எமக்கு நிகழாதவரை எல்லாமும் வேடிக்கைதான்.

அகரமுதல்வனை முன்வைத்து ஈழத்துச் சீரழிவு இலக்கியமும் தமிழக எழுத்தாளார்களின் அசமந்தப் புன்னகையும். 
 

க்கட்டுரையில் இலக்கிய/அரசியற் செயற்பாட்டளர்களின் பெயர் நேரடியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவர்களின் இலக்கியச் செயற்பாடு குறித்த என் துணிபு. பொது வெளியில் அவர்களை தகுதிநீக்கம் செய்து கொள்வதற்கான உள்நோக்கம் அற்றது. இலக்கியத்தின் மீதான கருசனையினால் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தப்பிதலாக எடுத்துக் கொள்வது அவரவரின் வசதிக்குட்பட்டது.

இக்கட்டுரை அகரமுதல்வனின் ஒழுக்கம் / அறம் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. அவர் எழுத்தில் தன்னை என்னவாக முன்வைக்கிறார் என்பது குறித்து மட்டுமே கரிசனை  கொள்கிறது.

 அகரமுதல்வனின் ’சாகாள்’ சிறுகதையின் அடிப்படைப் பிரச்சனையையும், அது பேச / கட்டமைக்க விழையும் அரசியல் யதார்த்தத்தையும் பலர் புரிந்து கொள்ளவில்லை.  அக்கதையைக் கண்டிப்பவர்களைப் புனிதங்களை உடைக்க அச்சப்படுபவர்களாவும், போராளிகளைக் கொச்சைப்படுத்துவதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவும் புரிந்து கொண்டு எதிர்வினையாற்றுகிறார்கள். உண்மையில் அகரமுதல்வனின் கதை இலங்கை இராணுவ /  அரச பயங்கரவாதத்தை யதார்த்தமாகச் சித்திரித்து அம்பலப்படுத்துவதாத் தோற்றங் கொடுக்கும் மோசமான கதை. அது அரச பயங்கரவாதத்தைச் சொல்கிறேன் பார் என வெற்றுக் கோசமிடும் பாசாங்கான கதை. இந்தப் போலிப்பாசங்கின் கண்ணீர்த் துளியிற்தான் பலரின் ஆன்மா அல்லாடுகிறது.   அது தட்டையான கதை என்பதனை – அது மோசமான சிங்கள இனவாதத்தின் எதிரொலியான தமிழினவாதம் பேசுகிறது – முஸ்லீம்களை மோசமாகச் சித்திரிக்கிறது –  என்பதனைத் தரவுகளுடன் நிறுவமுடியும். அது இங்கு வீண் வேலை.

தமிழினியின் உண்மையான பெயர் சிவகாமியை கதையிற் பயன்படுத்தியதும், அவரின் அடையாளங்களை நேரடியாக கதையில் ஏற்றியதும் மிக மோசமனதொன்று. ஒரு வேளை இவர் குறிப்பிடுவது போன்றே தமிழினிக்கு நடந்திருந்தாலும் அவற்றைத் தமிழினி தன் புத்தகத்தில் மறைத்திருக்கும் போது இவர் எழுதியிருப்பது மிகத் தவறானது. இந்த இலக்கியக் கயமைதான் கண்டிக்கவும் எதிர்க்கவும் படுகிறது. இது ஒரு போதும் அரச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த உதவாது. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளமுடியாத பலர் இக்கதை கண்டிக்கப்படுவதன் பின்னணியைக் கருத்துச் சுதந்திரத்தின் மறுப்பாகவும், புலி எதிர்ப்பாளர்களின் கூச்சலாகவும் மொக்குத்தனமாக விளங்கிக் கொள்கிறார்கள். இங்கு கருத்துச் சுதந்திரம் என்பது தனி நபரை முன்வைத்துச் செய்யப்படும் விமர்சனமாகவே இருக்க முடியும். அகரமுதல்வன் செய்திருப்பது பெண்ணுடலை பாலியற் பண்டமாக நோக்கும் பிறழ் அரசியல்.  தம் அரசியல் நிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்துவோரின் ஒழுக்கம் சார்ந்த பிரச்சனைகளைத் தூக்கிப்பிடித்து அத்தரப்பை ஒடுக்க – வாய் மூடச் செய்ய நினைக்கும் மோசமான அரசியலது.
 
