இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன் – 2

11.எட்டு கிழவர்கள் : தமயந்தி

தமயந்தி அவர்கள் யாழ். மாவட்டத்தின் அனலைதீவினை சேர்ந்தவர். அவரது கதைகளில் நெய்தல் நிலத்தின் சுவடுகளை நிறையவே காணலாம். தீவகமும் அதனோடு இணைந்த நெய்தல் நிலத்தினையும் தனது கதைகளில் புனைவாக்கம் செய்பவர். இதற்கு முன்னர் அவரின் சிறுகதை தொகுதியான “ஏழு கடற்கன்னிகளை” வாசித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே இந்த கதையினையும் காண முடிகிறது.

இலம்பங்குடாவும் அதனோடு இணைந்த வலம்புரித்தீவுமே இந்த கதை நிகழும் களங்கள். இலம்பங்குடா புனித மிக்கேல் தேவாலாயத்தின் அருட்துறவியான “சொக்கட்டான் சுவாமிகள் “ தொலைந்து போதலும் அதன் பின்னரான சம்பவங்க ளை யும், தொன்மங்களுடன் இணைத்து நடப்பியலையும் பேசி இந்த கதையினை புனைந்துள்ளார்.

இந்த தீவின் காவல் தெய்வமான இலம்பநாகம்மாள் இந்து மரபுகளுடன் தொடர்புடைய தெய்வமாக இருந்தபோதிலும், அந்த தெய்வத்தின் மீதான நம்பிக்கை கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் இடம் ஒன்றில் நிலைபெற்றிருப்பதானது, சமயம் தாண்டிய தொன்மங்களின் நம்பிக்கையாக அமைகிறது.

ஒரு பகுதியில் நிலைபெற்று இருக்கும் தொன்மங்களை, அப்படியே பிரதியீடு செய்வதை விடவும் அதனை புனைவு ஒன்றில் இன்னொன்றாக புனைவது கதா சிரியரின் கற்பனை சார்ந்த விடயம். அது இங்கே தமயந்தி அவர்களினால் சிறப்புற மேற்கொள்ளபட்டுள்ளது. தீவக பகுதியில் நயினை நாகபூசணியும், தெய்வ நாகமும் நிலையான தொன்மங்கள். இந்த கதையில் நாகத்திற்கு பதிலாக கருடனை முன்னிறுத்துகிறார். இதேவேளை, நயினை திருவிழாவில் கருடன் மற்றும் நாக கற்கள் என இரண்டு கற்கள் இருப்பதும், குறித்த திருவிழாவன்று அங்கே வரும் கருடனை காலம் கடந்த ஒன்றாக கருதுவதும் குறிப்பிடத்தக்கது.

இலம்பங்குடா பற்றிய விபரிப்பிலே அங்கே இருந்த பல்வேறு உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பற்றி எழுதியதை ஆய்வாளர் கண்ணன் அவர்கள் எள்ளி நகையாடியதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கதைக்கு தேவையான எதையும் விபரிப்பு செய்யும் உரிமை ஆசிரியருக்கு உண்டு. ஏனெனில் இது அவரின் தெரிவே. கழுவி ஊற்றுவதற்கு என்றே வரும் சிலரை ஒன்றும் பண்ண முடியாதுதான்.

இவரின் கதைகள் யாவற்றிலும் முஸ்லிம் மக்களுடனான நேசத்தை பாத்திரங்கள் மூலமாக வெளிக்கொணர்வார். இந்த நூலிலும் நளீம் காக்காவின் குடும்பத்தை பாத்திரமாக கொணர்கிறார்.கதையின் மையம் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமத்தில் சிலரிடம் (சொக்கட்டான் சுவாமிகள் ) காணப்படும் மதரீதியான மேலாதிக்க மனப்பான்மையினை வெளிக்காட்டுதலாக இருக்கிறது.

வருடாந்தம் நடக்கும் மிக்கேல் ஆலய திருவிழாவில் இந்த வருடத்தில், நளீம் காக்காவின் பேத்தி எழுதிய “இலம்ப நாகம்மாள்” என்ற கூத்து அரங்கேற்றம் செய்ய இருப்பது, சொக்காட்டான் சுவாமிகளுக்கு பிரச்சினையாகி அதன் நிமித்தம் அவரின் வலிந்து காணாமல் போதல் நிகழ்ந்து, பின்னர் அவரின் கதை கடடல் எடுபடாமல் ஊர் மக்களின் விருப்பத்தின் பிரகாரமே விழா நிகழ்கிறது.

