இடிப்பாரை இல்லா எமரா மன்னன்
இளங்கோ டிசேயின் பதிவு படித்தேன். பதில் சொல்லியிருக்கிறார். அவருடைய அந்த மழுங்கல் வாதங்களுக்கு வரிக்கு வரி என்னுடைய மறுப்பைத் `தர்க்க` பூர்வமாகவே எழுத முடியும். அது சள்ளை பிடித்த வேலை. ஆனால் வாதத்தின் அல்லது விமர்சனத்தின் சில அடிப்படையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட முடியும். அவரது பதிலின் 99 சதவீதமான முன்வைப்புகள் இலக்கிய உறவுகள் அல்லது தனிநபர் உறவுகள் சார்ந்தவை. அவை பேஸ்புக் கொசிப் என்பதற்கு அப்பால் இலக்கியக் கருத்தாக, மதிப்பீடாக எந்தப் பெறுமதியுமற்றவை. ஒருவருடைய இலக்கிய உறவுகள் இலக்கிய மதிப்பீட்டையோ, விமர்சன அளவுகோல்களையோ தீர்மானிப்பதில்லை. அவற்றை மட்டும் முன்னிலைப்படுத்தி விமர்சனங்களை ஏதோ சதிக் கோட்பாடு போலவும், மொத்தச் சூழலும் தனக்கு எதிராகத் திரண்டிருக்கிறது என்பது போலவும் கட்டமைக்க விரும்புகிறார் இளங்கோ. இந்த அணுகுமுறை அவருக்குப் புதிதானதல்ல. எழுத வந்த நாள் தொடக்கமே விமர்சனங்களை எதிர்கொள்ளும் அவருடைய வழிமுறை இது. அவரது சிந்தனை முழுவதும் இத்தகைய திரைமறைவுப் பின்னணிச் சதிக்கோட்பாட்டினுள்ளே உழல்கிறது. அது அவருக்கு விமர்சனங்களை எதிர்கொள்ள வசதியானதும் கூட. ஏன் இந்த இலக்கிய உறவுகளை இலக்கிய மதிப்பீட்டின் அடிப்படையாகக் கொள்வது ஈழ இலக்கியச் சூழலுக்கும் ஒன்றும் புதிதானதல்ல. இலக்கிய விமர்சனங்களை, மதிப்பீட்டை இவர்கள் இப்படித்தான் தனிநபர் இலக்கிய உறவுகளின் சமன்பாடாகப் புரிந்து கொள்கிறார்கள். அவரது மேம்போக்கான பதில் இலக்கிய விவாதம் இல்லை. அது விரிந்த பார்வை வீச்சோ அல்லது இலக்கிய மதிப்பீட்டைத் தர்க்க பூர்வமாக முன்வைக்கும் முனைப்போ கூட அதில் வெளிப்படவில்லை. அவரது கருத்துகள் தனிநபர் அபிப்பிராயம் என்பதற்கு அப்பால் பெறுமதியற்ற வெற்றுக் கூற்றுக்கள். ஆனால் இதைத்தான் இவர்கள் கடந்த 20 வருடங்களாக ஏதோ இலக்கிய விவாதமெனச் செய்திருக்கிறார்கள் என எண்ணும் போது திகைப்பே ஏற்படுகிறது. எவ்வளவு விரயம். எவ்வளவு அறியாமை. இவருடைய இந்தச் சிறுமதியை தளிரிலேயே ஜெயமோகன் அடையாளப்படுத்தியிருக்கிறார். ஜெயமோகன் இச்சிறுமதியை ஈழ இலக்கியத்தின் மீறமுடியாத நோய்க்கூறாகவே அடையாளம் காண்கிறார். அது உண்மையும் கூட. நானும் இலக்கிய விவாதம் உரையாடல்களை இலக்கியம் சார்ந்து செய்யவே தொடர்ந்து தீவிரமாக முயல்கிறேன். ஒரு மன நோயாளியின் தீவிரத்துடன். ஆனால் இவர்கள் தனிநபர் உறவுச் சமன்பாட்டை மறுப்பாகத் தூக்கிவருகிறர்கள். ஒரு புனைவு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதற்கு அப்பால் என்னுடைய அபிப்பிராயங்களை, மதிப்பீட்டை, அளவுகோல்களை ஏன் அவை பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை. அவற்றின் புனைவுக் குறைபாடுகள், சாதக பாதகங்கள் என்ன என்பதை குறைந்தது ஒரு சில வரிகளிலேனும் விளக்கிவிட்டே செல்கிறேன். ஒற்றைவரியில் ஒருபோதும் கடந்து செல்வதில்லை. இன்னொன்று இலக்கிய மதிப்பீடுகளை தனிநபர் உறவுச் சிக்கலாகச் சுருக்குவதுமில்லை. அது அறிவுச்செயற்பாடோ, இலக்கிய உரையாடலோ இல்லை.
