போரிலன் ஆதல் | செவ்வி | யதார்த்தன்

ஈழப் புனைவுகளில் வடிவ கச்சிதத்தை அடைந்தவர் ஷோபாசக்தி. அவருடைய படைப்புகளில் நிகழ்ந்தது ஈழப் புனைவுகளின் ஓர் உச்சம். அவரது நாவல்கள் வடிவத்தால் சிறியவை. சிறு கத்தியால் கச்சிதமாக நறுக்கப்பட்டவை. ஆனால் புனைவினால் சாத்தியமான உச்ச எல்லைகளைத் தொட்டு மீளக் கூடியவை. போரின் வன்முறை, அராஜகம், அதிகாரத்தின் முன் சமானியனின் தத்தளிப்பு, நவீன அரசின் குரூரம் போன்ற தனிமனித அனுபவ எல்லைக்குள் இருந்து அமைப்பை, அதிகாரத்தை விமர்சனபூர்வமாகப் பேச அவருடைய சிறிய நாவல் வடிவங்கள் தோதானவை. அதனை இன்னுமே கூர்மையும் பகடியுமாக கையாண்டது ஷோபாசக்தியின் தனித்துவம். கொரில்லா, ம், சலாம் அலைக் போன்றன வடிவத்தினாலும் அந்த வடிவத்தினுள் இயைந்த உள்ளடக்கங்களாலும் புனைவில் செறிவானவை. ஆகவே வெற்றிகரமான முன்மாதிரிகள் ஆகக் கூடியவை. அப்படி அவை பின்னால் எழுந்த வந்த பலருக்கும் வடிவ முன் மாதிரிகளாக இருக்கின்றன.
ஈழத்தின் செறிவான புனைவுகள் என்று நுண்ணுணர்வுள்ள ஓர் இலக்கிய வாசகருக்கு வாசிக்கக் கிடைப்பவை இத்தகைய சிறிய வடிவங்கள் தான். லங்காபுரி ராஜா, தனி ஒரு வீடு, குடை நிழல், கோவிந்தன், நிலக்கிளி, கொரில்லா, ம், ஆறாவடு, நஞ்சுண்ட காடு, கொலம்பசின் வரைபடம், கல்விரல், போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால் ஈழம் தவற விட்ட இன்னொரு வகைப் புனைவும் இருக்கிறது. பெரு நாவல்கள். வடிவச் செறிவான சிறிய நாவல்கள் ஒரு வகை என்றால், விரிந்த வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்கும் பெரு நாவல்கள் இன்னொரு வகை. பக்க எண்ணிகையால் அல்ல, அவை தங்கள் மொழியால் அள்ளியெடுக்கும் விரிந்த வாழ்க்கைப் பார்வையால் புனைவின் பெரு விரிவை அடைபவை. அப்படியான பெரு நாவல்கள் ஈழத்தில் அரிது. நம் இலக்கிய முன்னோடிகளிடம் கூட பெரு நாவல் முயற்சிகள் இல்லை. காரணம் பெரும்பாலும் அவர்கள் நவீனத்துவர்கள். அதன் முக்கியமான இயல்பு தனிமனித நோக்கு. அல்லது மனிதாபிமானத்தின் குரல். மு.தளையசிங்கம், எஸ்.பொ போன்றவர்களின் நாவல்கள் கூட அளவிலும், வாழ்க்கை நோக்கினாலும் சிறியவை. கே.டானியல் ஓரளவு விரிவான வாழ்க்கையை எழுதியிருக்கிறார். அவருடைய நாவல்களின் எல்லை சோசலிச யதார்த்தவாதம். ஆனால் அதை மீறும் பல பாண்பாட்டு அம்சங்களும் கே.டானியலிடம் உண்டு. அது அவருடைய தனித்துவம்.
முழுமையான அர்த்தத்தில் நம்மிடம் விரிவான யதார்த்தவாத நாவல்கள் ஒன்று கூட இல்லை. ஒரு குடும்பம் சிதைகிறது, விஷக் கன்னி, நீலகண்ட பறவையைத்தேடி. ஆரோக்கிய நிகேதனம், அரை நாழிகை நேரம், அரசின் மீதான எள்ளல் நிறைந்த தர்பாரி ராகம். அல்லது நிகர் வாழ்வனுபவமாக எழுதப்படும் பூமணி, சோ.தர்மன், கண்மணி குணசேகரன் போன்றவர்கள் எழுதும் இயல்புவாத நாவல்கள். நம்மிடமிருக்கும் ஓரளவுக்கு பெரு நாவல் வரிசை என்றால் தேவகாந்தன் நாவல்கள், நோயல் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை, பின்னர் சயந்தனின் ஆதிரை. பிறகு யதார்த்தனின் நகுலாத்தை. தேவகாந்தன், சயந்தன் இருவரது நாவல்களும் யதார்த்தவாத நாவல்கள். புனைவு சிடுக்கு, படிமமாக்கல், உன்னதம் போன்ற புனைவின் அம்சங்களை விட பெரும்பாலும் சம்பவங்களால் ஆனவை. ஆனால் யதார்த்தவாதத்திற்கு வேண்டிய விரிவான புறச்சூழல், துல்லியமான நுண் தகவல்கள், விரிவான மனவோட்டங்கள், துல்லியமான கதாபாத்திரங்கள் போன்ற அடிப்படை அம்சங்களில் குறைபாடுடையவை. அவற்றின் கதைப்பின்னல் என்பது நீள் கதையிலும் கொஞ்சம் மீறிய சம்பவங்களின் தொடர் வரிசைதான். நோயல் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை நல்ல நாவல். அதில் யதார்தத்தை மீறும் பல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அது விலங்கு மருத்துவம் என்ற தொழில் எல்லைக்குள் மட்டுப்பட்டிருப்பதால் அதில் பெருநாவலுக்கான விரிவு சாத்தியமாகவில்லை. ஆக, யதார்த்தனின் நகுலாத்தை மட்டுமே அதன் முழுமையான அர்த்தத்தில் பெரு நாவல் எனும் வகைமைக்குள் வரக்கூடியது. விரிவான வாழ்க்கைச் சித்திரம். புறச்சூழல் விபரணைகள், தொன்மங்கள், வரலாறுகள், சிறு தெய்வங்கள், நம்பிக்கைகள் என அதன் புனைவுக் கவனம் விரிந்தது. அது ஓரளவிற்கு விரிவாகவே வாழ்வை எழுதி இருக்கிறது. குறிப்பாக போர் நிலத்தின் வாழ்வை. அதன் மனிதர்களை, அவர்களின் பல்வேறு உணர்வுகளை. இதுவே ஈழப் புனைவில் யதார்த்தனின் தொடக்கம். ஈழ நாவல் தன் பரிணாமத்தில் தவற விட்ட ஒரு மரபணுத் தொடர்பை தொட்டெடுத்ததே அவருடைய முதல் நாவல் முயற்சி.
நகுலாத்தையில் தொடங்கிய புனைவுகள் இப்போது தோறை வரை வந்திருக்கிறது. நகுலாத்தை மொழி வட்டார வழக்கின் பனி புகாரினுள் அமிழ்ந்திருந்தது. அதனால் அதன் எல்லைகள் குறுகியிருந்தன. குறிப்பாக தொன்மங்கள், நாட்டார் தெய்வங்கள் போன்றன சம காலத்துடன் புனைவில் இணையும் இடங்களில் வட்டார வழக்கு அவரைக் கைவிட்டிருந்தது. ஆனால் தோறையில் வட்டார வழக்கின் சத்தான கூறுகளுடன் செவ்வியல் தமிழும் கலந்து விட்டிருக்கிறது. அது புகார் கலையும் போது மின்னும் காலை வெளிச்சமாகச் சொல்முறையில் வெளிப்படுகிறது. சொல் முறை, வெளிப்பாட்டில் இருந்த வட்டாரச் சிடுக்குகள் மொழியால் களையப்பட்டதும் தோறை நாவல் சரளமாக வாசிக்க முடிகிறது. நகுலாத்தை மொத்தமாக வாழ்வைத் தொகுத்தளித்திருந்தாலும், சம்பவங்கள் என்பதற்கு அப்பாலான ஒரு புனைவுத் தருணம், நாடகீயம், அல்லது கவித்துவ உச்சம் போன்றவற்றை அடைய முடியவில்லை. காரணம் சித்தரிப்பு மொழியின் வட்டாரச் சாய்வு. அந்தப் போதாமையைச் சரியாக இனம் கண்டு, மேலெழுந்த இடத்தில் அவர் போரிலன் ஆகிவிடுகிறார். ஈழப் போரை அனுபவம்- பதிவு என்ற எல்லைகளைக் கடந்து புனைவின் பகுதியாக்க முடிகிறது. இங்கிருந்தே அவரது புதிய புனைவுக் காலகட்டம் தொடங்குகிறது. கனமான ஆனால் உணர்சிகரமான இரும்புக் கூண்டை பிராயத்தனதுடன் உதறிப் பறக்கும் பரவச கணம். காய் கனிந்து காம்பிலிருந்து உதிரும் தருணம். போரை விலகலுடன் அணுகும் தன்மை. அந்த உருமாற்றத்தின் பாதையை தொகுத்தளிக்கிறது இந்த நேர்காணல்.
பழந்தமிழ் இலக்கிய வாசிப்பினூடு, நவீன புனைவு மொழிக்கான தடம் தேடும் பயணத்தில் போரின் பாடுகள் பின்னடைந்து போக, உணர்ச்சிப் பின்னணியில் அடக்கமாக இருந்த வாழ்வின் நுண்-தருணங்கள் மேலெழுந்து வருகின்றன. தோறையில் ஒரு சித்தரிப்பு. போர் முடிந்து எல்லோரும் தறப்பாள் முகாங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மழைக்காலம். சரியாகப் பராமரிக்கப்படாத மலக்குழி தூர்ந்து, வயதான பெண் அதனுள் வீழ்ந்துவிடுகிறார். மீட்க முடியவில்லை. முடிவில் எல்லோருமாகச் சேர்ந்து தூர்ந்த மலக்குழியின் மேல் மண்ணை அள்ளிப் போட்டு வயதானவரை மூடிவிடுகிறார்கள். மழை நீர் வடிந்தோடிய பின்னர் மலக்குழி சிறு மேடாக நீரோடிய செதில் வரிகளுடன் கிடக்கிறது. பின்னொரு நாள் கனமான மனநிலையில் நாவலின் ஓர் கதாபாத்திரமான ‘தாலிக்கொடி’ அந்தச் சிறு மேட்டைப் பார்க்கிறான். அங்கே வெள்ளை நிறப் பூக்கள் பூத்திருக்கின்றன. பட்டிப் பூக்கள். ஓர் அவலத்தின் மேல் பூப்பரவல் அலையாகப் படர்ந்திருக்கிறது. உடல் புதையுண்ட மேட்டில் பூந் தளிர்கள். அவர் போரிலன் ஆகிவிட்டதாலேயே இப்படிப் பல நுண் தருணங்களை தோறையில் அவரால் தொட்டெடுக்க முடிந்திருக்கிறது.
தர்மு பிரசாத்
03.11.2026
***
தர்மு : பழந்தமிழ் இலக்கியம் குறித்து தொடர்ந்தும் எழுதி வருகிறீர்கள். தமிழ் காவிய மரபு ஈழ சமகால இலக்கியத்துடன் எப்படி ஒத்துப் போகிறது?
யதார்த்தன் : எங்களுடைய பாடசாலை உயர்தர பாடத்திட்டத்தில் கம்பராமாயணத்தில் இருந்து கைகேயி சூழ் நிலைப்படலம் என்ற பகுதி இருந்தது. நூறு பாடல்கள். பரீட்சைக்காக அல்லாமல் இலக்கியமாக அதை உள்வாங்கி வாசிக்கவும் உரையாடவும் வாய்த்தது. அதுவொரு நல்ல தொடக்கம். அதுவும் கம்பராமாயணம். உலகின் மகத்தான பேரிலக்கியங்களில் ஒன்றாக தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்ட பெருங்காவியம். ஓர் நல்ல இலக்கிய வாசகர் மரபிலக்கியங்களில் வேர் விடாமல் நவீன இலக்கியம் மீது நின்று பெருக முடியாது. தனியே நவீன இலக்கியத்தோடுதான் நிற்போம் என்றால் கால்கள் இல்லாமல் ஆவிகளைப் போல் அலைந்து மறைய வேண்டியதுதான். குறிப்பாக தான் அறிந்த மொழிகளில் கிடைக்கக் கூடிய எல்லாச் செவ்விலக்கியங்களையும், பேரிலக்கியங்களையும் வாசித்துக் கொண்டிருக்க வேண்டும். ஓம், அதுவொரு வாழ்நாள் செயற்பாடு என்றே சொல்வேன். வெறும் பக்கங்களை மென்று துப்புவதற்கு எழுதப்பட்டவை அல்ல. மரபிலக்கியத்தில் உள்ள பேரிலக்கியங்களும், சரி நவீன இலக்கியத்தில் இருக்கக் கூடிய பேரிலக்கியங்களும் சரி மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியவை. கம்பனும் டால்ஸ்டாயும் அப்படி வாசிக்க வேண்டியவர்கள்.
காவியம் வாசிக்கும் போது அதைப்பற்றிய எழுத்து என்னுடைய கருத்தை அல்லது தொகுத்துக் கொள்ளுதலை செய்வதற்கும் அதற்காக காவியங்கள் பற்றிய வாசிப்பையும் உரையாடல்களையும் நிகழ்த்துதற்கும் மிக உதவியாக இருக்கிறது. மொழிவழிப்பண்பாடு என்பதே நம்முடைய பண்பாட்டின் அடிப்படை. காவியங்கள் மொழியில் நிகழக் கூடிய உச்சங்களின் முதன்மையானது. குறிப்பாக நிலப்பிரபுத்துவ காலச் சமூகங்கள் கொண்டிருக்க கூடிய இலக்கியங்களில் நிகழும் காவியங்கள் அச்சமூகம் தன் பண்பாட்டின் உச்சமான அடைவுகளை நிகழ்த்திக் கொண்டு மேலெழுகிறது என்பதற்கான வெளிப்படையான சான்று. சொல்லப்போனால் அப் பண்பாட்டில் இருந்து மிகச்சிறந்த விதைகளைத் தேர்ந்து எடுத்து கோபுரக் கலசத்தில் இட்டு வைப்பதைப் போன்றது. அடுத்த ஆயிரமாண்டுகளுக்கு அக்காவியங்களே பண்பாட்டை முன்னெடுத்துச் செல்லப் போகின்றன என்பதற்கான முத்தாய்ப்பு. இன்றைக்கு காவியங்களின் இடங்களை நாவல்கள் நிரப்பினாலும் அவை நின்றிருப்பதும் காவியங்களின் மேலேதான். காவியங்கள் நிலப்பிரபுத்துவத்தைச் சேர்ந்தவை, நாவல்கள் சனநாயக யுகத்திற்குரியவை. என்றாலும் மரபின் மீது நின்றுதான் நாவல்கள் வளர்ந்தெழ வேண்டும் என்பதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் காவியத்திற்கும் நாவலுக்கும் வரலாறும் தத்துவமுமே அடிப்படையானவை.
தமிழ் நாடோ, இலங்கையோ புலமோ எந்த நிலத்தில் என்றாலும் தமிழ்ப்பண்பாடு என்பது அதன் காவிய மரபின் தரிசனங்களில் இருந்து வந்தவை அல்லது திரட்டி அளிக்கப்பட்டவைதான். அப்படிப்பார்த்தால் ஈழ இலக்கியத்திற்கும் தமிழ்க் காவியங்களே முன்னோடிகள். ஈழ இலக்கியம் என்பது வெறும் நிலம் சார்ந்த, பிரயோக அரசியல் சார்ந்த பிரிப்பு மட்டுமே அவ் எல்லைக் கோடுகள் இலக்கியத்திற்குப் பொருட்டில்லை. ஈழத்து இலக்கியம் என்ற அடையாளப் படுத்தல் மிக நடைமுறை சார்ந்த தேவையாக மட்டுமே உள்ளது. ஒடுக்கு முறை, அடையாள அரசியல் சார்ந்தும் அதற்குத் தேவைகள் இருக்கலாம் , ஆனால் நீண்டு பார்க்கின்ற இலக்கியத்திற்கு இதுவொரு அழுத்தமான பொருட்டில்லை. அது ‘சரி இருக்கட்டும்’ என்று குறைந்த பட்சக் கருணையோடு இப்பிரிப்புகளை அனுமதித்திருக்கிறது. அதனால் என்றைக்கோ இவ் ஈழ இலக்கிய அடையாளம் கைவிட வேண்டிய ஒன்று என்ற எண்ணமும் இருக்க வேண்டும். இருக்கா விட்டாலும் அது கைவிடப்பட்டே ஆகும். மொழி அடையாளத்தையே அது அழுத்தாமல் கடந்து போகிறது. இன்றைக்கு ஆங்கில இலக்கியம் என்பது பிரிடிஷ் இலக்கியம் என்றா அடையாளப்படுத்தப் படுகிறது? சமகாலத் தமிழ்ச் சூழல் மீண்டும் மரபிலக்கியங்களை, குறிப்பாக காவியத்தை வாசிக்கத் தொடங்கி இருக்கிறது. நாவல்கள் எழுகின்றன. அறிவியக்கங்கள் வளர்கின்றன. பழைய சருகுகள் எரிந்து அழிந்து சாம்பலில் இருந்து புதுக்காடு துளிர்க்கும் காலமாக இக்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறேன். அது அவ்வாறுதான் நிகழும்.

1. எழுத்து
தர்மு : உங்கள் முதன்மை அடையாளம் எது? புனைகதையாளரா? சமூகச் செயற்பாட்டாளரா? பண்பாட்டு வாசிப்பாளரா? இல்லைக் கவிஞரா?
