நஞ்சுண்டகாடு : முரண் உரையாடல்களுக்கான வெளி

நஞ்சுண்டகாடும்  புலம்பெயர்  இலக்கிய  வெளியும

வணக்கம்  நண்பர்களே !
இதுவொரு  வித்தியாசமான  புலம்பெயர்  இலக்கியக்கூட்டம் முரண்களின் தொகையாகப்  பல்வேறு  அரசியல் தெரிவுடையவர்களும் வந்திருக்கிறார்கள். இதுவொரு  இனிய தருணம்.  இதில்  நான் நஞ்சுண்டகாடு  குறித்துப்  பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.  நஞ்சுண்டகாடு நாவல்  குறித்துப் பேசமுன்னர் விடுதலைப்போராட்டக்காலங்களிலும்,  அது முள்ளிவாய்க்காலில்  மூளியாகச்சிதைக்கப்பட்ட  பின்னரும்  வந்த நாவல்கள் குறித்துத்    தொகுத்துப் பார்த்துவிடலாம்.

முள்ளிவாய்க்காலின்  பின்னராக விடுதலைப் போராட்டத்தின் தோல்வி  குறித்தும்,  அதன்  போராட்ட  அவலம், அராஜகப்போக்கு, வன்முறையரசியல்  குறித்தும் சில  நாவல்கள் வந்திருக்கின்றன. தமிழ்க்கவியின்  ‘ஊழிக்காலம்’,   யோ.கர்ணனின் ‘கொலம்பசின் வரைபடங்கள்’ ,  செழியனின்  ‘வானத்தைப்பிளந்த  கதை’  , சாத்திரியின்  ‘ஆயுத  எழுத்து’  ஆகிய  முக்கியமான  நாவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழிக்காலம்  இறுதியுத்த  நாட்களை  யதார்த்தமாகச்  சித்தரிக்கும் நாவல். இதில்  பல  சாமானியர்களின்  பார்வைகள்  வருகின்றன. தொடர்ந்த இடப்பெயர்வும், அலைச்சலும்,  அவலங்களும் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.  கொலம்பசின் வரைபடங்கள்  ஒன்பதாம் திசைதேடிப்  புறப்படவர்களின்  கதை. அதில் இறுதி  யுத்தநாட்கள் விமர்சனபூர்வமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.  யோ.கர்ணனின் பேச்சுமொழிக் கதைசொல்லல்  நாவலில்  அடர்த்தியாக விரிந்திருக்கிறது. வானத்தைப்பிளந்த  கதை  விடுதலைப்புலிகளால்  ஈ.பி.ஆர்.எல்.எப் தடைசெய்யப்பட்ட  நாட்களை  விபரிக்கும்  நாவல்.  இதிலே  சக தோழர்களைத்தேடிப்  புலிகள்  மூர்க்கமாக  அலைந்த கதைகளிருக்கின்றன. அவர்களின்  உயிர்வாழ்விற்கான  கடைசி எத்தனங்களிருக்கின்றன. ஆயுதஎழுத்து புலிகளின்  வன்முறைகள் குறித்துக்  கிசுகிசு  மொழியில் எழுதப்படிருக்கும்  நாவல்.  அதன் பலகீனமான மொழியாலும், நாவல் கட்டமைப்பினாலும்  வெறும் தகவல்களாக  எஞ்சிவிட்ட  அவலமான நாவலது.  இவை போராட்டம்  முடிக்கப்பட்ட  பின்னர்  அதன்  போதாமைகள் குறித்து  அலசிய  நாவல்கள்.

ஆனால்  போராட்ட  காலத்திலே  அதன்  இயங்கு  திசை,  சனநாயக மீறல், அதிகார  மீறல்,  அரசியல்  போதாமைகள்  குறித்தும் போராட்டம்  செல்ல வேண்டிய திசைகுறித்த  பேராவாலோடும் வந்த  நாவல்களில்  மிக முக்கியமான  மூன்று நாவல்களிருக்கின்றன.அவை  கோவிந்தனின் ‘புதியதோர்  உலகம்’, ஷோபாசக்தியின்  ‘கொரில்லா’ ,  குணா கவியழகனின்  ‘நஞ்சுண்டகாடு’ஆகியன.

