விண்மீன்களின் இரவு

 01.

வன் அந்தத் தடிமனான கண்ணாடிக் கட்டிடத்தை விட்டு எழுந்து ஓடிவிட நினைத்தான். ஹீற்ரர் வெப்பம் பிடரி, காதுமடலின் பின்புறம் எங்கும் கொதித்தது. பல சோடிக்கண்கள் தன் பிடரியில் மொய்த்திருப்பதை நினைத்துப் பார்த்தான். தனது உடல் கேள்விகளால் துகிலுரிந்து நிர்வாணமாவதைப் பதட்டத்துடன் எதிர்கொண்டான். ஒவ்வொரு கேள்வியும் துப்பாக்கி ரவைகளை விட அதிக ஆழத்தில் அவனைத் துளைத்தன. உச்சமாக அவனுடைய அக்காவைப்பற்றிக் கேட்டது நீலப்படத்தின் சில துண்டுக் காட்சிகளை நினைப்பூட்டியது. சிப்பாயின் உள்ளாடையின் நிறத்திலிருந்து அக்காவின் முனகல்வரை விபரித்தான். முடிவாக ‘நாயைமாரி என்ர மனுசியை ரோட்டில் சுட்டு போட்டிருந்தாங்கள்’ என்றான்.

கேள்வியாளனுக்கு அப்போதும் நம்பிக்கை வரவில்லை உதட்டைப் பிதுக்கினான். நாயின் ஆவேசத்துடன் எழுந்து வாங்கின் மேல் துள்ளி ஏறிக் கால்களை அகட்டிக் குனிந்து மூன்றுமுறை இடுப்பை அசைத்து இயங்கிக்காட்டினான்.    பின்னால் பலசோடிக் கண்களினூடே விரியும் காட்சிகளில், அக்கா மேலும் பலமுறை துகிலுரியப்படுவாள் என்ற அச்சமும் ஏற்பட்டது. மேசையின் கால்களை ஆத்திரத்துடன் அழுத்திப் பிடித்தான். இதையெல்லாம் தாங்காது அம்மாவை முன்னரே ஷெல்லடியில் சாகடித்தது அர்த்தபூர்வமாகப்பட்டது.  கண்ணாடிச் சுவரின் வெளியே பனி தூவுவதும் விடுவதுமாகப் போக்குக்காட்டியது. மடித்து வைத்திருந்த குளிர் அங்கி கையில் கனத்தது. அது படிந்து கிடந்த தொடையில் இன்னும் சூடு மிச்சமிருந்தது.

நடுவிலிருந்த பிரதான விசாரணையாளன் குனிந்து  வெள்ளைத் தாளில் அடிக்கடி ஏதோ குறிப்பெடுத்தான். அவனின் கையெழுத்தைக் கூர்ந்து கவனித்தான். கிறுக்கலில்லாத நேரெழுத்துகளிலிருந்தன. கேள்விகள் முன் – பின்னாகவும் ஒன்றை ஒன்று இடைவெட்டுவெட்டும் அவநம்பிக்கைகளின் பிரதிபலிப்புக்களாக இருந்தன. குரலில் கனிவும், உதடுகளில் மெல்லிய அசைவுகளாகவும் கேள்விகள் வெளிவந்தன.   இவன் மெதுவாகத் தலையைத் திருப்பி வலதுபக்கம் அமர்ந்திருந்த தனது லோயரைப் பார்த்தான். கலைந்திருந்த செம்பட்டைத் தலைமுடியை ஒதுக்கி விட்டிருந்தார். தனக்கான நேரம் முடிந்துவிட்ட தோரணையில் கை நகங்களின் இடுக்கில் ஒட்டியிருந்த அழுக்கைத் திறப்பால் நீக்குவதில் மூழ்கியிருந்தார். நாடகத்தின் பகுதிபோல எல்லாம் இயல்பாய் நிகழ்ந்து கொண்டிருந்தன. இன்னுமொரு கேள்வி மாத்திரமே எஞ்சியிருந்தது. அதற்கான வேளை இன்னும் வரவில்லை என்பது போல எல்லோரும் காத்திருந்தனர்.

