றியாஸ் குரானா வின் நவீனம் கடந்த கவிதைகள் என்ற முன்வைப்பே மிகப் பரிதாபகரமானது. நவீனம் எனப் பொதுவாகச் சொல்லப்படுவது கைத்தொழிற்புரட்சியின் பின்னரான காலகட்டம். அதன் பெரும் கொடையாக சனநாயகம், சமத்துவம், பகுத்தறிவு போன்றவற்றைச் சொல்வார்கள். பொதுக்கல்வி, பத்திரிகைகள் வழியாக அது பரவலாக்கப்பட்டது. தமிழ் மனம் தன் பெரும் செய்யுள் மரபிலிருந்து நவீனகாலகட்டத்தினுள் நுழைந்த போது அல்லது நவீன காலகட்ட சிந்தனைகளை சந்தித்த போது, அது செய்யுளின் இறுக்கம் உதறி நவகவிதை /நவீனகவிதையைக் கைக்கொண்டது. அது ஒரு யுகமாற்றம். காலகட்டத்தின் சந்தி. நவீன கவிதைகளினுள்ளும் பல கவிதைப் போக்குகள் அல்லது பாணிகள் இருக்கின்றன. இந்த நவீனம் கடந்த கவிதைகள் என முன்வைக்கப்படுபவை பெரும்பாலும் – நவீனத்துவத்தின் போதாமைகளை உணர்ந்த கவிதைகளை. நவீனகாலட்டத்தின் ஓர் உச்சம் நவீனத்துவம். அது தனிமனித நோக்கு, தர்கம், குறைத்து சொல்லல், பூடகம், இறுக்கமாகக் கட்டபட்ட மையம், பகுத்தறிவுப்பார்வையை இலக்கியக வெளிப்பாடாக முன்வைத்தது. இவர்கள் பெரும்பாலும் நவீனம் கடந்த கவிதைகள் எனச் சொல்பவை இந்த நவீனத்துவ இயல்பை மறுக்கும் கவிதைகளையே. அதிலும் போதாமைகள் இவர்களிடம் இருக்கிறது. ஒன்று இவர்களது நவீனம் கடந்தது என்பது வெளிப்பாட்டு முறையில் மாத்திரம் மொழியில் நிகழ்கிறது. ஆனால் மனநிலை, உள்ளடக்கம் எல்லாம் நவீனத்தில் தங்கியிருக்கிறது. உண்மையில் நவீனத்துவத்தை இவர்கள் கடந்திருந்தால் இவர்கள் வந்திருக்க கூடிய இடம் இன்னும் இறுக்கம் தளார்ந்த நெகிழ்வான இலகு கவிதைகளுக்கே. இசையின் கவிதை போல. அல்லது நாட்டார் தன்மைகளை, வட்டார நுண்மைகளை, ஒடுக்கபடுப்வர்கள் உளத்தை நுட்பமாக பிதுக்கும் வெய்யிலின் கவிதைகள் போன்றவற்றை எழுதியிருக்க கூடும். நவீனத்துவ இறுக்கத்தை மறுக்கும் மிக நல்லபடைப்புகள் பின்நவீனத்துவ காலகட்டத்திலே தமிழில் அடையப்பெற்றுவிட்டன. அவற்றின் எச்சங்களாக மீந்திருபதே இவர்களின் ஒரே சாதனை.
