காலச்சுவடு ஏப்ரல் 2019-ல் வெளியாகியிருந்த ‘நாதனின் நேசமிகு விழிகள்’ சிறுகதை ( ருவான் எம்.ஜயதுங்க (சிங்களம்), தமிழில் / எம்.ரிஷான் செரீப்)இது ஒரு மேம்போக்கான கதைதான். பத்திரிகை செய்திகளின் மூலம் எழுதப்பட்ட ஒரு கதையாக கொள்ள இயலும். தினசரிபத்திரிக்கைகளில் வாசிக்கும் சிங்கள மக்களுக்குக்கான கதை. நாதனையும் தகப்பனையும் ஒப்பீடு செய்யும் இடம் ஒரு பொருளாதர அகதிக்கான இடமா? நாதன் அவ்வாறில்லையே…. மற்றபடி 83 கலவரம் காப்பற்றப்பட்டது… லண்டன் காசு, கன்னத்த கடிக்கிறது லண்டனில எல்லா இனங்களும் ஒன்றாக இருக்கிறது என ஒரே சுத்த அறுவை.
// நெற்கொழுதாசன்
கதை, நல்ல கதையாகாமல் கருத்துகளைத் துருத்தியபடி முடிந்துவிட்டது. கருத்துக்களிலும் புதிய பார்வையோ, கதைசொல்லியின் தனித்த பார்வை எனச் சொல்லும்படியான சித்தரிப்புக்களோ இல்லாத, தமிழ் சூழழில் ஏலவே சலிப்புற உரையாடப்பட்ட கருத்துக்களின் தொகுப்புத்தான் மொத்தக் கதையும். ஆனால் கதைக்கு ஒரு வித்தியாசமான பார்வையைத் தருவது என்னவோ அது சிங்களவர்களின் / ஒடுக்குமுறையாளர்களின் பக்கம் இருந்து உரையாட விழைகிறது என்பது மட்டுமே. அதிலும் குணா கவியழகனின் நாவல்களில் வரும் சிங்களப் பாத்திரங்கள் போன்ற தமிழ் பாத்திரங்கள் சிங்களவர்களின் மனக்கட்டமைப்பில் வாழக்கூடிய தமிழர்கள் இவர்கள்.
போராட்டத்தின் சீரழிவுகளை, அதன் சாதிய மேலாதிக்கத்தை, ஆண் அதிகார விருப்புறுதியை தோலுரிப்பதாகப் பாவனை செய்தாலும் அதில் மேற்தெரிவது இனவதக் கண்களினூடே கட்டமைக்கப்படும் தமிழர்களின் மீதான கருணை அன்றி வேறில்லை. அதிலும் தமிழர்கள் பாதிக்கபடும் இடங்களில் எல்லாம் அவர்களை காப்பாற்றிக் கரைசேர்ப்பதும், இறுதிச் தஞ்சம் அடைவதும், ஆசுவாசம் கொள்வதும் சிங்களவர்களின் நிழலில் என்பது போன்ற சம்பவ விபரிப்புகள். போராட்ட கரணத்தின் ஆதி ஊற்றை விட்டு விட்டு அதன் தேங்கிய குட்டையில் இருக்கும் விழைவுகளை மட்டும் பட்டியலிடுவது நல்ல படைப்பாளிக்கான பார்வையாக இருக்கமுடியாது. இத்தனை சீரழிவுகளுடனும் ஏன் இந்த போராட்டம் மூர்க்கமாக முன் எடுக்கப்பட்டது என்ற எளிமையான கேள்வியைக் கூட எழுப்பாமல் சீரழிவுகளை தோலுரிப்பதுடனும், தோல்வியை அதி களிப்புடன் – பிரபாகரன் இறப்பு, முடிவில் தமிழர்களாளே திட்டச் செய்யப்படும் அழகிய விழிகளுடைய நாதன் – எழுதிச் செல்கிறது. ஒடுக்குமுறையின் பக்கமிருந்து உரையாட விழையும்போது இன்னும் கவனமும், விரிந்த பார்வையும் வேண்டியிருக்கிறது. அதற்கான சிறு தடையங்களும் இல்லாத கதையாகவே இருக்கிறது. ஆனால் குணா கவியழகனின் நாவல்களில் வருவது போன்ற ஒற்றைப் படையான, தட்டையான வளார்சிதை மாற்றங்களே இல்லாத பத்திரங்கள் அல்ல இக்தையில் வருவது. தகவல்களும், பாத்திரங்களின் வளர்சிதை மாற்றமும் குறிப்பிடும் படியானவையாக இருக்கின்றன.