ஈழத்தமிழரின்/ தமிழ்த்தேசியத்தின் குரலாக தமிழக இலக்கிய மேடைகளில் முழங்கும் அகரமுதல்வன் இக்கதையில் தமிழினியை நேரடியாகக் குறித்துக்காட்டிச் சித்திரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? தமிழினியின் அடையாளங்களைப் பயன்படுத்தாமல் இக்கதையை அவரால் எழுதியிருக்க முடியாதா? என்றால் அவரும் அவர்சார்ந்தவர்களாலும் ஒருபோதும் முடியாது.  அவர்கள் அப்படியான சுயவிமர்சனங்களையோ, தவறுகளைத் திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளும் திராணியற்றவர்கள். அப்படியான இக்கட்டுகள் வரும் போதெல்லாம் அவர்கள் தேர்ந்தெடுப்பது –  காலங்காலமாகப் புலிகள் செய்த –  அதிதீவிரத் தமிழ் தேசியர்கள் செய்த/ செய்யும்  அதே பழையதும் எளியதுமான வழிமுறைதான். தம் அரசியல் நிலைப்பாட்டை பதட்டத்துக்கு உள்ளாக்கும் கேள்வி கேட்கும் குரல்களை எல்லாம் துரோகி என்றோ இலங்கை அரசின் அடிவருடிகள் என்றோ  இல்லை அவர்களின் பாலியல் அறங்குறித்து அக்கறைப்படும் மோசமான புனைவுகளை முன்வைக்கும் அரசியலைத்தான்  செய்வார்கள். அதன் மோசமானதுமான  வெளிப்பாடே அகரமுதல்வன். அவர்  – கடந்தகாலத் தவறுகளைப் – போராட்டத்தின் போதாமைகளை  – பிரபாகரனை விமர்சித்த – தான் வரித்துக் கொண்ட அரசியல் நிலைப்பாட்டைப் பதட்டத்துக்குள்ளாக்கும் கருத்துகளை வெளியிட்ட தமிழினியைச் செய்யும் அவதூறு என்பதாக மட்டுமே இக் கதையைக் கொள்ள முடியும். கொள்ள வேண்டும்.  அதுதான் இக்கதையைக் கண்டிப்பதன் பின்னால் உள்ள அடிப்படை அறமாகவும் இருக்கமுடியும்.  தமிழ்த் தேசியக் கருத்துகளைச் சாடினார் என்பதற்காக ரவிக்குமாரைப் ‘பறை நாயே’ எனத் திட்டிய வெள்ளாளச் சாதி வெறிக்கும், போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கிறார் எனக் கருதும் தமிழினி 16 முறை வன்புணரப்பட்டார் என எழுதுவதற்குமான அடிப்படை வித்தியாசம் என்ன?  இந்த அடிப்படையிலேயேதான் இக்கதையைக் கண்டிக்கும் புரிதலை நான் கொண்டிருக்கிறேன்.
 
