01.
சமாதானத்தின் தூதுவர்கள் 22.02.2002.
அதுவொரு வெள்ளிக்கிழமையின் உலர்ந்த மதியம். ஊரார் சமாதானத்தின் மகிழ்ச்சி மிதக்கும் கண்களுடன் தார் வீதி எங்கும் அலைந்து திரிந்தபடி இருந்தனர். வீதியின் குறுக்காக இருந்த பழைய கல் மதகுக் கட்டில் அமர்ந்திருந்த சுடலையின் கண்கள் சமாதானத்தின் மகிழ்ச்சியை அச்சத்துடன் வேடிக்கை பார்த்தபடி இருந்தன. சாரத்தை ஒதுக்கி ஒரு பக்கமாகக் குந்தி இருந்த அவரது கண்களில் எஞ்சிய போதை மெல்லிய சிவப்புத் தணலாக ஒளிர்ந்தபடி இருந்தது. அவருடைய போதையில் கலங்கிய கண்களின் முன்னால் மகிழ்ச்சியில் மிதக்கும் முகங்கள் கலங்கியும், குழம்பியும், விகாரமாகவும் ஏன் அச்சமுடையனவாகவும் தெரிந்தன. அவர் <<நாய்களின் வேண்டுதல் எலும்பு மழையைத்தான் கொண்டுவரும்>> என்று உதட்டைச் சுழித்துச் சொல்லி விட்டு, ஆலமரத்தின் பக்கமாகப் பெரிதாகக் காறி உமிழ்ந்தார்.
நூறு ஆண்டுகளின் புழுதி படிந்த முச்சந்தி ஆலமரம். அதன் இளங்கிளைகள் வெட்டி வீதியில் வீழ்த்தப்பட்டிருந்தன.இறைந்து இருந்த பச்சைக் குழைகளின் மீது வாகனங்களின் கரிய சில்லுத்தடங்கள் நீண்டு சென்றபடியிருந்தன. பின்னொரு நாளில் எண் திசைகளிலும் சுழன்றடிக்கும் சூறைக் காற்றில் வேரோடு பாறி விழ இருந்த முதிய ஆலமரத்தில் தான் இரண்டு பனை உயரமான தலைவரின் வண்ணக்‘கட்-அவுட்’நிமிர்த்திக் கட்டப்பட்டிருந்தது. விளக்கிலிருந்து விரிந்து செல்லும் பூதம் போலிருந்த தலைவரின் உருவம் மழமழப்பான கன்னங்களும், அடர்ந்த மீசையுமுடைய உறுதியான கோடுகளால் வரையப்பட்டிருந்தன. இடுப்பில் தொங்கிய அவருடைய கைத்துப்பாக்கியுள் உலர்ந்த சில குண்டுகளும், தண்டனைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தென்கோடியில் தனித்திருந்த சிங்களப் பெருநகரங்கள், சிறு கிராமங்கள் வரையும் தலைவரின் தலைக்கறுப்புத் தெரிந்தது. அவர் பவுண் சட்டமிட்ட கண்ணாடி அணிந்த தீர்க்கமான கண்களால் எல்லோரையும் கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் கருணை மிகுந்த கண்களிலிருந்து எந்த இண்டு-இடுக்குகளும் தப்பிவிடமுடியாது என ஊரார் பெருமிதம் கொண்டிருந்தனர்.
அதுவரை காலமும் சுற்றி வரத் தென்னங்கிடுகுகளால் அடைக்கப்பட்டிருந்த, மேற்கூரை இல்லாத கழிப்பறைகளே ஊரில் இருந்தன. அவற்றின் உள்ளே தோண்டிய குழியின் மேல் குந்தி இருக்க வாகுவாகத் தென்னங்குற்றிகள் அடுக்கப்பட்டு இருந்தன. மலம் கழிப்பதற்கு வாகுவாய் தென்னங்குற்றியில் காற்பாதம் அளவு உட்குழிவுகள் தேர்ந்த தொழிலாளர்களினால் செதுக்கப்பட்டிருந்தன. தேங்கி நொதிக்கும் மலத்தின் துர்வாடை வீசும் கழிப்பறை மறைப்பினுள் செல்லும் அச்சத்தில் ஊரில் சிலர் நெடு நாட்கள் மலங்கழிக்காமல் இருக்கும் நுட்பம் கைவரப் பெற்றிருந்தனர். என்றாலும் இண்டு-இடுக்கும் கண் உள்ளவரான தலைவரின் தீர்க்கமான கண்கள் குறித்த பெருமிதம், அச்சமாய் ஊரைச் சூழ்ந்த பின்னர் தான் மேற்கூரை இல்லாத கழிப்பறைகளுக்கு மேற்கூரை வேயும் அவசியத்தை ஊரார் உணர்ந்து கொண்டனர்.
