கடந்த எழுபது வருடங்களாக டொமினிக் ஜீவா இடையீடு செய்து கொண்டிருந்த இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பென்ன? தன்னலம் கருதாத தனிமனித இயக்கத்திற்கு சமூகத்தில் ஒரு மதிப்பும் கரிசனமும் எப்போதும் உண்டு. பண்பாட்டுத் தளத்திலான இயக்கத்திற்கு மட்டுமே அந்தக் கரிசனத்திலிருந்து விதிவிலக்கு உண்டு. அவை பயனற்ற வெற்று வேலையாகவே பொதுச்சமூகத்தால் புரிந்துகொள்ளப்படும். அதிலும் பொருளியல் ஆதாயங்கள் ஏதும் கிடைக்காத கைக்காசைக் கரியாக்குகிற இயக்கியச் செயற்பாட்டை, சமூகம் எள்ளலுடன் எதிர்கொள்ளும். அந்த எள்ளலுடன் கூடிய நிராகரிப்பைச் சந்திக்காத தமிழ்ப் படைப்பாளிகளே இருக்கமாட்டார்கள். சக்திமுத்தப் புலவரிலிருந்து பாரதி ஈறாகப் புதுமைப்பித்தன் வரை அந்தப் பெருமைமிகு வரலாறு நம்மிடம் இருக்கிறது. டொமினிக் ஜீவா அப்பெருமைமிகு வரலாற்றை தன் காலத்தில் பிரதிநிதித்துவம் செய்பவராக இருந்தார். ஆனால் அவருடைய இலக்கியப் பங்களிப்பு அந்த இடையறாத தனிமனித இயக்கத்தினூடாக மட்டும் உருவாகி வந்ததொன்று அல்ல என்பது அவரின் தனித்துவமான இலக்கிய அடையாளம்.
டொமினிக் ஜீவா நாற்பது ஆண்டுகளாக மல்லிகை எனும் சிற்றிதழை வெளியிட்டார். மல்லிகைப் பந்தல் எனும் பதிப்பகம் ஊடாகப் புத்தகங்களைப் பதிப்பித்தார். இந்த இலக்கிய ஆர்வம் உடனடி மனவெழுச்சியாகச் சிறுத்துச் சுருங்கிவிடாமலும் அன்றாட வாழ்வின் நெருக்குதலுக்கு உட்பட்டுத் திரிந்துவிடாமலும் இருந்திருக்கிறது. தமிழில் மின்னி மறைந்த சிற்றிதழ்களின்
தொகையை வைத்துப் பார்த்தாலே மல்லிகையின் தொடர்ச்சியில் உள்ள அசாத்தியத் திறனை உணர்ந்துகொள்ள முடியும். சிற்றிதழ்களின் சிதைவு வெறுமனே பொருளாதரம் கணக்கு மட்டும் அல்ல. அதில் கருத்தியல் பார்வை ரீதியான வறுமைகளும் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. பல சிற்றிதழ்கள் ஓரிரு இதழ்களுடனே தம் பணியை முடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் கருத்துகளின் தொகை அவ்வளவுதான். ஆனால் மல்லிகை தன் கருத்து, பார்வைத் தளத்தை தொடர்ந்து விரித்தபடியே இருந்திருக்கிறது. அதனாலும் அதன் தொடர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. அதன் இந்த அறுபடாத தொடர்ச்சி எம்போன்ற அடுத்த தலைமுறை இலக்கியப் படைப்பாளிகளுக்கு மிகுந்த உத்வேகம் தரக் கூடிய வரலாற்று நிகழ்வு. மல்லிகை இயக்கத்தையும் தாண்டிய அவரது இலக்கியப் பங்களிப்பு அவரது படைப்புகளின் வழியாக உருவாகி வந்த ஒன்றாகவும், அவரது சாதிய அடையாளம் சார்ந்து அவருள் எப்போதும் கனன்று கொண்டிருந்த தலித் என்றும் தன்னுணர்வு சார்ந்ததாகவும் இருக்கிறது.
