பேரழிவின் பிறழ் சாட்சியம் -பார்த்தீனியம்

வரலாற்று நாவல்கள் அன்றாட நிகழ்வுகளை மிகைப்படுத்திய, புனைவுத்தன்மையுடன் தரும் புதினம் அல்ல. அவை உண்மையான வரலாறை மேலும் புரிந்து கொள்வதையே சாத்தியமாக்குகின்றன.
உம்பர்தோ எகோ

‘தமிழ்நதியின் பார்த்தீனியம் :  பேரழிவின் மானுட சாட்சியம்’
யமுனா ராஜேந்திரன்

‘சற்றேறக் குறைய ஈழத்தின் எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஆனால் அதில் எழுதுபவரின் அரசியலையும் சேர்த்தேதான் உள்வாங்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. வாசகனைப் பொறுத்தமட்டில் சிலசமயம் அவனுக்கொவ்வாத அரசியல் அஜீரணத்தையும் ஏற்படுத்தக்கூடும். பார்த்தீனியத்தில் தமிழ்நதி வைப்பது உள்ளீடாக எந்த அரசியலையும் அல்ல. உள்ளது உள்ளபடி உண்மையை.’
 பால நந்தகுமார் ( மலைச்சொல் பதிப்பகம்)

‘தமிழ்நதியால் எழுதப்பட்ட நமது அரசியல் -சமூகவாழ்வு -போராட்டஞ்சார்ந்த வரலாற்றுக் குறிப்புகள் மிக அழுத்தமானவொரு ஆவணமாகவும் ;வரலாற்று விளக்கமாகவும் காலத்தால் அழியாதிருக்கும்.’
– சிறி ரங்கன்

தமிழ்நதியும் தனது நாவலைக் காத்திரமான வரலாற்றுத் தகவல்களுடன் எழுதிய ஆவணமாக முன்வைக்கிறார். ஒரு வரலாற்று நாவலைப் புனைவாக முன்வைக்காமல் ஆவணமாக முன்வைப்பதில் உள்ள சிக்கல்களையும், அதற்கான இந்நாவலில் இருக்கும் போதாமைகளையும் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

1

வரலாறைப் புனைவினூடு மீளுருவாக்கம் செய்யும் போது அதில் திட்டமிட்ட விடுபடல்கள், பன்முகமான வரலாற்றுப் பார்வையின்மை, போராட்ட வரலாறு குறித்த  ஆழமான புரிதலின்மை போன்றன புனைவின் இயங்குவெளியைச் சிதைத்துவிடுகின்றன. அப்படியான நாவல்களால் ஒரு தரப்பு நியாயப்பாட்டை மட்டுமே பேச முடியும். அவற்றில் உள்ளீடற்ற மீயுணர்வுகளின்  வடிகாலாக எஞ்சிவிடும் சொற்களே மிகுந்திருக்கும். போராட்டத்தின் உறுதிக்கட்டுமானமும்,  சிடுக்குகளும் மண்டிய காலகட்டத்தை மீட்டுருவாக்கும் போது அதன் தொடரி நிகழ்வுகளையும், அந்நிகழ்வுகளின் படிப்பினைகளையும் விமர்சனபூர்வ அணுகுமுறைகளையும் உள்வாங்கி, அவற்றின் ஊடுபாவும் கதைகளை வரலாறில் வைத்துப் புனையப்படும் நாவல்களிலேதான்  பன்முகமான வாசிப்பு, எழுத்திற்கான  வெளி உருவாக்கப்படும்.

