01
ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய இயக்கம்’ என்றபடி எழுந்து சென்று என் அறையின் கண்ணாடிச் சன்னலைத்திறந்து, கஞ்சாவைப் பற்றவைத்தாள். மெல்லிய தீக்கங்கு அவளுடைய முகத்தில் எழுந்து அணைந்தது. சுவாரசியமற்ற அவளுடைய கதையின் உயிர் அதன் முடிவிலிருக்கிறதென்று நம்புவதால் உங்களுக்கும் சொல்ல நினைக்கிறேன்.
அவளுடைய அப்பாவின் இரகசிய இயக்கம் குறித்த ஆதாரமெதுவும் இப்போது என் கைவசமில்லை. அவளிடமும் – தாயின் பூப்போட்ட டிரங்குப்பெட்டியில் – பச்சைநிற ரசீது மட்டுமே ஆதரமாக உள்ளது. அவளுடைய அம்மாவின் நகைகளை வங்கியில் அடைவுவைக்கக் கையகப்படுத்திய மிக இரகசிய இயக்கத்தின் தலைவரான அவளுடைய அப்பா கையெழுத்திட்டுக் கொடுத்த ரசீது. முதலாமிலக்க ரசீதில் அவளது அம்மாவிடமிருந்து கையகப்படுத்திய தங்க நகைகளும், நிறைகளும் துல்லியமாகக் அளந்து குறிப்பிடப்பட்டுள்ளன. கையகப்படுத்திய தங்க நகைகள் திரும்ப வராவே வராதென்பது சில நாட்களிலே உறுதியாகத் தெரிந்தும் இத்தனை மைல்தூரம் கடல் கடந்து பிரான்ஸ் வந்த பின்னரும், நைந்துபோன பச்சை
ரசீதை மிகப்பத்திரமாகக் ’கிளீன்கட்’ அடித்து வைத்திருப்பதன் இரகசி
யம் என்னவாக இருக்கக் கூடும்? ஊரின் முதல்மனுசியாக முச்சந்திகளில் சிலாகிக்கப்பட்ட அவளுடைய அம்மா பின்னொருபோதும் நகைகளை அணிந்து கொள்ளவில்லை. சம்மு மாமாவுடனான திருமணப்பேச்சின் போதும் மஞ்சள் வேரில் முடிந்த மஞ்சள் நூலைத் தாலியாகக் கட்டச் சம்மு மாமா சம்மதித்த பின்னர்தான் திருமணத்திற்கே அம்மா ’ம்’ சொன்னாராம்.
அவள் பருமட்டாகச் சொன்ன ஆண்டுகளில் ஊரில் வந்த பத்திரிகைகளில் மூலை முடுக்கெல்லாம் தேடிச் சலித்துவிட்டேன் ரகசிய இயக்கம் குறித்த துரும்புக் குறிப்பும் கிடைக்கவில்லை. ஷோபாசக்தி தன்னுடை ‘f இயக்கம்’ கதையில் பட்டியலிட்ட ஈழப்போராட்ட இயக்கங்களின் பட்டியலிலும் அவளது அப்பாவின் மிக இரகசிய இயக்கம் குறித்த தகவலில்லை என்பது மிகவும் ஆச்சரியமானது. ஷோபாசக்தியின் புனைவுகளுக்கும் தப்பிவிடும் கட்டுக்கோப்பும், மிக இரகசியத்தனமும் நிறைந்த இயக்கமாக அது இருந்திருக்க வேண்டுமென்பது என் அனுமானம். ஆரம்பத்தில், ஊரின் வெள்ளாளர் தெரு தொடங்கும் பழைய வைத்தியசாலையின் கைவிடப்பட்ட கட்டிடத்தினுள் அப்பாவின் மிக இரகசிய இயக்கம் இயங்கியதாகச் சொன்னாள். பின்னர்ப் பெரும்பாலும் அவளுடைய வீட்டின் விறாந்தையிலே இரகசியக் கூட்டங்கள் நிகழ்ந்தன. அப்பாவுடைய பன்முக ஆளுமையைக் குறித்தும், தீர்க்கதரிசனமான முடிவுகளைச் சிலாகித்தும் அவரது நண்பர்கள் -ரகசிய இயக்க உறுபினர்கள் என ஊகிக்கலாம் – மிக அண்மையில் லண்டனில் வெளியிட்ட 380 பக்கப் புத்தகத்தையோ அல்லது பச்சைநிற ரசீதையோ பார்த்து உறுதிப்படுத்திவிட்டுக் கதையைச் சொல்லும் பக்குவம் இன்னும் கைகூடிவராததால் இந்தக் கதையை இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். ஊரிலிருப்பவர்களுடன் கதைத்துத் தகவல்களைச் சரி பார்க்க முடியாதபடி என்னை விலக்கிவைத்திருப்பதாலும் என்னால் கதையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. எங்களூரில் ஊருப்பட்ட இயக்கங்களும் தலைவர்களும் வாழ்ந்ததற்கான அத்தனை சாத்தியங்களுமிருப்பதாலும், விழுந்தால் ஒரு கேணலின் காலில் எழுந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தமுமிருப்பதாலும் இந்தக் கதை முப்பது வருடங்களிற்கு முன்னர் வெங்காயத் தோட்டங்களும் பூவரசம் வேலிகளும் சவர் தண்ணீர் கிணறுகளும் நிறைந்திருந்த அவளுடைய சிறுபட்டணத்தில் நிகழ்ந்திருப்பதற்கு அத்தனை சாத்தியங்களுமிருப்பதை வலுவாக நம்புவதாலும் மேற்கொண்டு சொல்லுகிறேன் கேளுங்கள் இதுதான் கதை.