யாழ்ப்பாணச் சூழலில் தம் தலித் சாதி அடையாளத்தை முன்வைத்து இயங்குவது தன்னழிவிற்கே இட்டுச்செல்லும் என்பார் கவிஞர் சுகன். அது உண்மையானதும் கூட என்பது மாதிரியா
ன கசப்பான அனுபவங்களே ஜீவாவிற்கு கிடைத்திருக்கிறது. ஒரு தைப்பூச நன்நாளில் புத்தம் புதிய வேட்டித் துண்டை இடையில் சுற்றியபடி தொழில் பழக – பின்னாளில் தான் அனைத்தையும் கற்றுக் கொண்ட சர்வகலாசாலை எனச் சொல்லப்போகின்ற- யோசப் சலூனிற்குச் செல்கின்ற சிறுவனுக்கு யாழ்ப்பாணச் சாதிய ஒடுக்குமுறை குறித்த என்னவகையான புரிதல்கள் இருந்திருக்கும். யாழ் நகரத்தை ஒட்டிய வீட்டுச் சூழல், பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கிற குடும்பநிலை. பொருளாதரத் தன்னிறைவு, நகரச்சூழல் இரண்டும் கொஞ்சமேனும் சாதிய ஒடுக்குமுறையைக் குறைத்திருக்கும் என நம்ப விழைந்தாலும். ஜீவா எதிர்கொண்ட யாழ்ப்பாணச் சாதிய யதார்த்தம் அவ்வளவு சிலாக்கியமானதாக இருக்கவில்லை. பாடசாலையிலும் அவர் சற்றே துடுக்கானவராகவும் கற்பதில் ஆர்வமுள்ளவராகவும் இருந்திருக்கிறார். அவரது அறியும் ஆர்வத்தையும் துடுக்குத்தனத்தையும் ‘போய் சிரையுங்கோவன்ரா இஞ்சை வந்து ஏன் உயிரை வாங்குகிறீர்கள்’ என்றே யாழ் ஆதிக்கசாதி எதிர்கொண்டிருக்கிறது. தன் கற்கும் விருப்பைத் துறந்து ஆதிக்கசாதியின் எதிர்பார்ப்பான ‘சிரைக்க’ பழகச் செல்கிறார்.
சாதியரீதியில் இழிவாகவும் வசையாகவும் சொல்லப்படுகின்ற முடிவெட்டும் தொழிலை அவர் ஒருபோதும் இழிவானதாகf$ கருதியவர் அல்லர். எதை இழிவானதாகவும் வசையாகவும் ஆதிக்கசாதி வலியுறுத்தியதோ அதையே தன்னுடைய அடையாளமாக முன்வைத்தவர் அவர். அதிலுள்ள கலையம்சத்தையும் அது உணர்வளிக்கும் மதிப்பான தொழில் என்ற தெளிவையும் மிக ஆரம்பத்திலிருந்தே ஜீவா வலியுறுத்தத் தொடங்கிவிட்டிருந்தார். தன்னுடைய புனைபெயராக ‘நாவிதன்’ என்றே கற்பனை செய்தார் என்பதிலிருந்தும் அதன் ஆழத்தைப் புரிந்துகொள்ளலாம். இது முக்கியமானதோர் இடம். பின்நாளில் தலித் உரையாடல்கள் உருவாகி வந்த போது பரவலாகிய தலித் அடையாளம் சார்ந்த தன்னுணர்வை இலங்கைத் தமிழ்ச் சூழலில் கே.டானியல், என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா போன்றவர்கள் அய்ம்பதுகளிலேயே முன்வைத்து இயங்கத் தொடங்கிவிட்டார்கள். இது அவர்களின் தொலைநோக்கான தன்னுணர்வின் எடுத்துக்காட்டு. அதனால்தான் அவர்கள் தமிழின் தலித் இலக்கிய முன்னோடிகளாக இன்று சுட்டப்படுகிறார்கள். ஒப்பீட்டளவில் இவர்கள் மூவரையும்விட நல்ல கதைகளை எழுதிய எஸ்.பொன்னுத்துரையும் தலித் பின்புலத்தில் இருந்து வந்தவரே. சாதியம் குறித்த தேர், பொட்டு உட்பட நல்ல கதைகளும் எழுதியிருக்கிறார். தன் சாதியடையாளத்தை மறைத்து இயங்கியவரும் அல்ல. ஆனால் அவர் தலித் அடையாளத்தைத் தன்னுணர்வுடன் வலியுறுத்தி இயங்கியவர் அல்ல. அவரது பல கதைக்கருக்களில் சாதியமும் ஒன்றாக இருந்திருக்கிறது. மாறாக கே.டானியல் இந்தியாவில் வெளியாக இருந்த புத்தகம் ஒன்றிற்கான தலைப்பாக “நெறிப்படுத்தப்பட்ட இலக்கியம் பற்றிப் பஞ்சமர் டானியல்” என்ற தலைப்பைத்தான் பரிந்துரைத்திருந்தார். கவனிக்க ‘பஞ்சமர்’ டானியல். இடதுசாரிப் பின்புலத்தில் இருந்து வந்த இவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை தொழிலாளி வர்க்கத்தினுள் இலகுவாகக் கரைத்திருக்க முடியும், அப்படி ஆகிவிடாமல் தங்களைத் தலித் ஆகவே முன்வைத்திருக்கிறார்கள். படைப்புகளிலும், செயற்பாடுகளிலும் தம் சாதிய அடையாளத்தையே முன்வைத்துப் போராடியிருக்கிறார்கள்.
