கத்னா – மிஹாத்

மிஹாத்
மிஹாத்

கிளிட்டோரிஸ் சிதைப்பு விவகாரமானது இன்று தமிழகச் சூழலிலும் புதிய விவாதக் கதவுகளைத் திறந்திருக்கும் நிலையில் அதன் நிஜமான அக்கறைகளுக்குப் புறம்பாக இருக்கும் அதிகார நிகழ்ச்சி நிரலையும் கவனத்தில் கொள்ளாமல் விட்டு விட முடியாது.

இந்த நடைமுறை இலங்கையில் பெருவாரியாக இடம்பெறவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்காங்கே மூடப்பழக்கமுள்ள சில சில மக்களுக்குள் இன்னும் இது இருப்பதை முழுமையாக நீக்குவதற்கான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.
இலங்கையிலுள்ள இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள் பல இந்த கொடூர நடைமுறைகளுக்கெதிரான அபிப்பிராயத்தைக் கொண்டவையாகவுமுள்ளன.

அதேவேளை புலம்பெயர் சூழலில் இருந்து இந்த நடைமுறைகளுக்கு எதிரான தூண்டுதல் மிகையான நிகழ்ச்சி நிரலுடன் அணுகப்படுகிறதா எனும் கோணத்திலும் நோக்க வேண்டி இருக்கிறது.

காலச்சுவடு சஞ்சிகையில் லபீஸ் சஹீட் எழுதியுள்ள கட்டுரை அங்குள்ள சில சக்திகளின் திடீர் கரிசனையினால் பெற்றுக் கொள்ளப்பட்டுப் பிரசுரமாகியிருப்பதையும் சந்தேகக் கண் கொண்டு நோக்க வேண்டியதாயுமுள்ளது. ஏனெனில் தமிழகச் சூழலிலுள்ள முஸ்லிம்களையும் இந்த விடயத்தோடு கோர்த்து விட்டு புதிய ஒடுக்குமுறைப் பிரச்சாரம் உருவாகுவதற்கான சூழலையும் யோசிக்க வேண்டும்.

மேலும்
/அரிதாக / என்ற விடயத்திற்கு பர்ஹானும் ஆக்காட்டி சஞ்சிகைக் குழுமமும் ஏனையவர்களும் முன்வக்கும் வியாக்கியானம் தவறானது மட்டுமல்ல உள்நோக்கமும் கொண்டதாயிருக்கிறது. ஏனெனில் அந்தளவு பதட்டம் நிறைந்த தீவிர செயல்பாடாக கிளிட்டோரிஸ் சிதைப்பு இலங்கையில் முன்னெடுக்கப்படவில்லை.

இப்போது விரைவு பெற்றிருக்கும் கிளிட்டோரிஸ் சிதைப்பிற்கு எதிரான பேஸ்புக் பிரச்சாரமானது தேவையான ஒன்றுதான். ஆனால் அதன் உப விளைவான அரசியல் ஒடுக்குமுறையானது கிளிட்டோரிஸ் பிரச்சினையை விட மோசமானதாக மாறவே வாய்ப்புள்ளது.

தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினை இன்று மூன்று தரப்புகளுக்கிடையிலான விளையாட்டாக மாறியிருக்கிறது. அவை –

* புலம்பெயர் சூழலில் உள்ள எளுத்தாளர்களுக்கான பேசு பொருள் ஒன்றை கண்டெடுப்பதினூடாக இங்குள்ள இலக்கியச் சூழலை திசை திருப்பி விடுதல்.

* தமிழக பார்ப்பனியம் சார்ந்த உரையாடலுக்குள் இந்த விடயத்தைக் கொண்டு வந்து அங்குள்ள முஸ்லிம் விரோத அரசியலை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குதல்.

* இலங்கையில் உள்ள பெண் சமூக செயல்பாட்டாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நிரலை வழங்கி அதன் மூலம் வெளியிலுள்ளவர்கள் காரியம் சாதித்துக் கொள்ளுதல்.

அண்மைக் காலமாக இந்தச் செயல்பாடுகளை தொடர்ச்சியாக அவதானித்த அளவில் இந்த வரைபடத்தைத்தான் என்னால் உருவாக்க முடிகிறது.

இலங்கையின் பேசுபொருளொன்று இந்திய சிறுபான்மை அரசியலை அங்கு பாதித்து விடாத வகையில் செயல்படுத்தப்பட வேண்டுமென பேராசிரியர் அ.மார்க்ஸ் குறிப்பிட்டதற்கு இங்கிருக்கும் சிலர் பண்பு வீழ்ச்சியான வார்த்தைகளினால் எதிர்வினையாற்றியதன் பிற்பாடு இந்தச் சந்தேகம் வலுவடைகிறது.

