ராகவனின் மூன்று கதைகள்
ராகவனின் மூன்று புதிய சிறுகதைகளின் களமும் போரின் பின்னரான யாழ்ப்பாணம். அவருடைய ஆரம்பகாலச் சோதனை முயற்சிக் கதைகளிலிருந்து புதிய கதைகளின் மொழியும், உள்ளடக்கமும் உருமாறி வந்திருக்கின்றன. ஆரம்பகால அறிக்கையிடும் கட்டிறுக்கமும், பிசிறில்லாத தன்மையுடனிருந்த மொழி வட்டார வழக்கைப் பிரதிசெய்யும் விதமாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அவர் முன்வைக்கும் கதை மாதிரிகள் தமிழிற்குப் புதியவையல்ல. ஆனால் யுத்தச் சிதிலங்களைச் சுமந்தலையும், தன் முதுகில் கலாசாரப் பழைமைகளைப் பெரும்பாரமாகக் கட்டிச் சுமக்கும் யாழின் சிதறுண்ட சமூகச் சட்டகத்தை அவர் புதிய கதைகளுள் பிரதியாக்கம் செய்யும் போது அவை புதிய கவனங்கோரலையும் வாசிப்பையும் வேண்டிநிற்கின்றன. அதே பழைய மொந்தையில் அவர் ஊற்றும் கள் நொதிக்கும் திராவகமாக இருக்கிறது.
இராகவன் சொல்வது போல் அவருடைய கதைகள் வாசகரின் அதீத பங்களிப்பைக் கோரும் ’அதிகதை’களாகவே இருக்கின்றன. இக்கதைகளில் வாசகர்கள் இட்டு நிரப்ப வேண்டிய புள்ளிகளும் கோடுகளும் அதிகமிருக்கின்றன இது சரியாக எழுதுபவரின் இடத்திற்கு வாசகரை இடமாற்றம் செய்கிறது. தொடர்ச்சியான கதை சொல்லலைத் தவிர்த்து, அவர் முன்வைக்கும் துண்டு துண்டுக் காட்சிகள், கதைகள் முடிந்த பின்னரும் வாசக நினைவிலியில் உருக்கொள்ளும் கதைகள் எல்லை
யற்று விரிந்து செல்கின்றன.
கதைக்களுக்குள் விரிந்த பரப்பை அடைக்கும் போக்கு தமிழில் அரிதானது. தொண்ணுாறுகளின் பின்னர் அப்படியான கதை மாதிரிகளைச் சிலர் முயற்சித்திருந்தனர்.
– துண்டு துண்டுகளாகக் கதை சொல்லல்.
– கதைகளில் தொடர்ச்சியற்ற தொடர்ச்சியைப் பேணல்.
– அகன்ற பன்மைக் கலாசாரப் புள்ளிகளை ஒரே கதைக்குள் அடைத்தல்.
-கதையே இல்லாத கதைகள்எனப் புதிய மாதிரிகளில் கதைகள் வெளிப்பட்டன. ஆனால் அவர்களின் மொழியிலிருந்த இறுக்கமும் மொழித் திருகல்களும் மொழிபெயர்ப்புக் கதைகளின் சாயல்களுடனே வெளிப்பட்டன. அதில் ரமேஷ்-பிரேம் முன்வைத்த கதைமாதிரிகளும் தமிழவனின் பாதிப்புகளோடும் வெளிவந்த ராகவனின் ஆரம்பகாலக் கதைகளில் பரிசோதனை முயற்சிகளும், உருவகங்களும் அதிகமிருந்தன. அந்தக் கதைகளின் வடிவமும் சொல்முறையும் புதிய சாத்தியங்களை அணுகும் முனைப்பிலிருந்தன. மாதிரிவினாத்தாள், கடிதம், நேர்காணல் என அவர் கதைச் சொல்லத் தேர்ந்தெடுத்த வகைமாதிரிகள் இதுகாறும் கதை சொல்லவிருந்த வடிவங்களையும், முறைமைகளையும் கலைத்துப் போட்டுக் கதை