இலக்கியத்தில் மட்டுமல்ல ஈழ விடுதலைப் போராட்டத்தையும் அவர்கள் தலித் என்னும் தன்னுணர்வில் இருந்தே இறுதிவரை அணுகியிருக்கிறார்கள். நிராகரித்திருக்கிறார்கள். அது அவர்களது இடதுசாரிய நிலைப்பாட்டால் மட்டும் உருவாகி வந்த ஒன்று அல்ல என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. டொமினிக் ஜீவா ‘சிறுபிள்ளை வேளாண்மை’ என்றார். கே.டானியல் சாதியப் போராட்டங்களை முனை மழுங்கச் செய்ய ஆதிக்க சாதித் தமிழ் தரப்பு கைக்கொள்ளும் கபடநாடகமாகக் கருதினார். அதனால் அதை மிகுந்த சந்தேகத்துடன் விமர்சித்தார். சிங்களவர்களால் தமிழர்களுக்கு நிகழ்த்தப்படுவதாகச் சொல்லப்படும் ஏன் அதிலும் அதிகமான சாதிய ஒடுக்குமுறையை அநீதியை ஆதிக்கசாதித் தரப்பு தலித் மக்களுக்கு தினமும் இழைக்கிறது அதற்கான குற்றவுணர்வோ கரிசனையோ கொள்ளாத திரளின் போராட்டம் அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. கே.டானியல், அ.மார்க்ஸ்க்கு எழுதிய கடிதங்களில் ஈழப்போராட்டம் தொடங்கி உச்சம் பெறவிருந்த காலப்பகுதிகளில் நிகழ்ந்த சாதியப்படுகொலைகளை, சாதிய மோதல்களைப் பதைபதைப்புடன் மனம் வருந்தி எழுதியிருப்பதை வாசிக்கும் போது அவரது போராட்டம் மீதான தலித் சந்தேகம் நியாயமானதாகவே இருக்கிறது. பழைய செய்தியேடுகளில் அந்தச் செய்திகள் இரு குழுக்களிடையேனா சமூகவிரோத மோதலாகவே பதிவாகியிருக்கும் என்பதில் அய்யம் இல்லை. அப்படித்தான் ஆதிக்கசாதித் தரப்பு தலித் போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்தத் தொடர்ச்சியான நிராகரிப்பையே யாழ் நூலக மீள்திறப்புத் தடைவரை ஆதிக்க சாதித் தரப்பு தலித் மக்களிற்கு வழங்கிவருகிறது என்பதைக் காணும் போது இவர்களுடைய தலித் தன்னுணர்வு சார்ந்தே சந்தேகத்தின் பக்கமாக நாமும் சாய்ந்து செல்ல வேண்டியிருக்கிறது.
தலித் அடையாளத்தை தன்னுணர்வுடன் முன்வைத்தது ஒரு பங்களிப்பு என்றால் மற்றது அவரது படைப்புகள் சார்ந்த இலக்கியப் பங்களிப்பு. டொமினிக் ஜீவாவின் ஆரம்பகாலச் சிறுகதைகளின் எல்லைகள் குறுகியவை. சிறுகதைகளின் குறுக்கம் என்பது ஒருவகையில் முற்போக்கு யதார்த்தவாதச் சிறுகதைகளின் போதாமைதான். அவை கனவையும், சமூக மாற்றத்தையும் முன்வைப்பவை. அதாவது சமத்துவ சமுதாயம் நோக்கிய கனவைப் படைப்புகளில் கற்பனை செய்பவை. அவரது கதைகளில் அந்த முற்போக்குப் பார்வை என்பது எளிமையான மனிதாபிமானமாகவே வெளிப்பட்டிருகிறது. சமூக அநீதியை நோக்கிய ஒரு மனிதாபிமானத்தின் குரலாக. இன்று அவற்றை மீள வாசிக்கும் போது காலத்தால் சற்றே பின்னகர்ந்துவிட்ட முற்போக்குக் கதைகளாகவே இருக்கின்றன. அவர் எழுத வந்த காலத்தில் சமூக அநீதிக்கு எதிரான வலிமையான குரல்களாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவற்றை இன்று முற்போக்கு யதார்த்தவாதத்தின் எல்லையுள் இருந்தே இன்று மதிப்பிட வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தன், ராஜேந்திர சோழன், சா.கந்தசாமி போன்றவர்கள் அடைந்த நுட்பத்தை அடையமுடியாமல் மனிதாபிமானத்தின் எல்லையுள் நின்றுவிடுகின்றன ஜீவாவின் அதிகமான கதைகள். கதைகளில் வெளிப்படும் முரண் என்பதும் வர்க்க முரணும், சாதிய முரணும் தான். ஆனால் அவற்றில் ஒரு சுவாரசியமான சாதிய விடுதலை குறித்த எதிர்பார்ப்பு உள்ளது.