// தர்மு பிரசாத்
இந்தக்கதை கருத்தியல்களுக்கு அப்பால் நல்ல கதையா என்றால்? நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன். நீண்ட நாவலை வாசித்துவிட்டு “வாசன்” விமர்சனம் செய்வது போல கதையை சுருங்க திரும்பிச் சொல்வது போன்ற தொனியே கதையில் அதிகம் தெரிகிறது. அதைத் தவிர்த்து வரும் சில சந்தர்ப்ப சித்தரிப்புகள் சிறுகதைக்குரியதாக உள்ளன. இருப்பினும் காலச்சுவடு சமீபகாலமாக வெளியீட்டு வரும் ஈழத் தமிழர்களின் (இளங்கோ டிசே,ஆசி கந்தராஜா….) கதைகளுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ளது. சரி இருக்கட்டும்.
சிங்களவர் ஒருவர் தமிழர்களின் பார்வையில் எழுதிய புனைவு. (நெற்கொழுதாசனும் தமிழர்கள் எதிர்பார்ப்பது இவர்களிடம் இதையல்ல என்கிறார். தீபச்செல்வனும் தமிழர், நோயல் நடேசனும் தமிழர், நெற்கொழுதாசனும் தமிழர்… ஆனா இவர் யாரை தமிழராகக் கருதி பொதுமைப்படுத்தி… தமிழர்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்கிறார்? இந்தப் பொதுமைப்படுத்தும் பெருங்கதையாடல்களைத் தான் நவீனத்துவத்திடம் இருந்து பின்நவீனத்துவம் எதிர்கிறது. தனிமனிதனை தனி அழகாகக் கொண்டே ஆராய வேண்டி உள்ளது. இங்கே ஒவ்வருவரும் தனிமனிதர்கள்.)
இதை எழுதிய எழுத்தாளரின் மனக்கட்டமைப்பை இக்கதையின் ஊடாக நாம் ஊகிக்கலாம். அது அக்காலத்தின் சமூக நிலையின் பொதுப் புரிதலாகக் கொள்ள முடியுமா என்றால்? இல்லை தான். இது எழுத்தாளரின் தனித்துவம் சார்ந்தது. எனக்கு இருக்கும் ஒரு சந்தேகம் சாதியம் சார்ந்த பிரச்சினையை சிங்களவர்கள் பேசினால், “இனவதக் கண்களினூடே கட்டமைக்கப்படும் தமிழர்களின் மீதான கருணையாகத்” தெரிகிறது? இதையேதான் கத்னா விவகாரத்தில் ரியாசும்,பலரும் தமிழர்கள் மீது குற்றமாகச் சுமத்தினார்கள்.
ஒடுக்குமுறை வன்செயலில் தமிழர்களுக்கு சிங்களவர்கள் உதவவில்லையா? இது நடக்கவே இல்லை என்கிறீர்களா? இந்தப் புனைவு வெளியில் மட்டும் ஏன் அதை மறுக்குறீர்கள். தனிப்பட்ட குடும்ப நண்பர்கள் ஊடாக நிகழும் சித்தரிப்பாகத் தானே உள்ளது? இதில் என்ன பொதுமைப் படுத்தலின் ஊடாக “பாதிக்கபடும் இடங்களில் எல்லாம் அவர்களை காப்பாற்றிக் கரைசேர்ப்பதும், இறுதிச் தஞ்சம் அடைவதும், ஆசுவாசம் கொள்வதும் சிங்களவர்களின் நிழலில்” என்பது போன்ற சம்பவ விபரிப்புகளாக வந்துள்ளன?
//போராட்ட காரணத்தின் ஆதி ஊற்றை விட்டு விட்டு அதன் தேங்கிய குட்டையில் இருக்கும் விழைவுகளை மடும் பட்டியலிடுவது அசல் படைப்பாளிக்கான பார்வை அல்ல.// என்றால் எப்பவும் மூலத்தை தான் நோக்கிச்செல்லவேண்டுமா? விளைவுகளை புனைவு வெளிக்குள் கொண்டுவரக்கூடாதா? இதென்ன அசல் படைப்பாளி அப்ப மற்றவர்கள் நட்டுவைத்து பூட்டிய அசம்பில் சைக்கிளா?