யதார்த்தன் : கவிதை, புனைவு, பண்பாட்டு வாசிப்பு மூன்றும் ஒரே கூடைக்குள் இருக்க வேண்டியவை என்றுதான் சொல்வேன். அப்படிப்பார்த்தால் நான் முழுக்க முழுக்க எழுத்தாளன். இலக்கியச் செயற்பாட்டாளன். சமூக செயற்பாடுகளில் இருந்து முழுமையாக என்னை விடுவித்துக் கொண்டு விட்டேன். அது என்னுடைய பணி கிடையாது என்று அறிய பத்து வருடங்களை அதற்கு அளித்து கண்டறிந்திருக்கிறேன். இதன் பொருள் அதுவொரு தவறான பாதை என்பதல்ல. அது பயனற்றது என்பதல்ல. ஒருவகையில் அதைக் கண்டுகொள்வதற்கு ஆளுமையாக என்னை நானே தொகுத்துக் கொள்வதற்கு அப்பணிகள் உதவின என்பதே சொல்ல வேண்டியது. கவனித்துப் பாருங்கள் பெரும்பாலான மகத்தான எழுத்தாளர்கள் அமைப்புகளில் இருந்தவர்கள், பண்பாட்டு அரசியலில் ஈடுபட்டவர்கள். அதை என்றைக்கும் அவர்கள் தவறான முடிவாகச் சொன்னதில்லை. அவற்றின் முடிவு கசந்தே போனாலும். முழுக்க அதற்கு தம்மை அர்ப்பணித்து கடைசியில் கசந்து அதையே வைது கொண்டும் நொந்து கொண்டு தேய்ந்தொழிந்தவர்கள் எத்தனை பேரை அறிந்திருக்கிறோம். தொழிற்சங்கத்திலோ, கட்சியிலோ, பண்பாட்டு அமைப்புகளிலோ இருந்து வெளியேறி எழுத்தாளராகவோ கலைஞராகவோ மாறிய எவரும் அக்காலத்தைக் கசந்து சொல்லி இருக்கிறார்களா, புறணியோடு தேய்ந்தழிந்து போயிருக்கிறார்களா?
சில வருடங்களுக்கு முன்பு எழுதிய என்னுடைய கட்டுரை ஒன்றில் போருக்குப் பிறகு நிகழும் இக்காலத்தை பண்பாட்டு அமைப்புகளின் காலம் என்று குறிப்பிட்டேன். இன்றைக்கும் அதே எண்ணத்தோடுதான் இருக்கிறேன். சிவில் சமூகங்களில் உருவாகும் பண்பாட்டு அமைப்புகள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளும் காலம். பண்பாட்டு அமைப்புகளில் தொடர்ச்சியாகச் செயற்பட்டு அதன் வழியே மாற்றங்களையும், சமூக அசைவையும் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். வரலாற்றையும் அதன் முரணியக்கத்தையும் விளங்கிக் கொள்வதற்கு அடிப்படையான மாக்சியம் சார்ந்து அந்தோனியோ கிராம்சியின் சிந்தனைப் பள்ளியை நம்பிக்கையுடன் முன் வைப்பவன் நான். சிவில் சமூக அமைப்புகளின் அல்லது பண்பாட்டு அமைப்புகளின் மீது நம்பிக்கையுள்ளவன்
இலக்கியம், மரபுரிமை, குயர் சமூகங்கள், அரசியல் போராட்டங்கள் என்று பல்வேறு பண்பாட்டுச் செயல்வாதங்களில் கிடைத்த அனுபவங்களில் இருந்து இக்கருத்தை இன்னும் உறுதியாக உதாரணங்களோடு சொல்ல முடியும். ஏனென்றால் நாங்கள் பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கி நடாத்தி வெற்றியும் பெற்றோம். கண்ணுக்கு முன்னால் மாற்றங்களைக் கண்டோம். நாங்கள் உருவாக்கிய சமூக செயற்பாட்டு அமைப்பான விதை குழுமம் இலங்கையின் வரலாற்றில் உருவான ஆயுதம் தாங்காத, கட்சி அரசியல் சாராத பண்பாட்டு அமைப்புகளில் முதன்மையானது என்று சொல்வேன். பத்துவருடங்கள் விதை குழுமம் செய்த பண்பாட்டு அசைவுகளை முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுதப்போராட்டம் நடத்திய எந்த அமைப்பும் செய்ததில்லை என்று எழுதி அதன் கீழே கையெழுத்திடுவேன். ஆயுதப் போராட்டம். பேரழிவுடன் தோற்றுப்போனது. நாங்கள் வென்றோம், மாற்றினோம். நம்பிய கருத்தை, செயலை நிறுவினோம். அதனால்தான் இதை இத்தனை உறுதியுடன் சொல்ல முடிகிறது. இது பண்பாட்டு அமைப்புகளின் காலம் என்று வரையறுக்க முடிகிறது.
பண்பாட்டு அமைப்பிலிருந்து தோற்றுப்போய் விலகி இருந்தால் கசப்பில்தான் போய் முடிந்திருப்பேன். எளிய உலகியலுக்குத் திரும்பி இருப்பேன். நிறைவோடு இது என்னுடைய பணியல்ல; நான் எழுத்தாளன் என்பதை உணர்ந்த போதே அங்கிருந்து எழுந்து வர வேண்டியிருந்தது. எனக்கு அளிக்கப்பட்டிருப்பது கற்பனை. மொழி என்னுடைய வழிமுறை. என்னுடைய ஆய்வு வேலைகள், மேற்படிப்புகளைக் கூட நிறுத்தி விட்டேன். புனைவுகளின் போது தேவைப்படும் ஆய்வுகளை மட்டும் செய்வதுண்டு. முழுநேர எழுத்தாளராக ஆகவேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்குள்ள கனவுகளில் மிகச்சிறியது. முழுக்க முழுக்க வாழ்க்கையை இலக்கியத்திற்கு அளித்திருக்கிறேன். கழுத்தை அரிந்து படைத்திருக்கிறேன். இலக்கியம் தலைகேட்கும் தெய்வம்தானே.
தர்மு : நீங்கள் சில கவிதைகளும் எழுதியதாக ஞாபகம்.
யதார்த்தன் : உண்மையில் என்னுடைய முதன்மையான கனவு கவிதையை எழுதுவதுதான். அதோடு நாவலிலும் சிறுகதையிலும் கூட அப்படியொரு தருணம் நிகழ வேண்டும் என்பதும் முக்கியம். ஏனென்றால் கவிதையே எல்லா இலக்கிய வடிவங்களிலும் மேன்மையான வடிவம். இலட்சிய வடிவம். அது நிகழாத நல்ல நாவல் ஒன்றேனும் இருக்கிறதா. ஒரு சொல்லிலோ ஐநூறு பக்கங்கள் சேர்ந்தோ கவிதை நிகழலாம். எல்லா வாசகரும் கவிதை வாசிக்க வேண்டும், எல்லா எழுத்தாளர்களுக்குள்ளும் தனக்குள் இருக்கும் கவிஞரைச் சந்திக்கும் விழைவு இருக்க வேண்டும். நான் கவிதை படிப்பதில்லை என்கிற வாசகரையோ எழுத்தாளரையோ வியந்து வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அது எப்படி என்று எனக்குப் புரிபடுவதே இல்லை. தூலமான கவிதை வடிவத்தில் எழுத முயற்சி செய்திருக்கிறேன். இன்னும் செய்யும் எண்ணம் உள்ளது. ஓம் எனக்கு கவிதை எழுத வேண்டுமென்ற விருப்பம் உண்டு.
தர்மு : யுத்தத்தை தொடர்ந்து செல்லக் கூடிய பால்யமே உங்களுக்கு வாய்த்திருந்தது. சரசாலை, தென்மராட்சி, வன்னி, யாழ்ப்பாணம் — இந்த வாழ்க்கைச் சூழல் உங்கள் எழுத்தில் எப்படி வெளிப்படுகின்றன?
யதார்த்தன் : எழுத்தாளன் தன்னுடைய அகத்தையும் எழுத்தையும் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அடிப்படையானது. என்னுடைய ஆரம்ப கால எழுத்துகள் எனக்கு என்ன தெரியும், என்ன நிகழ்ந்தது என்பது பற்றியவை. குறிப்பாக சிறுகதைகள். அவை உண்மைகளுக்கு உண்டான பெறுமதி மட்டும் கொண்டவை. புனைவாக ஆக முயற்சித்தவை. பெரும்பாலும் அதில் என்ன விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அது மட்டுமே அதன் கதை. அதில் இருக்கும் புனைவின் சாத்தியம் அதனாலேயே நிகழாமல் போய் விட்டது. நகுலாத்தையை எழுதும் போதும் இதே சிக்கல் என்னைத் தொடர்ந்திருக்கிறது. நகுலாத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து விடுபட உதவியது. அதற்கு காரணம் நகுலாத்தை சுமார் மூன்றரை ஆண்டுகள் வரை எடுத்துக் கொண்டது. நான் உத்தேசித்த நாவலில் இருந்து தப்பியோடியதால் நகுலாத்தை பிழைத்துக் கொண்டு நாவலாக ஆகியது. அருந்தப்பு. இன்னும் நன்றாக வந்திருக்கலாம் என்பதே எனது தற்போதைய எண்ணம். என்றாலும் முதல் நாவலில் இவ்வளவு பயிற்சியும் நிதானமும் வாய்க்கப்பெற்றது. இன்று தோறை என்ற நாவலை எழுதி முடித்திருக்கிறேன். அது இன்னும் அறிந்ததில் இருந்து என்னை விடுவித்திருக்கிறது. குறிப்பாக நன்கறிந்த நிலம், வாழ்ந்த இடங்கள் அவற்றின் நேரடியான தோற்றங்கள், காட்சிகளை அகம் தின்று செர்த்த பிறகு புனைவினால் ஆக்கி எடுக்கப்படும் நிலம் வரத் தொடங்கியிருக்கிறது. அதில் மெய்யான தென்மராட்சியோ, சரசாலையோ வன்னியோ வருவதில்லை. புனைவு தானே உருவாக்கி எடுக்கும் தனக்குரிய நிலம் வருகிறது. அதை அப்புனைவில் மட்டுமே காண முடியும். அது அப்புனைவை நிகழ்த்த உருவாகி வந்த நிலம் மட்டுமே. எளிய உண்மையில் இருந்தும் அறிந்ததில் இருந்தும் தப்பி ஓடுவது எழுத்தானுக்கு அன்றாடப் பயிற்சிகளில் ஒன்றாக ஆக வேண்டும். முழுமையாகக் கனவு நிகழ வேண்டும்.
தர்மு : பால்யத்தில் நீங்கள் வாழ்ந்த வன்னி இன்னும் அதே உயிர்ப்புடன் அகத்தில் இருக்கிறதா?
யதார்த்தன் : நான் ஆரம்பத்தில் சிலதை மிகைப்படுத்திக் கொண்டேன் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒருவகை அகங்காரம் அது. கொஞ்சமேனும் இலக்கியம் தெரிந்த இறுதி யுத்தத்தின் சாட்சி நீதான் என்று எல்லோரும் என்னைச் சொல்லியதை நம்பிக்கொண்டு நான் என்னையொரு சாட்சியாக வரித்துக் கொண்டிருக்கக் கூடாது. எனக்குள் இருக்கும் வன்னி அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கானவர்களுக்குள் இருக்கும் வன்னிதான். என்னை விட அவர்களே அதை நன்கறிவார்கள். சிறுவனாக விடுதலைப்போராட்டத்தை சாகச மனநிலையோடு பார்க்கும் போது பதிந்த வன்னிதான் எனக்குள் இருந்த வன்னி. சங்கப் புறத்திணைப் பாடல்களில் வரக்கூடிய நிலங்களைப் போல வீர ஊழிக்காலத்துக் காட்சிகள். அதிலிருந்து விலகி அங்கு நிகழ்ந்த வாழ்வை வரலாற்றிலும் தத்துவத்திலும் வைத்துப் பார்க்க வேண்டும் என்பதே இப்போதைக்குள்ள விருப்பம். தகவல்கள் புனைவல்ல, அனுபவங்களும் கூடப் புனைவல்ல. புனவென்பது ஆழ் அகத்தின் தொகுப்பு. தன்னியல்பாக அது நிகழ வேண்டும். இலக்கியத்தில் புறவயமாக செய்யக்கூடிய கிரியா வேலைகளை ஆற்றிக் கொண்டு தவக்குடில் அமைத்து அமர்ந்திருக்கும் முனிவனைப் போல் அங்கு குவிவதும் மட்டுமே இலக்கியத்தில் ஆற்ற வேண்டிய பணி. விழைவும் செய்யலும் உடலாலும் உள்ளத்தாலும் கூட வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். வாசிப்பது, உரையாடுவது, பயணம் செய்வது போன்றவற்றுடன் ஒவ்வொரு நாளும் எழுத இருக்க வேண்டும். எழுத வேண்டும். ஏனெனில் இலக்கியத்தை எழுதுவதுதான் என்னுடைய பணியே ஒழிய வன்னிக்காட்டையோ யுத்தத்தையோ எழுதுவதல்ல. வணிக எழுத்துச் சூழலில் இவர் திரில்லர் எழுத்தாளர், இவர் ரொமான்ஸ்சை எழுதக் கூடியவர் என்பது போல இவர் போரை எழுதுபவர் என்பது என்னை அவமதிப்பதாகவே இப்பொழுது எடுத்துக் கொள்வேன். முன்பு என்ன எழுதுறீங்கள் என்று கேட்டால் யுத்தம் பற்றி அதிகமாக எழுதுகிறேன் என்று பதில் வரும். இப்பொழுது கேட்டால் கதைகளை எழுதுகிறேன் என்று மட்டும் சொல்லி முடித்துக்கொள்வேன் என்று நினைக்கிறேன்.
தர்மு : இறுதியுத்த நினைவுகளை இப்போது எப்படித் திரும்பிப் பார்க்க முடிகிறது?
யதார்த்தன் : மானுட வரலாற்றில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட போர்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் எங்களுக்கு அருகில் நடந்த போரின் பெறுமதி என்ன என்ற கேள்வியோடுதான் போரைப் பார்க்கிறேன். அதில் இருக்கும் அரசியல், பொருளாதார முரணியக்கம் எல்லாவற்றையும் விட்டு விட்டு வரலாற்றின் பெரிய வலையில். மானுட குலம் அடைந்த மேன்மைகள், கீழ்மைகளின் மோதலின் முறுகி இறுகிய கயிற்றில் இந்த சிறிய தீவில் நடந்த போரை வைத்தால் அதன் எடை என்ன என்று யோசிக்கிறேன். அது எழுதப்படும் போது எவை தொட்டெடுக்கப்பட வேண்டும், எவை மானுட குலத்திற்குரிய சாரமான ஒன்றைத் தொடவும் அசைக்கவும் செய்யக் கூடியவை என்று பார்க்க விரும்புகிறேன். அதற்காகத்தான் கதைகளை எழுதுகிறேன். கதைகளில் நிகழும் போதுதான் அதன் ‘சித்திரம்’ கிடைக்கிறது. போர் பற்றிய நினைவுகளில் இருந்து மீண்டு விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். குடும்பத்தால் மிகப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டுவரப்பட்ட சிறுவன். ஒப்பீட்டளவில் மனதளவிலோ உடலளவிலோ பெருங்காயங்கள் எதுவும் கிடையாது. அப்படி காட்டிக் கொள்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை. தோறையை எழுதும் போது முகாமில் இருந்த வாழ்கையை எழுதத்தான் அமர்ந்தேன். போரின் காயம் எனக்குள் இருக்கிறது என்றவொரு எண்ணம் இருந்தது. ஆனால் எனக்குள் இருந்தது போரின் காயம் இல்லை என்பது முதல் அத்தியாயத்திலேயே தெரிந்து விட்டது. அந்தக்கணம் மிகப்பெரிய விடுதலையையும் ஆசுவாசத்தையும் அடைந்தேன். போர் என்னைத் தொடவில்லை என்று மகிழ்ந்தேன். முக்கியமாக நான் இனிச் சாட்சி இல்லை. எழுத்தாளன் மட்டுமே என்று நிறைந்தேன்.
தர்மு : உங்கள் கல்விப் பின்னணி மொழியியல் சார்ந்தது. மொழியியல் படிப்பு உங்கள் புனைவு மொழியை மாற்றியதா? அல்லது அதற்கும் உங்கள் புனைவுகளுக்கும் தொடர்புகள் ஏதும் இல்லையா?
யதார்த்தன் : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் மொழியியல் பாடத்தின் பெரும்பகுதி சுமார் இருபது ஆண்டுகள் பழமையான பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சில பாடங்களை சமகாலத்தோடு கொஞ்சம் ஒத்து ஓடுகிறார்களே ஒழிய அவை என்றைக்கோ கிணற்றில் போட்ட அம்மிக் குழவி போல் கிடக்கின்றன. இன்றைக்கு உலகம் முழுவதும் மொழியியல் முதன்மையான துறை. குறிப்பாக தத்துவத்துடன் மிக நெருக்கமானது. அதில் ஒரு மிடறைக் கூட பல்கலைக்கழகத்தால் தர முடியாது. எல்லாத் துறைகளிலும் இதே நிலைமை உண்டு. அந்த மாபெரும் அமைப்பு இறுகித் துருப்பிடித்துக் கிடக்கிறது. அங்கு கற்றுக்கொள்ள ஒன்றும் இருந்ததில்லை. நானறிந்தவை எல்லாம் நானே தனிப்பட்டு இலக்கியம் வழியே தேடி அறிந்து கொண்டவை மட்டும்தான். பல்கலைக்கழகத்தில் எனக்குப் பயனளித்த ஒரே இடம் நூலகம் மட்டும்தான். மொழியல் சார்ந்து பாடத்திட்டத்தை விட சாதாரண இலக்கிய வாசிப்பிலேயே அதிகம் படித்துக் கொள்ள முடியும். பல்கலைக்கழக கல்வி முழுக்க முழுக்க புனைவுக்கு எதிரானதாகவே அளிக்கப்படுகிறது. கலை வரலாறு போன்ற ஒரு சில துறைகள் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எப்படி தமிழ்த்துறையினருக்கு இலக்கியம் தெரியாதோ, இந்து பீடத்திற்கு இந்து தத்துவம் தெரியாதோ அதே போலத்தான் மொழியியலுக்கும்.
தர்மு : உங்கள் பழைய கதைகள், கட்டுரைகள், புனைவுகளில் இருந்து தற்போதைய எழுத்தில் ஒரு அடுக்குச் செறிவு கூடியிருக்கிறது. அந்த உருமாற்றம் எப்படி நிகழ்ந்தது?