இக்கதையைக் கண்டிப்பவர்கள், சாத்திரி ஆயுதஎழுத்தில் – விடுதலைப்புலிகள் தமது பெண் கரும்புலிகளைப் பாலியல் தொழிலாளர்களாக கொழும்பிற்கு அனுப்பி இலங்கை அரச உயர்அதிகாரிகளுக்கு பாலியல் சேவகம் செய்ய வைத்து அவர்களை நெருங்கி பின்னர் கரும்புலிகளாக வெடித்துச் சிதறியதாக எழுதிய போது யாரும் அது பெண்போராளிகளைக் கொச்சைப்படுதுகிறது எனக் கண்டிக்கவில்லை, ஷோபாசக்தி 1பொக்ஸ்-ல் அடிமைப்புலிகள் எனும் ஒரு உபதலைப்பில் தோற்ற பெண்புலிகளை இராணுவம் எப்படி எதிர் கொண்டது என்பதனை எழுதியபோது யாரும் அதைக்கண்டிக்கவில்லை. தமிழ்க்கவி பொறுப்பாளர்களால் பெண்புலிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகச் சொல்லியபோது அதனை யாரும் கண்டிக்கவில்லை. இங்கு கண்டிக்கவும், எதிர்க்கப்படுவதன் நோக்கமே புனிதபிம்பங்களை உடைப்பதில் உள்ள சிக்கலாகவோ, யதார்த்தத்தை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாகவும், அரசபயங்கரவாதத்தை மூடிமறைக்கும் தந்திரோபாயமாகவும் சுருக்கி தப்பித்துவிட நினைக்கிறார்கள். இங்கு அகரமுதல்வன் எதிர்க்கவும் கண்டிக்கவும் படுவதன் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். அவர் செய்யும் இலக்கியக் கயமைக்காக மாத்திரமே அவர் கண்டிக்கப்படுகிறார்.
 
அசோக் போன்றவர்கள் புலியெதிர்ப்பாளர்கள் = ஒத்தோடிகள்  கண்டிக்கிறார்கள் ஆகவே நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்ற மிக மோசமான அரசியலைச் செய்பவர்கள். அசோக்கிற்கு தன் கடந்த கால அரசியலை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் திரணியும் அறமும் துண்டற இல்லை. ’புளொட்’ தள மாநாட்டில் கேள்விகள் கேட்கப்பட்டபோது அதற்குப் பதில் சொல்ல முடியாமல் மயங்கி விழுந்தார் என்பது ஈறாக அவர் மேல்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மொளனமாக மட்டுமே இருக்கதெரிந்தவர், இல்லை கடந்தகாலத்தை மறக்க விரும்புகிறேன் என்று நீலிக்கண்ணீர் வடிக்கத் தெரிந்தவர்.  அவர் இலக்கிய நுண்ணுணர்வோ, புனைவின் சாத்தியங்கள் குறித்த அடிப்படைப் புரிதலோ கிஞ்சித்தும் அற்றவர் என்பது எனது துணிபு. அதற்கான எளிய ஆதாரமாக அவரின் பேஸ்புக் பதிவுகளே இருக்கின்றன. (ஒத்தோடிகள்/ தொங்குதசைகள் என்ற சொற்களை எடுத்து விட்டு அவரால் ஒரு வசனம் எழுதமுடியாது) அவருக்கு தெரிந்தது எல்லாம் ’புறணி’ சொல்வதுதான். அவரை இலக்கியத்திலும் சரி அரசியலிலும் சரி பொருட்படுத்த வேண்டியதில்லை. ’புறணி’ பாடியே ஒருவர் இலக்கியத்தை அறிந்ததுபோல் பாசாங்கு காட்டமுடியும் முடியும் அல்லது குஞ்சுகுழுவான்களைக் கூட்டம் சேர்க்க முடியும் என்பதன் வாழும் உதாரணம் அவர். புலிஎதிர்ப்பாளர்கள் கண்டிக்கிறார்கள் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கவே இதனைக்  கண்டிக்கிறார்கள் எனும் கண்டுபிடிப்பை அவரை விட்டால் கண்டுபிடிப்பதற்கு ஈழ இலக்கியத்தில் யாரும் இல்லை. அவரின் இலக்கிய நுண்ணுணர்வு/ முன் தீர்மானத்திற்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். குணா கவியழகனுடன் கலந்துரையாடல் பாரிஸில் நடந்த போது அங்கு வந்த அசோக் ’குணா கவியழகன் அவர்களே ஒத்தோடிகள் எல்லாம் உங்கள் நஞ்சுண்ட காடு நாவலை கொண்டாடுவதால் இன்னும் நான் அதை வாசிக்கவில்லை உண்மையில் அந்நாவலை எழுதியதன் காரணம் என்ன?’ என்று கேட்டார். தான் ஒரு நாவலை வாசித்து அதன் அழகியலையோ, அது பேசவிழையும் அரசியலையோ நுண்ணுணரத்தெரியாதவர் எப்படிப் படைப்புகளைப் புரிந்து கொள்கிறார் என்றால் புலிஎதிர்ப்பாளார்கள் ஆதரித்தால் அது இலங்கை அரசாங்க ஆதரவுப்படைப்பு’ எனும் அளவிலேயே அவரின் இலக்கியப்புரிதல் இருக்கிறது.   கூடவே அவர்களுடன் இருக்கும் சில ’பேஸ்புக்’ போராளி நண்பர்கள் – டான் குயிக்ஸாட்டும் சான்கோ பன்ஸாக்களும் – அவர்களுக்கு பேஸ்புக்கில் களமாடுவதைத்தவிர வாசிப்பு என்பது சுத்தமாக இல்லை.  அவர்களுக்கு அசோக் ஆதர்சமாக இருப்பதில் ஆச்சரியமும் இல்லை.
 
