இச்சாவும் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்…

01.

இச்சா

அரசியல் சராசரித்தனங்கள் நிறைந்திருக்கும் இலங்கைத் தமிழ்ச் சூழலில், ஷோபாசக்தியின் படைப்புகள்  இன்னும் சரியாக வாசிக்கப்படவில்லை. அவரது படைப்புகளில் அரசியல் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் வாசிப்புகளே நிகழ்ந்திருக்கின்றன. அதனால் அவரது படைப்புகளுக்கான ஆழமான வாசிப்புக் கட்டுரைகள் , விமர்சனங்கள், திறனாய்வுகள் சொற்பமாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. இருபது வருடங்களாக எழுதிவருபவரும், தன் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் ஆழமான செல்வாக்கையும் செலுத்தும் அவருடைய படைப்புலகை அணுக நல்ல வாசிப்புக் கட்டுரைகள் இல்லை என்பது தமிழின் இயல்பான வழமைதான் என்பதால் அவரது படைப்புகள் சரியாக வாசிக்கப்படாத அவலம் குறித்து நாம் கொஞ்சம் உள்ளக்களிப்பு மட்டும் கொண்டால் போதும். அவலத்திற்கு உள்ளக்களிப்பு கொள்வதும் நம் தமிழ் மரபுதான் இல்லையா?

ஷோபாசக்தி சமகாலத்தின் முக்கிய படைப்பாளியாக முன்னிறுத்தி வாசிக்கப்பட்டாலும் – அவருடைய படைப்புகளின் உள் மடிப்பைத் திறக்கும்,  தன் சமகால படைப்புகளில் இருந்து அவை விலகும் புள்ளிகளை, தன்னுடைய புனைவை உப வரலாறாக வாசிக்க வைக்கும் அவருடைய எழுத்துப் பாணியை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை. அப்படியான நல்ல மதிப்பீட்டுக் கட்டுரைகள், பார்வைகள் வெளிவரும் போது அவரது படைப்புகளை மறைத்து நிற்கும் அரசியல் புகைமூட்டம் விலகி படைப்புகளின் ஆழமும், உள் மடிப்புகளும் இன்னும் துலங்கும்.

நேரடி வாசிப்பில் எளிமையான கதை போலத் தோன்றும், ஒரே மூச்சில் வாசித்து விடக் கூடியதான இச்சா நாவலிற்கும் இப்படியான மேல் வாசிப்பே நிகழ்ந்துள்ளது. சம காலத்தில் மிலன் குந்தேராவின் படைப்புகளின் வெளிச்சத்தில் வைத்து வாசிக்கக் கூடிய எளிமையும், உள்ளோட்டமுமான நாவல் இச்சா. நேரடியான அர்த்தத்தில் குந்தேராவின் ignorance (தமிழில் : மாய மீட்சி), identity இரண்டு நாவல்களும் சலனமற்ற சமுத்திரத்தின் மேற்பரப்பு போன்ற எளிமையான கதைகள் தாம். ஆனால் அவற்றின் ஆழத்தில் கொந்தளிப்பும் சுழிப்புகளுமான நீரோட்டங்களின் இணைவுகளும் இருக்கின்றன, ஒன்றை ஒன்று இடைவெட்டவே வெட்டாத இரு சரடுகள் போன்ற கதையோட்டங்களுடன். idnorance நீங்கி வந்த நாட்டின் மீதான புலம்பெயரிகளின் கடந்த காலம் மீதான நினைவேக்கமாகவே மேல் வாசிப்பில் பிடி கிடைக்கும். இந்த மேற்கதையை இழைபிடித்துச் சென்றால் ஒவ்வொரு புலம்பெயரிகளும் நிகழ்கால, கடந்தகால வாழ்க்கைகளின் மீதான அறியாமையின் உள்ளோட்டங்களைத் தவறவிட்டு விடுவோம்.