சாதிய விடுதலைக்கான வழியாக ஒடுக்கப்படும் தலித்தின் மன்னிப்பையும் பெருந்தன்மையையுமே கதைகளில் கற்பனைசெய்திருக்கிறார். அதாவது கடந்த காலத்தில் ஆதிக்க சாதியில் சாதிய ரீதியாகத் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், நிராகரிப்பையும் அவன் மன்னிப்புடன் கடந்து செல்ல வேண்டியவனாகவும் அந்த மன்னிப்பின் தகிப்பில் ஆதிக்க சாதிமனநிலை கரைந்தழிந்துவிடக் கூடியதாகவும் இருக்கிறது அவரது பார்வை. ஒரு வகையில் அது இன்னா செய்தாரை ஒறுத்தல்… என்பதாகவும் சில கதைகளில் இருக்கிறது. பொதுவெளியில் சாதிய மேட்டிமையுள்ளவர்களை தன் கால்களின் கீழ் நெளியும் அற்பப் புழுக்களாக நோக்கும் வலிய மனநிலை வாய்த்தவராக இருந்திருக்கிறார் ஜீவா. ஆனால் அவரது கதைகளில் – ஆதிக்க சாதிப் படைப்பாளர்களால் சித்தரிக்கப்பட்ட இரக்கத்தையும், பரிவையும் கோரக்கூடிய தலித் பாத்திரத்திலிருந்து டொமினிக் ஜீவாவுடைய தலித் பாத்திரங்கள் மாறுபட்டு அவனே மன்னிப்பை வழங்கும் பெருந்தன்மைக்காரனாக இருக்கிறான். இத்தகைய பார்வைகள் அவரது தன்வரலாற்று நூலில் வெளிப்படுவதில்லை. அதில் இருப்பது சாதியத்திற்கு எதிரான இடையறாத நேரடியான அரசியல் போராட்டம்தான். சில சமயம் வன்முறையின் எல்லைவரைகூட அந்தப் போராட்டம் சென்றுமிருக்கிறது. ஆதிக்கசாதியினரால் அவர் மீது கைகுண்டு வீசுவதுவரைகூட அது சென்றிருக்கிறது.
டொமினிக் ஜீவாவின் தன்வரலாற்று நூல் பல விடயங்களிலும் முக்கியமானதும் ஏன் அதுவே அவரது முக்கியமான இலக்கியப் பங்களிப்புமாகும். சிறுகதைகளில் வெளிப்பட்ட மனிதாபிமானத்தின் மீதான சரிவோ, முற்போக்கு யதார்த்தவாதத்தின் எல்லைக் குறுக்கமோ இல்லாத இரண்டு தன்வரலாற்று நூல்களும் அவரது ஆளுமையை நன்றே பறைசாற்றுவன. குறிப்பாக யுத்தத்திற்கு முந்திய யாழ்ப்பாண சமூகத்தின் பருமட்டான புரிதலும், யாழ்ப்பாண நகரம் சிறுபட்டணமாக இருந்து நகரமாக உருமாறும் காலகட்டத்தைய பதிவுகளும் அவரது தன்வரலாற்றில் உண்டு. கூடவே சாதிய ஒடுக்குமுறையின் கடுமையையும், அதற்கெதிரான டொமினிக் ஜீவாவின் இடையறாத போராட்டங்களும் உள்ளன.
