தெழிற்புரட்சியிலிருந்து உருவாகிவந்த நவீனம் மனிதவளர்ச்சியில் கட்டற்ற உடைப்பை நிகழ்த்தியிருக்கிறது. அதிலிருந்து நவீன மனிதனின் பிரச்சனைகளிலே சூழழியற் பிரச்சனைப்பாடுகளும் மிகமுக்கியமாகின்றன. வேட்டைச்சமூகம் தனது நாடோடி வாழ்வைத்துறந்து நிலையாக ஓரிடத்தில் தங்கியிருக்கும் விவசாய வாழ்வினுள் நுழைந்ததிலிருந்து, இயற்கையைத் துன்பம் வளைக்கத் தொடங்கியது. அபரிமிதமாக அகழப்படும் கனிமங்கள், தாதுப்பொருட்கள் மலட்டுத்தனமான நிலத்தை உருவாக்குவது ஒருபுறம் எனில் மறுபுறத்தில் நிலத்தடிநீர், பூமி வெப்பமடைதல், காடழிப்பு என எண்ணிலடங்கா சூழழியற்பிரச்சனைப்பாடுகளினால் நவீன மனிதன் பல புதிய இடர்களைச் சந்திக்க நேர்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடும் வேட்கையின் அதிகார அடக்குமுறைகள் பழங்குடி மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் வியாபித்திருக்கும் முக்கியமான பிரச்சினை.
மூன்றுவாரங்களின் முன்னர் தங்கையின் திருமணப்புகைப்படங்களை அம்மா மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதில் ஊரின் எந்த அடையாளங்களும் பிடிகிடைக்கவில்லை. நெல்லியோடைக் குறிச்சியின் குச்சொழுங்கைகளையும், பூவரசம் வேலிகளையும் மருந்திற்கும் காணமுடியவில்லை. அகன்ற தார்வீதிகளும், வெய்யிலில் வெடிப்புவிழுந்த கல்மதில்களும் நீண்டு வளைந்திருந்தன. இருபது வருடங்கள் வாழ்ந்த வீட்டின் கொல்லையும், குச்சொழுங்கையும், பூவரசம்வேலிகளும் சுவடவேயில்லாமல் அழிந்திருந்தன. இவை கடந்த அய்ந்தாண்டுகளில் நிகழ்ந்துவிட்ட மாற்றம். ஊரில் யுத்தமுடிவினை இம் முன்னேற்றங்களின் ஊக்கியாகக் கொள்ளலாம். வேலிப்பூவரச மரங்களையும் அழித்துவிட்டு வெப்பவலைய வெப்பத்தை எப்படி எதிர்கொள்வது. எங்கள் குக்கிராமத்தில் மட்டுமல்ல நவீனங்களின் உச்சபட்ட சாத்தியங்களை நுகரும் பாரிஸிலும் நிலைமை அதுதான். அபரிமிதமாகப் பெருகிவிட்ட வாகனங்களினால் வளி விரைவில் வெப்பமடைகிறது. பரிஸ்மாநகரினுள் வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த பல திட்டங்களை முனைப்போடு செயற்படுத்துகிறது மாநகரசபை. பொதுப்போக்குவரத்து கட்டணங்களைக் குறைத்து, பரிஸைச் சுற்றி புதிய திராம்(tக்ஷீணீனீ) வழித்தடங்களை உருவாக்குகிறது. பரிஸினுள் நுழையும் வாகனங்களில் கட்டுப்பாட்டைவிதித்து, மாநகரினுள் சைக்கிளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களையும் தொடங்கியிருக்கிறது.
உலகமயமாக்கலின் நச்சுவேர்கள் குக்கிராமங்கள் வரையும் பரவிவிட்டிருப்பதன் விளைவு வளர்ச்சி எனும் போர்வையுள் வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. நவீனத்துவத்தின் விளைவுகளை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளவேண்டிய சிக்கலான சூழலிது. நீர், வளி, நிலம் என அத்தியாவசியத் தேவைகள் கூட நுகர் பண்டமாக்கப்பட்டு விற்பனையாக்கப்படும் சூழலில், ஓநாய் குலச்சின்னம் நாவலானது நவீனத்துவத்தின் விளைவுகள் மீது விமர்சனபூர்வமான பார்வையைப் புனைவாக முன்வைக்கிறது.