(எனது கருத்துக்களை இங்கிருக்கும் அடிப்படைவாதிகளுக்குச் சாய்வான குரலாக எடுத்துக்கொள்ளாமல் கிளிட்டோரிஸ் சிதைப்புக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஒருவனின் அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ளவும்)

– மிஹாத்

அன்பின் மிஹாத் உங்களுடைய பார்வையும், அதன் விளைவுகளையும் என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. உங்கள் மீதும் அ.மார்க்ஸ் மீதும் மதிப்பிருக்கிறது. இருவருடைய நோக்கங்களையும், செயற்பாடுகளயும் நான்  அறிவேன்.  எனக்குத் தெரிந்து இலங்கையில் மதத்திற்கு வெளியிலிருந்து பேசும் குரல்களில் உங்களதும் ஒன்று.  கத்னா தொடர்பான ஷோபாசக்தி- முஹமட் ஃபர்ஹானுடைய உரையாடலை ஆக்காட்டி  சஞ்சிகையில் பிரசுரிப்பதற்கு  முன்னர்,நாம்  இதைப் பேசுவதிலுள்ள சிக்கல்கள் குறித்து நமக்குள்ளே விவாதித்திருந்தோம். இதை வெளியிலிருந்து நாங்கள் முன்னெடுத்து  உரையாடமுடியாது; அப்படி உரையாடினாலும் அதை இஸ்லாமிய வெறுப்பாகத் திரிக்கும் வேலையையே அடிப்படைவாதிகள் கையிலெடுப்பார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தோம். இதற்கு முன்பு பெளத்த பேரினவாதிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கத்னா பற்றிய உரையாடலைப் பயன்படுத்தியதைப் பற்றியும் உரையாடியிருந்தோம்.

வேறு வெளிகள் இல்லாததால்  ஒரு காத்திரமான உரையாடலைக் குறைந்தது சிற்றிதழ் வெளியிலாவது கொண்டுவரும் நோக்கில்தான் இதைப் பிரசுரித்திருந்தோம்.  ஆக்காட்டியில் தலித்தியமும், தமிழடிப்படைவாதம் குறித்தும் வலிமையாகவே பேசிவருகிறோம். இலங்கையில் தலித்தியம் போன்ற விளிம்புநிலை உரையாடல்களை வெளிப்படையாகச் செய்கின்றோம்.  யாழ்ப்பாணத்தாரின் சாதி வெறி, தலித் தன்னுணர்வை உரையாடும் போதெல்லம் அடிப்படைவாதிகளினதும், தேசியர்களினதும் கடைசிப் புகலிடமாக ‘ இவர்கள் சாதி முரண் பாட்டைக் கூர் தீட்டுகிறார்கள், தேவையில்லாத பிரச்சனையை ஊதிப்பெருப்பிக்கிறார்கள்’ என்ற வகையிலேயே அவதூறுசெய்வார்கள். அவர்களுக்குக் குறைந்த பட்சம் சாதிய ஒடுக்குமுறை இருக்கிறது என்பதனை  ஏற்றுக்கொள்வதில் கூடத் தயக்கம் இருக்கிறது.

ஆனால், கத்னா அப்படியான பிரச்சனை அல்ல முஸ்லீம்களின் இரட்டை நெருக்கடி, உலகளாவிய விளைவு எல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் யாரோ ஒருவர் பேசியாக வேண்டும் என்ற ஒரு பொறுப்பிற்தான் உரையாட முற்பட்டோம். பலர் இதை ஒரு உரையாடலாகக் கூடச் செய்ய தயார் இல்லாதவர்களாகவே இருந்தார்கள் என்பதை நீங்களும் ஃபேஸ்புக்கில் அவதானித்து இருப்பீர்கள். அ.மார்க்ஸின் கருத்தின் நோக்கத்தை என்னால் இந்தியச்சூழலில் வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைக் காலச்சுவடு போன்ற  இஸ்லாமிய வெறுப்பு, தலித் விரோதப் பத்திரிகைகள் கையிலெடுத்திருப்பதன் நோக்கம் நாம் அறியாததல்ல. லபீஸ் காலச்சுவட்டில் எழுதிய  கட்டுரையையும் வாசித்தேன். அவர்  மதத்தினுள் இருந்து மட்டுமே கத்னாவை அணுகியிருக்கிறர்.