ஆக்காட்டியூடாக ஃபிரான்ஸில் இளங்கோவின் புத்தகத்திற்குக் கூட்டம் ஏற்பாடு செய்தேன். அது இலக்கியச் செயற்பாடு. அவருக்கு மட்டுமல்ல மாரி செல்வராஜ் உட்பட பலருக்கும் கூட்டங்கள் போட்டிருக்கிறோம். அதற்குப் பிரதியுபகாரமாக எதனையும் இளங்கோவிடமோ பிறரிடமோ இரந்து நின்றதில்லை. கூட்டம் போட்டேன் என்பதற்காக அவரது நாவலை நல்ல நாவல் என்று பொய் சொன்னால் தான் தவறு. ஏன் சாதனாவின் தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் சிறுகதைத்தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளில் ஒரே ஒரு கதை தவிர மிகுதி அத்தனை கதைகளும் ஆக்காட்டியில் தான் வெளிவந்தன. ஆனால் அந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட பொருட்படுத்தத்தக்க ஒரே ஒரு விமர்சனக் கட்டுரையையும் நான் தான் எழுதினேன். ஆக்காட்டியில் வந்தது என்பதற்காக, அவர் என் நல்ல நண்பர் என்பதற்காக அதைப் பொய்யாகப் பாராட்டி என் நெஞ்சறியப் பொய்யுரைத்தேனா என்ன? குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு நாவலை நல்ல நாவல் என்றேன். பின் அவர் எழுதியவற்றை கடுமையாக நிராகரித்து எழுதினேன். அனோஜன் தன்னுடைய முதற் சிறுகதையாக குறிப்பிடும் சிறுகதை ஆக்காட்டியில் தான் வந்தது. தீக்குடுக்கை வரை அவருடைய படைப்பை வாசித்து என் விமர்சனங்களை தனிப்படவும் மின்னஞ்சலில் எழுதியிருக்கிறேன். ஆதிரைக்கு விமர்சனம் எழுதியிருக்கிறேன். ஆனால் சயந்தனுடன் இந்த நிமிடம் வரை தனிப்பட்ட உரையாடலில் இருக்கிறேன். கிரிசாந் ஆதிரையை இப்போது விமர்சிக்கவில்லை. பத்து ஆண்டுகளின் முன் ஆதிரையின் யாழ்ப்பாண வெளியீட்டுக் கூட்டதில் உரையாற்றியிருக்கிறார். அப்போது கூட ஆதிரை நல்ல டிராப் என்றுதான் மதிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அதாவது சயந்தனுடன் நல்ல உறவில் இருந்ததாக இளங்கோ சொல்லும் காலப்பகுதியிலே. இப்போதும் அந்த உரை யூரியூப்பில் இருக்கிறது. சயந்தனுடனான தனிப்பட்ட பிரச்சினையின் (அப்படி ஏதும் இருக்கா எனக்கு தெரியவில்லை) பின் அந்த நிலைப்பாடு எடுக்கவில்லை. சேனனுடைய லண்டன்காரர், அனோஜனின் சதைகள், சயந்தனின் ஆறாவடு உட்பட வேறு சிலபல நூல்களையும் கிண்டிலில் ஏற்றியிருக்கிறேன் அல்லது ஏற்ற உதவியிருக்கிறேன். அது என்னுடைய இலக்கியச் செயற்பாட்டின் ஒருபகுதி. அது ஒருபோதும் என் இலக்கிய மதிப்பீட்டுப் பார்வையை மாற்றியதல்ல. ஆக இந்த விமர்சனங்கள், உரையாடல்கள் எல்லாம் ஏதோ தனிநபர் உறவுச் சிக்கலின் வெளிப்பாடு எனக் காரணம் கற்பித்துக் கொள்வது தப்பித்தலுக்கான இலகுவான வழி. அதனை நிரூபிப்பதோ அல்லது மறுப்புகளையோ சொல்ல முடியாது.