சொல்லலின் புதிய சாத்தியங்களை முயன்றுபார்த்தன. அவரின் வடிவ, சொல்முறையிலிருந்த இறுக்கமும் உருவகங்களும் கூடவே அதன் புதிய வடிவமும் பலரிற்குப் புரிந்து கொள்வதில் சிக்கலான ‘உருவகக் கதைகள்’ போலிருந்தன. இராகவன் புனைகதைகளைப் பரந்தும் விரிந்தும் எல்லையற்றுச் செல்லும் பால்வீதியோடு ஒப்பிட்டுக் கொள்கிறார். அவருடைய புதிய கதைகளும் இப்படியான விரிந்து செல்லும் இயல்பில் வெளிப்படுகின்றன. இராகவனின் வெட்டி – ஒட்டிக் ’கொலாஜ்’ செய்யப்படும் கதைமாதிரிகள் யாழ்-பின் போர்ச் சூழலை அணுகுவதற்கான முன்வரைபுகளைக் கொடுக்கின்றன. அவரது கதைகள் குறித்து முன்வைக்கப்படும் ‘புரிவதில்லை’ என்ற விமர்சனத்தையோ அல்லது அவை கதைநீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களின் தொகுப்பு என்ற புரிதலையோ உடைத்து அவருடைய கதைகளைப் புரிந்து கொள்ளும் முனைப்பில் இக்கட்டுரையை எழுதுகி்றேன்.பிளவுண்ட மனிதர்கள், சிதைக்கப்பட்ட பெண்ணுடல்கள், உடல்களைச் சுற்றிப் புனையப்படும் வாதைமிகு கதைகள் மேலுமொரு வன்முறை அமைப்பை நிறுவுவதற்கான அல்லது அதற்கான நியாயப்பாட்டை வழங்குவதற்கான குரல்களும் அதிகமிருக்கும் சூழலில் இராகவன் தன் கதைகளூடே அதற்கும் மாற்றான புனைவுவெளியை உருவாக்குகிறார். சமூக அதிகார அடுக்குகளின் பற்சக்கரங்களுள் நசிபடுபவர்களை, விளிம்பிலிருப்பவர்களை, அடையாளநீக்கம் செய்யப்பட்டவர்களை அவர் தன்னுடைய கதைப்பரப்பினுள் இழுத்து வருகிறார். பாலியற் தொழிலாளர்கள், போராளிகள், கருக்கலைக்கும் எக்ஸ்பேட்கள், பாலிய ற்தரகர்கள், போதைப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் என அவர் காட்டும் கதைமாதிரிகள் புழங்கும் வெளி யாழ்-பின் போர்ச் சூழல். இவர்களுடைய இருப்பை முன்வைத்து யாழ்ச் சமூகச் சீரழிவை, கலாசார வீழ்ச்சியைச் சுட்டி நிற்பவர்களுக்கு இராகவனின் கதைகள் அதிர்ச்சி தருவன. நெருக்கமான அரச அதிகாரத்தினால் கண்காணிக்கப்பட்டும், சிவில் சமூக வெளியெங்கும் அரச / புலனாய்வு அதிகாரத்தினதும் அதை அண்டிப்பிழைப்பவர்களினதும் கண்காணிப்பு வளையங்களினாலும் இறுக்கப்பட்டிருக்கும் வலிமையற்ற உடல்கள் ஒரு புறம், அடிப்படை வாழ்வும், அதற்கான எந்த முனைப்புகளுமற்ற சமூக நீக்கம் செய்யப்பட உதிரிகளின் வன்முறை / மூர்க்கம் மறு புறமுமாக உடல்கள் – கலாசாரம் – போர் – போராளிகள் எனப் பின்னிக்கிடக்கும் சூழலில் இராகவன் சொல்லும் கதைகள் புனைவின் அதிக சாத்தியங்களோடு வெளிப்படுகின்றன.
