என்னுடைய அபிப்பிராயத்தில் நீங்கள் உங்கள் சமூக ஒழுங்கை மாற்றாவிட்டால் மிகக் குறைந்த அளவிலான முன்னேற்றத்தையே நீங்கள் அடைய முடியும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. தற்பாதுகாப்பிற்கோ இல்லை தாக்குதலுக்கோ உங்கள் சமூகத்தை நீங்கள் ஒன்றுதிரட்டவே முடியாது. சாதியின் அஸ்திவாரத்தின் மேல் நீங்கள் எதையுமே கட்டியெழுப்ப முடியாது. நீங்கள் ஒரு தேசத்தைக் கட்ட முடியாது. ஒரு அறிவியலைக் கட்ட முடியாது. சாதியின் அஸ்திவாரத்தின் மேல் நீங்கள் கட்டும் எதுவும் விரிசல் விடும்; மேலும் அது எப்போதும் முழுமையடையாது.அம்பேத்கர
01
90களில் சோசலிஸத்தின் வீழ்ச்சி தமிழ்ச்சூழலில் புதிய போக்குகளை, சிந்தனைகளை உரையாடும் வெளியை உருவாக்கியிருந்தது. புரட்சியின்வழி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் உள்ள போதாமைகள் குறித்து எழுந்த அறிதல் முறைகளில் பின்நவீனத்துவம் ஒரு புயலாகத் தமிழகச் சூழலில் அடித்து ஓய்ந்தது. பெருங்கதையாடல்களைக் கேள்விக்குட்படுத்தி அதிலிருந்து தலித்தியம், பெண்ணியம் உட்பட்ட விளிம்புநிலை உரையாடல்களுக்கான வெளியை அவ்வுரையாடல்கள் உருவாக்கியது. ஈழத்தில் அம்முரண் உரையாடல்களுக்கான வெளிகளற்ற இருண்ட யுத்தகாலமிருந்தது. அதன் வீழ்ச்சி ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரண்டிருந்த தேசியக்கருத்துகளின் போதாமைகள் குறித்த மிகச்சிறிய வெளியின் உரையாடல்கள் பொதுவெளியில் விரிவாக நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் ஆயுத நிழலில் தூங்கிக் கிடந்த சாதியமும் உயிர்ப்புடன் வெளிப்படுகிறது.
இலங்கைச் சூழலில் குறிப்பாக யாழில் தீண்டாமைக்கு எதிரான ஆரம்பகாலப் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் காந்தியவழி வந்தவர்களும், இடதுசாரிகளுமே. அவர்களுடைய ஆரம்பகாலப் போராட்டங்கள் இறுகிக்கிடந்த யாழ்ப்பாணச் சாதி இந்துக்களின் / கிறிஸ்தவர்களின் மனநிலையில் சில உடைப்புகளைச் செய்திருக்கிறது. பாடசாலைகளில் சம கல்வி, சம ஆசனம், ஆலய நுழைவு, தேநீர்க்கடை நுழைவுப் போராட்டங்களை மிக மூர்க்கமாக வெளிப்படுத்தியதன் விளைவு இன்றைய யாழ்ப்பாணச் சாதியத்தில் சில நெகிழ்வுகளை அவதானிக்கலாம். சாதியத்தின் கூரிய நகங்கள் வெட்டப்பட்டு வழுவழுப்பாக்கப்பட்டிருக்கிறது. வேலிக் கதியால்களில் கொழுவிய பேணிகளில் தேநீர் கொடுத்தவர்கள், நாசுக்காக அடுப்படிக்குள் ‘புறம்பாக’ எடுத்து வைத்திருக்கும் டம்ளர்களில் நீர் / தேநீர் கொடுக்கும் அளவிற்கு முன்னேறியிருக்கிறார்கள் (?) ஆனாலும் சாதியம் கல்விச்சூழலில், அரசியல் அரங்குகளில், அதிகார அடுக்குகளில் தன் இருப்பிற்குக் கேள்விவரும் போதெல்லாம் தன் கோரமுகத்தைக் காட்டத் தயங்குவதில்லை.