அய்யா அசோக் அவர்களே! இக் கதையைக் கண்டிப்பதன் மூலம் ஒரு போதும் இலங்கை அரசபயங்கரவாதத்தை மூடி மறைத்திட முடியாது. கூடவே இன்னொன்றும் புரிந்து கொள்ளுங்கள் இதனைத் தீவிர புலியெதிர்ப்பாளர்கள் மட்டும் கண்டிக்கவில்லை. தீவிர, மிதவாத, புலி-தேசிய ஆதரவாளர்களும்தான் கண்டிக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல் தமிழினியின் அடையாளங்களை மறைத்துவிட்டு இக்கதையை வாசிக்க முடியாது. இது எழுதப்பட்டிருப்பதே சிவகாமியாகிய தமிழினியை மோசமாகச் சித்திரிக்க வேண்டிமட்டுமே. ஒரு கூர்வாளின் நிழலிற்கு எதிர்வினையாக இக்கதையை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்.  இதன் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் தமிழினியின் நூலில் இடைச்செருகல்கள் இருக்கின்றன என்று சொல்லும் கருத்துகளைப் ’பேஸ்புக்கில்’ தூக்கிப்பிடிக்கத் தொடங்கிவிட்டீர்கள். இதன் பின்னணியிலே நீங்கள் அகரமுதல்வனுக்கு வாழ்த்துச் சொன்னதையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நீங்கள் இன்னும் தமிழினியின் புத்தகத்தின் தலைப்பைத் தவிர்த்து உள்ளடக்கத்தின் ஒரு வரியைக் கூட வாசித்திருக்க மாட்டீர்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆனாலும் நீங்கள் அதை எதிர்க்கத் தொடங்கிவிட்டீர்களே ஏன்? ம்… அதே ….அதே தான் புலி எதிர்ப்பாளர்கள் கொண்டாடுகிறார்களே அந்த ஒரு காரணம் போதாதா?
 
