ஆக்காட்டி 14

க்காட்டி 14வது இதழ் வெளிவந்திருக்கிறது. ஓரிரு வாரங்களில் இலங்கை, மற்றும் பிரான்ஸில் கிடைக்கும். இந்தியாவில் இதழ் வேண்டும் நண்பர்கள் ‘கருப்புபிரதி’ நீலகண்டனைத் தொடர்புகொள்ளலாம். இந்த இதழில் தோழர் சுகனின் விரிவான நேர்காணல் வந்திருக்கிறது. இலங்கைச் சூழலில் தொடர்ந்து தலித்திய உரையாடலைச் செய்துவருபவர் சுகன். இவர் புகலிடச்சூழலில் விரிவாக உரையாடப்பட்ட மூன்று தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். ‘தமிழர் என்ற கட்டமைப்பே வன்முறை சார்ந்த மேற்சாதியக் கட்டமைப்பு’ எனச் சொல்லும் சுகன் இஸ்லாமியரைப் போலவே தலித்துகளும் பேரம் பேசும் அரசியல் சக்தியாகத் திரளவேண்டிய தேவை இலங்கைச் சூழலில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இலக்கியச் செயற்பாட்டாளர்கள் குறித்து (கி.பி.அரவிந்தன், ஜெயபாலன், பாலகணேசன், கா.சிவத்தம்பி, கருணாகரன், அசோகமித்திரன், சு.ரா, அ.யேசுராசா…) தனது கறாரானமதிப்பீடுகளை முன்வைத்திருக்கும் சுகனின் முக்கியமான நேர்காணல் இது.

முகமட் ஃபர்ஹானுடனான இலங்கையில் ’கிளிட்டோரிஸ்’ வெட்டும் சடங்கு குறித்த உரையாடலும் மிக முக்கியமானதாகும். அறிந்தவரை இது குறித்த உரையாடல்கள் சிறுபத்திரிகைகளில் கூட செய்யப்பட்டிருக்கவில்லை இவ்வளவு ஏன் தோழர் ரியாஸ் குரானாவே தனது ஃபேஸ்புக் குறிப்பில் கிளிட்டோரிஸ் வெட்டும் சடங்கை பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகப் புரிந்துகொள்ளமுடியாதவளவு மூடுண்ட உரையாடலைச் செய்யும் மன அமைப்போடு தான் இருக்கிறார். இது வெறும் ஒரு ஃபேஸ்புக் நிலைத்தகவலோடு கடந்து செல்ல முடிகின்ற செய்தியா? ஃபர்ஹானுடனான ஷோபாசக்தியின் உரையாடலைத் தொடக்கமாகக் கொண்டு அடுத்த இதழ்களிலும் இது குறித்த விரிவான உரையாடலைச் செய்யும் எண்ணமிருக்கிறது.

ஃபிரான்ஸின் தற்காலச் சிக்கலான நிலைமைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் 95 வயதான எட்கார் மொறினை தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. நம் சூழலிலிருக்கும் சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும், அவற்றை உரையாடவும் எதிர்வினையாற்றவும் எட்கர் மொறின் நமக்குச் சில சிந்தனை முறைகளைக் கையளிக்கிறார். ’குறிப்பாக ‘புரட்சி’, ‘புத்திஜீவிகள்’ எனும் சொற்களில் நிறுவப்பட்ட ‘முழுமையை ’, ‘நிரந்தரத்தை ’ முற்றாக மறுக்கிறார். பொருள்முதல் வாதிகள் என வரையறுக்கப்பட்டவர்கள் கருத்தை முதன்மைப் படுத்துபவர்களாகவும், கருத்துமுதல்வாதிகள் என வரையறுக்கப்பட்டவர்கள், பொருளை முதன்மைப்படுத்துபவர்களாகவும் சிந்தித்தே செயற்படுவதாகவும் இருந்தனர் என்பதற்கான புரிதல்களை இவரது பிரதிகளில் அவதானிக்க முடியும்’. என எட்கார் மொறின் குறித்த அறிமுகத்தை ‘ஜல்லிக்கட்டு மக்கள் திரட்சியோடு’ சேர்த்து அசுரா எழுதியிருக்கிறார்.

அனோஜன், யதார்த்தன் மற்றும் நெற்கொழுதாசனின் மூன்று சிறுகதைகள். சுதர்சன் செல்லத்துரை, அத்தியா, சாதனா, யோகி, நெற்கொழுதாசன், தர்மு பிரசாத் மற்றும் மிஹாத்தின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் வெளியாகியுள்ளது. சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கியின் மொழிபெயர்ப்புக் கவிதையும் ஷமீலா யூசுப் அலியின் கவிதைகளும், எஸ்.பி.புஸ்பகாந்தனின் ஓவியங்களுமாக இம்முறை ஆக்காட்டி வெளியாகிறது.

Scroll to Top