கொடிறோஸ் (குறுநாவல்)

 

கொடிறோஸ்
கொடிறோஸ், குறுநாவல்.

கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்தனின் மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து கிரிசாந்தின் இக் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளும் குறைவான வாசிப்பே ஈழத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றிற்கு என்றில்லை அநேகமான ஈழப் படைப்புகளின் நிலையும் அதுதான். காரணம் ஈழ வாசிப்பு பல முன்முடிவுகளுடன் சுமையுடன் இருக்கின்றது. அதனால் தன்னிச்சையான வாசிப்புக் குழுக்களோ அல்லது இலக்கிய ரசனை சார்ந்த உரையாடற் குழுக்களோ உருவாக முடிவதில்லை. உதிரிகளின் அபிப்பிராயங்கள் என்ற அளவிலேயே விமர்சனங்கள் இருக்கிறன. மிகச் சிறு அரசியல் வட்டங்களுக்கு அப்பால் நிகழும் இலக்கிய வாசிப்புக் குறித்த சந்தேகமும் அவநம்பிக்கையும் எப்போதும் இருக்கிறது. அவற்றை மெய்ப்பிப்பது போலப் புனைவுகளின் அரசியல் உரையாடல்களே மூர்க்கமாக நிகழ்கின்றன. அப்படியான வாசிப்பிற்கும் விமர்சனத்திற்கும் மட்டுமே நம் சூழல் இசைவாக்கமடைந்திருக்கிறது. அதனால் அரசியல் உள்ளடக்கம் இல்லாத, நேரடியாகக் கதை சொல்லாத அதாவது படைப்பூக்கமான சித்திரிப்புடன் கூடிய காட்சி மொழி வழி நிகர் வாழ்வனுபவமாக திரட்டியளிக்கும் படைப்புகள் வாசிக்கப்படுவதோ உரையாடப்படுவதோ இல்லை. அவை ஏதோ இரண்டாம் நிலைப்படைப்புகள் என்ற கவனிப்பின்மை இருக்கிறது. அந்த வகைப் புனைவுகளை கவனப்படுத்தும் விருப்புடன் கொடிறோசை வெளியிடுகிறோம்.

– தர்மு பிரசாத்

கொடிறோஸ் தமிழகத்திலும், இலங்கையிலும் வைகாசி மாத நடுப்பகுதியில் கிடைக்கும்.