இடதுபக்க விசாரணையாளன் இவனை, இவனின் சிறு அசைவைத் தன் இடுங்கும் கண்களால் அளந்தபடியிருந்தான். அசைவே இல்லாத அவனின் நீலக்கண்களில் அவநம்பிக்கை துளிர்த்திருந்தது.  மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை பயிற்றைக் கொடியாய் சுருண்டு நீண்ட தழும்பை அவனின் பார்வையில் தெரியும்படி தன் கையைத்திருப்பினான். அவனிடமிருந்து எந்தக் கேள்வியும் வராததில் அவன் முன் முடிவுடனே வந்திருப்பதாகப்பட்டது. பிடரிக்குப் பின்னால் மெதுவாகக் கதவு திறப்பதும் மூடுவதுமாக இருந்தது. காலடியோசைகளைக் கூர்ந்து கவனித்தான். அதில் ஒரு காலடியோசை மட்டும் அகன்ற பாதங்களில் அழுத்தமாக நிலத்தில் பதிந்து  வெறுங்காலில் நடப்பது போலவுமிருந்தது. பழகிய காலடியோசைகள் போலவுமிருந்தன. தூக்கத்திலிருந்து விழித்தவனாய் பிரதான விசாரணையாளன் அந்தக் கடைசிக் கேள்வியையும் கேட்டான். ‘இப்போது நீங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை’ மொழிபெயர்ப்பாளனை முந்திக்கொண்டு இவன் பதில்சொன்னான், ‘காணாமல் போனவர் பட்டியலில் ஒருவனின் எண்ணிக்கை கூடும் அல்லது துரோகிகளின் பட்டியலில்’ என்றான். குரலில் அழுத்தம் கூடியிருந்தது. திரும்பி லோயரைப் பார்த்தான். அவர் சின்னி விரலிற்கு வந்திருந்தார்.

கலைந்திருந்த தாள்களை அடுக்கி மேசையில் குத்தியபடி நடுவிலான் எழுந்தான். பின்னாலிருப்பவர்கள் கலைந்து செல்லும் இரைச்சல் கேட்டது. கடைசி ஆளும் வெளியேறும் வரை அசையாமல் காத்திருந்தான். ஹீற்ரர் ‘ர்ர்ர்ர்ர்’ என்று ஓடியது. சில நிமிடங்களுக்கு முன்னர் ஒருத்தி சிதைக்கப்பட்டதற்கான எந்தத்தடயமும் இல்லாமல் விசாரணை அறை நிசப்தத்தில் கிடந்தது. முடிவு தெரிவதற்கு இன்னும் இருபத்தியொரு நாட்கள் இருக்கின்றன. விசா கிடைத்ததும் அதை முதலில் பெரியப்பாவின் முகத்தில் தூக்கி அடிக்கவேண்டும் என நினைத்தான். இல்லை இல்லைப் பிரியாவின் முகத்தில்.

வீதியெங்கும் பனித்தூவல்கள் இறைந்து குவியல்களாகக் கிடந்தன. பனியின் அடர்த்தி நீர்த்தாரைபோல கூடிவந்தபடியிருந்தது. மரங்களின் இலைகளில், நிறுத்தியிருந்த கார்களின் மேல் சிறு கோபுரம் போல பனி வீழ்ந்திருந்து கொண்டிருந்தது. வீதியில் வாகனங்கள் மிக மெதுவாக  நீண்ட வரிசையில் அரக்கியபடியிருந்தன. நிலக்கீழ்  மெத்ரோ தரிப்பிடம் வந்தபோது  இன்னும் பனி அடர்ந்து பெய்வது போலிருந்தது. இவன் இங்கு வந்த பின்னர் இப்போதுதான் பனி இவ்வளவு தொடர்ச்சியாகக் கொட்டுகிறது. அங்கிருந்த சிறிய தொலைக்காட்சிப் பெட்டியில் பனியின் அபாய அளவுகுறித்து சிவப்பு எச்சரிக்கை செய்தபடியிருந்தார்கள். விரியும்காட்சிகளில் பனி புயலைப்போல மூர்க்கமாகப் பெய்துகொண்டிருந்தது. மெத்ரோ பிளாட்பாரத்திலிருந்து வீதியை வேடிக்கை பார்த்தான்.  பிளாட்பார கீழ் மூலையில் அழுக்குத் துணிக்கந்தலுக்குள்  வெளிறிய கிழவன் சுருண்டுகிடந்தான். அருகில் அவனது நாய் முன்னங்கால்களை நீட்டிப் படுத்திருந்தது. அதன் கால்களிடையே நசுங்கிய காகிதக்கோப்பையில் சில செம்மஞ்சள்நிற  அழுக்கு நாணயங்கள் சிதறிக்கிடந்தன.   குளிரையும் மீறிச் சடைத்திருந்தது அவனது பழுப்பு நிறத்தாடி. குளிரின் நடுவே மெல்லிய கதகதப்பான குன்றுபோல படுத்திருந்தான். ஆழ்ந்த நித்திரையின் வெப்ப மூச்சுக்காற்று பனிப்படலமாய் அவனது முகத்தில் வெடித்துச் சிதறியது. மெத்ரோ மிக அருகில் வந்துவிட்டதற்கான இயந்திரக்குரலின் அறிவிப்புத் தொடங்கியது. அறிவித்த நேரத்திலும் இரண்டுநிமிடங்கள் முன்னதாகவே வந்திருந்தது. தனது கனத்த குளிரங்கியைக் கழட்டி நாயின் மேல் கவனமாகப் போர்த்திவிட்டு மெத்ரோவை நோக்கிப் பாய்ந்து ஓடினான் இரும்புத்தண்டவாளத்தில் கரிய எறும்புபோல மெத்ரோ பெரிதாகியபடி வந்தது. குளிரங்கியின் இரகசிய மடிப்பினுள் செருகிவைத்த நூறுயூரோத் தாளின் நினைவும் கூடவே வைத்திருந்த நைந்த கடிதமும் மின்னலைப்போல நினைவில் வெட்டிச் சென்றது.