அவள் எனறைக்கு வந்த அன்று தான், ஸிசிலியா வேகா இனிமேல் நீலப்படங்களில் நடிக்கப்போவதில்லையென்று தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார். இருபத்தி மூன்றாவது வயதில் அவர் இப்படிப் படக்கென்று ஓய்வை அறிவித்ததில் என்னுடைய முதன்மை இலட்சியம் ஒன்று தளர்ந்த துயரத்தில் அறையை விட்டு வெளியே போவதில்லை என்ற முடிவோடு கட்டிலில் படுத்திருந்தேன். ஸிசிலியா வேகாவுடன் நடிக்கும் ஒப்பந்தம் சரிவருவதற்கான சாத்தியங்கள் சில வாரங்களுக்கு முன்னர்த் தடித்த பச்சைத்துணியின் பின்னால் கிசுகிசுப்பாகப் பேசப்பட்டிருந்தது. கதைசொல்லியாக நாற்பது வயது வரை காலம் தள்ளி, இரண்டு பெண்களும், ஆணுமாக மூன்று குழந்தைகளையும் பெற்றுவிட்டு ஓர் இளஞ்சிவப்பு மாலையிலிருந்து நீலப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோது ‘குமர்ப்பொட்டையளை வைச்சுக்கொண்டு வேசையாடதை வேசைமோனே’ எனக் காறியுமிழ்ந்து தன் தலையிலடித்தபடி பிரேமா வீட்டைவிட்டுத் துரத்தியதைத் தவிர்த்து வாழ்வில் பெரிதாகவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. அபரிமிதமான ஒளிவெள்ளத்தின் முன்னால் நிர்வாணமாக நிற்பதும் வாதைதருவதாக இருந்தது. கதைசொல்லியாகச் சிறிதும் வெளிச்சமற்ற இருளுள் காலம் தள்ளுவதிலும் பார்க்கச் சற்று ஆசுவாசமாயிருந்தது ஒளிவெள்ளத்தின் முன்னால் நிர்வாணமாக நிற்பது. நீண்ட நேரத்திற்கு விந்தைக் கட்டுப்படுத்துவதையும், உச்சக் கணத்தில் விந்தை வெளியேற்றுவதையும் தேர்ந்த கலையாக அதீத விளையாட்டாக்கும் நுட்பமாகக் கைக்கொண்டதன் பின்னர் நீலப்படங்களிலான நடிப்பும் இயல்பானதாக மாறிவிட்டிருந்தது.
எழுபது வயதின் பின்னரும் இளமை ததும்ப நீலப்படங்களில் நடிக்கும் ரொஸ்லினுடைய வீட்டின் ஒடுங்கிய மூலையறைக்குள் சுருண்டு கிடப்பதுதான் மிகவும் அசூசையானது. அவருடைய பழைய தயாரிப்பு நிறுவனத்தின் நிறமுதிர்ந்த லேஸ் வைத்துத் தைத்த தடித்த உள்ளாடைகள், மெல்லிய மயிர்த்தோல் வார்கள், பிளாஸ்டிக் உறைகள், தடித்த வளவளப்பான ஆண்குறிகளுடன் நிறைந்திருக்கும் பழைய தமிழ்ப் புத்தகங்களும், நாளிதழ்களும், புகையும் கஞ்சாவும் போதவே போதாது அறையின் இறுக்கத்தைப் போக்க. அந்த ஒடுங்கிய அறையின் இறுக்கத்தை உடைக்கப் பொலித்தீன்பையில் சுற்றிய கஞ்சாப்பொட்டலத்துடனும், இந்தச் சிறிய கதையுடனும் வந்தவள் அவள்.