நண்பர்களே!  உங்களுக்கு  கோவிந்தனின்  புதியதோர்  உலகம் நாவலில் பக்கம்  243ல்  வரும்  தீர்க்கதரிசனம்  மிக்க  கலைஞனின் குரலிலிருந்து  ஒரு சிறுபத்தியை  வாசித்துக்  காட்டுகிறேன்.  அது தீட்சண்யமான  கலைஞனின் குரல்.  தீர்க்கதரிசனம்  மிக்க எக்காலத்துக்குமான  அறைகூவலது.  போராட்ட ஆரம்பகாலங்களில் சனநாயகம்  குறித்து  எழுந்த  குரலது.

“நாம்  சிங்கள  முதலாளித்துவ  அரசின்  அராஜகங்களுக்கு  எதிராகப் போராட்டங்களை  முன்னெடுத்தால்  போதாது.  தமிழீழ  விடுதலை அமைப்பிலும்  புதிதாக உள்நுழைந்துவரும்  அராஜகப் போக்குகளுக்கெதிராகவும்  போராட  வேண்டும்.  அராஜகமும், ஒடுக்கு முறையும்  எந்த  ரூபத்தில்  வந்தாலும்  அதற்கு எதிராகப்போராட  வேண்டும். தன்னளவில்  இந்தக்  கயமைகளை வைத்துள்ள  எந்த  அமைப்பினாலும் தமிழீழ  மக்களுக்கு விமோசனத்தை  வழங்க  முடியாது”.

இந்தத்  தீர்க்கதரிசனம்  அது  எழுதப்பட்டு  இருபத்தி  நான்கு வருடங்களின் பின்னர்  பலித்துப்போன  கசப்பான  வரலாறு நம்முன்னே  இருக்கிறது. நண்பர்களே இது  தான்  வலிமையான புள்ளி.  இங்கிருந்துதான்  எமது போராட்டத்தின்  திசை தளும்பத்தொடங்கியது.  கோவிந்தன்  எந்தச் சனநாயக மீறல்களுக்கு  எதிராகக் குரல்  கொடுத்தாரோ,  எந்த வன்முறையரசியலுக்கு  எதிராகக்  குரல்  கொடுத்தாரோ  அந்த வன்முறையரசியல்  அவரையும்  இரத்தப்பலி  எடுத்துக்  கொண்டது. கோவிந்தன்  விடுதலைப்புலிகளால்  கடத்தப்பட்டார்.  அதன்  பின்னர்  அவர் குறித்த  தகவல்களேதுமில்லை.  போராட்ட  ஆரம்ப  காலங்களிலே  அதன் திசைகுறித்த  சந்தேகங்களால்  உள்ளிருந்து  ஒலித்த  திண்ணியமான  குரலே புதியதோர்  உலகம்  நாவல்.

இரண்டாவது  கொரில்லா.  அல்லைப்பிட்டியில்  ஆரம்பித்து பிரான்சில்  மே தினமன்று  கொல்லப்பட்ட  சபாலிங்கம் படுகொலையோடு  முடியும்  நாவல். இது விடுதலைப்புலிகள் முனைப்பு  பெற்ற  காலங்களை  இடைவெட்டிச்   செல்கிறது.  அது ஆரம்பப்  போராட்டத்தின்  கொந்தளிப்பான  காலகட்டம். கோட்டையைக் கைப்பற்றப் பல்முனையிலும்  பல  இயக்கங்களும் காப்பரண்களமைத்துப்  போரிட்டுக்  கொண்டிருந்த  காலம்.  ஆனால் நாவல் முடியும்  போது விடுதலைப்புலிகள்  மட்டுமே  முனைப்புப் பெற்று அவர்களின்  ஆக்டோபஸ்  விரல்கள்  பிரான்ஸ்  வரை நீண்டதன் பின்னாலுள்ள  கதைகளைச்  சொல்லும் நாவலிது. கலாசார அடிப்படைவாதம்  மிகுந்த  புலிகளின்  அரசியல்,சமூகக் கண்ணோட்டம், அவர்களின்  கண்மூடித்தனமான  புலனாய்வு வேலைகள்  குறித்தும் அதன் போக்கு  குறித்தும்  விமர்சனபூர்வமாகப்பகிடியுடன்  முன்வைத்த  நாவலிது.