அடுத்த சீரழிவு  யமுனா ரஜேந்திரன் (தமிழ்நதி) வகை மாதிரிகளிடமிருந்து தொடங்குகிறது. அவர்கள் அகரமுதல்வனைக் கண்டித்துவிட்டுச் சுருதிய இறக்கிக் கொள்கிறார்கள். இதனைத் தொடக்கியவர்களிலிருந்து விசாரணயை / கண்டனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று மாய்மாலம் போடுகிறார்கள். அ.முத்துலிங்கத்தின் மோசமான பதினொரு பேய்களும்  சரி சாத்திரியின் செல்வியும் சரி பலராலும் கண்டிக்கப்பட்டதுதான். அதனைக் கண்டிக்காமல் கள்ள மெளனம்சாதித்தவர்கள் யார் என்று பார்த்தால் இவர்களின் மாய்மாலக் கண்ணீரின் பின்னாலுள்ள அறம் பல்லிளிக்கும்.  உண்மையில் தீவிரத் தமிழ்த் தேசியர்களின் இலக்கியம் உருப்படாமல் போனதன் முழுப்பொறுப்பும் இலக்கியத்திலும் குறும்படத்திலும் யமுனா ரஜேந்திரனையே சாரும் அல்லது யமுனா ராஜேந்திரனை நம்பும் நம்மவர்களைச்சாரும்.  யமுனா ராஜேந்திரன்தான் காலச்சுவடு கண்ணனுக்கு முன்னரே ஈழப்போராட்டத்தால் இலக்கியத்தில் பயனடைந்தவர். அதனால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஈழப்போரட்டத்தை அதனை ஆதரிப்பவர்களை தூக்கி வைத்து சேவகம் செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது. அதை அவர் செவ்வனே செய்கிறார். ஆனால் அவரின் மெச்சுதல்களை நம்பிய பலர் உருப்படாமல் போய்விட்டார்கள். அதற்கு மிகச்சமீபத்திய எடுத்துக்காட்டு குணா கவியழகன். ’நஞ்சுண்ட காடு’ என்ற மிக நல்ல நாவல் எழுதியவர் எப்படி மூன்றாவது நாவலிலேயே ஒரு போரியற் கட்டுரையை நாவலாக எழுதுமளவிற்கு சிதைக்கப்பட்டுள்ளார் என்பதனை ’அப்பால் ஒரு நிலம்’ வாசிக்கும் ஒவ்வொரு வரியிலும் அதன் வீழ்ச்சியை மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்.
 
இவர் அகரமுதல்வனைத் தூக்கிப் பிடிக்கிறார். அகரமுதல்வனின் கவிதைகள் சொல் அலங்காரமிக்க வெற்றுக் கூச்சல்கள், அவை திராவிட அரசியல் மேடைகளில் ஒலிக்கும் சொல் விளையாட்டுக்களை ஒத்தவை. அவற்றில் மிகுந்திருப்பவை ஈழத்தை வைத்துப் பிழைக்கும், சலுகை தேடும் போலியான கண்ணிரை உகுக்கும் சொற்கள். அவை ஒருபோதும் இலக்கியமாகாது. ஆனால் அவற்றை எழுதும் அகரமுதல்வன் தான் போரின் பின்னான உன்னத கவிஞன் என்கிறார்கள் இவர்கள். இந்த உசுப்பி விடல்கள்தான் அகரமுதல்வன் இப்படித் தமிழ்த்தேசியத்தை ஆதரிக்க பெண்ணுடலை குத்திக் கிழிக்கவும் தயங்காமல் எழுதும் வன்மம் மிகுந்த எழுத்துகளை எழுத வைக்கின்றன. அகர முதல்வனைக் கண்டித்து விட இவர்களால் முடியாது இவர்களின் இஸ்ரேல் அகரமுதல்வன்.  இலக்கியச் சீமானாக நிச்சயமாக யமுனா ரஜேந்திரனே இருக்க முடியும்.  இவ் ஒப்பீடு நிச்சயமாகச் சீமானை தகுதிநீக்கம் செய்யும் நோக்கோடு செய்யப்பட்டதல்ல.  அதனால் தம் அரசியலின் பொருட்டுச் சுருதி இறக்கிக் கொள்ளும் இவர்களிடமிருந்து ஒதுங்கியிருந்தாலே நல்ல இலக்கியம் படைப்பதற்கான அடிப்படைத்தகுதி கிடைத்துவிடும் என்பதனை மனப்பூர்வமாக நம்பலாம். இவர்களின் இலக்கியத்தில் கணேசலிங்கத்தனமாக  தூக்கிப்பிடிக்கப்பட்ட, நுண்ணுணர்வும், மொழி வீச்சும் உள்ள எழுத்தாளுமைகள் என்று ஒருவரையாவது சுட்ட முடியுமா?  அவர்களுக்குத் தேவை தம் அரசியலை கேள்வி கேட்காத – பிரச்சாரப்படுத்தும் எழுத்துகள். நல்ல  இலக்கியம் பிரச்சாரமாகலாம் – பிரச்சாரம் இலக்கியமாகிவிடுமா என்ற தேய்வழக்கை உவகையுடன் இவ்விடத்தில் நினைவு கூருகிறேன்.
 