பிரஞ்சுக் கவிஞர் ‘ழக் ப்ரெவர்‘ரின் ஒரு கவிதை இருக்கிறது. கறுப்பு உடைதரித்து இலையுதிகாலத்தின் இறுதிச் சடங்குக்குச் செல்லும் நத்தைகள் வாசந்த காலத்தில் தான் அங்கு வந்து சேர்கின்றன. அவை அணிந்துவந்த துக்க ஆடைகளும், இரங்கற் சொற்களும் வசந்த காலத்தில் கேலியும் கோமளித்தனமுமாக ஆகிவிடுகின்றன. கிட்ட தட்ட ரியாஸ் குரானாக்களின் நிலையும் அதுதான். அவர்கள் மிகத் தாமதமாக தாங்கள் பின்னவீனத்துவச் (உண்மையில் அவை பின்நவீனத்துவமே அல்ல..) சவப்பெட்டியுடன் இலக்கியக் களத்திற்கு வந்த போது தமிழ் இலக்கியச் சூழலின் நிலமை முற்றிலும் தலைகீழாகிவிட்டிருந்தது. அதாவது தமிழ் இலக்கியச் சூழலும், விமர்சனங்களும் தங்கள் நவீனத்துவக் கருவிகளை பழுது பார்த்துக் கொண்டும், பின்னநவீனத்துவ அறிதல் முறையின் தருக்கங்களை உள்வாங்கிக் கொண்டும் மேலும் விரிவான தளத்தில் பயணிக்க தொடங்கிவிட்டிருந்தன. அப்படியாகவே பின்நவீனத்துவப் சுழல் சிறு அதிர்வுடன் தமிழ் இலக்கியப் வெளியைக் கடந்து சென்றது. பின்நவீனத்துவத்தை தீவிரமாக முன்வைத்த மூலவர்களே அதன் எல்லைகளை உணர்ந்து கொண்டும், அதன் உச்ச சாத்தியத்தைப் பரீட்சித்து விட்டும் அதன் எல்லைகளுள் குறிப்பிடத்தக்க நல்ல படைப்புகளைக் கொடுத்து விட்டும், அதன் போதாமைகளை உணர்ந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தார்கள். அவர்கள் அவற்றை உதறவோ நிராகரிக்கவோ இல்லை அவற்றில் எல்லைகளை விரித்துக் கொண்டார்கள். பின்நவீனத்துவம் கடுமையாகச் சாடிய நவீனத்துவத்தின் இயல்புகள், மனநிலைகள், விழுமியங்கள், தனிநபர் மையம் எல்லாம் சிதைந்து புதிய கதை வெளி 2000 களின் பின்னர் உருவாகியது. ஒன்று இணையத்தின் வருகை. மற்றது பின்னவீனத்துவத்தின் எல்லைகள் வெறும் மொழி விளையாட்டாக, சொல்முறை உத்திகளாக சுருக்கிக் கொள்ளப்பட்டதன் அயர்ச்சி. இரண்டும் அடுத்து வந்த படைப்புகளில் கடந்து செல்ல முயற்சிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அந்தக் காலகட்டத்தில் தான் இவர்கள் இரண்டாம் கை தழுவலாக பின்நவீனத்துவ உரையாடலை முன்வைக்கத் தொடங்கினார்கள். உண்மையில் அது இலங்கைச் சூழலை புரிந்து கொண்டோ அதன் வரலாற்றுத் தேவையினாலோ அவர்கள் அதை பேசவில்லை என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது ஒரு புதிய விமர்சன முறை என்ற அளவிலும், அந்தப் புதிய மேஸ்தார் கொடுத்த அறிவுஜீவி விம்பத்தின் பாற்பட்டும் அமைந்ததே அவர்களின் இரண்டாம் கை தழுவல். ஆனால் அது தமிழகம் போல நவீனத்துவ அளவுகோல்களோ, நவீனத்துவ விமர்சன முறையோ ஆதிக்கம் செலுத்தாத, கூடவே தமிழகம் அளவிற்கு வணிக எழுத்து கோலோச்சாத இலங்கைத் தமிழ் சூழலில் பெருவெளியில் இரண்டாம் கைத்தழுவல் ஒரு திகைப்பைக் கொடுத்தது உண்மைதான். இவர்கள் யாரை நோக்கிப் பேசுகிறார்கள்? அல்லது அவர்களது நோக்கம் என்ன? எந்த சூழலை மாற்ற இந்தக் கலகக் கம்பை ஆக்ரோசமாக வீசுகிறார்கள் என்று இலங்கை தமிழ் வாசகன் புரிந்து கொள்ளவே நாட்கள் எடுத்தன. சொற்ப நாட்கள் தான். அதுவரை தான் அவர்கள் தங்கள் அறிவுஜீவி விம்பங்களைக் கட்டிக் காக்க முடிந்தது. கிட்டத்தட்ட அவர்கள் முன்வைத்த முஸ்லீம் தேசியத்தின் நிலையும் அதுவாகவே இருந்தது. தமிழ் தேசியம் அதன் தீவிர உரையாடல் களத்தில் தேசியம் கற்பிதம் போன்ற உரையாடல்கள் மூலம் தமிழ் தேசியத்தில் பொத்தல்கள் இட்டுக் கொண்டிருந்த போது ஒரு பிரதிபலிப்பு போல முஸ்லீம் தேசியத்தையும் முன்வைத்தார்கள். அதாவது வசந்த காலத்தில் துக்க ஆடைகளுடன் கோமாளித்தனமாக வந்து சேர்ந்த நத்தைகள் போல.