ஆனால்,  நண்பர்களே  நஞ்சுண்ட  காடுநாவல்  குறித்துப்  பார்க்க முன்னர் அது  எப்படி  மேற்சொன்ன  நாவல்களிலிருந்து வேறுபடுகிறது  எனப்பார்க்க வேண்டும்.  ஈழ  இலக்கியத்திலும்  சரி புலம்பெயர்  இலக்கியத்திலும்  சரி தீண்டாமையிருக்கிறது.  இதுவும் சாதியத்தின்  தீண்டாமை  போன்ற  மிக வலிமையான தீண்டாமை.தமிழ்த்தேசியத்தின்  பேராலும், புலி ஆதரவு –  புலி எதிர்ப்பு  எனும்  இருமைகளாலும்  இன்னும்  இன்னோரன்ன பெயர்களாலும் பிரிந்திருக்கும் இலக்கியத்  தீண்டாமையது.

ஒரு  தரப்பின்  நாவல்கள்  எழுத்துகள்  மறுதரப்பால் கண்டுகொள்ளப்படாமலும்,  வெறும்  தனிமனிதக் காழ்ப்புணர்வினரால் தனி  மனித  வசைகளினூடாகவும் கடந்து செல்லப்படுவதுமாக  இருக்கிறது. நாவலுடல்  மிக  மோசமாக அறுவைச்சிகிச்சை  செய்யப்பட்டு  சீழ் வடியுமளவிற்கு  தரம் தாழ்த்தி விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.  அவற்றின் இலக்கியத்தரம் குறித்தும்,  நாவல்  மொழி  குறித்தும்  உரையாடாமல்  அதன் உள்ளடக்கத்தில்  ஒளிந்திருக்கும் அரசியல்  குறித்துத்தேவைக்கு அதிகமாகவே  அலசப்பட்டுமிருக்கிறது  அல்லது  அவை  குறித்து  கள்ள மௌனம்  சாதிக்கப்பட்டிருக்கும்.

ஆனால்,  நஞ்சுண்டகாட்டுக்கு  அப்படியான  முத்திரைகுத்தல்கள் நிகழவில்லை.  அது  எல்லாத் தரப்பாலும்  முன்னிறுத்தப்பட்ட நாவல். தமிழ்த் தேசிய  எதிர் – ஆதரவு  குழுக்களாலும்,  புலி  எதிர்ப்பு   ஆதரவுக் குழுக்களாலும்  அது  முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.  அதில் உள்ள  என்ன அம்சம்  எல்லோராலும் விரும்பப்பட்டிருக்கிறது. அதிலுள்ள  என்ன  புள்ளி எல்லோராலும்  முன்னிறுத்தப் படுவதற்கான  வலிமையைக் கொடுத்திருக்கிறது.  இது  குறித்து  நாம்  விரிவாக விவாதிக்க  வேண்டிய தேவையிருக்கிறது.

கோவிந்தனிடமொரு  உண்மையிருக்கிறது.
ஷோபாசக்தியிடமொரு  உண்மையிருக்கிறது.
குணாகவிழகனிடமொரு  உண்மையிருக்கிறது,
தமிழ்க்கவியிடமொரு  உண்மையிருக்கிறது,
யோ.கர்ணனிடமொரு  உண்மையிருக்கிறது,
செழியனிடமொரு  உண்மையிருக்கிறது.