ரொஸ்லின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் எப்போதும் சின்னவனே என்றுதான் என்னை அழைப்பார். அன்றும் ‘சின்னவவே, சின்னவனே’ என இரண்டுமுறைகள் கூவி அழைத்தார். அவருடைய குரல் தடித்துக் கரடுமுரடாயிருந்தது. ‘உனக்காக விருந்தினர் ஹாலில் காத்திருக்கிறார்’. ஸிசிலியா வேகா கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளும் வழிதெரியாதிருந்த எனக்கு விருந்தினரைச் சந்திக்கும் மனநிலை இருக்கவில்லை. பதிலேதும் சொல்லாமல் ஸிசிலியுடைய ‘அறுப்பாதாயிருந்தால் என் கழுத்தை அறுத்துக் கொள்ளுங்கள், எடுப்பான முலைகளில் கை வைக்காதீர்கள்’ என்ற அறைகூவலை திரும்பத் திரும்ப அலைபேசியின் சிறிய திரையில் பார்த்தபடியிருந்தேன். மாடிப்படிகள் தடதடக்கும் ஓசை கேட்டது ரொஸ்லீனுடைய இடுப்பை பிடித்தபடி நின்று நிதானித்து வரும் மெதுவான நடையில்லாமல் துள்ளலான நடையாக இருந்தது.
கறுத்த வழுவழுப்பான உடல்வாகு. கன்னத்தில் பூனைமுடிகள். அவளுடைய கூர் மூக்கின் நுனியில் சிறிய தசைத்திரட்சி புடைப்பாக இருந்தது. அவளுடைய பிரபலமான நீலப்படத்தில் உடல் தளர்ந்த வயோதிகன் இவளை மூர்க்கமாகப் புணர்ந்த போதிருந்த உணர்ச்சி ததும்பும் முகம். வயோதிகனது தளார்ந்த தசைகள் தொங்கும் பெலமான கைகள் இவளது தொண்டையை அழுத்திப் பிடித்திருந்தது. அவனுடைய மனைவி (ரோஸ்லின்) சமயலறையிருந்து அவனது புணர்ச்சியைக் கவனித்தபடியிருந்தாள். இவளது கழுத்தில் மெல்லிய தோல்வாரினைச் சுற்றி அதில் இரும்புச் சங்கிலியப் பிணைத்துக் கட்டிற்காலில் கட்டிவிட்டிருந்தார்கள். அந்த நீலப்படத்தின் மூன்றாவது நிமிடத்தின் நான்கவது நொடியிலிருந்து உடல் தளர்ந்த வயோதிகன் உப்பித் தளர்ந்த தன்னுடைய ஆண்குறியை அவளது வாயில் மூர்க்கமாகச் செலுத்தி இயங்கிய ஏழு நிமிடங்கள் வரையும் அவளுடைய மூக்கு நுனியிலிருந்த புடைப்பான தசைத்திரட்சியையே ரசித்ததாக அவளிடம் சொன்னேன். ‘அது அப்பாவின் உருகிய தசை’ என்றபடி மூக்குநுனியைப் புறங்கையால் அநிச்சயாகத் துடைத்தாள். புடைத்திருந்த தசைத் திரட்சி சுற்றுப் பெருத்தது போலிருந்தது.
02.
அப்பா நீண்டநாள்களுக்குப் பின்னர்த் திரும்பிவந்தபோது அம்மா இரண்டாவது முறையாகக் கருத்தரித்திருந்தார் அவருடைய வயிறு குட்டியாக மேடிட்டிருந்தது. அம்மாவின் மேடிட்டிருந்த வயிற்றைப் பார்த்தபடி இனி, தான் ஒரு போதும் திரும்பப் போகப்போவதில்லை என்றவர் ‘அந்த மூடர்கள் வழிமுறையை மாற்றியாக வேண்டும் இல்லையென்றால் கருவிலேயே அழித்துவிவார்கள்’ என்றார். அப்பாவின் இயக்க வேலைகள் தடைப்பட்டுப் போயிருந்ததில் வீட்டின் சின்னறைக்குள்ளே முடங்கிக்கிடந்தார். ஒரு நாள் மதியம் சாப்பிட்ட பின்னர்ச் சாவகாசமாக மாமர நிழலின் கீழிருந்த ஈஸிச்செயரில் தடித்த மட்டையுடைய புத்தகமொன்றை வாசித்து முடித்ததும் மஞ்சள் கோளை வழிய ஓங்காளித்துச் சத்தியெடுத்தார். அன்றிலிருந்து சாப்பிடும் சாப்பாடு ஏதும் அவரில் ஒட்டாமல் அவருடல் மெலிந்து கடுதாசி போலாகியது. சாப்பிட்ட நொடியில் அவர் வாய்க் குதமாக மாறிச் சத்தான சாப்பாடுகளைச் சக்கையாக வெளித்தள்ளியது. அதன் பின் தான் நாங்கள் உறங்கிய பின்னர் அப்பா அடிக்கடி இருளுள் தொலைந்து போகத் தொடங்கினார். அதிகாலையில் நானும் அம்மாவும் தரவை, வெட்டுக்குளம், இடிந்த பள்ளிக்கூட மைதானம் எங்கும் அப்பாவைத் தேடவேண்டியிருக்கும். சில நாட்களில் அதிகாலையில் பால் கறக்க வரும் சின்னமணியும் அப்பாவைத் தேட வருவார். அவருடைய வெள்ளை முரசு தெரியப் பெரிதாகச் சிரித்துக் கதை சொல்லுவார். ‘அம்மான் நாடு பிடிக்க வெளிக்கிட்டார் அவரை நாங்கள் பிடிக்க வேண்டிக்கிடக்கு’ அம்மா கொடுப்பினுள் சிரித்தபடி தன் பாவாடையை முழங்கால்கள் வரை தூக்கிப் பிடித்தபடி மேடிட்ட வயிறை மெதுவாக முன் தள்ளியபடி வெங்காயத்தோட்ட வரப்புகளில் அப்பாவைத் தேடித்திரிவார்.