யதார்த்தன் : உண்மையில் அதை நெகிழ்வு என்றே சொல்ல விரும்புவேன். முன்பு கட்டி இறுக்கிய எல்லாவற்றையும் நெகிழ விட்டு இருக்கிறேன். நெகிழ்வதுதான் விரிவது. ஓர் எழுத்தாளன் தியானி அல்ல, அவன் கூர் கொண்டு இறுகிச் செல்லத் தேவையில்லை. அவன் விரிய வேண்டியவன். பரவிச்சென்று எல்லாவற்றையும் நிறைக்க வேண்டியவன். கோட்பாடுகள் சட்டகங்களைக் பிடித்துக் கொள்வது, ஒற்றைப்படையான பார்வைகளை உருவாக்கிக் கொள்வது. பகுத்தறிவின் தர்க்கங்களை மட்டும் கொண்டு உள்ளுணர்வையோ, கற்பனையையோ கைவிடுவது என்று முன்பிருந்த இறுகும் வழிகளைக் கைவிட்டிருக்கிறேன். நம் சூழலில் இலக்கியத்திற்குள் வரும் எல்லோரையும் இந்த முற்போக்குச் சூழல் இந்த இறுகிய திராவகத்தில்தான் தள்ளி விடுகிறது. என்னுடைய கட்டுரை முறைகளை முழுக்க முழுக்க கைவிட்டேன். குறிப்பாக அதில் இருக்கும் தகவலும் ஆய்வும் மட்டும் குமைந்து கிடக்கும் தன்மையை. கட்டுரைகள் தகவல்கள் பற்றியவை அல்ல. இன்றைய தகவல் யுகத்தில் தகவல்களை அடுக்கக் கூடிய கட்டுரைகளுக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது. சொந்த கருத்தை தொகுத்துக் கொள்ளாத, கண்டறியாத எதையும் அறிவுச் செயற்பாடாகவோ புனைவாகவோ பொருட்படுத்தத் தேவையில்லை. அதனால்தான் இத்தனை தளர்கிறேன். தகவல்களை விட உரையாடலுக்கு, வாத விவாதங்களுக்கு முக்கியம் கொடுக்கிறேன். தர்க்கத்திற்கு இணையாக கற்பனையையும் உள்ளுணர்வையும் கவனிக்கிறேன். இப்பொழுது என்னுடைய மொழி தீட்டத் தீட்ட கூராய் ஆகும் போதே தன் பகுதி ஒன்றையும் நுண்மையாக இழந்து கொண்டிருக்கும் கத்தியைப் போல உள்ளம் நிகழ்வதைப் பார்க்கிறேன்.
தர்மு : ஒரு இளம் எழுத்தாளரின் தொடக்கத்தில் வாசிப்பு முக்கியமா, அனுபவமா, சமூகச் சூழலா? எது உங்கள் எழுத்துக்களைப் பாதிக்கிறது இன்றுவரை.
யதார்த்தன் : வாசிப்புத்தான் எல்லாவற்றினதும் அடிப்படை. வாசிப்பும் நிகர் அனுபவம் என்பதை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். நம்மால் நூறு வாழ்வை வாழ முடியாது இல்லையா, மிஞ்சிப்போனால் எவ்வளவு அனுபவம் வாய்க்கும் ஒராளுக்கு. வாழ்வு அத்தனை எல்லையுள்ளது. ஏனெனில் நாம் உடலினால் வாழ்கிறோம். இவ் உடல் அலைந்து மாயக் கூடிய சொற்பமான வெளியே நம் வாழ்க்கை. அதனால்தான் வாசிப்பு. ஆயிரம் ஆயிரம் பேரின் வாழ்வை அது தொகுத்து அளிக்கிறது. சென்று வாழ்ந்த அனுபவத்தை அளிக்கிறது. அதை எழுதிய எல்லோரினதும் உடல்கள் அழிந்து போன பிறகும் அவர்களுடன் மானசீகமான உரையாடலை ஆயிரம் வருடம் கழித்துப் பிறந்து வரும் வாசகரால் நிகழ்த்த முடிகிறது. எழுத்தாளர் முதன்மையாக வாசகராக இருக்க வேண்டும். தொடக்கம் நடுவில் இறுதியில் என்று ஒன்றும் இல்லை எப்பொழுதும் வாசிப்பவர் மட்டுமே எழுத்தாளர். சமூகச் சூழல் என்பது எழுத்தாளர் பொருந்தியும் விலகியும் இருக்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் அது முழுக்க உலகியலால் நிரம்பியது. அதை சாரப்படுத்திப் பார்க்கும் கண்ணை வாசிப்பே அளிக்க முடியும்.

2. கண்ணகி மரபு
தர்மு : “வட இலங்கைக் கண்ணகி மரபுக்கதைகள்” பற்றிய ஆய்வு செய்த அனுபவம் உங்கள் பண்பாட்டு பார்வையை எவ்வாறு மாற்றியது?
யதார்த்தன் : என்னுடைய இளமாணிப் பட்டத்திற்குரிய இறுதி வருட ஆய்வுக்காக வட இலங்கையில் இருக்கின்ற கண்ணகை அம்மன் பற்றிய மரபுக்கதைகளைச் சேகரித்து அதை மொழியியல் துறை சார்ந்த வாசிப்பிற்கு உட்படுத்துவது ஆய்வின் நோக்கம். எங்களுடைய ஊரில் கண்ணகை முக்கியமான உள்ளூர் தெய்வங்களில் ஒருத்தி. யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கண்ணகை வழிபாட்டு இடங்களில் ஒன்றான மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகையம்மன் என்னுடைய வீட்டிற்கு அண்மையில் இருக்கும் கோவில். அதைப்போல் சிட்டி வேரம் போன்ற கண்ணகையம்மன் கோவில்களும் அருகில் உண்டு. அவற்றின் கதைகள் சிறுவயது முதல் என்னைச் சூழ்ந்து இருந்தன. இலங்கையில் தமிழர்களிடம் இருக்கும் கண்ணகையும் சரி, சிங்களவர்கள் வழிபடக்கூடிய பத்தினித் தெய்வமும் சரி சிலப்பதிகாரம் உருவாக்கி அளித்த கண்ணகைத் தொன்மத்தில் இருந்து முற்றிலும் வேறானவை. வடக்கில் வழிபடப்படும் கண்ணகை முற்றிலும் வேறானவள். அவள் நீதி கேட்கும் இளம் விதவையல்ல, ஆலமர்ந்த கிழவி. சிறுவயது முதல் உள்ளூரில் அவளுடைய கதைகள் வயல் நிலங்கள் சார்ந்த விவசாயம், கால்நடை வளர்ப்புடன் தொடர்புடைய கதைகளாக இருந்தன. வெம்மையை ஆற்றும் கோடையின் தெய்வமாக, அம்மையைக் குணப்படுத்துபவளாக, மழையின் தெய்வமாக வணங்கப்படுகிறாள். சிலப்பதிகாரம் போன்ற காவியங்கள் அளிக்கக் கூடிய பெருங்கதையாடல்களுக்கு மத்தியில் இந்த உள்ளூர் கதைகள் எங்கிருந்து உருவாகி வருகின்றன. ஒரு காவியம் உருவாக்கி அளிக்கும் பெரும் பண்பாட்டுடன் எங்கே மோதிப் பிரிகின்றன, எங்கே இணைந்து செல்கின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆய்வுக்காக அக்கதைகளைக் கேட்கும் போதும் தொகுக்கும் போதும் அதற்கான பதில்களை அண்மிக்க முடிந்தது. இலங்கையின் பண்பாட்டு வரலாற்றை எழுதுவது வடக்கின் கண்ணகை, கிழக்கின் கண்ணகி, தெற்கின் பத்தினி மூவரும் இன்றிச் சாத்தியமே இல்லை என்ற எண்ணத்திற்கு கொண்டு போனது.
ஆய்வில் மொழியியல் எல்லைக்குள் மட்டும் நிறக முடிந்தது. அப்பொழுது என்னுடைய ஆய்வை அப்பொழுது கலைவரலாற்றுத்துறையில் விரிவுரையாளராக இருந்த ஓவியர், பேராசிரியர் சனாதனனிடம் வாசிக்கக் கொடுத்திருந்தேன். அவர் அதைப் புத்தகமாகப் போடுவதற்கு இன்னும் விரிவான அணுகுமுறைகள் தேவைப்படலாம் என்றார். விடுபடல்களை நிரப்பி இதை என்னுடைய முதுமாணிப்பட்ட ஆய்வில் இன்னும் வளர்த்தெடுக்க முடியும் என்று சொன்னார். அதனால் அதை புத்தகமாக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். தொடர்ந்து விதை குழுமம் முன்னெடுத்த தொன்மயாத்திரையில் கண்ணகை மரபை ஒட்டிய மரபுரிமை நடைக்காக வெளியிடப்படும் தொன்ம யாத்திரை இதழில் அவ் ஆய்வைக் கட்டுரைகளாக பிரசுரித்தோம். இன்றைக்கு முழுமையாகவே பல்கலைக்கழகம் சார் கல்வியில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு விட்டேன். இன்றைக்கு ஆய்வுகளை விடவும் எனக்கு உகந்தது புனைவுதான் என்ற நிலைப்பாடுள்ளது. உள்ளூர் மரபுக்கதைகளாக மட்டுமல்ல, வடக்கை எடுத்துக் கொண்டால் கண்ணகை அம்மன் அதன் பண்பாட்டின் வேரிலும் பூவிலும் இருக்கிறாள். ஆறுமுக நாவலர் போன்ற பெருஞ் சைவ முதலைகளுடன் மோதி அவர்களின் சமஸ்கிருத மயமாக்கலை வென்று நின்றிருக்கிறாள். எல்லாவற்றிலும் படிந்துள்ள பெருஞ்சாயல் கிழவியின் கதைகள். இன்றைக்கு வரலாற்று எழுத்தின் மையம் நாட்டார் கதைகள்தான், பண்பாட்டின் எந்தக் கூறையும் அவற்றைத் தவிர்த்து விட்டு வாசிக்க முடியாது. சோற்றுப்பருக்கை ஒன்றை எடுத்துச் சோதிப்பது போல எனக்கு இந்தக் கதைகள் இந்த நிலத்தின் பண்பாட்டை விளங்கிக் கொள்ள அடிப்படைகளைத் தந்திருக்கின்றன. இலங்கையில் கண்ணகையைக் கொண்டு பவுத்தத்தை விளங்கிக் கொள்ள முடியும், சைவத்தை அணுக முடியும், காலனிய வரலாற்றைக் காணமுடியும். ஏன் விடுதலைப்போராட்டத்தின் கதைகளும் அதனுடன் பின்னி விட்டன.
தர்மு : கண்ணகி மரபு வட இலங்கையில் வெறும் சமய மரபா, பெண் நினைவா, சமூக வரலாறா, அல்லது மொழி வழி வாழும் பண்பாட்டு நினைவா?
யதார்த்தன் : கண்ணகி வழிபாடு ஒரு காவிய மரபின் தொடர்ச்சி என்றுதான் சொல்வேன். காவியம் என்பது ஓர் பண்பாட்டு மரபின் உச்சம் நிகழக் கூடிய இடம். தமிழில் காவிய காலம் சிலப்பதிகாரத்தோடு தொடங்கி கம்பராமாயணத்தில் பேருருக் கொண்டது. காவியங்கள் பண்பாட்டை விதைகளாகச் சேகரித்து வைக்கும் இடங்கள். இன்றைக்கு வரைக்கும் தமிழ்ச் சமூகத்தில் நிலவக் கூடிய அறங்கள், விழுமியங்கள், பெரும்போக்குகள், கலை இலக்கியம் , சமயம் என்று எல்லாமே அதன் காவிய மரபு திரட்டி அளித்தவை. அவ்வாறு காவியத்தால் தொடப்பட்டவை பெரும் பண்பாடுகளை ஆக்கி விரிக்கின்றன. இன்றைக்கு தமிழ்ப்பண்பாட்டுக்கு உரியது என்று சொல்லத்தக்க எல்லாவற்றினதும் ஊற்று முகம் அதன் காவியங்களிலேயே இருக்க முடியும். வெளிப்படையாகவும் நுண்மையாகவும் அவை அங்கே இருந்தே ஆகும். காவியங்கள் உருவாக்கி அளிக்கும் எக்கூற்றிலும் பண்பாட்டின் எல்லா அலகுகளினதும் தொடுகை இருந்தபடியே இருக்கும். அதை ஒவ்வொரு துறைசார்ந்தவர்களும் தங்களுடைய கண்களைக் கொண்டு வாசிக்க முடியும். சிலப்பதிகாரம் என்ற காவியம் நிறுவிய கண்ணகையை ஓர் வரலாற்றுப்பாத்திரமாக கொண்டு வரலாறுப் பார்வையை முன் வைக்க முடியும். உதாரணமாக தமிழர் பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு கண்ணகிக்கு சேர மன்னன் கோவில் எடுத்த போது இலங்கை வேந்தன் கஜபாகு வந்த செய்தியைக் கொண்டு கஜபாகு காலக்கணிப்பு முறை உருவானது. எப்படி ஐரோப்பியர் கிறிஸ்துவை மையமாக கொண்டு காலத்தை வகுத்தார்களோ, அதே போல கஜபாகுவை கொண்டு வரலாற்றுக் காலக்கணிப்பை மேற்கொண்டனர். இதைப்போல் ஒரு மானிடவியலாளர் தன்னுடைய துறைச்சார்ந்த வாசிப்பை கண்ணகி மரபின் மீது செய்ய முடியும், ஒரு பெண்ணிய ஆய்வாளர் கண்ணகியைத் தன் கண்ணோட்டத்தில் நிறுத்த முடியும். எளிய மக்கள் அவளைத் தெய்வமாக வழிபடவும் முடியும். காவியங்களால் தொடப்படும் எதற்கும் பண்பாட்டின் எல்லாக் கூறுகளையும் தனக்குள் அனுமதிக்கும் விரிவு கிடைக்கப்பெறுகிறது. காவியம் வரலாற்றையும் தத்துவத்தையும் இணைக்கும் ஓர் பெருங்கலை. தமிழின் வரலாறும் தத்துவமும் காவியங்கள் என்ற பெரு நதிகளால் திரட்டி எடுக்கப்பட்டு பண்பாட்டுக்குள் பாசனம் செய்யப்படுகின்றன. இன்றைக்கு வரைக்கும் அந்த நீரைத்தான் நாம் பருகிக் கொண்டிருக்கிறோம். விதைத்து அறுத்தெடுக்கிறோம்.
தர்மு : ஒரு புனைவெழுத்தாளருக்கு நாட்டார் மரபு, வாய்மொழிக் கதைகள், தொன்மங்கள் ஆகியவை எவ்வளவு முக்கியம்?
யதார்த்தன் : இலக்கியத்தின் அடிப்படையானவை படிமங்கள். அர்த்தம் ஏற்றப்பட்ட குறியீடுகளைப் படிமங்கள் என்கிறோம். இலக்கியத்தில் உருவாகி வரும் படிமங்கள் எங்களுடைய ஆழ் மனத்தினைச் சேர்ந்தவை. அவை காலம் காலமாக மானுட குலத்திற்கு கடத்தப்பட்டு வருபவை. சொல்லப்போனால் நம்முடைய மனமே அப்படிமங்களினாலாலனது தான். மொழி ஓரு மாபெரும் படிம நிகழ்வு. தொன்மங்கள், புராணங்கள், கதைகள் எல்லாம் மானுட குலம் திரட்டிச் சேர்த்த படிமங்களில் இருந்து உருவாகி வந்தவை. மொழியில் அவை நிகழ்ந்து நிகழ்ந்து படிமங்களைப் பெருக்குகின்றன. அவை தர்க்கம்,கற்பனை, உள்ளுணர்வு ஆகிய மூன்று அறிதல்களோடும் நெருக்கமாகப் புழங்குபவை. நம்முடைய கனவுகள், படைப்பாக்கம் எல்லாம் அங்கிருந்தே வருகின்றன. நம்முடைய மனம் படிமமாக இயங்கும் விதம் என்பது பண்பாட்டில் இருந்து அது பெற்றுக்கொண்டவற்றின் தொகுப்பாகவே ஆழ் மனதில் சென்றுபடிகிறது. பண்பாட்டில் இருக்கக் கூடிய நாட்டார் மரபுகள், கதைகள், தொன்மங்கள் நம்முடைய பண்பாட்டின் ஆழ் மனதின் குறியீடுகளைக் கொண்டவை. அதனாலேயே அவை இலக்கியத்தின் அடிப்படைகளுள் ஒன்றாக மாறுகின்றன. மொழி என்ற மாபெரும் படிமச் செயற்பாட்டினுள் இயங்கும் இன்னொரு மொழியே (ஒரு மேட்டா மொழி) இலக்கியம். அந்தவகையில் தன்னுடைய ஆழ்மனத்தோடு தொடர்புபடும் செயற்பாடான படைப்பாக்கத்தில் ஈடுபடும் யாருக்கும் இந்தக் கதைகளும் , தொன்மங்களும் முக்கியமானவை. நன்கு தன் அகத்தைக் கவனிக்கும், அது வெளிப்படும் போது அதன் ஒவ்வொரு காலடியையும் தொடர்ந்து செல்லும் புனைவெழுத்தாளர் இத்தொன்மங்களும் கதைகளும் பண்பாட்டில் இருந்து எப்படி தனக்குள் வந்து எப்படி தன்னைக் கருவியாக்கிக் கொண்டு வெளிப்படுகின்றது என்பதைப் பார்க்க முடியும்.
தர்மு : இன்று ஈழத்தில் மரபு பற்றிப் பேசும்போது, நாம் அதை உயிருள்ள பண்பாடாகப் பார்க்கிறோமா, இல்லையெனில் அருங்காட்சியகப் பொருளாக மாற்றுகிறோமா?
யதார்த்தன் : ஈழத்தின் மரபின் புறவயமான தனித்தன்மையாகவும் அதேவேளை பலவீனங்களில் ஒன்றாகவும் பார்க்கக் கூடியது அது அருங்காட்சியகத் தன்மையை முழுமையாக எட்டவில்லை என்பதுதான். இன்றைக்கு ஈழத்தின் மரபுகள் என்று சொல்லத்தக்க கணிசமானவை நடைமுறையில் இருப்பவை. குறிப்பாக ஆற்றுகை சார்ந்த, காண்பியம் பண்பாட்டு மரபுகள் அப்படிப்பட்டவை. அது கலை, கைவினை, அன்றாட புழங்குபொருள் பண்பாடு போன்றவற்றில் எதுவாக இருந்தாலும் அதன் நடைமுறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொன்ம யாத்திரை போன்ற மரபுரிமைச் செயல்வாதங்களில் இருந்த போது கிடைத்த அனுபவங்களில் இருந்து சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய மரபுரிமைகள், புழக்கத்தில் இருக்கும் வரை மட்டுமே இருக்கக் கூடியவையே அதிகம். ஏனென்றால் பெரும்பாலும் தொட்டுணரமுடியாத மரபுரித்துகளே நம்மிடம் அதிகம். ஆவணப் படுத்தினாலும் அவை அருங்காட்சியகத் தன்மையை அடையும் போது பெரும்பாலும் இறந்து விடும். தகவலாகவே எஞ்சும். என்னைப் பொறுத்தவரை ஒன்று அவற்றைப் பயில்வில் வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது புனைவில் நிகழ்த்த வேண்டும். இவை இரண்டுமே அவற்றின் சாரத்தை கடத்திச் செல்ல முடியும். ஒரு எழுத்தாளனாக என்னுடைய வேலை அவற்றைப் புனைவில் நிகழ்த்துவதுதான் என்று நினைக்கிறேன். முன்பு காவியங்கள் இருந்த இடத்தில் இன்றைக்கு இருக்கும் இலக்கிய வடிவமான நாவலில் இச்சாத்தியத்திற்கான வெளி திறந்திருக்கிறது. வரலாறும் மரபுரிமையும் நிகழும் பண்பாட்டு வெளியைத் தவிர்த்து விட்டு பெருநாவல்களை எழுத முடியாது. தத்துவங்களை விவாதிக்க முடியாது. ஓரு மரபுரிமைச் செயற்பாட்டாளனான இருந்த போது அவற்றை அறிவதையும் ஆவணப்படுத்துவதையும் முதன்மைப் பணியாகக் கருதினேன் இன்றைக்கு செயல்வாதங்களில் இருந்து வெளியேறிய பிறகு என்னுடைய பணியாக புனைவையே கருதுகிறேன். புனைவு என்பது ஒருவகையில் அருங்காட்சியகத்திற்குரிய பூம்பாவையின் எலும்புகளை மனுஷியாக ஆக்கும் செயல்தானே.