கலாசார, மதக் குறியீடுகளால் கலவரத்துள் எரித்தும், வெட்டியும் சாய்க்கப்படிருந்த உடல்களை உயிருள்ள மனிதத்தன்மையுடன் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய சதத் ஹசன் மண்டோ கதைகளைப் போலவே இராகவனின் கதைகளும் பின்போர்ச்சூழலைக் களமாக எடுத்துக் கொள்கின்றன. மண்டோ தன் கதைகளில் உடல்களுக்குக் கலாசாரக் குறியீடுகளைக் அழித்துவிடுபவரகவும், உடல்களை முன்வைத்து மனித நேயத்தை உரையாடுபவராகவும் இருந்தார். வன்புணரப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட தன் மகள் ‘ஷரிபானின்’ நிர்வாண உடலைப் பார்த்து வெறியாகி எதிர்ப்படும் உடல்களை வெட்டிச் சாய்க்கும் மூர்க்கத்தோடு கோடாலியைக் கொண்டலையும் காஸிமும், கொலைசெய்யப்பட்டிருந்த மகளைப் பார்த்ததும் கையிலிருந்த கொலைவாளைக் வீசிவிட்டு ‘பீம்லா. பீம்லா’ எனக் கத்தியபடி ஓடும் தந்தையும் வன்முறையின் இரு வேறு மனநிலையைப் பிரதிபலிப்பவர்கள். இராகவன் தன் கதைகளில் கவனப்படுத்தும் விளிம்புநிலையினரும் வன்முறையின், ஒடுக்குமுறையின் மனநிலையை தம் செயல்களினுாடே பிரதிபலிப்பவர்களே. இராகவன் ஆரம்பகாலக் கதைகளில் அதிகமும் பயன்படுத்திய தொன்மம், பகுப்பு, உருவங்களைத் தவிர்த்து விட்டுப் பின் – போர்சூழலைச் சொல்ல ’கொலஜ்’ செய்யப்படும் கதை மாதிரிகளைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார். பத்திரிகையிலிருந்து வெட்டி ஒட்டிய அல்லது செவிவழிக் கதைகளை ஒரே சரடில் இணைத்து விடுகிறார்.
மரணவை
இறுதிப் போரின் இடம்பெயர்தலைச் சொல்லும் கதை. அங்கு உயிரற்ற உடல்களிற்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. கஞ்சிவார்க்கும் இடத்தில் செல்லடியில் சிதறும் உடல்களை ஓரமாக அடுக்கிவிட்டுக் கஞ்சிக்காகக் காத்திருக்கும் மனிதர்களுக்கு ஒருவாய் கஞ்சி கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கின்றது. உயிர் பிழைத்திருத்தலே பெரும்பாடாக இருக்கிறது.மரணம் ஆகாயத்திலிருந்து உலோகக் கோளங்களாக விழுந்து மண்ணில் வெடிக்கிறது. ஷெல் ஒரு முடிவிலியாக எல்லோரையும் பின் தொடர்கின்றது. கைவிடப்பட்ட பதுங்குகுழிகளுள் பிணங்கள் அழுகிக்கிடக்கின்றன. பிணங்கள் உப்பி மிதக்கும் குளத்து நீரை அள்ளி வயிறு நிறைய நிரப்பிக் கொள்ளும் மனிதர்கள். உயிரைத் தம் கைகளில் கொண்டு அலைபவர்களின் பெரும்பாடுகள் எனத் துண்டு துண்டுக் காட்சிகளாக கதைகளில் பதிவாகின்றன. உயிரற்ற உடல்கள் அடையாளமிழந்து, நிறமிழந்து சிதறிக் கிடக்கின்றன. உயிரற்ற உடல்களோடு உயிரற்ற உடல்களாய் கிடந்து தப்பிவிட நினைக்கும் மனிதர்கள் மேல் ’பெக்கோ’ இயந்திரம் மண்ணை அள்ளிக்கொட்டி நிரந்தரமாக மூடிவிடுகிறது.அவர்களது உயிரும் அவர்களுடனே வரலாற்றுச் சிதிலங்களுள் புதையுண்டு போகின்றது. ‘பெக்கோ’ இயந்திரம் வரலாறின் மீது நினைவிழப்புச் செய்யும் கெட்டியான மண்ணை வாரிக்கொட்டியபடி இருக்கிறது. உயிர் உள்ள வலுவற்ற உடல்கள் கதைகளாக மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போகின்றன.