அன்று, சிதைந்து உருக்குலைந்த சந்தையின் பின்கோடியிலிருந்த அபூபக்கரின் இறைச்சிக்கடையின் முன்னால் ஆடாமல் அசையாமல் அப்பா நின்றிருந்தார். பச்சை இரத்தத்தின் வாடையும், நுளம்புகளின் சிறகொலியும் அப்பாவைச் சூழ்ந்து நிரம்பிருந்தது. தவிட்டு நிறக் கழிவுநீர் வெளியாகும் பிளாஸ்டிக் குழாயின் அடியில் தடித்துக் கெட்டியாகிய இரத்தம் தேங்கிக்கிடந்தது. பின்னொரு நாளின் கடுமிருளில் திட்டுத் திட்டாக வெண்புள்ளிகள் அடர்ந்திருந்த அபூபக்கரின் மழித்த தலையைச் சிவப்பான இறைச்சி வெட்டும் மரக்கட்டையில் அழுத்திவைத்து ஊரார் அரிந்த நாளிலும் அதே பச்சை இரத்தத்தின் வாசனையே நிரம்பியிருந்தது. அபூபக்கர் கடையின் நிறமுதிர்ந்த பச்சைநிற பெயர்ப் பலகையில் எழுத்துகள் மங்கலான கரியகோடாக மிஞ்சியிருந்ததால் அதன் பெயரை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. சுழித்தோடும் மங்கலான கோடுகளை நூற்றாண்டுகளின் சுவடு என்றபடி கனமான இறைச்சித் துண்டுகளைப் பழையபேப்பரில் மடித்துப் பொட்டலமாக் கட்டித்தருவார் அபூபக்கர். அன்று அப்பாவின் வெள்ளைக் கோடுகளுடைய நீலநிறச் சாரம் இடுப்பில் நிற்காமல் நழுவியிருக்கத் தொய்ந்த அவருடைய ஆண்குறி நரை மயிர்ச்சுருளினுள் சிதைந்த குருவிக்கூடு போலக் காலைவெய்யிலில் மஞ்சளாய் மினுங்கியது. அம்மா பதட்டத்துடன் நழுவியிருக்கும் சாரத்தை இடுப்பில் இறுக்கிச் சுற்றி முடிந்துவிட்டார். அது வழுக்கியபடியிருந்தது. அப்பா தொலைந்துபோவதைப் பொறுக்கமுடியாத அம்மா இரவில் அப்பாவின் இடதுகை மணிக்கட்டில் மந்திரித்துக் கட்டியிருந்த அம்மன் கோயில்நூலில் கனமான நாய்ச் சங்கிலியைக் கொழுவி சின்னறை சன்னலில் பலமாகக் கட்டிவிட்டார். அவருடைய மணிக்கட்டில் நாய்ச்சங்கிலி அரைந்து, அரைந்து தோல் சிவந்து புண்ணாகியிருந்தது. புண்வெடித்து எலும்பில் இரும்பு அரைந்தத போதும் அம்மா துருவேறிய இரும்புச் சங்கிலியை நீக்கிவிடவில்லை.