அந்த ஊர் அழுகிய பழங்களை நொதிக்க வைத்துக் காய்ச்சி வடிக்கப்படும் பழுப்பு நிறமான <கசிப்பிற்கு> பிரபல்யமானது. அதனை வடித்து விற்கும் கைப்பக்குவம் மிகுந்தவரான, குண்டுக் கன்னங்களும், முழிக் கண்களுமுடைய பாண்டியன் ஊரில் இரண்டு விதங்களில் அறியப்பட்டிருந்தார்; ஒன்று , லெபனானில் ஆயுதப்பயிற்சி எடுத்திருப்பதாக அவரே சொல்லித்திரிந்தார். எந்த வருடம் யாருடைய அணியில் பயிற்சி எடுத்தீர்கள் எனச் சுடலை அவரிடம் கேட்ட போது, அந்த நாட்களில் எந்த ‘batch’ எந்த வருடம் என்ற வகைகள் ஏதும் இருக்கவில்லை எனவும் இவ்வழக்கம் மிகவும் பின்னாலே வந்தது எனவும் அது போராட்டத்தின் ஆரம்பம், இரண்டு பேர் சேர்ந்தால் ஒரு புதிய இயக்கத்தைக் கட்டலாம். மூன்று பேர் சேர்ந்து விட்டால் தாக்குதலைச் செய்ய முடிந்த காலம், அப்போது எல்லோரும் எல்லோருடைய அணியிலும் இருந்ததாகவும் சொன்னார். வேண்டுமானால் லெபனான் பெண்கள் குறித்த இரகசியம் ஒன்றைச் சொல்வதாகவும் முடிந்தால் சரிபார்த்துக் கொள்ளவும் எனக்கூறிச் சுடலையின் காதில் ரகசியமாக ஏதோ சொன்னார். அந்த இரகசியத்தைக் கேட்டுச் சுடலை தன்னுடைய பெரிய வெள்ளைப் பற்கள் தெரியத் தொடையில் அடித்துச் சிரித்தார். ஆனால், பாண்டியன் லெபனானில் அழுகிய பழங்களை நைச்சியமாகக் நொதிக்க வைக்கும் நுட்பத்தைத்தான் அறிந்து வந்தார் என்பதையே ஊரார் பலரும் நம்பினார்கள். அதற்கு ஆதாரமாக வலுவான இரு காரணங்களை அவர்கள் முன் வைத்தனர். ஒன்று குழந்தை இல்லாத பாண்டியன் பெண் வாசனை குறித்துப் பேசுவதற்கு அருகதை அற்றவர். இரண்டு, சைக்கிள் வால்ரியூப் கட்டையில் நெருக்கி அடைக்கப்பட்ட நெருப்புக்குச்சிகளின் துகள்களைக் கூட வெடிக்க வைக்கப் பயப்படுபவர் ஆயுதங்களைத் கைகளால் தொட்டிருக்கவே மாட்டார் எனவும் நம்பப்பட்டது. இவற்றைப் பொறுமையாகக் கேட்ட பாண்டியன் <அம்மாளாச்சி ஒருவனைக் கைவிட நினைத்தால் அவனைப் போராளியாக்கி விடுகிறாள்> என்றார்.
நாள் சந்தை கலையும் பின் மதியங்களில் பாண்டியன் அழுகிய பழங்களை மாத்திரம் தவத்தி எடுப்பதைப் பலர் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார்கள். பாண்டியன் காய்ச்சும் பழுப்பு நிறக் கசிப்பின் இரகசியம் மர்மமாக நீடித்த நாட்களில் அதன் சுவை பல்கிப் பெருகியதாகவும், கோதைநாயகியின் நிதம்ப வாசனையின் கிளர்ச்சியுடன் இருந்ததாகவும் முச்சந்தியில் வைத்துப் பல முறை சத்தியம் செய்திருக்கிறார் சுடலை.
அன்று முச்சந்தியிலிருந்த தலைவரின் ‘கட்-அவுட்டின்’ கீழே மெல்லிய பீங்கான் தட்டுகளில் வைத்துப் பாண்டியன் விநியோகித்த மஞ்சளும், சிவப்புமான தோடம்பழ இனிப்பின் சுவையும் அலாதியானதாக இருந்தது. அதன் மணம் அழுகிய பழங்களை ஒத்ததாகவும், சுவை மெலிதான புளிப்பிலும் இருந்தது. பாண்டியன் வெய்யிலில் பூஞ்சிய கண்களுடனும் உதடு நிறைந்த சிரிப்புடன் ஓடி…ஓடி இனிப்புகளை எல்லோருக்கும் கொடுத்தார். <குழந்தைகளே இது சமாதானத்தின் தித்திப்பான இனிப்பு உரிமையோடு சாப்பிடுங்கள்> இனிப்புகளைத் தம் இரண்டு கைகளாலும் வாங்கும் குழந்தைகள் அவரை அரைவட்டத்தில் சூழ்ந்திருந்தனர். தோடம்பழ இனிப்பிலிருந்த பொடியாக்கப்பட்ட சீனியின் மென்படலம் அவரைச் சூழ்ந்திருந்தது.