02.

சரியாக இருபத்தொரு நாட்களின் பின்னர் அவன் ஹெரோயின் பொட்டலம் போல சித்தப்பாவின் கைகளுக்குக் கை மாற்றப்பட்டிருந்தான். இருபத்தியொருநாட்களும் அந்தச் சிறிய நிலவறையினுள் அடைபட்டு கிடக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.  இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சரியாக அய்ந்து நாட்களில் ஃபிரான்ஸின் சார்ள்ஸ் து கோல் சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கியவனை ‘ஏஜென்சி’க்காரன் விரிந்த புன்னகையுடன் கைலாகு கொடுத்து விமான நிலைய வாசலிலேயே வரவேற்றான். தன்னைச் சந்திரன் என அறிமுகம் செய்தவனின் பிரகாசமான முகமும்  கம்பி மீசையின் அடியில் தெரிந்த வெளுப்பும் இன்னும் சில நிமிடங்களில் தொடங்க இருக்கும் பேரம் பேசலின் எந்தச் சுவடுகளுமற்று இளகிக் கிடந்தன. பின்னொரு ஞாயிற்றுக்கிழமையின் மாலையில் மரச்சட்டமிட்ட ஃபிரெஞ்சு மதுக்கூடத்தில் கோப்பையில் நிரம்பியிருந்த இளமஞ்சள் பியரை உறிஞ்சிய  போது, ஃபிரான்ஸில் அவன் கழித்த அந்த முதல் இருபத்தியொரு நாட்களைக் குறித்துக் கேட்டேன். உறிஞ்சிய பியரைக் கவனமாக வட்ட அடித்தட்டில் வைத்துவிட்டு வாயைப் புறங்கையால் துடைத்தான். ‘அது சித்தப்பன்ரை நூத்தியம்பது  யூரோ பெற்றோல் காசுக்கு நடந்த பேரம்’     என்றபடி வெளிவீதியை வேடிக்கை பார்த்தான்.  அந்த இருள் சூழ்ந்த அறை, அதன் மண்டிய வீச்சம் இன்னும் நாசிகளில் ஒட்டியிருக்கிறது என்றான்.