இடதுசாரிகளும், காந்தியவாதிகளும் முன்னெடுத்த சாதியப் போராட்டங்களில் சாதியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்துமதத்தைக் கேள்விக்குட்படுத்த அல்லது இந்துமதத்திலிருந்து விலகிப் போராட்டங்களை முன்னெடுக்க அவர்களால் முடியவில்லை. இடதுசாரிகள் ; தலித்துகள் ஒடுக்கப்படுவதைக் கல்வி, நிலம் சார்ந்த பிரச்சனையாகப் புரிந்துகொண்டார்கள். தலித்துகள் நிலமற்ற உதிரிப்பாட்டாளிகளாகவும் இருப்பதால் இடதுசாரிகள் வர்க்கப்போராட்டத்தோடு இணைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். நிலமற்ற ஏழைச் சாதி இந்துவும் சாதியின் உச்ச அதிகாரங்கள் அனைத்தையும் நுகரும் பாத்தியதையுடையவர்கள் என்பதைக் கவனத்திற் கொள்ளவில்லை.
இவையிரண்டும் பெரும்போக்குகளாக யாழில் சாதியத்திற்கு, தீண்டாமைக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்கள். இவை தவிர வேறு சில போக்குகளும் சாதியத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளன. சூரன் தலித்துகளை கல்வியின் மூலம் சாதியக் கொடுமைகளிலிருந்து வெளிவர முன்னெடுத்த தலித் பாடசாலைகளின் உருவாக்கமும், வைரமுத்து முன்னெடுத்த தமிழ்ப் பௌத்தம் நோக்கிய நகர்வுகளும் குறித்த ஓரிரு பதிவுகளே நம்மிடமிருக்கின்றன. அவற்றின் தற்கால நிலவரம் குறித்த பதிவுகள் அதிகம் எம்மிடமில்லை. வைரமுத்துவின் பௌத்த பாடசாலைகள் யாழில் உருவாகியதன் பின்னால் யாழ் சாதிமான்களின் சாதிய உளவியலை நாம் நுட்பமாகப் புரிந்து கொள்ளலாம். அதனை வெகுஜனன் (சி.கா.செந்திவேல்), இராவணா (நா.இரவீந்திரன்) தொகுத்த இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் நூலில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
புத்தூரில் பெரும்சொத்துடமை பெற்ற மழவராயரின் பாடசாலையான ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை, அரசாங்கம் பாடசாலைகளைத் தேசியமயமாக்கிப் பதினைந்து ஆண்டுகளின் பின்பே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தாறிலேயே அங்கு அனுமதி கிடைத்தது, இச்சூழலிலே புத்தூர் பௌத்த பாடசாலை உருவாக்கப்பட்டமை நியாயப்படுத்தப்பட்டது, சோமாஸ்கந்த பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மக்களை உடன் அனுமதித்திருக்கவேண்டும், அப்படிச் செய்திருந்தால் உடனேயே புத்தூரில் உருவாக்கப்பட்ட பௌத்த பாடசாலையை மூடியிருக்க முடியும், ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை, அதற்குப் பதிலாக அன்றைய தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதி உறுப்பினராகவிருந்த திரு.கதிரவேற்பிள்ளையால் புத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வேறொரு கிராமத்தில் ஸ்ரீம்னீ முருகன் தமிழ்ப் பாடசாலையை ஆரம்பித்து வைத்த வேடிக்கை மிக்க வேலையைத்தான் செய்யமுடிந்தது , சாதி தீண்டாமைப் பிரச்சனையில் தமிழரசுக் கட்சியின் இரட்டைவேடத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். (பக்.135 திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 2007)
யாழின் சாதியத்தைத் தக்கவைப்பதில் பள்ளிக்கூடங்களும், கோயில்களும் பெரும் பங்காற்றும் வரலாறு மிகப்பழையது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சம ஆசனம் கோரிய போராட்டங்களிலிருந்து பதிவுகள் நமக்குக் கிடைக்கின்றன. அப்போதைய ஆங்கில அரசாங்கம் யோவெல் போல் அவர்களின் கோரிக்கையை ஏற்று இருபதுகளின் பிற்பகுதியில் சம இருக்கை, உணவு என்பதைச் சட்டமாக்கிய பின்னரும் கூட அதைக் கலாசாலையில் தலித்துகள் கடைப்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. இரு தலித் மாணவர்களுடன் சம இருக்கையில் அமர்ந்து கல்வி கற்பதிலும் பார்க்கக் கலாசாலையைச் சில காலம் மூடிவைப்பது மேலானது எனும் நிலைப்பாட்டிற்கு வந்த சாதிமான்களின் உளவியல் இன்றுவரை நுட்பமாகப் பலதளங்களிலும் திறமாக வேலைசெய்து வருகிறது. பாடசாலைகளை எரித்தும், கலாசாலைகளை மூடியும் தலித்துகளின் கல்விகற்கும் உரிமை மறுப்பைப் பெருவிருப்போடு செய்துவந்த யாழ் இந்து/கிறிஸ்தவ மேட்டுக்குடி, சிங்களப் பேரினவாத அரசின் இனரீதியான தரப்படுத்துதலினால் தங்கள் கல்வி உரிமை பறிக்கப்படுவதாக கொதித்தெழுந்து இனப்போரை உதிரச்சகதியில் நடத்திமுடித்த முரணை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?