இச்சாவில் கப்டன் ஆலா, 30 ஆண்டுகளான இலங்கை உள்நாட்டுப் போரின் தமிழர்களின் இலட்சிய முன்மாதிரி. அவர் போர் விருப்பைக் குழைத்துப் பின்னப்பட்ட மிகு கற்பனைகளூடாகத் துலங்கிவந்த மகத்தான சாவை தன் போராட்ட இலட்சியமாக வரித்துக் கொண்டவர். பின் சாவின் நுனியிலிருந்து வாழ்வின் இருட் பள்ளத்தினுள் வீழ்ந்தவர். அவர் வீழ்ந்த இருட்பள்ளம் தமிழின் நவீன போர் வீரயுகக் கதைகளும் கவிதைகளும் பாட மறந்த, கருணை கூர்ந்து பார்க்கக் கூட மறுத்துப் புறமுதுகு காட்டி அமர்ந்து விட்ட வரலாற்றின் இருட்பள்ளம். மகத்தான சாவு நோக்கிச் சென்றவர், பின் மகத்தான வாழ்வைக் கற்பனை செய்கிறார். கற்பனை மட்டுமே செய்து கொள்ள முடிகிற வாழ்வே அவருக்குக் கிடைத்திருக்கிறது. போரின் அகில விளையாட்டுகளில் அவர் வாழ்வும் ஒன்றாகி மட்கிப் போக இருக்கிறது. ஆனால் ஆலாவுடைய வாழ்வுக்கான ‘இச்சை’ ஒரு நல்ல கதைசொல்லியிடம் வந்து சேர்வதால் கதைசொல்லி கப்டன் ஆலாவிற்கு  ஒரு மகத்தான வாழ்வைத் தன் புனைவில் நிகழ்த்தி விடுகிறார். அந்த ஆலாவின் வாழ்வு மீதான இச்சை வாசிப்பவர்களின் போர் குறித்த கற்பனைகளைச் சலனப்படுத்துகிறது.

ஃபியோதர் தாஸ்தயோவ்ஸ்கியின் நேரிய நல்ல மனிதன் குறித்த விபரிப்புகளுடன் தொடங்கும் இச்சாவும் ஒரு இலட்சிய நேரிய மனிதனைப் படைக்கவே விழைகிறது. நேரிய மனிதனின் இயல்பான ‘கள்ளமின்மை’ ஆலாவின் இயல்பும் தான். தான் எதிர் கொள்ளும் மூன்று சம்பவங்கள் தவிர மிகுதி அத்தனை இடங்களிலும் தன் கள்ளமின்மையைத்தான் அவர் வெளிப்படுத்துகிறார். ஆலாவின் இயல்பான கள்ளமின்மை சுல்தான் பப்பா மீதான காதலோடு கள்ளம் கொள்கிறது, பின் அதன் காதலின் சாத்தியமின்மையை உணர்ந்ததும் மகத்தான சாவு என்ற இலட்சியமாகத் திசை திரும்புகிறது. மகத்தான சாவை நோக்கித் தன்னைக் குவித்து முன்நோக்கிச் சென்ற ஆலா, தன் புனைவிலும் தனக்கான மரணத்தை அப்படியாகத்தான் கற்பனை செய்கிறார். நேரிய  மனிதன் என்ற சாத்தியமில்லாத கற்பனையை மறுத்து, சாவைத் தவிர்த்து சிறை செல்கிறார்.

ஆலாவிற்கு இணையாக அர்த்தமே இல்லாமல் அடையாளமாக வெற்றுச்சுவருடன் வெடித்து தன்னை அழித்த சிறுவனிடம் நேரிய மனிதனுக்கான களங்கமின்னையின் இயல்புகள் இருந்திருக்கக் கூடும். கேள்விகளற்ற அர்ப்பணிப்பின் மூர்க்கத்தில் அவை அமிழ்ந்திருக்கவும் கூடும். நாவல், தான் எடுத்துக் கொண்ட களம் என்ற அளவில் ஆலாவினை மட்டுமே பின் தொடர்கிறது. மீறி மகத்தான சாவின் எதிர் நிலைகளையும் கொஞ்சம் நாவல் அழுத்தமாகக் கவனப்படுத்தி இருந்தால் அதன் ஆழம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். உரோவன் மொழி உருவாக்கம், அகராதி, அதன் சித்தரிப்புகள், உத்தி மற்றும் நம்பகத்தன்மைக்கான ஏற்பாடுகள் என்ற அளவிலான துருத்தல்களாகவே இருக்கின்றன.

ஆலா விழுந்த இருட்பள்ளம் பலர் எழுத மறுத்த இருட்பள்ளம் என்றல்லவா சொன்னேன் – பலர் பாட, எழுத மறுத்தது தான் என்றாலும் அது ஷோபாசக்தியால் முன்னரும் பல முறை எழுதப்பட்டிருக்கிறது. ‘ம்’ நாவலில் பின் போர் சூழலின் மனச்சிதைவைச் சிசுவாகச் சுமக்கும் சிறுமி நிறமியில் இருந்து, ‘பொக்ஸ்’ நாவலில்  நிர்வாணத்தை நெருப்புகளால் மூடவைத்த நாச்சியார் வரை ஆலாவிற்கான ஒரு தொடர்ச்சி அவருடைய படைப்புகளில் ஏற்கனவே இருக்கிறது. ஆக, அவரளவில் தேய்வழக்குகளின் ஒரு விரிந்த வடிவம்தான் இச்சா. புனைவை அனுபவமாக மாற்றும் மொழியும், தகவல்களும், உணர்ச்சிகளும் நாவலைச் சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப அவற்றை வாசிக்க வைக்கின்றன.