யதார்த்தன் விடயத்திலும் இதுவரையும் பொதுவெளியில் குற்றச்சாட்டு இல்லை. ஒரு பெண் கூட அப்படி வாக்குமூலம் கொடுக்கவில்லை. இணை உறவுச் சிக்கலை பாலியல் குற்றங்களாக அம்பலப்படுத்தியது மூன்றாம் தரப்பு. அந்த மூன்றாம் தரப்பிற்கு தீர்வில் கரிசனையோ, தொலைநோக்கோ துளியும் இருக்கவில்லை. ஒருவகை அவசரக்குடுக்கைத்தனம் மட்டும் அதில் வெளிப்பட்டிருந்தது. இன்று வரை யாரும் பொறுப்புக் கூறக் கூட இல்லை. பொதுவில் அம்பலப்படுத்துவதன் அதுவும் குறிப்பாக இணைய வெளியில் அர்த்தமின்மைகளை விரிவாகவே எழுதியிருக்கிறேன். பாலியல் மீறல்களுக்காகக் கோரப்படும் நீதியின் தெளிவின்மைகள் குறித்தும், ஒழுக்கவாதக் கண்ணோட்டத்தின் எல்லைகள் குறித்தும் எச்சரித்து எழுதியிருக்கிறேன். இன்று வரை பதிலில்லை. ஏன் எனில் அது ஒரு தரப்பே அல்ல முகநுாலின் முகமிலிக் கூட்டம். அவர்களிடம் இருந்து தனிநபர் அவதூறு, குற்றச்சாட்டு. அதற்கு அப்பால் அங்கிருந்து பதில்வரவே வராது. கூட்டமாக கையெழுதிடலாம் அவ்வளவே. குறிப்பாக உறவுச்சிக்கலை கையாள்வதற்கான தெளிவோ, தொலைநோக்கோ எதுவுமற்ற தரப்பு. அவர்கள் இதை ஏதோ பெண்ணியச் செயலாக புரட்சியாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பிழையான அரசியல் புரிதலினாலும், அரசியல் சராசரிதனங்களாலும் ஏற்படுத்திய சேதத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்களும், யதார்த்தனும் யாரிடம் நீதி கேட்க முடியும்? ஆனால் இளங்கோ தன்னுடைய இலக்கிய விமர்சனத்தின் ஒரு பகுதியாக அந்தக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருகிறார். சரி, அப்படியான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே யதார்த்தன், கிரிசாந் இருவரும் இலக்கிய முகமூடி அணிகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியெனில், இளங்கோ டிசே தன்னுடைய எந்தக் கீழ்மையை மறைக்க இலக்கியம் பேசுகிறார். இலக்கிய முகமூடி அணிந்து கொள்கிறார். இல்லை தான் தூய ஆத்மா, தான் எதையும் மறைக்க இலக்கியத்தைக் கொழுகொம்பாகப் பற்றிக்கொள்ளவில்லை ஆனால் யதார்த்தனும் கிரிசாந்தும் தங்களை தற்காத்துக் கொள்ள இலக்கிய முகமூடியணிகிறார்கள் என்றால் இது எந்த வகைத் தர்க்கம். இவை கவைக்குதவாத தனிநபர் அவதூறுகள். கிசுகிசு பார்வைகள். தொப்பி அளவு என்றால் அணியலாம், மடியில் கனமில்லை என்பதெல்லாம் சிறுபிள்ளை விவாதம்.
இந்தச் சிறுமதியர்களின் அறிவின்மையை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவர்களே தொடர்ந்தும் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஆனைக்கோடரி சிறுததைத் தொகுப்பை தான் கவனப்படுத்தாதனால் தான் நான் இவரை விமர்சிக்கிறேன் என ஒரு தொனியில் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். ஆனைக்கோடரியை 99 சதவீதம் தமிழ் எழுத்தாளர்கள் தான் பொருட்படுத்தவில்லை. அவர்கள் எல்லோரையும் விமர்சிக்கிறேனா என்ன? யாரும் எங்கும் அதனை நல்ல பிரதியாகச் சுட்டிக் கவனப்படுத்தியதில்லை. இதெல்லாம் விமர்சிக்க ஒரு கணக்கா என்ன? எனக்கு என்னுடைய எழுத்தின் இடமும், அது சென்று சேரக்கூடிய ஆழமும் ஓரளவுக்கு தெரியும். நான் நின்றிருப்பது முன்னுதாரணங்கள் அற்ற பாழ்வெளியில். அது மெல்ல விசம்போல பரவக்கூடியது. ஆக என் எழுத்துக் குறித்து குழப்பம் இல்லை. ஒன்றை மட்டும் கவனித்துக் கொள்வோன் முன்னைய படைப்பில் இருந்து என்னால் ஒரு அடியேனும் முன்னகர முடிகின்றதா என்பதே கணக்கு. என்னுடைய இலக்கியச் செல்திசையை, மொழி நுட்பத்தைக் கண்டடைந்த கதையாக நான் இப்போதும் கருதுவது ஆனைக்கோடரி சிறுகதையை. ஆனால் அதை ஷோபாசக்தி நல்ல முயற்சி என்று மட்டும் தனியுரையாடலில் சொல்லியிருந்தார். அதாவது இன்னும் புனைவாக வளர இடம் உண்டு என்னும் அர்த்தத்தில். இப்படி இன்னோரன்ன உதாரணங்கள் சுட்ட முடியும். அதற்காகப் புண்பட்டு அவரை விமர்சிக்கிறேனா என்ன? இது அல்ல இலக்கிய விமர்சனம், புனைவு மதிப்பீடு செயற்படும் முறை. இந்த எளிய இலாப நட்டக் கணக்குக்கு அப்பால் ஒரு இலக்கியச் செயற்பாட்டுக்கு ஒரு பண்பாட்டுப் பங்களிப்பு உண்டு எனும் தரப்பை நம்புபவன் நான். என் முன்னோடிகளும் அதைத்தான் செய்தனர். அந்த ஒற்றை உந்துதல்தான் இளங்கேவின் நூலிற்கு எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பாரிசில் ஆக்காட்டி சார்பாகக் கூட்டம் ஏற்பாடு செய்யத் தூண்டியது. அதற்கும் என்னுடைய இலக்கிய மதிப்பீட்டிற்கும் துளியும் சம்பந்தமில்லை. இரண்டும் இரு வேறு தளங்களில் நிகழக் கூடியவை. ஒரு சக படைப்பாளியாக கரிசனையும், வாசிப்பும் எப்போதும் என்னிடம் உண்டு.