நாவல், ஓநாய் – ஆடு, சீனா – மங்கோலியா, மேய்ச்சல்நிலம் – விவசாயநிலம், நவீனத்துவம் – எதிர்நவீனத்துவம் எனும் பல இருமைகளைப்பற்றிப் பேசுகிறது. ஓநாய்கள் பழைமையின் உருவகமாகவும், சுதந்திரத்தின், அடங்கமறுப்பதன் குறியீடாகவும் நாவல் முழுவதும் வருகின்றன. ஓநாய்களே மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் ஆன்மா. அவையே மக்களின் ஞானகுருவாகவும் போர்க்கடவுளாகவும் காப்பாளர்களாகவும் கருதப்படுகின்றன. அவற்றின் போர் வியூகங்கள் குருதியுறைய வைப்பன. அவற்றிலிருந்தே மங்கோலியர்கள் போர்வியூகங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஓநாய்களே மரணத்தின் பின்னர் மங்கோலியர்களது ஆன்மாக்களை டேஞ்சரிடம் எடுத்துச்செல்கின்றன. இறந்த மங்கோலியர்களின் உடல்களை அவர்கள் எரிப்பதோ, புதைப்பதோ இல்லை. அவை வான்சமாதி செய்யப்படுகின்றன. இறந்தவர்களின் உடலை பாரவண்டிலில் பொருத்தி ஓநாய்களின் பகுதியில் எறிந்துவிடுவார்கள். ஓநாய்களினால் புசிக்கப்படும் உடலின் ஆன்மாவே டேஞ்சரிடம் செல்லும் என்பது அவர்களது நம்பிக்கை. டேஞ்சரே மேய்ச்சல்நில மக்களின் கடவுள். அவரால் மேய்ச்சல் நில இருப்பின் நிமித்தம் அருளப்பட்டவையே ஓநாய்கள்.
உள் மங்கோலியாவின் ‘ஓலன்புலோக்’ எனும் பசுமையான மேய்ச்சல் நிலம் சீனக்கலாசாரப் புரட்சியின் ‘புரட்சிகர’ நடவடிக்கையினால் மணற் பாலையாகிவிடும் அதிர்ச்சியைப் புனைவின் வழி விபரித்துச்செல்கிறது நாவல். மனித இருப்பிற்கு ஆபத்தான மேய்ச்சல்நில ஆன்மாவாகிய ஓநாய்கள் மொத்தமாக அழிக்கப்படுகின்றன. ஓநாய் வளைகள் தீவிரமாகத் தேடப்படுகின்றன. அவற்றைக் குட்டிகளிலேயே கொலை செய்யும் கொடூரத் திட்டம் பரவலாக்கப்படுகிறது. கண் திறக்காத ஓநாய்க்குட்டிகளின் மிருதுவான தோல்கள் நல்ல விலைக்கு சந்தையில் கொள்வனவு செய்யப்படும் என்பதாலும் அவை பலராலும் மூர்க்கமாகத் தேடப்பட்டு அழிக்கப்படுகின்றன. நவீனத்துவத்தின் வளங்களான வெடிகள், துப்பாக்கிகள், அதிவேகமான வாகனங்கள் மொத்தமாகப் பயன்படுத்தி ஓநாய்வேட்டை தீவிரமாக்கப்படுகிறது.
ஓநாய்களின் அழிப்பைப் பெருந்துயரத்துடன் நோக்குபவர் பில்ஜி ஒருவர்தான். அவர்தான் வேட்டைநிலக் குழுவின் மூப்பர். அவரின் சொற்களை யாரும் காதுகொடுத்துக் கேட்பதில்லை. மேய்ச்சல்நில மனிதர்களின் இருப்பிற்கு ஓநாய்களின் இருப்பு அவசியமானவை என்றும், அவற்றின் அழிவினால் மேய்ச்சல் நிலம் பாலையாவிடுமென்பது அவரின் நம்பிக்கை. ஓநாய்களின் அழிப்பை டேஞ்சர் ஒருபோதும் அனுமதிக்காது என்கிறார். அதற்கான விளைவை நாங்கள் ஏறுக்கொள்ள வேண்டும் என்கிறார். ஆன்மாக்களாகிய ஓநாய்கள் ஒருவேளை அழிந்துவிட்டால், முயல்களினதும், மர்மோட்களினதும், எலிகளினதும் எண்ணிக்கை பெருகும். அவற்றினால் தோண்டப்படும் நீண்ட வளைகள் மேய்ச்சல் நிலப் புற்களை அழித்துவிடும். பயணங்களிற்குக் குதிரைகளையும் பயன்படுத்த முடியாது செய்துவிடும். வளைகளில் மாட்டும் குதிரைக்கால்கள் உடைந்துவிடும் என்கிறார் மூப்பர்.