.

02.

சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்

சேனனுடைய ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவலின் ஒரு நல்ல இயல்பு என்றால் அது சமகால யதார்த்த கதை மாதிரிகளிலிருந்து விலகி கொஞ்சம் மிகுகற்பனை, புதிர் விளையாட்டு, சம்பவங்களைக் கலைத்து அடுக்கும் முனைப்பு என்பவற்றைக் கொண்டிருக்கிறது என்பதே. இந்தக் கட்டற்ற பின்-நவீனத்துவ இயல்புகளை வினைத்திறனாக வெளிப்படுத்த நாவலின் மொழியால் சாத்தியமாகவில்லை என்பது அதன் பெரும் பலவீனம். சேனனுடைய புனைவு மொழி மிகவும் பரிதாபமானது. அவர் தற்போது தமிழில் ஏதும் வாசிப்பதே இல்லையோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மொழி புராதனமாக இருக்கிறது. கோழி, அரிசிக் குறுணிகளைக் கொத்துவது போல அங்கொன்றும் இங்கொன்றுமான சொற்தெரிவுகள். பல சமயம் அரிசிக் குறுணிகளிற்குப் பதிலாகக் குறுணிக் கற்களே அவருக்குத் தட்டுப்படுகின்றன.

ஒருவர் மொழியை முழுவதுமாகக் கற்று அதன் போதாமைகளை உணர்ந்து அதன் எல்லைகளை மீறுவது என்பது வேறு; அடிப்படைகளை அறியாமல் இருப்பது என்பது வேறு. மொழியைக் கற்றுக்கொள்ள, சிரத்தையும் ஆர்வமும் போதும். சொற்பமாகவே என்றாலும், 20 வருடங்களாகப் புனைவுகள் எழுதும் அவர் தன் மொழி குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும். சொல்,பொருள் பிழைகள் மட்டும் அல்ல வாசிக்க இடைஞ்சலான பல அர்த்தப்பிழைகளும் இருக்கின்றன. குறைந்தது இருபது முறைகளாவது செம்மை செய்த பின்னரே இதனை ஒரு நாவலாக  வெளியிட்டிருக்க வேண்டும்.

கூடவே அவர் தெரிவு செய்திருக்கும் வட்டார வழக்கு இன்னும் அலுப்பூட்டுகிறது. வட்டார வழக்கின் எல்லைகள் மிகக் குறுகியவை, எந்த மிக நல்ல படைப்பாளியும் வட்டார வழக்கின் சுருக்கிய வடிவத்தை மட்டுமே தம் புனைவுகளில் பயன்படுத்துவார்கள்.  கொஞ்சம் நம்பகத்தன்மையைச் சேர்க்க, பின் அதன் பணி முடிந்துவிடுகிறது. பின் அவ்வட்டார வழக்கை மீறி, விலகிச் செல்லவே பிரயத்தனம் செய்வார்கள். சேனனின் புனைவு மொழியை வட்டார வழக்கு என்று சொல்ல முடியுமா என்றும் குழப்பமாக இருக்கிறது. அது ஒரு வகைப் பத்திரிகைகளின் அரட்டை மொழி.  நல்ல வாசிப்பனுபவத்தை, கற்பனயைக் கோராத, தேய்வழக்குகளையும், அரசியல் கீழ்மைகளையும், சராசரிதனங்களையும் பெரும்பாரமாகச் சுமந்திருக்கும் மொழி. அதில் இந்த யதார்த்தம் மீறிய கதையைச் சொல்ல முயன்றதையே முதலில் அவர் பரிசீலித்திருக்க வேண்டும். மொழியும் கதையும் ஒட்டாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன. பல இடங்களில் மொழியின் கீழ்மை என்பது விளிம்புநிலையினரின் கையறு நிலைகளை வைத்து மலினமான மெல் உணர்ச்சிகளைச் சீண்டுவதாகவே இருக்கிறது. நாவலில் கந்தசாமி என்ற தமிழர் சாதனாவை வெளிநாடு அனுப்ப முன்னர் தன் வீட்டில் தங்க வைத்திருக்கும் போது நிகழும் சம்பவத்தின் சித்தரிப்பைப் பாருங்கள்.
< <கந்தசாமி விடுவதாயில்லை. அவரது வெறி நாற்றம் அவளது குடலைப் புடைத்து எடுத்தது. அன்று மாலை சாப்பிட்ட கோழிப் பிரியாணியை உவக் உவக்கென்று ஒங்காலித்து ஓங்காலித்து எடுத்த சத்தி கந்தசாமியின் உடல் முழுவதும் பரவி ஓடியது. வாந்தியை வழித்தெறிந்து விட்டு மனிசன் கொஞ்ச வந்தது. அவள் விடவில்லை. முகத்தில் நீண்டிருந்த அவரது காயத்தை நோக்கி ஓங்கி ஒரு அறை விட்டாள். வாந்தி எடுத்த கையுடன் கை கால்களில் ஏற்பட்ட சோர்வில் இருந்து மீற கண்களை மூடிச் சக்தியை திரட்டி உதறிக்கொண்டிருந்தாள். கிழிந்து தொங்கிய நைட்டிக்குள்ளிருந்த அவளது உறுப்புகளை காம வெறி பொங்கப் பார்த்த கந்தசாமி அவள் உடையை வெறியுடன் கிழித்தெறிந்தார்.>>