ஆசானுடைய பாதிப்பை இளங்கோ எப்படி புரிந்து கொள்கிறார் என்பதே குழப்பமானது. பின்பற்றுதல், பாதிப்பு, தழுவல் என் அது பல தளங்களில் நிகழக்கூடியது. என்னுடைய இந்த விரிவான கட்டுரையின் மையம். ஆனால் நான் கேட்ட சந்தேகங்களின் சிறு சாயலும் பதிலில் வெளிப்படவில்லை. அவர் சுட்டும் பாதிப்பு எத்தகையது என்பதும், அது என்ன வகையாகப் படைப்பில் சாதக பாதக அம்சங்களைக் கொண்டுவருகிறது என்பதும் என்னுடைய கேள்வி. இந்த கேள்வியை எதிர்கொள்ளவேயில்லை. அவர் தன்னிடம் எஸ்.பொவின் சொற்களைப் பாவிப்பதால் அவரின் பாதிப்பு தன்னிடம் இருக்கிறது என்கிறார். ஒருவருடைய சொற்களைப் பாவிப்பதால் அவருடைய பாதிப்பு இருக்கு எனச் சொல்ல முடியுமா. நிச்சயமாக இல்லை. அது வழமையாக அப்படி சொல்லவது. அப்ப மொழிநடையின் பாதிப்பு பல தளங்களில் இருக்க முடியும். அப்படி இவரது உரைநடையை யாரவது வாசித்து எழுதியதாகத் தெரியவில்லை. நிச்சயமாக அப்படி யாரும் எழுதவும் மாட்டார்கள். சொற்களைப் பாவிப்பது செல்வாக்கோ, தாக்கமோ, பாதிப்போ இல்லை. அப்படி இளங்கோவின் உரைநடையில் எஸ்.பொவின் செல்வாக்கு இருக்கிறது யாரும் எழுதினால் அதனைவிட யாராலும் எஸ்.பொவை அவமானப்படுத்த முடியாது. எஸ்.பொ மாயினி எழுதியதிலும் அவமானம் அது. எஸ்.பொவின் மொழி ஈழத்தின் வட்டார வழக்கின் இசைமையும், பழந்தமிழையும் கவித்துவத்துடன் இணைத்திருக்கும் ஓர் அபூர்வ கூட்டு. அவருடைய ஆரம்பகால ‘தீ’ போன்ற நாவல்களில் மொழி அதிகமும் பழந்தமிழைச் சார்ந்திருந்தது. ‘சடங்கு’ நாவலின் மொழியில் சரிசமமாக ஈழத்தின் வட்டார வழக்கின் ஒத்திசைவும் கலந்தது. சட்டென்று அதுவொரு நல்ல கொக்டைல் ஆகிவிட்டது. அதில் சமநிலையான அபூர்வம் கைகூடியது. அத்தகைய கவித்துவ அம்சத்தின் சிறு தீற்றலேனும் இளங்கோ எழுத்தில் வெளிப்படுகிறதா என்ன? கார்பன் தாளின் அடியில் பதியும் கோடு போல ஏதும்? இல்லவே இல்லை. முதலில் இளங்கோ எழுதுவது தனித்த உரைநடையா என்ன? அது பேஸ்புக்கின் திராபை மொழி. அதற்கு சொல் அழகோ, கூர்மையோ, தனித்துவமோ எதுவுமே கிடையாது. சரி ஒரு உரைநடையை எப்போது நல்ல உரை நடை எனலாம். ஒரு விடயத்தை குறைந்த சொற்களில் துல்லியமாக வரையறுத்துச் சொல்லும் போது. லேசர் வெட்டு போல. அபூர்வமான கவித்துவமான சொல்லிணைவுகள் திடீரென வெளிப்பட வேண்டும். சிடுக்கும், படிமங்களுமாக மொழி புதிய அனுபவமாக விரிய வேண்டும். இளங்கோவின் பேஸ்புக் மொழிக்கு அந்த தனித்துவம் இல்லை. சிறுகதைகளில் கூட அவரால் எளிமையான சித்திரிப்பைக் கூட எழுத முடியவில்லை. ஏன் இவர் சுட்டும் அனோஜன் பாகிருஷ்ணனுக்கோ, வாசு முருகவேலுக்கோ கூட அப்படியான மொழி வெளிப்பாடு இன்னும் கைகூடவில்லை.