சன்னலில் கட்டியிருந்த சங்கிலியின் கால்வட்டத்தில் அப்பாவின் இயக்கம் முடங்கிக்கிடந்த இளஞ்சிவப்புநிறப் பின்மாலைகளில் மிக இரகசிய இயக்கத்தின் உருவாக்கமும் செயற்பாடுகளையும் குறித்தே அதிகமும் சிந்தித்திருந்தார் என்பதை லண்டனில் வெளியான புத்தகத்தை வாசித்தே தெரிந்து கொண்டேன். பெருமெடுப்பிலான திடீர்த் தாக்குதல்களின் கவர்ச்சிகரமான தோல்விகளையும், அவை வெறும் உடல்களின் வாதையாக எஞ்சிவிடும் கோரத்தையும் தனது நாளேட்டில் பிள்ளையார் சுழியின் கீழ் நுணுக்கி நுணுக்கி எழுதியிருந்ததை இப்போதும் என்னால் துல்லியமாக நினவுகூர முடியும். கொலைகார ஆயுதங்கள் துருவேறி அழிந்தாலும் அவைகளை இயக்கும் மூளைகள் உயிர்ப்புடனிருக்கும் அவலத்தையும் அடிக்கோட்டுடன் குறித்துவைத்திருந்தார். அப்பா சுட்டுக்கொலை செய்யப்படவிருந்த அந்தக் குளிரிரவில் தனது நாளேட்டின் சில பக்கங்களைத் கிழித்துத் தீயில் வாட்டியிருந்தார். நான் அதிகாலையிலே அப்பாவின் அறையைத்திறந்த போது தாள்களின் கருகல்வாசனையே முகத்திலறைந்தது. மங்கலான புகைமூட்டத்தினுள் அப்பாவின் உடல் கட்டிலில் கிடந்தது. மார்பிற் சுடப்பட்ட குண்டு மிகச்சரியாக அவரின் இதயத்தைத் துளைத்து முதுகால் வெளியாகி கட்டிலின் பஞ்சு மெத்தைக்குள் புதைந்திருந்தது. மேற்சட்டையில்லாத திறந்த மார்பில் சில குருதித் துளிகள் கட்டியாக இறுகிக்கிடந்தன. அவரது தளர்ந்த உடலை, அம்மா புரட்டிப் போட்டபோது வெள்ளை மெத்தையில் கடும் செவ்வரத்தம்பூவிதழ் வடிவில் ரத்தம் உறைந்திருந்தது. துப்பாக்கி அவரது வலது பக்கமாக நிலத்தில் கிடந்தது. அவருடைய எதிர்வுகூறல்கள் ஆருடங்களாகவும் நம்பமுடியாத கற்பனைகளாகவும் அன்று இருந்தன. இன்று அவை நிகழ்ந்துவிட்ட உண்மைகளாக இருப்பதன் பின்னால் அப்பாவின் துலக்கமான அறிவிருந்ததை அந்தப் புத்தகத்தில் அய்யந்திரிபுற நிறுவியதை நான் ஆச்சரியத்துடனே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்பா சங்கிலியிற் பிணைக்கப்பட்டுச் சுவரை உற்றுப்பார்த்திருந்த இருள் சூழந்த நாட்களில் தன்னுடைய இரண்டு காற்தாவலில் முப்பது வருடங்களையும் கடந்து சிந்தித்திருக்கிறார் என்பதை இப்போதும் என்னால் நம்பமுடியவில்லை. ‘உனக்குத் தெரியுமா அந்த நாட்களில் அப்பாவின் முகம் மிகவும் ஒளிபொருந்தியதாக இருந்தது, அறிவாளியைப்போல எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்தபடியிருப்பார். வீதியில் விரைந்து செல்லும் வாகனங்களை, கொடியில் உலரும் உள்ளாடைகளை, பற்றவைக்காத சாம்பல் மண்டிய அடுப்பை, அம்மாவை, வேலியில் ஊரும் ஓணானை குறிப்பாக மிக மெதுவாகத் திறந்து மூடும் பின்வாசலின் அலம்பற் படலையை’.