விளைவுகளையும், சிதைவுகளையும் நோக்கிச் செல்வதும் ஒரு படைப்பு மனதின் இயல்புதான். அதை கலையாகுவதிலே வெற்றியுள்ளது
// ஒடுக்குமுறையின் பக்கமிருந்து உரையாடும் போது இன்னும் கவனாமாகவும், விரிந்த பார்வையும் வேண்டியிருக்கிறது.// இது வரை ஒடுக்கப்பட்ட தமிழர்கள் அப்படியென்ன விரிந்த பார்வையுடன் எழுதிக் கிழித்து இருக்கிறார்கள்?
// அனோஜன் பாலகிருஸ்ணன்
//“இனவதக் கண்களினூடே கட்டமைக்கப்படும் தமிழர்களின் மீதான கருணையாகத்” தெரிகிறது? இதையேதான் கத்னா விவகாரத்தில் ரியாசும்,பலரும் தமிழர்கள் மீது குற்றமாகச் சுமத்தினார்கள் //
கத்னாவையும், இந்தக் கதையையும் ஒரே தளத்தில் உரையாடவே முடியாது. அதுகும் இல்லாமல் இந்தக் கதையில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், கருத்துக்களை தமிழர் தரப்பிலிருந்து மறுக்கும் (தமிழ்நாட்டுக்காரர்களுக்கு கதை எழுதும் அகரமுதல்வன் வகையறாக்கைளை தவிர்த்தால்) படைப்பாளிகள் சொற்பமே. ஆனால் கத்னா உரையாடல் அப்படியாக இருக்கவில்லை அது அப்போதுதான் உரையாடலிற்கே பொதுவில் வருகிறது முதல் உரையாடலில் ரியாஸ் குரான அதை முஸ்லீம்களின் தனித்துவம் / கலாச்சார அடையாளம் என்ற அளவில் உரையாடும் புரிதலுடனே இருந்தார் என்பதிலிருந்தே இரண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கதையில் சுட்டும் விமர்சனங்கள் போராட்ட காலத்தின் தொடக்க காலத்திலிருந்தே இருந்தே உரையாடவும், விவாதிக்கவும் பட்டவை. இங்கு பிரச்சனை அவர்கள் உரையாடக் கூடது என்பதல்ல உரையாடலில் அதன் ஒட்டு மொத்த தரிசனமாக எதை முன்வைக்கிறார்கள் என்பது குறித்தானதே. சிங்களப் படைப்பாளிகள் சிறுபான்மையினர் குறித்து தொடர்ந்து முன்வைக்கப்படும் பெரும்பான்மை உரையாடல்களை உடைத்து தம்மை முன்வைக்க வேண்டியர்களகவே இருக்கிறார்கள், அதுவே அவர்களின் படைப்புக்களின் தேவையும்.
//ஒடுக்குமுறை வன்செயலில் தமிழர்களுக்கு சிங்களவர்கள் உதவவில்லையா? இது நடக்கவே இல்லை என்கிறீர்களா? இந்தப் புனைவு வெளியில் மட்டும் ஏன் அதை மறுக்குறீர்கள். தனிப்பட்ட குடும்ப நண்பர்கள் ஊடாக நிகழும் சித்தரிப்பாகத் தானே உள்ளது? இதில் என்ன பொதுமைப் படுத்தலின் ஊடாக “பாதிக்கபடும் இடங்களில் எல்லாம் அவர்களை காப்பாற்றிக் கரைசேர்ப்பதும், இறுதிச் தஞ்சம் அடைவதும், ஆசுவாசம் கொள்வதும் சிங்களவர்களின் நிழலில்” என்பது போன்ற சம்பவ விபரிப்புகளாக வந்துள்ளன?// கதையில் விபரிக்கப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தவையே, அவற்றை பலர் தமிழர் பக்கமாக இருந்தும் பதிவு செய்திருக்கிறர்கள். பிரச்சனை சம்பவங்களின் நம்பகத்தன்மையோ, அதன் வரலாற்றுத் திரிபு குறித்தானதோ அல்ல தேர்ந்தெடுத்த சம்பவங்களின் பின்னால் ஊடுபாவியிருக்கும் மனநிலை குறித்தும் அது யாரை நோக்கி உரையாட விழைகிறது என்பது குறித்துமே.