நுட்பமான அவதானமும் சித்திரிப்பும் நல்ல படைப்பாளிகளுக்கே உரிய தனித்துவமான அம்சம். அவரது தற் வரலாற்றுச் சித்திரிப்பில் மிக நுட்பமான நல்ல அவதனங்களும், நல்ல சிறுகதைகளுக்கான கருக்களும் கூட இருக்கின்றன. கவிஞர் கண்ணதாசனைச் சந்தித்த போது கண்ணதாசனின் கவரும் தோற்றத்திற்கான காரணத்தை உடனேயே அவரால் கண்டுகொள்ள முடிகிறது. கண்ணதாசனின் கண்ணில் இருக்கும் சிறு பிசிறு ஜீவாவின் சொற்களில் சொல்வதென்றால் ‘செல்ல வாக்கு’ கண்ணதாசனின் கவர்ச்சிக்கான காரணம் என்கிறார். தியாகராஜ பாகவதருக்கும் அந்தச் செல்ல வாக்குத்தான் கவர்ச்சியைக் கொடுத்தது என்பதும் ஜீவாவின் அவதானம்.
நல்ல சிறுகதைகளுக்கான சித்திரிப்பு என்பது அவர் கொலைக் குற்றம் தீர்க்கப்பட்ட காராளி முத்தையன் என்ற அறியப்பட திருடனைப் போலிஸ் அழைத்துச் செல்லும் யாழ் புகையிரதநிலையச் சித்திரிப்பில் இருக்கிறது. பபூன் செல்லையா குறித்தவற்றிலும் இருக்கிறது. நன்கு அறியப்பட்ட நாடக நடிகர் விஸ்வநாததாஸ் நாவித சமூகத்தை சேர்ந்தவர். அவரையும் கூட பபூன் செல்லத்துரை ஒரு சாதிய உள்குத்தலுடனே யாழ் மண்ணில் முதலில் எதிர்கொள்கிறார். பின் அதற்காக அவர் மனம் வருந்தினார். அறியப்பட்ட மேதைகளாக இருந்தாலும் யாழில் அவர்களது சாதிய அடையாளம் வசைக்கும் நிராகரிப்புக்கும் உரியதுமாகவே இருந்திருக்கிறது என்பது ஜீவாவின் ஆதங்கம்.
ஜீவாவின் காதல் முறிவே கனவும் யதார்த்தமும் முயங்கும் தன்மையானது. ஆதிக்கசாதிக் காதலை எதிர்கொள்வதில் தலித் ஒருவருக்கு இருக்கும் அழுத்தத்தை, தடுமாற்றத்தை நுட்பமாகச் சொல்வது. அதில் அந்தக் காதலை அவர் கைவிட்டு விலகிச்செல்வதற்கான காரணம் காதலியின் தாயின் வேண்டுதல் தான் என்றாலும் அதுவேதான் டொமினிக் ஜீவவின் ஆழ்மன ஆசையோ வெளிச் சாதிய அழுத்தமோ எனக் குழப்பமும் தரக்கூடிய இடமுமாக இருக்கிறது. அதற்கான தீர்மானகரமான பதிலும் அவரிடத்தில் இல்லை. குழப்பம் மட்டுமே உண்டு. ஏனென்றால் காதலியின் தாயின் மல்லிகைப் பந்தலின் கீழான வேண்டுதல் சம்பவம் உண்மையில் நிகழ்ந்ததா இல்லை அவருடைய கற்பனையா என்பதைத் அவரால் பிரித்தறிய முடியவில்லை என்றே பதிவு செய்கிறார். இன்னொரு இடம் இருக்கிறது. இந்தியாவில் தஞ்சைப் பெரிய கோயிலின் அழகை பார்க்கச் செல்லும் போது ஒருவர் இவரை அணுகிச் சாடையாக விசாரிக்கிறார். “சார் கேரளாவா”. சிறு உரையாடலின் பின்னர் ஜீவா வெளியூர்க்காரர் என அறிந்து “ஸார் தப்பா எடுத்துக்காதீங்க. அருமையான குட்டி. தஞ்சாவூரிலிருந்து இப்பதான் வந்திருக்கு. வீட்டோடை இடம். மரியாதவையானவங்க… முடியுமானாச் சொல்லுங்கோ”. சிறு சபலத்துடன் ஜீவாவும் தரகருடன் பேரம்பேசியபடி பெண்ணிடம் செல்கிறார். தரகர் ஒரு வீட்டின் கதவைத் திறக்கிறார். பெண்ணொருவர் உள்ளேயிருந்து வருகிறார். ‘யோகா.. யோகா… ஸாரை உள்ளே கூட்டிக்கொண்டு போ பார்த்துக்கவனி ஸார் கொழும்புக்காரர’ தரகர் அழைத்த பெயரைக் கேட்டதும் ஜீவா பதட்டமாகி அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்.யோகா என்பது அவருடைய சகோதரியின் பெயர். இத்தகைய பார்வை வீச்சும், நுண்ணுணர்வுகளும் அவரது சிறுகதைகளில் கூடிவராததனாலேயே அவை மனிதாபிமானத்தின் சித்திரிப்புகளாக இருக்கின்றன. தன்வரலாற்றில் முற்போக்கு யதார்த்தவாதத்தின் சுமை இல்லாததனால் அவற்றின் வீச்சும் அபாரமானதாக இருக்கிறது.