இதில்  எந்த  உண்மை  சாஸ்வதமானது.  இதில்  யாருடைய உண்மை எக்காலத்திற்கும்  உண்மையானதும்,  நிச்சலமானதும்?  பின்-நவீனத்துவ வாசித்தல்  இந்த முரண்  உண்மைகளை  வாசித்துத் தொகுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை  நமக்களித்திருக்கிறது. இம்முரண்உண்மைகளின் தொகுப்பிலிருந்துதான்  வருங்காலம் தமக்கான  போராட்டம்  குறித்தான சித்திரத்தைத் தீட்டிக்கொள்ளப்போகிறது.  போராட்டம்  எழுந்ததன் பின்னாலிருந்த திண்மமான  காரணிகளையும்  அதன் இயங்கு திசைகளையும் இந்த  முரண்  தொகுப்பிலிருந்து தான்  வருங்காலம் தொகுத்துக் கொள்ளவிருக்கிறது.  அதற்கான  வெளி மிக  அவசியம்.

நஞ்சுண்டகாடு  இந்த  முரண்  உரையாடலுக்கான  வெளியின் தொடக்கப்புள்ளியாய்  இருக்கின்றது.  அதிலிருந்து  நாம்  சிறு குழுக்களின் பதிவுகளையும்  முரண் உண்மைகளையும்  தொகுக்க வேண்டும். முன்முடிவுகளற்ற  திறந்த  வாசிப்புகளும்  காத்திரமான விவாதங்களுக்குமான  வெளியைக்கட்டியெழுப்பவேண்டிய காலமிது.  அதன் நல்லதொரு  தொடக்கமாகவே  இந்நாவல் வெளியீடும்  அமைந்திருக்கிறது.

நஞ்சுண்டகாடு  நாவலில்  இரு  கவித்துவமிக்க மொழிகளிருக்கின்றன.  இரு களங்களிருக்கின்றன. விடுதலைப்புலிகளின்  ஆரம்பகாலப்பயிற்சிமுகாம் மற்றது போராட்டகளமும்  மக்கள்  இடப்பெயர்வும்.  இரண்டுக்கும் இருவகையான  மொழிகள்  கையாளப்பட்டிருக்கிறது.  ஒன்று  பேச்சு மொழி மற்றது  தத்துவம்  மிகுந்த கவித்துவ  மொழி.  நாவலின் தொடக்கமே கத்தியால்  வெட்டி  எடுக்கக்  கூடிய  இருள்  என்பது தான்.  அதுவே  நம்மை நாவலினுள்  இழுத்து  விடும்  அழகிய அடர்ந்த  படிமம்.

ஆனாலும்  நாவலினுள்  என்னை  இழுத்த  இன்னுமொரு புள்ளியிருக்கிறது. பயிற்சிமுகாமிற்கு  வந்தவர்களில்  ஒருவன் ஆரம்பத்திலேயே தப்பியோடிவிடுவான். கனவுகளுடனும் இலட்சியங்களுடனும் போராடப்புறப்பட்டவனின்  தப்பிதல் நிகழ்ந்தகணமெது?  அவனிலிருந்தும் ஒரு  நாவல்  கிளைத்துச் செல்லலாம். இருளிலிருந்து  இருளுக்குள் தப்பிப்போனவனின் சித்திரமது.  காடு  முழுவது  சல்லடை  போட்டுத் தேடியும் கடைசிவரைக்கும்  அவன்  காணக்கிடைக்கவில்லை. இப்படியாக நாவல்  புனைவின்  வலிமையால்  பெரு  விருட்சமாக விரிந்திருக்கிறது.

ஆரம்பப் பயிற்சிமுகாமின்  சித்திரம்  இன்னொரு வகையானது. அடர்ந்த காட்டினுள்  விரிந்திருக்கும்  அதிகாரப்பரம்பல்  குறித்த நுண்ணிய விவரங்களிருக்கின்றன.  கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் விட்டுக்கொடுப்புகளும் தியாகங்களுமிருக்கின்றன.  கொட்டன்களைத் துப்பாக்கிகளாகத் தொடங்கிய  பயிற்சியின்  வலியும்  சந்தோசங்களும் இருக்கின்றன.கூடவே  தூரோகங்களுமிருக்கின்றன.  கோடிக்குள் கதைத்தது கொழும்புக்கு  போகக்கூடிய நுண்ணிய வலைப்பின்னலிருக்கிறது. இப்படியாக  நாவல்  தகவல்களால்  தன்னைக்  கட்டமைத்துக்  கொள்ளுகிறது.