வீதியின் இருபுறமும் இயக்கத்தை வரவேற்க வரிசையில் காத்திருந்த ஊராரின் நாக்குகள் தோடம்பழ இனிப்பினால் சிவப்பும் மஞ்சளுமாக உருமாறி இருந்தன. சிவப்பும் மஞ்சளுமான நாக்குகளால் உதடுகளை ஈரப்படுத்தியபோது வெளிவந்த குளிர்ந்த சொற்களால் இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்களின் வருகையைக் கருணையோடு எதிர் கொண்டனர். < இனிக் குண்டுகள் இல்லை, துப்பாக்கிகள் இல்லை, சாவு அறிவித்தல்கள் இல்லை, வீரமரணங்கள் இல்லை, எதிரிகளும் இல்லை > என்று மகிழ்ந்தனர்.
இயக்கப் பொறுப்பாளர்கள் நீண்ட தூரத்தை நடந்தே கடந்து வந்திருப்பது அவர்களது உலர்ந்த உதட்டு வெடிப்புகளில் இருந்து தெரிந்தது. அவர்கள், அடிக்கடி குளிர்ந்த நீரைப்பருகியபடி மக்களை நோக்கிக் கைகளை அசைத்தனர். அவர்கள் மரபார்ந்த போராளிகளின் தோற்றத்தில் இருந்து மிகவும் மாறுபட்டுச் செழிப்பாக இருந்தார்கள். சுத்தமாகவும், நேர்த்தியாகவும் மடிப்புக் கலையாத ஆடைகளை அணிந்திருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் பிரதான வீதியிலிருந்து பிரிந்து செல்லும் கிரவல் வீதில் இறங்கி ஊரின் நடுவிலிருந்த பருமனான கல்லின் மேல் ஏறி நின்றார். அவரின் உருவம் எல்லோருக்கும் மிகத் துல்லியமாகத் தெரிந்தது. தடித்த உதடுகளும், கூர்மையான நீள் மூக்கும், உருண்டைக் கண்களும், சதைப்பற்றான கன்னங்களுடனும் இருந்தார். தன்னை, இந்த ஊரின் புதிய பொறுப்பாளர் என அறிவித்து விட்டு, அகன்ற பருமனான உள்ளங்கையை எல்லோருக்கும் உயர்த்திக் காட்டினார். அவை வெளிறி இருந்தன. < நன்றாகப் பாருங்கள் மக்களே பல சண்டைகளை வெற்றிகரமாக நடத்திச் சென்ற கை, பல எதிரிகளின் உடலைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்ட கை, கூடவே தலைவரின் ஆசியும் உள்ள கைகள் இனி உங்களை வழிநடத்தில் செல்ல இருக்கும் கைகள், இவை சாதாரணமான கைகள் இல்லை. போராளியின் ஆற்றல் மிகு கை> அதிக ரேகைகளே இல்லாத மழுமழுப்பான அவருடைய உள்ளங்கையில் ஆயுள்ரேகையின் தடங்கள் மட்டும் வற்றிய ஆற்றின் நீர்த் தடங்கள் போல ஆழமாகவும் நீண்டும் கிளைத்தும் இருந்தன. பொறுப்பாளரின் உள்ளங்கையைத் தன்னுடைய நீர் ததும்பும் கண்களால் உற்றுப்பார்த்த ஆச்சி <இவரை ஊரின் பொறுப்பாளராக ஏற்றுக் கொள்ளலாம்> என்று மடிந்த உதடுகளுள் முணுமுணுத்தார்.
பின் ஒரு மழை நாளில் அய்ந்து நிர்வாண உடல்கள் சிதறி இருக்க, இருக்கும் வீடு பொறுப்பாளருக்காக ஊர் மக்களால் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டுச் சுவர்களில் வெள்ளைச் சுண்ணாம்பு புதிதாகப் பூசப்பட்டிருந்தது. அதன் சுண்ணாம்பு வீச்சம் காற்றின் திசைகளில் எல்லாம் கலந்து ஊர் முழுவதும் அலைந்தது. முன்னர் அது பேய்கள் வாழ்ந்த வீடு என அறியப்பட்டிருந்தது. பேய்களுக்கு அஞ்சி வீட்டைத் தவிர்த்துச் சுற்று ஒழுங்கைகளாலும், பொட்டுகளினூடாகவும், வயல் வரப்புகளிலும் தடம் மாறி திரிந்த இளந்தாரிகள் எல்லாம் பொறுப்பாளரின் வீட்டிற்கு நம்பிக்கையுடன் வந்து சென்றனர்.
02.