இரண்டாவது அவரது இதழியல் சார்ந்த தன்வரலாற்று நூல். அதில் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான இலக்கியத்தொடர்பும், திருமணத்திற்கு கூட இந்திய சென்றுவரக்கூடிய இயல்பான நிலையும் பதிவாகியிருக்கிறது. போருக்குப் பின்னரான இந்தியா குறித்த புரிதலுடன் வாசிக்கும் போது அந்தக் காலம் நம்ப முடியாத பல நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கிறது. தலைமன்னாரிலிருந்து கப்பல் பயணம், சுங்கச் சோதனையெனக் கடந்தகாலச் சூழ்நிலைகள் இருக்கின்றன.
நோயாளியான மனைவி, இதய நோயாளியான மகள் என்ற குடும்பச் சூழ்நிலை. நல்ல வருமானம் வரக் கூடிய சவரத் தொழில் தெரிந்திருந்தும் ஜீவா தன்னை இலக்கியக்காரனாகவே கருதிக்கொண்டார். சில நாட்களில் பழைய மல்லிகை இதழ்களை யாருக்காவது விற்றே காலைச் சாப்பாடு சாப்பிட வேண்டிய சங்க காலத்திலிருந்து தொடரும் இலக்கிய வறுமை. ஆனாலும் அவரது ஓர்மம் அந்த நிர்க்கதியான நிலையிலிருந்து மெள்ள மெள்ளச் சொந்தக் கட்டிடத்தில் சொந்த அச்சகத்தில் மல்லிகை இதழ்களை அச்சிட்டு வெளியிடுவது வரை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இலக்கிய வாழ்வில் சமூகத்தின் புறக்கணிப்பை எதிர் கொண்டாலும், அச்சடித்த இதழ்களை முதுகில் சுமந்து சென்று விற்று வாழ்க்கைப்பாட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொருளாதார நிலையிலேயே இருந்தபோதும், நிர்க்கதியாக அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் கலங்கி நின்ற பல சந்தர்ப்பங்களிலும் உதவிக்கான கரங்கள் அவர் எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் நீண்டிருக்கின்றன. அவை இலக்கியத்தால் உருவாகி வந்த தொடர்புகளூடாக நீண்ட கரங்கள் என்பதுதான் இலக்கியத்தில் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டு இயங்குபவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியது. கொழும்பில் எங்கோ ஒரு வீதியில் மல்லிகை இதழ்களைச் சுமந்து சென்றவரை வழிமறித்து 100 டொலரைக் கொடுத்துவிட்டுச் செல்லும் வாசகர்களையும் உருவாக்கித் தந்திருக்கிறது அவரது தன்னலம் கருதாச் செயற்பாடு. அதை இலக்கியத்தின் நல்லுாழாகக் கொள்ளவே முடியும்.
அய்ம்பதுகளில் மிகக் காத்திரமாகவே அடித்தளமிடப்பட்ட தலித் என்ற தன்னுணர்வுத் தொடர்ச்சி இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் ஓர் இயக்கமாக வளர்ச்சி பெறவில்லை. பேரியக்கமாகவும் தேசியத்தின் மாற்றுக் குரல் அல்லது தரப்பாகவும் வளர்ந்திருக்க வேண்டிய தலித் குரல் இன்று சுவடே இல்லாத வெறுமையுள் இருக்கிறது. டொமினிக் ஜீவா, கே.டானியல், என்.கே.ரகுநாதன் போன்றவர்கள் மிகக் காத்திரமாக முன்னெடுத்தது போன்ற தலித் தரப்பினரின் வலிமையான குரல்கள் இல்லாத சூழல் சாதியப் பிரச்சினைகளில் குரலற்ற நிலையே தொடர்கிறது. வலுவான தலித் குரல்கள் இல்லாத பொதுவெளியில் ஆதிக்கசாதிக் கதையாடல்களே இருக்கின்றன. அவற்றின் மாற்றாக தலித் குரல்கள் வலிமையாகப் பதிவாக வேண்டிய பண்பாட்டுத்தேவை உள்ளது.