மேய்ச்சல் நிலம் என்பது பெரிய உயிர். ஆனால் அது மனிதர்களுடைய கண்ணிமைகளைவிட மெல்லியது. அதனுடைய புற்தளத்தை நீங்கள் அழித்துவிட்டால், அதாவது அதைக் குருடாக்கிவிட்டால், அதன் பிறகு பனிப்புயல்களை விடவும் மிகவும் ஆபத்தான புழுதிப்புயல்களை எதிர்கொள்ள நேரிடும். மேய்ச்சல் நிலம் மடிந்து விட்டால் ஆடுகள் ,மாடுகள் ,குதிரைகள் அதே போன்று மனிதர்கள், ஓநாய்கள் போன்ற எல்லாச் சிறிய உயிர்களுக்கும் அதே கதிதான்.
மேய்ச்சல் நிலத்தில் பதினொரு வருடங்கள் வாழ்ந்த சீனனான ஜெனின் பார்வையிலேயே விரிகிறது அந்நிலம். கலாசாரப்புரட்சியின் செயற்திட்டமாக அவனும் சில மாணவர்களும் பீஜிங்கிலிருந்து ‘ஓலென்புலோக்’ அனுப்பப்படுகிறார்கள். விவசாய நிலத்தின் நம்பிக் கைகளும், பிடிமானங்களுமுள்ள அவர்களுக்கு மேய்ச்சல் நிலம் யுத்தக்களம் போலிருக்கிறது. ஓநாய்கள் குறித்த புராணீயங்களால் ஆட்கொள்ளப்பட்ட ஜென் ஓநாய்க்குட்டியொன்றை வளர்க்கிறான். ஆயிரமாண்டு மேய்ச்சல் நில வாழ்வில் யாரும் செய்திடாதசெயலது. மூப்பர் பில்ஜியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குலச்சின்னத்தை அவமதிக்கும் செயல் என்கிறார். குட்டியை வளர்ப்பதினூடே ஓநாய்களின் நுட்பத்தையும், அதன் போர்த் தந்திரங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்கிறான் ஜென். ஆனால் கூட்டத்தின் பொறுப்பாளர் பாவோ சுங்காயோ அதைத் தூண்டிலின் இரையாகப் பயன்படுத்த நினைக்கிறார். குட்டியைத் தேடிவரும் தாய் ஓநாய்க்கூட்டத்தைக் கூண்டோடு அழிப்பது அவரின் திட்டம். ஜென் சென்னினால் தொடர்ந்தும் ஓநாயை வளர்க்க முடிவதில்லை அது எப்போதும் விடுதலையையே விரும்புகிறது. தன்னைக் காயப்படுத்துகிறது. அடிக்கடி நோய்வாய்ப்படுகிறது. அதன் நீண்ட வேட்டைப்பற்கள் வெட்டப்படுகின்றன. வேட்டையாடுதலின் மிக முக்கியமான பல். வேட்டைப்பல்லில்லாமல் தனியாக அதனால் இரையைக்கூட உண்ணமுடியாது.
உற்பத்தியை அதிகரிக்க வேண்டி புதிய மேய்ச்சல் நிலத்தைக் கண்டடைகிறார்கள். மனிதக்காலடியே படாத பசுமையான புல்வெளிகள் சில ஆண்டுகளிலே புற்களை, நீர் நிலைகள இழந்து தரிசு நிலமாகி விடுகிறது. காட்டு வாத்துகளின் முட்டைகள் வேட்டையாடப்படுகின்றன. எவருக்கும் எது குறித்தும் குற்றவுணர்வு இல்லை. இயற்கையுடன் இயைந்த வாழ்வு மெல்ல மெல்லச் சிதைக்கப்படுகிறது. ஓநாய்கள், ஓலேன்புலெக்கின் விளிம்புவரை விரட்டிச் செல்லப்படுகின்றன. கால்நடைகள், எலிகள், முயல்கள் பெருகுகின்றன. ஏற்றுமதியாகின்றன, குதிரைகள் அழிக்கப்படுகின்றன. ஆனால் புற்கள் அதன் கடைசிவேர் வரை விடாமல் மேயப்படுகிறது. அதன் இருப்பு சிதைக்கப்படுகிறது. நிலம் பாலையாகிறது.