எஸ்.பொ வின் சொற்களைப் பயனடுத்துவதால் அவரது தாக்கம் இருக்கிறது எனச் சொல்ல முடியுமா என்ன? சொல் ஒழுக்கு சிந்தனையோட்டம் சார்ந்தது. சிந்தனை படியும் தோறும் மொழியும் கூர் கொள்ளும், மொழி ஓட்டம். தொனி, சொல் ஓசை என பல வழிகளிலும் உரைநடையில் வெளிப்படக் கூடியது. அந்தத் தாக்கம் அல்லது பாதிப்பு புனைவுகளில் சித்திரிப்பில் என்னவாக உருமாறுகிறது என்பதே கேள்வி. கிரிசாந்திடம் வெளிப்படுவது ஜெயமோகனின் நேரடியான மொழிப்பிரதியெடுப்பு அல்ல. ஜெயமோகனின் நடை ஒழுக்கும், சொற்தேர்வுகளும். கூர்மையும் மட்டுமே. ஜெயமோகனை மீறிய பல தனித்துவ அம்சங்களும் அந்த உரைநடையில் இருக்கிறது. ஜெயமோகன் பயன்படுத்துவது போல அவருக்கே உரித்தான தனியான வட்டார வழக்கு கிரிசாந்திடம் இல்லை. கிரிசாந்திடம் செவ்வியல் மொழியின் தாகம் இருக்கிறது. அதாவது அது இன்னும் நுட்பமான பல அடுக்குகளினால் வெளிப்படக் கூடியது. அபாரமான உவமைகளாக. ஒருவகையில் அதைக் கவிஞனின் அக வெடிப்பு எனலாம். வெடிப்பு ஒரு கட்டத்தில் நெகிழ்ந்தும் விடுகிறது. சூடான இரும்பு போல. அந்த அம்சம் ஜெயமோகனை மீறிய அம்சம் என்பது என் மதிப்பீடு. அதாவது அதை இப்படிச் சொல்லலாம், ஜெயமோகனின் கூர்மையும் வண்ணதாசனின் நெகிழ்வும் பிசைந்த மொழிவெளிப்பாடு. ஆனால் அது சிந்தனையில் கருத்தில் கதாபாத்திர உருவாக்கத்தில் அல்ல. சரி அப்படி இருந்தால் இந்த வெளிப்பாட்டின் சிக்கல் என்ன? பாதகம் என்ன? அது எப்படிக் கிரிசாந்தின் புனைவுகளின் வீரியத்தை அல்லது அதன் புனைவுத் தொனியைச் சிதைக்கிறது என்பதே கேள்வி.
சரி, அனோஜனிடம் வாசு முருகவேலிடம் அஜிதனிடம் ஏன் ஜெயமோகனின் பாதிப்பு இல்லை. அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள். ஒன்று அவர்கள் யாருக்கும் ஜெயமோகனின் அக ஓட்டத்தை பின் தொடரும் தீவிரமோ, தேடலோ அவர்களது படைப்பில் இல்லை. அவர்களது படைப்புகள் முற்றிலும் வேறு உலகங்களை சேர்ந்தவை. அவை தீவிரமான, கொந்தளிப்பான படைப்புலகம் இல்லை. அதாவது அவர்களது படைப்புகளில் மொழிப் பாதிப்பு இல்லை. ஆனால் அனோஜன் எழுதும் மீச் சிறு உலகைச் சேர்ந்த பாலியல் மீறல் கதைகளுக்கோ, வாசு முருகவேல் எழுதும் எளிமையான பண்பாட்டுக் கேலிகளுக்கோ ஜெயமோகனின் தீவிரமான கூரிய உரைநடைத் தொனி வேண்டியதில்லை. அவர்களும் படைப்புத்தீவிரமும், கொந்தளிப்புமான படைப்புகளுள் தீவிரமாக நுழையும் போது அவர்களுக்கு அந்தப் போதாமை புரிடும். அஜிதன் முற்றிலும் வேறு தளம். ஒருவர் பாதிப்பை ஏற்றுக் கொள்வது, வெளிப்படுத்துவது தனிப்பட்டது. அவர்களது படைப்பு நோக்கு களம் சிந்தனை விரிவு சார்ந்தது. ஆனால் பாதிப்பு எப்படியாக உருமாறி வெளிப்படுகிறது என்பதே அளவுகோல். பாதிப்பு இருக்கக் கூடாது என்பதல்ல. அல்லது பாதிப்பு இருக்க வேண்டும் என்பதல்ல. இருந்தால் அதன் தனித்துவம் என்ன? அது விலகும் புள்ளிகள் தனித்தன்மைகள் என்ன என்பதே கேள்வி. இளங்கோ கிரிசாந் எழுதிய எல்லாவற்றையும் வாசிக்கலாம். ஆனால் அப்படி வாசித்ததற்கான சிறு சிந்தனைத் தீற்றலும் அவர் எழுத்தில் வெளிப்படவில்லை.