தலித் இலக்கியம் குறித்து டொமினிக் ஜீவாவுடைய இரண்டு கருத்துகள் இருக்கின்றன.
தலித் இலக்கியம் பற்றி அதிகம் பேசப்படுகிறது, தலித் இலக்கியத்தை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?
தலித் போராட்ட இலக்கிய அத்திவாரம் 50-60 களிலேயே சிக்கராக தளம் போடப்பட்டுவிட்டது. அந்தக் காலத்திலேயே தம்மைப் படித்தவர்கள் எனச் சொல்லிக் கொண்ட மேட்டுக்குடி கூட்டத்தினர் எம்மைப் பார்த்து “எளியதுகள் எழுதுகின்றனர் இவை எளியதுகளுக்காக எளியதுகள் எழுதும் இழிசனர் இலக்கியம்” எனச் சொல்லி எமது ஆன்மாவையே சாகடிக்கப் பார்த்தனர். முடியவில்லை. அடிநிலை மக்களின் உணர்வுகளை அவர்களது பிரச்சினைகளை அவர்களது புத்திரராகிய நாம் எம்மவர்களது பாஷையிலேயே எழுதி வந்தோம்.
(மூன்றாவது மனிதன் நேர்காணல்)
“தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, பஞ்சப்பட்ட, தாழ்த்தப்பட்ட சகல மக்கள் பகுதியினரையும் உள்ளடக்கிய சொல்லாக -இலக்கியம் அங்கீகரித்த சொல்லாக – புழக்கத்தில் வந்துவிட்டது. அகில இந்தியச் சொல்லாகவும் பரிமாணம் பெற்றுவிட்டது. தலித் என்ற சொல்லின் விரிவும் வீரியமும் மராட்டியத்திலும் கன்னடத்திலும் ஆந்திராவிலும் பரவலாகவும், தமிழகத்தில் சிறப்பாகவும் இன்று உணரப்படுகிறது. இதன் உள்ளடக்கக் கருத்து பலராலும் புரிந்துகொள்ளக் கூடியதாக வியாபித்து நிலைத்துவிட்டது. இந்தச் சொல்லை இனி யாராலும் புறக்கணித்துவிட முடியாது. அலட்சியம் செய்துவிடவும் முடியாது. அந்தச் சொல்லின் வலிமை என்னையும் ஆட்கொண்ட காரணத்தாலேயே, நான் எனது சுயசரிதையை நூலாக எழுதி வெளியிட முன்வந்தேன். நாங்களும் மனுசங்கடா! தலித் இயக்கம் கற்றுத் தந்த மூல மந்திரம் இது!”
(எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் முன்னுரையில்)
இலங்கைத் தமிழ்த் தேசியத்தரப்பு தலித் உரையாடல்களைத் தன் இருப்புக்கு எதிரானதாகத் தவறாகக் கற்பனை செய்து மூர்க்கமாக எதிர்க்கிறது. இலங்கையிலிருந்து எழுதுபவர்களும், செயற்படுபவர்களும் இன்னும் தலித் மக்களை ‘பஞ்சமர்’ என்றும், ‘ஒடுக்கப்பட்டவர்’ என்றும், ‘தாழ்த்தபட்டவர்’ என்றும் தங்கள் சாதிய மனநிலையின் வடிகால்களுக்குத் தகுந்த மாதிரியாக எழுதிவருகிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் இந்தச் சொற்களின் வன்முறையும், பொருத்தமின்மையும் விரிவாகவே தமிழில் உரையாடப்பட்டிருக்கிறது. தலித் என்ற சொல் உலகளாவிய ஏற்பும் நிகழ்ந்தபின்னரும் யாழின் ஆதிக்கசாதி மனநிலை எப்போதும் போல எதிர்வினையாற்றுகிறது. அதைத் தவிர்க்கிறது. ஒடுக்கபடுபவர்கள் எனச் சொல்லும் போது அது ஒட்டு மொத்த ஒடுக்குமுறையையுமே குறிக்கிறது. அது தனியே கடந்த காலங்களில் இருந்து தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகும் மக்கள் தொகுதியின் அவலங்களைக் குறிப்பதில்லை. பால், வர்க்கமென அனைத்து ஒடுக்கு முறைகளையுமே அது சுட்டும். தனியே தீண்டாமைக் கொடுமையை வெளிப்படுத்துவதில்லை. அந்த அவலத்தின் வீரியம் இங்கே நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. தாழ்த்பதப்பட்டவர், பஞ்சமர் என்ற சொற்கள் எதிர்மறையான இழிவுசெய்யும் நோக்குள்ள