பேய்கள் வாழ்ந்த வீடு
தடதடக்கும் ஒலியுடன் கிரவல் வீதியால் வந்த மோட்டார் வண்டியின் பின்னால் இந்திய இராணுவத்தினரின் சிறிய காலாட்படை அணி ஊரினுள் நுழைந்த போது ஊரார் வயல் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் வண்டியை ஓட்டி வந்த சிப்பாயின் கருந்தாடி அடர்ந்த, வெண்ணை உருகும் முகத்தில் இருந்த குறும்புன்னகை ஊராருக்குத் துர்ச்சகுனத்தின் அடையாளமாகத் தெரிந்தது. அந்த மோட்டார் வண்டியின் முன்னால் செம்மறி ஆடுகள் குறுக்கும் நெடுக்குமாக மிரட்சியுடன் ஓடி வந்தன.
அய்ம்பது ஆடுகளின் கத்தல்களையும்| கிழித்துக் கேட்டது, சிப்பாயின் மோட்டார் வண்டியின் தடதடக்கும் சத்தம். அந்த மோட்டார் சைக்கிள் கரியரின் இரும்புக் கிராதியில் செம்மஞ்சள் கயிற்றினால் பலமாகக் கட்டப்படிருந்தது ஆச்சியின் மகனின் நிர்வாண உடல். உடலில் தசைகள் பாளம் பாளமாக வெடித்து வாய் பிளந்து கிடந்தன. பற்கள் உதிர்ந்து விட்டிருந்தன. தலைமுடி கொத்துக் கொத்தாகப் பிய்த்து எறியப்பட்டிருந்தன. கிரவல் வீதியின் கற்களும் முட்களும் உடலைச் சல்லி சல்லியாகக் கிழித்திருந்தன. உழுத சிவப்பு வயல் போல சிவப்புத் திட்டுகளுடன் இருந்தது அந்த உடல். சிப்பாய்கள் குருதியில் ஊறிய நிர்வாண உடலை மாமரக் கிளையில் தலை கீழாகத் தொங்கவிட்டபோது இரவாகி விட்டிருந்தது. அப்போதும் உடலில் சிறு அசைவும், முனகலும் இருந்தது.
தலைகீழாகத் தொங்கிய உடலின் கடைசித் துடிப்பும் அடங்கியபோது, சுற்று வேலிகள் தாறுமாறாக வெட்டப்பட்டு மொட்டையாக நின்றிருந்தது வீடு. அந்த வீட்டில் இரவுகளில் செம்மறி ஆடுகளின் ஓலமும், நாய்களின் குரைப்பும் கேட்டது. அறைகளில் ஆச்சியின் மகனின் பச்சைக் குருதிவாடை மிகுந்திருந்தது. காலாட்படையினர் அந்த வீட்டைத் தம் தங்குமிடமாக மாற்றிய போது இருள் இன்னும் கருமையாக ஊரைச் சூழ்ந்து படிந்து போனது. அதன் பின்னரே ஊரார் அதைப் பேய்கள் வாழ்ந்த வீடு என அழைக்கத் தொடங்கினார்கள்.
பேய்கள் வாழ்ந்த வீட்டில் ஆச்சியின் மகனின் நிர்வாண உடல் இரத்தக் கண்டல் உள்ள பெரிய கறுத்தக் கொழும்பான் மாம்பழம் போல மாமரத்தில் தொங்கியது. நைலோன் கயிற்றில் உலர்ந்த குருதித்துளி சொரசொரப்பாகத் தேங்கி இருந்தது. அழுகிய உடலின் துர்வாடை ஊர் முழுவதும் அலைந்து திரிந்தது. ஆச்சி மகனின் நிர்வாண உடலின் தசைகள் திரவமாய் உருகி வழியத் தொடங்கிய நாளின் வெம்மையில் உடல் தீப்பற்றிக் கொண்டது. உடல், கொழுப்பு உருகி உருகி எரிந்தது. உடலின் தீய்ந்த வாசனை மாமரக் கிளைகளைகளில் கருமையாகப் படிந்தது. அந்தத் தீயின் வெம்மை மிகு நாக்குகள் ஊரின் இருள் மறைவுகளில் பதுங்கியிருந்த போராளிகளின் குருதிகளில் குளிரின் கூர்மையில் ஊடுருவிச் சென்றன.<பொடியள் ஒன்றுக்குப் பத்தாகக் கணக்குத் தீர்க்காமல் விட மாட்டார்கள்> என்றார் பப்பர். அதைச் சொன்னபோது அவருடைய கண்களில் பயம் தெரிந்தது.