பதினாறாம் இலக்கக் கோவை
சடுதியில் நினைவிழந்து மயங்கும் அரசாங்க அலுவலர் எழுதும் கடிதங்களை வாசித்து அவருக்கு சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யும் பொறுப்பு வாசகரிடம் விடப்படுகிறது. நடிகையின் யோனி மயிரைத் தலையணைக்கடியில் பத்திரப்படுத்தும் இளைஞன், சதைவணிகம் செய்பவர்களைப் பெட்டிசன் போட்டு அகற்றிட முனையும் ஊர்ப் பெரியவர்கள், முள்ளிவாய்க்காலில் சண்டைமுடிந்ததும் பேப்பர் படிப்பதை விட்டுவிட்டவர், ஆண்குறி விறைப்படையும் தன்மையை இழந்தவர்கள், மனநிலை சிதைந்தவர்களின் வதைப்பாடுகள் செவிவழிக்கதைகளாகப் பதிவாகின்றன. சமூகத்தின் உதிரிகளை மையத்தில் வைத்து உரையாடல் செய்யும் கதைகளில் மைய நீரோட்ட மனநிலையின் கற்பிதங்கள் கேள்விக்குள்ளாகின்றன. கதைகளில் புனைவும், நிஜமும் கலந்தும் பிரிந்தும் கிடக்கின்றன. நினைவிழந்து மயங்கிவிடுபவரின் காதில் ஒலிக்கும் வினோதக்குரல்களில் பதிவாகும் செய்திகள் யாழில் அன்றாடச் செய்தியாக இருப்பதையும் தீர்வு பரிந்துரைக்கப்பட வேண்டியது சமூகத்திற்குத் தான் என்பதும் கதையில் நிகழும் உருமாற்றம். முற்றிலும் சம்பவங்களாலும் செய்திகளாலும் பின்னப்படும் கதைகளில் அதிகாரமும் கண்காணிப்பு வளையங்களும் இறுகிக்கிடக்கின்றன. ஒட்டு மொத்த சமூக விளைவைக் கதைப்பரப்புக்குள் அடக்கிவிடும் முனைப்புமாகக் கதைகள் வெளிப்படுகின்றன.
புதுமைப்பித்தன் கதைகள்
காணாமற் போனவர்கள் சிறப்பிதழிற்காக எழுதப்பட்டிருக்கும் கதை உள்ளோட்டமாகப் பல ஊடுபாவும் கதைகளோடு இருக்கின்றது. தமிழின் முன்னோடிக் கதைசொல்லி ‘புதுமைப்பித்தன்’ பெயரை நிஜப்பெயராகக் கொண்டிருப்பவர், பத்திரிகை மட்டும் வாசிப்பவர் எழுதிய கதைகள். மிகுதிக் கதைகளுடன் காணாமல் போய்விட்ட புதுமைப்பித்தனைப் போலவே கதையும் சடுதியில் முடிந்து விடுகின்றது. இராணுவமயமான, அதிகாரத்தினால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகத்தைப் பதிவு செய்திருக்கும் புதுமைப்பித்தன், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், அரசியல்வாதி, சிறை அலுவலர்கள், நெற் கஃபே நடத்துபவர், சிஐடி-யினர், போராளிகள், பாலியற்தொழிலாளர்கள், கருக்கலைப்பு செய்யும் வைத்தியர், சிசுவை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்துபவர், பொடி கரைப்பதில் எக்ஸ்பேர்ட்டானவர் மற்றும் பாலியற்தரகர் எனச் சமூகமட்டத்தின் விளிம்பிலிருப்பவர்களைப் பின்தொடர்ந்து சென்று சமகாலச் சமூகத்தைப் பதிவு செய்கின்றார். இக்கதைகளை நெருக்கமாகப் பின்தொடர்ந்து பதிவு செய்யும் புதுமைப்பித்தன் அதன் பின்னர் காணாமற்போய்விடுவதன் கதை என்னவாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழாமலில்லை.
கதையில் வரும் ஒவ்வொருவரும் சமூக மதிப்பீடுகளிற்கு வெளியிலிருக்கும் தொழிலை/செயலை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்கிறார்கள். மேகலை பாலியற்தொழிலாளி ஆக்கப்படுவதும், சுந்தரம் சிசுவை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்துவதும், அப்பா-அம்மாவின் படுக்கையறையைக் கைத்தொலைபேசியில் பதிவுசெய்யும் மேசன் செல்வராஜாவின் மகன் போன்றவர்களைக் கதைகளில் உலாத்தவிட்டுப் போர்-பின் சூழலில் உள்ள வீழ்ச்சியை ஒப்பாரி வைப்பதைச் செய்வதில்லை ராகவனின் கதைகள். மாறாகச் சமூகமட்டத்தில் முரண்படும் புள்ளிகளைப் போராளிகள் – பெண்கள் – சி.ஐ.டி.யினர், அரசியல்வாதி – சாராயவியாபாரி, தரகர்-பாலியற் தொழிலாளிகள் ஆகியோரை முன்வைத்து உரையாடலைச் செய்யமுனைகின்றன ‘புதுமைப்பித்தன் கதைகள்’.