இந்த கதையில் வரும் எட்டு கிழவர்களும் இலம்பங்குடா கிராமத்தின் தொன்மையை பேணும் குடிகளாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். கதை பெரிதாக கனம் இல்லாது, நகைச்சுவை பாணியில் நகர்ந்த போதிலும் உள்ளே முக்கிய உரையாடலை நிகழ்த்துகிறது. இது அவரின் பாணியும் கூட. இரசிக்க கூடிய கதை இது.

12.செவ்வாத்தை : தர்மு பிரசாத்

ஆனைக் கோடாரி நான் முதன் முதலில் படித்த இவரின் தொகுப்பு.அதற்கு முன்னமும் “புதிய சொல்” இதழில் இவரின் கதை ஒன்றை படித்திருந்தேன். இவரிடம் நல்ல கதைகள் இருக்கின்றன. ஆனால் புரிந்து கொள்வதற்கு குறைந்தது இரண்டு முறையாவது படிக்க வேண்டும். நேர்கோட்டு கதை சொல்லுதல் முறையை இவரின் கதைகளில் காண்பது அரிது.

செவ்வாத்தை கதை இந்த தொகுப்பில் மிக முக்கியமான கதை. ஏனெனில் இதுவரைக்கும் நான் குறிப்பு எழுதிய கதைகளில் ஏதாவது ஒரு பொருண்மையோ அல்லது பல பொறுண்மைகளோ இருந்தன. ஆனால் இந்த கதையில் பொருண்மை என்பதை விடவும், யுத்த காலத்தில் எம்மிடையே (தமிழ் மக்களில் பெரும்பான்மையினரிடம் ) காணப்பட்ட ஒரு குறித்த மனநிலை குறித்தே இந்த கதை அமைந்துள்ளது.இந்த கதையின் சாரம், மூன்று வாசிப்புகளுக்கு பிறகே எனக்கு தரிசனமானது.

யுத்த காலத்தில், பட்டிருப்பு பாலமே எங்களுக்கான ஓமந்தை. அதனை தாண்டினால் நாங்கள் எல்லோருமே சாதனா சகாதேவனின் கதையில் வருகின்ற சகாதேவனின் மனநிலையில் இருப்போம். அதாவது எல்லாம் கடந்த ஒரு முக்தி நிலை. ஆனால் இந்த முக்தி நிலையெல்லாம் படுவான்கரையில் இருந்த எனது நண்பர்களிடம் இல்லை. அவர்கள் எங்கள் பிரமிப்புகளை “ப்ச்” என்று கடந்து செல்வார்கள். இது ஏனென நான் வியந்திருக்கிறேன்.

2002 இற்கு பிறகான காலம், “வீட்டுக்கு ஒரு வீரன்” மிக பிரபலமாக படுவான்கரையில் அடிபட்ட காலம். எழுவான்கரையில் சமாதானத்தின் சுருதி கூட்டிய பாடல்களையும், எங்கள் இனத்தின் சாதனைகளையும் பாடியபடி வாழ்வில் அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். படுவானில் இருந்து என் வயதை ஒத்த நண்பன் ஒருவன் அயல் வீட்டில் அடைக்கலமாயிருந்தான். தேசியத்தின் உச்சம் என்னில் முற்றி பழுத்திருந்தது;அவனின் அடைக்கலம் எனக்கு எரிச்சலையே தந்திருந்தது. பேச்சு வாக்கில் குத்து கதைகளையே நான் அதிகமாக பேசினேன். என்னை புரிந்து கொண்ட அவன்,மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பயணிக்கும் வரையில் இயன்றவரை தவிர்த்தான். இத்தனைக்கும் நான் எனது தனிப்பட்ட கருமங்களில் கண்ணாயிருந்தேன்.

எனது இந்த இரு சம்பவங்களிலும் வருகின்ற மனநிலைகளே இந்த கதையிலும் வேரோடியிருக்கின்றன.இயக்கத்திலிருந்து தனது காலம் முடிந்ததும் திரும்பும் அக்கா;இயக்கம் பற்றிய பிரமிப்புகளில் வாழும் தம்பி. இந்த இருவரின் மனநிலைகளும் எப்போதும் “எண்ணையும் தண்ணீருமாயே” இருக்கின்றன. இந்த பின்னணியுடன் அவர்களின் குலதெய்வம் குறித்த தொன்ம நம்பிக்கைகளும் சேர்த்து “செவ்வாத்தையின்” கதையாகிறது.