அச்சிறிய இராணுவ அணி சில நாட்கள் பேய்களின் வீட்டில் தங்கியிருந்த போது அவர்கள் சாய்த்து வந்த செம்மறி ஆடுகள் வயல்களில் அடர்ந்திருந்த பச்சை மிளகாய், மரவள்ளிச் செடிகளை மென்று தீர்த்தன. செம்பழுப்புத் தீற்றலாய் இருக்கும் மிளகாய்ப் பழங்களைத் தேடிவந்த கிளிகள், மிளகாய்ச் செடிகளே இல்லாமல் இருந்த ஊரைப்பார்த்து ஓலமிட்டபடி திரும்பிச் சென்றன. ஊரின் தென்மூலையிலிருந்த ஆலமரத்தில் நெடுநாட்களுக்கு அந்த ஓலங்கள் தங்கியிருந்தன. வீட்டு முற்றத்தில் கட்டியிருந்த இராணுவ அணியின் பழுப்பு நிறத் தறப்பாள் வயல் காற்றில் அடித்தது. அதன் படபடக்கும் ஓசை காலாட்படையின் இருப்பை ஊராருக்கு நினைவூட்டியபடி இருந்தது.
பின்னர் ஊரிலுள்ள வீடுகளின் வேலிகள், குளியல் கிணறுகளின் வேலி மறைப்புகள் எல்லாம் சிப்பாய்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டன. ஊரின் மூலை முடுக்குகள் இண்டு இடுக்குகள் எல்லாவற்றையும் நீண்ட இரும்புக் கம்பிகளாலும், துப்பாக்கி நுனிகளாலும் சல்லடைபோட்டுப் போராளிகளை, ஆயுதங்களைத் தேடியபடியிருந்தனர்.
ஆச்சியின் மகனைத் தவிர ஒரு போராளியின் சாரத் தலைப்பைக் கூட சிப்பாய்களால் கண்டு பிடிக்க முடியவில்லை அந்த வன்மம் அவர்களை இன்னும்… இன்னும் மூர்க்கமாய் ஊரைத் தேடச் செய்தது. நெல் மூடைகள், வெங்காயப் பிடிகள் தொங்கிய அட்டாளைகள், மேற்கூரையில்லாத கழிப்பறை மறைப்புகள் என அவர்களின் தேடலின் நுணுக்கம் குறுகிச் சென்றது. பின் வயல் கிணறுகளில் நஞ்சு கலந்ததோடு அவர்களின் தேடல் முடிவிற்கு வந்தது. ஊரை விட்டு தள்ளி இருந்த பசிய நெல் வயல்களினுள் அல்லது அதற்கும் அப்பால் விரிந்திருக்கும் காடுகளினுள் போராளிகள் பதுங்கியிருப்பதாக நம்பினார்கள். << சிப்பாய்கள் போராளிகளை சரியாகத் அறிந்திருக்கவில்லை… அவர்கள் எதோ போராளிகளை தேவதூதர்கள் என்று நினைத்து விட்டார்கள்>> என்றார் சின்னாம்பி வாத்தியார். பழுத்த கம்யூனிஸ்ட் ஆகி விட்ட அவர் முன்னர் சூரியமல் இயக்கத்தில் சிங்களக் கிராமப்புறங்களில் தீவிரமாக இயங்கியவர். மலேரியத் தொற்றுக்கு எதிரான அவருடைய தியாகங்கள் இன்றும் அந்த ஊர்களின் நினைவுகளில் இருக்கின்றது.
நஞ்சு நீரை அருந்திய வயல் கிணற்று <ஜப்பான்> மீன்கள் வெள்ளைத் துண்டங்களாய் மிதக்கத் தொடங்கிய காலையில் இராணுவத்தின் சிறிய அணி ஊரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றது. மீதம் இருந்த ஆடுகளைச் சாய்த்தபடி அவர்கள் வெள்ளவாய்க்கால் கடந்து தரவை வெளிக்குள் இறங்கினர். தரவைவெளி நீண்டு வரட்சியானதாக இருந்தது. யப்பான் மீன்கள் இல்லாத கிணறுகள், பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் மலக்கிடங்குகள் போல பலநாட்கள் தேங்கி நொதித்தது. பாசியின் துர்நாற்றம் நீரினூடு மரவள்ளிச் செடிகளிலும், மிளகாய்ச் செடிகளிலும் திரண்டு ஊரின் நாசியை நிறைத்தது. அந்த மணமே அயலவர்களின் நினைவுகளில் இவ்வூரின் இருப்பாய் பன்நெடுங்காலம் எஞ்சியிருந்தது.
03.
பொறுப்பாளர்களின் காலம்
புதிய பொறுப்பாளார் பேய்கள் வாழ்ந்த வீட்டிற்கு வந்த பின்னர் துர்ச்சகுனத்தின் அடையாளமாக, தீமைகளின் பிறப்பிடமாக, இருள் அடர்ந்து இருந்த வீடு விடுதலையின் அடையாளமாக ஊர் மக்களின் நினைவுகளில் உருமாறியது. மூளை மடிப்புக்களில் கிளர்ந்த விடுதலையின் வேட்கையை மூடிச் சமாதானத்தின் தோல் வளர்ந்த போதும் அவர்களால் விடுதலையின் வேட்கையை மறக்கவே முடியவில்லை. விடுதலைக்கான வழிகளைத் தங்களினுள் தேடத் தொடங்கினார்கள்.