அப்பாவின் கூர்ந்து பார்க்கும் வழக்கம் தன் மலத்தினைக் கைகளால் அளைந்து அளைந்து அதை நெடுநேரமாகக் கூர்ந்து பார்த்த நாளோடு முடிவிற்குவந்தது. மலத்தை அளைந்தபடியிருந்தவரை உடைந்த பிளாஸ்டிக் வாளியில் நீரைவாரிக் குளிப்பாட்டினேன். ஈரப்பலா மரநிழலின் குழுமையில் குளிரேறிக்கிடந்த நீரை உடலில் ஊற்றியதும் அப்பாவின் உடல் சிலிர்த்தது கால் மயிர்கள் குத்திட்டு நின்றன. அவரது கையின் நகக்கணுக்களில் தங்கிவிட்ட மலத்துணிக்கைகளைத் தென்னம் பொச்சினால் அழுந்தித் தேய்த்துக் கழுவினேன். மிச்சமிருந்த துணிக்கைகளை ஈர்க்கினால் நகக்கணுக்களிலிருந்து உருட்டி எடுத்தேன். அப்பாவின் நீண்ட மெலிந்தவிரல்கள் குளிர்ந்த நீரால் வெளிறிக் குறண்டிக்கிடந்தன. வெளிறிய விரல்களை என்னுடைய பிடியிலிருந்து சடுதியில் இழுத்தவர். ‘எல்லாம் முடிவுக்கு வருகிறது செல்ல மோளே அபூபக்கர் விடுதலைக்கான பீங்கான் பாத்திரத்தோடு வருகிறான்’ என்றபடி நிமிர்ந்து பின்வாசல் அலம்பற்படலையைப் பார்த்தார். அபூபக்கர் திட்டுத் திட்டாக வெண்புள்ளிகள் அடர்ந்த மழித்த தலையின்மேல் நிழலிற்கு வாழையிலையைப் பிடித்தபடி வந்தார். மறுகையில் துணிப்பையிருந்தது. அழகான வெண்தாடி மார்பு வரை நீண்டிருந்தது. வீட்டுத் திண்ணையின் நிழற்பக்கமாக அமர்ந்தார். துணிப்பையுள்ளிருந்து சித்திர எழுத்துக்களுடனிருந்த பீங்கான் கோப்பையையும், பிளாஸ்ரிக் நீர்ப்போத்தலையும் எடுத்தார். பீங்கான் கோப்பையில் நீரை தளும்பத்தளும்ப நிரப்பினார். சித்திர எழுத்துக்கள் நீரில் அலைந்தன. ஓரமாகக் கிடந்த ஈர்க்கினால் நீரைக் கலக்கி எழுத்துகளைக் கரைத்தார். கரிய சித்திர எழுத்துகள் கரைந்ததும் நீர் கருமையாகியது. அப்பா அதனை வாங்கி ஒரே மடக்கில் குடித்துவிட்டு மீதியை என்னிடம் தந்தார். நான் பீங்கானின் விளிம்பில் வாயை வைத்து நீரை ஒரு மிடறு குடித்தநொடியில் அம்மா பீங்கான் கோப்பையைப் புறங்கையால் பலமாகத் தட்டிவிட்டார். பீங்கான் கோப்பை அலம்பற் படலையை, குச்சொழுங்கையை, நீண்ட தார்வீதியைக் கடந்து எங்கோ தொலைவில் திரும்ப ஒட்டவே முடியாதபடி சுக்குநூறாக உடைந்து நொருங்கியது. ‘அப்பாவிற்கு விடுதலையளித்த இசும்தண்ணி, எனக்கு விந்தின் வாசனையையே நினைப்பூட்டியது’ என்றுவிட்டுச் கஞ்சாவை ஆழமாக உள்ளிளுத்துக் கொண்டாள்.
அன்றிரவு நெடுநாட்களாகப் பிரசவிக்கப்படாமலிருந்த அம்மாவின் கரு படுக்கையிலேயே கரைந்தது தொடையிடுக்கில் குருதிப் பிசுபிசுப்பாகக் கசிந்தது. குருதியிற் கலந்திருந்த சிறுதசைக் கோளங்கள் கட்டிலிலிருந்து வழிந்து வீடுமுழுவதும் நிரம்பியிருந்தன. அம்மாவும் நானும் உடைந்த பிளாஸ்ரிக் வாளியில் நீரையள்ளி வீட்டை அலசிக் கழுவினோம். கழுவித்துடைத்த வீடு பிரகாசமாகவும், ஒளிபொருந்தியதாகவும் இருந்தது. அதன் பின்னர் அப்பா மிகத் தென்பாகித் தனது இரகசிய இயக்க வேலைகளை உத்வேகத்துடன் ஆரம்பித்தார். சின்னறையில், விறாந்தையில் கூட்டங்களை இரவு, பகல் பாராது நடத்தினார். திட்டங்கள் ரகசியமாகத் தீட்டப்பட்டு அப்பாவின் நாளேட்டில் பாதுகாக்கப்பட்டன. சின்னறை யன்னலை ஒட்டியதாகத் தனது எழுத்து மேசையை இழுத்துப் போட்டார். சில நாட்களுக்கு முன்னர் சங்கிலியால் பிணைந்துகிடந்த சன்னலின் எதிரில் சவகாசமாக அமர்ந்திருந்து நாளேட்டின் பக்கங்களில் பிள்ளையார் சுழியின் கீழ் நுணுக்கி நுணுக்கி எழுதத் தொடங்கினார்.
03.