எண்பதுகள் ஈழப்போரட்டத்தின் கூர் முனைக்காலம். அதில்தான் ஊருப்பட்ட போராட்ட இயக்கங்களின் உருவாக்கமும், புலிகளின் பின்னாலான மக்களின் திரள்வும் அபரிதமாக நிகழ்ந்தன. இலங்கை-இந்திய ஒப்பந்தம் சாத்தியமானது. அக்காலத்தில் தான் இந்திய அமைதிப்படை இலங்கை வந்தது. இந்திய அமைதிப்படையின் வன்புணர்வுகள் – பிரம்படிப்படுகொலை – பெரியாஸ்பத்திரிக் கொலைகள் உட்பட்ட இன்னோரன்ன கொலைகளை ஈழநிலத்தில் நிகழ்த்தியிருந்தது.  சமாதானத்தின் தேவதூதர்களாக இந்திய இராணுவத்தினரை நம்பி மகிழ்ச்சி பொங்க வரவேற்ற தமிழ் மக்கள், அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக உள்வாங்கி எதிர்வினையாற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட காலமது. சிறுவர்களையும் இளைஞர்களையும் ஏற்றிச்  சென்று ஆயுதங்களைத் திணித்த தமிழ்த்தேசிய ராணுவத்தின் அழுத்தங்கள் மிகுந்த காலம். ( அதே வரலாறு முள்ளிவாய்க்காலில் திரும்புவதற்கான கால இடைவெளி  20 வருடங்களே) பார்த்தீனியம் நாவலும் இந்தக் கூர்முனைக் காலத்தினைப் பேச விழைகிறது. அதிலும் குறிப்பாக, இந்திய இராணுவம் ஈழநிலத்தில் நடத்திய  இராணுவ வன்முறையை அந்நாவல் அம்பலப்படுத்துவதாகக்  கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

எண்பதுகளின் கொந்தளிப்பின் கீழ், ஈழ நிலத்தின் எதிர்கால விசைகளைத் தீர்மானித்த பல நிகழ்வுகளுள் அன்று நிகழ்ந்த இரு  பெரும்நிகழ்வுகள் இன்றுவரை முக்கியதாக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

1.திலீபனின் மரணம்.
2.இந்தியாவிற்கு எதிரான தமிழ் மக்களின் மனநிலை மாற்றம்.

நாவலில் வசந்தன் என்கின்ற பரணியின் (விடுதலைப்புலி) வாழ்வும் வானதியின்  (யாழ்.பல்கலைக்கழக மாணவி) வாழ்வும் நிகழ்ந்த காலத்தில் யாழ் நிலைமைகள் எப்படிக் கொந்தளிப்பின் கீழ் நொதித்துக்கொண்டிருந்தன என்பதை நாவலின் எந்த வரியிலும் நாம் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.  நாவலில் இதுவரை காலமும் இந்திய – இலங்கைத் தமிழர்களின் பொதுமனநிலையில் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், இந்திய அமைதிப்படை மற்றும் இலங்கை இராணுவம் குறித்து எப்படியான கற்பிதங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவோ அவற்றை ஒத்து ஊதும், சரி எனத் தர்க்கிக்கும், ஆரத்தழுவி உச்சிமோரும் மேம்போக்கான மனநிலைதான் உருவாக்கப்படுகிறது. நாவல் போராட்டத்தின் உட்சிடுக்குகளை விமர்சனபூர்வமாகவோ, அவற்றின் எதிர் நியாயப்பாடுகளைச் சமநிலையில் வைத்து உரையாடுவதையோ விரும்பாத பிரதியாகத் தன்னளவில் சுருங்கிவிடுகிறது. ஆதிரையில், முற்போக்குத் தமிழ்த்தேசியக் கற்பிதத்தினுள்  இழுத்துவரப்பட்ட கதைமாந்தர்களின் ஊடாட்டம் பார்த்தீனியத்தில், அவற்றிற்கான நியாயப்பாட்டை வலிந்து திணிக்க புலிகளின் பொற்காலத்திற்குத் திரும்பிச் செல்கிறது. அங்கே இன முரண்பாட்டுக் குவியல்களினுள் துரோகிகளைப் பட்டியலிடுதலே தன்முனைப்புப் பெறுகிறது. கொஞ்சமே கொஞ்சமாகப் பதிவாகும் போராளிகளின் வாழ்வின் சில மகிழ்ச்சித் தருணங்களில் கூட நியாயங்களை முன்நிறுத்தி அநியாயங்களை மறைத்துவிடும் முனைப்பே மேலோங்குகிறது. கருப்பு – வெள்ளையாகப் பதிவாகும் நாவலின் பாத்திரங்களிற்கு நாவலில் பெரிதான எந்த உருமாற்றமும் நிகழ்வதில்லை (விதிவிலக்கு வானதி). நல்லவர் – கெட்டவர், தியாகி – துரோகி, ஆமி – இயக்கம் போன்ற மிக மேலோட்டமான ஒருமைகளைக் கட்டமைப்பதிலே முனைப்புக் காட்டுகிறது.