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு  பின்னணியில்,  வெவ்வேறு தூண்டுதலில் இயக்கத்தினுள்  வந்திருந்தார்கள்.  அவர்களுக்கு ஒவ்வொரு  கனவிருந்தது. அவர்களைத்தேசவிடுதலை  எனும் பெருங்கனவு  ஒரு  புள்ளியில் சேர்த்திருந்தது.  அவர்கள் பெருவிருட்சத்தின்  சிறு இலைகளாகிப்போனர்கள்.  அவர்களின் கதைகள்,  செயற்பாடுகள், எதிர்பார்ப்புகளை  அவர்களின் செய்கைகளிலும்  கதைகளிலும்  அழுந்தப் பதியவைக்கிறது  நாவல்.

எல்லோருக்குள்ளும்  ஒரு  சுகுமார்  இருக்கிறான்.  அவன் அன்பினாலும் தியாகத்தாலும்  வீட்டுநினைவுகளாலும் நிரம்பியவன்.  அவனுக்கும்  எளிய கனவுகளிருந்தன.அவை   பொசுங்கிப்போன  கனவுகள்.  அவற்றை  மீறி அவன்  போராளியாய், கரும்புலியாய்  விடுதலைகாகப்  போனான்.  இந்தச் சுகுமார்களை நாம்  காலம்  காலமாகப்  பார்த்திருக்கிறோம்  இவர்களால் தான் போரட்டம்  கட்டியெழுப்பப்பட்டிருந்தது.  இவர்கள்  போராட்டத்தின் அடியிலிருந்தர்கள். போராட்டத்தின்  கூர்  முனையைத்  தோள்களில் சுமந்தவர்கள்.  தம்  குருதியாலும்,  தியாகத்தாலும் ஆகுதியாகிப்போனார்கள்.

நாவலில்  யுத்தம்  தின்ற  மக்களின்  சித்திரம்  இன்னொரு பகுதியாய் விரிகிறது. சுகுமாரின்  அக்காவின்  விவரணைகள் எல்லோருக்குள்ளும் இருக்கும் அக்காக்களை  சதா நினைவூட்டுகிறது.  அவள்  கனவுகளால் அலைக்களிக்கப்பட்டவள். சாத்தானால்  சபிக்கப்பட்டவள்.  அவளின்  எளிய ஆசைகள்  கூட நிராசையாகப்போன  வாழ்வு.  இப்படியாக  யுத்தத்தின் இருண்மைகளை  அக்கா,சுகுமார்  எனும்  இரு  புள்ளிகளிலிருந்து விரிக்கிறது நஞ்சுண்டகாடு.  கூடவே குணாகவியழகனின் மிகத்திறமான ஈழத்துப்பேச்சு வழக்கும்  மனதுக்கு  நெருக்கமான உணர்வைக்  கொடுக்கின்றது.

போரின்  வடுக்கள்  நீக்கமற  நிறைந்திருக்கும்  வாழ்வில் நஞ்சுண்டகாடு அதன்  வலிகளைப்  பேசுகிறது.  அதன் அலைச்சலைப்  பேசுகிறது. அதிலிருந்து  நாம் நமக்கான சித்திரத்தைத்  தீட்டிக்கொள்ள  முடியும் நண்பர்களே.  இப்படியாக இந்  நாவல்  தனித்துவங்களால்  நிறைந்திருக்கும் நாவல். முரண் உரையாடலுக்கான  வெளியைத்  திறந்திருக்கும்  நாவல். நன்றி.

***

( 28  யூன்  2015  அன்று  பரிஸில்  நடந்த  விடமேறிய  கனவுநாவல்  வெளியீட்டு  நிகழ்வில்,  ‘நஞ்சுண்டகாடு‘  வாசகர்  அனுபவம்  குறித்துப்  பேசியவற்றின்  விரிந்த  எழுத்து  வடிவம்)

 

நஞ்சுண்டகாடு

நாவல்

குணா கவியழகன்

 

Scroll to Top