மற்ற எல்லா இயக்கங்களையும் அவர்கள் தடைசெய்திருக்கும் அறிவிப்பு வந்தபோது அப்பா ஈரப்பலா மரநிழலின் கீழிருந்த கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். முதுகை ஈரப்பலா மரத்தில் அழுத்தி நெடுநேரம் தேய்த்தார். நீண்ட ‘லவுட்-ஸ்பீக்கர்’ கட்டிய ஆமட்கார் முச்சந்தியிலிருந்து ஒரு நொடியேனும் மாற்று இயக்கங்களில் வேலை செய்திருந்தால் சரணடையச் சொல்லியது, பொதுமன்னிப்பு இருப்பதாகவும் பயமில்லாமல் வரச்சொல்லி எச்சரிக்கை செய்தது. அதன் குரல் தகரத்தில் ஆணியால் கீறுவதுபோலக் கரகரத்தது ஒலித்தது. அம்மா அந்தக்குரலை ‘எங்கட பெடியள் யோசிக்கத் தொடங்கியிருக்கினம்’ என்றார். அப்பா தலையைத்துவட்டி உலர்ந்த உடைகளை அணிந்தார். ‘ஒரு நொடி எண்டா ஊரில முழுப்பேரும் சரணடையப் போகினமே’ என்றவர் முதல் ஆளாகத் தானும் சரணடையப் போவதாகச் சொன்னார். அபூபக்கரின் கடைக்கு நேர்பின்னாக இருந்த வீட்டின் முன்பக்கச் சுவரை இடித்துத்தள்ளிவிட்டுப் புதிய காம்பைச் சரிக்கட்டியிருந்தார்கள். வீட்டைச் சுற்றி நீண்ட புதிய முட்கம்பிவேலிகள் சுருள் சுருளாக அடிக்கப்பட்டிருந்தன. வீடாகவிருந்த காம்ப் தெளிவாக ஊரிலிருந்து முட்கம்பிகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அப்பாவை வாசலில் மிகத் தீவிரமாகச் சோதனை செய்தார்கள். அவர் கையோடு எடுத்துச் சென்ற முதலாமிலக்கம் மட்டும் கிழிக்கப்பட்ட பச்சைநிற ரசீதை வாங்கிப் பத்திரமாக வைத்துவிட்டு சுவரின் நடுவிலிருந்த சன்னலோரமாகக் குந்தியிருக்கச் சொன்னார்கள். அந்தக் காம்பில் சரணடைந்தது அப்பா மாத்திரம்தான் என்பதை அவள் பின்னரே தெரிந்து கொண்டதாகச் சொன்னாள். ’சிலநேரம் அவர் மட்டுமே அங்கிருந்து திரும்பி வந்ததாலை ஊரார் அப்பிடி நம்பியிருப்பினம்’ என்றாள். அடுத்த நாள் அதிகாலையில் வீடு திரும்பியிருந்த அப்பா தன்னுள் ஒடுங்கிப் போயிருந்தார். அவர் விரல்கள் குறண்டிப்போயிருந்தன. இளநரை தெரியும் தலையின் இடதுபுறமும் சரியாக மூளைக்கு அருகிலும், மார்பின் ஓரமாகச் சரியாக இதயத்தின் மேலாகவும் இரண்டு சிவந்த புள்ளிகள் அவரின் மண்நிறத் தோலின்மேல் இடப்பட்டிருந்தன. அவை மிகத் துல்லியமாக மூளையினதும், இதயத்தினதும் இருப்பை நினைப்பூட்டின. புள்ளிகளை அடிக்கடி தடவிப் பார்த்து மூளையினதும், இதயத்தினதும் இருப்பை அவர் உறுதி செய்து கொண்டார்.
அப்பா சங்கிலியில் பிணைந்து இயக்கமற்று முடங்கிக் கிடந்த, அபூபக்கர் சித்திர எழுத்துகளிருந்த இசும் பீங்கானை எடுத்துவந்த, எழுதும் மேசையை வெளிச்சம் தெரிய இழுத்துப்போட்ட சன்னலையொட்டி நேராக நிமிர்ந்து நின்று தலையின் இடதுபுறமிருந்த மூளைக்கு நேர் மேலான சிவந்த புள்ளியில் துவக்கின் குளிர் முனையைப் பொருத்தினார். ‘துரோகிகள் சாகவேண்டிவர்கள்’ என்றபடி சன்னலை உற்றுப்பார்த்தார். சன்னல் கம்பிகளில் அம்மாவின் நிழல் இருளுருவமாய் அசைந்தது. ’அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டியவர்களில்லை சாகடிக்கப்பட வேண்டிவர்கள்’. அப்பாவின் கையிலிருந்த துப்பாக்கி எழுத்து மேசையில் நடுங்கி விழுந்தது. அதை நடுக்கத்துடன் எடுத்து தனது இடுப்பின் பின்னால் பத்திரப்படுத்தினார். பின் வந்த நாலுநாட்களும் – தான் கொலைசெய்யப்பட்ட குளிர் இரவு வரை – தன்னைக் கொலை செய்யக்கூடிய கொலையாளியைத் தேடியலைந்தார். சின்னமணி மாமா துவக்கைத் தொடக்கூடப் பயந்து வெலவெலத்துப் போனார். அபூபக்கர் ‘நஉது பில்லாகி மின்னா மிச்சம் எலும்பை வெட்டுறது எண்டா சொல்லுங்க’ என்றார். என்னால் துவக்கை அப்பாவின் தலையின் இடது புள்ளியில் வைக்க முடிந்தாலும் அதன் விசையை இழுக்க முடியவில்லை. சேலைத் தலைப்பில் கையைத்துடைத்தபடி துவக்கை வாங்கிய அம்மா, அப்பாவின் அலையும் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு உன் கண்கள் அச்சமூட்டுகின்றன என்றபடி துவக்கைத் திருப்பிக் கொடுத்தார்.