இந்நாவலில் சாதிகளின் வெளி சுருங்கிய சிடுக்குகள் அற்ற தன்நிறைவான எல்லைக் கிராமம் ஒன்றில் 83 கலவரம் பெருவெடிப்பாக நிகழ்த்தப்படுகிறது. அதன் பின்னரான நிகழ்வுகளில் கலவரத்தின் கரிய நிழல் பேரிருப்பாக இருந்து கொண்டிருக்கிறது.  வானதியின் அப்பாவின் வேலை இழப்பு அதனால் அவளின் தாய் தனபாக்கியம் வேலைக்குச் செல்ல வேண்டிய அவலமும்(?), கரையானுக்கு மகளைக் கட்டி வைக்க நினைக்கும்  போலி முற்போக்குமாக நாவல் வலிந்து புனையப்படுகிறது. இது சாதியத்தை வெறும் பொருளாதார இருப்பாகப் புரிந்து கொள்ளும் மனநிலை என்றால், பின்னால் வரும் சீலனின் உருவாக்கம் சாதியத்தின் இயங்குதலையும், அதன் நுண் ஒடுக்குதலையும் ஒற்றைப்படையாக விளங்கிக்கொண்டதன்  எளிய வெளிப்பாடு. அதிகாரம் – ஆயுதம் – சாதி ஒடுக்கல் – பழிவாங்கல் எனும் கருப்பு-வெள்ளையாக அது பதிவாகிறது. அதில் வலிந்து இழுத்துச் சென்ற சிறுவனின் அக உலகம் பதிவாவதற்குப் பதில் சாதிப் பழிவாங்கலாக மீந்துவிடுகிறது. அல்லது சாதித் தடிப்பு மிக்க தாயின் மன மாற்றம் மாதகலில் அறிமுகமாகும் தலித் குடுப்த்துடன் தங்குதல் குறித்தும் நாவல் கவனம் கொள்வதில்லை.

எண்பதுகளின் இறுதியில் திலீபனின் சாவு, போராட்டத்தின் குமிழ்முனையாக எழுந்தடங்கியது. திலீபனின் அஹிம்சைப்போராட்டம் நல்லூரில் ஆரம்பிக்கச் சில நாட்கள் முன்னர்வரை அவர் வன்முறையை நம்பிய அமைப்பின் பிரதிநிதி. அவர் சுந்தரம் கொலையின் இரத்தம்படிந்த கைகளை நல்லூர்க் கோயில் கேணியில் அலம்பிவிட்டு கோல்சரையும் துப்பாக்கியையும் உதறிவிட்டு உண்ணாவிரத மேடைக்கு வந்திருந்தார். திலீபனின் சாவு திட்டமிடப்பட்ட  அபத்த நாடகத்தின் முடிவுபோல இருந்தது.  உடலை ஆயுதமாக்கிய காந்தி அல்லது இந்தியா அஹிம்சையாளன் திலீபனிடம் வீழ்ந்து விட்டதான பிம்பங்கள் நடுநிலையர்களையும், புலிகளின் மூர்க்கமான ஒற்றைப் படையான ஆயுதப் போராட்ட மறுப்பர்களையும் புலிகள் பின்னால் திரட்டிய அவலமும் நிகழ வழிகோலியது(பார்க்க – முறிந்தபனை ப.305).  காந்தியையும், அவர் தனது உடலை ஆயுதமாக்கிப் போராடிய அஹிம்சைப் போராட்டத்தையும் விளங்கிக் கொள்வதிலுள்ள அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடாகத் திலீபனின் முடிவுரை உணர்ச்சிமிகு கவிதைகளால் எழுதப்பட்டது. எந்த அய்ந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் சாவு நிகழ்ந்ததோ அதற்கு அடுத்து வந்த ஒப்பந்தத்தில் அந்தக் கோரிக்கைகள் குறித்து எந்தவிதக் கரிசனைகளும் காட்டப்படவில்லை என்பதிலிருந்து அந்த வலிந்து திணித்த மரணத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். புலிகளிற்குத் தேவையாயிருந்தது இந்தியாவிற்கு எதிரான மக்களின் திரள்வு மாத்திரமே. இந்தியாவிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட திலீபனின் சாவு நாடகத்தின் பன்னிரண்டு நாட்களிலும் மக்கள் மனங்களில் இந்தியவிற்கு எதிரான மனநிலை திலீபனின் தியாகத்தின் திருவுருக் கொண்டு ஆழமாகக் கீறப்பட்டது.