ஆத்தைக்கு வந்த நகைகள் ஒரு குடும்பத்தின் சொத்தாக இருப்பதா போன்ற ஆழமான பொதுவுடைமை சார்ந்த தத்துவ விசாரணைகளும், இந்த கதை தொடர்பில் இருந்தாலும் கூட, ஆத்தையின் “செந்நிற ஒளி” இந்த கதையில் தத்துவங்களை விடவும், அன்றாட தப்பி பிழைத்தலுக்கே முக்கியம் தருகிறது.இதை நாட்டின் கடமை ஒன்றுக்கு, தன்னை ஒப்படைக்க தயாரான தம்பி, மனம் மாறி ரஷ்ய எல்லையினை கடக்க முற்படும் சம்பவத்தினூடே அறிந்து கொள்ள முடிகிறது.

தம்பிக்கு வழிகாட்டும் அந்த செந்நி

ற ஒளி அக்கா மற்றும் தூனகை போன்ற சாதாரண பெண்களிடமிருந்து வெளிவருவதாக காட்டியிருப்பது சிறப்பு. அக்கா ஆத்தையாக” மாறிய சம்பவமும், பனி மலை கடக்கும் தருணங்களையும் தனது மொழியினால் கனவு போல அமைத்துள்ளார். இது இவரின் ஏனைய கதைகளிலும் காணப்படும் வெளிப்பாட்டு முறை. கதை பிடித்து போனதுபோல் “தூனகையையும்” பிடித்து போனது.

13.கொலைத் தருணம் : தாட்சாயனி

“வெண்சுவர்” தொகுப்பின் பின்னர், இவரின் கதைகளை ஆங்காங்கே இணைய இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் படித்து வருகிறேன். ஒவ்வொரு கதைகளிலும் வெவ்வேறு பொருண்மைகள், வெளிப்பாட்டு முறைகள் என வித்தியாசம் காட்டுகிறார் கதைகளில்.

இந்த கதையானது அவரின் முந்தைய கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. முன்னர் ஒரு ஆங்கில கவிதையினை படித்திருக்கிறேன். போர்க் களத்தில் மிக அருகில் சந்தித்து கொள்ளும் எதிரி வீரர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை அது. கிடடத்தட்ட அதே கவிதையினை கதையாக உருவாக்கியது போல இருக்கிறது இந்த கதை. முற்றிலும் தத்துவார்த்த ரீதியிலான கதையாக இது இருக்கிறது. தன்னிலையின் உணர்த்துத்தல் வடிவமாக அமைகிறது இந்த கதை.
ஒரு கொலையும் அது நிகழ்ந்ததற்கான தர்க்கமும், இறுதியில் ஒன்றுமே நிகழவில்லை என்பதான கீதா உபதேசமுமாய் இந்த கதை நிறைவுறுகிறது. தொகுதியின் கனதி கருதி இவ்வாறான ஒரு கதையினை தாட்சாயனி அவர்கள் எழுதியிருக்கலாம். ஈழத்து சிறுகதைகளின் பன்முகப்பட்ட தன்மைக்கும் இந்த கதை உதாரணமாகிறது.

ஆனாலும் தாட்சாயனி உங்களிடம் “கதைகள்” நிறையவே இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் அண்மையில் சிறுகதை மஞ்சரியில் எழுதிய “ஜோசப்பின்” என்ற கதை. உங்களை கிரமமாக வாசிக்கும் வாசகன் என்ற வகையிலூம்,இந்த கதைக்கு சில நாட்களின் முன்பு அதை வாசித்தவன் என்ற வகையிலும் கூறுகிறேன், உங்களை அந்த கதையிலிருந்து இன்னும் நான் பிரித்து கொண்டு வரவில்லை.இது எனது தனிப்பட்ட வாசக அனுபவம் மாத்திரமே.

14.கெளரவம் – Yuvendra Rasiah

கிழக்கின் முக்கிய கதாசிரியர் ஒருவரிடமிருந்து நீண்ட இடைவெளியின் பின்னாக முகிழ்ந்த கதை இது. “வாழ்தல் என்பது” தொகுப்பு இவரின் முதல் தொகுப்பு. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு

 கவியுவன் எழுதியுள்ள கதை இது. அவரின் இயக்கத்தினை மீண்டும் ஆரம்பித்து வைத்த இமிழ் தொகுப்பு நன்றிக்குரியதாகிறது.

தன்னிலையின் உரையாடலாக நகரும் இந்த கதை, கதைச்சொல்லி தனது பால்ய கால நினைவுகளை மீட்டுவதாக அமைகிறது. ஒரு பெண்ணின் மீதான அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் அத்துமீறலும் அதன் பின்விளைவுகளுமே கதையாகிறது.