ஓநாய்களின் இருப்பின்போது மிகுந்திருந்த பசுமையும், ஆடுகள், மாடுகள், குதிரைகள், மர்மோட்கள் அழிக்கப்பட்டும் எங்கும் வெறுமை சூழ்கிறது. மின்சாரம் வருகிறது. வீடுகள் சிமெந்தினால் கட்டப்படுகின்றன. ‘டீசல்’ வாகனங்கள் வருகின்றன. காலம் நிலத்தைப் பாலையாக்குகிறது, வெறுமை சூழ்ந்த ஓலன்புலோக்கில் ஆன்மாக்களான புற்கள், ஓநாய்களின் சிதைவோடு இயற்கையின் சமநிலையும் உடைக்கப்படுகிறது. மூப்பர் பில்ஜீ இறக்கிறார். ஜென் அவரின் உடலைப் பாரவண்டிலில் பொருத்தி ஓலேன்புலோக்கின் விளிம்பில் எஞ்சியிருக்கும் ஓநாய்களின் பக்கமாக எறிந்துவிட்டுகிறான். ஒலோன்புலோக்கில் வான்சமாதி செய்யப்படும் கடைசி உடலும் அவருடையதுதான்.
நாவலில் பல நுண்தகவல்களிருக்கின்றன. புராணீயங்களிருக்கின்றன, ஓநாய்கள் குறித்த தொன்மங்கள் வருகின்றன. செங்கிஸ்தான் குறித்த ஐதீகங்கள் வருகின்றன. மங்கோலியர்களின் எல்லையில்லா வீரம் குறித்த அவதானிப்புகள் வருகின்றன. நவீனத்தின் விளைவுகளும் கூடவே உபவிளைவுகளும் வருகின்றன. ஓநாய்களின் இருப்பையும், அழிப்பையும் குறித்து அதிகம் பேசுகிறது நாவல். மிக நுட்பமாகத் திட்டமிட்டு, கொடூரமாகப் போர்புரிந்து, குதிரைகளையும், ஆடுகளையும் ஏன் மனிதனையுமே அழிக்கும் ஓநாய்களை எப்படி ஞானகுருவாகக் கொள்ளமுடியும். வன்முறையையும், அழிவையும் கொடுக்கும் ஓநாய்கள் எப்படிப் புனிதமாகின்றன. டேஞ்சரினால் அருளப்பட்டவையாகின்றன. மங்கோலியர்கள் ஒருபோதும் ஓநாய்த் தோல்களைப் பயன்படுத்துவதில்லை. அவை மிகவும் மிருதுவானவை. கடுங் குளிரைத் தாங்கும், காலணிகளில் நன்றாக உழைக்கும். ஆனால் அவர்களுக்கு அவை மிகப்புனிதமானவை. உண்மையான மங்கோலியன் ஓநாய்களின் தோலிற் படுப்பதை விட குளிரில் உறைந்து சாவதையே விரும்புவான் என்பார் பில்ஜி. இவ்வளவு புனிதமாக்கலின் பின்னாலிருப்பது அவற்றின் இருப்புக் குறித்த அச்சமின்றி வேறில்லை. அவற்றின் இருப்புத்தான் மேய்ச்சல் நிலத்தின் இருப்பும். அவற்றின் இருப்புத்தான் மனித இனத்தின் இருப்பும். அவற்றின் அழிப்போடு மேய்ச்சல் நில ஆன்மாவின், அதன் பசுமையின் கடைசித்துளியும் அழிந்துவிடுகின்றன.
வலியது பிழைக்குமென்பது பிரபஞ்சத்தின் பெருவிதி என்றாலும் இயற்கைச்சமநிலையில் ஏற்படுத்தப்படும் அபரிமிதமான உடைப்பினால் சூழற் சமநிலை சிதைகிறது. நிலங்களின் வளம் சிதைக்கப்படுகிறது. மேய்ச்சல் நிலத்தின் ஆன்மா என்பதே ஓநாய்களின் இருப்போடு பிணைக்கப்பட்டது. அவை புராணீயங்களாகவும், தொன்மங்களாகவும் கடத்தப்படுகின்றன. ஓநாய்களின் இத்தனை கொடூரங்களின் பின்னாலும் அவை ஞானகுருவாகவும், காப்பளர்களாகவும், வழிபாட்டிற்குரிய புனிதங்களாகவும் கொள்ளப்படுவதும் இயற்கை அழிவுகுறித்த அச்சத்தினாலேதான்.
சி.மோகன் மிக நுட்பமாக மொழிபெயர்த்திருக்கிறார். அந்நிய நிலம், அறியாத வாழ்க்கைமுறை, புராணீயங்கள் என்றாலும் ஆற்றொழுக்கான மொழிபெயர்ப்பு தடையற்ற வசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.
♦
ஓநாய் குலச்சின்னம்,ஜியாங் ரோங்,தமிழில் சி. மோகன்,அதிர்வு பதிப்பகம், 38,இரண்டாவது தெரு, இராமலிங்க நகர்,விருகம்பாக்கம், சென்னை 93, |பக்கங்கள் 672, விலை 500ரூ.