சிறைக்காவலரான காரிய வம்ச என்ற சிங்களவர் விசாரணைக் கைதியாக இருக்கும் ஆலவை எதிர்கொள்ளும் இச்சா நாவலின் ஒரு பகுதி <<எப்போதாவது நான் அழைக்காமலேயே, அவர் அறைக்கதவைத் திறக்கும் சத்தம் மெல்லிதாக எனக்குக் கேட்கும். அதுவரை என் அறையினுள்ளே பத்துச் சூரியன்கள் போல வெப்பமாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அணைக்கப்படும். அறைக்குள்ளே காரிய வம்சத்தின் பூட்ஸ் கால்கள் பாம்பு போல ஊர்வதை நான் உணர்வேன். காரிய வம்ச இரைக்கும் மூச்சு, குழுமாடொன்று மூசுவது போல அந்த அறையை நிறைக்கும்.

காரிய வம்சம் மெல்ல எனது போர்வையின் மேற்பகுதியை விலக்குவார். தான் கொண்டுவந்த தீக்குச்சியில் ஒரு குச்சியைப் பற்றவைத்து, அந்த வெளிச்சத்தில் என் முலைகளைப்பார்ப்பார், அந்தக் குச்சி அணைந்ததும் போர்வையின் மேற்பகுதியைக் கவனமாக மூடிவிட்டு கீழ்பகுதியை விலக்குவார். இன்னொரு தீக்குச்சியைக் கிழித்து என் தொடைகளிடையே வெளிச்சமாக்குவார். குச்சி அணைந்ததும் போர்வையை மூடிவிட்டுப் போய்விடுவார். அவர் அறைக் கதவை மூடிக் கொண்டதும், மீண்டும் அறைக்குள் வெளிச்சம் வந்துவிடும். அந்தப் பிரகாசமான வெளிச்சத்துக்குள்ளும் தீக்குச்சியின் நீலச் சுவாலையொளி கலையாதிருக்கும்>>

 இவைதான் விளிம்புகளின் கையறுநிலையை மலினமாகத்தூண்டி உணர்வுகளை சுரண்டும் படைப்புகளுக்கும் நல்ல படைப்புளுக்குமான வித்தியாசம். 

இத்தனை மொழிக் குழப்பங்களையும் மீறி சித்தார்த்தனின்  வினோதச் சம்பவங்கள்  நாவலாகக் குறிப்பிடும்படி இருக்கிறதா என்றால், இல்லை. புனைவுக்கான புறச் சூழலோ, பாத்திரங்களின் வடிவமைப்பு உதிரிகளாகவும் முழுமை இல்லாத குறைப் பாத்திரங்களாகவும், தெளிவில்லாத பின்புலம் உள்ளனவாகவும் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு சேனன் உருவாக்க நினைக்கும் புனைவுகள் இரு இரும்பு துண்டுகளை ஒட்டும் போது சிதறும் பொறிகள் போன்ற தெறிப்புகளாகவே இருக்கின்றன, அவை நெருப்புப் பொறிகள் தான் என்றாலும் தீயின் வெம்மையோ, உக்கிரமோ இல்லாத பாவனைப் பொறிகள் மட்டுமே.