தர்மு : உங்கள் புனைவுகளில் மரபுக்கதை, நம்பிக்கை, சடங்கு, கிராமப் பண்பாடு ஆகியவை எவ்வாறு நுழைகின்றன?
யதார்த்தன் : என்னுடைய முதல் நாவலான நகுலாத்தையை எழுதும் போது என்னுடைய நினைவில் இருந்து சில தொன்மங்களைக் கதைகளை எடுத்துக் கையாளத் தொடங்கினேன். முதலில் அவை புறவயமான எண்ணங்களாக இருந்து எழுத வேண்டியிருந்தன. அதவாது தொன்மங்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்குக் கதைகளை அளிப்பது. பின்னர் அது எழுத்தின் இயல்பான நிகழ்தலுக்கும் பயணத்திற்கும் பெரும் இடைஞ்சலாக அமைந்தது. மெல்ல மெல்ல கதைகளே முதன்மையானவை, அவை தாமாக தேவைப்படும் போது தொன்மங்களைத் தொட்டெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பிடிபட்டது. புறமனமும் ஞாபகமும் அறிந்த தொன்மங்களை அப்படியே கைவிட்டு விட்டு கதைகளின் மீதும் அதற்கான நாடகீயங்களையும், சூழலையும், காலத்தையும், உரையாடல்களையும் அமைப்பதில் மெல்ல மெல்ல பயிற்சிசெய்யத் தொடங்கினேன். கதைகள் தேவையான போது மரபையோ, தொன்மத்தையோ தேர்ந்தெடுத்தன. புறமனம் அறியாத பல தொன்மங்கள் எழுதும் போது வந்து நிறைந்தன. அதுவொரு மாபெரும் அனுபவம். நகுலாத்தையை விடவும் தற்பொழுது வெளியாகி இருக்கும் தோறையை எழுதும் போது முழுக்க முழுக்க மொழிமட்டும் எடுத்து வந்து அளித்த தொன்மங்கள், தெய்வங்கள், சடங்குகள் என்பன வெளிப்பட்டன. சில சமயங்களில் அவற்றை உறுதிப்படுத்தவும் செம்மையாக்கவும் தரவுகளைத் தேடிச் சேர்க்க வேண்டியிருந்தது. முன்பு அவற்றைத் தேடிச்சேர்ப்பதே எழுதும் பணியை விட பெரிதாகவிருந்தது, அதைக் கை விட்ட பிறகே புனைவு நிகழத் தொடங்கியது.
3. சிறுகதை
தர்மு : உங்கள் ஆரம்ப எழுத்து சிறுகதைகளாக வெளிவந்து, 2017ல் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்” என்ற பெயரில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பை இன்று திரும்பிப் பார்க்கும்போது என்ன உணர்கிறீர்கள்?
யதார்த்தன் : நான் முன்பு சொன்னது போல ஆரம்பத்தில் இலக்கியத்தில் எல்லோரையும் போல கவிதை எழுத முயன்று கொண்டிருந்தேன். ஏனென்றால் என்னுடைய உற்ற நண்பர்கள் இருவரும் கவிஞர்கள். என்னுடைய சுற்றம் முழுவதும் கவிதையே மாபெரும் புழங்கு பொருளாக இருந்தது. வாசிப்பதைத் தாண்டி கவிதை எழுத வேண்டும் என்ற விழைவு இருந்தது. எழுதவும் முயற்சி செய்து கொண்டிருந்தேன். இப்படி இருக்கும் போது ஒரு நாள் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நண்பர்கள் எல்லோரும் இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நண்பர்களிடம் ஓர் கதை சொன்னேன். வன்னியில் இறுதிப்போரில் நடக்கும் ஓர் கதை. அதில் ஒரிடத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போர் நடந்து கொண்டிருந்த இடமொன்றில் இருந்த வீட்டில் சில குடும்பங்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர் போராளிகளின் மனைவியர். திடீரென்று ஒரு நாள் ஆமிச்சப்பாத்துச் சத்தங்கள் கேட்க அவர்கள் பதறிப்போய் தங்களுடைய புலிச்சின்னம் பொறித்த தாலிக்கொடிகளைக் கழற்றி வீசி அவற்றை மறைப்பது போலொரு இடம் வரும். அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது என்னுடைய நண்பர் சதீஸ் விம்மி அழுது கொண்டிருந்தார். நான் போர்க்கதைக்குரிய சுவாரஸ்யங்களுடன் உப்புப்புளி சேர்த்து ஆர்வமாகக் கதைசொல்லிக் கொண்டிருக்கும் போது அது ஒருத்தரை அழ வைக்கிறது என்பதை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. அன்றிரவு எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. கவிதை எழுத வேண்டும் என்று சுற்றிக் கொண்டிருந்தவன். இறுதிப்போர்க் கதைகளை நண்பர்களுக்கு அன்றாட அரட்டைகளில் சொல்லிக் கொண்டிருந்தவன். என்றைக்கும் கதை எழுத வேண்டும் என்று சிந்தித்ததே இல்லை. ஆனால் அன்றைக்கு இரவு விசித்திரமாக மாறியிருந்தது. அந்தரமாக, கனலாக, பதட்டமாக. அன்றைக்கு நான் அந்தக் கதையை எழுதினேன். மூன்று அல்லது நான்கு தரம் இருந்து கதையை முடித்தேன். ஷண்முக நாதன் காயத்திரி என்று தலைப்பிட்டேன். கதையை காலம் செல்வம் அண்ணருக்கு அனுப்பினேன். என்னுடைய முதற்கதை காலம் இதழில் வெளியானது. அதற்குப் பிறகு தடம், ஆக்காட்டி, புதிய சொல் போன்ற இதழ்களில் தொடர்ந்து கதைகளை எழுதினேன். 2017 இல் ஆக்காட்டி பதிப்பகம் மூலம் என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் வெளியானது.
முதல் கதைத்தொகுப்பில் பத்துக் கதைகள் இருந்தால் அதில் இரண்டு கதைகள் நன்றாக இருந்தாலே அதுவொரு நல்ல தொகுப்பென்று சொல்லவோ, வெளியிடவோ முடியும் என்று நண்பர் ஒருவர் பகடியாகச் சொல்வார். அதில் சில நல்ல கதைகள் இருக்கின்றன. லெப்டினண்ட் கேணல், இயற்கை, இலங்கைப்பூச்சி, போன்ற எனக்குப் இப்பொழுதும் அகநெருக்கமுள்ள கதைகள் அதில் உள்ளன. அதில் என்னுடைய மேதமையோ, உச்சமோ வெளிப்பட்டது என்று இப்பொழுது சொல்ல மாட்டேன். ஆனால் அதை எழுதாமல் என்னால் அதற்குப் பிறகு எழுதியவற்றை எழுத முடிந்திருக்காது என்று நினைக்கிறேன். சிறுகதைகள் அவை எழுதிய காலத்தில் நல்ல அனுபவத்தையும் பயிற்சியையும் அளித்தன. இன்றைக்கு அவற்றை எடுத்து வைத்துக் கொண்டு அவற்றில் என்ன பிரச்சினைகள் உள்ளன என்று என்னால் ஒரு மரணவிசாரணை அறிக்கையைச் செய்ய முடியும். என்றாலும் வரலாற்றில் இருந்து மறைக்க வேண்டும் என்ற அளவிற்கு அது மோசமான தொகுப்பில்லை என்றே நினைக்கிறேன். என்னை இலக்கியத்தோடு முழு நிறைவாகக் கட்டியதில் அத்தொகுப்பிற்கு ஓர் பங்குண்டு என்பதை மறுக்கக் கூடாது. நாவல்களோடு பிணைந்திருந்தாலும் நல்ல கவிதைகளை எழுத வேண்டும் என்ற விருப்பத்தைப் போலவே நல்ல சிறுகதைகளையும் எழுத வேண்டும் என்ற விருப்பம் உண்டு. எழுதுவேன்.
தர்மு : உங்கள் சிறுகதைகளில் போர், உடல், நினைவு, இளமை, பாலியல், பயம் ஆகியவை ஒன்றோடொன்று கலந்திருக்கின்றன. பெரும்பாலான ஈழ எழுத்தாளர்களின் புனைவுகள் போலவே. ஆனால் அவர்களிடம் இருந்து நீங்கள் தனித்து துலங்கும் புள்ளிகள் எவை
யதார்த்தன் : எங்களுடைய தலைமுறை எழுத வரும் போது எங்களுக்கு புனைவிலக்கியத்தில் இருந்த முன்னோடிகளும் அதன் பெரும்போக்குச் சூழலும் அப்படிப்பட்டவை. நாங்கள் இலக்கியத்திற்கு வரும் காலத்தில் போர் முடிந்து அவற்றின் கதைகளைப் பாடக்கூடிய பாணர்களும் சூதர்களும் உருவாகி வரக்கூடிய பண்பாட்டு வெளி திறந்திருந்தது. அத்தோடு பின் நவீனத்துவத்தினுடைய வால் ஈழத்து இலக்கியச் சூழலில் மீது விழுந்து கிடந்தது. தமிழ் அறிவுச்சூழல், இலக்கியச் சூழல் பின்நவீனத்துவத்தினுடைய ’ஹாங்கோவர்’ காலத்தில் இருந்தது. அது எங்களிலும் விழுந்தது. ஷோபாசக்தி, கர்ணன், சயந்தன், போன்ற மூத்தவர்கள் எங்களுக்கு முன்பு இருந்தார்கள். அவர்கள் போர், அரசியல் சார்ந்த எழுத்துக்களை அதிகம் எழுதினார்கள். அவர்களுடைய கதைகளைப் போல் எழுத வேண்டும் என்று தொடங்கியவர்களே எங்களுடைய சூழலில் அதிகம். அதனால் நீங்கள் மேற்சொன்ன போர் , உடல் , பாலியல் போன்றவை கதைகளில் வந்து சேர்ந்தன. இச்சூழலைக் கடக்கவே பல வருடங்கள் எடுத்தது. இன்றைக்கும் பெரும்பான்மை ஈழ இலக்கியத்தரப்பு இந்த வகை அரசியல் பிரதிகளில் சிக்கியிருக்கிறது. வாழ்க்கைய விட்டு நெடுந்தொலைவு விலகிய கதைகளை எழுதிக் குவிக்கிறது. என்னுடைய தனித்துவம் என்று அக்காலத்தில் எதையாவது வலிந்து சொல்லத் தோன்றவில்லை. அதில் இருந்து விடுபட்டதே இன்றைக்கு என்னுடைய தனித்துவம் என்று சொல்ல முடியும்.
தர்மு : ஒரு சிறுகதையை எப்படி எழுதத் தொடங்குகிறீர்கள்? — ஒரு காட்சி, ஒரு வாக்கியம், ஒரு மனிதர், ஒரு ஊர், அல்லது ஒரு காயம்?
யதார்த்தன் : அதை அக்கதையே முடிவு செய்கிறது. எங்கே தொடங்க வேண்டும் என்பதை பெரும்பாலும் ஏதேனுமொரு கேள்வியே தொடங்குகிறது அந்தக் கேள்வி உருவாகும் பொறி எதுவாக இருக்க வேண்டும் என்பதையும் தற்செயலே தீர்மானிக்கிறது.
தர்மு : சிறுகதைகள் எழுதுவது இன்னும் சவலானவையாகத்தான் இருக்கின்றனவா?
யதார்த்தன் : எனக்கு நாவல் என்ற வடிவம் பற்றிய பயிற்சியும் பிரக்ஞையும் இருக்கிறது. எனக்கு நாவலே தற்பொழுது பிரியமான களமாக ஆகியிருக்கிறது. ஒரு எழுத்தாளர் அப்படியொரு பிரியத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்றே எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சிறுகதையும், குறுநாவலும் முழுக்க முழுக்க நம்முடைய மொழியினைக் கையாளும் பயிற்சியை அளிக்கக் கூடியவை, அவற்றின் எல்லைகளும், கட்டுப்பாடும் முக்கியமானது. அதனை ஒரு சவாலாகவே கொண்டிருக்கிறேன். தோறை நாவலை முடித்த கையோடு கூளி என்ற குறு நாவலை எழுதத் தொடங்கினேன். அது கைமீறுவதைத் தவிர்க்க முடியவில்லை. அது நாவலை நோக்கி வளர்ந்தது. அதை இன்னும் முடிக்கவில்லை. முடித்த பிறகு இச்செயன்முறை பற்றிய அனுபவங்களை விரிவாக எழுதும் எண்ணம் உண்டு. தொடர்ந்து சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதும் விருப்பமும் திட்டங்களும் உண்டு.
தர்மு : போருக்குப் பிந்தைய ஈழச் சிறுகதையில் நம்பிக்கை தரும் கூறுகள்?
யதார்த்தன் : போருக்கு பிறகு எழுந்து வந்த எங்களுடைய தலைமுறை போரை அரசியலாகவும், ஆவணமாகவும், சாட்சியாகவும் ஆக்கிக் கொண்டிருந்த எழுத்துக்களைத் தாண்டி அவற்றை வரலாற்றின் முன்பும் அடிப்படையான கேள்விகளின் முன்பும் நிறுத்தி விவாதிக்கத் தொடங்கி இருக்கின்றன. இன்றைக்கு ஈழத்தின் முக்கியமான இலக்கிய அழகியல் சூழல் இந்தப் பின்னணியில் உருவாகி வந்து கொண்டிருக்கிறது. இதுவொரு நீண்ட பயணம்தான். எங்களுடைய தலைமுறையும் எங்களுக்குப் பிறகு தற்பொழுது உருவாகி வரும் புதிய தலைமுறையும் அதைச் செய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்தச் சூழலும் சுற்றமும் அமைந்திருக்கிறது. கதைகளும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தர்மு : சமக காலச் சிறுகதைகளை வாசிப்பதுண்டா? அவற்றை எப்படி மதிப்பிடுவீர்கள்?
யதார்த்தன் : சமகாலச்சிறுகதைகளைத் தவறாமல் வாசித்து விடுவேன். சென்ற வருடத்தில் இருந்து சுக்கிரி என்ற இணைய இலக்கியக் குழுமத்தில் இணைந்துள்ளேன். ஒவ்வொரு வாரமும் நண்பர்கள் இணைந்து ஒவ்வொரு கதை வீதம் விவாதிக்கிறோம். அதுவொரு பயனுள்ள பயிற்சியாக இருக்கிறது. சமகாலத்தில் தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் முக்கியமான கதைகளை எடுத்து விவாதிக்கிறோம். இலக்கியத்தில் மதிப்பீடு, விமர்சனம் என்பது அவ் இலக்கியப் பிரதியை வாசிக்கும் சாத்தியத்தை அதிகரிப்பதும், கூட்டு வாசிப்பை நிகழ்துவதையும் நோக்கமாகக் கொண்டது. அந்த வகையில் சமகாலச் சிறுகதைகளை வாசிப்பது, விவாதிப்பதோடு அவற்றைப்பற்றிய மதிப்பீடுகளைச் சிறு குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்வேன். அவற்றைத் தொகுத்துக் கொள்வதற்கும் மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இச்செயல் பயனளிக்கிறது.

4. நாவல் நகுலாத்தை
தர்மு : சிறுகதையிலிருந்து நாவல். ஏன் அந்தத் தாவல்?
யதார்த்தன் : நவீன இலக்கியத்தின் காவியங்கள் என்று நாவலைச் சொல்கிறோம். வரலாறும் தத்துவமும் நிகழக் கூடிய பெருங்களம். இக்காலத்தின் இலக்கிய வடிவம் நாவல்தான். சிறுகதைகளையும் எழுதும் போது எனக்கிருந்த கட்டுப்பாடு நாவலில் இருக்கவில்லை. அதனுடைய இயல்பான கதம்ப வடிவமும் விரியும் இயல்பும் உவப்பாக இருந்தது. கவிதை சொல்லைக் கொண்டு சொல்லை அகற்றி அகற்றிச் சென்று சாரமும் நுண்மையுமாக மொழியை நிகழ்த்தும் ஒரு கலையாக ஓர் அந்தத்திலும், நாவல் சொற்களால் சொற்களைத் தொட்டுத்தொட்டு பெருக்கிச் சென்று வாழ்வின் பெருவடிவத்தை மொழியில் நிகழ்த்தி தரிசிக்கும் வடிவமாக இன்னொரு அந்தத்திலும் இருக்கின்றது. நகுலாத்தையை எழுதத் தொடங்கும் போது நாவல்களை வாசித்த அனுபவம் மட்டுமே இருந்தது. நீச்சல் பழகுவதற்கு ஒரே வழி ஆற்றில் குதித்துவிடுவதுதான் என்பது போல நடு ஆற்றில் ஒரு குருட்டுத் தைரியத்துடன் குதித்தேன். நானே எண்ணியிராத முடிவது.