கோமகன் வகை மாதிரிகள் இன்னொரு வகை.  அவரின் ‘இலக்கிய உச்சம் சாத்திரி’ என்பதிலிருந்து அவரின் இலக்கியத்தரத்தைப் புரிந்து கொள்ளலாம். சாத்திரியின் ’திருமதி.செல்விக்கோ’, அகரமுதல்வனின் ’சாகாளுக்கோ’ அடித்துக் கேட்டாலும் தன் கருத்தைச் சொல்ல மாட்டார். ஆனால் கருத்துச் சுதந்திரம் என்பார். காரணம் எளியது அகரமுதல்வனைக் கேள்விகேட்டால் அதே விரல்களைச் சாத்திரியை நோக்கியும்சுட்ட வேண்டும்.  அவர் புதியதலைமுறையில் அவிழ்த்துவிடும் அலம்பல்களையும் கேள்வி கேட்க வேண்டும் முடியுமா? வரிக்கு வரி மறுத்து  இன்னொரு தொடர் எழுத வேண்டி வரும். அதனால் அவர் கருத்துச் சுதந்திரம், அவன் செய்கிறார், இவன் செய்தால் என்ன மக்கள்ஸ்? என்று வசதியாக ஒளிந்து கொள்வார்.
 
ஜீவமுரளியின் கேள்வி எளிமையானது. ஷோபாசக்தி புனைவுகளில் இவற்றை எழுதும்போது கண்டுகொள்ளாதவர்கள், அதைக் கண்டிக்காதவர்கள் அகரமுதல்வனின் யதார்த்தச் சித்திரிப்புக் குறித்து ஏன் பதட்டமுறுகிறார்கள்? என்கிறார். கூடவே இக்கதையை பெண்கள் யாரும் கண்டிக்கவில்லை என்கிறார் அது அவரது கண்டுபிடிப்பு. இவர் இங்கு ‘பெண்கள்’ எனச்சுட்டும் நபர்களுக்கு தனி அடையாளாங்கள் இருக்கா தெரியவில்லை. நான் வாசித்தவரை பல பெண்கள் கண்டித்திருக்கிறார்கள். இவர் இதனைப் பாலியல் அறம் குறித்த, உன்னதமாக்கல் குறித்தான பிரச்சனையாகப் புரிந்து கொள்ளுகிறார். அவர் உண்மையை அச்சுப்பிசகாமல் சொல்லி விட்டால் இலக்கியமாகிடும் எனக் கருதிக்கொள்கிறார்போலும். உண்மைகளை அப்படியே தோலுரித்துக் காட்டுவதில் நவீன இலக்கியம் ஒரு போதும் கரிசனைகொள்வதில்லை. அங்கு படைப்பூக்கம் இருக்க வேண்டும். ரசவாதம் நிகழவேண்டும்.
 
அடுத்தது இந்த ’சன்கோபான்ஸா’ வகையறாக்கள் இவர்கள் கருத்துச் சொல்லாத பேஸ்புக் சர்ச்சைகள் என்று ஒன்றையும் தனித்துச் சுட்ட முடியாது. பிரச்சனையின் அடிப்படையோ, அது சுட்டு மூலம் குறித்த புரிதலோ அல்லது அதனை விளங்கிக் கொள்ளும் படியான தேடலோ அற்றவர்கள். குத்து மதிப்பாக அடித்துவிடுபவர்கள். அதிகபட்சம் பத்துக்குப்பத்து சொற்களில் களமாடுவது தான் இவர்களுக்கு தெரிந்த மொழியறிவு. பெரும்பாலும் படங்களைப் போட்டு நிரப்பிவிடுவார்கள். இவர்கள் பிரச்சனையின் அடியும் புரியாமல் வாலும் புரியாமால் குத்து மதிப்பாக அடித்து விடுகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் தனிநபர்களின் அரசியற் சார்பிலிருந்து புரிந்து கொள்ள மட்டுமே தெரிந்தவர்கள். இந்த போலிகளாலும் இவர்களைப் பயன்படுத்துபவர்களாலும் இவர்கள்தான் போராளிகள் போல தோற்றங்கொடுக்க மட்டுமே முடியும்.
 