ஒரு படைப்பாளி முன்னிருக்கும் சவால் என்பது ஏற்கனவே தெரிந்த, அறிந்த உண்மைளை திரும்பச் சொல்வதில் இல்லை. அதை விசாரணை செய்வதிலேயே இருக்கிறது. நாவலில் வரும் சம்பவங்கள், கதைகள் என்பன பத்திரிகைச் செய்திகள், தெரிந்தவற்றை ஒட்டி உருவாக்கிய மேலோட்டமான புனைவுச் சம்பவங்கள் மாத்திரமே. யுத்தக் கொடூரங்கள், உடல் சிதைந்த புகைப்படங்கள் என்பன சலிக்கச் சலிக்க எதிர்கொண்ட பின்னர் போரின் அழிவு குறித்த நேரடி விவரணைகள் எல்லாம் எதுவித சலனங்களையும் ஏற்படுத்துவதில்லை. அதனால் நாவலினால் ஆழமான பாதிப்பையோ, பிணைப்பையோ ஏற்படுத்த முடிவதில்லை.

நாவலின் பாத்திரங்களான அல்லி, சாதனா, சித்தார்த்தன், கந்தசாமி என்பனவும் பொதுமையான பாத்திரங்கள். நாவலில் பாத்திரங்களின் செயற்பாடுகளும் மேலோட்டமானவையாகவும், தெளிவில்லாதவனவாகவும் இருக்கின்றன. அல்லி ராணியின் தொன்மம் கூட, போகிற போக்கில் சொல்லப்பட்டதாக மட்டுமே வருகிறது. அந்தத் தொன்மத்தை விரித்து அதைச் சமகாலத்துடன் இணைத்திருக்கலாம். அப்படி எழுதுவதற்கான சாத்தியங்கள் அத்தனை இருந்தும் அது அப்படியே தொங்கிக் கொண்டு நாவலுடன் ஒட்டாமல் இருக்கின்றது. பின் பகுதியில் வரும் சாதனா, விஞ்ஞானி சித் குறித்த பூடகங்கள் கூட வெறும் மர்மங்களாகவே எஞ்சி விடுகின்றன.  

டிசே இளங்கோ  முகநூல் பதிவில் இந்த நாவலில் பன்மைக்குரல் தன்மை இருக்கிறது என்று தன் வாசிப்பை முன்வைக்கிறார். என் வாசிப்பில் அப்படியான நல்ல இயல்புகள் ஏதுவும் நாவலில் தென்படவில்லை. பன்மைக்குரல் தன்மை என்பது பல குரல்களை ஒலிக்க விடுவததோ, பலகுரலில் ஒருவரே  ‘மிமிக்ரி’ செய்வதோ அல்ல, முரண்படும் பல கருத்துத் தரப்புகளின் மோதலை நாவலில் நிகழ்திக் காட்டுவதே பன்மைக்குரல் தன்மை என்பது என் புரிதல். அந்த வகையில் சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் நாவலில் பன்மைக்குரல் தன்மை இல்லவே இல்லை, அதில் ஒரே ஒரு குரல்தான் இருக்கிறது. அதுவும் எல்லாப் பிரச்சினைகளையும் தமிழ்- சிங்கள  இருமைகளாகவே நோக்க முடிகின்ற நோய்மைக்கூறுகளுடன் கூடிய சேனனின் உரத்த பிரச்சாரக் குரல்! அதையே அத்தனை பாத்திரங்களிலும் தன் பங்காக விசிறிவிட்டிருக்கிறார் சேனன். பல இடங்களில் எஸ்.பொன்னுத்துரையின் ‘மாயினி’  கீழ்மைப் புனைவின் எல்லைகள் வரை கூட அந்தக்குரல் சென்று மீள வழிதெரியாமல் தத்தளிக்கிறது. 

நாவலில் உரத்து ஒலிக்கும், பிரச்சார குரலைக் கொண்டு இதனை ஒரு முற்போக்கு நாவலாக வாசிக்கலாமா என்றால் அதிலும் போதாமைகளே இருக்கின்றன. கே.டானியலின் நாவல்கள் முற்போக்கு யதார்த்தவாத நாவல்கள். அவற்றில் சமூகத்தின் ஒடுக்கு முறைகள் – அழுத்தமாகச் சாதி ஒடுக்கு முறை – குறித்த நுட்பமான அவதானங்களும், சித்தரிப்புகளும் இருக்கும். நாவலின் தொனியில் உயர்ந்த மானுட நேயம், சமத்துவ சமுதாயம் நோக்கிய கனவு ஒன்றும் இருக்கும். இந்த நாவலில் அப்படியான கனவை நோக்கிய ஒரு மானுட நோக்கோ, விளிம்புநிலையினர், பாதிக்கப்படவர்கள் குறித்த நுட்பமான பார்வைகளோ, சித்தரிப்புக்களோ இல்லை என்பதால் இதை முற்போக்கு நாவலாகக் கூடச் சுட்ட முடிவதில்லை. ஆகப் பிரச்சாரம் என்பது எதை நோக்கி என்று கேட்க வேண்டி இருக்கிறது, நாவலில் அது அரசியல் சராசரித்தனங்களை நோக்கிய எளிமையான புரிதலாகவே இருக்கிறது.

