்னகைக்கவும்
கையசைக்கவுமே முடிகிறது
மல்லாந்தும் ஒருக்களித்தும் படுத்திருக்கிறோம்
பிடரி முடிகளுக்கிடையில்
தூரத்து ஒளி வீச
உன் நரைமுடி மினுங்கும்.
நம் காதலின் திரளாக
என் வீங்கிய வயிறு
நினைவுகள் மேலெழும்
ஏவறையாக
கள்ளைப்போல் புளித்து
நம் காதல் மணம் வீசும்.
•
***
ஆனைக்கோடரி கதைகள் தர்மு பிரசாத் கருப்புப்பிரதிகள்
// தர்மு பிரசாத்தின் சமகாலத்தவரான யதார்த்தனுடைய கதாபாத்திரங்களைப்போல மண்ணோடு இயைந்த பிரக்ஞையும், வாழ்வியலும் கதைமாந்தர்களுக்கு வாய்க்கமுடியாதபடி நனவியல், நிலவியல், ஒப்பளவியல் சிக்கல்கள் மேலிட்டுவிடுகின்றன. தர்மு பிரசாத்துடைய சமகாலத்தவரான அனோஜனுடைய கதைகளில் வருவதுபோன்ற ஆழ்ந்த சமரசத்தையும் இவர்களால் செய்துகொள்ள முடிவதில்லை. புனைவால் மீட்டெடுக்கமுடியாத நிலம், மீட்டலுக்கு வசப்படாத உளவியல் சிதைவு – இந்த இரண்டு அசாத்தியங்களையும் தனது எழுத்தின் களமாகக் கொள்வது மிகவும் கடினமான விடயம். இது தோல்வியுடன் சமரசம் செய்துகொள்ள நேர்கிற விடயப்பரப்பு. அதனால் பல இடங்களில் சறுக்கல் நேரவே செய்கிறது. சிறுகதைக்குரிய வடிவநேர்த்தி, சிக்கனத்தன்மை போன்றவற்றுக்கு இந்த விடயப்பரப்பின் அவலம் இலகுவாக வளைந்து கொடுக்கப்போவதில்லை என்பது இன்னுமொரு சிக்கல். படைப்பாற்றலுக்கு ஏற்படும் நெருக்கடி சில குறுக்குவழிகளை நோக்கி அவரை நகர்த்துகிறதோ என்றும் யோசிக்கிறேன். பூடகப்படுத்துதல், குறிப்புணர்த்துதல், உருவகப்படுத்துதல் எனப் பல உத்திகளை அவர் முயற்சிக்கிறார். சில உண்மைகளை எப்படி முன்வைக்கமுடியும் என்கிற ஆழ்ந்த விசாரம் அவரை ஆட்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. பேசாப்பொருட்களைப் பேசத்துணிந்தோம் என்கிற அசட்டுத் தைரியத்தில் இவற்றை முன்வைத்துவிடமுடியாது என்ற புரிதல் மேற்சொன்ன உத்திகளை நோக்கி அவரை நகர்த்தியிருப்பதாக நான் கருதுகிறேன்.
சயந்தனிடமும், ஷோபா சக்தியிடமும் வருவதைப் போலவே புனைவு அல்லது எழுத்து மீட்பராக, மீட்பின் சாத்தியமாகச் சில இடங்களில் வந்துபோகின்றது – ஆனால் இதை ஒரு பழக்கதோஷமாகவே கருதுகிறேன். ஷோபாசக்திக்கும் சரி, சயந்தனுக்கும் சரி ஒருவித விடுதலை இறையியலைத் தக்கவைப்பதைப் புனைவு சாத்தியமாக்குகிறது. ஆனால், இந்தச் சிறுகதைகளைப் பொறுத்தவரை தப்பித்தல் மட்டுமே சாத்தியம், விடுதலை சாத்தியமில்லை. விடுதலை பற்றிய கரிசனை பின்னொட்டாக ஆங்காங்கே வந்துபோனாலும், அது ஆங்காங்கே இறையியலாகத் தோற்றம் தந்தாலும் (‘மிக இரகசிய இயக்கம்) – அதனுடைய எல்லைகளால் நிர்ணயிக்கப்பட்ட பரிதாபகரமான எதிர்ப்பாகவே அது எஞ்சிவிடுகிறது. இந்தத் தோல்வியை, அதன் பரிதாபத்தை எப்படி எழுதுவது – அல்லது அதையே மட்டும் எழுதவேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்தில் இருந்து எப்படி மீள்வது என்பது போரின் சமகாலத் தலைமுறைகளுக்கு முன்னிருக்கும் ஆகப்பெரிய கேள்வி. //
– ஹரி இராசலட்சுமி
இணைப்புகள் :
வாழ்க்கைக்குத் திரும்புதல் முன்னுரை