ஊரின் இருள் மடிப்புகளிலிருந்து எழுந்து வந்த சிறு திருட்டுகள், பாலியல் பிறழ்வுகள் என நம்பப்படுபவை எல்லாம் விடுதலைக்கு எதிரான கனதியான குற்றங்களாகப் பதிவாகத் தொடங்கின. முன்னர் அவை ஊரின் இயல்பான நிகழ்வுகளாகவே இருந்தன என்பார் பாண்டியன். <கசிப்பு அம்மாளாச்சியைக் குளிர்விக்கும் பானம் அதைத் தடை செய்வது அம்மனுக்கு எதிரான கலகம், கசிப்புத் தடைசெய்யப்படுமானால் நான் அதற்கு எதிராக படையைக் கட்டிப் போர் செய்வேன்> என்றார் சுடலை. கசிப்பு அருந்த முடியாத அவரது உடலும், உள்ளமும் வாடி, வெள்ளைச் சிரிப்பும் உள்ளொடுங்கி விட்டிருந்தது.
சுடலையிலிருந்து தொடங்கிய ஊரின் குற்றங்களின் பதிவுகளை எழுதிக் கை வலித்த போது பொறுப்பாளார் ஒரு பழைய கணினியை வாங்கினார். அதை இயக்குவது குறித்த சிக்கல்கள் வந்த போது பொறுப்பாளர் என்னைத் தன்னுடைய உதவியாளனாக அமர்த்திக் கொண்டார். நீர் நிரப்பிய வெளிர் நீல நிறத் துப்பாக்கியை மட்டுமே பார்த்திருந்த எனக்கு பொறுப்பாளரின் துப்பாக்கி, அதன் முனை வெளிறிய குண்டு பாயும் குழல், பழுப்புநிறக் கைப்பிடி குறித்த அச்சம் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.
பேய்கள் வாழ்ந்த வீட்டின் விசாலமான முற்றத்தில், கருகிய இலைகளை உதிர்க்கும் வெம்மை மிகுந்த மாமர நிழலின் கீழ், தேக்குமர மேசையில் பொறுப்பாளர் அமர்ந்திருக்கும் தோரணையும், விசாரணை செய்யும் முறைம் அச்சமூட்டுவதாய் இருக்கும். விசாரணையின் உச்சத்திற்கும் சில நொடிகள் முன்னர் அவன் தேக்குமர மேசையின் நடுவில் வைத்துச் சுழலவிடும் துப்பாகியின் குழல் எப்போதும் அவரை நோக்கியே தன் சுழற்சியை நிறுத்திக் கொள்ளும். அதுவே பெரும்பாலும் விசாரணையின் முடிவாகவும் இருக்கும்.
கட்டுப்பாடுகளும், இறுக்கங்களும் விடுதலை குறித்த கனவை இன்னும்… இன்னும் ஈரலிப்புடன் ஊராரின் நினைவுகளில் வைத்திருப்பதாக நம்பப்பட்ட ஒரு பின்னிரவில் தீமையின், அசுத்தத்தின் இருப்பிடமாக நீலப்படங்களை பொறுப்பாளர் அறிவித்தார். அறிவித்த பின்னிரவிலிருந்து ஊர் மக்கள் ஆவேசத்தோடு நீலப்படங்களத் தேடித் தேடி அழிக்க முனைந்தனர். ஆனால் அவற்றின் இருப்பு அச்சமூட்டுவதாகவும், அழிக்க, அழிக்க எண்ணிக்கை பெருகியபடியும் இருந்தன. அவற்றின் இருப்பு விடுதலை குறித்த கனவை, வேட்கையை நீர்த்துவிடச் செய்வதாகப் பொறுப்பாளர் திரும்பத் திரும்பச் சொன்னார்.
வெண்நிறத் தொடைகள், மயிரடர்ந்த யோனிகள், காலணிகள் நீக்கப்படாத நீண்ட கால்களின் சலனங்களைத் தேடித் தேடி ஊராரே ஊராரின் புத்தக அடுக்குகளினுள் பிரிக்கப்படாதிருந்த புத்தகங்கள், முதிரைக் கட்டில்களின் இருள் மூலைகளுள் கண்ணைக் கூசும் ஒளியைப் பீய்ச்சிய போது தீமையின், விடுதலை வேட்கையை நீர்க்கச்செய்யும் நீலப்படங்களின் சலனங்கள் பெரும் ஓலத்தோடு பொலபொலத்து உதிர்ந்தன.