பல கருத்துதரப்புகளின் மோதலைப் புரிந்து கொள்ள ஓரான் பாமூக்கின் பனி நாவலை வாசித்துப் பார்க்கலாம். அதில் பல தரப்புகளின் கருத்துப் பரப்புகளும் புனிப்புயலால் சூழப்பட்ட கசாக் என்ற சிறு நகரினுள் முட்டி மோதி தெளிவடைந்து குழம்புகின்றன. நவீனத்துவப் பனிப்புயலினுள் சிக்கியிருப்பது இஸ்லாம் என்றால் அதனுள் முட்டி மோதுச் சிதறி உரையாடுகின்றன அதன் அத்தனை எதிர்த் தரப்புகளும்.  அவற்றில் கீழ்மையின் சாயல் படிவதில்லை, பிரச்சினைகளை விசாரணை செய்யும் முனைப்போ மேலோங்கி இருக்கிறது. அதனாலே இடதுசாரியான கடிபேயின் அப்பா சொல்கிறார் ‘அரசாங்கம் பர்தா அணிவதைத் தடை செய்தால், நான் பர்தா அணிவதைத் தடுக்கமாட்டேன். அங்கே அதை அணிவதும் எதிர்ப்பின் வடிவம்தான்’ அதுவரை காலமும் பர்தா குறித்த ஓர்மையே இல்லாதிருந்த அவருடைய மகள் கடிபே பின் பர்தா அணிந்து கொள்கிறார். இப்படியாகக் கடிவாளமிடப்பட்ட அரசியல் சராசரித்தனங்களில் இருந்து வெளியேறப் படைப்பாளிக்குப் பரந்த வாழ்க்கை நோக்கு வேண்டும். அவை சேனனின் இரண்டு நாவல்களிலும் இல்லை. 

முடிவாக…

தன்னுடைய நாவலின் திருடிய வடிவமே ‘இச்சா’ என்ற கருத்தை நேரடியாக சேனனே தமக்குச் சொன்னதாகச் சிலர் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களது கூற்றை சேனன் ஓர் இடத்திலும் இதுவரை மறுத்திருக்கவிலை. ஷோபாசக்தி மீதான தன்னுடைய குற்றச்சாட்டு என்று சொன்ன முகநூல் பதிவில் ‘கருத்துக்களின் தாக்கம்’ என்ற குற்றச்சாட்டை மட்டும் முன்வைத்திருந்தார். அதில் திருட்டு என்பதைச் சேனன் நேரடியாகச் சொல்லியிருக்கவில்லை. ஆனால் ஷோபாசக்தி பொறாமைப்படுபவர், திருடக்கூடியவர் என்கிறார், அவற்றிற்கான எந்த ஆதாரங்களையும், படைப்புக்களையும் சுட்டவில்லை. ஆகவே அது அவருடைய எதிர்பார்ப்பு என்பதாகப் புரிந்து கொண்டு அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

இரு நாவல்களையும் வாசித்த பின்னர் இவர்கள் எவற்றைத் திருட்டு அல்லது தழுவல் என்று சொல்கிறார்கள் என்பது குழப்பமாகவே இருந்தது. இரண்டும் தனித் தனியான இரு வேறு நாவல்கள். அவற்றின் களம், அவை கவனப்படுத்தும் விடயம் உத்தேசித்து இருக்கும் இலக்கு என்பனவும் வேறு வேறானவை. நாவலில் சேனனும் ஷோபாசக்தியும் பயன்படுத்தியிருக்கும் ஓர் உத்தியாக சாதனா, ஆலா வெளிநாடு வருவதும் (ஆலா ஒரு போதும் வெளிநாடு வரவில்லை), பின்னர் கணவனால் கொடுமைக்குள்ளாவது என்பவற்றைத்தான் இவர்கள் திருட்டு என்று குறிப்பிட வருகிறார்கள்  என ஊகிக்கிறேன். இதனைத் திருட்டு அல்லது தழுவல் என்பவர்கள் தங்கள் வாசிப்பையோ, இரு நாவல்களையும் ஒப்பிட்டு அதன் ஒற்றுமைகளை எழுதியிப்பதை எங்கும் படிக்கக்கிடைக்கவில்லை. ஆனால் திருட்டு என்பதற்கான ஊகங்களாக சேனனுடைய நாவல் தர்மினி வழியாக ஷோபாசக்திக்கு கிடைத்திருக்கலாம் என்கிறார்கள். அந்தக் கூற்றை ஷோபாசக்தி, தர்மினி இருவரும் மறுத்திருந்தார்கள். ஆனால் சேனன் அவருடைய நண்பர்கள் சொன்ன கருத்துக்களை எந்த இடத்திலும் மறுக்கவில்லை என்பதால் அவர்  ஊகங்களுக்கும், வசைகளுக்குமான பூடகங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனமாக இருக்கிறார்.