எங்களது பள்ளிக்கூடங்கள்
சாதியப் பள்ளிக்கூடங்கள்,
சாதியைப் போற்றும் பள்ளிக்கூடங்கள்,
சாதியைத் தக்கவைக்கும் பள்ளிக்கூடங்கள்,
சாதியைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களே.
ஆசிரிய, அதிபர் நியமனங்களிலிருந்து மாணவர் சேர்க்கை வரை சாதியம் கட்புலனாகாத வலிய அரணாகவே நம்முன் கிடக்கிறது. போலிப்பெருமிதங்களாலும், நாற்றமெடுக்கும் சாதிய உளவியலிலும் அழுந்திக்கிடக்கும் உயர் வேளாள, கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்களின் சாதிய மனநிலை குறித்த உரையாடல்கள் நம்மிடமில்லை. கல்வியைப்போதிக்கும் பள்ளிக்கூடங்கள் பிற்போக்குத்தனங்களிலும், சாதிய மனநிலையிலும் இருண்டுகிடக்கின்றன என்பதை அவர்கள் மாணவர்களைச் செய்யும் படிநிலையாக்கங்கள் மற்றும் பிரித்து வைப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். நாம் உரையாடல்களைப் பள்ளிக்கூடங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இயல்பானது, எல்லாம் சரியாக இருக்கிறது எனக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துவதும் அதன் ஒழுங்கைக் கொட்டிக் கவிழ்க்கும் உரையாடல்களை முன்னெடுப்பதுமே நம் முன்னுள்ள தேவை. அதற்கு நாம் அம்பேத்கர், பெரியாரிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
02.
சாதியத்தையும் அதன் தோற்றுவாயான இந்துமதம் குறித்த பாபா சாகிப் அம்பேத்கரின் (காந்தியை மகாத்மா என்பவர்கள் அம்பேத்கரை ‘வெறும்’ அம்பேத்கராகக் குறிப்பிடும் உயர்சாதி மனநிலையும் ஆய்வுக்குரிய புள்ளி) ஆய்வுகள் மிக உன்னதமானவை. அவர் சாதியம் குறித்து காந்தியுடனும், இந்தியத் தேசியர்களுடனும் நிகழ்த்திய உரையாடல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. நம் சூழலில் மறந்தும் கூட உச்சரிக்க முடியாத பெயராகவே அம்பேத்கர் இருக்கிறார். அவர் முன்வைத்த சாதிய ஆய்வுகளும், அதன் தோற்றுவாயான இந்துமதத்தை மறுதலிக்கும் போக்கும் அரிதான ஓரிரு விதிவிலக்குகளைத்தவிர நம் சூழலில் அறவே இல்லை. சைவத்தினுள் மேனிலையாக்கம் எனும் கருதுகோள்களின் அடிப்படையிலேயே கல்வி, பொருளாதாரச் சீர்திருத்தங்களாகச் சாதியப் போராட்டங்கள் நம்சூழலில் முன்னெடுக்கப்பட்டன.
நம்சூழலில் இன்னும் விரிவாக உரையாடவும், நாம் பின்செல்லவும் வேண்டிய ஆளுமைகளாகக் காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும் இருக்கிறார்கள். காந்தி சாதி இந்துக்கள் மத்தியிலும் அம்பேத்கர் தலித்துகள் மத்தியிலும் பெரியார் மக்களைத் திரட்டி இயக்கமாகவும் போராடியவர்கள். இன்னொரு வகையிலும் அம்பேத்கரும், காந்தியும் எமக்கு முக்கியமானவர்கள். அம்பேத்கரும் – காந்தியும் சீனர்களின் இயங்கியற் கருதுகோளான ‘ஜின் – யக்’ன் நடைமுறை வடிவங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நிரப்பக்கூடிய, ஒருவரை ஒருவர் செயல்படச்செய்யக்கூடிய ஒருவரை ஒருவர் விளக்கக்கூடிய இரு எதிரீடுகள்.