ஆதிக்க சாதிமனநிலையின் வெளிப்பாடுகள் என்பதும் வெளிப்படை. ஆக இவர்கள் இலங்கைத் தமிழ்ச் சூழலிற்கான ஒரு சொல்லாக தெரிவுசெய்ய விரும்பினால் ‘சிறுபான்மைத்தமிழர்’ என்பதைத்தான் தெரிவு செய்திருக்க வேண்டும். அதுவே ஒட்டுமொத்த தலித் மக்களும் இலங்கையில் கடந்தகாலங்களில் தீண்டாமைக்கெதிராகத் தம்மை அடையாளப்படுத்திய, போராடிய அடையாளம் ஆகும். அதையும் தவிர்த்து ஒடுக்கப்பட்டவர் என்று ஒட்டு மொத்த ஒடுக்கு முறையுடனும் குழப்பிக் கொள்வதை அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஆதிக்க சாதிமனநிலையுடனுமே எழுதிவருகிறவர்கள். இவர்கள் தலித் என்ற சொல்லின் பொருத்தப்பாட்டைப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்க வேண்டும். அந்தச் சொல்லிற்கு அரசியல், பண்பாடு,மொழி சார்ந்த இன்னோரன்ன ஏற்பும் – எதிர்ப்பின் வரலாறும் உண்டு. குறிப்பிட்ட சூழமைவுகளில் தீண்டாமைக்கொடுமைக்கு, அதன் நவீன வடிவங்களுக்குள் சாதிரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் தொகுதியைச் சுட்ட தலித் என்ற சொல்லைவிட வேறு பொருத்தமான சொல் தமிழில் இல்லை.
தலித் என்ற சொல்லின் வரலாற்று நியாயத்தையும், பண்பாட்டுத்தளத்தில் அதன் பங்களிப்பையும் ஏற்றுக் கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாதபடி சாதியத்தில் ஊறியதாக இருக்கிறது அவர்களது சிந்தனையும் செயற்பாடுகளும். என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா போன்ற தலித் இலக்கிய முன்னோடிகளே தலித் என்ற பதத்தைத் தம் படைப்புகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் வரலாற்று நியாயத்தையும், நோக்கத்தையும் காலமறிந்து முன்வைத்து இருக்கிறார்கள். இருந்தபோதும் இன்னும் இலங்கையில் தலித் என்ற சொல் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. இந்தத் தலித் முன்னோடிகளை விட வேறு யார் தலித் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்கக் கூடியவர்கள் என்பதும், அவர்களது வரலாற்றுப் பங்களிப்புகள் கூட தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதுமே இன்றைய சாதிய யதார்த்தம்.
இந்தச் சாதிய யதார்த்தத்தினுள் டொமினிக் ஜீவாவிற்கான அஞ்சலியையும் இலக்கியப் பங்களிப்பையும் கவனப்படுத்தாத இதழ்களோ, இலக்கியவாதிகளோ இல்லை என்ற அளவிற்கு இருக்கிறது அவரது ஆளுமையின் வீச்சு. ஒருவகையில் இந்த ஒட்டுமொத்த ஏற்பு நிலமை என்பது அவரது இடையறாத இயக்கத்திற்கான அங்கீகாரம் எனலாம். ஒரு காலத்தில் ‘இழிசனர்’ இலக்கியம் என்று பழிப்புச் செய்யப்பட்டவர்களின் எழுத்துகள் – முன்னுதாரணங்களே இல்லாமலும் செல்லும் வழி குறித்த தெளிவு இல்லாமலும் தனக்கான பாதையைத் தானே தன் வலிய கால்களால் மோதித் திறந்து அடைந்திருக்கின்றன. அந்த இயக்கத்தின் ஒரு தூணாக இருந்த, சாதியச்சமூகத்தில் தலித் அடையாளத்தை ஓர்மையுடன் முன்வைத்து இயங்கிய முன்னோடிக்கு என் அஞ்சலிகள்.
•••
ஆக்காட்டி 17லும், இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணியால் தொகுக்கப்பட்ட ‘நெடுவாழ்வின் எழுத்தித்தீரா நினைவு’ தொகுப்பிலும் வெளியாகியிருந்த கட்டுரை.