நாவலில் மிக முக்கியமாகப் பேசியிருக்க வேண்டிய புள்ளிகள் இவை. பின்னால் வரும் இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களும், அவற்றிற்கு எதிரான மக்கள் மனநிலையும் முரண்பட்ட புள்ளி திலீபனின் மரணம். அதனை ஒற்றைச் செய்தியாய் கடந்துவிடுகிறது நாவல். மக்களின் மனமாற்றம் நிகழ்ந்த சூழல் எதார்த்தங்களையும் நாவல் பேச முற்படவில்லை. நாவல் முழுவதும் தமிழீழக் கனவிற்கு வித்துடலான புலிகளின் புனிதபிம்பங்களை லட்சியவாதப் பாசங்கில் பிரசங்கிக்கிறது. இதன் உச்சமாக, பின்நாட்களில் மாத்தையாவிற்கு புலிகளால்/பிரபாகரனால் வழங்கப்படவிருந்த மரணதண்டனையை நியாயப்படுத்தும் போக்கையும் தான் இயங்கும் அச்சிறிய வெளிக்குள் கச்சிதமாகக் குறித்து வைக்கிறது. பிற இயக்கங்களின் கொலைகளை அவர்களின் நேரடியான பெயர்ச்சுட்டலில் அம்பலபடுத்துவதாகப் பாவனை செய்யும் நாவல் தன்னளவில் தான் வெளிப்படுத்தும் எளிய அரசியற் கருத்துருவாக்கங்களில் அம்பலப்பட்டுப் போகிறது. தன் தமையனைக் கொன்ற புலிகளின் பாதையை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்குத் தனஞ்சயனைக் கொண்டுவருவதில் உள்ள எத்தனிப்பு அதன் பின்னால் உள்ள வன்முறையின், கீழ்மையின் மயிர் நுனிகளைக்கூட வெளிக்கொணருவதில் முனைப்புக்காட்டுவதில்லை.