நண்பர் ஒருவருடன் மன்னாரில் உள்ள மடுமாதா கோவிலுக்குக் காட்டுப்பாதையால் போகும் போது கவிஞர் நிலாந்தனின் மடுவிற்குப் போதல் என்ற கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டு போனோம். மடுவில் விஷப்பூச்சிகள் பாம்புகள் கடிக்காது என்று ஓர் நம்பிக்கை உண்டு. இன்றைக்கும் மடுக்கோவில் மண்ணை கடிவாயில் அப்பும் பழக்கம் உண்டு. அன்றைக்கு மாதாவின் முன்னால் அமர்ந்திருந்தேன். இறுதிப்போர் வடக்கில் தொடங்கிய இடம் மன்னார்தான். அப்பகுதி அந்நாட்களில் கடும் போர்க்களமாக இருந்தது. அங்குள்ள இருதையநாதர் ஆலயத்தின் மேல் ஷெல்கள் விழுந்தன. அன்றைக்கு விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் மடு அன்னையை யாருடைய கட்டுப்பாட்டிற்குள் எடுப்பது என்பதை முன்னிட்டு அப்பகுதியில் கடுமையாகச் சண்டையிட்டனர். சாவுகள் விழ அன்னை வன்னிக்கு வந்தாள். அன்றைக்கு வன்னிச் சனத்திற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. புலிகள் அதை ஒரு மாபெரும் உளவியல் வெற்றியாகக் கொண்டனர். அதற்காக அவர்கள் போராளிகளைப் பலிகொடுத்து அன்னையை கொண்டு வந்தனர். அன்றைக்கு அங்கே அமர்ந்திருக்கும் போது வெளியே ஷெல்கள் விழுவது போலொரு உணர்வு. எழுந்து வெளியே வந்த போது முற்றத்தில் ஏசுவின் கல்வாரி யாத்திரையின் பாடுகளைச் சொல்லும் சிலைகள் இருந்தன. சரிந்த பூவரசு ஒன்றின் அருகில், வெரோனிக்கா ஏசுவின் களைத்த முகத்தைத் துடைத்து விடும் காட்சி சிலையாக உறைந்திருந்தது. அக்கணம் என்னுடைய நாவலின் நாயகிகளில் ஒருத்தியான வெரோனிக்காவின் பெயர் நெஞ்சில் ஏறியது. கதையில் அந்தச் சிலை நின்றிருக்கும் இடத்தில்தான் மடு அன்னையை மீட்க நிகழ்ந்த யுத்தத்தில் காயப்பட்ட வெரோனிக்கா சரிவாள். நகுலாத்தை நாவல் அங்கேதான் தொடங்கியது. நாவலும் ஆற்றைப் போன்றதுதான் அதன் நடுவில் குதிக்க வேண்டும்.
தர்மு : நகுலாத்தை எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?
யதார்த்தன் : நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணமும் கருவும் மடுவில் நிகழ்ந்தாலும் வெரோனிக்காவின் அத்தியாயத்துடன் அதைக் கிடப்பில் வைத்திருந்தேன். அப்பொழுது என்னுடைய மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் சிறுகதைத் தொகுப்பு வெளி வந்திருந்தது. நண்பர் எழுத்தாளர் சயந்தன் தமிழினி பதிப்பகத்தைச் சேர்ந்த ’அண்ணாச்சி’ வசந்தகுமாருடன் அணுக்கமானவர். அவ்வருடம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நானும் சயந்தனும் சென்றிருந்தோம். சயந்தன் அண்ணாச்சி மெடூசா தொகுப்பைப் படித்திருக்கிறார் என்று சொல்லியிருந்தார். நான் எழுதுவேன் என்றும் அவர் நம்பிக்கையுடன் சொன்னதாகச் சொன்னார்.
புத்தகக் கண்காட்சிக்குச் சென்று தமிழினி அரங்கில் அண்ணாச்சியுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது மெடூசா தொகுப்பைப் பற்றிக் கேட்டேன். அவர் தனக்கே உண்டான மொழியில் ’உனக்கு உள்ளூரிலை தொங்கிக் கொண்டிருக்கிற பேய் பிசாசு ஒண்டும் கண்ணுக்குத் தெரியாதோ?’ என்று கேட்டார். மெடூசா என்ற ஐரோப்பிய தொன்மத்தை முன்னிட்டு அவர் அப்படிக்கேட்டார். அவர் அதைக் கேட்டவுடன் எனக்கு உள்ளூரப் பிடிகிடைத்தது. உள்ளூர் பிசாசுகளை எழுதப் போகிறேன் என்ற பிடி. நாடு திரும்பிய கையோடு நகுலாத்தையை முழுவீச்சாக எழுதத் தொடங்கினேன். உள்ளூர் கோவில்கள், தெய்வங்கள், சடங்குகள், நம்பிக்கைகளைத் தேடிச் சென்றேன். காடுகளுக்குள் வேட்டைக்காரர்களுடன் திரிந்தேன். பில்லி சூனியம் வைப்பவர்கள் எடுப்பவர்களுடன் அச்சடங்குகளுக்குச் சென்றேன். இரவில் பலிகள், கலையாடுதல் நிகழும் நாட்டார் தெய்வங்களின் கோவில்கள் திருவிழாக்களுக்குச் சென்று பார்த்தேன். பல நாட்கள் காய்ச்சலில் கிடந்திருக்கிறேன். நம்பவே முடியாத பலதைக் கண்டிருக்கிறேன். பல மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். கதைகளைக் கேட்டிருக்கிறேன்.
எனக்கு தனிப்பட்டு ஆர்வமான துறையாக இருந்த மானிடவியல், மரபுரிமை சார்ந்த விழைவு நகுலாத்தை எழுதுவதற்கு பெருந்துணையாகவிருந்தது. ஏற்கனவே என்னுடைய இளமானிப் பட்டப்படிப்பிற்காக வடக்கின் கண்ணகை மரபுக் கதைகளைப் பற்றிய ஆய்வுகளைச் செய்யும் போது மேற்கொண்ட களப்பயணங்களும் சேகரித்த தகவல்களும் பெரிதும் உதவியாக இருந்தன.
மூன்றைரை வருடங்கள் என்று நினைக்கிறேன். நகுலாத்தை நீங்கள் கையில் வைத்திருப்பதைவிட முந்நூறுபக்கங்கள் அதிகமாக எழுதப்பட்டது. எழுதி முடித்தவுடன் தமிழினி வசந்தகுமாருக்கு அனுப்பினோம். அவர் வாசித்து விட்டு சில ஆலோசனைகளைச் சொன்னார். இலக்கியம் பற்றி குறிப்பாக நாவல் பற்றி அவர் அளவிற்கு நுண்மையாக உரையாடக் கூடிய பதிப்பாளர்கள் தமிழில் அரிது. அவருடனான உரையாடலின் பின்னர் நாவலை எடிட் செய்தேன். நாவல் முள்ளிவாய்க்காலுடன் முடிந்து விட்டது. பிற்பகுதி முகாம் வாழ்க்கை பற்றியது அது தனித்து நின்றது சுமார் முந்நூறு பக்கங்கள் வரை வெட்டி நீக்கினேன். அதன் பிறகான நாவலை வாசித்த நண்பர் தர்மு பிரசாத் அதில் ஆசிரியரின் மொழியும் உரையாடல் மொழியும் உள்ளூர் வழக்கில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதைத் திருத்தலாமா என்று கேட்டார். அன்றைக்கு அது அப்படியே இருந்தால்தான் அதன் சாரமான உயிர்த்தன்மை இருக்கும் என்று அவரிடம் வாதிட்டேன். திருத்தவில்லை. நகுலாத்தையில் இருக்கக் கூடிய மையமான பிரச்சினை அதன் மொழி சிதறிச் செல்வதுதான். அது பின்னர் பிடிபட்டது. நாவல் எழுதுவது மொழியின் மீதான நமது கட்டுப்பாட்டை நிறுவுவதும் அத் தறிகெட்ட காட்டுப் புரவிகளை நாவல் எனும் உருள் தேரில் முறையாகப் பிணைப்பதும் என்று இன்றைக்குச் சொல்வேன். என்றாலும் நகுலாத்தை எனக்கு மிகப்பெரிய அனுபவம். என் இருபதுகளிலேயே ஒரு பெரிய நாவலை எழுதும் களத்தையும் அனுபவத்தையும் அமைத்துக் கொடுத்தது. நாவல் எழுதுவது என்பது அதனுடன் வாழ்ந்தொழிவது. நகுலாத்தையை எழுதியதை விட அதனுடன் வாழ்ந்த அனுபவம் நூறுமடங்கு பெரிது. இந்த நிலத்தையும் பண்பாட்டையும் அக்காலத்தில் மிக நுட்பமாக அறிந்து கொண்டேன். இன்னும் ஏழெட்டு நாவல்களுக்கு சரக்கிருக்கிறது என்று நண்பர்களிடம் பகடியாகச் சொல்வேன்.
தர்மு : நகுலாத்தையில் ஈழப் பண்பாட்டின் பல கூறுகள் செறிவாக வருகின்றன. ஒரு போர் குறித்த நாவலில் அவையெல்லம் சுமை இல்லையா?
யதார்த்தன் : நகுலாத்தையில் அதன் தகவல் பெருக்கு ஒரு சுமைதான். கொஞ்சம் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்திருக்கலாம். அல்லது செம்மை செய்திருக்கலாம். நம்முடைய உடலின் எடையின் இத்தனை பங்குதான் கவசங்களையும் ஆயுதங்களையும் சூடிக் கொள்ள வேண்டும் என்று களத்தில் நெறியுண்டு. நாவலும் அப்படித்தான். தெரிந்த எல்லாவற்றையும் எழுதித் தள்ளும் ஆர்வம் நாவலுக்குச் சத்துரு. நிறைய எழுதுவதை மட்டுமல்ல எழுதாமல் இருப்பதையும் நாவலில் பயில வேண்டும். அரசியல், பண்பாட்டு வாசிப்பில் இருக்கக் கூடிய பலரும் அத்தகவல் பெருக்கு நல்லது என்றனர். பாராட்டினர். நிலம் நன்றாக உருவாகி வந்திருக்கிறது என்றும் சொன்னார்கள். அது ஒருவகையில் உண்மைதான், ஆனால் நாவல் தகவல்களுக்காக எழுதப்படுவதில்லை. நிலத்தைப் பதிவு செய்ய எழுதப்படுவதில்லை. அது தன்னுடைய தரிசனத்தை நிறுவ மட்டுமே தகவல்களை கோருகிறது. அதற்கு எல்லைகள் உண்டு. கொஞ்சம் குறைந்தாலும் கூடினாலும் சிதறிவிடும். தன் முழுமையழகைக் குறைத்துவிடும். நகுலாத்தையும் அதன் பின்னர் தோறையும் எழுதி முடித்த பிறகு இதைச் சொல்கிறேன். அதிகமாக தகவல்களோ, பாத்திரங்களோ நாவலில் உருவாக்கி விடுவது எளிது. ஆனால் அவற்றை நம்மால் கையாள முடியுமா என்று பார்க்க வேண்டும். நகுலாத்தையில் தகவல்களைப் போலவே அதன் பாத்திரப் பெருக்கும் கூட ஒரு சுமைதான். என்னுடைய எழுத்தில் அதுவொரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அக்கட்டுப்பாட்டைப் பயில்வதுதான் இப்பொழுது நாவல் எழுதுவதில் கவனப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
தர்மு : நீங்கள் இறுதியுத்தம் நடந்தபோது வன்னியில் இருந்தீர்கள். அந்த அனுபவங்களை கழிவிரக்கத்துடன் எழுதினாலே நம் சூழலில் உடனடிக் கவனம் கிடைக்கும். அந்த விருப்பம் இல்லையா?
யதார்த்தன் : அதுவொன்றும் சர்க்கஸ் இல்லை கண்ட காட்சிகளைச் சொல்லிச் சொல்லி மாய. அது போர். அழிவு. என்றைக்கும் அப்போரில் சிக்கிக் கொண்டதை நல்லூழ் என்று சொல்லவோ, அதை என்னுடைய கழிவிரக்கமாகவோ, சாட்சியாகவோ முன்வைக்க மாட்டேன். நான் ஆமிக்காரர்களின் பக்கமோ விடுதலைப்புலிகளின் பக்கமோ கிடையாது. இன்றைக்கு போரின் கழிவிரக்கத்தை எழுதிக் கொண்டிருப்பவர்கள் அப்படியொரு தரப்பை எடுத்துக் கொண்டவர்கள். அவர்கள் எழுதவில்லை, துவேசத்துடன், முடிந்த போரை மொழியில் முன்னெடுத்துச் செல்கிறார்கள். குணா கவியழகன், தீபச்செல்வன், தமிழ்நதி, அகரமுதல்வன், வாசு முருகவேள், சாத்திரி, நோயல் நடேசன் போன்றவர்கள் இத்தகைய பேர்வழிகள். அவர்கள் இலக்கியத்தின் தரப்பு கிடையாது. அழகியலின் தரப்பு கிடையாது. அவர்கள் புலிகளின் தரப்போ ஆமிக்காரர்களின் தரப்போ மட்டும்தான். கையில் துவக்குடன் சுற்றிக் கொண்டிருப்பவர்களுடன் என்ன இலக்கியம்? தெள்ளத் தெளிவாக சொந்த ஆணவத்தையும் புகழையும் முன்னிட்டு கழிவிரக்கத்தை, அழு அழு என்று சாட்டையை வீசும் துயரத்தை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அவர்களின் வாசகர்களாக இருக்கும் பெரும்பான்மைத் தமிழ் தரப்பும் அவர்களைப் போல தமிழ் இனவாதிகளே ஒழிய வாசகர்கள் அல்ல. சங்க இலக்கியங்களில் எதிரிநாட்டை எரிபரந்தெடுத்துச் சூறையாடும் அரசனை புகழ்ந்து பாடும் புலவர்கள் இருந்தார்கள். பழைய காட்டுமிராண்டிச் சமூக வாழ்வில் இருந்து மெல்ல மெல்ல நாகரீகமடைந்து கொண்டிருந்த, அரசுகளை நிறுவிக் கொண்டிருந்த காலத்தில் போரும் கொலையும் நெறியாக இருக்கலாம். புலிகள் அப்படியொரு வீர ஊழிக்காலத்திலேயே தாங்கள் வாழ்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக வன்முறையை மட்டும் நம்பியவர்கள். அவர்களின் தரப்பில் நின்று எப்படி இலக்கியம் பேச முடியும். விடுதலைப்போர் விடுதலைப்போராக மட்டும் நிகழவில்லை. அது தன் சுற்றத்தின் மீதும் துவக்கால் துப்பியது. அதை இவர்கள் பேசுவதில்லை. அதைப் பேசினால் பெரும்பான்மைத் தரப்பு கொண்டாடாது. பச்சாதபத்துடன் அங்கீகரிக்காது. அதேபோல புலிகளின் மீதான் வெறுப்பை முன்னிட்டு அரசினை நியாயப்படுத்தக் கூடிய எழுத்தும் இப்பச்சாதாப எழுத்திற்கு சற்றும் குறைந்ததில்லை. இவர்கள் அனைவரும் வன்முறையாளர்கள், இலக்கியவாதிகள் அல்ல. நவீன இலக்கியம் சனநாயகத்தில் இருந்து பிறந்து வந்தது. அது முழுக்க முழுக்க வன்முறைக்கும் ஒடுக்குதலுக்கும் எதிரானது அதன் நோக்கம் அறமும், அழகியலும். அதன் வேலை சாட்சியாக இருப்பதோ, கண்ணீரை விற்பதோ அல்ல. அது வாழ்வை விசாரிக்க வந்தது. அதற்கெதிரான எல்லாவற்றையும் நிராகரிப்பது. நாங்கள் அத்தரப்பைச் சேர்ந்தவர்கள்.
தர்மு : சம கால ஈழ போர்க்கால நாவல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
யதார்த்தன் : தொடர்ந்தும் ஏன் போர், போர் என எழுதுகிறீர்கள் என்று கேட்கும் குரல்கள் உள்ளன. மிக நுணுகி கவனித்தால் அக்குரல்களில் உள்ளவை போர் பற்றிய சலிப்பல்ல, போரின் நினைவுகளை, கதைகளைத் தாங்க முடியாமல் அதைக் கடந்து போக வேண்டும் என்ற புற மனதின் அச்சமே அது. போரை அப்படிக் கடந்து செல்ல முடியாது. ஆழமான மனக்காயங்கள் என்றாலும் அவற்றை காலத்தின் மீது கிடத்தி அவற்றின் சீழை அகற்ற வேண்டியிருக்கிறது, கட்டுத்துணியால் கட்டினால் அவற்றை ஆற்ற முடியாது. கடந்து செல்லவும் முடியாது. போர் இன்னும் பல வருடங்களுக்கு எழுதப்படும். இன்றைக்கு ஒரு தனிமனிதரின் எளிய துக்கத்தின் காரண காரியங்களை விசாரித்தால், அவரை வரலாற்றின் முன்னால் நிறுத்தினால் கூட போர் உள்ளே வந்து நிற்கிறது. இந்த நிலம் போரைச் செரிக்க வேண்டும். அதில் இருந்து தன்னுடைய தரிசனத்தைத் திரட்டிக் கொள்ள வேண்டும். அதை ஒர் பெருங்கல்லைப் (megalith) போல வரலாற்றில் நிலை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இப்போர் வெறும் அழிவும் காயமும்தான். வரலாற்றில் அதற்கு எந்தப் பெறுமதியும் இருக்காது. இன்றைக்கு உருவாகி வந்திருக்கும் சனநாயகமும் அறங்களும் மானிட விழுமியங்கள் இரண்டு பெரிய உலகப் போரின் பின்னால் உருவானவைதான். அவற்றைச் செய்தது கலையும் இலக்கியமும் இணைந்த அறிவியக்கங்கள். அதனாலேயே போரை எழுத வேண்டும், அதாவது அதன் உள்ளீட்டை வரலாற்றின் முன் நிறுத்தி விசாரிக்க வேண்டும். அதை இலக்கியத்திலேயே செய்ய முடியும்.
தர்மு : நாவல் எழுதும்போது நீங்கள் எப்படித் திட்டமிட்டுவீர்களா, அல்லது எழுதும் போதே அதன் வடிவத்தைக் கண்டடைவீர்களா?
யதார்த்தன் : வடிவம் பெரும்பாலும் நாவலே தீர்மானிக்கும் ஒன்றுதான். மனதில் ஒரு பருமட்டான வரைபடம் உருவாகியிருந்தாலும் அந்த வரைபடத்தை அழித்துக் கொண்டோ அதன் மேல் வேறொன்றை வரைந்து கொண்டோ நாவல் தன்னை வளர்த்தெடுக்கும். அடிப்படையில் நாவல் வளரும் உயிரினம். தன் கருவின் இயல்பு அதன் வடிவத்தைத் தீர்மானிக்கிறது. அது சென்று சேரும் அல்லது கண்டடையும் தரிசனம் அதை முழுமையடையச் செய்கிறது. நாவல் தன் தரிசனத்தை அடைந்த பிறகு தன் செக்கையில் இருந்து எழும் பறவை தன் முது இறகுகளை உதிர்ப்பது போல தேவையற்றவற்றை உதிர்த்துக்கொள்ளும். எடிட்டிங் செயல்முறை மூலம் தன் இறுதி வடிவத்தை நோக்கி, தன்னளவிலான கச்சிதத் தன்மையை நோக்கி நகர்ந்து நிறையும். ஒரு நாவலாசிரியன் எப்பொழுதும் கரு, கதை, தரிசனம் மூன்றினதும் ஏவலாள் மட்டுமே என்ற பணிவுடன் தன் புற மத்தை பழக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவற்றின் முன் ஆணவம், விழைவு, அறிவு எதும் பயனற்றவை. எழுத்து முழுக்க முழுக்க ஆழ் மனதிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழைப்போன்றது.