இளங்கோ வெறும் ரசனை அபிப்பிராயம் என்பதற்கு அப்பாலாக பொருட்படுத்தக்கூடியதான தன்னுடைய பார்வையை, இலக்கிய நோக்கை முன்வைக்க முடியவில்லை. மற்றது தன்னை ஏன் இவர்கள் எல்லோரும் இந்தளவு பொருட்படுத்துகிறார்கள் என்று அங்கலாய்க்கிறார். மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளார்ச்சி’ கட்டுரைகளில் நிகழ்ந்த விவாதம் ஒன்று நினைவில் வருகிறது. ஒரு சிறுகதைக்கு கதைக்குப் பல பக்கங்களில் அவர் எதிர்வினையாற்றி இருக்கிறார். அந்தச் சிறுகதை ஒரு முகாந்த்திரம் மட்டுமே. அந்த விவாதங்களில்லிருந்து ஒன்று ஊகிக்க முடிந்தது. அந்தக் கதைக்கு அந்தக் காலத்தில் பெரும் விவாதம் நடந்திருக்க வேண்டும். பல இலக்கியர்களும் மாறி மாறி தொடர்ந்தும் விமர்சித்தார்கள். விவாதித்திருக்கிறார்கள். ஆனால் இன்று மு.தளையசிங்கத்தின் விமர்சனம் மட்டும் தான் அப்படி ஒரு கதை ஈழத்தில் வெளியாகியது விவாதம் நடந்திருக்கிறது என்பதற்குச் சான்று. ஒரு சூழலில் ஒரு படைப்பு விமர்சிக்கப்படுவது இரண்டு காரணங்களால். ஒன்று அது மிகையாக மதிப்பிடப்படும் போது அல்லது அது பொதுச்சூழலில் மொண்ணைத்தனத்தின் எளிமையான முன்னுதாரணமாக இருக்கும் போது. இளங்கோ டிசே இரண்டாவது வகை. அவர் உண்மையில் பொதுச்சூழலின் பிரதிநிதியாக இங்கே மையமாக அமர்ந்திருக்கிரார். அந்த வரிசையில் சுனில் கிருஷ்ணனின் குருதிவழி, ம.நவீனின் சிகண்டி உட்பட பல நாவல்களையும் நான் விமர்சித்து விரிவாகவே எழுதியிருக்கிறேன். கூடவே வாசு முருகவேலிடம் இருப்பது தனித்த உரைநடையே அல்ல. இளங்கோ டிசே எதைத் தனித்த உரைநடை என்கிறார்? குழப்பங்களும் இடறலுமான மொழி. பல இடங்களிலும் குழம்பிக் கிடக்கிறது. வாசு முருகவேலுக்கு சரியாக இன்னும் உரைநடையே எழுதவரவில்லை. அவருடைய மணிபல்லவம் வரை வாசித்திருக்கிறேன். மணிபல்லவம் மட்டுமே அவரது ஓரளவு குறிப்பிடத்தக்க இலக்கிய முயற்சி. ஆனால் அதுவும் இன்னும் அரசியல் சராசரித்தனங்கள் மலிந்திருக்கும் எளிமையான ஒற்றைப்படைப் பிரதி. அதில் நல்ல அம்சம் சில உண்டு. சில அபூர்வமான தருணங்கள். காலகட்டம், மனநிலை, சூழல் ஓரளவு நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கால நயினாதீவின் புறச் சூழல் ஓரளவு நன்றாகப் பதிவாகியிருக்கிறது. அங்கு தனித்து காவலிருக்கும் ஒரு இராணுவவீரன் தனிமை. சிறிய உள்ளம் கையளவு தீவு. இராணுவக் கவலரண், போராடும் மக்கள் என புனைவுச் சூழலுக்கான பெரிய இடமிருக்கும் வெளி. ஆனால் ஒரு சில கூரிய பண்பாட்டு பகடிக்கு அப்பால் புனைவாக அதன் இடம் மிகச் சிறியது. அது செல்ல வேண்டிய தூரம் அதிகம்.