இந்த கதையில் சிறுவனாக வரும் கதைச்சொல்லியின் நகர்வுகளே மொத்த கதையின் இயக்கத்தினையும் முடிவு செய்கின்றது.
1.விளையாட்டு பிள்ளையாக இருக்கும் சிறுவன், அக்காவின் மரணத்திற்கு காரணமான கறுப்பு உருவம் தொடர்பில் இறுதி வரைக்கும் எதுவும் தெரிவிக்கவில்லை. அந்த வயதிலேயே அவ்வாறான ஒரு மனப்பாங்கு உருவாக்கியிருப்பதன் பின்னணி குறித்து ஆராய வேண்டும். கதையின் பிரகாரமாக அந்த சிறுவனுக்கு அக்காவை தற்கொலைக்கு தூண்டிய முரட்டு உருவத்தை தெரியாது என்கிற விடயத்தை வாசகன் அறியலாம். ஆனால் சற்று உன்னிப்பாக வாசிக்கையில் அந்த சிறுவன் அந்த உருவத்தை அறிந்திருந்தான் என்ற வகையிலேயே வெளியே கூறவில்லை என்பதை உணரலாம்.

அக்கா சித்த சுவாதீனாமற்ற நிலையில் பாடசாலையை நோக்கி ஓடுவதும், அங்கு ஏற்கனவே கடமையாற்றிய அதிபர், தற்கொலை செய்தமையும் இந்த இரு மரணங்களுக்கும் காரணமான யாரோ அந்த பாடசாலையில் இருக்கும் தோற்றப்பாட்டினை தருகிறது.இடையில் கதாசிரியர் பாடசாலை அதிபர் குறித்து எழுதியிருக்கும் வாக்கியமான “அவர் வருவார் என நினைக்கவில்லை” என்பது இந்த சந்தேகங்களுக்கான முடிவோ தெரியவில்லை.

2.இறுதியில் தற்கொலையினை விசாரிக்கும் போது, இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தினையும் எழுப்புபவன் அந்த சிறுவனே. கதையின் நகர்வின் பிரகாரம், அது கொலையென குறிப்பிட்ட குடும்பத்தினர் அறிந்துள்ளனர் என்றே உணர முடிகிறது. ஆக இந்தியாவில் நடப்பது போல இது ஒரு ஆணவக்கொலை என்றே கூறலாம்.

பொலிஸ் விசாரணைகளின்போது இறந்த பெண்ணின் தாய் மற்றும் தந்தையை பேசவிடாது சிறுவனின் அண்ணாமார்களே (பெரும் புள்ளிகள்) பேசுவதும், சிறுவனை தட்டி வைப்பதுவும் கூட இந்த தற்கொலை குடும்பத்தினர் அனைவரும் அறிந்த “கொலையாயிருக்கும்” சாத்தியத்தை தருகிறது. மேலும் அந்த காலத்து சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டு முகமாகவும் (இவ்வாறான கௌரவ கொலைகள் நிறைந்த ) இந்த கதையினை கருதலாம்.

கதையின் கரு ஒரு பெண்ணின் மீதான அத்துமீறலும், அதன் விளைவுகளுமென சமூகம் சார்ந்ததாக இருந்தாலும், கதையினை சிறுவனின் பார்வையினூடே நகர்த்துதல் என்பது, கதைக்கு ஒரு மர்ம கதை வடிவத்தையும் தருகிறது.

இதையும் விட இந்த கதையில், ஒரு கிராமத்தின் வாழ்வியல் நடைமுறைகளும் அதன் நம்பிக்கைகளும் இருக்கின்றன. கால மாற்றத்தில் யாவுமே மாறிப்போகும் நாட்களில், குறித்த காலம் ஒன்றில் மனிதர்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்கு இவ்வாறான சிறுகதைகள் கூட துணை செய்கின்றன. தொகுதியில் இருக்கும் முக்கியமான கதைகளில் இதுவும் ஒன்று.

15.காத்திருப்பின் புதிர்வட்டம் : தேவகாந்தன்

ஈழத்து நாவல் இலக்கியத்தில் அதிகமான பக்கங்களை கொண்ட நாவல்களை எழுதி வரும் நாவலாசிரியர் ஒருவர் எழுதிய சிறுகதை. இவரது இணைய பக்கத்தில் இதற்கு முன்னர் இவரின் சிறுகதை ஒன்றை படித்திருக்கிறேன். இது நான் படிக்கும் இவரின் இரண்டாவது சிறுகதை.