//தர்மு பிரசாத்
அனோஜன் இந்தக் கதைக்குள் பின் நவீனத்துவத்தைக் கொண்டு வந்து புகுத்துவதால் சிலதைச் சொல்லவேண்டும்.
முதலாவது இந்தக் கதையின் பலவீனமே அது மற்றதனைத் (other) தனக்குரியதாக claim செய்வது. ஒருவர் சிங்களவராக இருந்துகொண்டு தன்னைத் தமிழராக ஆக்கி முன்னிலையில் கதை சொல்லமுடியாது. அதை பின் அமைப்பியல்/பின் நவீனத்துவம் முதலிலேயே நிராகரித்துவிடும். அவர் வெளியில் நின்று தானில்லாததைப் பற்றிக்கூற முடியுமே தவிர தன்னை அவர்களில் ஒருவராக வைத்துக்கொண்டு கதை மட்டுமில்லை, எந்த ஆய்வுமே செய்யமுடியாது. மானுடவியலில் கூட எந்த ஆராய்ச்சியாளராயினும் முதலில் தன்னைப் பற்றிய விபரங்களை வெளியிட்டுவிட்டே தன் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசமுடியும் என்பது எளிய முதல் விதி. அனோஜன் இப்படி பல இடங்களில் அவசரப்பட்டுக் கருத்துக்களை எழுதிக்கொண்டிருக்கின்றார். இதுகுறித்து ஆறுதலாக இருந்து வாசிக்க அவருக்கு தமிழவனின் ‘அமைப்பியலும் அதன் பிறகும்’ பரிந்துரைக்கின்றேன்.
இரண்டாவது இந்த நாவலில் தமிழர்கள் சிங்களவர்கள் போலில்லாது வெள்ளையர்கள் எல்லாம் எவ்வளவு சந்தோசமாக பாரில் அடிபடாமல் குடிக்கின்றார்கள் என்று ஓரிடத்தில் அந்தப் பாத்திரம் சொல்கின்றது. வெள்ளையர்கள் செய்த சிலுவைப்போர்கள் எத்தகை பெரியஅழிவைக் கொண்டு வந்து இன்றும் அயர்லாந்தில் இதே சிக்கல்கள் இருப்பது ஒருபுறமென்றால், வெள்ளையர்கள் செய்த காலனித்துவக் கொடுமைகளைக் கூட விளங்காமலா அந்தப் பாத்திரம் இருக்கும். ஆகக்குறைந்தது எழுதுபவர்க்கு இது உறைத்திருக்காதா என்ன?
இந்தக் கதையில் தமிழர்களின் சாதிகளை விமர்சிப்பதுபோல இருந்தாலும் இறுதியில் தலித்துக்களை மிக கீழ்மையாக அல்லவா அது நாதன் கட்டாய ஆட்சேர்ப்பு செய்கின்ற ஒருவராகச் சித்தரிக்கும்போது காட்டுகின்றது. தொடக்கத்தில் நாதனை அம்பட்டன் எனச் சொல்வதால் தனது தோழியை கெட்டவளாகச் சித்தரிக்கின்ற இந்தத்தமிழ்ப்பெண் பாத்திரம் இறுதிவரை அவர் எங்கேயும் தன் சாதிக்கு வெளியே வந்து எதுவும் செய்ததாகவோ/கேள்விகேட்பவராகவோ காணவில்லை. அப்படியெனில் அவருக்கும் அவ்வளவு சாதி இறுக்கத்தோடு இருக்கும் லட்சுமிக்கும் என்னதான் வித்தியாசம் இருக்கிறது. அப்படியான ஒருவர் தலித்தான நாதனை , அதுவும் பதின்மத்தில் பார்த்த ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதில் என்ன லொஜிக் இருக்கிறது எனத் தெரியவில்லை.
முதலில் சிங்களவரான ஒருவர் தன்னையொரு தமிழராக இருத்தி கதை சொன்னது ஏற்றுக்கொள்ளமுடியாதென்றால் (வெளியாளாக இருந்து தமிழரின் கதையைச் சொன்னால் எவ்விதப் பிரச்சினையுமில்லை), விளிம்புநிலை மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் நாதனின் பாத்திரத்தை இப்படி மிக மோசமாக இறுதியில் சித்தரித்திருக்கவும் முடியாது.
// இளங்கோ டிசே