இராகவனுடைய கதைகளில் வெளிப்படும், விளிம்புநிலையினர் அல்லது வட்டார வழக்கின் போதாமைகள்.
இராகவனுடைய கதைகளில் உள்ள மிகப் பலமும் / பலவீனமானதுமான பகுதி அவர் கதைகளில் கைக்கொள்ளும் யாழ்வட்டார வழக்கு. இதுவே வட்டார வழக்கை முழுமையாகக் கதைகளில் பயன்படுத்துபவர்கள் எல்லோரும் தடுக்கி விழும்பொறி. வட்டார வழக்கு மிகத் திறமாகப் படைப்புக்கான நம்பகத்தன்மையை / புனைவின் செறிவைக் கூட்டும் சாதனமாக இருந்தாலும் அதிலுள்ள ஆணாதிக்க / அதிகாரச் சொற்களை இயல்பானவை எனக் கடந்துபோய்விட முடியவில்லை. நவீனமடையாத, ஆண்மைய மொழியின் ஆண்தடித்தனமும் / சாதியமேலாதிக்கமும் உள்ள யாழ்வட்டார வழக்கைக் கதைகளில் முழுவதும் கைக்கொள்ளும் போது ராகவனிற்கு அதுவொரு எல்லைவரையே படைப்பூக்கத்துடன் செயற்பட அனுமதித்திருக்கிறது. அதில் மலிந்திருக்கும் பெண் உறுப்புகளைச் சுட்டும் வசைச் சொற்கள், ‘கற்பழிப்பு’ போன்ற பெண்ணொடுக்கு முறைச்சொற்கள், சாதியை முன்னிட்ட இழி சொற்கள் மற்றும் விளிம்புநிலையின் மீதான வசைகளும் வாசிப்புகளில், இன்னொரு ஆணாதிக்கமான / அதிகார மேட்டிமையைக்கோரும் வகையிலும் படிக்கப்படும் சாத்தியங்களோடு புனைவில் வெளிப்படுகின்றன. இராகவனுடைய கதைகளை மொத்தமாக மதிப்பிடும் போது இவை அவரையும் மீறிய மொழி-அதிகாரத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. மொழி-அதிகாரம் அதன் வன்முறை குறித்த உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு விளிம்புநிலையினருக்கான சிறப்புச் சொற்களை உருவாக்கக்கோரும் விவாதச் சூழலில் வட்டார வழக்கின் போதாமைகளையும் மொழியின் நுண்ணதிகாரச் செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவையும் நமக்கிருக்கின்றது. இராகவனைத் தொடர்ந்து வாசிப்பவர்களும் அவரது புனைவு வெளியின் அசாத்தியமான தன்மைகளைப் புரிந்து கொண்டவர்களும் அவர் முன்வைக்கும் கதைகள் வட்டாரவழக்கின் போதாமைகளுக்குள்ளும் நல்ல புனைவுக்கான சாத்தியங்களைக் கண்டுகொள்ளமுடியும்.
ஆனால் அவருடைய கதைகள் மூடுண்ட அல்லது தம் வாசல்களை இறுக்கமூடிய கட்டிறுக்கமான சொற்களால் பின்னப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளைத் தொடர்ந்த உரையாடல்களூடே வாசித்துக் கொள்ளமுடியும். ஒவ்வொருவரும் தமக்கான புனைவுவெளியையும் கதைகளையும் உருவாக்கிக் கொள்ளமுடியும். ஆனால் நம் சூழலில் இவை புரிந்து கொள்ள முடியாதவை என்றோ அல்லது அதற்கான எத்தனங்கள் எதுவுமற்ற வெளியிலேயோ தொடர்ந்து செயற்பட வேண்டியிருக்கிறது. கதைகள் தமக்கான புதிய வெளிப்பாடுகளையும் சாத்தியங்களையும் முன்வைக்கின்றன. அவற்றினுள்ளே தேர்ந்த வாசகர்களால் உள்ளோட்டமான கதைகளை உணர்ந்து கொள்ளமுடியும்.
மரணவை – கற்குதிரை 23 | பதினாறாம் இலக்க கோவை – புதியசொல் 2 | புதுமைப்பித்தன் கதைகள் – ஆக்காட்டி 13
ஆக்காட்டி 14