தர்மு : ஈழ வாழ்க்கையை நாவலில் எழுதும்போது நீங்கள் எதிர்கொள்ளும் பெரிய இடர் என்ன — வரலாற்றுப் பார்வையா, போர் நினைவுகளின் அழுத்தமா, அரசியல் வாசிப்பின் பயமா?
யதார்த்தன் : தகவல் உண்மைகள்தான் பெரிய அச்சுறுத்தல். எனக்கு என்னவெல்லாம் தெரியும் என்பது பெரிய இடர். அவற்றை உதிர்ப்பதுதான் எனக்கு ஒருவகையில் நாவலை எழுதும் செயல் முறை. என்னுடைய நிகர் வாழ்விலிருந்து தப்பி ஓடுவதும் புறமனதின் அலைக்கழிப்புகள் விருப்பங்களில் இருந்து விடுவித்துக் கொள்வதும் அவசியமாகிவிடுகிறது. வரலாற்றுப் பார்வையும், தத்துவ நோக்கும் என்னுடைய மனம் தன் ஆழத்தை எப்படித் தொகுத்து வைத்திருக்கிறது. எவற்றை அதற்குத் தீனியாக அளித்துள்ளோம் என்பவற்றில் இருந்து புனைவில் வெளிப்படுகின்றது. ஒரு நாவலாசிரியனுக்கு வரலாற்று நோக்கும் அதை வாழ்க்கையாக கண்டு விவாதிக்கும் பயிற்சியும் அவசியம். அதனால் வரலாற்று நோக்கு என்றைக்கும் அழுத்தமாக அமையாது. போரும் அதன் ஒரு பகுதிதான். என்னுடைய எழுத்தின் மூலம் கண்டடைந்தது போரினால் எனக்கு எந்த மனக்காயங்களும் பாரதூரமாக ஏற்படவில்லை என்பதுதான். ஆனால் என்னுடைய ஆளுமையிலும் வாழ்கையிலும் போர் பின்னணியாக உள்ளதுதான். அதன் நேரடி அனுபவங்களை மனம் நன்கு செரித்திருக்கிறது. வாசிப்பும் இலக்கியமும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே போர் நினைவுகள் எனக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை. விடுதலைப் போராட்டம் தோற்றுப்போன போது அடைந்த வருத்தமும் இப்போது இல்லை. இந்நாட்களில் என்னைக் கேட்டால், அது இப்படி முடிவதைக் காட்டிலும் மிகச்சிறந்த முடிவு வேறேதும் இருந்திருக்காது என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ஒருவேளை விடுதலைப்புலிகள் வென்றிருந்தால், என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அவர்கள் நம்மைச் சங்ககாலத்திற்கே அழைத்துப் போயிருப்பார்கள். விடுதலைப் போராட்டம் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டு வெறும் போர் வெற்றிகளுக்காக நடத்துவதாக மாறியது. பேரழிவுகளை உண்டு பண்ணாத வெற்றியோ தோல்வியோ எந்தப் போரிலும் அடையப்பட்டதில்லை. வென்றிருந்தால், இன்றைக்கு வட கொரியா பற்றிய பேய்க்கதைகளைக் கேட்கிறோம் இல்லையா? அப்படித்தான் ஆகியிருப்போம். ஆகவே விடுதலைப் போராட்டம் தன் மகத்துவங்களுடனும் இழிவுகளுடனும் இப்படி முடிந்து போனதே சரியானது என்று இப்பொழுது தோன்றுகிறது. இடையில் நிகழ்ந்த சமாதான காலத்தை நீடித்திருக்க வேண்டும். எவ்வளவு நியாயங்கள் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அரசோ விடுதலைப்போராட்ட அமைப்புகளோ செய்தது பேரழிவே. போர் என்றைக்குமே அழிவுதான். மானுட குலம் இன்னும் போரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பது அதன் காட்டுமிராண்டி வாழ்வை கைவிடாத நாகரீகமடையாத தன்மையின் விளைவே. நாம் சனநாயகத்தைப் பழக வேண்டும். ஆகவேதான் புனைவுகளில் போரிற்கு எதிராக வாழ்வினையும் அறங்களையும் முன் நிறுத்த வேண்டியிருக்கிறது.
ஈழ இலக்கியத்தின் மிகப்பெரிய தேக்கமும், கீழ்மையும் அதன் தேசியம், போராட்டம், கட்சி சார்ந்த இயல்புகள். தொடர்ந்தும் ஈழத்து இலக்கியத்தில் இவ் அரசியல் கோட்பாடுகளின் கோலோச்சுகை படைப்பையும் அழகியலையும் சிதைத்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலுக்கு எதிராக இயங்குவதே ஈழ இலக்கியத்தில் எங்களுடைய தலைமுறையினது பெரிய சவாலாக உள்ளது அதுவும் இன்றைக்கு அரசியலும் சினிமாவும் அன்றாடம் போதை ஊசியைப் போல் போடப்படும் வம்படிச் சண்டைகள் நிறைந்த சமூக வலைத்தள மந்தர்களிடம் இருந்து இலக்கியத்தை வேறாக்கி அறிவியக்கத்தின் பகுதியாக ஆக்குவதற்குத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம்.
தர்மு : ஒரு நாவல் “ஊரை” எப்படி எழுத வேண்டும்? நினைவாகவா, சமூக அமைப்பாகவா, காயமாகவா, உயிருள்ள பரப்பாகவா?
யதார்த்தன் : நாவலில் நிகழும் யாவும் அதன் கதைக்கோ, தரிசனத்திற்கோ மெல்ல மெல்ல படிமமாகும் சாத்தியத்தைக் கொண்டிருப்பவை. ஊரோ, நகரமோ, நிலக்காட்சிகளோ நல்ல நாவல்களில் மெல்ல மெல்ல குறியீட்டு அர்த்தம் கொண்டவையாக மாறும், அப்பொழுதுதான் அதை நுண்மையாக விரிவாக எழுத வேண்டிய தேவை ஏற்படும். வெறுமனே உள்ளதைப் பதிவு செய்வது நிலத்தை, உள்ளூர் பண்பாட்டைப் பதிவு செய்வது என்பதெல்லாம் புனைவில் அழுத்திச் செய்யப்பட வேண்டியதில்லை. அவற்றின் தகவல் உண்மைகள் அங்கே புனைவுண்மைகளாக மட்டுமே நிகழ வேண்டும். நாவலுக்கு மட்டுமில்லை எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் இது பொருந்தும். கதை என்ன அர்த்தத்தை, உணர்வு நிலையைக் குறியீடாக, ஆக்குவதற்கு ஊர் என்ற படிமத்தை இழைத்து இழைத்து உருவமும் அர்த்தமும் அளிக்கிறதோ அதுவே அதன் மெய்யான நோக்கம். அதைவிட புனைவில் வாழும் அனுபவத்தை அளிப்பதற்கு நிலத்தை, ஊரை, மட்டுமல்ல ஒவ்வொரு பெளதீகப் பொருளையும் அதன் நுண்மைகள் இயல்புகளோடு விபரிக்க வேண்டியிருக்கும். அவ்விடத்தில்தான் பண்பாட்டுக் கூறுகள் தகவல் உண்மைகள் வந்து கலக்கும். புனைவைப் பொறுத்தவரை அங்கு எழுதப்படும் அனைத்தும் பிரதானமாக புனைவின் நோக்கத்தைச் சார்ந்தவையே ஒழிய அவற்றுக்குரிய இயல்புகள், தகவல் உண்மைகளைச் சார்ந்திருப்பதில்லை. சுந்தர ராமசாமி தன் நாவலில் புளியமரத்தையும் அதன் சூழலையும் குறியீடாக ஆக்குகிறார், கோபல்ல கிராமத்தில் கி.ரா வின் கிராமம் தன்னுடைய இயல்பான நேரடிப் பொருளில் இருந்து வளர்ந்து புனைவு அளிக்கும் குறியீட்டுப் பொருளை எடுத்துக் கொள்கிறது. வாசிப்பிலும் எழுத்திலும் இப்புரிதல் அடிப்படையானது.
தர்மு : நகுலாத்தை நாவலுடன் உடனடியாகவே உங்களுக்கு தமிழ் இலக்கியச் சூழலில் ஞானஸ்தானம் கிடைத்துவிட்டது, கோணங்கி, பா.வெங்கடேசன் என தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் கவனமும் பாராட்டும் கிடைத்தன. இப்போது நகுலாத்தையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
யதார்த்தன் : நகுலாத்தை எழுத முதலே எங்களுக்கு புகழும் வெளிச்சமும் இருந்தது. இலக்கியத்தினாலும் அதன் பின்னர் சமூக செயற்பாட்டு இயக்கங்களினாலும் வந்து சேர்ந்தவை. அதனால் வெளிச்சம், புகழ் அங்கீகாரம் போன்றவற்றை மிக இளம் வயதிலேயே தொட்டுப்பார்த்து விட்டோம். அவற்றின் பற்களும் வாலும் நல்ல பரிச்சமுள்ளவை. நகுலாத்தை என்னுடைய முதல் நாவல். அதன் மீது விழுந்த கவனமும், குறுகிய காலத்தில் நிறைய வாசிக்கப்பட்டதும் நான் எதிர்பார்த்திராத ஒன்றுதான். இன்றைக்கும் நாவல் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியே. ஒருவகையில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், வாசகர்கள் அதை வாசித்து உரையாடியதும் பரிந்துரைத்ததும் நாவல் தன்னளவில் அடைந்து கொண்டதுதான். நகுலாத்தையில் இருந்து இன்றைக்கு மிகவும் விலகி வந்து விட்டேன். அதன் மொழி நடையை செம்மையாக்கி இருக்க வேண்டும். மற்றபடி அதில் உள்ள கதைகளும், அதன் கட்டமைப்பும் நன்றாக எழுதப்பட்டவை என்பதே என்னுடைய எண்ணம். அதன் இரண்டாம் பதிப்பில் செம்மையாக்கம் ஒன்றைச் செய்யும் எண்ணம் உண்டு. பார்ப்போம்.
தர்மு : வெளிவந்திருக்கும் உங்கள், தோறை நாவல் நகுலாத்தையிடமிருந்து எங்கு வேறுபடுகிறது? மொழி, சொல்முறை, சித்தரிப்பு.
யதார்த்தன் : நகுலாத்தை வெளியாகி மூன்று வருடங்களுக்குப் பிறகு தோறையை எழுதினேன். நகுலாத்தையின் பின்னர் நிறைய வாசித்தேன். குறிப்பாக நாவல்களைப் பற்றி. என்னுடைய இலக்கிய ஆசிரியர் எழுத்தாளர் ஜெயமோகன். நாவற் கோட்பாடு உட்பட நாவல் கலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார், தொடர்ந்தும் அதுபற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார். ஜெயமோகன், பி.கே பாலகிருஷ்ணன் போன்றோரின் நாவல் கலை தொடர்பான விவாதங்கள் , நாவல் விமர்சனங்களைத் தொடர்ந்து வாசித்தேன். அவற்றோடு தமிழில் பெயர்க்கப்பட்ட இந்திய கிளாசிக் நாவல்களையும் உலகக் கிளாசிக் நாவல்களையும் வாசித்துக் கொண்டிருந்தேன். முக்கியமாக ஒன்றரை வருடங்கள் இருபத்தியாறு நாவல்களால் ஆன வெண்முரசு என்ற மிகப்பெரிய நாவலை வாசித்து முடித்தேன். வெண்முரசு வாசித்து முடிக்கும் போது என்னுடைய இணையத்தளத்தில் காளம் என்ற பெயரில் நாவல் ஒன்றைத் தொடராக எழுதினேன். இருபது அத்தியாயங்கள் வரை எழுதி முடிக்கும் போது அது தடைப்பட்டது. தொடர்ந்து எழுத முடியவில்லை. ஏதோ குறைவுபட்டது. முட்டி நிற்கும் போதுதான் நாவலின் ஆதாரமான கேள்வியை நான் இன்னும் சரியாக எழுப்பிக் கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். எங்கே பிரச்சினை என்று கண்டுபிடித்தாலே அடிப்படையான பிரச்சினை தீர்ந்துவிடும் நாவல் தன்னைக் கண்டுகொள்ளும். காளத்தின் பெரும்பான்மை அத்தியாயங்களை நீக்கி, திரும்ப எழுதினேன். வாரா வாரம் ஒவ்வொரு அத்தியாயங்கள் எழுதியளிக்க எனக்கு இன்னும் பயிற்சியும் அனுபவமும் தேவை என்பதைப் புரிந்து கொண்டேன். அந்தத் தோல்வியின் முன்னால் பணிந்து அதை ஏற்றுக்கொண்டேன். தோறையைத் தினமும் எழுதினேன், இருந்து திருத்தினேன். எட்டுமாதங்களுக்கு மேலே எடுத்துக் கொண்டு தோறையை எழுதி முடித்தேன்.
நகுலாத்தையுடன் ஒப்பிட்டால் தோறை மொழியில் தனக்கென்று ஒரு சொல்முறையை அடைந்திருக்கிறது. அணிகளைப் படிமங்களை , நுண்சித்தரிப்புகளோடு, மானுட நாடகங்களை முன்பை விடச் சிறப்பாக எழுதியிருக்கிறேன். நகுலாத்தையில் இருந்த நீண்ட உரையாடல் தன்மையைத் தோறையில் காண முடியாது. ஆனால் மனுஷ நாடகம் நன்றாக வந்திருக்கிறது. சித்தரிப்புச் சிக்கல்களை நன்றாக எதிர் கொண்டிருக்கிறேன். குறிப்பாக எடிட்டிங்கில் மேம்பட்டிருக்கிறேன். நகுலாத்தையில் சொல்லப்பட்ட வட்டார வழக்கு சரியாக இயைந்து வரவில்லை. தோறையில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் கச்சிதமான வேறுபாடுகளைக் கொடுத்திருக்கிறேன். நகுலாத்தையில் இருந்த மொழியின் சிதறும் தன்மை தோறையில் இருக்காது. இவை தவிர நாவலின் அடிப்படைக் கேள்வியின் மீது பயணித்து நாவல் தானே சென்றடைந்த இடங்கள் உண்டு.
5. கட்டுரை / பண்பாட்டு விமர்சனம்
தர்மு : உங்கள் தளத்தில் “சமூக வலைத் தளங்கள் எழுத்தாளரை என்ன செய்கின்றன?”, “எழுத்தாளர்கள், ஒற்றர்கள் மற்றும் வியாபாரிகள்”, “பண்பாட்டின் பன்மைத்துவம்” போன்ற கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சமகால இலக்கியச் சூழலை விமர்சிக்க வேண்டிய அவசியம் எதிலிருந்து வருகிறது?
யதார்த்தன் : ஏனென்றால் இலக்கியம் அற்பத்தனங்களுக்கும் செயலின்மைகளுக்கும் எதிரானது. எனக்கு நிலைப்பாடுகள், கோட்பாடுகள் பற்றிய பிரச்சினைகள் எல்லாம் இரண்டாம் பட்சமானது அதை இவ்வளவு ஆவேசத்தோடும் கடுமையோடும் அணுகுவதில்லை. ஆற அமர்ந்து உரையாடித் தீர்க்கலாம், விவாதித்துச் செல்லலாம். ஆனால் இந்த சமூக வலைத்தளங்களின் மூலம் சனநாயக வெளிக்கு வருகின்றவர்கள் பெருஞ்செயல்களை தங்களின் அற்பத்தனத்தோடு தெருச்சண்டைக்கு இழுக்கும் சராசரித் தன்மைக்கு எதிராக நிற்க விரும்புகிறேன். நுகர்வுக் கலாசாரத்தினால் ஆளப்படும் இச்சமகாலத்தில் கலை இலக்கியமும், எழுத்தாளரும், வாசகரும் கிள்ளுக்கீரைகளாக ஆகி விடக்கூடாது. யாரும் அவர்களை இழுத்து வீதியில் தள்ளி மிதிக்கலாம் என்ற நிலைக்கு எதிராக நிற்பதற்கே இத்தனை கடுமையான எதிர்வினைகளை ஆற்ற வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் ஒருவகையில் சுய விமர்சனமும் கட்டுப்பாடும் தான்.
தர்மு : உங்கள் கட்டுரைகளில் ஒரு கடுமையான பண்பாட்டு கவலை தெரிகிறது. அந்தக் கவலை இலக்கியத் தரம் குறித்ததா, சமூகச் சூழல் குறித்ததா, அல்லது மொழியின் சிதைவு குறித்ததா?
யதார்த்தன் : நம்முடைய நிலத்தின் சமகாலப் பண்பாடு என்பது கொலனித்துவத்தின் அடிப்படைகளைக் கொண்டது. நாம் நினைக்கின்றதும் தொடுகின்றதும் புழங்குவதும் நம்முடைய பண்பாடின் அடிப்படைகளில் இருந்து உருவாகி வந்ததா என்ற உறுத்துணர்வு எப்பொழுதும் என்னை நடுங்கச் செய்யும் ஒண்டு. கொலனித்துவமும் அதன் பிறகான விளைவுகளும் எல்லாவற்றின் கீழும் அது உறைந்திருக்கிறது. மெய்யான பண்பாடு என்பது நிலத்தில் நிற்க வேண்டும். அதன் சாரத்தில் அப்பண்பாடின் நிலம் இருக்க வேண்டும். பன்மைத்துவத்தின் வழியே பல்வேறு பண்பாடுகள் வந்து கலந்து பெருகினாலும் தன் சாரமான தன்மையை பண்பாடு இழப்பது நல்லதல்ல. நம்முடைய மொழியும் இலக்கியமும் செவ்வியல் தன்மையுள்ளவை என்பதன் அர்த்தம் பண்பாடு செவ்வியல் தன்மை உள்ளது என்பதுதான். அதன் வரலாறும், தத்துவமும், இலக்கியமும் எச்சூழலும், பேரினப் பண்பாடும் வந்து குவிந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வெல்ல வேண்டும். அதைத் தன்வயப்படுத்த வேண்டும். ஈழத்தைப் பொறுத்தவரை பண்பாடு, மரபு என்பவற்றின் அசலை மீட்டெடுக்கும், அதன் செவ்வியல் தன்மையோடு பொருந்தியிருக்கும் அடிப்படைகளைப் பற்றி சமகாலத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. மரபும், நவீனமும் இணையும் புள்ளிகளைத் தொட்டு நிலைப்படுத்த வேண்டியிருக்கிறது. என்னுடைய கவலையும் அக்கறையும் இந்தச் சமநிலையை இலக்கியத்திலும் அது புழங்கும் சூழலிலும் உண்டுபண்ணுவதுதான். அறிவியக்கத்தின் பிரதான பணிகளில் ஒன்றாக இதைக் கவனப்படுத்துகிறேன்.