அடுத்து, போர்காலச் சலுகை போல ஈழத்து எழுத்தாளார்களின் குறைகளை, எழுத்தின் போதாமைகளை இந்திய எழுத்தாளர்கள் பலர் கண்டு கொள்வதில்லை. இதனை அங்கீகாரமாகக் கருதி மெய்சிலிர்ப்பதில்தான் அடுத்த சீரழிவு தொடங்குகிறது. ’நாவல் மரம்’ மாதிரியான மட்டமான சிறுகதையை இந்திய எழுத்தாளர் எழுதியிருந்தால் நிச்சயமாக ஆனந்தவிகடன் போன்ற வாராந்த இதழ்களே வெளியிட்டிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் 90 களின் பிற்பகுதியில் விவாதித்தும், நீண்ட உரையாடல்களைக் கோரிய பின்நவீனத்துவப் புரிதல்கள் சார்ந்த எழுத்துகள் இப்போதுதான் ஈழ இலக்கியப் பிரதிகளில்  தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றன. (ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து) குறைந்தது 15 வருடங்களாவது இலக்கியப் புரிதல்களிலும், கோட்பாட்டு அறிதல்களிலும் தமிழக இலக்கியத்திலிருந்து பின்தங்கியிருக்கிறோம் என்பது என் அனுமானம். அவர்கள் யதார்த்தவாதத்திற்கு திரும்பி அவ்வெழுத்துகளில் மாயாஜாலம் நிகழ்த்திக்கொண்டிருக்க நாங்கள் இன்னும் பின்நவீனத்துவ அறிதல் முறையின் கோட்பாடுகளில் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். இப்படியாக இலக்கியத்தில் மிகப்பெரிய பள்ளம் கிடக்க அது குறித்த சிந்தனைகளோ, உரையாடல்களோ  இல்லாமல் தமிழக மேடைகளில் ஈழத்தின் கண்ணீரை உகுத்து  இலக்கியம் செய்வதும் ஈழத்தை வைத்துப் பிழைப்புவாத அரசியல்செய்யும்  அரசியல்வாதிகளினதும் நோக்கம் ஒன்றே.  அதைத் தூக்கிப்பிடித்து அவர்களைக் குட்டிச்சுவராக்குபவர்களின் நோக்கமும் ஒன்றே.
 
இக்கட்டுரை கரிசனை கொள்ளும் சில புள்ளிகள்
 
இக்கட்டுரையில் இலக்கிய விளிம்பிலிருக்கும் உதிரிகள் அரசியல் மையத்தில் வைத்துப் பேசப்படுவதால் இதனை ஒரு பின்நவீனத்துவக்கட்டுரையாகவும் வாசித்துக் கொள்ளலாம்.
 
இங்கு கோமகன், அகரமுதல்வன் ஆகியோரின் இலக்கியத் தரங்குறித்த அனுமானங்கள் காழ்ப்பிலோ, வன்மத்திலோ கையாளப்படவில்லை என்பதனையும். வ.மணிகண்டன் குறிப்பது போல இலக்கியத்தில் வெற்றி/தோல்லி , வயசு என்பன கருத்திற்கொள்ள இலக்கியம் ஒன்றும் ஓட்டப்பந்தையமோ இல்லை உச்சம் வர கலவியோ அல்ல அது செயற்பாடு என்பதாயும் கட்டுரை கரிசனை கொள்கிறது. கூடவே அவரின் கருத்தை மறுக்காமல் பின்நவீனத்துவத்தின் கருத்துப்பன்மையின் சலுகையில் அவரையும் ஈழப்போராளியாகச் சேர்த்துக் கொள்கிறது. அவருடைய அடுத்த இலக்கு அரசியலில் குதிப்பதுதான் என்றால் அதற்கு வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறது.
 