நாவலில் நிகழும் விடுபடல்கள் எதிர்த்தரப்பு நியாயங்களை மருந்திற்கும் அனுமதிக்காத புலிகளின் கருத்துருவாக்க நீட்சியான சம்பவங்களாய் விரவிக்கிடக்கின்றன. விஜிதரன் கொலையில் எந்த ஒளிவு மறைவுகளும் அக்காலப்பகுதியில் யாருக்கும் இருந்ததில்லை. விஜிதரனை விடுதலை செய்யக் கோரி நடந்த உண்ணாவிரதத்தின் மாயவிரல்களின் சுட்டுதல் உண்மையில் யாரைநோக்கியது என்பதை எல்லோருமே நன்கு அறிந்தே இருந்தனர். அதை வெறும் ஊகம் என்று கடந்து விடுவதில் நாவல் கட்டமைக்க விழையும் கனவின் பலவீனம் தெரிந்துவிடுகிறது.  அதைத் தொடர்ந்து நிகழ்ந்த உண்ணாவிரதத்தில் பங்கு பற்றிய விமலேஸ்வரனின் கொலை, இரயாகரனின் கடத்தல், ராஜனி திராணகமவின் கொலை குறித்த எந்தக் கரிசனையும் நாவலில் இல்லை.  ஒரு நாவலில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தமிழ்நதியின் தெரிவு ஆனால் அதன் மூலம் அவர் கட்டமைக்க வரும் கருத்துருவாக்கங்களின்  பின்னால் உள்ள அறங்கள் குறித்த தெளிவுபடுத்தல்களுக்காகவே இவ்விடுபடல்களைக் குறித்துக்காட்ட வேண்டியிருக்கின்றது. இவை நாவலில் வானதி (தமிழ்நதி) படித்த பல்லைக்கழகச் சூழலிற் பெரிதும் பேசப்பட்ட கொலை/கடத்தல்கள். நாவலின் முக்கிய பல சம்பவங்களைச் செவிவழிச் செய்திகளாக அறிந்து கொள்ளும் வானதிக்கு இச்செய்திகள் கிடைக்காமலிருந்ததன் அரசியல் தான் நாவலை ஆவணமாக முன்வைக்க முடியாமைக்கான பலவீனப்புள்ளிகள். ஆவரங்காலில் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணைத் திருநெல்வேலியிருந்து அக்கறை கொள்ளும் நாவலால் விமலேஸ்வரன் கொலையைக் கண்டுகொள்ள முடியவில்லை.

நாவல் இயங்கும் வெளியையும், காலத்தையும் சரியாக உள்வாங்காத  அதன் நுண் அடுக்குகளை உரையாடாத வெற்றுப்பிரதியாக ஆகிவிடும் அபாயம் அதன் சூழல், சம்பவ விபரிப்புகளில் நிகழ்கிறது. நாவலில் அதன் கதைசொல்லி வானதியா. பரணியா என்ற தெளிவின்மை.  அடிக்கடி தமிழ்நதியும் தன் உரத்த குரலினூடு பல கருத்துகளை உலாத்த விடுகிறார். அவை யாருக்கோவான பதில்களாய் அர்த்தமற்ற இருப்புகளாக நாவலின் முடிவுவரை மிதந்தபடியிருக்கின்றன. வன்முறையின் கோரத்தினைக் கண்ணீர் உகுக்கும் கதைகளாக மக்களின் அவலம் தேடி ஓடும் கதை சொல்லி அதே மக்களிடமிருந்தே புலிகளின் நியாயப்பாட்டை வெற்று வார்த்தைகளில் தன் குரலில் பதிவுசெய்கிறார்.   நாவல் முழுவதும் வானதி, பரணி என்கின்ற இருவரைச் சுற்றி நிகழ்ந்தாலும் அவர்களிற்கு அந்த விசச்சூழலிலிருந்து  எந்த ஈறுகளும் வந்துவிடுவதில்லை, பரணிக்கு ஒரு சிறு காயம், வானதிக்கு முலைதடவல் அவ்வளவுதான் அவர்களுக்கு நிகழ்வதும் அவர்கள் எதிர்கொள்ளும் எண்பதுகளின் யதார்த்தமும். மிகுதி எல்லாம் தமிழ்நதியின் உரத்த குரலில் பதிவுசெய்யப்படும், பழகிப்போன அதே ஒப்பிப்புகள். அவை வெறும் செய்திகளாக, தகவல்களாக நம்மைக் கடந்து சென்றுவிடுகின்றன.  அச்செய்திகளை, கதைகளை, சம்பவங்களை நாவலாகத் திரட்ட முடியவில்லை. நாவல், தான் பேசவிழைந்த காலத்தையும் சூழல் எதார்த்தத்தையும் உள்வாங்காத  பிரதியாக முடிந்தும் விடுகிறது.