தர்மு : சமூக வலைத்தளங்கள் எழுத்தாளரின் மொழியை மாற்றுகின்றன என்று நீங்கள் கருதுகிறீர்கள். அது எவ்வாறு நிகழ்கிறது?
யதார்த்தன் : மொழி ஒரு ஊடகம். நம்முடைய புற உலகத்தின் காட்சிகளை உள்ளே எடுப்பதும், வெளிப்படுத்துவதும் அதன் பணி. மொழி என்பது நம்முடைய மனம் கண்டுபிடித்த அல்லது ஒருங்கிணைத்த மாபெரும் நிகழ்வு. நம்முடைய நனவு மனம் படிமங்களாலானது. அதற்கு முன்புள்ளது மொழி. அது ஆழ் மனதிற்கும் , புற உலகோடு பொருந்தியிருக்கும் புழங்கு மனத்துக்கும் ஒரு நாபிக் கொடியைப் போல் செயற்படுகிறது. எனவே நம்முடைய ஆளுமை என்பது நாம் மொழி மூலமாக எவற்றோடு புழங்குகின்றோம் என்பதில் இருந்து உருவாகி வருவதுதான். சமூக வலைத்தளங்கள் இரண்டு கூறுகளால் ஆனவை. ஒன்று காட்சிகள், இன்னொன்று மொழி. சொல்லப்போனால் இரண்டும் மனத்திற்கு உவப்பானவை. அதற்கு புரியக் கூடியவை. சமூக வலைத்தளம் கட்டற்றது, நெறிகளற்றது அங்கு எல்லாம் புழங்கும். குறிப்பாக மொழிச்சூழலும் காட்சிச் சூழலும் பெருகிவந்து கொண்டே இருக்கும். அதன் பெரும்பகுதி கேளிக்கை, பொழுதுபோக்கு, எதிர்மறையுணர்வு, நுகர்வு சார்ந்தது. நம்முடைய மொழி அவற்றைக் கவனிக்கிறது. சில மாதங்கள் வெளியூருக்குச் சென்று வேறு மொழிச்சூழலில் இருந்தாலே அதன் உச்சரிப்பும், சொற்களும் ஒட்டிக் கொண்டுவிடும். சமூக வலைத்தளங்கள் தனக்கென்று உருவாக்கிக் கொண்டிருக்கும் கேளிக்கை, நுகர்வு சார்ந்த மொழியும் அதன் எதிர்மறையுணர்வுகளும் தினமும் நமக்குள் கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவை நம் ஆளுமையைப் பாதிக்கின்றன. பாலை நிலப் பாம்புகளின் விசத்தைபோல வீரியத்தோடு பரவிச் செல்கின்றது. நம்முடைய சிந்திக்கும் முறை, படைப்பாற்றல், தர்க்க புத்தி, கற்பனை, உள்ளுணர்வு போன்ற அக நிலைகளை அவை பாதிக்கின்றன. நன்றாக எழுத்தொடங்கி சமூக வலைத்தளங்களினால் அழிந்து போன பல எழுத்தாளர்களை எனக்குத் தெரியும், அந்தப் பேரழிவை அவருடைய மொழியிலே தெளிவாகப் பார்க்க முடியும். உடை வாளுக்கும் சமையல் கத்திக்குமான வித்தியாசம் அது.
தர்மு : இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு சமூக வலைத்தளம் புதைகுழிகள் தானா? அவற்றை பயனுள்ளதாகப் பயன்படுத்தவே முடியாதா?
யதார்த்தன் : நாங்கள் இளம் எழுத்தாளர்கள்தான். சமூகவலைத்தளங்கள் தோன்றி வளரும் காலத்தில் எழுத வந்தவர்கள். நாங்கள் சமூக வலைத்தளங்களைத்தான் பயன்படுத்தினோம். எங்களுடைய இலக்கியத்திலும் சமூக செயற்பாட்டிலும் அதற்குப் பங்குண்டு. தொடர்பாடல் மட்டுமே அதன் அடிப்படையும் பயன்பாடும் என்ற புரிதல் இருந்தது. இங்கே நான் சமூக வலைத்தளங்களைத் திட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. நான் நபர்களைத்தான் கவனிக்கிறேன். அவர்களின் ஆளுமையும் ஆற்றலும் எங்கே பயனின்றி எரிந்தழிகிறது என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கவலை கொள்ளச் செய்வது அவர்களின் செயலின்மையையும், தவமின்மையையும்தான். சமூக வலைத்தளங்கள் தொடர்பாலுக்கும், பகிர்தலுக்கும், ஏன் எழுதுவதற்கும் கூட சிறந்தவைதான். ஆனால் பெரும்பான்மைத்தரப்பு கேளிக்கைக்கு அங்கே வருகிறது.ஒரு நூலகமாகவோ, விவாதக் களமாகவோ என்றைக்கும் சமூக வலைத்தளங்கள் இருந்ததில்லை. அப்படி எந்த அறிவுச் செயற்பாடும் அங்கே ஆரோக்கியமாக நடந்து ஒப்பேறியதில்லை. கசப்பும் எதிர்மறையுணர்வும் செயலின்மையும்தான் வளர்கிறது. எஞ்சுகிறது. அண்மையில் முகநூலரான பெண்ணொருவர் ஒடுக்கப்படுபவர்கள் வேறு எங்கே சென்று எழுதுவது என்று கேட்டிருந்தார். அவரிடம் முகநூலைப் பிடுங்கி விட்டால் சிந்திக்க மாட்டாரா? போராட மாட்டாரா என்று கேட்க வேண்டும் போலிருந்தது. சமூக வலைத்தளங்கள் இல்லாவிட்டால் சனநாயகம் அழிந்து விடும் என்பது மாதிரியான கற்பனைகள் அங்கே இயங்குபவர்களுக்கு மட்டும்தான் வரும்.
தர்மு : இலக்கியப் புகழ், வாசகர் எண்ணிக்கை, சமூக வலைத்தள காட்சியமைப்பு — இவை படைப்பின் உள்ளார்ந்த தரத்தை பாதிக்கின்றனவா?
யதார்த்தன் : மெய்யான எழுத்தாளருக்கும் அவருடைய படைப்பிற்கும் இடையில் யாரும் இருப்பதில்லை. சொந்த விடுதலையை முன்னிட்டே அவர் எழுதுகிறார். எழுதுவதால் அளிக்கப்படும் நிறைவைப்போல் எந்தப்புகழையும் செல்வத்தையும் அவருக்கு அளித்துவிட முடியாது. கடுமையான தெய்வங்களை உபாசிப்பவன் பஞ்சாமிர்தத்திற்கு சப்புக் கொட்டுவதில்லை. புகழ் அங்கீகாரம் எல்லாம் அவருடைய உடல் வாழும் உலகியல் வாழ்விற்கு இவை உவப்பாக இருக்கலாம். அருந்தவத்தில் இருப்பவருக்கு இவை கிடைக்கப்பெற்றாலும் அவற்றை விலகி நின்று பார்க்கும் கண்கள் இருக்க வேண்டும். இலக்கியத்தில் அதிக பிரதிகள் விற்கக் கூடிய, வாசக எண்ணிக்கையும் புகழும் குறைவில்லாமல் அடைந்த இளம் எழுத்தாளர்களில் நானும் ஒருவன். மிக இளம் வயதிலேயே அவை அமைந்தன. சமூக செயற்பாடுகளில் இருந்த போதும் சரி இலக்கியத்திலும் சரி. ஆனால் அவற்றின் அற்பத்தன்மையை, அவற்றில் இருக்கும் ஆதார இயல்பான நிறைவின்மையை எப்பொழுதும் உணரும் உள்ளத்தை இலக்கியம் அளித்திருக்கிறது. முக்கியமாக என்னுடைய ஆசிரியர்கள் அளித்திருக்கிறார்கள். வேண்முரசு போன்ற உலகின் மிகப்பெரிய நாவலை எழுதியவரை, சமகால இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரை ஆசிரியராக வரித்துக் கொண்டவன். பெருஞ்செயல்களில் மட்டுமே என்னால் நிறைய முடியும். நல்ல நூல், ஆசிரியர், தவம் இவைமூன்றும் சரியாக அமைந்து விட்டால் உள்ளார்ந்த ஆற்றலை எதுவும் பாதிக்காது.
சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி எல்லோரும் நாவல் வெளியிடுகிறார்கள் இது சடங்கு போல இல்லையா? இல்லை ஒரு கலாச்சார நிகழ்வா?
திருவிழாக்கள்தான் நம்முடைய மரபில் உருவாகி வந்த மிகப்பெரிய சடங்குகள். சென்னைப் புத்தகக் கண்காட்சி தமிழ்ப் பண்பாட்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஒரு பெருந்திருவிழா. தொடர்ந்து ஆற்றப்படும் எந்த நற்கருமமும் சடங்கு நிலையில் இருந்து திருவிழாவாக மாறி விடுகின்றது. சடங்கு குறித்த சமூகக் குழுவிற்கோ, தனிநபர்களுக்கோ உரியது, மாறக்கூடியது. அழிந்து போகவும் செய்யும். ஆனால் திருவிழாக்கள் பண்பாட்டில் நிலைப்பவை. பண்பாட்டை உருவாக்குபவை.
6. மொழி / நடை
தர்மு : உங்கள் எழுத்து மொழியில் யாழ்ப்பாணத் தமிழ், வன்னி அனுபவம், மொழியியல் விழிப்பு, மரபு வாசிப்பு ஆகியவை ஒன்றாகத் தெரிகின்றன. உங்கள் மொழியை நீங்கள் திட்டமிட்டு உருவாக்குகிறீர்களா?
யதார்த்தன் : மொழியின் அமைப்பு என்பது ஒருவகையில் மனதின் அமைப்புத்தான். இலக்கியத்தில் மொழியைப் பழக்குவது என்பது கற்பனையை நிகழ்த்த மொழியை அதன் எல்லாக் கூறுகளினாலும் பயிற்றியெடுப்பது. சொல், உருபு, பொருள், வாக்கியம், அணி என்று ஓவ்வொன்றையும் தீட்டிக் கொள்வது. மொழியை இரண்டு முறையில் பழக்குகிறோம். வாசிப்பும் எழுத்தும். எவ்வளவு வாசிக்கிறோம் எவ்வளவு எழுதுகின்றோம் என்பதுதான் அதன் அடிப்படையான கணக்கு. நம்முடைய படைப்பாற்றல், கூருணர்வுகள் எல்லாம் இவை இரண்டும் நிகழும் போதே தாங்களும் பயில்கின்றன. என்னுடைய புனைவுகளில் நிகழக் கூடிய பேச்சு மொழி யாழ்ப்பாண வட்டார மொழியை அடிப்படையாகக் கொண்டது. என்றாலும் வன்னி, மன்னார் என்று யாழ்ப்பாணத்தை விட்டு விலகிச் செல்லும் போது நுட்பமான வேறுபாடுகள் அதில் நிகழ்வதுண்டு. அவற்றை முடிந்த வரை கவனித்து எழுதுகிறேன். எடிட்டிங்கின் போது நம்முடைய மொழியை நாமே பார்க்க முடியும். நாம் எங்கே தவறுகிறோம் எங்கே நம்முடைய கூர்மை நிகழ்கிறது என்பதை எல்லாம் அப்பொழுது கவனித்து உள்வாங்க முடியும். தவிர படைப்பு நடக்கும் நிலத்திற்கும் மொழிக்கும் ஒரு இசைத்தன்மை முக்கியமானது. புனைவில் எழுத்தாளர் தன்னுடைய மொழி இயல்பிற்கும் அப்புனைவு கோரக் கூடிய மொழி இயல்பிற்குமான ஒரு மீடிறனைக் கண்டுபிடிக்க வேண்டும்.
தர்மு : நகுலாத்தை ஈழத்தைவிட, தமிழகத்தில் அதிகமாகப் படிக்கபப்ட்டது. கவனிக்கப்பட்டது. நீங்கள் ஈழத் தமிழில் எழுதும்போது, தமிழ்நாட்டு வாசகர் புரிந்துகொள்வாரா என்ற கவலை உண்டா?
யதார்த்தன் : ஈழத்தமிழ் என்பது தமிழ் நாட்டில் இருக்கும் ஏராளம் வட்டார வழக்குகளைப் போல இன்னொன்று என்றுதான் கருதுகிறேன். குமரி மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு யாழ்ப்பாண வட்டார வழக்கு நெருக்கமானது. ஈழத்திலேயே நான்கு வகைத் தமிழ் இருக்கிறது அதில் பண்பாடு, பேச்சு அடிப்படையிலான வித்தியாசங்கள் உண்டு. உதாரணத்திற்கு வெளியாகி இருக்கும் என்னுடைய நாவலான தோறை யின் தலைப்பு இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புழங்கும் சொல். யாழ்ப்பாணத்தில் தோறை என்பது, துடுக்கான, வாயாடிப் பெண்களையும், பொதுப்புத்தியில் இருக்கக் கூடிய ஒழுங்க நியமங்களை மீறக்கூடிய பெண்களைச் சொல்லும் ஓர் வசைச்சொல். சில சமயங்களில் அதைச் செல்லமாகவும் அதைச்சொல்லிக் கூப்பிடுவதுண்டு. குறிப்பாக குழப்படிக்காரச் சிறுமிகளைக் கூட அப்படிக் கூப்பிடுவார்கள். ஆனால் கிழக்கில் விசாரித்த போது அது பெண்ணின் பாலியல் ஒழுக்கக் கேட்டைக் குறிக்கக் கூடிய ’கெட்ட வார்த்தையாக’ பயன்பாட்டில் உள்ளது. இந்த முரண்களுக்கு மத்தியில் எழுத்தாளன் தன்னுடைய மொழியைக் கையாள வேண்டியிருக்கிறது. இலக்கியத்தின் மொழி என்பது நம்முடைய அன்றாட பேச்சில் உள்ள மொழியல்ல. அது மொழிக்குள் இயங்கும் இன்னொரு மொழி. அதில் இருக்கும் பேச்சும் எழுத்தும் அந்தப் புனைவிற்குரிய மொழி மட்டுமே. நல்ல வாசகர்களுக்கு இந்தத் தெளிவு முக்கியம். அந்தப்புனைவு ஒவ்வொரு சொல்லையும் எவ்வாறு பொருள் கொள்கிறது என்பதை நல்ல வாசகர்கள் அதனோடு இசைந்து வாசிக்கிறார்கள். வட்டார வழக்குகள் இன்றைக்குச் சூழலில் அவ்வளவு கடினமாக இல்லை. பெரும்பாலும் இணையத்தளங்களில் தேடிப் பொருள் பிடித்துவிடலாம். வாசிப்பு என்பது உழைப்பும்தான். என்னுடைய புனைவுகளில் பாத்திரங்களின் பேச்சு அப்பாத்திரங்களின் மொழிப் பின்னணியில் இருந்து அமைக்கப்படுகின்றது. பெரும்பாலும் பாத்திரங்களுக்கு இடையில் பல்குரல்தன்மை வேறுபட்டிருக்கிறதா என்பதைக் கவனிப்பேன். பேச்சுத்தவிர மிகுதியை எழுத்து மொழியிலேயே அமைக்கிறேன். நகுலாத்தையில் இருந்து தோறைக்கு வரும் போது அந்தக் கத்தியும், நேர்த்தியும் கூராகி வருவதைக் காண்கிறேன். எனக்கான ஓர் மொழி உருவாகி வரத்தொடங்கியிருக்கிறது.
தர்மு : புனைவின் மொழி மற்றும் கட்டுரையின் மொழி — இவை இரண்டையும் நீங்கள் வேறுபடுத்திப் பார்கிறீர்களா?
யதார்த்தன் : இலக்கியத்தில் மொழியை அதன் நோக்கம் சார்ந்து பயன்படுத்துகிறோம். புனைவின் மொழி படிமங்களை, உள்ளடுக்குகளை முக்கியமாக பூடகமான அர்த்தப்படுத்தல்களை அடிப்படையாகக் கொண்டது. அதாவது அது அழகியலின் தரப்பு. கட்டுரைகளின் மொழி தகவல்களையோ தர்க்கங்களையோ ஒழுங்குபடுத்துவது. கட்டுரைகளும் ஒருவகையில் படைப்புச் செயற்பாடுதான், ஆனால் அதில் நிகர் மனத்தின் தொகுப்புத்தன்மை செயற்படுகிறது. அது தேர்ந்தெடுக்கிறது. ஒழுங்குபடுத்துகிறது. நல்ல கட்டுரையில் பொருத்தமான உவமை ஒன்று வந்து விழும்போது அது வெறும் தகவலில் இருந்து சட்டென்று எழுந்து பறப்பதையும் கண்டிருக்கிறேன். கட்டுரையின் மொழியும் பயில்வதுதான். என்னுடைய கட்டுரைகள் பத்திகளில் எப்பொழுதும் ஒரு அனுபவத்தையோ, கதைத்துண்டையோ பயன்படுத்துவேன். பத்திரிக்கையாளராக இருந்த போது பத்திகளை எழுதும் போது இவ்வகைக் கதைகளைக் hook என்போம். வாசகரை கட்டுரைக்குள் நுழைவதற்கு இவ்வகைக் கொழுக்கிகள் முதல் தூண்டலைக் கொடுக்கும். அதே வேளை இயந்திரத்தனமான உதாரணங்களுக்கும் ஓர் வாழ்க்கைத் துண்டுக்கும் வாசிப்பு அனுபவத்தில் வேறுபாடு இருக்கின்றது இல்லையா? புனைவு எழுத்தில் அடிப்படையானது. சொல்லப்போனால் இலக்கியத்தில் கட்டுரை, உரை எல்லாமே ஏதோ ஒரு வகையில் புனைவை விளக்குவதற்கும், விசாரணை செய்வதற்குமான கருவிகளில் ஒன்றுதான். இலக்கியம் என்பது கற்பனையின் அறிதல் முறை. அங்கே தர்க்கம் சற்றுக் கீழே இறங்கித்தான் அமர வேண்டும்.

7. வாசிப்பு / தாக்கங்கள்
தர்மு : உங்கள் வாசிப்பை உருவாக்கிய முதல் எழுத்தாளர்கள் யார்?
யதார்த்தன் : வணிக பொழுது போக்கு எழுத்துக்களை வாசிப்பதில் இருந்து தீவிர இலக்கியத்திற்கு வரும் போது. சாண்டில்யன், சுஜாதா போன்ற தமிழ் எழுத்தாளர்களை வாசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய தமிழாசிரியர் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக நவீன இலக்கியத்தின் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். அப்படிப்பார்த்தால் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஆகியோரில் தொடங்கியிருக்கிறேன்.