இன்னொரு இலக்கிய விமர்சனம், கருத்துதிர்ப்பை, மதிப்பீடுகளை ஏதோ அதிகாரச் செயற்பாடாக இவர்கள் முன்வைக்கிறார்கள். தொடர்ந்து இதையே இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இவர்களது கட்டுரைகளில் தவறாது இடம் பெறும் மூன்று கலைச் சொற்கள் எப்போதும் இருக்கும். அதிகாரபீடம். சனநாயகம். மாற்றுப்பார்வை. இளங்கோ டிசேக்கும் கொத்துரொட்டி தொடர்பில் ஒரு மதிப்பீடு இருக்கலாம், நித்தியானந்தா தொடர்பில் இருக்காலாம் ஆனால் இலக்கிய மதிப்பீடு மட்டும் எப்படி அதிகாரச் செயற்பாடு என்றாகிறது எனப் புரியவில்லை அல்லது ஏதோ அமைப்பின் பிரதிநிதிகளாக இருந்தா நாம் பேசுகிறோம். பண்பாட்டுச் சூழலில் ஒரு தரப்பு மட்டுமே. இதற்கு இருக்கும் ஒரே அதிகாரம் வாசக ஏற்பு. ஒப்பீட்டளவில் பாவனைகளுடன் எழுத்தை முன்வைக்கும் இளங்கோவுக்கு எங்களை விட அந்த அதிகார ஏற்பும் அதிகமிருக்கிறது. இது எப்படி பீடம் ஆகும். ஏதாவது யானை வந்து மாலையிட்டுத் தூக்கி அமர்த்திவிட்டிருக்கும் பீடமா இது. இல்லையே. மறுப்பதற்கும், நிராகரிப்பதற்கும் அத்தனை வெளியுமிருக்கும் சூழலிலேயே நாம் எழுதுகிறோம். உண்மையில் விமர்சனங்களுக்கான இடம் மிகச் சிறியது. விமர்சனக் கருத்துகள், பார்வைகள் விரைவிலேயே காலாவதியாகிவிடும். அது தெரிந்ததே. ஆனாலும் அது இலக்கியம் சார்ந்த வரையறைகளை, பார்வைகளை, எதிர்பார்ப்பை, மதிப்பீட்டை நாம் சுட்டியபடியே இருக்க வேண்டும். அது பண்பாட்டுக் கடமை. அதாவது, விமர்சனத்திற்கு சமூக விளைவு இருக்கலாம்; அதனால் விமர்சனம் தன்னிலேயே ஓர் அதிகாரச் செயற்பாடாகிவிடாது. அது ஊடுபாவும் பல விசைகளின் ஏற்பும் மறுப்பினாலும் ஆனது. என்னுடைய ஈழ நாவல்கள் பற்றிய கட்டுரையை படித்த மூத்தவர் ஒருவர் இப்படிச் சொன்னார். கட்டுரை நன்று. அதில் சொன்னதெல்லம் வரிக்கு வரிஉண்மை. ஆனால் அந்த வரையறைக்குப் பொருத்தமாக ஒரே ஒரு நாவல் மட்டும் இந்த உலகில் இருக்கிறது. அது பைபிள் என்றார். கட்டுரையில் நாவல் எதிர்பார்ப்பு அத்தகைய விரிவானது, பெரியது. ஆனால் அது எதிர்பார்ப்பு மட்டுமே.
இவர்கள் எப்போதும் இலக்கிய மதிப்பீட்டை, கருத்துகளை பீடம், அதிகாரம் என வரையறுக்கிறார்கள். அது மிக மிக தவறான பார்வை. அப்படியான கருத்து உதிர்க்கும் உரிமை எங்கள் தனிப்பட்ட பத்தியதை அல்ல. அல்லது பால் சார்ந்தோ, பிரதேசம் சார்ந்தோ நமக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருப்பதும் அல்ல. நாங்களாக உருவாக்கிக் கொண்டது. அதற்கான இடம் எல்லோருக்குமே இருக்கிறது. அல்லது மதிப்பீடுகளை அவை ஏதோ தனிப்பட்ட உறவுசார்ந்த மதிப்பீடாக மட்டும் சுருக்கிக் கொள்கிறார்கள். அது இன்னும் வசதியானது. எதற்கும் ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லிக் கடந்துவிடலாம். இன்னொன்று, இலக்கியச் செயற்பாட்டை, இலக்கியக் குழுக்களை ஏதோ எதிர்மறையாகச் சித்திரிக்கிறார்கள். பண்பாட்டு இயக்கம், அறிவுச் செயற்பாடு, இலக்கிய இயக்கம் எல்லாம் அப்படியான குழுக்களுடாகவே தீவிரமாக நிகழமுடியும். நமக்கு தேவை அப்படியான இன்னும் தீவிரமான பல குழுக்கள். அழகியல் தரப்புகள். இலக்கிய உரையாடல் வெளிகள். அப்படித்தான் வரலாறு தோறும் இலக்கியச் சிந்தனை நிகழ்ந்திருக்கிறது. நிகழ முடியும். தாங்கள் நம்பும், எதிர்பார்க்கும் ஒரு