அம்பேத்கர் சாதியப் போராட்டங்களை முன்னெடுத்த காலத்திற் தான் காந்தியும் தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்தார். அம்பேத்கர் சாதி இந்துக்களிடம் அதிகாரத்தைக் கைமாற்றப் போராடுவதிலும் பார்க்க ஆங்கிலேயரிடம் சில உரிமைகளையாவது சட்டரீதியாகப் பெற்றுக் கொள்ளலாம் என நம்பினார். அதனால் இந்தியத் தேசியர்களால் ஆங்கிலக் கைக்கூலி எனவும், அரசின் அடிவருடி எனவும் வசைபாடப்பட்டார். சாதி இந்துக்கள் தலித்துகளை விலங்குகளிலும் கீழானவர்களாக அவர்களின் அடிப்படை உரிமைகளைக்கூட கொடுக்க முடியாதவர்களாக இந்தக் காலத்தில் அம்பேத்கரின் ஆங்கிலேய அரசின் பக்கமான சாய்வும் புரிந்து கொள்ளத்தக்கதே. காந்தியோ முரண்பாடுகள் மண்டிக்கிடக்கும் சமூகம் பொது எதிரிக்காக ஆயுதம் தரித்தால் அவ்வாயுதத்தினால் தம் உள்முரண்பாடுகளை களையவே பயன்படுத்துவார்கள் என்பதனை நம்பினார். அதுதான் ஈழப் போராட்டத்திலும் நடந்து முடிந்திருக்கிறது. சாதியாகவும், மதமாகவும், பிரதேசமாகவும் இன்னோரென்ன வழிகளில் பிளவுண்டு கிடக்கும் நம் ஆயுதப்போராட்டத்தில் எத்தனை முறை உள்முரண்பாடுகளைக் களைய ஆயுதங்கள் கருவிகளாக்கப்பட்டன. அவை தேசியத்தின் பெயரால் இன்றுவரை விதந்தோறும் வரலாறு தானே நம் முன் கிடக்கிறது. தலித்தியத்தைத் தேசியத்திற்கு எதிரிடையாக முன் முன்வைப்பவர்களும் அம்பேத்கர், காந்தியை விரிவாக வாசிக்க வேண்டும்.
அம்பேத்கர் சிந்தனைப்பகிர்வு நிகழ்வை இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் பிரான்ஸில் கடந்த யூலை மாதம் ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு முழுநாள் நிகழ்வில் சமூகப்போராளிகள் உட்பட தலித்தியம் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகள் குறித்துப் பல விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பொதுக் கிணற்றில் நீர் அள்ளவும் வீதியில் மேல் துண்டு, சட்டை போட்டுச் செல்லும் உரிமைகளுக்காக எவ்வளவு போராட்டங்களைச் செய்ய வேண்டியிருந்தது. சாதிய மனோநிலையின் சிறு நெகிழ்ச்சிக்காக எவ்வளவு உயிர்களைப் பலியிடவேண்டியிருந்தது. இவ்வரலாறுகள் இன்னுமின்னும் விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டியவை. அவசியமானவை. இக்கருத்தரங்குகளை இன்னும் விரிவாகவும் பல தளங்களிலும் இலங்கையிலும் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் விரிவாகச் செய்யவேண்டும். அப்போதுதான் நம் சூழலிலும் அம்பேத்கர், பெரியார் குறித்த உரையாடலுக்கான காத்திரமான வெளி உருவாக்கப்படும்.
அடுத்து வரும் ஆக்காட்டிகளில் பல முரண் தரப்புகளையும் ஒன்றிணைத்து தலித்தியம் குறித்த உரையாடல்களையும், கூட்டுக் கட்டுரைகளையும் தொகுக்க இருக்கின்றோம். முதல் நிகழ்வாக வரும் மாதம் ஃபிரான்ஸில் ஒரு கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் உரையாடப்படுபவை, விவாதிக்கப்படுபவை அடுத்துவரும் ஆக்காட்டியில் தொகுத்து வெளியிடப்படும்.
உசாத்துணை நூல்கள் :
சாதியை அழித்தொழித்தல் – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் – யோகரட்ணம்
இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்- வெகுஜனன் இராவணா
ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி – என்.கே. ரகுநாதன்
காந்தியும் தமிழ்ச்சனாதனிகளும் – அ.மார்க்ஸ்
வட அல்வை முருகேசனார் பவளவிழா மலர்