இக்கட்டுரையில் என் பேஸ்புக்கில் நண்பர்களாக இருக்கும் – தொடர்ந்து என்னால் அவதானிக்கப்படும் நண்பர்கள் குறித்து மட்டுமே கரிசனை கொண்டிருக்கிறேன். (விதிவிலக்கு யமுனா ரஜேந்திரன்). இதனை விட இன்னும் சில போக்குகளும் இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்ட விளைகிறேன்.
 
1.பொக்ஸ்சில் அடிமைப்புலிகள் உபகதையையும் – அமையாள் கிழவி வன்புணர்வு  செய்யப்பட்டதையும் சிலர் புனிதம் சார்ந்த பிரச்சினையாகக் கருதி எதிர்வினை ஆற்றியிருந்தார்கள். அதுவும் இங்கு கரிசனை கொள்ளப்படுகிறது.
 
இங்கு ஆனந்தவிகடனை இலக்கிய அளவுகோலாகக் கொள்வதாகக் கருதிக்கொள்ளலாகாது.  ஒப்பீட்டளவில் கடந்த ஆறு மாதங்களில் அதில் வந்த மிக மேலோட்டமான கதை ’நாவல் மரம்’ மட்டுமே. இதில் ஜெயமோகனத் தனமாக  இலக்கியம் கதைக்க என்ன தகுதி இருக்கிறது என்ற தொனி வந்திருந்தால் எனது பதில் கலை கலைக்காகவே . அதில் போலிகளின் சலசலப்பை இப்படியான நேரடியான சுட்டுதல்கள் மூலம் கடந்துவிடவேண்டியதன் தேவை கருதியே அப்படி எழுதப்பட்டிருக்கிறது.
 
டான்குயிக்ஸாட் – சன்கோ பன்ஸா என்பன பதின்நான்காம் நூற்றாண்டில் செர்வெண்டிஸால் எழுதப்பட நாவலில் வரும் பாத்திரங்கள். இந்நாவல் நவீன நாவல்களின் தொடக்கமாகக் கொள்ளப்படுகிறது. இதன் மொழிபெயர்ப்பு தமிழிலும் கிடைக்கிறது.
 
*இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் எதிர்காலத்தில் மாற்றங்களிற்கு உட்படலாம்
 
இக்கட்டுரையை எழுதி முடித்து விட்டு உறங்கி எழுந்து பார்த்தால் உலகம் ’பளிச்’  என்று பிரகாசமாக இருந்தது. அச்சரியத்தில் பேஸ்புக்கை திறந்தால் மீண்டும் அதே முகங்கள் அதே சலம்பல்கள். அகரமுதல்வன் இப்படி வாய் திறந்திருக்கிறார்.
 
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் -அப்பர்
யதார்த்தத்தை உள்வாங்குவதும் அதனை இருக்குமிடத்தில் மேலாக ஓரடி முன்னெடுப்பதிலும் தான் வரலாற்றின் வளர்ச்சிப்பாதை அடங்கியுள்ளது. அதற்கு மாறாகத் தொடர்ந்து கண்மூடித்தனமாக வடக்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தால் மீண்டும் தொடங்கிய இடமான தெற்கில் மிதக்க வேண்டி ஏற்படும்.
– அகரமுதல்வன் (பேஸ்புக்கிலிருந்து)
 
லஷ்மி சரவணக்குமார் ‘வள்ளி திருமணம்’ சிறுகதைக்கு கோரிய வருத்தம் போன்றிருந்திருக்க வேண்டும் அகரமுதல்வனின் பதிவு. ஆனால் அவர் ஒரு போதும் அதைச் செய்யமாட்டார். கண்டிப்பவர்களை  யதார்த்தத்தை எதிர்கொள்ளும் திராணியற்றவர்கள் என்று சாடிக் கடந்துவிடும் அரசியலையே அவர் வரித்துக் கொண்டிருக்கிறார். அது ஒன்று மட்டுமே அவருக்குத் தெரிந்தது.
 
Scroll to Top