இரண்டு நாவல்களையும் வாசிப்பவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளில் இருக்கும் அபத்தத்தைப் புரிந்து கொள்ளவே செய்வார்கள். இச்சாவின் ஆலாவும் சரி சித்தார்த்தனின் வினோதச்சம்பவங்களில் வரும் சாதனா, அல்லியும் சரி ஒப்பிட முடியாத வேறு வேறான பாத்திரங்கள். ஒரு போரினால் பாதிக்கப்பட்ட பெண் திருமணமாகி வெளிநாடு வருவதும், பின் கணவனால் கொடுமைக்குள்ளாவதும் பலர் அறிந்திருக்கக் கூடிய பொதுவான நிகழ்வுகள். அவற்றை இருவருமே தாமகவே தம் நாவல்களில் பயன்படுத்தி இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். இதை திருட்டு என்பவர்கள் இலக்கியம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் அல்லது அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்க வேண்டும்.

சேனன் தர்மினிக்கு அனுப்பிய நாவலை ஷோபாகச்க்தி வாசித்திருப்பார் என்பதை இவர்கள் எப்படி ஊகிக்கிறார்கள் என்றும் புரியவில்லை. சேனன், தர்மினிக்கு தன்னுடைய நாவல் அனுப்ப முன்னரே இச்சா நாவலின் கதையினை  தம்முடன் ஷோபாசக்தி பகிர்ந்திருக்கிறார் என்பதைப் பல நண்பர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். சேனன் தர்மினிக்கு அனுப்பியதும் 3 ஆண்டுகளின் முன்பு. அப்படி தர்மினிக்கு அனுப்பியிருந்தால் கூட ஷோபாசக்தி இக்கதையைப் பார்த்து எழுதினார் என்று எப்படிச் சொல்லமுடியும்? இலக்கியச் செயற்பாடு, படைப்புக் குறித்த புரிதலுள்ளவர்களும் இரண்டும் இரு வேறு நாவல்கள் எனப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆக இவை எல்லாம் இவ்வளவு வெளிப்படையாக இருந்தும் அவர்கள் தொடர்ந்து திருட்டு, தழுவல் என எந்த அடிப்படைகளும் இல்லாமல் கருத்துரைப்பதற்கான முகாந்திரங்கள் மிகவும் வெளிப்படையானவை. சேனன் தான் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டத்தைத் திருப்திப்படுத்த, வசைபொழிய பூடகங்களையும், திரிபுகளையும் செய்துவிட்டு அமைதியாக இருப்பதாகப்படுகிறது. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், விரிவாக எழுதினாலும் புரிந்து கொள்ள முடியாத இலக்கியம் அறியாத ஒரு கூட்டம் அவரைச் சுற்றி இருக்கிறது. ஆக அவர்களுக்குத் தேவையான பூடகங்கள், வசைகள், சர்ச்சைகளை மட்டும் உருவாக்கினால் போதும் என்ற முனைப்பும் அவாவுமே சேனனின் கருத்துகளிலும், செயல்களிலும் பூடகமாக இருக்கிறது. அவரும், அவர் உருவாக்கி வைத்திருப்பவர்களும் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியின் பங்காளார்களோ, அரசியல் இயக்கத்தின் தன்னலம் இல்லாத செயற்பாட்டாளார்களோ இல்லை என்பது மட்டும் வெளிப்படையானது. ஆகவே அவர்களது அடிப்படைகள் இல்லாத அவதூறுகளைப் பொருட்படுத்தவும் வேண்டியதில்லை. ஆனால் இந்தச் சாலைக் கும்பலை வெளிப் படுத்த வேண்டிய கடமை நமக்கு இருந்தது, இப்போது அது இல்லை.  அவர்கள் தாங்களாகவே இப்படியான அடிப்படை இல்லாத அபத்தங்களினூடாக வெளிப்பட்டு விடுகிறார்கள்.