இலக்கிய அளவுகோலை மதிபீட்டை குழுவாக முன்வைப்பதை எப்படி அதிகாரச் செயற்பாடாக நிராகரிக்க முடியும். அது இலக்கியத்தின் சத்தான பகுதிகளில் ஒன்று. அதற்கு மாற்றான கருத்து வெளியை நாங்கள் என்ன தடை செய்கிறோமா இல்லை அப்படித்தான் யாராவது தடுக்கத்தான் முடியுமா? ஒரு போதும் இல்லை. புதுமைபித்தன் பாரதியை மகாகவி இல்லை என்றார். கைலாசபதி செவ்வானத்தை தமிழின் மகத்தான நாவல் என்றார். ஆனால் காலம் அப்படியா பதில் சொல்லியிருக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தின் தலைமகன் புதுமைப்பித்தன் சொல்லிவிட்டான் என்பதற்காக யாரும் பாரதியை மகாகவி இல்லை எனச் சொல்வதில்லை. புதுமைப்பித்தன் விரிவாக எழுதியுமிருக்கிறார். ஆனால் அவருடைய எதிர் மதிப்பீடுகளூடாகத்தான் பாரதிக்கான அந்த அழிவேயில்லாத நித்திய பீடம் உருவாகியிருக்கிறது. ஒரு மதிப்பீட்டை, விமர்சனத்தை விரிவாக காரண காரியங்களுடன் முன்வைக்கத் திராணி இல்லாதவர்களின் தவளைக் கூச்சல் தான் சனநாயகம், அதிகாரபீடம், பாசிசம் போன்ற கனதியான கலைச் சொற்கள். உண்மையில் எங்களால் முடிவது எங்கள் இலக்கிய நம்பிக்கை, அழகியல் பார்வை, கருத்து, சிந்தனைகளை விரிவாக முன்வைப்பது. அனோஜனிடம் எனக்கு ஆதிரை பிடிக்கவில்லை. ஆனால் உங்களுக்கு பிடித்தால் நீங்கள் எழுதுங்கோ என ஊக்கப்படுத்துவதெல்லாம் மாற்றுக்களை அனுமதிப்பதாகாது. நீ உன்னுடைய மதிப்பீடை முன் வை. ஏன் பிடிக்கவில்லை. அதன் மொழி சார்ந்து, கட்டமைப்பு சார்ந்து, உன் அழகியல் பார்வை – அப்படி ஒன்று இருந்தால் – முன் வை அதுதான் பண்பாடு கோருவது. அப்படி முன்வைத்திருந்தால் 20 வருடமாக ஒரே ஒப்பாரியைப் பாடிக் கொண்டிருக்க முடியாது. ஒப்பாரியில் ஏற்ற இறக்கமாவது கைகூடியிருக்கும். கொஞ்சமாக மாரிலடித்து அழக்கூடப் பழகியிருக்கலாம். ஆனால் சனநாயகம், அதிகாரபீடம், பாசிசம் என சல்லியடிக்க முடியாது. இல்லை நீர் எழுத வேண்டாம் என்றால் அனோஜன் என்ன எழுதாமலா விடப்போகிறார். இந்த ஊக்கப்படுதல்கள் எல்லாம் வெற்றுப்பாவனை மட்டுமே. எல்லாக் கருத்துகளையும் ஆதரிக்கிறார், ஊக்கப்படுத்துகிறார். அல்லது சமானியன் என தன்னை குறுக்கிக் கொள்வதோ ஒருவர் சனநாயகவாதி என்று அர்த்தம் அல்ல. அவர் அதிகாரத்துக்கு எதிராக இருக்கிறார் என்ற அர்த்தம் இல்லை. பேஸ்புக் மொண்ணைகளுக்கு வேண்டுமானால் அப்படியான ஒரு தோற்ற மயக்கம் கொடுக்கலாம். அது உண்மை அல்ல. விமர்சனமும், மதிப்பீடுகளும் பண்பாட்டுச் செயற்பாடுகள். அவை காலம் தோறும் மாறிக் கொண்டிருப்பவை. உடனடியாகக் காலாவதியாகக் கூடியவை. ஆனால் அவை தவிர்க்க முடியாமல் சூழலை மதிப்பிட்டபடியே இருப்பவை. அதனால் அவை மாறி மாறி மொய் வைத்துக் கொள்ளும் செயன்முறை அல்ல. நாம் கடந்த பலவருடங்களாக இந்த மொண்ணை வாதத்தின் பிடியிலே சிக்கியிருக்கிறோம். மதிப்பீடுகள், கருத்துகள் ஏதோ வேண்டாதவை என்பது போலவும், வீண் வேலை என்பதாகவும் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். அப்படி மீறி முன் வைத்தால் கருத்துக்களை, தீவிரமதிப்பீடுகளை குறுக்குவழியில் எதிர் கொள்ள தனிநபர் அவதூறுகளை அள்ளி வருகிறார்கள். இலக்கியத்தில் குறுக்குவழிகள் இல்லை. கூடவே தனிநபர் உறவுகள் இலக்கிய மதிப்பீட்டின் அளவுகோலும் அல்ல.
ஆதிரை கிரிசாந் உரை.