நாவல் பேசும் அரசியலையும் தாண்டி இலக்கியத்தில் அதன் இடம் என்னவாக இருக்கிறது? நாவலின் மொழியும், சொல்முறையும் மிகப் பழையது. அதில் பன்முகமான வசிப்பிற்கான இடம் துப்புரவாக இல்லை. நேர்கோட்டுக் கதை சொல்லும் முறையில் சில சம்பவங்களை நினைவுகளில் பின்னோக்கி இழுக்கும் உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  முக்கிய பல  சம்பவங்கள் கதை சொல்லியின் குரலில் பதிவாகி வானதிக்கும், பரணிக்கும் வெறும் செய்திகளாகவே  வருவது போல எம்மையும் கடந்து சென்றுவிடுகின்றன. சொல் முறையிலும் காலத்தை உள்வாங்காத பிரதியாகவே இருக்கிறது. பரணி – வானதி – தனஞ்சயன் என்ற மூவரினூடு மிகச் சிடுக்கான நீண்ட காலத்தைப் பேச முனைந்த நாவல்  அதைத் தன்னளவில் ஆழமாகப் பதிவு செய்யமுடியாத நாவலாகிவிடுகிறது.

2. விமர்சனங்களும்  தமிழ்ச் சூழலும்..
 
தமிழ்நதியின்  பார்த்தீனியத்தை வரலாற்று ஆவணமாக, மானுட சாட்சியமாக முன்வைப்பவர்கள் ஒரு முறை  முறிந்த பனையை வாசித்துப்பார்க்கலாம் அதில் பிரம்படிப்படுகொலை, யாழ் பெரியாஸ்பத்திரிப் படுகொலை, இந்திய அமைதிப்படையால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் நிணமும் சதையுமாகப் பதிவாகியிருக்கின்றன.  முறிந்த பனையில்  ஆவணமாகத் தொகுக்கப்பட்டிருப்பதன் சிறுபகுதி கூட பார்த்தீனிய நாவலில் புனைவாகப் பதிவாகவில்லை.  அது பேசுவதெல்லாம் புலிகளின் ஒற்றைப் படையான விதந்தோதும் வரலாறுதான்.

யமுனா ராஜேந்திரன் பார்த்தீனியத்தைப் பேரழிவின் மானுட சாட்சியமாக முன்வைக்கிறார் (பார்க்க  Ôதடம்Õ ஜூன் 2016) ஈழப்போரட்ட இந்திய ஆக்கிரமிப்பு எனும் புள்ளியையே அவர் இங்கு மையப்படுத்துகின்றார்.  வழமையான அவரின் சட்டகங்களோடு சில முன்வைப்புகளைச் செய்கிறார். இந்தியாவிலிருந்து வந்த ஈழப்போர் குறித்த படைப்புகளைப் பேசிவிட்டு பார்த்தீனியத்தினுள் வருகிறார். பார்த்தீனியம் ஈழத்தின் ஆன்மாவை எங்கு பிரதிபலிக்கவில்லை என்பதை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை, இந்தியப்படைப்பாளிகளுக்கு கிடைக்காத ஈழப் போர், சூழல் எதார்த்தம் சார்ந்த புரிதல் தமிழ்நதிக்கு இருந்தும் அவர் வலிந்து திணித்த போலி முற்போக்குடனும், திட்டமிட்ட விடுபடலுடன் முன்வைக்கப்பட்ட நாவலை பேரழிவின் மானுட சாட்சியமாக யமுனா ராஜேந்திரன் பரிந்துரைப்பது தான் அவரின் ஈழம்சார்ந்த, ஈழப்போராட்டம் குறித்த  அடிப்படைப்புரிதலையே கேள்விக் குள்ளாகுகிறது. பின்நவீனத்துவத்தை வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் பார்ப்பதாகச் சொல்லும் அவருக்கு ஈழவரலாறு குறித்த அடிப்படைப்புரிதல் இல்லாததன்  வெளிப்பாடே இதனைப் பேரழிவின் மானுட சாட்சியமாக முன்வைக்கிறது. ஆனால் நாவல் ஒருபக்க விதந்தோதும் வரலாறை மட்டுமே பேசுகிறது.