அந்த அறையுள்  சின்னத் தடுப்புடன் கூடிய கழிப்பறையும் ஒரு கட்டிலும் மட்டும் வைக்கவே இடம் போதுமாயிருந்தது. கட்டிலில் படுத்திருந்து பார்த்த போது எதிரே கிடந்த சுவரில் நில மட்டத்தின் மேல் பதித்திருந்த தடினமான கண்ணாடி மட்டுமே ஆசுவாசமாயிருந்தது. காலையில் அதனூடு அலைபுரண்டுவரும் ஒளிவெள்ளத்தை வைத்து அதைக் கிழக்கு எனக் குறித்தான். மரக்கட்டிலின் விளிம்பில் பெயர்கள் கூர் ஊசியால் கிறுக்கப்பட்டிருந்தன. கட்டிலையொட்டி சுவரில் அறையப்பட்டிருந்த மரச்சட்டத்தில் வெளிறித் தளர்ந்த முலைகளுடைய பெண்ணின் நிர்வாணப்படம் ஒட்டப்படிருந்தது. உப்பிய வயிற்றின் முடிவில் சிசேரியன் தளும்பு மஞ்சளாய் மினுங்கியது.அவளின் உடல்முழுவதும் கரும்புள்ளிகள் நெல்லியில் சூத்தை போலச் சிதறிக் கிடந்தன. மேலே பின்னிரவுகளில் சில காலடியோசைகளும், சில கிசுகிசுப்புகளும் மட்டுமே அரிதாகக்கேட்கும். சாலையில் விரையும் வாகனங்கள் தார்  வீதியில் உராயும் இரைச்சல் மட்டும் பின்னிரவு தாண்டியும் கேட்கும். இரவில் தடித்த கண்ணாடியில் தெரியும் நட்சத்திரங்கள் வட்டமாகவும், சுழன்றடிக்கும் தீக்கோளங்களாகவும் தெரிந்தன. அவை ஒன்றையொன்று விழுங்கும் வான்கோவின் நட்சத்திரங்கள் என்றான்.  அறையின் மூலையில் குண்டு பல்பு ஒன்று வெப்பமாக எரிந்தபடியிருந்தது. அதன் மெல்லிய கண்ணாடி ஓடு புகைப்பிடித்தது.  அதனை அணைப்பதற்கான விசை வெளியிலிருந்திருக்க வேண்டும். அதிலிருந்து கசிந்த ஒளியில் அறை எப்போதும் இளமஞ்சளில் இருந்தது. முதல்நாள் இரவு கண்ணை இறுக்க மூடியதும் இளமஞ்சள் ஒளி கண்ணுக்குள் பிரகாசமாய் ஒளிர்ந்தது. அன்று மட்டும் தூக்கம் வர நெடுநேரம் எடுத்தது என்றான். நெடுஞ்சாலையில் விரைந்து செல்லும் வாகனங்களை எண்ணியபடி படுத்திருந்தேன் என்றான். அதன் பின்னர் ஒருபோதும் செம்மஞ்சள் ஒளி தொந்தரவாயிருக்கவில்லை என்றான். கண்ணை மூடியதும் அணைக்கவே முடியாதிருந்த மின்குமிழ் தான் கண்ணினுள் அணைந்தேவிட்டது என்றான்.

கதவு திறக்கும் சிறுசத்தமோ அது பூட்டப்படும் ஓசையையோ ஒருபோதும் அவன் கேட்கவில்லை. இரண்டுநேரச்  சாப்பாடும் சரியான நேரத்திற்குக் கதவருகில் எப்போதும் இருந்தது.  இவ்வளவு ஏன் கதவு பூட்டியிருக்கிறதா என்று ஒருபோதும்  திறந்து கூடத் தான் பார்க்கவில்லை என்றான்.  எப்படி நினைவுபடுத்திக் கொண்டாலும் அந்த இருபத்தியோராவது நாளின் பிற்பகல் மட்டும் சரியாக நினைவுக்கு வரமறுக்கிறது என்றான். நித்திரையிலிருந்தேனா அல்லது பின்னேர வானத்தின் குருதிச்சிவப்பைத் தடித்த கண்ணாடியில் பார்த்து லயித்திருந்தேனா எனச் சரியாகத் தெரியவில்லை, அந்தக் கம்பிமீசைக்காரனின் குரல் அறையின் இளமஞ்சள் இருளினுளிருந்து தீர்க்கமாக ஒலித்தது. ‘இன்னும் அய்ந்து நிமிடத்தில் நாம் புறப்படவேணும்’. கதவு திறந்த சிறுசத்தமுமின்றி திறப்பின் துளை வழிநுழையும் காற்றுப்போல அறையினுள் அவன் பிரசன்னமாகியிருந்தான்.  இளமஞ்சள் ஒளியில் அவன்முகம் தங்கம்போல சுடர்ந்தது. கட்டளையிட்டு விட்டுத் தலையை ‘வெடுக்’ எனத் திருப்பிக் கொண்டான். அப்போது அவனின் தடித்த கம்பி மீசையினுள் புன்னகை அடர்ந்திருந்ததா? இல்லை கோபம் மிச்சமிருந்ததா? தெரியவில்லை. ஆனால், இருபத்தியொரு நாட்களுக்கும் போட்ட இரண்டுவேளை சாப்பாட்டுக்கும் முந்நூற்றிப் பதினைஞ்சு யூரோவையும்  மேலதிகமாக எண்ணி வைத்த பின்னர்தான் என்னை அவனுடைய காரிலிருந்து கீழே இறங்கவிட்டான் என்றார் சித்தப்பா. முதல் வேலை கிடைத்து முதலில் போட்ட சீட்டை எடுத்துச் சித்தப்பாவிடம் எண்ணி வைத்தது அந்த முந்நூற்றியஞ்சு ரூபாயைத்தான் என்றான். ஆனால் எனக்கு என்னமோ சித்தப்பாவையும் நம்பமுடியாது என்றான். என்னை ஏற்றவந்த பெற்றோல் காசையும் அதற்குள் சேர்த்துவிட்டிருப்பார்.