முடிவாக நீண்ட நாட்களாக நகர்த்தப்படாதிருந்த அம்மிக் கற்களை நீண்ட அலவாங்குகளினால் புரட்டியபோது அதன் கீழ் நூற்றாண்டுகளின் பழமை ஊதா நிறப்பூச்சிகளாக ஊர்ந்தன. அதன் அடியில் பொலித்தீன் பைகளில் மிகக்கவனமாக பொதிசெய்யப்பட்ட ஏராளம் நீலப்படப்பிரதிகள் இருந்தன. அவை மிக நுட்பமாகவும் காற்றுப்புக முடியாததாகவும் தடித்த பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டிருந்தன. பொதி செய்யும் அந்த நுட்பம் முன்னர் தலைநகருக்கு இரகசியமாக ஆயுதங்கள் அனுப்பிய பேரூந்துகளின் இருக்கைகளின் தோல்களைக் கிழித்துப் பொதி செய்யப்பட்டதை அச்சொட்டாக ஒத்திருந்ததை ஊரார் ஆச்சரியத்துடன் நினைவு கூர்ந்தார்கள். கடைசிச் போரின் போதும் விலங்குக் கொழுப்புகளில் தோய்ந்த ஆயுதங்களைப் பொலித்தீன் பைகளில் கவனமாகப் பொதிசெய்து கடற்கரை மணலில் அவசர அவசரமாகப் புதைத்தபோதும் அதே நுட்பத்தையே போராளிகள் கைக்கொண்டனர்.
சிலர் அவை எதிர்காலச் சந்ததியினரின் பொருட்டுப் புதைக்கப்பட்டதாகவும், அதனைத் தோண்டுவது வரலாறைச் சிதைக்கும் செயல் என்றும் கலகம் செய்தனர். நீலப்படங்களுக்கு எதிரான அந்தக் கலகக் குரல்கள் – கலகக் குரல்களை மெல்லிய கீச்சிடல்களாகவும், மரநாய்களின் ஓலத்தினைப் போலச் செய்யும் ஒலிகளாகவும், துரோகிகளின் பாடல்களாகவும் மாற்றிவிடும் தந்திரம் தெரிந்த பொறுப்பாளரின் முன்னால் வெற்று ஓசைகளாகப் பொருள் அற்றுப் போய்விட்டிருந்தன.
குற்றங்கள் வழி தண்டனைகள் பெருகிய போது பொறுப்பாளர் இன்னும்… இன்னும் மிக நூதனமான தண்டனைகளுக்கான வழிகளைத் தீவிரமாக முயன்று பார்க்கத் தொடங்கினார். கோழிகள் அடைக்கும் பிரப்பம் நார்க்கரப்புகள் பேய்கள் வாழ்ந்த வீட்டின் முற்றத்தில் நிரையாக வைக்கப்பட்டன. முள்ளுக்கரப்புகள் இராணுவ முகாம்களிலிருந்து வெட்டியெடுத்த முள்ளுக்கம்பிகளை வளைத்தும், நெரித்து தேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்தன. நிமிர்த்தி வைத்தால் ஆறுமாதக் குழந்தை கைகால்களை நீட்டித் உறங்குவதற்குப் போதுமான சிறிய முட்கரப்புகள். குற்றங்களின் தன்மைகள் துல்லியமாக அளந்து தண்டனை வழங்கப்பட்டபோது, பிரப்பங்கரப்புகளினுள் கால்களை மடக்கி முதுகை வளைத்து நீண்ட நாள் குந்தியிருப்பது, அப்படியே மலங்கழிப்பது ஊராரின் வீர விளையாட்டாக மாறியது.
சுடலை வீர விளையாட்டிற்குப் பலமுறை முயன்றும் கூடைக்குள் மடங்கிக் குந்தியிருக்கும் இரகசியம் வசப்படவில்லை. கசிப்பு அருந்தும் வேட்கையில் அவர் அதற்கு வெறித்தனமாக முயற்சித்தும் அதன் நெளிவு சுளிவுகளுக்கு முதுகு வளைந்து கொடுக்கவில்லை. நல்ல திடகாத்திரமான அவர், ஓர் ஆறு மாதக் குழந்தையாக மாறுவது ஒன்றும் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. முடிவில் முள்ளுக் கம்பிகள் தைத்த உடற்காயத்தோடு < அவர்கள் பற்களைப் பிடுங்கி அவர்களின் வயிற்றினுள்ளே போடவேண்டும்> என்றார்.