தமிழகம் போல இலங்கைச் சூழல் நவீனத்துவத்தின் பிடியில் சிக்கியிருக்கவில்லை. அது சோசலிச யதார்த்தவாதத்தினதும், முற்போக்கு எழுத்தினதும் கிடுங்குபிடியில் சுழன்று கொண்டிருந்தது. அதை கடுமையாகச் சாடிய எஸ்.பொ, மு.தளையசிங்கம், பிரமிள் போன்றவர்களின் குரல்கள் மிக மெலிதாகவே ஒலித்துக் கொண்டிருந்தன. முற்போக்கு எழுத்தின் தாக்கமும், விமர்சன முறையும் இன்றுவரை வீச்சுடன் செல்வாக்குச் செலுத்திவரும் சூழலே இலங்கையில் இருக்கின்றது. கூடவே தமிழ்த் தேசியத்தின் பாதிக்கப்டவர்கள்- கழிவிரக்கப்டப்புகளின் தொகையும். ரியாஸ் குராணாக்களின் முதல் கோளாறு அவர்களால் இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலை சரியாக மதிப்பிட்டுக் கொள்ள முடியவில்லை. அதற்கான விரிவான வாசிப்போ, தேடலோ இருக்கவில்லை. இரண்டாவது தமிழக நவீனத்துவத்தை மறுத்து எழுந்த பின்னவீனத்துவ அலையை ஒட்டு மொத்த இலக்கியத்திற்கான அளவுகோலாகத் தவறாகப் புரிந்து கொன்டது. முன்றாவது தமிழில் நிகழ்ந்த பின்நவீனத்துவத்திற்குப் பிறகான மாற்றத்தை அவர்களால் உள் வாங்க முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. தத்துவத்தின் உச்சமெனவும், ஒட்டு மொத்த இலக்கியத்தை அளக்கவுமாக அவர்களது முதுகில் பெரும்பாரமாகச் சுமைந்தலயும் பி.சவப்பெட்டி ஒன்று மட்டுமே அவர்களின் ஒரே ஒரு அளவு கோல். அவப்பெட்டியைக் கொண்டு கடந்த காலப் படைப்புகளை மட்டும் அல்ல நிகழ்காலப் படைப்புகளையும் அளவிட முயன்றார்கள். சவபெட்டியை விட்டு திமிறி வெறியேரும் படைப்பூக்கத்தின் கைகளையும், கால்களையும் ஒடித்து பெட்டியில் இட்டு மூடிச் சுமப்பதிலே சுகம் கண்டார்கள். இன்றுவரை அதுதான் அவர்களின் நிலை.
