நோவிலும் வாழ்வு உரைகள்

வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024  யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அதன் தலைமையுரையில் கருணாகரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். பலரும் உணர்ந்து கொண்ட விடயம்தான் என்றாலும் திரும்பத் திரும்பச் சுட்ட வேண்டியிருக்கிறது. ஈழத்தில் இலக்கியக் கருத்துகள், விமர்சனங்கள், பார்வைகளை விரிவாக யாரும் முன்வைப்பதில்லை. வாசிக்கும் பலரும் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள் என்றும், அது கடக்கப்படவேண்டியதொரு நிலை என்றும் சுட்டியிருந்தார். உரையில்  பேஸ்புக்கிலாவது சிறுகுறிப்புகளாக வாசிப்பை முன்வைக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார். இந்த மெளடீகம் சில சகாப்த ஈழ இலக்கியத்தின் புதைசேற்று நிலைமை. இதற்கு ஈழத்துக்கே உரிய தனித்துவமான குறுகிய தீவு மனநிலைகளும், மனத்தடைகளும், இலக்கிய அறியாமைகளும் காரணங்களாக இருக்கின்றன. ஈழ இலக்கியச் சூழலில் கலை இலக்கியம் சார்ந்த பார்வைகள், விமர்சனங்கள், கருத்துகள் என்பன தீவிரமாக உரையாடக்கூடிய களம் இல்லை. வெறும் அபிப்பிராயங்களையே – அவையும் பெரும்பாலும் முகத்திற்கு அஞ்சிச் செய்யப்படும் விதந்தோதல்கள் – முன்வைக்கிறார்கள். பலரும் விமர்சனங்களை முன்வைப்பது எதோ பாவச் செயல் போல அல்லது மொய் வைத்தல் போல அல்லது புறக்கணிப்பு போல மெளனம் சாதிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட சிலர் குறிப்பாக சு.குணேஸ்வரன், கருணாகரன், கிரிசாந் போல அரிதாகத் தங்கள் கலைப் பார்வையை, அறிமுகத்தை, விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். அவை அபிப்பிராயங்கள் என்பதைத் தாண்டிய விமர்சன, ரசனை சார்ந்த குறிப்புகளாகவும், வழிகாட்டல்களாகவும் இருக்கின்றன. இன்னும் அவை விரிவாக முன்வைக்கப்பட வேண்டும். ஈழப்பாண்பாட்டுப் புலப் பின்னணியில் படைப்புகளை மதிப்பிடப்பட வேண்டிய தேவை இருக்கிறது. வணிக சாத்தியம் இல்லாத, கலை-இலக்கியச் செயலை வாழ்க்கையாக வரித்துக் கொள்ள முடியாத இறுக்கமான சிறு பண்பாட்டுப் புலத்தில் தொடர்ந்து செயற்படுவதற்கு அபாரமான நம்பிக்கையும், தொலைநோக்கும் வேண்டியிருக்கிறது. சிறு சுடரைப் புயலில் எடுத்துச் செல்வது போன்ற சள்ளை பிடித்த வேலை.