தன் அழுக்குத்துணிப்பையை காரின் இருக்கையில் வீசிவிட்டு இவன் காரில் ஏறும்வரை சித்தப்பா ஒரு சிறிய கொப்பியை காரின் ஸ்ரேறிங்கில் வைத்து ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். இலக்கங்களின் அருகில் கூட்டல் குறிகள் இருந்தன. இவனைத் திரும்பிப்பார்த்துச் சிறுதலையசைப்புடன் காரைக்கிளப்பினார். கார் முதல் வளைவில் திரும்பியதும் உதடுகளைக் குவித்துப் புன்னகைத்தார். ‘அப்பன் இங்கை உனக்குக் கொஞ்சம் மூளை இருந்தா முப்பதாயிரத்திமுந்நூற்றி அஞ்சு யூரோவையும் வெறும் ஆறு மாசத்திலை உழைச்சுப் போடலாம் என்ன? கொப்பரைப் போல பேயனா இல்லாம இருந்தாச் சரி ’

03.

வளைவில் திரும்பியதும் சிலர் சந்தியில் நின்று பத்திரிகை விற்பதைக் கவனித்தான். அந்த மென்னிருளிலும் பத்திரிகை விற்பவர்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பிற்காகச் சுற்றி நின்றனர். இவன் அவர்கள் அருகில் வந்ததும் ஓரமாக நின்றிருந்தவன் வீதியின் நடுவில்வந்து சைக்கிள் கான்டிலில் கையை வைத்து இவனை மறித்தான். அவன் மிக நேர்த்தியாகத் தாடி மீசை மழித்திருந்தான் முகத்தோல் வழுவழுப்பாக இருந்தது. கட்டிலிருந்து உருவிய பத்திரிகையை விசிறியைப்போல் முகத்தின் முன் நீட்டினான். பேசாமல் அதை வாங்கிக் கரியலில் செருகினான். சைக்கிளை கிறவல்வீதியில் இறக்கி அம்மன் கோயிலை நோக்கிப் போனான். இருள் சூழ்ந்த கோயிற் பிரகாரம் சலனமற்றுக் கிடந்தது. கருங்காலி மரத்தையொட்டி பிரிந்த ஒற்றையடிப்பாதையில் சைக்கிளை இறக்கியதுமே தூரத்தில் யாரோ கிணற்றில் நீரள்ளிக் குளிக்கும் சத்தம் கேட்டது. தெய்வாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