இன்னொரு மொன்னைத்தனமும் இவர்களிடம் உண்டு. ரியாஸ் குரான முன்வைப்பது போல இந்த அறியாமையின் மூர்க்கம் கலகச் செயற்பாடோ, அதிகாரத்திற்கு எதிரான குரலோ அல்ல. அது ஒருவகை அறியாமையின் மிதப்பில் உருத் திரண்டிருக்கும் நோய்க்கூறு. பெருபாலும் படைப்பாளியைக் கொண்டு மட்டும் படைப்பை அளவிடும் போதாமை. பெருபாலும் அவர்களது குற்றச் சாட்டுகள் ஊகத்தின் பால் எழுந்து வந்தவையாகவும், எதிர்பார்புகளாகவும் மட்டுமே இருக்கும். அதற்கான தருக்க நியாயங்களை ஆதரங்களை அவர்களிடம் கோர முடியாது. பொய்யின் மேல் நம்பிக்கையுடன் கட்டப்படிருந்தாலும் கலகம் கலகம் தானே புரட்சி புரட்சி தானே. கடந்த சூழலை அவதானித்துப் பார்த்தால் ஒன்று புலப்படும். புதிய இதழ் தொடக்கங்கள், இலக்கிய முயற்சிக்கு எல்லாம் முதல் ஆதரவுக் குரலும் பாராட்டும் ரியாஸ்குரானக்களிடம் இருந்து வந்திருக்கும். பிறகு விமர்சனமும் அவர்களுடம் இருந்தே வரும். பாராட்டும், விமர்சனமும் புடைத்டுக் கிளம்பும் காரணங்கள் தான் அவர்களின் போலியான அக்கறையை தொடர்ந்து சுட்டிக் கொண்டிருக்கின்றன. ஆதரவுக்கும் சரி, விமர்சனத்துக்கும் சரி வெறும் ஊகமும், எதிர்பார்ப்பும் மட்டுமே காரணமாக இருப்பதே இங்கே சிக்கலுக்குரியது. கட்டப்பட்டிருக்கும் அறிவுஜீவிம்பத்தின் மேலிருக்கும் ஒவ்வாமையே காரணமாக இருக்கும்.
அவருடைய பாரதி குறித்த கருத்துகள், பிரமிள் குறித்த கருத்துகள் எல்லாம் மிகப் பாமரத்தரமானவை. அவர்களை காலத்தோடு வைத்துப் பார்பதிலோ, அவர்கள் சூழலைப் பாதித்த விதத்தை வைத்து மதிப்பிடுவதிலோ கவனம் இல்லாமல் பாரதியின் சாதி குறித்த பார்வையை மட்டும் வைத்துக் கொண்டு மிகுதி அனைத்துமானா பாரதியின் செயற்பாட்டை நிராகரிக்கும் முனைப்புடன் இருக்கும். பாரதியின் சாதிய வெளிப்பாட்டை பேசக் கூடாது என்பதல்ல இதன் அர்த்தம். பாரதியின் ஒட்டு மொத்தப் பங்களிப்பையும் உள்வாங்கிக் கொண்டு அதன் ஒரு பகுதியான விமர்சனமாக இருக்க முடியுமே அல்லாமல் அவரை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க அதை பயன்படுத்த முடியாது என்பதே இங்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டியது.
நவீன கவிதை காலாவதியாகிவிட்டது என்ற கவைக்குதவாத பிரகடனத்தில் வெளிப்படுவது கலகமா? விமர்சனப் பாங்கா? அல்லது அறியாமையா? உறுதியாகச் சொல்ல முடியும் அறியாமை மட்டும்தான். இலக்கியத்தில் ஏதும் காலாவதியாவதில்லை. ஒன்று ஒன்றை நிரப்பும், அதன் போதாமைகளை மேவும் அவ்வளவுதான். நவீன கவிதை காலாவதியாக வேண்டுமானால் – நவீன விழுமியங்கள், தர்கம், நோக்கு, உளவியல் உடைந்து புதிய உலக நோக்கு, பார்வை உருவாக வேண்டும் அப்போதும் நவீன கவிதை காலாவதியாகாது அது அந்த புதிய சூழலை முழுமையாக வெளிப்படுத்த நவீன கவிதைகளின் வெளிப்பாட்டு முறை போதமலாவது மட்டும் நிகழமுடியும்.