தேக்கத்திற்கான காரணங்களாகச் சிலவற்றைச் சுட்ட முடியும். ஒன்று ஈழத்தில் பெரும்பாலானவர்களுக்குச் கலை இலக்கியம் சார்ந்த சொந்தப் பார்வைகளை, ரசனை போன்றவற்றை உருவாகிக்கொள்ளும் முனைப்பும், தேடலும், வாசிப்பும் இருப்பதில்லை. அப்படி உருவாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் அதை பொதுவில் தைரியமாக முன்வைக்கும் திரணி இருப்பதில்லை. சற்றே தன்னடக்கமான, ஒடுங்கிய குரலில் கழிவிரக்கத்துடன் இலக்கிய உரையாற்றுபவர்களே மிகுதி. பொதுவில் தன் கருத்தை, விமர்சனத்தை முன்வைத்தால் தன்னுடைய ரசனை, வாசிப்பு பற்றிய மட்டமான அபிப்பிராயம் தோன்றிவிடும் என்பது போன்ற மனக்கிலேசங்களால் அவதியுற்று ஒரு வகை அறிவுஜீவிப் பாவனைகளுடன் போலி மிதப்பில் வலம்வருவார்கள். அதை மீறி பெரும் புரட்சியாளார்களாக தங்கள் இலக்கியக் கருத்துகளை முன்வைப்பவர்கள் அரசியல் கருத்துக்களுக்கு அப்பால் சொந்த பார்வைகளை முன்வைக்க முடியாத சூம்பல் மனநிலையில் இருக்கிறார்கள். தங்கள் கடிவாளங்களுக்குள் சுற்றி கிடக்கிறார்கள். அல்லது கலை, இலக்கியம் சார்ந்த செயற்பாடுகள் கொடுத்து வாங்குதல் போல ஏதோ காரணங்களுக்காக நிகழ்வதாக மிகை கற்பனை செய்து கொள்கிறார்கள். அதில் இருக்கும் இலட்சியவாத அம்சங்கள் கூட அவர்களுக்கு உலகியல் சார்ந்த கொடுக்கல் வாங்கல்களாகச் சிறு மூளையால் மதிப்பிடுகிறார்கள். அதன் சமூக அறிவியக்கப் பெறுமதியை அவர்கள் ஒருபோதும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனாலே தான் ஈழத்திலிருந்து பெரும் படைப்பாளிகள் என்று யாரும் உருவாகி வரமுடியவில்லை. நம் முன்னோடிகள் சிறு சிறு பங்களிப்பை, கலைச் சாதனைகளைச் செய்தவர்கள் மட்டுமே. பெரும் கல்விச் சமூகத்தால், பொருளியல் விடுதலையடைந்தவர்களால் ஏன் பெரும் கலைச் சாதனைகளை உருவாக்கிக் கொடுக்கமுடியவில்லை. தனித்த பண்பாட்டுப் புலத்தை, வரலாற்று உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்த முடியவில்லை. இவர்கள் அடைந்த கல்வி ஒருவகைப் பொருளியல் கல்வி மட்டுமே. மு.தளையசிங்கம் சொல்வது போல சோம்பல் துரையாவதற்கான கல்விமட்டுமே. தங்களுடைய எழுத்தால்,  கருத்துகளால் சொற்பமேனும் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியவர்களாக யாராலும் வரமுடியாத வறட்சி நிலைக்கு என்ன காரணம் இருக்க முடியும்.

சிறிய இலக்கிய குழுக்கள், வட்டங்களின் செயற்பாடுகளே ஆரோக்கியமான இலக்கியச் சூழலைத் தக்கவைக்க முடியும். ஈழத்தில் பெரும்பான்மை அரசியல் கருத்துக்களின் கூச்சலாக இருப்பதால் அதையும் மீறி அப்படியான கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கான வெளியை உருவாக்க முடியாத நிலை இருக்கிறது. மீறி உருவாகிவந்த இலக்கியக் குழுக்களும் கட்சிகளின் பிரச்சார அணியினராகவே செயற்பட்டிருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த இறுக்கத்தில் உடைவுகள் நிகழ்கின்றன. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் இத்தனை இளையவர்கள் போட்டியிடுகிறார்களே என ஒரு கணம் தோன்றினாலும். பின் அதனை நிதானமாக யோசித்த போது ஒன்று புரிந்தது. புதியதலைமுறை சமூக மாற்றத்துக்கான கருவியாகச் சனநாயகத்தைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். மூன்று சகாப்த ஆயுதப்போராட்ட மனநிலையிலிருந்து அவர்கள் வெளிவந்து; சமூக மாற்றத்திற்கா சனநாயக வழியை நோக்கி இவர்கள் நகர்ந்திருப்பதே எவ்வளவு பெரிய மாற்றம். இலக்கியம் இந்த வெளிக்கத்தானே இத்தனை கலமாக இந்தச் சிறு துண்டு நிலப்பரப்பில் விடாது குரல்கொடுத்துக்கொண்டிருந்தது. 

கடந்த கால இறுக்கங்களையும் தாண்டி பல தரப்புக்களையும் இணைத்துக் கருணாகரன் போன்ற ஒரு சிலர் இலக்கியக் கூட்டங்களையும் , கலை இலக்கியச் செயற்பாடுகளையும் தொடர்ந்தும் இந்தப் பாழ் நிலத்தில் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சனநாயகத்தின் இலக்கிய முகத்தினர். இவர்கள் தங்கள் காலத்தில் செய்துவரும் முக்கியமான பணியிது. இவற்றின் விளைவுகளை 10 ஆண்டுகளில் எம்மால் உணர முடியும்.

நோவிலும் வாழ்வு வெளியீடும் உரைகளும்முமான இணைப்பு : 

அகழ் மின்னிதழின் நூல் அறிமுகங்கள் பகுதியில் ‘நோவிலும் வாழ்வு’ கவிதைத் தொகுப்புக் குறித்து கிரிசாந் எழுதியிருக்கும் அறிமுகம்.

நோவிலும் வாழ்வு கவிதை நூலை இலங்கையில் பெற்றுக் கொள்ள :

https://venpaa.lk/book/novilum-vazvu

 

Scroll to Top