பிற்குறிப்பு 1 

சேனன், இச்சா பதிப்பாளர் கருப்புப் பிரதிகள் நீலகண்டனைப் பற்றியும் கூட தனது புத்தகத்தை வெளியிடத் தன்னுடன் ‘பேரம்’ பேசியதாகப் பூடகமாகச் சொல்லிக் கடந்து செல்கிறார். கடைசிவரை அது என்ன பேரம் என்பதை அவர் சுட்டவில்லை. அவ்வளவுதான் அவரது நேர்மை. அந்தப் ‘பேரம்’ ஒரு பிரசுர ஏற்பாடு என்பதையோ, ஒருவருக்கும் நட்டம் ஏற்படாமல் இருக்க அதுவொரு நல்ல முறை என்பதையோ, அது புலம்பெயர்ந்து வெளிநாட்டில் இருந்து கருப்புப் பிரதிகளுடாக புத்தகம் வெளியிடுபவர்களுக்களுடனான ‘பேரம்’ மட்டும் தான் என்பதையோ  சொல்ல சேனனால் முடியாது. அதற்குக் கொஞ்சமேனும் நேர்மை வேண்டும் இல்லையா? அதுவும் ஒப்பீட்டளவில் சற்றுப் பொருளாதாரப் பாதுகாப்புடன் இருக்கும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் (எல்லா புத்தகங்களும் நீலகண்டன் வெளியிட்டுவிடமாட்டார் அதிலும் கறாரான தெரிவுகள் உண்டு, குறிப்பாக சேனனின் நாவலைப் பிரசுரித்திருக்கவே மாட்டார்) செய்துகொள்ளும் பேரம். அச்சாகி வெளிவரும் எழுத்தாளருடைய புத்தகங்களில் 30 வீதம் புத்தகங்களை எழுத்தாளரே காசு கொடுத்து வாங்கக் கேட்பார். இதுதான் சேனன் சொல்லும் அந்தப் பேரம். வாங்குபவற்றை வெளிநாடுகளில் விற்று அந்தத் தொகையை அவர்களையே எடுத்துக் கொள்ளவும் சொல்வார். எங்களுடைய புத்தகங்களின் விற்பனைச் சாத்தியம் குறித்து தெரிந்த அனைவருக்கும்  இது யாரையும் பாதிக்காத ஒரு நல்ல முறைதான் என்பது புரியும். என் அனுபவமும் அதுதான். பிரான்ஸ், லண்டன், கனடாவில் மொத்தமாக 50பிரதிகள் விற்றால் போதும் அந்த 30 வீதம் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கிய தொகையைத் திரும்ப எடுத்துவிடலாம். மிகுதி 250 புத்தகங்களும் விற்றுவரும் பணம் இலாபம்தான். போதிய விற்பனைக் கட்டமைப்புகளோ, வசதிகளோ இல்லாத காலத்தில் இருந்து வரும் நடை முறை அது. இதனையே சேனன் பேரம் என்கிறார்.   தன்னை ஒரு இடதுசாரிச் செயற்பாட்டாளராக முன்வைப்பவரால் இந்தப் பொருளாதாரக் கணக்கைக் கூடவா புரிந்து கொள்ள முடியவில்லை? புரிந்து கொண்டிருப்பார் அவர் அந்தளவிற்கு முட்டாள் இல்லை. ஆனால் அதைப் பொதுவெளியில் ‘பேரம்’ என மட்டும் கடந்துபோகவே செய்வார் ஏன் என்றால் அவ்வளவுதான் அவர் நேர்மை.

பிற்குறிப்புக்கள் 2

  1. மேல் இருப்பவை இரண்டு நாவல்களுக்குமான முழுமையான விமர்சனங்களோ, பார்வைகளோ இல்லை, இச்சர்ச்சைகளை ஒட்டிய பதிவு மாத்திரமே.
  1. மிலன் குந்தேராவின் ignorance நாவல் தமிழில் ‘மாய மீட்சி’ என்னும் பெயரில் மொழியர்க்கப் பட்டிருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் மணி வேலுப்பிள்ளை. நாவலின் மொழிபெயர்ப்பு, தழுவி எழுதியது போன்று இருக்கிறது. பல மொழிபெயர்ப்பு நாவல்களை வாசிக்கும் போதிருக்கும் விலக்கம் இந்தப் பாணி மொழிபெயர்ப்பில் இருக்கவில்லை, இதை மணி வேலுப்புபிள்ளையின் மொழிபெயர்ப்பு பாணியாகப் புரிந்துகொள்கிறேன். அவர் மொழிபெயர்த்த சிறுகதைகளும் அப்படியானவையே.
Scroll to Top