பேஸ்புக் உரையாடல்களில் ஓரிரு விதிவிலக்குகள் தவிர இதைப் பெண்கள் மறுத்ததாக நான் வாசித்திருக்கவில்லை. ஆண்களே நக்கலாகவும், மூர்க்க மாகவும் மறுத்திருந்தார்கள்.இதை முன்னிட்டுத் தொடர்ந்து விவாதம் செய்யும் பெண்கள் மற்றும் கத்னா பற்றிய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய பெண்கள் ஏற்கனவே எழுத்தாளர்களாகவும், செயற்பாட்டாளர்களாகவும் கருத்துகளை முன் வைப்பவர்கள் தான்.ஆகவே இவர்களது கேள்விகளை எதிர்ப்புகளை மறுத்துவிட்டும் நீங்கள் போக முடியாது. ஆக்காட்டியால் வெளியிடப்பட்ட இந்தச் சிறிய தொகுப்பும் உரையாடலுக்காக பெண்கள் சந்திப்பிலேயே வழங்கப்பட்டது. கத்னா குறித்துப் பெண்கள் பேசுவதை நாம் காது கொடுத்துக் கேட்கத்தான் வேண்டும்.  ஆனால் இங்கு அவர்களுடைய குரலை  முறிக்கும் வேலையையே பலர் செய்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக, அதைத் தெரிந்தவர்களாக உரையாடல் செய்வதை, அவர்கள் பேசுவதை யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள் , அவர்களால் சொந்தமாகச் சிந்தித்துச் செயற்பட முடியாது, அவர்களின் அறியாமையை  பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் எந்தக் காலத்துச் சிந்தனை? அவர்கள் தங்களுடைய பிரச்சினையை இரத்தமும்  சதையுமாகப் பேசும் போது, பலருடைய முற்போக்கு, பின்நவீனத்துவ ஆடைகள் எல்லாம் உதிர்ந்து அம்மணமே எஞ்சியிருக்கிறது. Sajeeth Amsajeeth, தீரன். ஆர்.எம் நௌஷாத் போன்றவர்கள் தங்கள் மன வக்கிரங்களை எல்லாம் வெளிப்படையாகவே கத்னா-வின் பெயரில் இறக்கி வைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த உரையாடலின் அடிப்படையே புரியவில்லை. இதை வெறும் மதவாத எதிர்ப்பாக மாற்றிட முனைகின்றனர்.

இந்தப் பிரச்சனையில் ரியாஸ் குரான மிகுந்த பரிதாபத்திற்குரிய பாத்திரம் ஏந்தியிருக்கிறார். அவருடைய பன்மைத்துவ உரையாடற் களங்கள் எல்லாம் வெற்றுக் கதைகளாக பேஸ்புக் சுவரில் முட்டிமோதுகின்றன. கத்னா குறித்து அவருடன் உட்பெட்டியில்  முதன் முதலில் உரையாடிய அடுத்த நொடியே பேஸ்புக்கில் ஒரு குற்றவுணர்வுடன் ஒரு பதிவை இட்டிருந்தார் கூடவே ஒய்த்தா மாமி ஒருவரின் அனுபவங்களை  நேர்காணல் / உரையாடலக வெளியிடப் போவதாகவும் பெருமையாக அறிவித்திருந்தார். இதுவரை அப்படி எதும் பகிர்ந்ததாக தெரியவில்லை. இப்போது இந்த விவாதம் அ.மார்க்ஸ் வழியாக திரும்ப உரையாடல் வெளிக்கு வந்தபோது ‘ஒரே நாளில்’  துடிப்பாக ஊரிற் தகவல் சேகரித்திருக்கிறார். நல்ல விசயம். அதை வெளியிட முன்னர் அதற்கு ஒரு முன்னோட்டம் வேறு கொடுத்திருக்கிறார். அந்தப் பதிவில் தீரன். ஆர்.எம் நௌஷாத்-ன் பின்னூட்டத்தை வாசித்துப் பாருங்கள் இந்தப் பிரச்சனையை எப்படி மேம்போக்காக இவர்கள் அணுகியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அ.மார்க்ஸுடைய அந்த மேலோட்டமான பதிவைப் பல அடிப்படைவாதிகளும் பகிர்ந்து தமக்கான கருத்தியற் தளத்தை நிறுவிக் கொள்கிறார்கள் என்பதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அ.மார்க்ஸ் போன்ற பொறுப்பு மிக்கவர்கள் இந்தியாவின் இந்துத்துவ அச்சத்தைக் காட்டி இதைக் கடந்து போய்விட முயல்வதையும்,  அவருடைய பதிவிலுள்ள போதாமைகளையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. அவ்வுரையாடலின் பதிலில் மூன்று பெண்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது எனச் சொல்லும் அ.மார்க்ஸ் வேறு இருவருடைய வாக்குமூலங்களை வேத வாக்காக நம்பி அப்படியே பிரசுரித்திருப்பதன் பொறுப்பின்மையையும் நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.

*நான் குறிப்பிட்ட நெளஷாத்தின் பின்னூட்டம் றியாஸ் ஆபாசம் எனச் காட்டியதால் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.

Scroll to Top