கிராமத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட ஒரு தாயும் ஆறு பெண்களும் நிறைந்த குடும்பத்தின் கதை இது. கதை சொல்லியின் சித்தப்பா திருமணம் செய்யாதிருப்பதற்கும் இந்த குடும்பத்திற்கும் ஏதாவது இணக்கங்கள் இருக்குமா என்ற ரீதியில் கதை சொல்லி “கள ஆய்வு” செய்திருக்கும் கதை இது. இறுதியில் ஒரு இணக்கம் இருப்பதாகவே கதைசொல்லி கண்டு பிடிக்கிறான். ஆனால் கதையில் வாசகனுக்கு புரியாத ‘புதிர் வட்டமும்” இருக்கிறது. அது கதை முடிந்த பின்பும் கூட தீர்க்கமான முடிவினை தரவில்லை. பவானந்தனுக்கு விடை கிடைக்கிறது. ஆனால் வாசகனுக்கு?

கதையின் பிரகாரம், கதை சொல்லி விடலை பருவத்தில் இருக்கும் காலத்தில்தான் இது நிகழ்கிறது. அப்போது சின்னய்யா என்கிற கதை சொல்லியின் சித்தப்பாவுக்கும் கதைசொல்லிக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வயது வித்தியாசம் இருந்திருக்கலாம். ஆக கதைச்சொல்லி விடலையாயும் (பெண் குளித்து உடுப்பு மாற்றுவதை இரசிக்கும் ) சித்தப்பா இளைஞனாயும் இருக்கும் காலத்தே நிகழும் கதை இது.

இந்த கதை நிகழும் போதே “செட்டிச்சியின் குடும்பம்” வாழ்ந்து கெட்ட ஒன்றாகவே இருக்கிறது. அப்போது செட்டிச்சியின் இறுதி மகளான “கொஞ்சும் கிளி” மட்டுமே தாயுடன் வாழ்ந்து வருகிறாள். இது ஊரில் ஒதுக்கி விடப்பட்ட குடும்பம் என்பதால் எல்லா பெண்களுமே வெளியூரில் திருமணம் செய்திருக்கின்றனர்.
கடைசி பெண்ணான கொஞ்சும் கிளிக்கும் சின்னய்யாவிற்கும் தொடர்பிருக்கலாம் என்ற ஊகமே இந்த கள ஆய்வின் எடுகோள். அதற்கேற்ப “சின்னய்யா – கொஞ்சும் கிளி “ இருவரும் ஒரு மழை நாளில் சைக்கிளில் செல்லும் சம்பவம் நிகழ்கிறது. குறித்த நாளில் ஏதேனும் “பலாத்காரங்கள்”கூட நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் கொஞ்சும் கிளியின் வேண்டா வெறுப்பு முகம் இதற்கு சாட் சியாக்கிறது.

இந்த கதையின் குழப்பத்திற்குரிய இடம் எதுவெனில்,கதை சொல்லியாகிய பவானந்தன் மின்மினிகளின் பறத்தல் பார்க்க வருகையிலேயே சின்னய்யா “செட்டிச்சி வளவு” பக்கமாக சின்னையா “ரூட்டு” விடுவதை காண்கிறான். இது சரி. ஆனால் எதேச்சையாக செட்டிச்சி அஞ்சுகம் குளிக்கும் தரிசனம் பவானந்தனுக்கு கிட்டுகிறது. இந்த இடத்தில் அஞ்சுகம் இளமை பொலிவுடன் இருந்ததாக கூறுகிறார் கதாசிரியர். ஏற்கெனவே “ஊத்தை பேயின்” உருவத்தை அடைந்த ஒருத்தி எங்கனம் இளமை பொலிவுடன் வருகிறாள் என்பது கேள்வி. பவானந்தனின் தொடர் வருகைக்கும் இந்த தரிசனம் தூண்டுதலை தருகிறது.

கதையின் இறுதியில் பவானந்தனுக்கு காட்சி தரும் கொஞ்சும் கிளி தாயின் உருவத்தை ஒத்திருந்ததாயும், அந்த முகத்தில் வெறுமை குடி கொண்டிருப்பதாயும் கூறப்படுகிறது.இந்த ஒத்திருக்கும் உரு என்பது அஞ்சுகத்தின் இளமை வடிவமா(ஏனெனில் பவானந்தன் காண்பது அவ்விதம் ) அல்லது ஊத்தை பேயின் (திடுக்காட்டத்தோடு) வடிவமா என்பது புரியவில்லை.

கதையின் விபரிப்பில் இவ்வாறான அடிப்படை பலவீனங்கள் இருப்பதால், வாசகனுக்கு ஒரு புதிர் வட்டமாகவே கதை முடிவடைகிறது.

(தொடரும்)

Scroll to Top