தெய்வா வரும்வரை கல்வீட்டை ஒட்டிக்கிடந்த மண் திண்டில் காத்திருந்தான். இருள் இன்னும் படிந்து போயிருந்தது. தெய்வா ஈர உடைகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் நிரப்பித் தூக்கியபடி ஒற்றையடிப்பதையில் வந்தாள். உலர்ந்துகிடந்த செம்பாட்டு மண் அவளின் நீரேறிய பாதங்கள் பட்டுக் குளிர்ந்து வந்தது. திண்டில் சரித்துவிட்டிருந்த ‘லேடிஸ்’ சைக்கிளைப் பார்த்து, Ôஎன்ன பூனையைப்போல பதுங்கி வந்திருக்கிறாய்’ என்றாள். ஈர உடைகளை உதறிச் சணல் கொடியில் நன்றாக விரித்துப் போட்டாள். இவன் எதுவும் பேசாமல் இடுப்பில் செருகியிருந்த சிவப்பு பிஸ்டலை எடுத்து இரு முறைதிருப்பிப் பார்த்துவிட்டு திண்டின் மணலில் ஏறிந்துவிட்டு எழுந்து வீட்டினுள் போனான். குண்டுபல்பின் பிரகாச ஒளியில் ஒடுங்கிய விறாந்தையின் சுவர் அழுக்கேறி காரை பெயர்ந்திருந்தது. அதன் வெள்ளை பெயராத சாந்தில் கலர் பென்சில் கோடுகளும், குச்சியான மனித உருவங்களும் பல நிறங்களில் வரையப்பட்டிருந்தன. விறாந்தையின் ஓரத்தில் பவுண் நிறத்தில் சட்டமிடப்பட்டு ஒரு படம் கொழுவப்பட்டிருந்தது. அதன் முன்னால் சிறுவிளக்கு புகைந்தபடியிருந்தது. படத்தின் நெற்றியில் இடப்பட்டிருந்த சந்தனப் பொட்டு வட்டமாகவும், உலர்ந்து நிறம் மங்கியுமிருந்தது. கண்ணிற்கு கீழே சிறு பிறைவடிவத் தழும்பும் கத்தையான கம்பிமீசையினூடு தெரிந்த புன்னகையும் வசீகரமாயிருந்தது. மகிழ்ச்சி கொப்பளிக்கும் ஒரு துண்டுக் கணம் அதில் சலனமில்லாமல் உறைந்திருந்தது. சிவானந்தம் கதிரேசன் என்ற பெயரின் கீழ் மலர்வு 27.11.1969 என்றும் உதிர்வு – சூனியமாக வெறுமையாகக் கிடந்தது. சட்டமிடப்பட படத்தில் விரிந்திருந்த சிவானந்தம் கதிரேசனின் கண்கள் விறாந்தை முழுவதுமாக வியாபித்திருந்தது.

பின்னொரு குளிர்கால இரவென்றின் மதுவிருந்தில் ஐஸ் துண்டுகளை கைகளால் மதுக்கோப்பைகளில்  இட்டபோது இது தெய்வாவைப் போல குளிர்ந்திருக்கிறது என்றான். மதுவின் மெல்லிய போதையில் அந்த நாளின் இரவை, தெய்வாவை பின்னொருபோதும் மறந்ததில்லை என்றபடி ஐஸ்துண்டை வாயிலிட்டு மென்று விழுங்கினான். அன்றுதான் அவன் கடைசியாக தெய்வாவைப் பார்த்தது. குண்டுபல்பின் ஒளியில் அவள் நிழல்  விறாந்தை முழுவதும் நீண்டிருந்தது. அன்று பின்னிரவு முழுவதும் அவனின் ஒடுங்கிய மார்பின் முடிகளைக் கோதியபடியிருந்தாள். அவனின் கையைச் சுற்றி பயிற்றங்கொடி போல படர்ந்திருந்த நீண்ட தழும்பை மெதுவாக வருடினாள். ‘தழும்புகள் குழந்தையின் மிருதுவான பாதங்கள் போலிருக்கின்றன’ என்றாள். தன் உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணியான போது தளர்ந்திருந்த இவனின் குறியில் குருதியின் உள்ளோட்டத்தை உணர்ந்தான். அவளின் தளர்ந்த உடலில் தொய்ந்த மார்புகள் மேடிட்ட வயிற்றில் படிந்து போயிருந்தன. நீண்ட தழுவலின் பின் இவள் குளிர்ந்து பனிக்கட்டியாகி அவனுடலில் உருகிக் கொண்டிருந்தாள். உருகி, உருகி அவனுடலில் கரைந்துபோகும் ஆவேசம் அவ்வுடலிலிருந்தது. தான் முதன் முதலில் இலக்குத் தவறாமல் சுட்டு வீழ்த்திய பெயர் தெரியாத குருவியை நினைத்துக் கொண்டான். அது குருதி வடியும் தசைப்பொட்டலாம் போல புற்தரையில் விழுந்து கிடந்தது. இவன் குறி விறைக்கவில்லை. தளர்ந்த குறி வேண்டாத தசைத் திரட்சி போல வதங்கிக் கிடந்தது. ‘அதுவொரு ரவுண்சைப்போல உள்ளே பதுங்கிவிட்டது’ என்றான்.  தான் சுட்டு வீழ்த்திய கல்லூரி அதிபரின் கடைசிச்சொற்களை நினைவிலிருந்து எடுக்க முயன்றான். ‘அப்பன் நானும் உம்மடை அப்பா மாதிரித்தான்,  ஆயிரம் குழந்தைகளின் அப்பா’. ரத்த நாடிகள் விரிந்து மூளைக்குள் இரத்தம் இளஞ்சூட்டுடன் படர்ந்தது. குறிவிறைக்கவில்லை.  ‘ஆம் உன் கைகளின் இளஞ்சூடு என் குறியில் படரும் வரை அது விறைக்கவேயில்லை. ரத்த நாடியின் ரகசியமுடிச்சு அவிழ்ந்தது போலிருந்தது அன்று உன் தொடுகை’ என்றான்.