எச்சரிக்கைக் கடிதங்களையும், தண்டனையை உறுதிசெய்யும் இறுதிக் கடிதங்களையும் பழைய கணினியில் எழுதும்போது எச்சரிக்கை அல்லது தண்டனை என்ற சொல்லைத் தடித்த சிவப்பு எழுத்துகளில் பெரிதாகவும் அழகாகவும் எழுதினேன், கடிதங்களின் ஓரங்களில் தங்க விளிம்புகளில் கோடுகளும் கட்டங்களும் வரைந்தேன். குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரைத் தடித்த எழுத்திலும் எழுதினேன். ஆரம்பத்தில் ஒவ்வொருவருக்கும் தனித் தனிக்கடிதங்கள் எழுத வேண்டியிருந்தது. சில நாட்களில் எழுதும் தொழிநுட்பம் கைவரப் பெற்றதும் பெயர்களையும் குற்றங்களையும் மாத்திரம் மாற்றினால் போதுமாக இருந்தது. தண்டனை பெரும்பாலும் எல்லோருக்கும் ஒன்றாகவே இருந்தது. கடிதங்களை அச்சடிக்கும் போது கருப்பு வெள்ளையாகவே அச்சடித்தனர். ஓரத்தின் தங்க விளிம்புகள் மிகவும் மங்கலாக வெளிறித் தெரிந்தன. தடித்த எழுத்திலிருந்த பெயர்கள் நிறம் குறைந்தும், சிதைந்துமிருந்தன. தண்டனைகள் துல்லியமாகவும் கச்சிதமாகவும் தடிப்பாக அச்சாகியிருந்ததை ஊரார் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர்.
எச்சரிக்கைக் கடிதங்களின் வழி கோதைநாயகிக்கு மூன்றாவது கடிதத்தையும் கறுப்பு – வெள்ளையில் அச்சடித்து அனுப்பிய சில மணிகளின் பின் வேலிக்கதிகால்களை விலக்கிக் கோதைநாயகி பேய்கள் வாழ்ந்த வீட்டிற்கு வந்தார். அரக்கு நிறச்சாயம் போன சாக்குத் துணி பையும் ஓரிரு அலுமினியப் பாத்திரங்களும் பெரிய மீன் கண்களும் உறுதியான தோள்களும் அவரிடம் இருந்தன. உலர்ந்த தேகமும் பிசிறல்கள் இன்றிப் பின்னிக் கட்டப்பட்டிருந்த கருங்கூந்தலும் ஆண்வாடை நிறைந்திருந்த வீட்டினுள் பின்வாசல் வழியாக மெல்ல நுழைந்தது.
ஊரின் முச்சந்தியில், படுக்கை அறைகளில் பகிரப்படும் இரகசியக் கதைகளின் சுவடுகளற்ற கோதைநாயகியின் தூய சிரிப்பும், ஆயுதங்களைப் பொதி செய்யும் வலிய நுட்பமும் பொறுப்பாளருக்குச் சில மாதங்கள் தேவையானதாக இருந்தது. கோதைநாயகி மூன்றாவது எச்சரிக்கைக் கடிதத்தையும் சுக்கு நூறாகக் கிழித்து மலக்குழியில் வீசியதை அறிந்து கொள்ள பொறுப்பாளருக்குச் சில வாரங்களானது.
மூன்று நாட்கள் கரித்துண்டால் வரைந்த சதுரத்தினுள் குந்தியிருந்து பழங்கதைகள் பல சொன்னார். காணாமல் போன கணவன் குறித்து ஒரு வார்த்தையும் கோதைநாயகி மறந்தும் பேசாதிருந்ததை அடிக்கடி நினைவு படுத்தினார் பொறுப்பாளர். தண்டனை வழங்க, கோதைநாயகி புதைத்து வைத்த, மறந்து போன கணவனின் நினைவுகளே போதுமானதாக இருந்தது.
தண்டனை நாளுக்கு முந்திய இரவில் கோதைநாயகியின் குதிக்காலில் இருந்து படர்ந்த மெல்லிய வலியை நாடி பிடித்துப் பார்த்த ஆச்சி, குழந்தைப்பேறின் நாளை தன்னுடைய தளர்ந்த விரல்களை எண்ணித் துல்லியமாகச் சொன்னார்.
நான், சுடலை, பாண்டியன், பொறுப்பாளர், ஆச்சியின் மகன் என எல்லோரது முகங்களிலும் சந்தேகத்தின் ரேகைகள் சிவந்த கோடுகளாய் படர்ந்தன.
சந்தேகத்தின் ரேகைகள் ஊராரின் இரசிய உரையாடல்களில் பல கதைகளாகப் பெருகிய மழை நாளின் பகற்பொழுதில் கோதைநாயகி அழகிய மகவைப் பெற்றெடுத்தார். அதன் தொப்புள் கொடியைப் பெருவிரல் நகத்தினால் கிழித்து முடிந்து கொண்ட போது குழந்தையின் அழுகை , மழை ஈரத்தினையும் கிழித்து ஊராருடைய காதுகளிலும் அச்சத்தின் ஒலியாகக் கேட்டது.
படபடப்புடன் ஓடிச் சென்று குழந்தையின் முகம் பார்த்த நான் புதிய எச்சரிக்கைக் கடிதத்தை நடுங்கும் விரல்களால் கணினியில் எழுதத் தொடங்கினேன்.
2016 செப்டம்பர்