இதனைத் துயரத்தின், ஆற்றாமையின், இந்தியாவின் கயமையின் வெளிப்பாடக முன்வைப்பவர்கள் எல்லாம் போராட்டத்தின் எளிய சில உண்மைகளைக் கூட அல்லது ஈழப்போரின் குரூர எதார்த்தத்தின் சிறு துளியைக் கூட எதிர்கொள்ளத் திராணியற்ற போலியானவர்கள். அவர்கள் இந்நாவலின் பின்னரான இருபத்தியாறு வருடங்களையும் கண்மூடிக் கடந்துவிட்டவர்கள். அவர்கள் தம் பொது மனநிலையின் சுய அரிப்பை, பச்சாத்தாபத்தை அடித்தளமில்லாத இப்படியான போலிப்படைப்புகளில் பொருத்திக் குற்றவுணர்வின் கண்களைத் தவிர்த்து விடுவது போல் பாசாங்கு செய்பவர்கள். தமிழ்நதி புலிகளின் பொற்காலத்தினுள் புனைவினுள் மீண்டும் சென்று உருவாக்கும் கதைகளின் மூலம் அவர் மீண்டும். மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது  போருக்கான நியாயப்பாட்டைத்தான். எழுத்தாளர் தமிழ்நதி குறித்த தமிழினியின் கருத்தே அவர் வலிந்து திணிக்க முனைந்த நாவலின் கட்டுமானமுமாகும். அதை எதுவிதக் கேள்விகளுமில்லாமல் விதந்தோதுபவர்களும் வேண்டிநிற்பது அதைத்தான்.

அவர்(தமிழ்நதி) ஆதரவாளர்; நான் புலி. ஆனால் இப்போது இல்லை. நாளாந்தம் மாறிச்செல்லும் அனைத்தையும் அரசியலையும் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை இதற்கான காரணம் ஒருவிதமான கருத்துப் பிடிவாதமே தவிர புத்திஜீவித்தனம் அல்ல என்பது எனது கருத்து. யதார்த்தம் களத்தின் வழியாகப் புரிந்துகொண்ட யதார்த்தம். போர் அவர்களுக்கு எப்போதும் தேவை, ஒரு கிறிக்கெட் போட்டியின் ருசி. அதன் நேரடி வலியை அனுபவித்தவனுக்கு போர் எப்போதும் எங்கேயும் தேவையற்றது.
தமிழினி

இத்தகைய படைப்புகளிற்கு இவ்வித விமர்சனம், வரலாற்றுப் பிரக்ஞைகளும் இன்றிக் கிடைக்கும் கவனிப்புகள் தான் நம் கால மதிப்பீடுகளின் வீழ்ச்சியைச் சுட்டி நிற்கின்றன. இவற்றை உதறி மேலெழுந்துவரும் அடுத்த தலைமுறைப்படைப்புகளில் பிரபாகரனிற்குச் சூரியதேவன் என்றோ, புலிகளிற்கு புனிதபிம்பங்களோ இருக்கப்போவதில்லை. அவர்களின் புனிதவுருக்கள் சிதைக்கப்பட்டும், கோர முகமூடிகள் கிழிக்கப்பட்டும் வரலாறின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்படைப்புகளில் தம் இனத்தின் நியாயமான போராட்டத்தை மிகத் தவறான வழியில் எடுத்துச் சென்றவர்களுக்கான  பாத்திரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும்.

——————————-
பார்த்தீனியம் – நாவல்
தமிழ்நதி
ஏப்ரல் 2016
நற்றிணை பதிப்பகம்

Scroll to Top