சரியாக ஒருவாரத்தின் பின்னர் தெய்வாவின் அழுகி உருக்குலைந்த உடலை வீட்டை உடைத்து ஊர்மக்கள் எடுத்ததாகப் பத்திரிகைச் செய்தியில் வாசித்ததாகச் சொன்னான்.  அப்போது தான் தெய்வா வீட்டிலிருந்து பல மைல் தூரத்தில் தெரிந்தவரின் வீட்டுக் கூரைக்குள் பதுங்கியிருந்ததாகச் சொன்னான். நாட்டைவிட்டுத் தப்பிச்செல்லும் கலவையான எண்ணங்கள் சூழ்ந்த நாட்களவை என்றான். மேற்கூரை இருளினுள் பத்திரிகையில் வந்த உருக்குலைந்த அவளுடலின் புகைப்படத்தை மிகக் கவனமாகச் சோதித்தபோதும் அதில் ரவுண்ஸ் பாய்ந்த இடத்தைத் தன்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அது அவளின் மார்பில்தான் பாய்ந்திருக்க வேண்டும் என்றான். புகைப்படத்தில் மார்பு கரைந்துபோயிருந்தது. ஆனால் அவ்வுடல் பரிசுத்த நிர்வாணமாக இருந்தது அதன் தசைகள் உருகிக்கிடந்தாலும் அது தெய்வாவைப்போல இருந்தது என்றான். உதடுகள் ஏதோ சொல்லவருவது போல இழுபட்டு இருந்தன. தெய்வாவிற்குத் தண்டனையை உறுதிப்படுத்தி மேலிடத்திலிருந்து வந்த  நான்காவது கடைசிக்கடிதத்தை இங்கு வரை பத்திரமாக எடுத்து வந்ததாகச் சொன்னான்.

04.

இவன் இருபத்தியொராவது நாளில் விசாரணை மன்ற வாசலில் ஒட்டப்படும் முடிவைப் பார்க்கப் போகவில்லை. ‘எப்படியும் விசாக் குடுக்கத் தானே வேணும், நான் சொன்ன கதை அப்பிடி நம்பாமல் இருக்க முடியாது’ என்றுவிட்டு என்னைப்பார்த்துச் சிரித்தான். முப்பது நாட்களின் பின்னர் அரசாங்க இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத்துடன் வீட்டிற்கு வந்திருந்தான். அதை என்னிடம் வாசிக்கக் கொடுத்து விட்டு எதிரிலிருந்த சோபாவில் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ‘திருவாளர் சிவானந்தம் கதிரேசன் ஆகிய உங்களுக்கு நாங்கள் அறிவிக்கிறோம்,  நீங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்வதால் உங்களுக்கு உயிராபத்து இருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. ஆகவே உங்களுடைய அரசியல் அகதித்தஞ்சக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். உங்கள் நாட்டில் நிலமைகள் சீரடையும் வரை இங்கே தற்காலிகமாகத் தங்கியிருக்கும் வதிவிட உரிமையை வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். இழந்த உங்கள் குடும்பத்திற்கும் மனைவி தெய்வதர்சினிக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தங்கள். நல்வரவு’.

 – ஆக்காட்டி 13

Scroll to Top