நான் அப்பாவின் சின்னறையைத் திறந்தபோது முகத்தில் அறைந்த தாள்களின் கருகல் வாசனையே அன்று ஊர்முழுவதும் அலைந்தபடியிருந்தது. வீட்டுக் கோடிகளில் நுளம்பு முட்டைகளிருந்த வாகனங்களின் ரயர்கள் முச்சந்தியில் குவிக்கப்பட்டு அந்தத் தேய்ந்த ரயர்களை உடல்களில் சுருள் சுருளாக இறுக்கி உடல்கள் எரியூட்டப்பட்டிருந்தன. ரயர்களோடு உடல்கள் வேகிக் கருகும் வாசனை ஊரை நிறைத்திருந்த அதிகாலையிலேயே அப்பாவின் உடலையும் வாழையிலையில் பொட்டலமாகக் சுற்றி அம்மா முச்சந்திக்கு இழுத்துச் சென்றார். ரயர்களோடு ரயராக உடல்களோடு உடல்களாக அப்பாவையும் நன்றாக எரியும்படி நடுவில் இழுத்துவிட்டு விட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார். நான் கடைசியாக ஒருமுறை அப்பாவின் உடலை திரும்பிப் பார்த்தேன். வாழையிலை வாடிக்கருகி உள்ளே பொதிந்திருந்த அப்பாவுடைய மெலிந்த உடற்தசை ரயர்களின் மேல் உருகி வெள்ளைக் கொழுப்பாகக் கரைந்தது. ’டொப்’ என்று சிறிய சத்தத்துடன் ரயர் ஒன்று வெடித்து அதன் கரிய துகள்களிலொன்று என்னுடைய மூக்கு நுனியில் பெலமாக ஒட்டியது. மூக்குநுனி பயங்கரமாக எரிந்தது. புறங்கையால் மூக்கின் நுனியை அழுந்த துடைத்த போதும் எரிவு அடங்கவில்லை. வீட்டின் முன் வாசற் குந்தில் நின்று கருகும் ரயர்களையும் எரியும் உடல்களையும் நெடுநேரம் பார்த்த அம்மா ‘துா! சவங்கள்’ என்றார்.
04.
கதையை வாசித்த இலக்கிய நண்பரொருவர் அவள் நீலப்பட நடிகையானதற்கான வலுவான காரணத்தை நீ கதையில் சொல்லியிருக்க வேண்டும் என்றார். உண்மையில் அவள் நீலப்பட நடிகையானதன் காரணம் கதைக்கு வெளியே தானிருக்கிறது. வேண்டுமானால் லு ரொலியன் என்ற பிரஞ்சு இலக்கிய இதழின் நடுப்பக்கத்தில் வந்திருந்த அவளுடைய செவ்வியை வாசித்துப் பார்க்கலாம். வளையங்கள் கொழுவிய முலைகளின் குறுக்காகத் துப்பாக்கி வைத்திருக்கும் அவளுடைய புகைப்படத்துடன் வெளியாகியிருந்த செவ்வியின் மூன்றாவது கேள்வியையும் பதிலையும் வாசிக்கும் போதே அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
03.பெண்ணுடல் மீதான இறுக்கங்கமான கட்டுப்பாடுகளுடைய கலாச்சாரச் சூழலில் இருந்து வந்த நீங்கள் எப்படி நீலப்படத்துறையைத் தெரிவு செய்திருக்கிறீர்கள்?
அவர்களால் புனிதமானதாக நம்பப்படும் இந்த ’இழிவான’ தமிழ் அடையாளத்திலிருந்து என்னை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழின் புனிதமான வெண்திரையில் என்னுடைய கரிய முலைகள் வேட்கையும், விடுதலையும் ததும்பும் தசைத்திரட்சிகள். அப்பா தப்பித்தலுக்கான வழிமுறையாக இரகசிய இயக்கத்தைக் கட்டினார், சமூக அடுக்குகளில் திடீர் தாக்குதல்கள் செய்தார், கடைசியில் ஒன்றும் இல்லாமல் முடிந்தும் போனார். எனக்கும் இது தப்பிதலுக்கான வழியாகவும் விடுதலைக்கான பாதையாகவும் இருக்கிறது.
***
அகநாழிகை யூலை இதழில் வெளியாகியிருந்தது.