தர்மு : ஈழ எழுத்தாளர்களில் உங்களை ஆழமாகப் பாதித்தவர்கள் யார்?
யதார்த்தன் :புனைவு என்று எடுக்கும் போது ஈழ இலக்கியத்தில் பாதித்த எழுத்தாளர்கள் என்றால் எஸ்.பொ, ஷோபாசக்தி இருவரையும் சொல்ல முடியும். புனைவுக்கு வெளியே சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களின் எழுத்துக்களின் பாதிப்பு நிறையவே உண்டு.
தர்மு : தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் உங்களுடன் நீண்ட உரையாடலில் இருப்பவர்கள் யார்?
யதார்த்தன் : முதன்மையானவர் என்னுடைய ஆசிரியர் ஜெயமோகன். தற்பொழுது தான் கடிதங்களை எழுதத் தொடங்கியிருக்கிறேன் என்றாலும் மூன்றரை வருடங்களாக அவருடன் தினமும் ஏதோ ஒரு வகையில் உரையாடிக் கொண்டிருக்கிறேன். அதுவொரு நீண்ட உரையாடலும் கூட. ஓர் ஆசிரிய மாணவ உறவை நானே கற்பனை செய்து கொண்டு அவருடன் சேர்ந்து சிந்திக்கப் பழகுகிறேன். விவாதிக்கிறேன். கற்றுக்கொள்கிறேன்.
சமீபத்தில் மறைந்த நண்பர் எழுத்தாளர் நிஜந்தன் நீண்ட உரையாடலில் இருந்தவர். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலே அவர் உளநோயினால் அவதிப்பட்டிருக்கும் போதும் கூட இலக்கியம் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். கோணங்கி என்னுடைய புனைவுகளை எப்படியும் படித்து விடுவார். அவற்றைப்பற்றிப் கதைப்பார். வாச்சியங்கள், கதைகளைப் பற்றிப் பேசுவார். பயணங்களைப் பற்றிச் சொல்வார்.
தர்மு : உலக இலக்கிய வாசிப்பு உங்கள் புனைவின் அமைப்பை மாற்றியதா?
யதார்த்தன் : என்னுடைய நவீன இலக்கிய வாசிப்பு என்பது உலக இலக்கிய வாசிப்பில், குறிப்பாக அதிகமாக மொழிபெயர்ப்புகளை வாசிப்பதிலேயே தொடங்கியது. மொழிபெயர்ப்புகளின் மீது அவ்வளவு ஈடுபாடு இருந்தது, இரஷ்ய இலக்கியம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், ஐரோப்பிய மொழிபெயர்புகள், இந்திய கிளாசிக் மொழி பெயர்ப்புகள் என்னுடைய சிந்திக்கும் முறையையும் எழுத்தையும் வாழ்கைப் பார்வைகளையும் நிறையவே பாதித்திருக்கின்றன.
தர்மு : ஒரு இளம் எழுத்தாளர் முதலில் என்ன வாசிக்க வேண்டும் — சமகால இலக்கியமா, மரபிலக்கியமா, உலக இலக்கியமா, சமூக அறிவியலா?
யதார்த்தன் : இளம் எழுத்தாளர் இலக்கியத்தைச் சார்ந்த எல்லாவற்றினதும் அடிப்படைகளை வாசிக்க வேண்டியவர். சமகாலம், மரபு, வரலாறு தத்துவம் எல்லாவற்றையும் பற்றிய அடிப்படைச் சித்திரம் அவருக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சமகால இலகியம், மரபிலக்கியம், உலக இலக்கியம் எல்லாவற்றையும் அவர் வாசிக்க வேண்டும். சமூக அறிவியல் என்பது இவற்றினூடே இயல்பாக வந்து சேரும்.
8. இலக்கியச் சூழல் / இளம் தலைமுறை
தர்மு : இன்றைய இளம் ஈழ எழுத்தாளர்களின் பங்களிப்பு என்று எவற்றைச் சொல்லலாம்?
யதார்த்தன் : அரசியல் துண்டுப்பிரசுரங்களில் இருந்து விலகி, மெய்யான இலக்கியத்திற்கு இளம்தலைமுறை வந்து சேர்ந்திருப்பது அவர்களின் முதன்மையான பங்களிப்பு. இன்றைக்கு இளம் தலை முறை எழுத்தாளர்கள் எந்த விதமான கோட்பாடுகளுக்குள்ளும், இசங்களுக்குள்ளும் மூழ்கிப் போகாமல், புறவயமாக தங்களை வரையறுத்துக் கொள்ளாமல் இலக்கியச் செயற்பாட்டில் இருப்பதை முக்கியமென்று கருதுகின்றேன். ஈழத்தில் இருக்கக் கூடிய மிகப்பெரிய விழுங்கு பொறி அதன் அரசியல் மட்டுமேயான தன்மை. கட்சி, கோட்பாடு சார்ந்து இழுபட்ட எங்களுடைய முந்திய தலைமுறை உருப்படியாக எழுதியவை என்பது மிகக் குறைவு.
தர்மு : ஈழ இளம் எழுத்தாளர்களின் மிகப் பெரிய பலவீனம் என்ன?
யதார்த்தன் : பிறருக்காக எழுதுவது. எழுத்தின் நோக்கம் என்பது சொந்த விடுதலை என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை. கண்டறிந்து எழுதுவது அவர்களுடைய வழிமுறையாக இருக்கிறது. இலக்கியம் என்பது எழுதிக் கண்டடைவது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. எளிய புகழ், அங்கீகாரம், சிற்றாணவங்களோடு கரைந்தழிந்து போய்விடுகிறார்கள். ஒரு நல்ல கதை எழுதி விட்டு அப்படியே காணாமல் போன, நிகழாமல் போன பலரை எனக்குத் தெரியும்.
தர்மு : ஈழ இலக்கியம் இன்னும் போர் நினைவின் மையத்தில் தானா இருக்கிறது? அப்பால் விலகிச் செல்லும் எத்தனங்கள் இருக்கின்றனவா?
யதார்த்தன் : ஈழ இலக்கியத்திற்கு இருப்பது எதை எழுதுகிறோம் என்ற பிரச்சினையல்ல. அது போரின் கதைகளைக் கூடச் சரியாக எழுதியிருக்கிறதா என்ற கேள்வி என்னிடம் இருக்கத்தான் செய்கிறது. ஈழ இலக்கியத்தின் பிரச்சினை அது அரசியல் சித்தாந்தங்களைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தவில்லை என்பது. முக்கியமாக வரலாற்றுப் பார்வை, தத்துவம் இவை இரண்டும் இல்லாமல் பேரிலக்கியங்களை எழுத முடியாது. போர்க்கதைகளே திரும்பத் திரும்ப ஒரே சம்பவங்களை விபரித்துச் சலித்துப் போயிருக்கின்றன. குருதியும் ஓலமும் தவிர அதில் திரட்டியெடுத்த வாழ்க்கைத் தரிசனம் என்ன என்ற கேள்வி உள்ளது. இளம் தலைமுறை தீவிரமாக இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது போரைத் தாண்டிய வாழ்க்கையும் உள்ளே வரும்.
தர்மு : இலக்கியக் குழுக்கள், வாசகர் வட்டங்கள், சிற்றிதழ்கள் — இவை இளம் எழுத்தாளர்களை உருவாக்க இன்னும் அவசியமா?
யதார்த்தன் : அவசியம்தான். இலக்கியத்தை வளர்க்கும் பெருக்கும் அடிப்படையான சமூகக் கூறுகள் இவை. இலக்கியத்திற்கோ அறிவியக்கத்திற்கோ சிந்திக்கும் சுற்றம் ஒன்று எப்பொழுதும் அவசியம். இலக்கியத்திற்கான சுற்றம் சிற்றிதழ்கள், இலக்கிய அமைப்புகளின் மூலமே உருவாகி வரும். சிந்திப்பது என்பது கூட்டுச் செயற்பாடும் தான். தனியாக யாரும் சிந்தித்து விட முடியாது.
தர்மு : இலக்கியச் சூழலில் கருத்து வேறுபாடு எவ்வாறு கையாளப்பட வேண்டும்?
யதார்த்தன் : சனநாயகத் தன்மையோடும் திறந்த மனதோடும்
9. எதிர்காலம்
தர்மு : இனி நீங்கள் அதிகம் எழுத விரும்பும் வடிவம் எது — நாவல், சிறுகதை, கட்டுரை, ஆய்வு, மரபிலக்கிய வாசிப்பு?
யதார்த்தன் : நாவல்கள்தான். நானிதை நாவல்களின் காலம் என்றே அழைக்க விரும்புகிறேன். பெருநாவல்களை எழுதுவதற்கான பயிற்சியாகவே மற்ற இலக்கிய வடிவங்கள், செயற்பாடுகளை எல்லாம் கொள்கிறேன்.
தர்மு : இன்னும் எழுதத் தயங்கும் பொருள் உண்டா?
யதார்த்தன் : ஆம்
தர்மு : உங்கள் அடுத்த பெரிய படைப்புத் திட்டம் எந்த திசையில் இருக்கிறது?
யதார்த்தன் : தோறைக்குப் பிறகு கூளி என்ற குறுநாவலை எழுதத் தொடங்கினேன். இப்பொழுது நிறையும் தறுவாயில் உள்ளது. வருகின்ற ஆண்டின் கோடைகாலத்தில் வெளியாகலாம். அதற்குப் பிறகு கொலனித்துவ காலத்தில் நிகழும் நாவல் ஒன்றை எழுதப் போகிறேன். வரும் வருட இறுதியில் அதை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக நான்கு வருடங்களாக ’உபுல்வன்’ என்ற வரலாற்றுப் பெரு நாவலுக்குரிய கனவோடு இருக்கிறேன், அதற்கான வாசிப்பு, பயணங்களைச் செய்து வருகிறேன்.
தர்மு : பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் எழுத்து எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
யதார்த்தன் : நல்ல இலக்கியம் என்ற தகுதியோடு.
தர்மு : நகுலத்தைக்கு கிடைத்த கவனிப்பு எப்படி உங்களை பாதிக்கிறது? அந்த எதிர்பார்ப்பு அடுத்த தோறை நாவலில் சுமையாகத் தெரிகிறதா?
யதார்த்தன் : இல்லை. சூழலுக்காக எழுத முடியாது. வணிக எழுத்தில்தான் வாசகர்ளுக்காக எழுத வேண்டும். வாசகர்களைத் தேடிச்செல்ல வேண்டும். தீவிர இலக்கியத்தில் வாசகர்கள்தான் படைப்பை நோக்கி வரப்போகிறார்கள். நகுலாத்தைக்கு கிடைத்த வெளிச்சம் எந்த வகையிலும் என்னை அண்டவில்லை. அதனால்தான் இடையில் மூன்று ஆண்டுகள் எதையாவது எழுதிப் போடலாம் என்ற நிலைக்குப் போகாமல் காத்திருந்தேன்.

10.தோறை தடை
தர்மு : இலங்கை அரசாங்கத்தினால் தடுத்துவைக்கப்படும் அளவிற்கு தோறையின் உள்ளடக்கம் சிக்கலானதா? இல்லை அதனை வாசித்து புரிந்து கொண்டு தடைசெய்யும் மளவிற்கு பொறிமுறையோ, அமைப்போ இல்லாததுதான் சிக்கலா? இல்லை இலக்கியப் பிரதியை அப்படித் தடுக்க முடியாதா?
யதார்த்தன் : தோறையின் உள்ளடக்கத்தை அரசாங்கம் வாசிக்க வில்லை. சுங்கத்துறை ஊழியர்கள் அதைத் தட்டிப்பார்த்து விட்டு சில போர்ச் சூழல் சார்ந்த சொற்களை மட்டும் வாசித்து விட்டு புத்தகத்தைத் தடுத்திருக்கிறார்கள். அடிப்படையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் மீது ஏற்படுத்தப்படும் அநீதி இது. எனக்கு மட்டும் நிகழ்ந்ததல்ல பல எழுத்தாளர்களுக்கு நிகழ்ந்தது. அதனால் கூட்டுக்குரல்களை அரசாங்கம் கேட்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் எந்தப்புத்தகமும் இன்னும் விற்பனையிலோ புழக்கத்திலோ தடைசெய்யப்படவில்லை. அரசாங்க நூலகங்களிலேயே வாசிக்கக் கிடைக்கின்றன. ஆகவே இதன் முதன்மைப் பிரச்சினையாக இங்குள்ளது பொறிமுறைச் சிக்கலாகவும் அசட்டைத்தனமாகவுமே பார்க்க வேண்டியுள்ளது. சரியா நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு புத்தகங்களின் உள்ளடக்கம் பற்றியும் அதைத் தடுப்பது பற்றியும் அரசு விளக்கங்களுடன் சொல்லட்டும். அதற்குப்பிறகுதான் அதன் உள்ளடக்கம் பற்றிய சிக்கலைப் பேச முடியும். உதாரணத்திற்கு தீபச்செல்வனின் உள்ளடக்கங்கள் மீது எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. அது ஒரு வகைத் தமிழ் இனவாதம். முழுக்க முழுக்க அழகியல் அற்ற பிரதிகள். தீவிர இலக்கியம் அவற்றைத் தொட்டுக்கூடப் பார்க்காது. ஆனால் அவருடைய கருத்து வெளிப்பாட்டு உரிமை எனக்கு முக்கியமானது. வொல்டெயர் சொன்னதுதான். உன்னுடைய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அதைச் சொல்வதற்கான உன்னுடைய உரிமைக்காக நான் குரல் கொடுப்பேன் என்பதுதான் என் நிலைப்பாடும்.
தர்மு : ஓர் இலக்கியப் பிரதி இப்படியான வேண்டாத சர்ச்சைகளினூடு பொதுவில் வருவது நாவலிற்கு பாதிப்பு என்பது என்னுடைய எண்ணம். நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்
யதார்த்தன் : ஓம், நாவல் அதன் இயல்பாக தங்களின் தொடர் வாசிப்பையும் உழைப்பையும் கொடுத்து இலக்கியத்திற்கு வரும், செயற்படும் வாசகர்களுக்காக எழுதப்பட்டது. யாரோ நடிகர் சொல்லி விட்டார் என்று அந்தப் புத்தகத்தை மட்டும் தேடிப்பிடித்து வாசிக்கும் வாசகர்களையோ, சர்சைக்குள்ளான புத்தகம் என்று தேடி வாங்கும் வாசகர்களையோ முன்னிட்டு எழுதப்படவில்லை. எனக்கு அவ்வகையான எழுத்துகளில் நம்பிக்கையில்லை. அவ்வகை வாசகர்களும் எனக்குரியவர்கள் இல்லை. தோறையை முற்பதிவு செய்த, வாங்க தயாராக இருந்த என்னுடைய வாசகர்களின் பொருட்டே என்னுடைய வருத்தமும் ஆதங்கமும் உள்ளது. புத்தகத்தைக் கொண்டு சேர்க்கின்ற வேலையைப் பதிப்பகம் செய்கிறது. தமிழ் நாட்டின் முக்கியமான பதிப்பகமான காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட நாவல் இது. தீவிர இலக்கியம் சார்ந்த வாசகர்களுக்காக எழுதப்பட்டு பதிக்கப்பட்டது. இந்தச் சர்ச்சை நூலின் விற்பனையை ஒரு சில பிரதிகள் கூட்டலாம். அது ஒரு நிரந்தரமான கணக்கோ, பொருட்டோ இல்லை. இலக்கியம் நல்ல பிரதிகளை மட்டுமே வைத்துக்கொள்ளும். மற்றவைகள் காலத்தில் தங்குவதில்லை. எந்த வகை குட்டிக்கரணங்களும் எட்டுநாள் தாங்காது. தவிர தமிழ் புத்தகங்கள் ஆயிரக்கணக்கிலா விற்கப்போகின்றன. விளம்பரத்தையோ சர்ச்சையையோ பார்த்து வாங்குபவர்களையும் சேர்த்தால் கூட என்னைப்போன்ற இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஐநூறு பிரதிகள் விற்றாலே பெரிது இல்லையா?
தர்மு : இலக்கியப் பிரதி ஒன்றை இப்படி சர்ச்சைகளூடாக பெருந்திரளிடம் கொண்டு சென்றுவிடலாம் என்றும் இது விளம்பர உத்தியென்றும் சிலர் சொல்கிறார்கள். அப்படியா?
யதார்த்தன் : ஒரு கதைக்கு, நடிகர்களை வைத்து என்னுடைய புத்தகத்தை விளம்பரம் செய்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் தமிழ்ச்சமூகம் லட்சக்கணக்கில் வாங்கித் தள்ளி விடுமா? வணிக எழுத்துக் கூட நொண்டியடித்துத்தான் ஓடிக்கடக்க வேண்டும் என்ற நிலைதான் தமிழ்ச் சூழலில் உள்ளது. தீவிர இலக்கியம் வாசிக்கும் தமிழர்கள் உலகெல்லாம் தொட்டு எண்ணினால் கூட ஒரு பத்தாயிரம் பேர் தேறுவார்களா? அதில் ஆயிரம் பேர் என்னுடைய பிரதியை வாங்குவார்கள் என்று கூடக் கணக்குப் போட முடியாது. ஈழத்தில் சமகாலத்தின் முதன்மையான எழுத்தாளர் என்று கொண்டாடப்படும் சோபா சக்தி நூல்களில் வரும் வருமானம் மிகச் சொற்பமானது என்கிறார். தன்னுடைய பொருளாதாரத்தை நடிப்பின் மூலமே ஈட்டுகிறார். நான் இளம் எழுத்தாளன் வாசகர்கள் முந்நூறு பேரைத் தாண்டுவதே பெரிய விசயம் இதில் பாதுகாப்பு அமைச்சோடு மல்லுக்கு நின்று விளம்பரம் தேடும் அதி புத்திசாலித்தனமான திட்டத்தை நான் போட்டிருப்பேன் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது ? அதுவும் என்னுடைய சொந்தச் செலவில். என்னுடைய கற்பனையின் மேல் என்னை விட இவர்கள் ஏன் அதீத நம்பிக்கை வைக்கிறார்கள் என்று பிடிபடவில்லை. எனக்கு இருக்கும் விளம்பரம் எல்லாம் என்னுடைய எழுத்தும், ஆசிரிய மரபும், முதல் நாவலும், நண்பர்களும் என்னுடைய இணையத்தளமும் , நான் ஈட்டிக் கொண்ட கொஞ்சம் வாசகர்களும் மட்டும்தான். சர்ச்சையினால் புத்தகம் விற்றுத்தள்ளி விடும் என்ற சமூக வலைத்தள மனநிலைகளில் இருந்து இவர்களை யாரும் மீட்டெடுக்க வேண்டும். அதுவொரு புரட்டு.
***


